23
ஆதித் அலுவலக அறையில் அமர்ந்து, கணக்குப் புத்தகங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். சென்ற வருடத்தைவிட வரவும் செலவும் கூடியிருந்தன. எனினும் நிகர லாபம் அவன் எதிர்பார்த்த அளவில் வரவில்லை என்பதால், செலவுக் கணக்குகளைப் புரட்டிக்கொண்டிருந்தான் தீவிரமாக.
கண்ணாடிக் கதவு தட்டப்பட்டுத் திறந்துகொண்டது.
ராஜீவ் எட்டிப்பார்த்தான்.
"பாஸ்... மணி ஆறரை.. பார்ட்டி ஏழு மணிக்கு."
"தேங்க்ஸ் ராஜீவ். நீ ஹோட்டலுக்குப் போய் கடைசியா ஒருதடவை எல்லாத்தையும் செக் பண்ணிடு. நான் ஏழு மணிக்கு வந்துடறேன்."
கண்களை லேசாகத் தேய்த்தவாறே எழுந்து சோம்பல் முறித்தவன், வெளியேறினான் அலுவலகத்தைவிட்டு.
கார் வீட்டு வாசலில் நிற்கையில் மணி ஆறு ஐம்பது. தாமதமாவதை உணர்ந்தவனாக அவசர அவசரமாகப் படியேறி உள்ளே சென்றவன், இந்திராணியிடம், "ஷி கொத்தாய்?" (அவள் எங்கே?) என வினவ, அவளது அறையை நோக்கிக் கைகாட்டினார் அவரும்.
பொறுமையின்றிச் சென்று கதவைத் தட்டினான் அவன்.
"லேட்டாச்சு, கொஞ்சம் சீக்கிரம்!"
கதவு திறக்கப்பட்டது, சற்றே தயக்கமான ஒரு கரத்தால்.
ஆதித்தின் அவசரப்பார்வை அவளை அடைய, ஒருகணம் அவனது அவசரங்கள் அனைத்தும் மறக்கப்பட்டன.
சிவப்பு ஷிஃபான் புடவையும், அதற்குப் பொருத்தமாய் அதே நிறத்தில் வெல்வெட் ரவிக்கையும், கழுத்தில் குட்டிக்குட்டி வெண்முத்துக்கள் கோர்த்த மாலையும், அதனோடு பொருந்தும் முத்துக் கம்மல்களும் அணிந்து, கூந்தலை இடது தோளில் புரளவிட்டு, காதோரம் முத்துப்பதித்த க்ளிப் ஒன்றை வைத்திருந்தவள், அவனது ஒப்புதலுக்காக கீழுதட்டை மடக்கியவாறு தனது மையெழுதிய விழிகளால் அவனை எதிர்பார்ப்புடன் பார்த்திருந்தாள்.
அவன் திகைப்பில் வாயைத் திறந்து திறந்து மூடினான்.
"ராஜீவோட சிஸ்டர் ஷீத்தல் வந்திருந்தாங்க. அவங்கதான் இதையெல்லாம் செலெக்ட் பண்ணாங்க.. எனக்கு இதுல எல்லாம் அனுபவமே கிடையாது, ஸோ, அவங்களே எல்லாம் செஞ்சாங்க.. ஹேர்.. மேக்கப்.. ட்ரெஸ்.. இது ஓகேவா உங்க பார்ட்டிக்கு?"
அவளது குரலில் சுதாரித்தவன், ஒருமுறை கண்களைத் திறந்து மூடிவிட்டு, "போலாம்" என்றுமட்டும் கதவிற்குச் சொல்லிவிட்டு வெளியே செல்ல, தாரா அயர்ந்து போனாள்.
அவன் விறுவிறுவென முன்னால் நடக்க, ஷீத்தல் சொல்லித்தந்தபடி கவனமாகப் புடவையின் மடிப்புகளைக் கைகளால் லேசாகப் பிடித்துக்கொண்டு அவனைப் பின்தொடர்ந்தாள் தாரா.
காரை அடைந்தவன் ஓட்டுநர் இருக்கையில் தானே அமர, தாரா அவனருகே பயணியர் இருக்கையில் ஏறிக்கொண்டாள்.
கதவை சாத்தியதும் கார் முழுவதும் நிறைந்த ஒருவித சுகந்தத்தை ஆதித் உணர்ந்து தாராவைப் பார்த்தான் கடைக்கண்ணால். "அது.. ஷீத்தல் தந்த பர்ஃப்யூம்.." எனத் தயக்கமாகச் சிரித்தாள் அவள்.
எதுவும் பேசாமல் இறுக்கமாகத் திரும்பிக் காரை உயிர்ப்பித்து சாலையில் செலுத்தினான் அவன்.
.
"நைட்ல சிட்டி இன்னுமே அழகா இருக்கு. எவ்ளோ கலர்ஸ்.. எத்தனை வெளிச்சம்..."
நெடிதுயர்ந்த கட்டிடங்களையும் அவற்றில் மின்னிய வெளிச்சங்களையும் எட்டி எட்டி வேடிக்கை பார்த்தபடியே அவள் கூற, ஆதித் சாலையில் மட்டும் பிடிவாதமாகக் கண்களைப் பதித்து வாகனத்தை செலுத்தினான் வாய்பேசாமல்.
சற்றே படபடத்த அவனது நெஞ்சத்தை மனதுக்குள்ளாகவே மிரட்டி அடக்கினான் அவன். மூச்சை நிறைக்கும் அவளின் நறுமணம் மூளைக்கு எட்டாதிருக்க, அவசரமாகக் காரின் கண்ணாடி ஜன்னல்களைத் திறந்துவிட்டிருந்தான் எப்போதோ. நகரத்தின் ஓசைகள் என்னதான் உரக்க ஒலித்தாலும் அவைகளாலும் அவளது குரலின் இனிமையை, அதில் தொனித்த ஆர்வத்தை மறைக்க முடியாமல்போக, காரின் ஸ்டீரியோவையும் போட்டிருந்தான். அது பாடிய பெங்காலிப் பாடலுக்குக் கூட அவள் ரசனையுடன் தலையசைக்க, அவனது இதயம் அதன்புறம் சாயாமலிருக்க சிரமப்பட்டது.
'இது தவறு.. சின்னப்பெண் அவள்.. அவளை வேறெந்தக் கோணத்திலும் பார்ப்பது முறையல்ல.. கவனம் தேவை மனமே! வேறு வழியின்றி நம்மோடு தங்கியிருக்கிறாள் இவள்... அதை எக்காரணம் கொண்டும் மறந்துவிடாதே..'
இருபத்தைந்து நிமிடப் பயணத்தின் இறுதியில் ஒரு கோட்டை போன்ற கட்டிடத்தின் வாகன நிறுத்தத்தில் கார் நின்றது.
தாரா இறங்கித் தனது புடவை மடிப்புக்களை சரிசெய்துகொண்டு தோளில் புரண்ட கூந்தலையும் கையால் அமர்த்திவிட்டுக்கொண்டு ஆதித்தை நோக்கினாள்.
"ஓகே தானே?"
பதில் சொல்லாமல் லேசாகக் கனைத்தவன், அவளைப் பார்க்காமல் அந்தக் கட்டிடத்தின் முன்புற வரவேற்பை நோக்கி நடக்க, தாரா வினோதமான பார்வையுடன் தொடர்ந்தாள் அவனை.
'தாஜ் விவாண்ட்டா' என்று நீல விளக்குகள் பிரகடனப்படுத்திய அந்த ஐந்து நட்சத்திர உணவகக் கட்டிடத்தின் மார்பிள் தளங்கள் பார்ப்பவரின் முகம் தெரியுமளவு பளபளத்தன. தங்கமஞ்சள் விளக்குகள் அறையை ஜொலிக்கச்செய்ய, விருந்தினர்களுக்காக இட்டிருந்த நாற்காலிகள் கூட ஏதோ சிம்மாசனங்கள் போல வேலைப்பாடுகளுடன் இருந்தன. உள்ளூர வியந்து அவற்றைப் பார்த்தவாறே வந்தாள் தாரா. உயர்தர காட்டன் புடவைகளில் இருந்த மாதர்கள் கைகூப்பி அவர்களை வரவேற்று, கட்டிடத்தின் பின்புறம் இருந்த விழாக்கூடத்தின் பக்கம் அழைத்துச்சென்றனர்.
வட்ட மேசைகளில் ஆட்கள் அங்குமிங்கும் அமர்ந்து அவரவர் சம்பாஷணைகளில் லயித்திருந்தாலும், ஆதித் அறைக்குள் நுழைந்ததும் அனைவரின் பார்வையும் அவன்புறம் திரும்பின.
தாரா அறையை ஒருமுறை கண்களால் அலசினாள். சராசரியாக ஐம்பது வயதுகொண்ட ஆண்கள் அதிகமிருந்தனர் அங்கே. சிலர் தனியாக; சிலர் மனைவி மக்களுடன். குழந்தைகள் யாருமில்லை. பெண்கள் சொல்லிவைத்தாற்போல் வெண்ணிற பனாரஸ் பட்டும் உடலை மறைக்கும் ஆபரணங்களும் அணிந்திருக்க, சில இளம்பெண்கள் முழங்காலை எட்டாத 'காக்டெய்ல்' ஆடைகள் அணிந்திருந்தனர். ஒவ்வொருவரைப் பார்க்கையிலும், பணம், பதவி, அந்தஸ்து, ஆஸ்தி போன்ற சொற்கள்தான் முதலில் மூளைக்கு வந்தன.
அவ்விடத்தில் தான் பொருந்தவே மாட்டோமெனத் தாராவிற்கே புரிந்தது. ஷீத்தல் மட்டும் இல்லாவிட்டால் என்னவாகியிருப்போம் எனத் தோன்ற, மனதார அவளுக்கு நன்றிசொன்னாள் உள்ளுக்குள்.
இவர்களைக் கண்டதும் ராஜீவ் விரைந்து வந்தான் இவர்களை நோக்கி. ஆதித்திடம் தீவிரமாக, "எல்லாத்தையும் டபுள் செக் பண்ணிட்டேன் பாஸ். டெகரேஷன், டேபிள்ஸ், சாப்பாடு, ட்ரிங்க்ஸ்.. எல்லாமே பர்ஃபெக்டா இருக்கு. கார்டன்ல டின்னர் பஃபே செட் பண்ணியிருக்கோம். எட்டரை மணிக்கு டின்னர் சர்வ் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க," என உறுதியளித்தவன், தாராவிடம் திரும்பி வாய்நிறையப் புன்னகைத்தான்.
"ஷீத்தல் கலக்கிட்டா போல?"
தாரா சிரிக்க, ஆதித் இறுக்கமாகவே நின்றான். அவள் ஏதும் கேட்குமுன் நான்கைந்து மனிதர்கள் ஆதித்தை நோக்கி வர, தாரா தனது முகத்திலொரு புன்னகையைத் தேக்கிக்கொண்டு அவர்களை நோக்கினாள்.
"கன்கிராட்ஸ் மிஸ்டர் நிபேதன்! ஷுகி பிபாகிதோ ஜிபோன்!"
ஆதித் சிரித்துத் தலையசைத்துக் கைகுலுக்கிட, தாராவிடமும் ஒரிருவர் கைநீட்டினர் வாழ்த்துக்களுடன். பெங்காலி புரியாததால் "தேங்க்ஸ்" மட்டும் சொன்னாள் அவள்.
அவர்கள் சென்றதும் ராஜீவிடம் திரும்பியவள், "அவர் பேரு நிவேதன் தான... அவங்க 'நிபேதன்'னு கூப்பிடறாங்களே, ஏன்?" என வினவினாள் மெதுவாக.
"பெங்கால் பாஷைல, 'வ' எழுத்துக் கிடையாது. 'ப' மட்டும்தான். எல்லா வார்த்தையிலும் 'வ'வுக்கு பதிலா 'ப' தான் வரும். 'வித்யா' இங்க 'பித்யா' ஆகிடும். 'விவேக்' இங்க 'பிபேக்' ஆகிடும்."
"அச்சச்சோ, அப்ப இங்க்லீஷ் வார்த்தைகள் எல்லாமே இங்க மாறுமா?"
"கிட்டத்தட்ட. பெங்காலி மட்டும் பேசறவங்க அப்படிப் பேசுவாங்க. ஆனா இங்க்லீஷும் தெரிஞ்சவங்க நிறையப் பேர் இருக்கறதால, பெருசா கஷ்டமில்ல"
"ஓ..."
பேச்சு சத்தத்தில் ஆதித் திரும்பி இருவரையும் முறைத்தான். ராஜீவ் தாராவிடம் திரும்பி, "தாரா, நீங்க ஏன் நம்ம பார்ட்டனர்ஸோட ஃபேமிலி மெம்பர்ஸ் கூட பேசக்கூடாது? எல்லா லேடீஸும் அதோ அங்க இருக்காங்க பாருங்க.." என்க, தாரா கேள்வியாக ஆதித்தைப் பார்த்தாள். அவனோ அவள்புறம் திரும்பவேயில்லை.
தாராவும் சோர்வாகத் தலையாட்டிவிட்டு பெண்கள் நின்றிருந்த இடத்திற்குச் சென்றாள். ஏதோ பேசி சத்தமாகச் சிரித்துக்கொண்டிருந்தனர் அவர்கள்.
"ஹாய்..."
அவளைத் திரும்பிப் பார்த்தனர் அப்பெண்கள். தாரா சினேகமாக சிரித்து, "ஐம் தாரா" எனக் கைநீட்ட, அவர்கள் தங்களுக்குள் பார்த்துக்கொண்டு பெங்காலியில் பேசிக்கொண்டனர்.
உயரமாக இருந்த இளம்பெண் ஒருத்தி முன்னால் வந்தாள். "ஆதித்தோட வைஃபா?" என ஆங்கிலத்தில் வினவினாள். மற்றவர்கள் அவளையே பார்த்தனர்.
"ஆமா.. நீங்க?"
"மோனல். மோனல் கபாடியா." அப்பெயரைச் சொன்னாலே அனைவருக்கும் தெரிந்துவிடும் என்பதுபோல் அவள் சொல்ல, தாராவோ அறியாமல் நின்றாள்.
உடனிருந்த பெண்மணி ஒருவர், "ஜயந்த் கபாடியா தெரியுமா? கொல்கத்தாவுல பெரிய இன்வெஸ்டர். அவரோட ஒரே பொண்ணு இவங்க. மாடலிங் பண்றாங்க." என விளக்கினார்.
"ஓ.." என மீண்டும் சினேகமாகக் கைநீட்டினாள் தாராவும். ஆனால் இம்முறையும் யாரும் கைகுலுக்கவில்லை பதிலுக்கு.
கண்களாலேயே அவளை அளவிட்டவர்கள், கேள்விக் கணைகளை தொடுத்தனர் சரமாரியாக.
"எப்படி ஆதித் உன்னைக் கல்யாணம் பண்ணினான்?"
"உங்க குடும்ப பிஸினஸ் என்னது?"
"சொத்து மதிப்பு என்ன இருக்கும்?"
"எத்தனை கோடி செலவுல உங்க கல்யாணம் நடந்துச்சு?"
"ஆதித்துக்கு உங்கப்பா என்னவெல்லாம் குடுத்தார் கல்யாணத்துக்காக?"
தாரா விக்கித்துப் போனான். லேசாக செருமிக்கொண்டு தன்னிலை விளக்கம் தர முற்பட்டவளை முந்திக்கொண்டு சற்றே வயதான மனிதர் ஒருவர் இடையிட்டு மற்றவர்களை முறைத்தார்.
"வந்த இடத்துல இந்தக் கேள்வியெல்லாம் கேட்டே ஆகணுமா? புதுசா ஊருக்கு வந்திருக்க பொண்ணை எதுக்கு இப்படி துளைச்சு எடுக்கறீங்க?"
ஒரு மூத்த பெண்மணி மட்டும் பெங்காலியில் ஏதோ பொருமினார். அந்த மனிதர் முறைத்துவிட்டு, தாராவிடம் திரும்பினார்.
"எங்க பொண்ணை ஆதித்துக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நாங்க ரெண்டு பேருமே ஆசைப்பட்டோம்.. அதுலதான் லதா கொஞ்சம் அப்செட்டா இருக்கா. சாரிம்மா"
தாரா திகைத்தாள். அந்த மனிதரே கைநீட்டினார் அவளிடம். "ஜயந்த் கபாடியா."
தாரா அவரையும் மோனலையும் மாறிமாறிப் பார்த்தாள். உருவ ஒற்றுமை தெளிவாகத் தெரிந்தது இப்போது. மோனலின் முகத்தில் தெரிந்த அலட்சிய அவமரியாதையின் காரணமும் புரிந்தது.
பெயருக்குப் புன்னகைத்துவிட்டு அவள் விலகி வந்தாள். அவள் கேட்கும் தூரத்தில் இருந்தபோதே நக்கலாகச் சிரித்த கூட்டம் தங்களுக்குள் பெங்காலியில் பேசிக்கொண்டது. அது தன்னைப் பற்றித்தான் என்பது தாராவிற்குமே புரிந்தது. மனது கனத்தது அவளுக்கு.
வேகமாக அங்கிருந்து விலகித் தோட்டத்தினுள் சென்று ஒதுக்குப்புறமான நாற்காலி ஒன்றில் அமர்ந்துகொண்டாள். ஏமாற்றம் அவளை சூழ்ந்து அழுத்தியது. வீட்டை விட்டு வெளியே வந்தால் நல்ல மனிதர்களை சந்தித்து நட்பாகலாம் என்றெல்லாம் எண்ணியிருந்தவளுக்கு, இங்கு நடப்பவை யாவும் காயங்களையே தந்தன. எழுந்து வீட்டிற்கே ஓடிவிடலாமெனத் தோன்றியது.
தோட்டத்தின் அரையிருட்டும் மங்கலான வெளிச்சமும் அவளை மறைக்க, இரவு முழுவதும் இப்படியே இருந்துவிடுவது என மனதுக்குள் தீர்மானித்த நொடியில், அவளைத் தேடிக்கொண்டு ஆதித் நடந்து வருவதைக் கண்டாள் அவள்.
திருவிழாவில் தொலைந்த குழந்தை தன் அன்னையைக் கண்டதும் ஓடுவதுபோல எழுந்து கண்கலங்க அவனிடம் ஓடினாள் தாரா.
"நான்--"
"தாரா, இது கொல்கத்தா சிட்டி கமிஷனர்."
அப்போதுதான் அவனருகே சீருடையணிந்த அதிகாரி ஒருவர் நிற்பதைக் கவனித்தவள், அவரசமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டாள் விரக்தியுடன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro