18
ஐந்தரை மணிக்குத் தனது நிறுவனத்தின் அலுவலகக் கட்டிடத்திற்குள் ஆதித் நிவேதன் நுழைய, வெளியே தனது இருக்கையில் இருந்த ராஜீவ் அவனைக் கண்டதும் எழுந்து ஓடிவந்தான்.
"வெல்கம் பாஸ்! பத்து நாளா ஆளையே பார்க்க முடியல.. பாட்டிக்கு இப்ப எப்படி இருக்கு? எல்லாம் ஓகேதான?"
தனது கண்ணாடி அறைக்குள் நுழைந்து, கதவை சாத்திவிட்டு ராஜீவைத் தீவிரமான பார்வையுடன் ஏறிட்டான் அவன்.
"பாஸ்... என்ன ஆச்சு? என்ன ப்ராப்ளம்? வீடியோ கால்ல நல்லாத் தானே பேசுனீங்க? கம்பெனியில எந்த பிரச்சனையும் இல்லையே... டீலர் யாராச்சும் ஃபோன் பண்ணாங்களா? இல்லன்னா--"
"ராஜீவ். ஐம் மேரீட்."
இருகணங்கள் கழித்தே அவன் சொன்னதன் முழு அர்த்தமும் புரிந்தது ராஜீவுக்கு.
"என்ன சொல்றீங்க பாஸ்!? கல்யாணமா? உங்களுக்கா?? எப்போ நடந்தது??"
"நேத்து."
"வாவ்-- ஐ மீன், வாட்??"
நடந்ததை சுருக்கமாகச் சொன்னான் அவன்.
"இப்ப என்ன பண்றது?"
ராஜீவ் ஆழ்ந்த யோசனையில் இருப்பதைப் போல நின்றான்.
"ஹ்ம்ம்.. கல்யாணமான பிறகு, வழக்கமா ஹனிமூன் போவாங்க. நான் வேணா சிம்லா, மால்தீவ்ஸ், இல்லன்னா சிங்கப்பூர்ல ஹோட்டல் பாக்கட்டுமா சார்?"
ஆதித் முறைக்க, ராஜீவ் நிறுத்திக்கொண்டான்.
"ப்ச், I actually had a plan. அவளை அங்கேயே விட்டுட்டு, நான் மட்டும் கொல்கத்தா வந்துடலாம்னு நினைச்சேன். பாட்டி விடலை. இப்ப அவளையும் கூட்டிட்டு கொல்கத்தா வரவேண்டியதா போச்சு."
ராஜீவ் லேசாக சிரித்தான்.
"யார் பாஸ் உங்களுக்கு இப்படியொரு மொக்கை ஐடியாவைத் தந்தது? கல்யாணம் பண்ணிக்கிட்ட பின்னால, என்ன காரணம் சொல்லி உங்க வொய்ஃபை விட்டுட்டு நீங்க மட்டும் இங்க தனியா வருவீங்க? பெரியவங்க யாரும் கேள்வி கேக்கமாட்டாங்களா என்ன?"
நகுலை மனதுக்குள் நன்றாகத் திட்டியவன், "அப்போதைக்கு அதுதான் சரின்னு தோணுச்சு. வேற எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை" என்றான் ராஜீவிடம்.
"சரி, இப்ப கல்கத்தாவுக்கு கூட்டிட்டு வந்துட்டீங்க, அதனால என்ன?"
"அந்தப் பொண்ணுக்கு வயசு இருபத்தி ஒண்ணு."
ராஜீவ் புரியாமல் பார்த்தான் மீண்டும்.
"ஸோ? 21 வயசுன்னா, லீகல் மேரேஜ் தானே?"
"ம்ம், என் வயசு முப்பதாகப் போகுது."
"ஆமா.. அதான் சீக்கிரமா கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க.. ஸோ?"
ஆதித் எரிச்சலாக நிமிர்ந்தான்.
"இதுல என்ன பிரச்சனைன்னு உனக்குப் புரியுதா இல்லையா?"
"நிஜமாவே புரியல பாஸ். என்ன ப்ராப்ளம்??"
மேசையில் முழங்கைகளை ஊன்றி, கைகளில் தலையைக் கவிழ்த்துக்கொண்டான் ஆதித்.
"ஏஜ் டிஃபரன்ஸ். எட்டு வயசு வித்தியாசம்."
"அட, அதனால என்ன பாஸ்? ரெண்டு பேருமே மேஜர் தானே? வயசு வித்தியாசம் இல்லாத கல்யாணம் ஏது? ப்ரியங்கா சோப்ரா தெரியுமா--"
"ப்ச், எனக்கு உதாரணங்கள் வேணாம் ராஜீவ். இந்த சிச்சுவேஷன் எனக்குப் பிடிக்கலை. கல்யாணமே வேணாம்னு உறுதியா இருந்தோம் நாங்க ரெண்டு பேரும். ஆனா சொசைட்டி இப்படிப் பண்ணிடுச்சு. எனக்கு சொல்யூஷன் வேணும். I need an out."
ராஜீவ் தனது நாற்காலியிலிருந்து எழுந்து, அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.
"இந்திய திருமண சட்டப்படி, கட்டாயப்படுத்தி ஒரு பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சா, அது செல்லாது. குடும்பம்தான் அந்தப் பொண்ணை ஃபோர்ஸ் பண்ணுச்சுனு ப்ரூவ் பண்ணிட்டா, ஈஸியா annulment வாங்கிடலாம். இந்தக் கல்யாணம் நடக்கவே இல்லைன்னு ஆகிடும்."
"நோ. வீட்டுக்கு இந்த விஷயம் தெரியக் கூடாது. பாட்டிக்கு ஹார்ட் ப்ராப்ளம் இருக்கு. அவங்க எந்த அதிர்ச்சியும் தாங்க மாட்டாங்க. பொண்ணோட ஃபேமிலியை இழுக்காம, வேற எதாவது ஐடியா யோசி."
"வீட்டுக்குத் தெரியக்கூடாது, அவ்ளோதானே? ரெண்டு பேரும் கொல்கத்தாவுல தான இருக்கீங்க? அந்தப் பொண்ணை எதாச்சும் லேடீஸ் ஹாஸ்டல்ல விட்டுருங்க. பணம் எவ்ளோ வேணும்னு கேட்டு குடுத்துருங்க. பிரச்சனை முடிஞ்சது."
ஆதித் முறைத்தான்.
"கொஞ்சம் மனசாட்சியோட பேசறியா?"
"அப்பறம் என்ன பாஸ் பண்ணனும்ங்கறீங்க? ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ வெய்ட் பண்ணுங்க. ம்யூச்சுல் கன்செண்ட்ல டைவர்ஸ் வாங்கிக்கலாம். அதுவரைக்கும் வீட்டுல ஹவுஸ்மேட்ஸ் மாதிரி இருந்துக்கங்க. வேறென்ன பண்ண முடியும்?"
அவன் உச்சபட்ச விரக்தியோடு கேட்க, ஆதித்திற்கு அது சரியாகப் பட்டது.
'வேறு வேறு ஊர்களில் தனித்திருக்கத் தானே திட்டம் போட்டோம்.. இப்போது ஒரே வீட்டில் இருந்தாலும் முன்போலவே திட்டத்தைத் தொடரலாம்! வீட்டில் ஒரு விருந்தினர் போல அவளை நினைத்துக்கொள்ளலாம், அவ்வளவுதான்.'
"கரெக்ட் ராஜீவ்."
ஆதித் தீர்மானத்தோடு எழுந்து வெளியேற, ராஜீவ் குழப்பமாகத் தலையைத் தேய்த்தான்.
"பாஸ்.. பாஸ்.." என்றழைத்தவாறே ஆதியின் பின்னால் நடந்தான் அவன். உலோக ஆலையைப் பார்வையிடுவதற்காக ஆதித் நடக்க, ராஜீவ் அவனுடன் சேர்ந்து வந்தான்.
"என்ன பாஸ், கரெக்டுன்னு சொல்லிட்டு எந்திரிச்சு வந்துட்டீங்க? அப்ப என்ன செய்யப் போறீங்க?"
"நீ சொன்னதைத்தான். ஊர்ல அவ இருந்திருந்தா எப்படி நான் இருந்திருப்பேனோ, அப்டியே இருந்துடப் போறேன்."
"அதுக்கு அப்பறமா--"
"நாளைக்கு நடக்கறதை நாளைக்கு யோசிக்கலாம். இன்னிக்கு நடக்குறதை மட்டும் இன்னிக்குப் பார்க்கலாம். வா."
ஆலையினுள் செல்லும்போது தான் தனது மடிக்கணினியை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்ததை நினைவுகூர்ந்தான் அவன்.
"ராஜீவ், வீட்டுக்குப் போய் என் லேப்டாப்பை எடுத்துட்டு வரமுடியுமா? அந்த மோட்டோகார்ப் ஆர்டரை மறுபடி பார்க்கணும் நான். மேனேஜர்கிட்ட அதைப்பத்திக் கேட்டு ஃபைனலைஸ் பண்ணனும். நான் அவர்கிட்ட பேசிட்டு இருக்கேன். நீ உடனே போய் என் லேப்டாப்பை எடுத்துட்டு வந்துரு."
சரியென ராஜீவும் தனது பைக்கில் விரைந்தான் வீட்டுக்கு. காவலாளிக்கு அவனைத் தெரியுமென்பதால் வணக்கம் வைத்துவிட்டுக் கதவைத் திறந்துவிட, முன்னறைக்குள் நுழைந்தபோது, வீட்டில் பணியாற்றும் பெண்மணியிடம் யாரோ ஒரு பெண் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தான் அவன்.
அவர் இரவு உணவைப் பற்றிக் கேட்க, அப்பெண்ணோ, "எனக்குப் புரியலையே.." எனத் தமிழில் கூறிட, அது யாரென்று சொல்லாமலேயே புரிந்தது ராஜீவுக்கு. அமைதியாக அவளை மேலும் கீழும் பார்த்தான் அவன். அதிக உயரமின்றி, மிகவும் சின்னப்பெண் போல்தான் தெரிந்தாள் அவள். ஆதித்தின் தயக்கத்திற்கும் ஒதுக்கத்திற்கும் காரணம் புரிந்தது. ஆனால் அவளது முகத்தைப் பார்த்தவுடன், இந்தப் பெண்ணையா ஏதோ விடுதியில் கைவிடச் சொல்லி யோசனை சொன்னோம் என்று அவனுக்கே தன்மீது கோபம் வந்தது. யாருமே அவளை ஒருமுறை பார்த்தால் பின் மனதாலும் அவளுக்குத் தீங்கு நினைக்க மாட்டாத வண்ணம் வெள்ளந்தியான முகம். அகன்ற விழிகளில் அப்பாவித்தனம் வழிய, புன்னகைத்தால் தெரியும் பால்வெள்ளைச் சிரிப்பைப் போலவே தூய்மையான மனதும் தெரிந்தது. இவளை விட்டுத் தூரம் செல்ல நினைத்த ஆதித்தை எண்ணினால் சிரிப்பாக இருந்தது அவனுக்கு.
பெங்காலி மொழி தெரியாததால் அவள் லேசான தவிப்போடு தலைசரித்துப் பார்க்க, உடனே அவளது உதவிக்கு வந்தான் ராஜீவ்.
"நைட் டிபன் என்ன செய்யணும்னு கேக்கறாங்க."
அவளும் பணிப்பெண்ணும் ஒன்றாகத் திரும்பி நோக்கினர் இவனை. பணிப்பெண்ணிடம் ஆதித்தின் மடிக்கணினியை எடுத்துவருமாறு கூறி அனுப்பிவிட்டு, இவளிடம் திரும்பினான் அவன்.
தமிழில் இவன் பேசியதால் எழுந்த ஆச்சரியத்தில் விழிகள் விரிய, "தமிழா நீங்க?" என்றாள் அவள் அதிசயமாக.
"இல்லை. பெங்காலி தான். ஆதித் சார்கூட நாலு வருஷமா இருக்கறதால தமிழும் வரும்."
"ஓ.. நீங்க...?"
"ஆதித்தோட பர்சனல் அசிஸ்டெண்ட். ராஜீவ் பாக்ஜி."
கைகுலுக்க அவன் கைநீட்ட, தயக்கமின்றி அவளும் அதைப் பற்றிக் குலுக்கினாள்.
"சிதாரா சீனிவாசன். தாரான்னு எல்லாரும் கூப்பிடுவாங்க. நான்--"
"தெரியும். சார் சொன்னாரு. வெல்கம் டூ கொல்கத்தா. ஊரை உங்களுக்கும், ஊருக்கு உங்களையும் ரொம்ப சீக்கிரமே பிடிச்சுப் போகும், அதுல சந்தேகமே இல்ல."
அவனது வரவேற்புக்கு அவள் கலகலவெனச் சிரிப்பை சிந்தினாள்.
"தேங்க்ஸ். பாஷைதான் புரியல.. பெங்காலி சீக்கிரமா கத்துக்கணும். ஆனா எப்படின்னு தான் இன்னும் தெரியல."
"பேசினா வராத பாஷை எது? என்னைப் பாருங்க, பாஸ்கூட பேசிப் பேசி ரெண்டே வருஷத்துல தமிழ் கத்துக்கிட்டேன். ரொம்ப எஃபெக்டிவான மெத்தட் அது. பேச்சு."
"ஓ.."
"ம்ம், இனிமேல் நிறைய பேசுவோம்.."
இறங்கிவந்த இந்திராணியிடம் மடிக்கணினியை வாங்கிக்கொண்டு, தாராவிற்கு ஒரு புன்னகையைத் தந்துவிட்டுக் கிளம்பினான் அவன்.
மீண்டும் ஆலைக்கு வந்தபோது, ஆதித் அவனுக்காகக் காத்திருக்க, ராஜீவ் மடிக்கணினியை எடுத்து நீட்டினான்.
"உங்க வொய்ஃபை பாத்தேன் பாஸ். நீங்க சொன்னது கரெக்டுதான்.. இவ்ளோ சின்னப் பொண்ணா இருக்கா... கொஞ்சம் வெய்ட் பண்ணி கல்யாணம் வச்சிருக்கலாம். பாவம்.."
ஆதித் ஒற்றைப் புருவத்தை உயர்த்தினான்.
"யார் பாவம்?"
"இதென்ன கேள்வி? Obviously her. வாழ்க்கைல அடுத்து என்னன்னே தெரியாம, எங்க போறது, என்ன பண்றதுன்னு புரியாம, திக்குத் தெரியாம நிக்கறா. அவளைவிட உங்களுக்கு பெரிசா என்ன கஷ்டம்? வீட்டுல ஒரு ஆள் அதிகமா இருக்கப்போறதைத் தவிர?"
ஆதித் ஆமோதித்து அமைதியானான்.
"என்னால அவளுக்குத் தொந்தரவு கிடையாது. பதிலுக்கு அதையேதான் நானும் எதிர்பார்க்கறேன். யாருடைய சுதந்திரமும் தடைப்படத் தேவையில்லாத மாதிரி இருந்துக்கிட்டா, நானே அவளுக்குத் தேவையான உதவிய செய்வேன்."
"பாஸ்.. அந்தப் பொண்ணு நல்ல பொண்ணு பாஸ். இப்பல்லாம் அந்தமாதிரிக் கிடைக்கறதில்ல. ஏன், பொறக்கறதே இல்லைன்னு வச்சுக்குங்களேன்! கொஞ்சம் ஸாஃப்ட்டா டீல் பண்ணறது பெட்டர்."
"அதை அப்புறம் பார்ப்போம், முதல்ல வந்த வேலைய பார்ப்போமா?"
ஆலை மேலாளர்களுக்கும் மேற்பார்வையாளர்களுக்கும் திட்டத்தை விளக்கிச் சொல்லி, பொறியாளர்களுக்குப் பணியைப் பகிர்ந்தளித்து, தொழில்நுட்பப் பணியாளர்களிடம் வரைபடங்களைத் தயாரித்து வாங்கி, மூன்று மாதமென இலக்கை நிர்ணயித்து, அதற்காக ஏகப்பட்ட விவாதங்களை எதிர்கொண்டு, அனைத்தையும் சமாளித்து ஒருவழியாக ஆர்டரை உறுதி செய்தபோது, மணி இரவு பதினொன்று.
"ராஜீவ், நீ வீட்டுக்குப் போ. நாளைக்கு லீவ் எடுத்துக்க. இனி நான் பாத்துக்கறேன்."
"பாஸ், நீங்களும் வீட்டுக்குப் போகணும். இப்ப உங்களை நம்பி ஒரு பொண்ணு இருக்கு, மறந்துடாதீங்க."
"யாரும் யாரையும் நம்பி இல்ல. அவ பாட்டுக்கு அவ தனியா இருப்பா. நான் பாட்டுக்கு நான் இருப்பேன், சரியா? நீ ஃபீல் பண்ணாமப் போ."
அவன் சிரித்துவிட்டுக் கிளம்ப, ஆதித் காரில் வீடுவந்து சேர்ந்தபோது, வாசல் நிலைப்படியில் சாய்ந்து தூங்காமல் காத்திருந்தாள் தாரா.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro