10
சிவப்பு நிறத்தில் தடிமனான அட்டை. அதில் பொன்னிறத்தில் எழுத்துக்கள்.
சௌபாக்கியவதி சிதாரா சீனிவாசன்.
ஆதித்தின் மனதில் அரைக்கணத்தில் தன்னை சாலையில் தடுத்துப் பிடித்த மையிட்ட விழிகள் நினைவிற்கு வந்தன. தன்னோடு தனிமையில் கெஞ்சிய மருண்ட விழிகள்.
"எனக்கு நிறைய ஆசை இருக்கு. அதையெல்லாம் கல்யாணம் பண்ணிட்டு செய்ய முடியாது. எனக்குக் கல்யாணமெல்லாம் வேணாம். தயவுசெஞ்சு என்னைப் பிடிக்கலைன்னு சொல்லிடறீங்களா?"
"இந்தப் பொண்ணுக்கு இன்னிக்கு கல்யாணமா!?"
தான் ஏன் இவ்வளவு திகைக்கிறோமென அவனுக்கே புரியாமல் ஆதித் அதிர்ச்சியானான்.
பர்வதம் அவனை ஏளனமாகப் பார்த்தார்.
"ஏன்.. நீ இல்லைன்னா அந்தப் பொண்ணுக்கு வேற பையனா கிடைக்கமாட்டான்!? அந்தக் குழந்தை எவ்ளோ சமத்து தெரியுமா? அவ மனசுக்கு ஏத்தமாதிரி ஒரு நல்ல வரனா அமைஞ்சிருக்கு... ஹ்ம்ம்... அவங்க அப்பாம்மா குடுத்து வச்சவங்க..."
பலத்த பெருமூச்சோடு அவர் பேச, ஆதித் ஆயாசமாகக் கண்களை சுழற்றினான். அவனைக் கண்டுகொள்ளாமல் பர்வதம் தொடர்ந்தார்.
"இன்னிக்கு சாயங்காலம் வரவேற்பும், பரிசமும். நாளைக்குக் காலைல முகூர்த்தம்"
"ஓகே... தாராளமா போயிட்டு வாங்க! எதாவது கிப்ட் வாங்கிட்டுப் போங்க.."
"நீயும் கூட வா கண்ணா"
"கிப்ட் வாங்கத்தானே, வரேன் பாட்டி"
"ப்ச், கல்யாணத்துக்கு!"
"கல்யாணத்துக்கா!? எனக்கு யாரையுமே தெரியாது அங்கே! நான் வந்து என்ன பண்ணப்போறேன்? நான் எதுக்கு பாட்டி!? தனியா வந்தா போரடிக்கும்..."
பாட்டி குறும்பாக இதழ்வளைத்தார்.
***
மாலை ஐந்தரை மணிக்கு, காரில் தன்னை வம்படியாகப் பிடித்து ஏற்றிய நிவேதனையும் நகுலையும் முறைத்தான் நரேன்.
"யாருக்கோ கல்யாணம் நடக்கறதுக்கு என்னை எதுக்குடா கடத்திட்டுப் போறீங்க?? பாட்டி... நீங்களாச்சும் கேளுங்களேன்!"
பர்வதமோ அப்பாவியாக முறுவலித்தார்.
"உனக்குத்தான் கல்யாணம் நிச்சியமாகிடுச்சாமே... நகுல் சொன்னான்.. அதான், ஒரு டெமோ பார்க்கலாம்னு கூட்டிட்டுப் போறோம் நரேன். எல்லாம் தெரிஞ்சு வச்சிக்கறது உனக்கு நல்லதுதானே கண்ணா? பாட்டி உனக்காகத் தான் எல்லாமே செய்யறேன்!"
அவன் பதிலின்றி வாய்மூடி அமைதியாக, ஆதித் அசந்துபோனான் அவரது சொல்வன்மையில். நகுல் நல்லபிள்ளையாகப் பர்வதம் அருகே அமர்ந்து வேலை பற்றி ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.
கார் சென்று ஒரு மண்டபத்தின் வாசலில் நின்றது பத்து நிமிடங்களில். வாழைமரத் தோரணங்கள் கட்டிய நுழைவாயிலின் முன் இறங்கி நின்று, ஞாயிறன்று பள்ளிக்கு வந்த குழந்தையைப் போல முகம் சுணங்கினான் ஆதித். ஓட்டுநரிடம் வீடுதிரும்பச் சொல்லிவிட்டு, மூன்று இளைஞர்களையும் பார்வையாலேயே இழுத்துக்கொண்டு பர்வதம் மண்டபத்தினுள் நுழைந்தார்.
வாசலில் பன்னீர் தெளித்து வரவேற்ற பெண்கள், பர்வதத்தை அடையாளம் கண்டதும் மரியாதையாக வணக்கம் செலுத்தி, அவரை அழைத்துச்சென்று முதல் வரிசையில் அமர வைக்க, வேறு வழியின்றி ஆதித்தும் அவரருகே முதல் வரிசையிலேயே அமர, சைடில் நகுலும் நரேனும் நழுவினர்.
"டேய்.. எங்கடா போறீங்க!?"
"நீ எங்களைக் கண்டுக்காத!! இந்த பங்ஷன்களே எங்களுக்கு ஃப்ரீயா சைட்டடிக்க ஒரு சான்ஸ் மாதிரித்தான்! நாங்க எங்க வேலையப் பாக்கறோம், நீ உன் வேலையப் பாரு!"
நகுலும், நரேனும் கண்ணடித்துவிட்டு நகர, சிரித்தபடி தலையிலடித்துக்கொண்டு பாட்டியின் அருகில் அமர்ந்தான் அவன். வந்து வணக்கம் வைப்பவருக்கெல்லாம் புன்சிரிப்போடு பதில்வணக்கம் சொன்னவாறு அவரும் இன்முகமாய் அமர்ந்திருந்தார்.
பெண்ணின் தந்தை சீனிவாசன் அவரது வரவறிந்து உள்ளேயிருந்து வந்தார் கைகூப்பியவாறே.
"வாங்கம்மா, வாங்க. நீங்க வருவீங்கனு எதிர்பார்க்கவே இல்ல... உடம்புக்கு முடியலைன்னு சொன்னாங்க, இப்ப பரவால்லீங்களா?"
"ம்ம், இப்பப் பரவாயில்ல சீனிவாசன். என் பேரன் ஆதித் தான் என்கூட இருந்து பார்த்துக்கிட்டான்.."
"சரிங்கம்மா, நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம். இருந்து சாப்டுட்டுதான் போகணும்..."
அவர் பர்வதத்திடம் மட்டும் பார்வையை செலுத்திப் பேசிட, ஆதித்திற்கு சற்றே வினோதமாக இருந்தது.
அவ்வழியாகக் கடந்துசெல்ல முயன்ற நகுலைப் பிடித்தான் அவன்.
"எத்தனை மணிக்கு பங்ஷன் முடியும்!? எப்ப வீட்டுக்குப் போவோம்??"
அவன் அலட்சியமாக சிரித்தான்.
"ஹ! இன்னும் வரவேற்பே ஆரம்பிக்கல! அதுக்குள்ள போலாமான்னு கேக்குற?? மாப்பிள்ளைய ஆரத்தி எடுத்து வரவேத்து, பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் தனித்தனியா நலுங்கு வச்சு, அப்பறம் பெரிசுங்க எல்லாம் உக்காந்து பேசி, நிச்சயத் தாம்பூலம் மாத்திக்க.. எப்படியும் நைட் பத்து மணி ஆகிடும்! நீ வீட்டை மறந்துடு மகனே!"
"டேய்!!"
"ப்ச்! அமைதியா இருந்தீன்னா அந்த அக்காகிட்ட சொல்லி எக்லேர்ஸ் சாக்லேட் வாங்கித் தருவேன், இல்லைன்னா மாட்டேன்!"
குறும்பு தொனிக்கும் குரலில் வம்பிழுத்துவிட்டு, ஆதித் கையோங்கும் முன்னர் சிரித்துவிட்டு நழுவிவிட்டான் அவன்.
சலிப்போடு நாற்காலியில் அமர்ந்து, கைபேசியில் தனது மின்னஞ்சல் பெட்டியைத் திறந்து எதையோ அவன் நோண்ட, பர்வதம் அவனது கைபேசியைப் பிடுங்கிக்கொண்டார். ஆதித் திகைத்தான்.
அவர் தீர்மானமாக, "வந்த எடத்துல என்ன போன்ல வேலை!? மனுஷங்க கிட்டப் பேசு!" என்றுவிட, அவன் சோர்வாக சாய்ந்தான் நாற்காலியில். தூரத்தில் ஒரு சிறுவர் கூட்டம் விளையாடிக்கொண்டிருக்க, அதில் சற்றே பூசலான உடம்போடிருந்த சிறுவன் பிரதானமாக நின்று மற்றவர்களை அதட்டிக்கொண்டிருந்தான். ஆதித்தும் அதைக் கவனிக்கலானான்.
"நான் சொன்னா தான் கல்யாணமே நடக்கும்! நான்தான் இங்க எல்லாமே!! கல்யாணப் பொண்ணோட தம்பின்னா சும்மாவா!?"
'ஆ' என்று வாய்பிளந்து மற்றவர்கள் நிற்க, உயரமாய் அடுக்கியிருந்த நாற்காலிகளின்மீது அமர்ந்துகொண்டான் அவன்.
"எல்லாரும் ஐஸ்கிரீம் வாங்குறப்போ, எனக்கும் சேர்த்து ஒண்ணு வாங்கிட்டு வந்து தரணும்! சாக்லேட் வாங்கினாலும் அப்படித்தான்--"
மேலும் பேசுமுன், உள்ளிருந்து சீனிவாசன் அந்த வழியாக வர, அவரைக் கண்ட நொடியில் கப்சிப் ஆகி, அவசரமாகக் கீழிறங்க முயன்று தொப்பென விழுந்தான் அந்தச் சிறுவன்.
அதைக் கவனித்த சிறுமியர் சிரித்து, "என்ன தன்னு, எங்ககிட்ட ஐஸ்கிரீம் கேட்டுட்டு, இப்ப நீயே தரையில தேடிட்டு இருக்க!?" என சீண்ட, அவன் முகம் தக்காளிப்பழமாய்ச் சிவக்க, ஆதித்திற்கு சிரிப்பு வந்தது. சிறிதுநேரம் அவர்களைக் கவனித்துவிட்டுத் திரும்பிக்கொண்டான் ஆதித்.
இன்னும் மேடை காலியாகத்தான் இருந்தது. பர்வதமும் அதைக் கவனிக்கத் தவறவில்லை. அந்தப் பக்கமாய்ப் போன பெரியவர் ஒருவரை அழைத்தார் அவர்.
" மணி ஏழாச்சே.. என்ன, இன்னும் சடங்கு ஆரம்பிக்கலையா?"
"மாப்பிள்ளை இன்னும் வரலை.. கொஞ்சம் லேட்டாகும் போல இருக்குங்கம்மா... நீங்க வேணா டிபன் சாப்பிடறீங்களா?"
"இல்ல, பரவால்ல. பங்ஷன் நடக்கட்டும், மத்ததை அப்பறம் பார்க்கலாம்"
"சரிங்க. டேய்! அம்மாவுக்கு ஜூஸ் எடுத்துட்டு வா!!"
ஆதித் பெருமூச்செரிந்தான்.
"ஒன்னரை மணிநேரம் வேஸ்ட். நான் இந்நேரம் அந்த மோட்டோகார்ப் டீலை ஃபைனலைஸ் பண்ணியிருப்பேன்"
"ப்ச்.. புலம்பாத ஆதித். விசேஷ வீட்டுக்கு வந்திருக்கோம்ல, முகத்தை கோணாத!"
பொழுது போகாமல் அங்குமிங்கும் பார்த்தவாறு அவனிருக்க, புரோகிதர் ஒருவர், "நாழியாறது, பொண்ணுக்கு நலங்கு வச்சுடலாம், மாப்பிள்ளை அழைப்பை லேட்டா வச்சுக்கலாம். பொண்ணை அழைச்சிட்டு வந்து ஒக்கார வையுங்கோ!" என்று ஆணையிட, இரு பெண்மணிகள் உள்ளிருந்து கைப்பிடித்து அழைத்து வந்தனர் அவளை.
ஆதித்தின் விழிகள் தற்செயலாகத் திரும்ப, அவளைக் கண்டதும் அப்படியே அங்கேயே நிலைத்துவிட்டன கண்களிரண்டும்.
மயில்நிறத்தில் மெல்லிய பட்டுப் புடவை அவள் உருவத்திற்குக் கச்சிதமாகப் பொருந்திட, செப்புசிலை போல நின்றாள் அவள். கைகளில் மருதாணித் தீட்டல்கள் தீயெனச் செந்நிறத்தில் ஒளிவிட, அதன்மீது பொன்னிற வளையல்கள் படர, கண்கவரும் அவ்வணிகளால் அவளது கண்களின் ஒளியை எட்ட முடியாது தோற்றன.
ஆனால் அந்தக் கண்களில் உதட்டின் புன்னகை எட்டவில்லை. வழக்கம்போலவே இரண்டடுக்கில் மையிட்டிருந்த அழகிய விழிகளில், வெறுமை மட்டும் நிறையவே படர்ந்திருந்தது.
மருதாணி பூசிய பாதங்களால் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து மேடையில் வந்து நின்றபோது, அவையை வணங்குமாறு ஐயர் கூறவும் கைகூப்பி அனைவரையும் பார்த்தவள், ஆதித்தையும் பார்த்தாள். ஆனால் சலனமின்றிக் கடந்துசென்றுவிட்டாள் பார்வையால்.
ஆதித் தலையைத் தாழ்த்திக்கொண்டான்.
'என்னதிது.. சற்று நேரத்தில் திருமணமாகப் போகிற பெண் அவள், இப்போது போய் அவளை அப்படிப் பார்க்கிறாயே ஆதித்!? யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்?'
ஆனால்.. ஆனால்.. இவள் நம்மைப்போன்றவள் அல்லவா? கல்யாணம் வேண்டாம் என்றவள் அல்லவா? ஏன் மாறினாள்? ஏன் இதற்கு சம்மதித்தாள்? சமுதாயத் தளைகளுக்கு மற்றொரு பலி இவளா? இவள் பாவமில்லையா? நாம் உதவ வேண்டாமா?
'ப்ச், யார் என்ன செய்தால் நமக்கென்ன?? அவளுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? நாம் வந்த நோக்கம் என்னவோ அதை மட்டும் பார்ப்போம். கண்டதை யோசிக்காதே!'
மனத்தோடு கிளத்தல் செய்தவாறு அவனிருக்க, அதற்குள் மணப்பெண்ணை மேடையில் ஒரு நாற்காலியில் அமர்த்தி, ஏதோ மந்திரங்களை ஓதத் தொடங்கினார் புரோகிதர்.
ஆதித் மறுபடி நிமிர்ந்தபோது, பெண்ணின் கன்னத்தில் சந்தனம் பூசிக்கொண்டிருந்தனர் உறவினர்கள். அவர்களெல்லாம் தங்களுக்குள் பேசிச் சிரித்தவண்ணம் உற்சாகமாய் இருக்க, ஏனோ மணப்பெண்ணின் கண்களில் மட்டும் சோகம் விழியோரமாய்.
நமக்குத்தான் அப்படித் தெரிகிறதா, அல்லது எதாவது பிரம்மையா என அவன் குழம்ப, அதேநேரம் அவளும் நேராக நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
ஆதித் இப்போது கரிசனமானான். ஆனால் அவன் ஏதும் செய்யுமுன் பின்னால் யாரோ வரும் அரவம் கேட்டது.
ஓசையில் அவன் திரும்ப, வியர்வை வழிய ஓடிவந்த மனிதர் ஒருவர் அவனைத் தாண்டிக்கொண்டு ஓடிச்சென்று, மற்றொரு பெரியவரிடம் நின்றார். அவர் ஏதோ சொல்ல, அந்தப் பெரியவரின் முகம் அதிர்ச்சியில் இருண்டது.
"என்னது!? மாப்பிள்ளைக்கு ஆக்ஸிடெண்ட்டா??"
*****************************************
Oh no... *smiles evilly*😈🤪
இப்பதான் முக்கியமான கட்டத்துக்கு வர்றோம்....
விதியோ வினையோ, இல்லை கதாசிரியரின் விளையாட்டோ... கல்யாணத்துல குழப்பம் வந்தாச்சு. இப்ப என்ன நடக்கும்???🤔🙄
(ஹிஹி, நீங்க நினைக்கறதுதான் நடக்கப் போகுது. நான்தான் முன்னவே சொல்லிட்டேனே.. இது அரைச்ச மாவுதான்னு!)😆
அப்புறம் மக்களே, ஒரு சந்தோஷமான விஷயம்.. நான் பாஸ் ஆகிட்டேன்!!!😁😅🥳🥳 ஆமா, மூணு மாசம் கழிச்சு இப்போ தான் ரிசல்ட் வந்துச்சு!! இப்ப தைரியமா 3rd yr MBBSனு சொல்லிக்கலாம்!!!
எங்க ஊர்ல செம மழை. காலேஜெல்லாம் லீவு! இன்னும் நாலு நாளைக்கு அடியேனைக் கையிலயே புடிக்க முடியாது!!😆😆😆 உங்க ஊருல எல்லாம் எப்படி? சென்னை மக்கள் கொஞ்சம் சேஃபா இருக்கப் பாருங்க. மத்தவங்களும் தான், பாதுகாப்பா என்ஜாய் பண்ணுங்க!
இதுவரை வாசித்தமைக்கு நன்றி. பிடித்திருந்தால் வாக்களித்து, நண்பர்களுடனும் பகிரவும்.
நன்றி,
மது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro