15
'எட்டு வயது இளையவள்' 'கிட்டத்தட்ட சின்னக் குழந்தை'
இதுவரை அதைப்பற்றிய நினைப்பே இல்லாதிருந்துவிட்டு, சட்டென அது புரிந்ததும் என்னவோபோல ஆகிவிட்டது அவனுக்கு. ஏதோ தவறு செய்துவிட்டதைப் போல இருந்தது.
"என் வயசு என்னன்னு தெரியுமா?"
சட்டென அவன் கேட்கவும் பேச்சை நிறுத்திவிட்டுக் குழப்பமாக நிமிர்ந்தாள் தாரா.
"தெரியலையே.. ஏன்?"
சன்னமான சந்தேகப்பார்வையுடன் அவள் கேட்க, அவன் பெருமூச்சு விட்டான்.
"இருபத்தி ஒன்பது. முப்பது வயசு ஆகிடுச்சுன்னா பொண்ணுக் கிடைக்காதுன்னு தான் பாட்டி அவசர அவசரமா பொண்ணுத் தேடுனாங்க எனக்காக. இந்தக் கல்யாணமும் தடாலடியா நடக்கறதுக்கு அதுதான் காரணம். This is a mistake."
தாரா அதிகம் சலனப்படவில்லை.
"அதனால என்ன? இது ஒரு போலி கல்யாணம் தானே?? நம்ம என்ன நிஜமாவா வாழப்போறோம்? அவங்கவங்க வழியில நாளைக்குப் பிரிஞ்சு போகப்போறோம், அப்பறம் என்ன?"
இருந்தாலும் ஆதித்தின் மனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவளிடமிருந்து நான்கடி தள்ளி அமர்ந்தவன், அப்போதும் மனம் ஓப்பாமல், எழுந்து சென்று சோபாவில் படுத்துத் தலையோடுகால் போர்த்திக்கொண்டு கண்ணயர்ந்தான்.
தாரா சிறிதுநேரம் வானத்தை வேடிக்கை பார்த்துவிட்டு, தூக்கம் சொக்கியதில் உள்ளே வந்து பார்த்தாள். கட்டிலை விட்டு சோபாவில் அவன் படுத்திருக்கக் கண்டவள், தோளைக் குலுக்கிவிட்டுக் கட்டிலில் படுத்துக்கொண்டாள்.
*
காலையில் ஆறு மணிக்கெல்லாம் ஆதித் எழுந்துவிட்டான். அவள் இன்னும் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்க, அவன் உடற்பயிற்சிக்காகத் தோட்டத்துக்குச் சென்றான். அவன் திரும்பி வந்தபோது சிதாரா குளித்துத் தயாராகி ஒரு அடர்நீலச் சுடிதாரில் வந்தாள்.
இவனைப் பார்த்ததும் புன்னகையுடன் 'குட்மார்னிங்' சொன்னவளை ஏறெடுத்தும் பாராமல் படியேறிச் சென்றுவிட்டான் அவன். தாரா துணுக்குற்றாள்.
பர்வதம்மாள் தாராவைப் பார்த்ததும் மலர்ந்து முறுவலித்தார்.
"வாம்மா.. எழுந்தாச்ச? காபி குடிக்கறயா?"
வேண்டாமெனத் தலையசைத்தாள் தாரா.
"டீ, காபி குடிக்கற பழக்கமில்லை"
"ஜூஸாவது குடிம்மா.. காலைல எழுந்திரிச்சா வெறும் வயிறா இருக்கக் கூடாது கண்ணா.."
அவர் அன்புக் கட்டளையிட, தாராவும் மறுக்கத் தோன்றாமல் ஒப்புக்கொண்டாள். நெடிய கண்ணாடிக் கோப்பையில் ஆரஞ்சுப் பழரசம் அவளுக்காகக் கொண்டுவரப்பட்டது. தன்னு அதுவரை எத்தனையோ முறைகள் பழரசம் கேட்டு அழுது அப்பாவிடம் அடிவாங்கிய தருணங்கள் நினைவிற்கு வந்தன அவளுக்கு. அவள் முகம் வாட்டமுறுவதைக் கண்ட பர்வதமும், "ஏம்மா, பிடிக்கலையா? வேற கொண்டுவரச் சொல்லட்டா?" எனக் கரிசனமாக விசாரிக்க, அவள் அவசரமாக மறுத்தாள்.
"இல்ல பாட்டி, நல்லா தான் இருக்கு. பாட்டி... அ.. அது.. நான்.. இங்கேயே இருக்கேனே..? அங்க போனா அம்மாவை தன்னுவை எல்லாம் எப்படிப் பார்ப்பேன்? ரெண்டு நாள்கூட தன்னு என்னை விட்டுட்டு இருந்ததே இல்ல.. நானும்தான். அப்பறம், காலேஜ்.. கிளைமேட்.. பாஷை.."
அவள் கெஞ்சுதலாக இழுக்க, பர்வதம் புன்னகை மாறாமல் அமர்ந்திருந்தார்.
"வெறும் நாலரை மணிநேர ட்ராவல்மா. எப்போ வேணும்னாலும் திரும்பி வந்துடலாம். வாழ்க்கைபூரா அம்மாவோட முந்தானையைப் பிடிச்சுட்டே இருந்துட முடியாதுல்ல? தனியா வாழ்க்கைய ஃபேஸ் பண்ணவும் கத்துக்கணும். காலேஜைப் பத்தி நீ கவலைப்படாத. இந்தியாவுலயே பெஸ்ட் யுனிவர்சிட்டி கல்கத்தா யுனிவர்சிட்டி தான். ஆதிகிட்ட சொல்லி, உனக்கு அங்கேயே சீட் வாங்கிடலாம். ஆதித் உன்னை பத்திரமா பாத்துப்பான். எந்த விஷயத்தை நினைச்சும் நீ பயப்படத் தேவையில்ல, சரியா?"
"இருந்தாலும்..." அம்மாவைப் பிரிந்து தூரமாகச் செல்வதை நினைத்தபோதே கண் கலங்கியது அவளுக்கு.
பர்வதம் அவளை அணைத்துக்கொண்டு தலையை ஆதரவாகத் தடவிக்கொடுத்தார்.
"நீ இன்னும் சின்னப்பொண்ணு இல்லம்மா.. பயப்படாம, தைரியமா இருக்கணும். எதுவந்தாலும் சமாளிக்கணும். அப்பதான் வாழ்க்கைல ஜெயிக்க முடியும். பாட்டி சொல்றதைக் கேளும்மா. உன் நல்லதுக்குத் தான் நாங்க சொல்றோம்."
தாரா வேறு வழியின்றி சம்மதித்துத் தலையசைத்தாள். அதேநேரம் ஆதியும் பாட்டியிடம் வர, அவன் எதுவும் பேசத் தொடங்கும் முன்பே கையுயர்த்தி அவனைத் தடுத்தவர், "தாராவும் கொல்கத்தாவுல இருக்கத் தான் ஆசைப்படறா.. கல்யாணமான பொண்ணு, புருஷன்கூட இல்லாம தனியா இருந்தா நல்லாவா இருக்கும்? நீ எங்க போறதா இருந்தாலும், என் பேத்தியையும் கூட்டிட்டுப் போ. அவ்ளோதான்" என்றுவிட, தாரா தோற்றுப்போன பார்வையுடன் அவனைப் பார்த்து இடவலமாகத் தலையசைத்தாள். அவன் பெருமூச்செரிந்தான்.
"பதினோரு மணிக்கு ஃப்ளைட். பத்து மணிக்கு ஏர்ப்போர்ட்ல இருக்கணும்."
இருவருக்கும் அறிவித்துவிட்டு, தன் உடைமைகளை எடுக்கச் சென்றான் ஆதித்.
தாராவிடம் திரும்பிய பர்வதம், "போம்மா.. நீயும் தேவையானதையெல்லாம் பேக் பண்ணிக்க. நான் உங்க வீட்டுல வரச் சொல்றேன்" என அவளை அனுப்பினார்.
காலைச் சிற்றுண்டி முடிந்த ஒருமணிநேரத்தில் சீனிவாசன் குடும்பத்தினர் பர்வதம்மாளின் இல்லத்தை அடைய, "தாரா! தாரா!!" எனக் கத்திக்கொண்டே உள்ளே ஓடிவந்தான் தன்னு.
"தன்னு!!" என அவளும் ஒடிச்சென்று அவனை அணைத்துக்கொள்ள, சோபாவில் அமர்ந்தவாறே சீனிவாசன் கோபமாகக் கனைத்தார்.
"நேத்து சாயங்காலம்தான் பாத்தது. முழுசா ஒருநாள்கூட ஆகல.. அதுக்குள்ள என்ன அழுகை வேண்டிக்கிடக்கு?"
அப்பாவைக் கண்டதும் பக்கென அமைதியானவள், அம்மாவின் தோளுக்குப் பின்னால் சென்று நின்றுகொண்டாள். மாடியிலிருந்து ஆதித் தனது முழுக்கை சட்டையை மடித்துவிட்டவாறே இறங்கி வர, சீனிவாசன் அவனைக் கண்டதும் மரியாதைக்காகக் கைகூப்பினார். அவனும் அதையே பதிலாக செய்தான். தாராவின் மருண்ட விழிகளைக் கண்டவன், அவர்தான் அதற்குக் காரணமென ஊகிக்க நேரமெடுக்கவில்லை.
நேற்று அவள் சொல்லக் கேட்ட செய்தியினால், ஆதித்தின் மனதில் சீனிவாசனின் மதிப்பு அதளபாதாளத்திற்குக் குறைந்திருந்தது. எனவே இந்த வீட்டில் யாருக்கு உரிமையெனக் காட்ட நினைத்து, தாராவிடம் திரும்பினான் அவன்.
"தாரா, உன் தம்பியைக் கூட்டிட்டுப் போய் ஜூஸ் குடு. உங்க அம்மாவை உட்காரச் சொல்லு."
அவள் முகத்தில் பூரணமாக மலர்ந்து புன்னகைப்பூ. தன்னுவைக் கைப்பிடித்து இழுத்துச்சென்று, கிச்சனில் கேட்டு கண்ணாடிக் கோப்பையில் ஆரஞ்ச் ஜூஸ் பெற்றுத் தந்தாள். அதேபோல் ஒன்றை அம்மாவிடமும் தர, தேவி கூச்சமாக மறுத்தார். அப்போதுதான் வந்த மாதவனும் உஷாவும், "தயங்காம வாங்கிக்கங்க" என்றிட, சீனிவாசனும் தேவியும் எழுந்து நின்று கைகூப்பினர்.
"எதுக்குங்க இந்த ஃபார்மாலிட்டி எல்லாம்? உட்காருங்க, பரவால்ல"
"கல்யாணத்துக்கு வரமுடியல, கொஞ்சம் லேட்டாகிடுச்சு. ஆனா கவலைப்படாதீங்க, உங்க பொண்ணுக்கு ஒரு குறையும் இல்லாமப் பார்த்துக்குவான் எங்க ஆதித்."
சிறிதுநேரம் அவர்கள் பேசிக்கொண்டிருக்க, ஆதித் கைபேசியில் ராஜீவுக்கு அழைத்து, பயணத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிகழ்ந்தாகிவிட்டதா என உறுதி செய்துகொண்டான். தாராவும் தன்னுவும் வீட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
பூஜையறையிலிருந்து வந்த பர்வதம் திருநீற்றை ஆதித்திற்கும் தாராவிற்கும் வைத்துவிட்டார்.
"நல்லநேரம் முடியப்போகுது.. கிளம்பலாம் கண்ணா."
தாரா தனது ஸ்ட்ராலரை இழுத்தபடி நடக்கத்தொடங்க, பணியாளர் அதை எடுத்துச்சென்று காரில் வைத்தார். ஆதியின் பைகளும் காரில் ஏற்றப்பட, இரண்டு கார்களில் இரண்டு குடும்பங்களும் கிளம்பினர் விமான நிலையத்திற்கு.
வழக்கமான சோதனைகள், சரிபார்ப்புகள் எல்லாம் முடிந்து, விமானமேறுவதற்காக அவர்கள் செல்லும் நேரம் வர, மீண்டும் தாராவின் கண்களில் நீர் வழியத் தொடங்கியது. அம்மாவையும் தன்னுவையும் பர்வதத்தையும் இறுக்க அணைத்துக்கொண்டு அவள் விசும்ப, ஆதித்திற்கே கொஞ்சம் பாவமாக இருந்தது. மீண்டுமொருமுறை கண்ணால் பர்வதத்திடம் ஜாடை காட்ட, அவரோ கறாராக மறுத்துக் கண்காட்டினார்.
தாராவின் கண்களைத் துடைத்துவிட்டு, "உங்கம்மாவுக்கு எப்படியோ தெரியாது, ஆனா தவறாம வாரம் ரெண்டுதரம் எனக்கு ஃபோன் பண்ணனும், சரியா?" எனப் பர்வதம் உச்சிமுகர, மாதவனும் உஷாவும் ஆதியை அணைத்து விடைகொடுக்க, அவர்கள் உள்ளே சென்று மறையும்வரை தனுஷ் நிறுத்தாமல் கையசைக்க, மெல்லிய விசும்பல்களுடனே வந்து விமானத்தில் அமர்ந்தாள் தாரா.
அதுவரை ஏதேதோ சஞ்சலத்தில் இருந்ததால் தான் எங்கிருக்கிறோமெனப் பாராதவள், ஓரளவு சமனான பின்னர் சுற்றுமுற்றும் பார்த்து வியந்துபோனாள்.
'ஜெட் ஏர்வேஸி'ன் பிஸினஸ் க்ளாஸ் எனப்படும் உயர்வகுப்பு இருக்கையில் இருந்தாள் அவள். இதுவரை விமானத்திலேயே ஏறிடாதபோதும்கூட புத்தகங்கள், தொலைக்காட்சிகளில் பார்த்தவற்றுக்கும் இங்கே இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன.
சத்தமோ நெரிசலோ இல்லாத அமைதியான கூடம். அதீத இடைவெளியில் இரண்டிரண்டாக இருக்கைகள், நன்றாக நீட்டி சாய்ந்துகொள்ள ஏதுவாக. அவையும் தோலால் செய்த உறைகளுடன் பளபளத்தன. ஒவ்வொரு சீட்டுக்கும் தனியே ஒரு தொலைக்காட்சித் திரையும், காதில் மாட்டும் ஹெட்போன்களும் தரப்பட்டிருந்தன. ஜன்னல் கண்ணாடிகள் மூடவும் திறக்கவும் வசதிகளோடு இருந்தன. அதனோடு நில்லாமல், தோதாக சாய்ந்துகொள்ளவும் பிடித்துக்கொள்ளவும் கைக்கடக்கமான குட்டி குட்டித் தலையணைகளும் கூட இருந்தன அங்கே.
அதிசயத்துடன் திரும்பித் திரும்பிப் பார்த்தவண்ணம் அவள் நிற்க, பயணச்சீட்டின் எண்ணை ஆதித் சரிபார்த்து இருக்கையைக் காட்டினான் அவளுக்கு.
ஜன்னல் சீட் கிடைத்ததும் குழந்தைபோன்ற குதூகலத்தோடு சென்று அமர்ந்துகொண்டாள் அவள். ஆதித் அமைதியாக அவளருகில் அமர்ந்து, தன்முன்னால் இருந்த நாளிதழ் பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினான்.
விமானம் புறப்படுவதற்கான அறிவிப்பு ஒலிக்கத் தொடங்கிட, சிவப்பு நிறச் சீருடை அணிந்த அழகிய பணிப்பெண் ஒருவர் வந்து, சீட் பெல்ட் அணிவதற்கான செயல்முறைகளை நளினமாக விளக்கினார். தாரா வாய்பிளந்து அவரையே பார்த்துக்கொண்டிருக்க, ஆதித் சலனமின்றி அமர்ந்திருந்தான்.
ஆதித்திடம் திரும்பியவள், "அவங்கள்லாம் எவ்ளோ அழகா இருக்காங்கல்ல? தமிழ்ப் பொண்ணுங்களா அவங்கள்லாம்?" என அதிசயம் மாறாமல் வினவ, "தெரியாது" என்றுவிட்டு மீண்டும் நாளிதழில் மூழ்கினான் அவன்.
'அவ்வப்போது மட்டும் நன்றாகப் பேசுகிறான்.. மற்ற நேரங்களில் உர்ரென்றே இருக்கிறான்.. ப்ச், இவனுக்கு என்ன பிரச்சனையோ!'
சீட் பெல்ட்டை ஒன்றுக்கு இரண்டு முறைகள் சரிபார்த்துக்கொண்டாள் அவள். விமானத்தின் என்ஜின் ஓசைகள் உரத்து ஒலிக்க, ஒரு சின்ன அதிர்வுடன் விமானம் நகரத் தொடங்க, தாராவின் இதயம் படபடவெனத் துடித்தது பயத்தில். திருவிழாக்களில் ராட்டினம் கூட ஏறமாட்டாள் அவள், உயரங்களால் பயந்து. இப்போது ஆகாயத்தில், அந்தரத்தில், ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறக்கப் போகிறோமென்ற எண்ணம் அவளைக் கிறுகிறுக்க வைத்து, அனிச்சையாகவே ஆதித்தின் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வைத்தது.
ஆதித் திரும்பிப் பார்த்தான் அவளை.
"ஃப்ளைட்ல இதுக்கு முன்ன வந்திருக்க தானே?"
அவள் நடுங்கியவாறே இல்லையெனத் தலையசைத்தாள். அவன் திடுக்கிட்டான்.
"வாட்?? இதுதான் முதல் தடவையா??"
****
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro