கலவரம் நேரம் ஆக ஆக பெரிதாகிக் கொண்டே போக பவித்ராவை அணைத்துப் பிடித்தபடி ஸ்ரீதர் அங்கிருந்து எப்படி வெளியே செல்வது என யோசித்த சமயம் பின்னாலிருந்து "ஏய்!" எனக் கத்திக் கொண்டு வந்த ஒருவன் ஸ்ரீதருக்கு அடிக்கப் போக பவித்ரா அதைப் பார்த்து "ஸ்ரீ!" என வீறிட்டுக் கத்தினாள். அவளின் சத்தத்தில் திரும்பிப் பார்த்த ஸ்ரீதர் தன்னை அடிக்க வந்தவனின் தாக்குதல் தன் மேல் படாமல் லாவகமாக தப்பித்துக் கொள்ள அவன் எதிர்பாரா நேரத்தில் பவித்ராவின்ன் பின்னால் வந்த ஒருவன் அவளை தாக்க முயற்சித்தான். அதைப் பார்த்த ஸ்ரீதர் அதைத் தடுத்து நடுவில் செல்ல அதனால் பவித்ராவை தாக்க வந்தவன் ஸ்ரீதரின் கைகளில் கத்தியால் கீறல் போட்டான். அந்த வலியில் அவன் கத்த அதைப் பார்த்த பவித்ரா துடித்துப் போய்,
"ஸ்ரீ!..." அவளையுமறியாமல் அவள் கண்களில் கண்ணீர் வடிந்தது அவன் வலியைக் கண்டு. ஓடிச் சென்று அவனை அணைத்தவள் குருதி வழியும் அவன் கைகளைப் பார்த்துப் பதறிப் போனாள். ஆழமான கீறலால் வலியில் துடித்த ஸ்ரீதர், ரெத்தம் வழியும் பகுதியை தன் கைகளால் அழுத்திப் பிடிக்க பவித்ரா அவசர அவசரமாக தன் துப்பட்டாவைக் கிழித்து அவன் கைகளில் தற்காலிகமாக கட்டுப் போட்டாள். அவனது மற்ற கையை தன் தோளுக்கு மேலாக தூக்கிப் போட்டவள் அவனை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு கலவரக்காரர்களின் கண்ணில் படாமல் பாதுகாப்பான ஒரு இடத்திற்கு அழைத்து வந்தாள்.
"இப்டி உக்காருங்க ஸ்ரீதர்... ஒண்ணுமில்ல, ரொம்ப வலிக்காது. கொஞ்சம் பொறுத்துக்கோங்க." என்றவள் ஏதேனும் வழிகள் உள்ளனவா எனத் தேடிப் பார்க்க அங்கு அப்போது தான் கலவரக்காரர்களுக்கு பயந்து போய் ஒரு மெடிக்கல் ஷாப் காரன் கடையை மூடிக் கொண்டிருந்தான். உடனே அங்கு ஓடிச் சென்றவள் அவன் கடையை சாத்தும் முன் சில பொருட்களை கையில் இருந்த பணத்தைக் கொண்டு வாங்கி விட்டு ஸ்ரீதரிடம் திரும்பி வந்தாள். அவன் சட்டைக் கையை மெதுவாக மேலே உயர்த்தி காயத்தைப் பார்த்தாள்.
மிகவும் ஆழமாகவே கத்தி கீறியிருந்தது. பவித்ராவும் அதைப் பார்த்து பரிதவிப்புடன் அவன் காயங்களுக்கு மருந்திட்டாள். ஏற்கனவே வலியில் இருந்தவன் அவள் மருந்திட்டதும் வலியில் கண்களை சுருக்கினான். அவன் வலியறிந்து மெதுவாக மருந்திட்டவளின் கண்களில் கண்ணீர் கோடுகளின் அடையாளம்.
'தனக்காக அழுதிருக்கிறாளா?' ஸ்ரீதர் அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான். கண்மை கலைந்தும் அத்தனை அழகு கொடுக்கும் அவள் கண்களில் கண்ட தவிப்பும், பயமும், கண்ணீரும் ஸ்ரீதரின் நெஞ்சை உருக்கியது.
"வலிக்குதா ஸ்ரீதர்?"
அவள் மென்குரல் கேட்டதுமே தானாக அவன் தலை 'இல்லை' என ஆட்டியது. அவள் தனக்காக வருந்துவது அவனுக்கு பிடித்திருந்தது. அவள் தனக்காக கண்ணீர் சிந்துவது அவனுக்கு பிடித்திருந்தது. அவள் தனக்காக எல்லாம் செய்வது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் முகத்தில் இன்னமும் தவிப்பு குறையாததைக் கண்டு மெதுவாக தன் இடது கையினால் அவள் கன்னங்களைப் பற்றினான். அவள் அவன் தொடுகையில் லேசாக சிலிர்க்க அவனோ அவள் கண்களை மெய்மறந்து ரசித்தபடியே,
"எனக்கு ஒண்ணுமில்ல பவிம்மா, இப்போ எனக்கு வலி கம்மியாகிருச்சு." என்றான் தனக்கு உண்மையிலேயே வலிப்பதையும் மறந்து... சற்று நேரத்தில் கலவரமும் அடங்கி விட மெதுவாக வெளியே வந்தவர்கள் உடைந்து போயிருந்த காருக்கருகில் சென்றனர். ஸ்ரீதர் தலையில் கைவைத்து யோசித்தபடி கவினுக்கு அழைப்பு விடுக்க அவனும் அங்கு வந்து சேர்ந்தான். உடைந்து போயிருந்த காரைப் பார்த்து விட்டு,
"அடப்பாவி, உனக்கு கோவம் வந்தா எங்க கண்ணாடி இருந்தாலும் ஒடச்சிருவியா? உன்கிட்ட இருந்து கண்ணாடிய காப்பாத்தவே தனி ஒருத்தன் வேணும் போலயே... எதுக்குடா கார் கண்ணாடிய ஒடச்ச?"
"உன் புத்தி எங்கயாவது புத்திசாலித்தனமா யோசிக்குதா பாரு? கலவரத்துல ஒடஞ்சிருச்சுடா" எனும் போதே கவினும் அவன் கையில் இருந்த பாண்டைட் கட்டைப் பார்த்து விட்டு,
"மச்சி ஆக்ஷன் கிங் அர்ஜுனாட்டம் ஃபைட் லாம் பண்ணிருக்க போல..." என குறும்பாக கேட்க அவனை முறைத்தான் ஸ்ரீதர்.
"ஹீ ஹீ... மொறைக்காத டா... வீரத் தழும்பு... வீரன் டா நீ..." என்றான் புகழ்வது போல.
"சரி இப்போ என்ன எதுக்கு இங்க வர சொன்ன?" என்ற கவினின் அடுத்த கேள்விக்கு சிரித்தவன்,
"மச்சி உன் கார் கீ ய குடு..." ஸ்ரீதர் கேட்டதும் யோசிக்காமல் அவனிடம் சாவியைத் தூக்கிப் போட்டான் கவின். அதைப் பார்த்து சிரித்தவன்,
"நானும் பவியும் உன் கார்ல வீட்டுக்கு கெளம்புவோமாம்... நீ என் கார ரெடி பண்ணிட்டு வீட்டுக்கு வந்து சேருவியாம்." என்றவன் அவன் பதிலை எதிர்பார்க்காமல் காருக்குள் ஏற பவித்ராவும் கவினைப் பார்த்து வாயை மூடி சிரித்தபடி காருக்குள் ஏறினாள்.
"டேய் டேய் டேய்... இதெல்லாம் ரொம்ப மோசம் டா... ஒரு கன்னிப் பையன இப்டி கஷ்டப்படுத்தாதீங்க டா... நான் பாவம் டா... டேய்... டேய்... நில்லுடா... நில்லுடா..." கவின் கத்த கத்த அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாது ஸ்ரீதர் காரை எடுத்துக் கொண்டு செல்ல நடு வீதியில் தன்னந்தனிமையில் நின்றான் கவின்...
"போடா போ,,, ஒரு நாள் என் கைல மாட்டுவல்ல அப்போ வச்சிக்கிறன் உனக்கு..." நடுவீதியில் நின்று ஸ்ரீதர் போன பாதையைப் பார்த்துப் புலம்பியவன் ஸ்ரீதரின் காருக்கு அருகில் கவின் சென்றான். காருக்குள் உட்கார்ந்து கார் கீயை செலுத்தலாம் என்று போன சமயம் பின்னால் நின்றிருந்த சிலரின் பேச்சுக் குரல் கவினின் காதுகளில் விழுந்தது.
"இல்லண்ணே, நாங்க அவள கொல்ல தான் ட்ரை பண்ணோம், அதுக்குள்ள அவ புருஷன் வந்து அவள காப்பாத்திட்டான்."
"....................."
"கண்டிப்பா அண்ணே, அடுத்த வாட்டி அந்த பவித்ராவ பொணமா தான் உங்க கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துவன்."
கவின் இதை உன்னிப்பாக கேட்டு விடவே அந்த அடியாள் இறுதியாக கூறிய வார்த்தைகளில் திகைத்துப் போனான். "பவித்ராவைக் கொல்ல சதியா?" நினைக்கும் போதே அவன் நெஞ்சம் நடுங்கியது. எதற்காக? ஏன்? அமைதியான முறையில் கையாளும் பவித்ராவைக் கொல்ல எதற்காக திட்டம் வகுக்கிறார்கள்? யாருக்கும் எந்த பாவமும் நினைத்திராத அவளை ஏன் கொல்ல வேண்டும்? சில வேளை அவளுடைய வேலை சம்மந்தமாக யாரேனும் அவளை கொல்ல முயற்சி செய்யக் கூடுமோ? என பலவாறாக சிந்தித்துக் கொண்டிருந்தவன், என்ன செய்வதென்று அறியாமல் முதலில் வண்டியை அங்கிருந்து கிளப்பினான்.
கவினுக்கு அன்று இரா முழுதும் தூக்கமே வரவில்லை. பவித்ராவை யார், எதற்காக கொல்ல முயற்சிக்கிறார்கள்? இதைப் பற்றி ஸ்ரீதரிடம் கூறலாமா வேண்டாமா? என பலவாறாக யோசித்தவனின் செல்போன் மணி ஒலிக்க அதை எடுத்துப் பேசலானான்.
"ஹலோ, சொல்லு ஸ்வாதி..."
"என்னடா ஏதாவது வர்க் டென்ஷன் ல இருக்கியா?" அவன் குரல் கேட்டதுமே கேட்ட ஸ்வாதியிடம்,
"இல்லையே ஏன்?"
"இல்ல உன் வாய்ஸ் டல்லா இருக்கு அதான் கேட்டன்"
"அது வந்து இல்ல ஸ்வாதி... ஒரு சின்ன குழப்பம் அவ்ளோ தான்."
"என்ன குழப்பம்?" ஸ்வாதி கேட்டதும் அவளிடம் சொல்லலாம் என எண்ணியவன் அடுத்த நொடியே அந்த முயற்சியைக் கைவிட்டான். இப்போதைக்கு இது தனக்குள்ளேயே இருக்கட்டும். யாரிடமும் எதையும் சொல்லி அவர்களைக் குழப்ப வேண்டிய அவசியம் இல்லை. இதை தனியாகவே கண்டுபிடித்தாக வேண்டும் என தனக்குள் நினைத்துக் கொண்டான். அதனால் பழைய குறும்பு தலைதூக்க கவினும் ஸ்வாதியிடம்,
"இல்ல, உன்னைய தெரியாத்தனமா லவ் பண்ணிட்டனோன்னு தான் குழப்பமே..." என்க அந்தப் பக்கமிருந்து ஸ்வாதி கவினை பொரிந்து தள்ள ஆரம்பித்திருந்தாள்.
அதே வேளை இங்கு ஸ்ரீதரின் வீட்டில்...
ஸ்ரீதரும், பவித்ராவும் செல்லும் போதே மருத்துவமனைக்கு சென்று முறையாக மருந்துகளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றனர். அங்கு ஸ்ரீதர் கையில் கட்டுடன் வருவதைக் கண்டு பதறிய குடும்பத்தவர்களை சமாளித்து அனுப்பி விட்டு தங்களறைக்கு பவித்ராவும், ஸ்ரீதரும் சென்றனர். அவனுக்காக உணவு எடுத்து வந்த பவித்ரா அறைக்குள் அவனைத் தேட அவனோ கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கை வலியில் கண்களை மூடி அமர்ந்திருந்தான். அவன் அருகில் சென்றவள் அவனை எழுப்பினாள்.
"ஸ்ரீதர், கொஞ்சமா சாப்ட்டு படுக்கலாம் ஏந்திரிங்க."
"ஐயோ வேணா பவித்ரா. சாப்பிட்ற மாதிரி இல்ல நானு. உடம்பெல்லாம் ஒரு மாதிரி இருக்கு."
"சொன்னா கேளுங்க ஸ்ரீதர். சாப்டாம தூங்க கூடாது. டேப்லட்ஸ் வேற போடணும் ல? ப்ளீஸ் எனக்காக..." என்க அவளின் முக பாவனையில் புன்னகைத்தவன் சரி என தலையாட்டினான். அவன் உணவுக் கோப்பையை வாங்கப் போக அதைத் தடுத்தவள்,
"கைல அடிபட்டிருக்குல்ல? அப்றோம் எப்டி சாப்டுவீங்க? நானே ஊட்றன்." என்றவள் அவளே உணவை எடுத்து அவனுக்கு ஊட்டி விட அவள் பாசத்தில் கரைந்து, உருகி அவளையே பார்த்து உணவு உருண்டைகளை விழுங்கிக் கொண்டிருந்தான் ஸ்ரீதர். அவன் உண்ட பின் அவளே தண்ணீர் எடுத்துக் கொடுத்து, மாத்திரைகளை கொடுத்து விட்டு எழப் போக ஸ்ரீதர் அவள் கைகளைப் பிடித்தான்.
"என்னாச்சு?" பவித்ரா கேட்டதும் சில நொடிகள் அமைதியாக இருந்தவன்,
"என் பக்கத்துலயே இருக்கியா பவி?" என அவனாகவே கேட்டான். அதற்கே காத்திருந்தவள் போல் அவள் புன்னகைத்தாள் அவள், தன்னவன் அருகில் இருக்கும் வரம் வேண்டி... அவன் அருகிலேயே அமர்ந்து அவன் கைகளைப் பற்றியவள் கண்களை மூடி அவனை எண்ணியே ஏதோ ஓர் உணர்வில் பாட ஆரம்பித்தாள்.
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்?
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா...
இருளில் கண்ணீரும் எதற்கு
மடியில் கண்மூட வா
அழகே இந்த சோகம் எதற்கு
நான் உன் தாயும் அல்லவா?
உனக்கென மட்டும் வாழும் இதயமடா
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடா
அழுதால் உன் பார்வையும்
அயர்ந்தால் உன் கால்களும்
அதிகாலை கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
என் ஆயுள் ரேகை நீயடா
என் ஆணி வேரடா
சுமை தாங்கும் உந்தன் கண்மணி
உன்னை சுடும் பனி
உனக்கென மட்டும் வாழும் இதயமடா
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடா
என்று பாடியவளின் உள்ளம் அவள் வசம் இல்லை. கண் திறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீதர் மெதுவாக எழுந்து அமர்ந்தான்.
"என்னாச்சு ஸ்ரீதர்?"
"நான் உன் மடில தூங்கட்டுமா?" சிறுபிள்ளை போல் அவன் கேட்க அதில் பவித்ராவுக்கோ கண்களில் கண்ணீரே வந்து விட்டது. ஆசையோடு அதை ஆமோதித்தவள் அவன் உறங்கும் வரமான இடமாக அவள் மடியைக் கொடுக்க அதில் தலை சாய்த்து படுத்தவன் தந்தையிடம் உணர முடியா அன்பையும், தாயிடம் உணர முடியா அரவணைப்பையும் அவள் ஒருத்தி அணைப்பில் அன்று உணர்ந்து கொண்டான். கண்கள் மூடி அந்த நொடியை ரசிக்கும் நேரம் ஸ்ரீதரின் கேசத்தை வருடிய பவித்ராவின் கைகள் அவன் தலையை அன்போடு தடவி விட்டது. அவளின் அந்த சிறு அணைப்பிற்குள் வானத்தில் பறப்பது போல் உணர்ந்த ஸ்ரீதர் அவளின் இனிமையான குரலும் சேர்ந்து அவன் காதில் தேனாய் ஊற்ற சொர்க்கத்தை அனுபவித்தான் அவன் தன்னவள் மடியினில்...
விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே
ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே
மீசை வைத்த பிள்ளையே
இதை காதல் என்று சொல்வதா
நிழல் காய்ந்து கொல்வதா
தினம் கொல்லும் இந்த பூமியில்
நீ வரம் தரும் இடம்
அவனின் உறக்கத்தைப் பார்த்தே பாடிய பவித்ரா அவன் தலை வருடியபடியே அவளும் சாய்ந்து உறங்கிப் போனாள்.
©©©
"என்ன விட்டு போயிடாத ஸ்ரீதர்... நீ போனா என்னால தாங்கிக்க முடியாது."
"ஐம் சாரி சாரா... எனக்கு பவித்ரா தான் எல்லாமே... என்ன மறந்திடு." ஸ்ரீதர் கூறியவாறு காற்றில் கரைந்து போக அதைக் கனவாய் கண்ட அப்சராவோ துடித்து பதைத்து எழுந்து பார்த்தாள்.
"ச்ச... வெறும் கனவு தானா?" என்றபடி நெற்றியால் வழிந்த வியர்வைத் துளிகளைத் துடைத்துக் கொண்டாள். அந்த கனவு நிஜமாய் நடந்து விட்டால்... எனும் பயம் அப்சராவுக்குள் கொதித்தெழ என்ன செய்யலாம் என்பதைப் பற்றி குரூரமாக யோசிக்க ஆரம்பித்தது யாருமற்ற நிலையில் நின்று தன் வாழ்க்கையை தேடிக் கொண்டிருக்கும் அந்த நெஞ்சம்.
"இல்ல பவித்ரா... நான் உன்ன என் ஸ்ரீ கூட சேர விட மாட்டன். ஸ்ரீதர் எனக்கு தான். எனக்கு மட்டும் தான். ஸ்ரீதர் உன்கூட ஒரு கட்டாயத்தின் பேர்ல தான் இருக்கான் னு எனக்கு தெரியும். அவன்கிட்டருந்து உன்ன எப்டி பிரிக்கறேன் ன்னு மட்டும் பாரு..." என்று மனதில் கருவிக் கொண்டவளின் தூக்கம் பறி போக ஸ்ரீதர், பவித்ராவை பிரிக்கும் திட்டத்தில் இறங்கியிருந்தாள் அப்சரா.
சில நாட்களின் பின்...
சக்தி, ஆனந்தியின் நிச்சயதார்த்தம் சக்தியின் வீட்டில் மிக எளிமையாக நடந்து திருமண நாளும் தீபாவளிக்கு முதல் நாள் நிச்சயிக்கப் பட்டது. அனைவரும் மிக மகிழ்ச்சியாக இருந்தனர். ரேஷ்மாவும், ஷ்ரவனும் யாருமறியா தம் காதலை தமக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டு கண்களால் பேசி காதல் செய்து கொண்டிருந்தனர். சக்தியும், ஆனந்தியும் திருமணக் கனவுகளுடனும், ஆயிரம் ஆசைகளுடனும் தங்கள் எதிர்காலத்துக்காய் காத்திருந்தனர். அதே வேளை பவித்ராவைக் கொல்ல நினைப்பவர்கள் யார் எனத் தெரியாமல், அதை பிறரிடம் கூறி அவர்களைக் கஷ்டப்படுத்தவும் முடியாமல் தனக்குள் வைத்து புழுங்கிக் கொண்டிருந்தான் கவின். ஸ்ரீதர் தன் காதலை பவித்ராவிடம் கூற முடியாமலும், பவித்ரா தன் காதலை ஸ்ரீதரிடம் இதுவரை கூறாமல் காலந்தாழ்த்திக் கொண்டிருக்க அதையே சாதகமாய் பயன்படுத்திக் கொண்டாள் அப்சரா.
சக்தி, ஆனந்தியின் திருமண வேலைகளில் கவனத்துடன் இருந்த பவித்ராவுக்கு செல்போனில் அழைப்பு வரவே, வேலையில் இருந்தவள் ஒரு வெறுப்புடனேயே அதை எடுத்தாள். தெரியாத தொலைபேசி எண்ணாகவும் இருந்தது.
"ஹலோ... யார் பேசறீங்க?" பவித்ரா கேட்க அந்தப் பக்கமிருந்து சில நொடி அமைதியையே எதிர்பார்க்க முடிந்தது.
"ஹலோ, யார் பேசறீங்கன்னு கேக்குறன் ல?"
"மேடம், என் பேரு ஜோதி... நீங்க ரிப்போர்டர் பவித்ரா தானே?"
"அ... ஆமா நான் தான் பேசறன் சொல்லுங்க."
"மேடம், நீங்க இப்போ கவர் பண்ணிகிட்டிருக்கற எம்.எல்.ஏ சம்மந்தப்பட்ட அந்த கிரிமினல் கேஸ் சம்மந்தமான ஆதாரம் என்கிட்ட இருக்கு மேடம்." என்று செல்போனில் அழைத்த அந்த பெண்குரல் கூறவும் பரபரப்பான பவித்ரா,
"என்ன சொல்றீங்க? நெஜமாவா? நீங்க மட்டும் அந்த ஆதாரத்த கொடுத்திட்டீங்கன்னா, கண்டிப்பா இந்த வழக்குல ஒரு திருப்பம் ஏற்படும்."
"அதுக்காக தான் நானும் உங்கள கான்டாக்ட் பண்ணன் மேடம். நான் என்கிட்ட இருக்கற ஆதாரத்த உங்க கிட்ட கொடுத்திட்றன். நாம ரெண்டு பேரும் ********** பீச் ல இருக்கற சவுக்கு தோப்பு பக்கத்தில மீட் பண்ணலாமா?"
"கண்டிப்பா மீட் பண்ணலாம். எப்போன்னு சொல்லுங்க ஜோதி?"
"இன்னைக்கு சாயங்காலம் 7 மணிக்கு அங்க சந்திக்கலாம். நாம சந்திக்கப் போறத யார்கிட்டயும் சொல்லிடாதீங்க மேடம். இது ரகசியமாவே இருக்கட்டும்." என்க அதற்கும் ஆமோதித்தவள் தனக்கு செல்போனில் அழைத்த அந்த பெண்ணை சந்திப்பதற்காக காத்திருந்தாள். சாயங்காலம் ஆறரை மணிக்கு கிளம்பியவள் அந்தப் பெண்ணை சந்திக்க கிளம்ப, செல்போனில் பவித்ராவிடம். "ஜோதி" என்ற பெண்ணைப் போல் நடித்துப் பேசிய அப்சராவும், பவித்ராவை சந்திக்க கிளம்பியிருந்தாள்.
அப்சரா எதற்காக ஜோதி எனும் பெண் போல் நடிக்க வேண்டும்? பவித்ராவிடம் அவள் என்ன பேசப் போகிறாள்? பவித்ராவை கொல்ல நினைப்பவர்கள் யார்? அனைத்திற்குமான பதில்கள் இனி வரும் அத்தியாயங்களில்... Stay tuned...
To be continued...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro