Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

14

"கொல்கத்தாவுக்குத் தானே? அதனால என்ன கண்ணா.. தாராவைக் கூட்டிட்டு நாளைக்கே கிளம்பலாம் நீ."

அலட்சியமாக பர்வதம் கூறிட, ஆதித் திகைப்பில் வாயடைத்துப்போனான். தாராவைப் பார்த்தால் அவளும் கண்களில் அதிர்ச்சியுடன் பர்வதத்தைப் பார்த்தாள்.

"எல்லாம் காலைல பேசிக்கலாம்.. மணி எட்டாகுது பாருங்க, ரெடியாகிட்டு வாங்க சாப்பிடலாம்!" என்றவாறு இரவு உணவிற்கு ஏற்பாடு செய்ய விரைந்தார் பர்வதம். ஆதித் ஏதும் சொல்லுமுன் அவர் சமையலறைக்குச் சென்றுவிட, "டாட்.." எனத் திரும்புகையில் மாதவனும் உஷாவும் எழுந்து தங்களது அறைக்கு விரைந்துவிட, தாராவைப் பார்த்தால் அவளும் சோர்வாக எழுந்து அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றுவிட, ஆதித் சலிப்பாகப் பெருமூச்செரிந்துவிட்டு, பாட்டியைத் தேடி சமையலறைக்குள் சென்றான் அவன்.

"பாட்டி.. இப்ப எதுக்காக அவளையும் கொல்கத்தாவுக்கு கூட்டிட்டுப் போகணும்? அந்தப் பொண்ணு இங்க காலேஜ்ல படிக்கறாளாச்சே.. படிப்பை விட்டுட்டு எப்படி அவ வருவா? இங்க இருந்தா நீங்க பாத்துப்பீங்க.. அங்க வந்து அவ என்ன செய்வா? பாஷை தெரியாத ஊர்ல வந்து அவ கஷ்டப்படமாட்டாளா?"

சாவதானமாகப் பாத்திரங்களை ஒழுங்குபடுத்தியவாறே, "படிக்கற பொண்ணு எங்க இருந்தாலும் படிக்கும். கல்கத்தாவுல காலேஜா இல்லை? நீ அங்கயும் அவ இங்கயும் இருக்கத்தானா உனக்கு நாங்க கல்யாணம் பண்ணிவெச்சோம்? பாஷை தெரியலைன்னா என்ன? கல்கத்தாவுல யாருமே இங்க்லீஷ் பேசமாட்டாங்களா என்ன?" என்று அவனது ஒவ்வொரு வாதத்தையும் முறியடித்தார் பர்வதம்.

"பாட்டி.. நான்.."

"டேய், உங்க அப்பனைப் பெத்தவடா நானு... உன் பம்மாத்து எல்லாம் எங்கிட்டப் பலிக்காது. பாட்டியும் ஓரளவுக்குத் தான் பொறுமையா இருப்பேன். நீ அதுக்காக எங்களை ஏமாத்திட்டே இருக்க முடியாது ஆதித். இப்ப சட்டைய மாத்திட்டு சாப்பிட வா. போ!"

கோபமாகத் தன்னறைக்குச் சென்று கதவடைத்துக்கொண்ட ஆதித், சாப்பிட வரவில்லை.

*

இரவு பத்து மணி.

ஆதித் ஓரிடத்தில் நிற்காமல் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தான் அறைக்குள். 

கதவு இருமுறை தட்டப்பட்டு, பின் திறக்கப்பட்டு, தாரா தயக்கமாகப் புன்னகைத்தவாறே உள்ளே வர, அவன் நிமிர்ந்து முறைத்துப் பார்த்தான் அவளை.

ஒரு 'ஹாய்' சொன்னபடி கதவுக்கு அருகிலேயே நின்றாள் அவள்.

"பாட்டி உன்கிட்ட என்ன சொன்னாங்க??"

சட்டென அவன் கேட்கவும் சற்றே யோசனையாக நின்றவள், பின் தளர்வான குரலில், "எதுவும் இல்ல" என்றாள்.

நம்பாதவன்போல் கண்சுருக்கிப் பார்த்துவிட்டு, தனக்குள் கோபமாக ஏதோ முணுமுணுத்தவன், பின் தனக்குள்ளாகவே தலையசைத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்தான்.

தாரா அங்குமிங்கும் பார்த்தபடி ஒன்றும் செய்யத் தோன்றாமல் அப்படியே நின்றாள். அவனோ தனது மடிக்கணினியைத் திறந்து அதில் எதையோ தட்டிக்கொண்டிருக்க, தாராவிற்கு அசதி அதிகமானது. அவன் கவனிக்கப்போவதில்லை என்பது தெரிய, எதிரே இருந்த நாற்காலியில் தயக்கமாக உட்கார்ந்து அவனைப் பார்த்தாள் அவள்.

நேரம் துளித்துளியாக நகர்ந்தது. அறையை வேடிக்கை பார்த்தபடி கொட்டக் கொட்ட விழித்திருந்தாள் அவளும். மணி பன்னிரெண்டு என்பதை கைபேசித் திரை அறிவிக்க, எழுந்த கொட்டாவியைக் கையால் வாயை மூடிக் கட்டுப்படுத்திக்கொண்டாள். ஆதியைப் பார்த்தால் அவன் இன்னும் கண்களைக் கணினிக்குள்ளாரே வைத்திருந்தான். தாரா மெல்லப் பேச்சுக்கொடுத்தாள் அவனிடம்.

"தூக்கத்தை விட, பசிதான் அதிகமா வருது.. எட்டு மணிக்கு சாப்பிட்ட எனக்கே பசிக்குது. உங்களுக்குப் பசிக்கலையா என்ன?"

"பயங்கரமா பசிக்குது.." தன்னையறியாமல் அவனும் முணுமுணுக்க, அவள் புன்னகைக்க, ஆதித் தனக்குள் திகைத்துப்போனான்.

முகத்தைத் திருப்பிக்கொண்டு அவன் அமர்ந்துகொள்ள, தாரா எழுந்து முன்புறமிருந்த மேசையில் வைத்திருந்த பழத் தட்டை எடுத்துவந்து அவனருகே வைத்தாள். அவன் திரும்பவில்லை.

தானே பழங்களை எடுத்து இரண்டு கிண்ணங்களில் துண்டுதுண்டாக அரிந்து வைத்தாள் தாரா. ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி, வாழைப்பழம், மாதுளை முத்துக்கள் எனப் பழக்கலவை செய்து, கிண்ணங்கள் இரண்டிலும் முள்கரண்டியும் வைத்தாள்.

"சாலட் சாப்பிடுவீங்களா?"

ம்ஹூம். அப்போதும் பதிலில்லை. சரியென ஒரு கிண்ணத்தைத் தான் எடுத்துக்கொண்டு கட்டிலின் ஒரு மூலையில் அமர்ந்து அமைதியாக உண்ணத் தொடங்கினாள் தாரா. ஆனால் அவளால்தான் சில நிமிடங்களுக்கு மேல் வாய்மூடி இருக்க முடியாதே!

"நைட்ல பழம் சாப்பிடலாமான்னு யோசிக்கறீங்களா? ஃப்ரூட்ஸ் எல்லாமே ஈஸியா செரிமானமாகிடும். நைட்ல திடீர்னு பசிச்சாக் கூட, ஒரு ஆப்பிளோ, கொய்யாவோ சாப்பிட்டா டக்குனு அடங்கிடும். எங்க வீட்ல கூட--"

அவள் யதார்த்தமாகப் பேசிக்கொண்டிருக்க, 'ப்ச்' என சத்தமாக அவனிடமிருந்து வெளிவந்தது சலிப்பு.

தாரா சட்டெனத் திகைத்தாள். யாரும் இதுவரை அவள்மீது இம்மாதிரியான மறைமுக வெறுப்பைக் காட்டிப் பழக்கமில்லை அவளுக்கு. சட்டெனக் கண்களும் கலங்கிவிட்டன. அவசரமாக எழுந்த விசும்பலை அடக்கிக்கொண்டு, பழக்கிண்ணத்தை வைத்துவிட்டு எழுந்து பால்கனிக்குச் சென்றுவிட்டாள் அவள்.

அவள் பால்கனி ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு வானத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, மடிக்கணினியிலிருந்து நிமிர்ந்த ஆதித், அவள் வெளியே சென்றுவிட்டதைக் கண்டுவிட்டு, தனக்காக வைத்த பழக் கிண்ணத்தை தயக்கமாக எடுத்து உண்ணத் தொடங்கினான்.

எத்தனை நேரப் பசியோ, ஆப்பிள்களும் அன்னாசித் துண்டுகளும் உள்ளே சென்றதே தெரியவில்லை. தன் கிண்ணத்தை மிச்சம் வைக்காமல் தீர்ந்துவிட்டவன், கள்ளத்தனமான கண்களோடு அவளது கிண்ணத்தைப் பார்த்தான். பாதி உண்டுவிட்ட கிண்ணத்தை அவள் வைத்துச் சென்றிருக்க, அதையும் பாராமல் எடுத்துக் காலி செய்துவிட்டான் ஆதித்.

சரியாகக் கடைசி வாய் பழங்களை அவன் வாய்க்குள் திணிக்கையால், குளிரால் வெளியிருந்து எழுந்து உள்ளே வந்தவள் அவனைப் பார்த்துவிட, திருதிருவென ஒருகணம் விழித்தான் ஆதித்.

தாராவோ எதையும் பார்த்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. கட்டிலருகே இருந்த சால்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு மீண்டும் வெளியே சென்றுவிட்டாள்.

ஆதிக்கு ஏனோ ஒருமாதிரி வெட்கமாக இருந்தது.

'பாட்டி செய்த செயல்களுக்கு இவள்மீது எதற்காகக் கோபப்படுகிறோம்? நம்மைப்போலவே இவளும் ஒரு சூழ்நிலைக் கைதிதானே? அனுதாபம் இல்லையென்றாலும், வெறுப்பு ஏன்?'

சிறிது நேரத்தில் கம்பெனி அழைப்பை முடித்துவிட்டு, மடிக்கணினியை மடக்கி வைத்துவிட்டுத் தாராவிடம் வந்தான் அவன். பால்கனியில் இருந்த மூங்கில் ஊஞ்சலில் அமர்ந்து, வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

"பேசலாமா?" என்றபடி ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தான் ஆதி.

புன்னகைத்தபடி அவன்புறம் திரும்பினாள் தாரா.
"பேசலாமே.."

"காலேஜ்.. என்ன கோர்ஸ்? .. மறந்துட்டேன்.."

"பி.ஏ. அக்கவுண்ட்டன்சி"

"ம்ம்... எப்படி மாறுச்சு?"

"ஹ்ம்ம்??"

"கல்யாணம் வேணான்னு இருந்த உறுதியான முடிவு, எப்படி மாறுச்சு?"

தாரா தலையை சரித்துப் பெருமூச்சு விட்டாள். "பொண்ணுங்களுக்கு, அவ்ளோ உரிமையை யாரும் தர்றதில்லை. கல்யாணம் வேணாம்னு உங்ககிட்ட சொல்றதுக்கு இருந்த தைரியம், எங்கப்பா கிட்ட சொல்றதுக்கு இல்ல."

"ஓ.."

ஆதிக்கு இன்னமுமே குழப்பமாக இருந்தது.
"படிக்கற வயசுல எதுக்காக உனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணினாங்க? காலேஜ்ல லவ்வு கிவ்வுன்னு..?"

தாரா விரக்தியாகச் சிரித்து, இல்லையெனத் தலையசைத்தாள்.

"எங்க அப்பாவுக்கு ஏதோ கடன் பிரச்சனை. அம்மா எனக்காக, அதாவது என் கல்யாணத்துக்காக மகளிர் குழுவில சீட்டுப் போட்டிருந்தாங்களாம்... பத்து லட்சத்துக்கு. எனக்குக் கல்யாணம் நடந்தா தான், அந்தப் பணம் கைக்கு வருமாம். நீங்க வந்துட்டுப் போனப்பறம் தான் இதெல்லாம் எனக்குத் தெரியும். அதுக்கப்பறம் வர்றவங்க கிட்டவெல்லாம் கெஞ்சுறதுக்கு கஷ்டமா இருந்துச்சு. ஒருகட்டத்துல அலுத்துடுச்சு."

சிறிதுநேரம் அமைதி நிலவியது இருவரிடையே. தூரத்தில் ஏதோவொரு வீட்டில் டிவி சத்தம் கேட்டது. பழைய தமிழ் சினிமா பாடல். காதலிக்காக நிலவைக் கொண்டு வந்து தரையில் சேர்ப்பதாக வாக்களித்துக் கொண்டிருந்தான் பாட்டுத் தலைவன்.

"மாப்பிள்ளையைப் பிடிச்சிருந்ததா?"

ஆதித் கேட்க, தாரா யோசனையாக உதட்டை சுழித்தாள். "கல்யாணத்துக்கப்பறம் படிக்க விடறோம்னு சொன்னாங்க மாப்பிள்ளை வீட்டுல. ஒத்துக்கிட்டேன்."

"அவ்ளோதானா?"

அவள் தோளைக் குலுக்கினாள். ஆதித் வினோதமாகப் பார்த்தான் அவளை. "எந்த ஃபீலிங்கும் இல்லாம..  கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டயா? எப்படி?"

"ஏன், எதுவுமே இல்லாம இந்தக் கல்யாணம் நடக்கலையா என்ன?"

அவளது எதிர்க்கேள்விக்கு அவனிடம் பதிலில்லை. தலையை மட்டும் அசைத்தான்.

மீண்டும் மவுனம்.

"பாட்டிகிட்ட நான் மறுபடி காலைல பேசறேன். இங்க இருக்கறது தான் உனக்கு நல்லதுன்னு அவங்களுக்கு ஏன் புரியலைன்னு தெரியல. எப்பவுமே அவங்க சொல்றதுதான் முடிவு. யாரும் எதிர்த்துப் பேசக்கூடாது. எங்க பாட்டியை உனக்குத் தெரியாதுல்ல!?"

தாரா சிரித்தாள்.
"ம்ம், பர்வதம் பாட்டியை சின்ன வயசுல இருந்து தெரியும்."

"ஓ.."

"குவார்ட்டர்ஸ்ல இருக்கற பசங்கள்லயே, நான்தான் அவங்களோட ஃபேவரிட்! தனு எப்பவாச்சும் தான் பேக்டரி பக்கம் வருவான். நான் எப்பவும் ஸ்கூல் லீவு விட்டா அப்பாகூட பேக்டரிக்கு வந்துடுவேன். பாட்டியைப் பார்த்து, கொஞ்ச நேரம் பேசிட்டு, அப்பறம் குடோன்ல கொஞ்ச நேரம் விளையாடிட்டு இருப்பேன், அப்பறம் யாராவது ஹெல்ப் கேட்டா செய்வேன்.. அப்பறம் மறுபடி பாட்டியோட கேபினுக்குப் போயிடுவேன். நாங்க ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சா நேரம் போறதே தெரியாது! பாட்டிக்கு புதுப்பட கதையெல்லாம் சொன்னா, செம ஆர்வமா கேப்பாங்க. எங்கம்மா டிபன் எதாவது குடுத்து விட்டா, பாட்டி சாப்பிட்டுப் பார்த்து கரெக்சன் சொல்வாங்க, நல்லா இருந்தா பாராட்டவும் செய்வாங்க. தீபாவளிக்கு ஸ்வீட் குடுக்க நாங்க இங்க காலைல வந்தா, உட்கார வச்சு சாப்பிட வச்சுட்டுத் தான் அனுப்பிவிடுவாங்க. காலனியில பொங்கல் பங்ஷன் நடக்கறப்போ, பாட்டிதான் காம்படீஷனுக்கு எல்லாம் ஜட்ஜா வருவாங்க."

"ஓ.."
ஆதித் அவளது இடைவிடாத பேச்சில் ஆர்வமான பார்வையோடு லயித்திருந்தான்.

"ம்ம், அஞ்சு வருஷம் முன்ன, டென்த் படிச்சிட்டு இருந்தப்ப, அப்பாவுக்குத் தெரியாம நான் போய் உறியடிக்கற போட்டியில கலந்துக்கப் போனேன்.. கண்ணைக் கட்டிட்டு நான் கம்போட நிக்க, எம்டி பாட்டிகூட அப்பாவும் இருந்திருக்காரு.. நான் பார்க்கல! அதே கம்பைப் பிடுங்கி வீடு வரைக்கும் துரத்தினாரு என்னை!"

கொஞ்சம் நகைப்போடு அவள் சொல்ல, ஆதித் அதில் தெரிந்த வேறொரு விஷயத்தால் அதிர்ச்சியானான்.

'ஐந்து வருடங்களுக்கு முன்னால்... இவள் பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தாளா?? அந்தப் பொங்கல் விழாவின்போது, எனக்கு வயது இருபத்தி நான்கு. அப்போது இவள் குழந்தை. அன்று நடந்திருந்தால் இது குழந்தைத் திருமண சட்டத்தில் தண்டனைக்குரிய குற்றம்!! ஏறக்குறைய எட்டு வயது வித்தியாசமா?? ஒரு சின்னப் பெண்ணையா திருமணம் செய்திருக்கிறேன் நான்??'

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro