Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

22

தாரா உணவருந்திக் கொண்டிருக்கையில் வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டது. சிலகணங்களில் ஆதித் காலணிகளைக் கழற்றிவிட்டு வீட்டுக்குள் வர, அவனைக் கண்டதும் தாரா சன்னமாகப் புன்னகைக்க, அவன் தலையை அசைத்தான் அங்கீகரிக்க.

"ராஜீவ் வரலையா?"
அவள் ஆவலோடு வினவ, ஆதித் இல்லையெனத் தலையாட்டினான்.

அவனை சாப்பிட அழைக்க அவள் வாய்திறக்குமுன் ஆதித் அவளிடம் ஏதோ பேசவேண்டுமென சொல்ல, தாரா வியப்பானாள்.

"அட! சேம் பின்ச்! நானும் உங்கள்ட்ட பேசணும்னு நினைச்சேன்.. நான் இன்னிக்கு கல்கத்தாவை சுத்திப் பாக்க வெளிய போனனா--"

"ஒரு பங்ஷன் இருக்கு, இன்னிக்கு ஈவ்னிங்" சட்டென இடைவெட்டிக் கூறியவாறே வந்து அவளெதிரில் அமர்ந்தவன், தட்டில் தனக்காக உணவை எடுத்துக்கொண்டான்.
  
"ஒரு பங்ஷன்.. கம்பெனி சார்பா ஒரு பார்ட்டி இருக்கு. நமக்காக, ஐ மீன், நம்ம கல்யாணம் தமிழ்நாட்டுல நடந்ததால, கம்பெனி ஆளுங்களுக்கு இங்க ஒரு ரிசெப்ஷன் பார்ட்டி.."
தட்டில் கவனம் பதித்தவண்ணம் பேசினான் ஆதித்.

எதற்காக அதைத் தன்னிடம் சொல்கிறான் என்று உண்மையாகவே தாராவிற்குப் புரியாத அளவிற்கு ஒட்டுதல் இல்லாமல்தான் சொன்னான் அவன்.

"கம்பெனியோட முக்கியமான பார்ட்னர்ஸ் எல்லாம் வர்றாங்க. இன்வெஸ்டர்ஸ்,  விஐபிஸ்..."

தாரா ஆனாலும் கவனத்தோடு கேட்டாள்.
"ந..நான்.. நானும் வரணுமா?"

ஆதித் சிரமத்துடன் மிடறுவிழுங்கினான்.

"ஹ்ம்ம். இன்னிக்கு சாயங்காலம் ஏழு மணிக்கு. எனக்கு... நம்ம... ஏற்பாடு மறக்கல. ஆனா, இது கொஞ்சம் முக்கியமான பங்ஷன், அதனால தான் கூப்பிடறேன். Hopefully, this will be the first and last time. மறுபடி உன்னை கூப்பிட மாட்டேன்."

அவள் இதுபோல் தன்னுடன் வர விரும்பமாட்டாள் என நினைத்து ஆதித் அவளை அழைக்கத் தயங்க, தாராவோ அவனுக்குத் தன்னை அழைத்துச்செல்லத் தயக்கமென மட்டும்தான் உணர்ந்தாள். ஏனோ வருத்தமாக இருந்தது. முகத்தில் களைப்புடன், "பரவால்ல, வர்றேன்" என்றாள் அவளும்.

"தேங்க்ஸ். ஆறரைக்கு நான் கார்ல வந்து பிக்கப் பண்ணிக்கறேன்."

அதற்குமேல் பேச எதுவுமில்லாமல் போக, தாரா கையலம்பச் சென்றாள் எழுந்து.

'எதற்காக நம்மை அந்த விழாவுக்கு அழைத்துச் செல்லத் தயங்குகிறான்? அவனது விருந்தினர்கள், நண்பர்கள் முன்னால் அவனை குறைத்துக் காட்டிவிடுவோம் என்பதாலா? நம்மை அவ்வளவு மோசமாகவா நினைத்திருக்கிறான் இவன்?'

கோபமும் வருத்தமும் ஒருசேர வந்தது அவளுக்கு. ஆனால் அவனது எண்ணமும் நியாயம்தானே என மனதோரம் ஒரு சிந்தனை எழ, தன்னை நொந்துகொண்டு அமைதியானாள் அவள்.

அவன் சாப்பிட்டுவிட்டு அலுவலகத்துக்குக் கிளம்ப, தாரா அவசரமாகத் தனது கைப்பையில் தேடி அவன் தந்த அட்டைகளில் ராஜீவின் நம்பரைத் தேடிப்பிடித்து எடுத்து அவனுக்கு அழைத்தாள்.

"ஆதித் சார்'ஸ் ஆபிஸ், ராஜீவ் ஹியர்"

"நான் தாரா பேசறேன்"

"அடேடே, பாஸ் வொய்ஃப்!! சொல்லுங்க மேடம், என்ன வேணும்?"

"உங்க ஹெல்ப் வேணும்.. கொஞ்சம் அவசரம்."

"கம்பெனியோட அக்ரீமெண்ட்ல முதலாளியோட வீட்டுக்கும் சேவை செய்யணும்னு எதுவும் எழுதியிருக்கலையே?"
ராஜீவ் சிரித்தவாறு சொல்ல, தாராவோ அமைதியாகிப் போனாள் மறுமுனையில்.

"அட, ஜோக்குங்க அது! சிரிக்க வைக்கலாம்னு நினைச்சேன். சீரியஸ் ஆகாதீங்க. சரி, சொல்லுங்க. என்ன ஹெல்ப் வேணும்?" அவனே கேட்டான் பாந்தமாக.

தாரா தயக்கமாக இழுத்தாள்.
"அ.. அதாவது... இன்னிக்கு டின்னர் பார்ட்டி இருக்குல்ல, என்னை அதுக்குக் கூப்பிட உங்க பாஸ் எவ்ளோ கஷ்டப்பட்டார் தெரியுமா? நான் அங்கே வந்து அவரை எம்பராஸ் பண்ணிடுவேன்னு கவலைப்படுவார் போல. ஹ்ம், நியாயம்தான். எனக்கு இதுமாதிரி பெரிய பங்ஷன்களுக்கு போயி பழக்கமில்ல... ப்ச், உங்கள்ட்ட சொல்றதுக்கென்ன, சொந்தக்காரங்க வீட்டு விசேஷம்னா கூட, எங்கப்பா மட்டும்தான் போவார். இந்த பார்ட்டி உங்க பாஸுக்கு ரொம்ப முக்கியமானதுன்னு சொன்னார். ஸோ, அவரோட பேரைக் கெடுக்காத அளவுக்கு நான் இருக்கணும்ல? எனக்கு அங்க போய் என்ன பண்ணனும், எப்படி நடந்துக்கணும்-- ஏன், என்ன ட்ரெஸ்ல போகணும்னு கூட ஐடியா இல்ல. சுத்தமா எதுவுமே தெரியாம முழிச்சிட்டு நிக்கறேன். இதுக்கெல்லாம் அம்மாவோ தன்னுவோ என்கூட வழக்கமா இருப்பாங்க, அவங்க கவனிச்சுக்குவாங்க... ஆனா இப்ப அவங்க என்கூட இல்ல. அதான்... உங்களைக் கேட்கறேன்.. ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்.."

ராஜீவின் இதயம் கனமாகி அவன் கண்கள் கலங்கவில்லை என்று சொன்னால் அது பொய்யாகத்தான் இருக்கும். கரகரத்த குரலில், "அஞ்சு நிமிஷம்" என்றுமட்டும் சொல்லிவிட்டு அழைப்பை வைத்தவன், தனது பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே விரைந்தான்.

*

முன்னறை சோபாவில் தாரா அமர்ந்திருந்தாள் தனியாக.

மனது வீட்டை நினைத்து சோர்ந்திருந்தது. அம்மாவிடம் செல்லவேண்டுமென உள்ளுக்குள் அடம்பிடித்து சண்டையிட்டது. என்னென்னவோ கேள்விகளையெல்லாம் எழுப்பி அவளைக் குழப்பியது.

வேண்டாத விருந்தாளியைப் போல இந்த வீட்டில் தான் இருப்பதாக உணர்ந்தவள், அந்த சோகத்துடன் எழுந்து உள்ளறைக்குச் செல்ல எத்தனித்தபோது,  "அட, சொன்னமாதிரியே க்யூட்டா தான் இருக்கா..." என வாசலில் ஒரு பெண்ணின் குரல் கேட்க, தாரா நிமிர்ந்தாள். ராஜீவின் சாயலில் இருந்த இளம்பெண், தாராவைப்பற்றித் தமிழில் அவனிடம் பேசியவாறே வந்தாள். ஜீன்சும் குர்த்தியும் அணிந்து, தாராவைவிட உயரமாக இருந்தபோதும் ஹீல்ஸும் அணிந்திருந்தாள் அப்பெண்.

ராஜீவ் தாராவிடம் வந்து ஒரு சல்யூட் வைத்தான்.
"Baghjis at your service!"

தாரா லேசாக சிரித்தாள். அந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்த்து, "இவங்க..?" என வினவ, அப்பெண்ணே முன்னால் வந்து, "ஷீத்தல். ஷீத்தல் பாக்ஜி. இவனோட சிஸ்டர்" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள்.

"ஷீத்தல் கூட உங்க ஊர்லதான் படிச்சா. நாலு வருஷம். தமிழ் நல்லாவே பேசுவா. கூடவே தமிழ்க் கெட்டவார்த்தையும்!"

ராஜீவை விலாவில் இடித்துவிட்டு, "ஏற்கனவே காட்ல தொலைஞ்சுபோல முயல் மாதிரி திருதிருன்னு முழிக்கறா.. பாவம், நீயும் பயமுறுத்தாத!" என்றவள் தாராவிடம் திரும்பி, "குமரகுரு இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சேன் நான். போன வருஷம்தான் திரும்பி வந்தேன். அங்க எனக்குத் தெரிஞ்ச ஒரு பொண்ணைப் போலவே இருக்க நீயும்" எனப் புன்னகைத்தாள்.

தாரா சன்னமாக முறுவலித்தாள்.
"தேங்க்ஸ்.."

"ராஜீவ் எல்லாமே சொன்னான். நீ எதுக்காகவும் கவலைப்பட வேணாம். இந்தப் பார்ட்டிக்கு உன்னை தயார் பண்ணி அனுப்பறது என் பொறுப்பு, சரியா?"

பேசிக்கொண்டே தனது தோளில் தொங்கிய பெரிய பயணப்பையை அவள் கழற்றி சோபாவில் வைக்க, தாரா இமைக்காமல் பார்த்தாள்.
"இதென்னது?"

ஷீத்தல் கண்ணடித்தாள்.
"மேஜிக்!"

ராஜீவ் அவள் தோளைத் தொட்டான்.
"கல்கத்தாவிலயே இவளைமாதிரி மேக்கப் அண்ட் பேஷன் சென்ஸ் கொண்ட பொண்ணு இருக்கமாட்டா! ஷீத்தல் உன்னைப் பாத்துக்குவா. நான் வர்றேன்"

அவன் விடைபெற்றுச் செல்ல, தாரா ஷீத்தலை அழைத்துக்கொண்டு அவளது அறைக்கு நடந்தாள். அவர்கள் விருந்தினர் அறைக்குச் செல்வதை உணர்ந்த ஷீத்தல் வியப்பானாள்.

"என்னதிது.. கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்த பொண்ணை, இப்படி கெஸ்ட் ரூம்ல தங்கவெச்சிருக்காரு ஆதித் சார்!? ஏன் தாரா, நீயும் எதுவுமே கேக்கலையா?"

"ப்ச்.. கல்யாணம் நடந்த விதமே சரியில்லங்க,  அத்தோட பாட்டியோட முடிவால தான் கொல்கத்தாவே வந்தேன். அவருக்கு அது பிடிக்கலை போல."

"வாங்க போங்கன்னு பேசறது உங்க ஊர்ப் பழக்கம்னு தெரியும், இருந்தாலும், என்னை நீ பேர்சொல்லியே கூப்பிடலாம். என் ஃப்ரெண்டு காவ்யாவைப் பத்தி சொன்னனா நானு?"

"யாரு காவ்யா?"

"என்னோட க்ளாஸ்மேட், ரூம்மேட், அப்றம் பெஸ்ட் ஃப்ரெண்ட். பார்க்க உன்னை மாதிரி, க்யூட்டா, குட்டியா இருப்பா... ஆனா மனசு இருக்கே, வைரம் மாதிரி! அவளைச் சேர்ந்தவங்களை ஒரு கஷ்டமும் வராம பாத்துக்குவா. ஒரு வாக்கு குடுத்துட்டா, எப்பாடு பட்டாவது அதைக் காப்பாத்திடுவா. அவளுக்குன்னு எதையுமே யோசிக்க மாட்டா.. எல்லாமே மத்தவங்களுக்காகத் தான்"

ஷீத்தல் ஆதுரமாக நினைவுகூர, தாரா விழிவிரித்துக் கேட்டாள்.

"எத்தனை கஷ்டத்தை சாமாளிச்சு, அவ லவ் பண்ணின பையனையே கல்யாணம் செஞ்சுக்கிட்டா தெரியுமா?"

ஷீத்தல் தனது கைபேசியை எடுத்து, புகைப்பட ஆல்பத்தைத் திறந்தாள்.
"இதோ, இதுதான் காவ்யா!"

வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு அழகு கொஞ்சும் முகம்கொண்ட பெண்ணொருத்தி, மணக்கோலத்தில் நின்றிருந்தாள், இனிமையாகச் சிரித்து அவளது கையைப் பற்றியிருந்த ஆடவனுடன்.
"சக்தி ஒரு பெரிய கார் கம்பெனில எக்ஸிக்யூடிவ் ஆபிசரா இருக்கான், இவ அவங்களோட வேல் இண்டஸ்ட்ரீஸ்ல மேனேஜரா இருக்கா. காவியக் காதல், காவ்யாவோட காதல்!"

தாரா அவர்களைப் பார்த்துவிட்டுப் புன்னகைத்தாள்.
"வாவ்...! ரெண்டு பேரும் க்யூட்டா இருக்காங்க! செம்ம ஜோடி!!"

ஷீத்தல் குறும்பாகச் சிரித்தாள்.
"நீங்க மட்டும் என்னவாம்?"

சட்டென தாரா தடுமாறினாள். ஷீத்தல் இன்னும் சிரித்தாள் அதில்.

"ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும்.. ஆதித் கொஞ்சம் ரிசர்வ்ட் டைப் தான். ஆனா போகப்போக ரெண்டுபேருக்கும் பிடிச்சுப் போயிடும். நீ சிம்பிளா இருந்தாலே எவ்ளோ அழகா இருக்க தெரியுமா? நீ பார்ட்டிக்கு சேலை மட்டும் கட்டிட்டுப் போனா, ஆதித் அசந்து போயிடுவார்!"

தனது பையைத் திறந்து, சிவப்பு வண்ணத்தில் மினுமினுத்த ஷிஃபான் புடவையை வெளியே எடுத்துப் பிரித்தாள் ஷீத்தல். தாரா மிடறுவிழுங்கினாள்.

"ஓகே, ஆள் பாதி, ஆடை பாதி. ட்ரெஸ், மேக்கப் மட்டும்தான் நான். மத்ததெல்லாம் உன் சாமர்த்தியம். உனக்கு சில டிப்ஸ் சொல்லித் தர்றேன், இந்த பார்ட்டிகள்ல எப்படி நடந்துக்கணும்னு. அளவா சிரி, அளவா குடி, அளவா பேசு. அடிக்கடி கண்ணாடி பாத்துக்கோ. கண்ணுல மை இருக்கறதால, கசக்கிடாத, அழுதுடாத. அவ்ளோதான்."

தாரா மலைத்துப் போனாள். இப்போது அடிவயிற்றில் ஏதோ பிசைந்தது. முகமும் அதைக் காட்டிக்கொடுக்க, சிரித்த ஷீத்தல் தனது கைபேசித் திரையில் மணி பார்த்துவிட்டு நிமிர்ந்தாள்.

"மணி இப்ப ரெண்டு... இன்னும் அஞ்சு மணிநேரம் கூட இல்ல... செய்ய வேண்டிய வேலை எத்தனை இருக்கு தெரியுமா? ஜல்தி! துரன்த்!!"

.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro