Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

12

தாரா தன்னறையில் அமர்ந்து நிலைக்கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஏனோ தன் முகமே பிடிக்கவில்லை அவளுக்கு. இயல்புக்கு மாறான அலங்காரம், நகைகள், பட்டுப் புடவை, எதுவுமே பிடிக்கவில்லை. கையின் மருதாணி பிடிக்கவில்லை. ஜன்னலில் வந்த மாருதம் பிடிக்கவில்லை. ஸ்பீக்கரில் ஒலித்த பாட்டு பிடிக்கவில்லை. புடவைகள் சரசரக்க நடந்துகொண்டிருந்த உறவினர்கள் பிடிக்கவில்லை. நெஞ்சை அழுத்தும் ஒருவித செயலற்ற தன்மை பிடிக்கவில்லை. தன் அனுமதியின்றி முகமெல்லாம் வழிகின்ற கண்ணீரும் பிடிக்கவில்லை.

'மத்தியஸ்தர் குடும்பங்களில் கனவுகளுக்கெல்லாம் இடமில்லையா? பெற்று வளர்த்த காரணத்திற்காக அவர்களின் பேச்சைக் கேட்டே வாழ்ந்துவிட வேண்டுமா? நம் ஆசைகளுக்கு மதிப்பில்லையா இங்கே? நினைத்தபடி கைமாற்ற, நாமென்ன பொண்ணா பொம்மையா??'

அவளது தோழிகளோ அவளது நிலையறியாமல் கதைத்துக்கொண்டிருந்தனர் தங்களுக்குள்.

"ஆள பாத்தியாடீ ராஜி?? சும்மா ஆறடிக்கு இருந்தான்.. தாடி மீசையெல்லாம் அப்படியே ரன்வீர் சிங் மாதிரி..."

"இவளுக்கு திடுதிப்புனு கல்யாணம்னு சொன்னப்பவே நான் ஷாக்கானேன் கலா.. அதுக்குள்ள மேல மேல ஷாக்! திடீர்னு கல்யாணம் நிக்குது.. திடீர்னு யாரோ வந்து மாப்பிள்ளையா நிக்கறான்.. என்னென்னவோ நடக்குது. ஆனா ஒண்ணு, வீட்டுல பாத்தவனை விட இப்ப வந்தவன் நல்லாவே இருக்கான்."

"காலேஜ்ல, அவங்கப்பாவுக்கு பயந்துக்கிட்டு சைட் கூட அடிக்காம தயிர்சாதமா இருந்தவ, இப்ப ஹ்ரித்திக் ரோஷன் மாதிரி மாப்பிள்ளைய புடிச்சிட்டா... அவ காட்டுல மழைதான்!"

"ஹ்ம்ம்.. புடிச்சாலும் புடிச்சா, புளியங்கொம்பா புடிச்சிட்டா! கல்கத்தாவாம்.. பெரிய கம்பெனியில வேலையாம்--"

"அடியேய், அவன்தான் அங்க முதலாளியாம்! ஹ்ம்ம்... அதிர்ஷ்டம்தான்!"

அவர்கள் வெளியே செல்ல, தாரா உணர்வற்ற பார்வையுடனே கண்ணில் நீர்வழிய அமர்ந்திருந்தாள்.

"அக்கா"

அதிவேகமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டு அவனிடம் திரும்பினாள் அவள். அவனும் சோகம் அப்பின முகத்தோடு நின்றிருந்தான். அவனை உள்ளே வரச்சொல்லி கைகாட்டினாள் அவள்.

"என்னடா தன்னு? அக்கான்னெல்லாம் கூப்பிடற?" கைநீட்டி அழைத்தவாறே தனது நிலையை மறைத்து சிரிக்க முயன்றாள் தாரா.

அவனோ முகம் மாறாமல் அவள் தோளில் கைவைத்தபடி கண்ணாடியில் தெரிந்த அவள் முகத்தைப் பார்த்தான்.

"கல்யாணம்னா, எல்லாரும் ஒன்னுகூடி சந்தோஷமா நடத்துறது தானேக்கா? ஏன் நம்ம வீட்டுல மட்டும் அது சோகமா நடக்குது?"

குரல் கரகரத்து அவனுக்கு. தாரா கலங்கிப்போனாள். மற்றவர்களும் பதிலின்றி அமைதியாக அமர்ந்திருந்தனர். வயதுக்கு மீறிய அவனது கேள்விக்குத் தானும் ஒரு காரணமாகப் போய்விட்டதை நினைத்து வேதனித்தாள் அவள்.

"தனு, சில நேரத்துல இப்படி அசம்பாவிதம் நடக்கறத தவிர்க்கமுடியாது. அக்காவோட தலையெழுத்து அப்படித்தான் போல. இதையெல்லாம் நீ பெருசா எடுத்துக்காத தனு. நீபாட்டுக்கு ஜாலியா இரு. எனக்கு எந்தக் கஷ்டமும் இல்ல. பர்வதம் பாட்டி நம்மமேல எப்பவுமே பாசமா தானே இருப்பாங்க..? அவங்க வீட்டுக்குத் தான் நான் போகப்போறேன். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என்மேல இருந்த கவலை தீர்ந்துடுச்சு. அடுத்ததா நீதான் நல்லாப் படிச்சு, நல்ல வேலைக்குப் போயி அவங்களைப் பாத்துக்கணும். சரியா?"

வழக்கமாக ஏதேனும் மறுப்பாகச் சொல்லி வம்பளக்கும் தம்பி இன்று வார்த்தையின்றித் தலையாட்டினான்.

"தாரா.. உனக்குத்தான் வீட்டை விட்டு எங்கயும் போய் இருந்து பழக்கமே இல்லையே.. எப்படி தனியா அங்க போய் இருப்ப?"

கிட்டத்தட்ட அழுதுவிடும் குரலில் கேட்டான் தனுஷ்.

தாராவிற்கும் தொண்டையில் சிக்கின வார்த்தைகள். கலங்கிய கண்களைச் சிமிட்டிக் கண்ணீரைக் கலைத்துவிட்டு, "என்ன பண்ணலாம்.. பேசாம நீயும் ஒரு பேகை எடுத்துக்கிட்டு என்னோடவே கிளம்பி வந்துடேன்" எனச் சிரித்தாள் அவள்.

தனுஷ் அவளருகில் அமர்ந்தான்.

"அங்க போயிட்டா என்கூடவெல்லாம் பேசுவியா, இல்ல மறந்துடுவியா?"

"என்னடா கேள்வி இது..? உன்கூட பேசாம இருப்பேனா நான்?"

"ம்ம்.. உனக்கு அங்க எதாவது கஷ்டமா இருந்தா எங்கிட்ட சொல்லுவியா? இல்ல சின்னப் பையன்னு எங்கிட்ட சொல்லாம மறைப்பியா?"

அவன் எதை நினைத்துக் கேட்கிறானெனப் புரியாமல் முகம் கசங்கினாள் தாரா. அவனே அதற்குள் அவள் காதருகே குனிந்து, "எனக்கு அந்த ஆளைப் பாத்தா ஒருமாதிரி.. டவுட்டா இருக்கு. பார்க்க உர்ருனு, முறைக்கறாப்லயே இருக்கான்--" என்றிட, தாரா அவசரமாகத் தடுத்தாள்.

"ஷ்ஷ்..! அவன் இவன்னு பேசறதை யாராச்சும் கேட்டா என்னாகறது? மரியாதையோட பேசு தன்னு! பணக்காரங்க எல்லாருமே அப்படித்தான் இருப்பாங்க. நீ அதையெல்லாம் யோசிச்சு குழம்பாத. நான் பாத்துக்கறேன். இங்கபார், எனக்கு எந்தக் கஷ்டமா இருந்தாலும், மொதல்ல உங்கிட்ட தான் சொல்லுவேன், சரியா?"

அந்த மூன்று மணிநேரங்களில் முதல்முறையாகப் புன்னகைத்தான் தனுஷ்.

அக்காவின் அருகிலேயே அமர்ந்துகொண்டவன் பள்ளிக்கூடக் கதைகள், சினிமாக் கதைகள், வீடியோ கேம்கள் என்று ஏதேதோ பேசிக்கொண்டிருக்க, புரியவில்லையென்றாலும் புன்னகை மாறாமல் கேட்டுக்கொண்டாள் தாராவும்.

நள்ளிரவு வரையில் கைபேசியில் பாடல்கள் போட்டு அதனோடு பாடிக்கொண்டு, விளையாடிக்கொண்டு, கதைபேசிக்கொண்டு பொழுது போக்கியவர்கள், ஒருகட்டத்தில் களைத்துப் போக, பேசப்பேசவே தூங்கிவிட்ட தனுவை புன்சிரிப்போடு பார்த்து மானசீகமாக திருஷ்டி கழித்துவிட்டு, கால்நீட்டி நன்றாகப் படுக்க வைத்துவிட்டு, போர்வையும் போர்த்திவிட்டு விளக்கை நிறுத்திவிட்டு வெளியே வந்தாள் தாரா. தோழிகளும் உறங்கச் சென்றுவிட, கூடத்தில் பரபரப்பாக ஆட்கள் வேலை செய்துகொண்டிருக்க, ஓரமாக அமர்ந்திருந்த பெற்றோரிடம் மெதுவாகச் சென்றாள் அவள்.

தலையில் கைவைத்துத் தூக்கத்திலோ துக்கத்திலோ அமர்ந்திருந்த சீனிவாசன், அருகே யாரோ வருவதை உணர்ந்து நிமிர்ந்தார். தாராவைக் கண்டதும் சோர்வாகப் பார்த்தார். கண்ணோரம் பரிதவிப்பு தெரிந்தது அவளுக்கு.

"அப்பாவோட மரியாதையே இந்தக் கல்யாணத்துல அடங்கியிருக்கு தாரா... மணமேடை வரைக்கும் வந்துட்ட கல்யாணம் தடைப்பட்டா, பெத்தவங்களுக்கு அதைவிடப் பெரிய அவமானம் இல்லம்மா.."

புரிந்ததாகத் தலையசைத்தாள் தாரா. இருப்பினும் ஏனோ உள்ளுக்குள் கசந்தது. வெறுப்பைக் காட்டாமல் அமைதியாகப் புன்னகைத்துவிட்டு எழுந்து மாடிக்கு நடந்தாள் அவள்.

மூன்று மாதங்களுக்கு முன்பாக நடந்தவை நினைவிற்கு வந்தன. ஆதித் வந்து சென்ற நாளன்று மாலை, சீனிவாசன் கோபத்தின் உச்சக்கட்டத்தில் இருந்தார். அவன்மீதல்ல, தாரா மீது.

"உன் மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்க!? அப்பா சொன்னாக் கேட்கக் கூடாதுன்னே இருக்கியா?? எவ்வளவு பெரிய சம்பந்தம் தெரியுமா இது?? நம்ம முதலாளியம்மா வீட்டுப் பையன் அவரு!!  அவரைப் போய் இப்படி அனுப்பிவச்சுட்ட!? ஒழுங்கா ஒரு புடவை கட்டிட்டு, பொண்ணா லட்சணமா வந்திருந்தா, இந்நேரம் உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லிருப்பார்! ஏன் அதைக் கெடுத்த??"

அதன்பின் அடுத்ததடுத்து நடந்தவற்றை இப்போது நினைத்தபோது வெற்றுச்சிரிப்பு வந்தது.

எத்தனை பெண்பார்க்கும் படலங்கள், எத்தனை ஆண்கள், எத்தனை குடும்பங்கள், எத்தனை மறுதலிப்புகள், எத்தனை ஏச்சுக்கள்..

பின் அன்றொரு நாள்...

நினைவுகளில் மூழ்கியிருந்தவளை, பின்னிருந்து வந்தவொரு குரல் மீட்டது.

"எக்ஸ்க்யூஸ்மீ..."

சட்டெனக் கேட்ட குரலில் தாரா திகைத்துத் திரும்ப, கால்சட்டைப் பாக்கெட்டுக்குள் கைகளை விட்டவாறு சற்றே தயக்கமாக நின்றான் ஆதித்.

அவனைப் பார்த்ததும் மீண்டும் சலிப்பாகப் பெருமூச்சு விட்டாள் அவள்.

அவன் புன்னகைக்க முயன்றவாறு, "ஹாய்.. " என ஆரம்பித்தான்.

தாரா உணர்வற்ற முகத்தோடு நின்றாள்.

"எப்படி இருக்க தாரா..?"

அவள் சன்னமாகச் சிரித்தாள்.
"பார்த்தா எப்படித் தெரியுது?"

அவன் புரிந்ததாகத் தலையசைத்தான்.

"இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.. ஐம் ரியலி சாரி. இது நம்ம ரெண்டு பேருக்குமே சங்கடமான சூழ்நிலை தான்... நிர்ப்பந்திக்கப்பட்ட கல்யாணம்.. எனக்கு இந்தமாதிரி லாங் டெர்ம் கமிட்மெண்ட்ல எல்லாம் கொஞ்சம்கூட விருப்பம் கிடையாது. எனக்குன்னு சில... லட்சியங்கள் இருக்கு. இந்த கல்யாணம், குழந்தை, குடும்பம்.. இதெல்லாம் என் வாழ்க்கைல தேவையில்லாத விஷயங்கள். உனக்கும் கல்யாணத்துல இன்ட்ரெஸ்ட் இல்லைன்னு நினைச்சேன்.. ஆனா இப்ப என்ன ஆச்சு, ஏன் நீ ஒத்துக்கிட்டன்னு எனக்குத் தெரியல. ஒருவேளை உனக்கும் இதுல விருப்பம் இல்லைன்னா, தாராளமா சொல்லலாம்."

பதில் வேண்டி அவளைக் கூர்மையாகப் பார்க்க, அவளோ சோர்வாகத் தலையைத் திருப்பிக் கொண்டு, "அதைப் பேசற நேரமெல்லாம் தாண்டியாச்சு. இப்ப ரொம்ப லேட்" என்றாள். லேசான விசும்பலை அவனறியாது மறைத்தாள்.

"உனக்கும் ஒருவேளை இந்த மேரேஜ் கல்ச்சர்ல இன்ட்ரெஸ்ட் இல்லன்னா, என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு.."

அவள் கேள்வியாக ஏறிட்டான் அவனை. அவனே தொடர்ந்தான்.

"பேருக்காக இந்தக் கல்யாணம். முடிஞ்சதும் நான் கல்கத்தா கிளம்பிடுவேன். நீ இங்கேயே இருக்கலாம், பாட்டி வீட்டுல.
உனக்கு இந்த ஏற்பாட்டால எந்தப் பிரச்னையும் வராது. உன் இஷ்டப்படி, சுதந்திரமா, நிம்மதியா இருக்கலாம். வெளியுலகத்துக்கு நாம ஹஸ்பண்ட்-வைஃப். யாரும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது. உன் படிப்பை நீ கன்டின்யூ பண்ணலாம். நானும் நிம்மதியா என் லைஃபைப் பார்த்துக்குவேன். ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ... நீ independentஆ, யாருடைய தயவும் இல்லாம தனியா வாழற அளவுக்கு ஆனதும், ஈஸியா ஒரு ம்யூச்சுவல் கன்ஸெண்ட் டிவோர்ஸ் வாங்கிக்கலாம்.

ரெண்டு பேருக்குமே வசதியான ஏற்பாடு. யாருடைய சுதந்திரமும் தடைப்பட வேணாம். யாருடைய குடும்பமும் சங்கடப்பட வேணாம். என்ன சொல்ற?"

தாராவின் முகத்தில் கொஞ்சம் மாறுதல் தெரிந்தது. நம்பிக்கை கண்களில் கொஞ்சம் வந்தது.

"சரியா வருமா இது?"

ஆதித் உறுதியாகத் தலையசைத்தான்.

"சரியா வரும். எனக்கு இப்போதைக்கு குடும்பஸ்தனாகறதுக்கு எந்த ஆசையும் இல்ல. எனக்குன்னு நிறைய கனவு இருக்கு, உன்னைப் போலத் தான். ரெண்டுபேரும் அவங்கவங்க கரியரை நோக்கி கவனம் செலுத்தலாம், யாரோட தொந்தரவும் இல்லாம."

தாரா ஒப்புக்கொண்டு தலையாட்டினாள்.

"உன்னை நம்பறேன், இதை நமக்குள்ளவே ரகசியமா வச்சுக்குவன்னு. ரெண்டு பேரோட எதிர்காலமும் இதுல இருக்கு"

ஏதோ வியாபார ஒப்பந்தம் போட்டதுபோல, அவளிடம் கைகுலுக்கக் கைநீட்டினான் அவன். சலிப்பாகத் தலையசைத்துவிட்டு அவள் சென்றுவிட, நீட்டிய கை காற்றிலேயே நின்றது.

தோள்குலுக்கிவிட்டு அவனும் தன்வழியில் சென்றான்.

***********

ஹ்ம்ம்... கான்ட்ராக்ட் போட்டு கல்யாணம் பண்ண நினைக்கறான் நம்ம ஆதித்... அதைத் தாரா எப்படி எடுத்துக்கப் போறா? 

பாட்டிக்கு இது தெரிஞ்சா அவனை என்ன பண்ணுவாங்க? Any guesses?🤣😅

வாசித்தமைக்கு நன்றி! கதை இதுவரை ஓகேவா? பிடிச்சிருந்தா, வாக்களித்து, நண்பர்களுடன் பகிரவும்!!

நன்றி,
மது.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro