20
ஆதித் கிளம்பியதும் வீட்டினுள் ஒருவித அசாத்திய அமைதி நிலவியது. இந்திராணி சமையலறையில் மும்முரமாகிவிட, தாரா உதவச்சென்றபோது அவர் பதறிப்போய்த் தடுத்து அவளை அனுப்பிவிட்டார்.
வீட்டில் வெறுமனே இருக்கப் பிடிக்கவில்லை அவளுக்கு. அவளுக்கான பணியென அங்கு எதுவுமே இல்லை. தங்கள் வீட்டில் இதுபோல என்றுமே ஓய்வாக இருந்ததே இல்லை அவள். தெருவில் இறங்கி விளையாடுவாள்; மொட்டைமாடியில் பறவைகளுடன் பேசிக்கொண்டிருப்பாள்; பஞ்சாலைக்குச் சென்று விளையாடுவாள்; கோவிலுக்குக் கூடச் செல்வாள். இத்தனையும் இருபது வருடங்கள் ஒரே வீட்டில், ஒரே ஊரில் இருந்தபோதும்கூட சலிக்காமல்.
இன்றோ புதியதொரு ஊருக்கு, புதிய இடத்திற்கு வந்திருக்கிறாள்.. ஆனாலும் செய்வதற்கு உருப்படியான வேலையில்லை. ஆதித் காலையில் செய்யச் சொன்னபடி, தன்னறைக்குச் சென்று தனது சான்றிதழ்களைச் சரிபார்த்து எடுத்து வைத்தாள். தனது கல்லூரியில் இன்னும் மாற்றலுக்கு விண்ணப்பிக்காமல் இருந்தது நினைவுவர, கல்லூரியை அழைத்து அதற்கான வழிமுறைகளைக் கேட்டாள் அவள். அவர்களோ நேரில் வந்தால் மட்டுமே அவளது கோரிக்கையைக் கவனிப்போமெனக் கூறிவிட, சலித்துக்கொண்டே வந்து கூடத்துத் தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள் அவள்.
கண்கள் தொலைக்காட்சியைப் பார்த்தாலும் மனம் என்னவோ வேறொரு உலகில் இருந்தது.
கல்லூரிக்குச் சென்று எப்போது மாற்றல் வாங்குவது, எப்போது மறுபடி படிப்பைத் தொடர்வது? பேசாமல் தன்னுவை அனுப்பி கல்லூரியில் பேசச் சொல்லலாமா? தன்னுவிடம் பேசி எவ்வளவு நாட்களாகின்றன? ஒருநாள்தானா? சே.. நீண்டகாலம் பேசாததுபோல் உள்ளதே!
தன்னுவிடம் பேசலாமென்றால் அவன் இந்நேரம் பள்ளிக்குச் சென்றிருப்பான். அம்மா குழுவிற்குப் போயிருப்பார். அப்பாவிடம் பேசத் தைரியம் இல்லை. அப்படியே இருந்தாலும் அவர் வேலையில் இருப்பார். தன் உலகம் இவ்வளவு சின்னதென நம்பமுடியவில்லை அவளால்.
புதிதாகக் கிடைத்த சுதந்திரம் வேறு கண்ணைக் கவர, கைகால்கள் துறுதுறுக்க, ஏதேனும் செய்தே ஆகவேண்டும் என்று முனைந்தது அவள் மனம். சிறுவயதில் சுற்றுலாக்கள் செல்ல மிகுந்த ஆவல் கொண்டிருந்தாள். ஆனால் குடும்ப சூழலால் பள்ளிச் சுற்றுலாக்களில் கலந்துகொண்டதே இல்லை. பணம் நாங்களே தருகிறோம் என்று நண்பர்கள், ஆசிரியர்கள் முன்வந்தபோதும், சீனிவாசன் மறுத்துவிட்டார், பெண்பிள்ளை என்றால் வீட்டோடுதான் இருக்க வேண்டும் எனக் கூறி.
இன்று அதை நினைத்தபோது ஏனோ தாராவிற்குக் கோபம் வந்தது. ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்த தைரியத்தில் அப்பாவை மானசீகமாக முறைத்தாள்; அவரை எதிர்த்து முரண்டு பிடிக்கவும் துணிந்தாள்.
என்ன செய்யவேண்டுமென இப்போது தெளிவாகப் புரிந்துவிட, கைப்பையை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியே கிளம்பினாள் அவள். கேட்டின் அருகே இருந்த காவலாளி, இவளைப் பார்த்ததும் எழுத்து நின்று வணக்கம் வைத்தார்.
அவருக்குக் கையசைத்துவிட்டுத் தெருவில் இறங்கினாள் அவள். ஆளரவமற்ற தெரு, அழகழகான வீடுகள், அமைதியான சூழல்.
வெய்யில் மிதமாய் இருந்தது. காற்றில் ஒருவித மென்குளிர் இருந்தது. மழையே பெய்யாமல் மழைபெய்து ஓய்ந்ததுபோன்ற ஒரு சாந்தம் இருந்தது.
வீடுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்துவந்து, தெருக்களை இணைக்கும் சற்றுப்பெரிய சாலைக்கு வந்தாள் அவள். அங்கும் பெரிதாக கூச்சல்களோ நெரிசல்களோ எதுவுமே இல்லாமல், இரண்டொரு வாகனங்கள் மட்டுமே சாலையில் செல்ல, பாதசாரிகளும் பெரிதாக ஒருவருமில்லாமல் தெருவே வெறிச்சோடி இருந்தது. ஆனாலும்கூட, அதுவும் ஒருவித அழகோடுதான் இருந்தது. சுவர்களில் எங்கெங்கும் வண்ணமிகு சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன.
மான்கள், புலிகள், காடுகள், பூக்கள், பெண்கள், பெரிய கண்கள் என என்னென்னவோ வரைந்திருந்தனர் சுவரெல்லாம். புரியவில்லை என்றாலும் புதுமையாக இருந்தது.
அதை ரசித்துக்கொண்டே நடந்தவள் யார்மீதோ இடித்துத் தடுமாறிட, மன்னிப்புக் கேட்டவாறே நிமிர்ந்தபோது, தன் வாழ்க்கையில் அதுவரை பார்த்தேயிராத கடல்நீல விழிகளைப் பார்த்து உறைந்தாள் தாரா.
***
ஆதித் நிவேதனும் ராஜீவும் தங்கள் நிறுவன அலுவலகத்தினுள் நுழைகையில், வழியில் வந்த அனைவருமே ஆதித்தைப் பார்த்து மகிழ்வாகச் சிரிப்பதும், கைக்குலுக்கி வாழ்த்துச் சொல்வதுமாய் இருக்க, ஆதித் சற்றே குழப்பமாக ராஜீவைத் திரும்பிப் பார்த்தான்.
"எதுக்கு எல்லாரும் கன்கிராட்ஸ் சொல்றாங்க ராஜீவ்? என்ன பண்ணின நீ? மேரேஜ் மேட்டரை வெளிய சொன்னியா?"
ராஜீவ் சரணாகக் கையுயர்த்தி, தலையையும் இடவலமாக அசைத்தான் அசாத்திய வேகத்தில்.
"எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது பாஸ்!!"
ஆதித் கண்களைச் சுருக்கினான் சந்தேகமாக.
"ஆனா இதுக்கு யார் காரணம்னு உனக்குத் தெரியும்தான..?"
ராஜீவ் மிடறுவிழுங்க, அவனது கழுத்திலிருந்த டையைப் பிடித்துத் தன்புறம் இழுத்தான் ஆதித்.
"யார்?"
"ஹிஹி... அது.. வந்து"
"யார்னு கேட்டேன்!"
"உங்க பாட்டிதான் சார்!!"
வேகமாகச் சொல்லிவிட்டு அசட்டுச் சிரிப்பு சிரித்தான் அவன்.
ஆதித் இன்னும் முறைக்க, அவனை அலுவலக அறைக்குள் அழைத்துச்சென்று, அலுவலகக் கணினியைத் திறந்து அவர்களது நிறுவனத்தின் வலைப்பக்கத்தைக் காட்டினான் ராஜீவ்.
"கார்ல வரும்போது பாத்தேன்.. உங்க மூட் கெட்டுப்போகும்னு தான் சார் சொல்லல.."
அவனது வார்த்தைகள் காதில் விழவில்லை ஆதித்திற்கு. அவனது விழிகள் திரையில் தெரிந்த வார்த்தைகளைப் படித்துவிட்டுக் கனலாகிக் கொப்பளித்தன.
நிறுவனத்தின் வலைதளத்தில், தகவல் பலகையில், ஆதித்தின் திருமணத்திற்கு வாழ்த்துச் சொல்லி சில புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார் அந்நிறுவனத்தின் தலைமை முதலீட்டாளரான பர்வதம்மாள். அதற்குக் கீழே மற்ற பங்குதாரர்களும் அவரவர் வாழ்த்துக்களையும், திருமணத்திற்கு அழைக்கவேயில்லையே என்று கேள்வியும் தெரிவித்திருக்க, ஆதித் பற்களைக் கடித்தவாறு ராஜீவிடம் திரும்பினான்.
"என்னது இது?? ஏன் இது இன்னும் ஹோம் பேஜ்ல இருக்கு? டெவலப்பர் பைபாஸ் போட்டு இதை டெலீட் பண்ணவேண்டியது தான?"
"சார்... அது ஒண்ணும் பொய்யான தகவல் இல்லையே சார்..? அதுவும் உங்க பாட்டி... கம்பெனியோட ஓல்டஸ்ட் ஷேர் ஹோல்டர் போட்டிருக்க மெசேஜ்... நாம எப்படி சார் அதை எடுக்கறது? அவங்க கேட்க மாட்டாங்களா?"
ஆதித் கோபமாகத் தலையைக் கோதினான்.
"கல்யாணத்தைப் பத்தி நான் சொல்லாம என் பாட்டி சொன்னாங்கனா, மத்த இன்வெஸ்டர்ஸ், பார்ட்னர்ஸ் எல்லாம் என்னை என்ன நினைப்பாங்க?? அவங்களையெல்லாம் மதிச்சு கல்யாணத்துக்குக் கூப்பிடறதுக்கு பதிலா, மரியாதை இல்லாம இப்படி முடிச்சிட்டு வந்து சொல்றோம்னு சங்கடப் படமாட்டாங்களா?"
"உண்மைதான் சார்... என்ன பண்ணலாம் இப்போ?"
இரு கைகளாலும் தலையைக் கோதியவன், பெருமூச்சுக்களையும் தாராளமாக விட்டான்.
"இன்னிக்கு ஈவ்னிங்கே விவாண்ட்டா ஹால்ல ஒரு பார்ட்டி ஆர்கனைஸ் பண்ணு ராஜீவ். கம்பெனி சம்பந்தப்பட்டவங்களை மட்டுமில்லாம, கல்கத்தாவுல எல்லா வி.ஐ.பியையும் இன்வைட் பண்ணிடு. நான் நேர்ல எல்லார்கிட்டவும் பேசிக்கறேன்."
"ஷ்யூர் பாஸ்.. இப்பவே போறேன்."
"இன்னொரு விஷயம்!"
"யெஸ் பாஸ்?"
ஆதித் தனது கருநிற விழிகளில் இன்னுமொரு அடுக்கில் கருமை படர நிமிர்ந்தான்.
"மறுபடி எப்பவுமே என்னோட கம்பெனில நடக்கற விஷயத்தை எங்கிட்ட இருந்து மறைக்காத."
***
சுவர்களில் வரைந்திருந்த நவீனத்துவச் சித்திரங்களைக் கண்ணெடுக்காமல் ரசித்துக்கொண்டே நடந்து வந்தவள், யார்மீதோ மோதியதில் தடுமாறி நின்றாள்.
"ச்ச்.. சாரி.. ஐ--"
அவசரமாக மன்னிப்புக் கேட்டவள் நிமிர, இரண்டு நீல விழிப்பாவைகள் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தன. தாராவின் வார்த்தைகள் யாவும் காற்றில் வைத்த கற்பூரமாய் கரைந்து மறைந்து போயின. ஆழக்கடலின் அடியில் கிடைக்கும் அரிய நிறமானது, இன்று கண்ணெதிரில் கண்களாக நின்றதில் அதிசயித்தாள் அவள்.
அவள் தன்னை மறந்து அவ்விழிகளையே பார்த்துக்கொண்டிருக்க, விழிகளுக்குச் சொந்தமாக முகமோ கேள்வியாக நெற்றியைச் சுருக்கியது.
"ஆர் யூ ஓகே?"
ஆழமான ஆண்குரல்.
தாரா அதில்தான் சுதாரித்தாள்.
அப்போதுதான் கண்களைத் தவிர்த்து மீதி உருவத்தையும் பார்க்கத் தொடங்கினாள். கையில்லாத டீஷர்ட்டும், முழங்கால் வரையிலான ஷார்ட்ஸும், விளையாட்டு வீரர்கள் அணியும் 'நைக்' பாதணியும் அணிந்திருந்த அந்த இளைஞனுக்கு, தாராவை விட நான்கைந்து வயது அதிகமிருக்கலாம். உடற்பயிற்சி செய்ததால் முகத்தில் வியர்வைத் துளிகள் பூத்திருக்க, லேசான மரக்கலரில் இருந்த கேசமும் சற்றே ஈரமாக இருந்தது. காதிலிருந்து வயர்லெஸ் இசையூட்டியை அவன் கழற்றிவிட்டு, தாராவை ஏறிட்டான்.
"யூ ஓகே?" என மீண்டும் கேட்டான். தாரா தலையை மட்டும் மேலும் கீழும் ஆட்டினாள்.
"எதாவது உதவி வேணுமா?" என ஆங்கிலத்தில் வினவினான் அவன்.
"இல்ல, சும்மா நடந்து வந்திட்டு இருந்தேன், கவனமில்லாம மோதிட்டேன்" என அவளும் ஆங்கிலத்தில் விளக்கினாள், இடையில் நான்கைந்து 'சாரி'க்களோடு.
"இந்த ஊரு மாதிரித் தெரியலையே?"
"இல்ல, நான் தமிழ்நாட்டுல இருந்து வரேன்."
"ஓ.. தமிழ். சென்னை... சூப்பர்ஸ்டார்.. ஏ.ஆர்.ரகுமான்.. மணிரத்னம்.."
தாரா அவனை அதிசயமாகப் பார்த்தாள். அவனும் சிரித்தான்.
"ரசனைக்கு மொழி இல்ல. தமிழ் சினிமா பிடிக்கும். பாஷை புரியலைன்னாலும் பார்ப்பேன்."
தாரா சினேகமானக் கைநீட்டினாள் அவனிடம். "ஓ... என் பேர் தாரா."
"ஹாய் தாரா, நைஸ் டூ மீட் யூ. என் பேர் அபிமன்யூ."
"இதே ஊரா?"
"நோ, வேலைக்காக வந்திருக்கேன். அதோ, மஞ்சள் கலர்ல தெரியுதே, அந்த அபார்ட்மெண்ட்ல தான், பதினாறாவது மாடியில தங்கியிருக்கேன்."
"ஓ.."
"நீ ஊருக்குப் புதுசா?"
"ஆமா.. எனக்கு ஊரை சுத்திப் பார்க்கணும்னு வந்தேன்.. ஆனா தனியா போக பயமா இருக்குது.."
"ஹ்ம்ம். ஐ வில் ஹெல்ப். நான் ஜிம்ல இருந்து இப்பதான் வர்றேன். பத்து நிமிஷம்.. வீட்டுக்குப் போயி குளிச்சு ரெடியாகிட்டு வர்றேன்.. ஊரை சுத்திப் பார்க்கலாம்."
தாரா ஆச்சரியமாக, "நிஜமாவா? எனக்கு ஊர சுத்திக்காட்டுவீங்களா?" என்க, அவன் சிரித்தான்.
"இதுகூட செய்யலன்னா எப்படி... தமிழ்நாட்டுப் பொண்ணு கல்கத்தா ஆளுங்களைப் பத்தித் தப்பா நினைச்சுக்கக் கூடாதுல்ல?"
இப்போது சிரிப்பது தாராவின் முறை. அவன் தாராவை அழைத்து சாலையோரமிருந்த பலகையில் அமரச்சொன்னான்.
"இங்க வெய்ட் பண்ணு. சரியா பதினைஞ்சு நிமிஷத்துல நான் வரலைன்னா, நீ எழுந்து போயிடலாம்!"
"அட, ஏன்?"
"நான் உன்னை ஏமாத்தப் போறதில்ல. அதனாலதான்."
"வெய்ட் பண்றேன்.. சீக்கரம் வாங்க."
அவன் மீண்டுமொருமுறை அவனது நீலவிழிகளைச் சுருக்கி சிரித்துவிட்டு, அவனது அடுக்குமாடிக் கட்டிடத்தை நோக்கி ஓடினான் எளிமையாக.
தாரா தனக்குள் சிரித்துக்கொண்டாள்; புதியதொரு நகரில் தான் சந்தித்த முதல் நபரிடம் நட்பாகிவிட்ட மகிழ்ச்சியில். சாலையை வேடிக்கை பார்த்தவாறே, தனது நண்பனுக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள் அவள்.
*****
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro