19
வாசல் நிலைப்படி அருகே கண்கள் செருகி அமர்ந்திருந்த தாராவைப் பார்த்ததும் ஆதித் ஆயாசமானான்.
கார் விளக்கின் மஞ்சள் வெளிச்சம் முகத்தில் பட்டதும் எழுந்துவிட்டாள் தாரா. ஆதித் அவளைத் தாண்டிக்கொண்டு உள்ளே செல்ல, கண்களைத் தேய்த்தவாறே எழுந்து உள்ளே வந்தாள் அவளும். வரவேற்பறையில் இருந்த மேசையில் தனது தோள்பையை வைத்தவன், அலுப்பாகக் கைகளை முறுக்கினான்.
"தூங்கலையா?" என்றான் எங்கோ பார்த்தபடி.
தாரா தடுமாறியவாறு, "அ.. அதாவது.." என இழுக்க, அவனோ பொறுமையின்றி, "லிசன், இந்தமாதிரியான பேபிசிட்டர் வேலையெல்லாம் நீ பார்க்கத் தேவையில்லை. என்னை கவனிச்சுக்க எனக்குத் தெரியும். என் பர்சனல் ஸ்பேஸ்ல யாரும் தலையிடத் தேவையில்ல" என்றுவிட்டு நில்லாமல் மாடியேறிச் செல்ல, தாரா தலையைச் சொரிந்தாள் குழப்பமாக.
அவளது அறையிலிருந்து அப்போது எட்டிப்பார்த்த இந்திராணி, "சார் கீ போல் லேன்?" என்க, தாரா தோளைக் குலுக்கிக் கைவிரித்தாள்.
இரவு எட்டு மணிக்கு இந்திராணியுடன் அமர்ந்து அவர் செய்த சப்பாத்தியையும் பருப்புத் துவையலையும் சாப்பிட்டவள், சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, கல்லூரி நண்பர்களுக்குக் குறுஞ்செய்தியில் பேசினாள். பின் அம்மாவிற்கு அழைத்தாள். அவரோ பட்டென அப்பாவிடம் கைபேசியைத் தந்துவிட, வெறுமே உம்கொட்டிவிட்டு முடிந்தவரை வேகமாக அழைப்பைத் துண்டித்தாள்.
பத்து மணியளவில் தூங்குவதற்காக அவளது அறைக்குச் செல்ல, அறையின் பிரம்மாண்டமும், இருளும், தனிமையும், புது சூழலும் அவளை பயமுறுத்தின. பத்து நொடிகள் கூடத் தனித்திருக்க முடியாமல் உடனே வெளியே ஓடி வந்துவிட்டாள் தாரா. புழக்கடைப் பக்கம் இருந்த இந்திராணியின் அறைக்கதவைத் தட்டியவள் அரண்ட பார்வையுடன் பாதி சைகையும் பாதி அழுகையுமாய் நிற்க, அவர் அவளது தோளை அழுத்தித்தந்து சமாதானம் செய்தார். கண்களையும் துடைத்துவிட்டார்.
"சின்ன வயசுல இருந்தே தனியா படுத்துக்க பயம்... எப்பவும் தன்னு இருப்பான்.. இல்லன்னா அம்மா இருப்பாங்க.. இப்ப அவங்க யாருமே இல்ல... அந்த ரூம் ரொம்ப அமைதியா.. இருட்டா இருக்கு... தூக்கம் வரல.. ரொம்ப பயமா இருக்கு.."
விசித்து விசித்து அழுதவாறு அவள் கூற, இன்று மட்டும் தான் வந்து அவளுடன் தூங்குவதாகவும், அதுவும் எஜமானரிடம் சொல்லி அனுமதி பெற்ற பின்புதான் என்றும் கூறிவிட, சரியென அவரைப் படுக்கச் சொல்லிவிட்டு, ஆதித்திற்காகக் காத்திருந்தாள் அவள்.
அவனோ எதையெதையோ சம்பந்தமின்றிப் பேசிவிட்டுச் செல்ல, தூக்கக் கலக்கத்தில் இருந்த தாராவிற்கோ அதில் பாதி கூடப் புரியவில்லை. கண்களைத் தேய்த்தவாறே தன்னறைக்கு வந்தாள் அவள்.
"அவர் பேசுனது பாதி புரியல எனக்கு.. காலைல சொல்லிக்கலாம்"
தரையில் பாய்விரித்து இந்திராணி படுத்திருக்க, அவரை மெத்தையில் படுக்குமாறு பலமுறை கெஞ்சியும் மறுத்துவிட்டார் அவர். விளக்கை அமர்த்தியபின்பும் சிறிதுநேரம் கதை பேசிக்கொண்டிருந்துவிட்டு, மெல்ல மெல்ல எப்படியோ தூங்கிப்போனாள் தாரா, கனவில் அம்மாவையும் தன்னுவையும் ஆரஞ்சு பழரசத்தையும் நினைத்தவாறே.
*
*
"ஜாகென்.. இத்தாகே ஜாகென்.. தாரா"
"அம்மா.. காலேஜ் இன்னிக்கு லீவும்மா..."
"தாரா, த்ரூதோ ஜாகென்!"
தன் அன்னை தேவி எப்போது புரியாத பாஷையெல்லாம் பேசத்தொடங்கினார் என்று யோசித்தவாறே அவள் கண்விழிக்க, அவளெதிரில் குளித்துத் தயாராகி காலைநேர உற்சாகத்துடன் நின்றிருந்தார் இந்திராணி.
தான் எங்கிருக்கிறோமென ஒருகண இடைவேளைக்குப் பின்பே புலனாகியது அவளுக்கு. சட்டென அம்மாவைத் தேடித் துடித்த நெஞ்சத்தை சிரமப்பட்டு அடக்கிவிட்டு, மெல்லிய புன்னகையுடன் கட்டிலிலிருந்து எழுந்தாள் தாரா.
"எந்திரிச்சுட்டேன், தேங்க்ஸ்."
அவர் ஒரு தட்டில் காபிக் கோப்பையை நீட்ட, வேண்டாமெனத் தலையாட்டினாள் அவள்.
"பழக்கமில்ல.. குடிக்கறதில்ல" என்று சொல்லி சைகையும் செய்தாள்.
அவர் சரியென அவளை சாப்பிட வரச்சொல்லிவிட்டுச் சென்றுவிட, சோர்ந்த நடையுடன் குளியலறைக்குச் சென்றவள் தயாராகி வெளியே வரவே அரைமணி நேரமானது.
கலைந்திருந்த கூந்தலைக் கையால் கோதி ஒதுக்கிவிட்டபடியே அவள் முன்னறைக்கு வர, தடதடவென மாடிப்படியில் யாரோ இறங்கும் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தாள். கருநீலத்தில் கோட் சூட் அணிந்து, தலையை நேர்த்தியாக வாரி, கையில் ஒரு ப்ளாட்டின கைக்கடிகாரத்தைக் கட்டிக்கொண்டே ஆதித் இறங்கி வந்துகொண்டிருந்தான்.
சுத்தமாக சவரம் செய்துவிட்டு அவன் வர, மழமழவென இருந்த அவன் கன்னங்களைக் கண்டு லேசாகக் கண்விரித்தாள் தாரா. தாடையின் கூர்மையான முகவெட்டுத் தோற்றம் அவனுக்கு அப்படிக் கச்சிதமாய் பொருத்தியிருந்தைக் கண்டு வியக்காமலிருக்க முடியவில்லை அவளால். இத்துணை நாட்கள் கலைந்த தலையும் சவரக் கத்தியையே பார்க்காத தாடியுமாக இருந்தபோதே ஊரில் அனைவரும் அவனையே வைத்த கண்கள் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனரே; இப்போது நிற்பதுபோல சலவைக்கல் சிலையாய் அங்கே அவன் இருந்திருந்தால் என்னாகியிருக்கும் என்று சிந்தித்தது மனது.
"டிபன் ரெடி ஆஸ்சே கீ?"
இந்திராணியிடம் கேட்டவாறே அவன் இறங்கிச்செல்ல, அவரும் ஆமென பதிலளித்துவிட்டு சமையலறைக்கு விரைய, உணவு மேசைக்குச் சென்று ஒரு நாற்காலியை நளினமாக இழுத்துப் போட்டு அமர்ந்தான் அவன்.
தாரா நிற்பதைக் கண்டு, அவளையும் உட்காருமாறு சைகை காட்டினான். தாரா அமரவில்லை. கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு, அவனைக் கேள்வியாகப் பார்த்தாள் அவள்.
ஆதித் இருகணங்கள் கழித்தே அவளைப் பார்த்தான். அமராமல் ஒருவித இறுக்கமான பார்வையுடன் அவள் நிற்பதைக் கண்டவன் குழப்பமாகத் தலைசரித்தான்.
"என்ன ஆச்சு? டிபன் வேணாமா?"
"நேத்து நைட் ஏன் அப்படி சொன்னீங்க? நான் உங்களை என்ன பண்ணினேன்?"
"எதுக்காக நைட் தூங்காம வெய்ட் பண்ணிட்டிருந்த?"
"ஒரு விஷயம் கேட்கறதுக்காக--"
"லிசன் தாரா.. நீ இங்க இருக்கற வரை, என்னைக் கேட்டுதான் எதுவும் செய்யணும்னு இல்ல. இந்த வீட்டுல உன் இஷ்டத்துக்கு நீ இருக்கலாம். உன் சுதந்திரத்தை யாருக்காகவும் விட்டுக்குடுக்கத் தேவையில்ல. யாருடைய பர்மிஷனுக்காகவும் வெய்ட் பண்ண வேண்டியதில்ல. உன்னைக் கேள்வி கேட்க ஆளில்லை இங்க. ஸோ, உன் வாழ்க்கைய உனக்குப் பிடிச்சமாதிரி இங்கே நீ வாழலாம். You can finally start living your life."
இதுவரை தன்னிடம் இம்மாதிரி வார்த்தைகளை யாரும் கூறக் கேட்டிராத தாரா, விழிகளில் வியப்போடு அவனை நோக்கினாள். எவ்விதமான சூழலிலும் தன் முடிவை லட்சியமே செய்யாமல் பெரியவர்களே அனைத்தையும் செய்வதைப் பார்த்தே பழக்கமானவளுக்கு, இந்த சுதந்திரம் அதிசயமாக இருந்தது. யாருக்காகவும் தனது ஆசைகளை விட்டுவிடத் தேவையில்லை என்ற அவனது வாக்கு அவள் மனதில் அவன் மதிப்பை எங்கோ கொண்டுசெல்ல, மலர்ந்து முறுவலித்தாள் அவள். கோபத்தை விடுத்து அவனெதிரில் அமர்ந்தாள் உணவருந்த.
இந்திராணி இருவருக்கும் உணவு பரிமாற வந்தார். இரண்டு தட்டுக்களில் அடைதோசை போல எதையோ வைத்து, கூடவே கெட்டியான, மஞ்சள் வண்ணக் கூட்டும் வைக்க, தாரா அதை வினோதமாகப் பார்த்தாள்.
"என்னது இது?" தட்டில் வைக்கப்பட்ட இளமஞ்சள் நிறப் பதார்த்தத்தைக் காட்டிக் கேட்டாள் அவள்.
"நம்ம ஊரு அவியல் மாதிரி, இங்க லப்ரா. சாப்பிட்டுப் பாரு" என்றான் ஆதித்.
அவியல் போலத்தான், ஆயினும் மஞ்சள் பூசணி இட்டிருந்ததால் இனிப்பாகவும் இருந்தது அது. தாரா விழிகள் விரிய, "செம்மயா இருக்கு" என்க, ஆதித் சன்னமாகப் புன்னகைத்தான்.
"இதை ரெகுலரா செய்வாங்க இந்திராணி அக்கா. எனக்குப் பிடிச்ச பெங்காலி டிஷஸ்ல, இதுவும் ஒண்ணு."
"ஓ..." என்றுவிட்டு இந்திராணியிடம் திரும்பித் தட்டை சைகை காட்டியவள், ஆள்காட்டி விரலை மடித்துக் கட்டை விரலோடு வைத்து 'நன்றாக இருக்கிறது' என்றபடி காட்டியவாறு, "திஸ் இஸ் ஸோ க்ரேட்!" என்க, அவரும் புரிந்ததாகச் சிரித்துத் தலையசைத்தார்.
தட்டில் பழுப்பு நிறத்தில் இருந்த உணவை அடைதோசை என்று நினைத்து அவள் விண்டு எடுக்க, அதுவோ பட்டுத்துணியைப் போல மெல்லிசாக இருந்தது. அவள் கையில் வளைந்தது.
"பேசன் சில்கா. கடலை மாவுல செய்யறது."
அவனே விளக்கினான். தலையசைத்துவிட்டு அதை உண்டாள் அவள்.
"ஓ.. இதுவும் நல்லா இருக்கு... ஆனா அடை தோசையா இருந்திருந்தா இன்னும் நல்லா இருக்கும்.."
"அவங்களுக்கு தமிழ்நாட்டு சமையல் பெரிசா தெரியாது. சாதமும் வித்தியாசமா தான் இருக்கும் இங்கே. பழகிக்கோ."
தாரா சரியெனக் கேட்டுக்கொண்டாள்.
"அப்பறம், உன்னோட ஸ்கூல் சர்டிஃபிகேட்ஸ், ஐடென்டிடி ப்ரூஃப் எல்லாம் ரெடி பண்ணிக்க. உங்க காலேஜ்ல ட்ரான்ஸ்ஃபர் அப்ளை பண்ணிடு. நான் ராஜீவ்கிட்ட சொல்லி, யுனிவர்சிட்டில உனக்கு இண்டர்வியூ ஏற்பாடு பண்ண முடியுமான்னு பாக்கறேன்."
"ம்ம்"
சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் "பாஸ்" என்றழைத்தவாறே ராஜீவ் உள்ளே வர, ஆதியை விட தாராவே உற்சாகமாக நிமிர்ந்தாள்.
தாராவைப் பார்த்து முறுவலித்தவன், "கெமோன் அச்சேன்?" என்று கேட்டவாறே வர, தாரா புரியாமல் பார்த்தாள். ஆதித் ஏதோ விளக்குமுன் ராஜீவே முந்திக்கொண்டான்.
"பெங்காலி. 'கெமோன் அச்சேன்?' அப்படின்னா, எப்படி இருக்கீங்கன்னு அர்த்தம். அதுக்கு பதில் சொல்லணும்னா, 'ஆமி பாலோ அச்சி' அப்டினு சொல்லணும். அதாவது--"
"நல்லா இருக்கேன்னு அர்த்தம். கரெக்டா?"
"ஃபுல் மார்க்ஸ்!"
தாரா கலகலவென சிரிக்க, ஆதித் எழுந்து கைகழுவச் சென்றான். தாரா ராஜீவை, "வாங்களேன், சாப்பிடலாம்" என அழைக்க, ராஜீவ் அன்பாக மறுத்தான்.
"வீட்லயே நல்லா சாப்பிட்டேன்.. பாஸோட இன்றைய கமிட்மெண்ட்ஸ் எல்லாத்தையும் ப்ரீஃப் பண்றதுக்கு தான் நான் வந்தேன்."
"போலாமா ராஜீவ்?" கைகளை ஒரு வெள்ளைத் துண்டில் துடைத்தவாறே ஆதித் வர, தாராவிடம் ராஜீவ் திரும்பி தொப்பியைக் கழற்றி மாட்டும் அபிநயத்தோடு, "ஆஷி?" என்றிட, அவள் சிரித்தாள். "போயிட்டு வரேன்னு சொல்றீங்களா?"
"ம்ம், அதுக்கு பதில் என்ன சொல்லணும்னா--"
"லேட்டாச்சு, வெளிய கிளம்புடான்னு சொல்லணும். வா போலாம்" என அவன் தோளில் கைவைத்துத் தள்ளியவாறே ராஜீவை அழைத்துச் சென்றான் ஆதித்.
தாராவும் கைகளைக் கழுவிவிட்டு எழுந்து அவர்கள் பின்னால் சென்றாள் வாசலுக்கு.
கார்ஷெட்டிலிருந்து கருநீல ஃபோர்ட் காரை ஓட்டுநர் தாஸ் ஓட்டிவந்து வாசல் முன்னால் நிறுத்தி, பின்கதவை ஆதித்திற்காகத் திறந்துவிட்டார்.
ராஜீவ் அவளுக்குக் கையசைத்தவாறே காரினுள் ஏறிக்கொள்ள, ஆதித்திற்கும் அவள் கைகாட்ட முயல்வதற்குள் கார் கேட்டைத் தாண்டி விரைந்தது.
தாரா லேசான ஏமாற்றப் பார்வையுடன் நின்றாள்.
***
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro