Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

கொஞ்சம் கதை

அவனுக்கு கொஞ்சமாய் போரடித்தது. வந்ததிலிருந்து அமர்ந்திருந்ததால் காலும் வேறு வலித்தது.

"மாப்பிள்ளை என்ன பண்றீங்க?"

"சினிமாவுக்கு கதை எழுதிட்டு இருக்கேன்.. கதாசிரியர் மாதிரி. டைரக்டர் ஆகற ஆசையில்ல, ஆனா என் கதையை சினிமாவா எடுக்கணும்னு ஆசை."

புரிந்தும் புரியாமலும் தலையை அசைத்தனர் அனைவரும்.

ஒருகணம் அமைதி நிலவியது.

"எங்களுக்கு பொண்ணை பிடிச்சிருக்கு.. இன்னிக்கு எங்ககூட வர்றதா இருந்த என் பெரியம்மா வரலை. அவங்ககிட்ட கேட்டுட்டு, நாம மேற்கொண்டு பேசலாம்."

மாப்பிள்ளை தரப்பின் நடுநாயகமாய் எட்டுக்கல் பேசரி அணிந்து அமர்ந்திருந்த இரட்டைநாடி சரீரத்துக் குடும்பத் தலைவி தங்களது கருத்தை சபையில் முன்வைக்க, பெண்வீட்டார் முகத்தில் நிம்மதியும் பெருமிதமும் கலந்த புன்னகை உருவானது. வெள்ளை வேட்டிகள் கலந்துபேசத் தொடங்கின. பட்டுப் புடவைகள் ஒன்றையொன்று பார்த்து ஒப்பிட்டுக் கொண்டன.

இரண்டு குடும்பமும் திருமணத்தின் பல்வேறு விஷயங்களையும் பேசத் தொடங்க, அவை எதையும் கருத்தில் கொள்ளாமல், அறையின் கதவோரத்தில் நின்றுகொண்டு தலையைச் சரித்து எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த அவளையே வைத்தவிழி எடுக்காமல் பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தான் அவன்.

கண்ணைப் பறிக்கும் பஞ்சுமிட்டாய் நிறப் பட்டுப்புடவை கட்டியிருந்தாள் அவள். சற்றே மாநிறம் தான், ஆனாலும் புடவை எடுப்பாக இருந்தது அவளுக்கு. காதில் ஆடிய ஜிமிக்கி அன்றுதான் இரவல் வாங்கியது என்பதைச் சொல்லாமல் சொன்னது அதன் பொருந்தாத்தனம். அழகு நிலையத்துக்கு அன்று விடுமுறை போலும், தானாவே வீட்டில் உள்ளோரால் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். அழகாகத்தான் இருந்தாள். அதிலும் அந்தக் கண்கள்... என்ன கண்ணோ!

'அஞ்சனமிட்டு ஆளை விழுங்கும் அழகிய கருநாகங்கள்' என்று மனதில் தோன்றிய வரியை எங்கேனும் குறித்து வைக்கவேண்டுமென நினைத்தான் அவன். அவனது கழுத்துத் திரும்பியிருந்த திசையைக் கண்டுகொண்ட முதிய பட்டுச்சேலை ஒன்று, "மாப்பிள்ளைக்குப் பொண்ணைப் பாத்தது பத்தலை போல, ஒரேயடியா அங்கயே பாத்துட்டு இருக்காரு!" எனத் தனது பாதிப் பொக்கைவாய்க் குரலில் வாரிவிட, சிலர் சம்பிரதாயமாகச் சிரித்தனர். அருகில் அமர்ந்திருந்த தந்தை, "மானத்த வாங்காதடா" என்றார் காதோடு.

பெண்ணின் தந்தை பெரியமனது பண்ணி, "எதாவது பேசறதுன்னா பேசிட்டு வாங்க தம்பி.." என்றார். அவன் ஒப்புதலுக்காக அன்னையைப் பார்க்க, அவரோ சங்கடமாகப் புன்னகைத்தபடி தலையாட்டினார். வீட்டுக்குப் போனதும் கிடைக்கப்போவதை நினைத்துக்கொண்டே எழுந்து அவளை நோக்கிச் சென்றான் அவன்.

படுக்கையறையைத் தாண்டிய பாதையில் சென்று பால்கனியில் நின்றது பஞ்சுமிட்டாய். அவன் முழுக்கை சட்டையை சற்றே மடித்துவிட்டுக்கொண்டே பின்தொடர்ந்தான்.

வந்து நின்றதும் நிற்காததுமாய், "சொல்லுங்க, என்ன பேசணும்..?" என்றாள் அவள். சாதாரணக் குரலில்தான் கேட்டாள். ஆனால் அவன்தான் திகைத்தான். அதை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை என்பதை அவனது பார்வையே சொல்ல, இருப்பினும் சமாளித்து, "உங்க அப்பாதான் பேசிட்டு வரச் சொன்னார்.." என்றான்.

"ம்ம்.. ஓ.."

"என் பேரு--"

"எல்லாமே ஃபோட்டோ காட்டறப்பவே சொன்னாங்க."

"ஓ..கே. அப்ப, வேற.."

"என்கிட்ட எதுவும் கேட்கணுமா?"

கேட்கத்தான் நினைத்தான். வார்த்தைகள் சரியாக வரவில்லை. எழுதத்தான் வரவில்லை என்றால் இங்கேயும் வரவில்லை. மனதுக்குள் நொந்துகொண்டான் அவன். வீதியில் சென்ற வேன் ஒன்று "பழைய பட்டு சேலைகள் வாங்கறது..." என லவுட்ஸ்பீக்கரில் வாணிகம் பேசியபடியே சென்றுகொண்டிருந்தது. அந்த சத்தம் தந்த அவகாசத்தில் இரண்டொரு வார்த்தைகள் யோசித்துவைத்தான் அவன்.

தெருமுனைக்குச் சென்று அந்த வண்டி மறைந்ததும் அவள் இவன்புறம் திரும்பினாள். அவன் திணறியபடி கேட்டுவிட்டான்.

"எ.. என்னைப் பிடிச்சிருக்கா?"

அவள் எதுவுமே சொல்லாமல் சில நொடிகளை வீணாக்கினாள். அவனது இதயத்துடிப்பு எகிறியது. எதாவது கண்ணாடியில் ஒருமுறை முகத்தைப் பார்த்துக்கொண்டால் தேவலாம் எனத் தோன்றியது.

"இதைக் கேட்ட மூணாவது மாப்பிள்ளை நீங்க."

செய்தி வாசிக்கும் குரலோடு ஒத்துப்போனது அவளது தொனி. முந்தைய வார்த்தைகளுக்கு இப்போது அர்த்தம் சற்று விளங்கியது அவனுக்கு.

"ஓ.." என்றுமட்டும் சொன்னான். எத்தனையோ கேள்விகள் எழுந்தன. வார்த்தைகள்தான் இன்னும் வரமறுத்தன.

சிலகணங்களில் இரண்டு சிறுவர்கள் வந்து எட்டிப்பார்த்துச் செல்ல, அவள் கிளம்ப எத்தனித்தாள்.

"எனக்குப் பதில் சொல்லவே இல்லையே..?"

அதுமட்டும் டக்கெனக் கேட்டுவிட்டான். உண்மையிலேயே அவனுக்கும் ஆச்சரியமாய் இருந்தது.

அவள் இப்போது நேருக்கு நேராக அவன் முகத்தைப் பார்த்தாள்.

"உங்களுக்குப் புரியல? புரியாது, உங்களுக்கு என்னிக்கும் புரியாது. ஏதோ மார்க்கெட்ல கறிகாய் வாங்குற மாதிரிக் குடும்பமாக் கிளம்பி பொண்ணுப் பார்க்க வந்துடுறது. உங்களுக்காக இங்க மொத்தக் குடும்பமும் அவிங்கவிங்க வேலையெல்லாம் விட்டுட்டுக் காத்திருக்க, வந்து பொருளை அளவெடுக்கற மாதிரி பொண்ணைப் பாத்துட்டு, 'வீட்டுக்குப் போயிட்டு ஃபோன் பண்றோம், நாத்தனாரோட ஒண்ணுவிட்ட தங்கச்சியோட சின்ன மாப்பிள்ளையை கேட்டுட்டு சொல்றோம்'னு சொல்லிட்டுப் போயிட வேண்டியது. இதுலயும், நிச்சயத்தேதி வரைக்கும் குறிச்சிட்டு அதுக்கப்பறம் கூப்பிட்டு வேணாம்னு சொல்றது. எத்தனை அராஜகம்?!

இந்த வீட்டுலயும்தான் கேக்கறாங்களா? என் வாழ்க்கைக்கு கல்யாணம்தான் வேலிடேஷன்ங்கற ரீதியில இப்படி அலையறாங்க அசிங்கமா. இந்த மாதிரி அலங்காரம் பண்ணிட்டு மூணாவது மனுசங்க முன்னால உங்களையெல்லாம் நிக்கவெச்சா உங்களுக்கெல்லாம் எப்படி இருக்கும்? அப்ப அதை ஏன் நாங்க மட்டும் பண்ணனும்? எனக்கென்ன தலையெழுத்து?"

கத்தவில்லை, இரையவில்லை, கண்ணீர் சிந்தவில்லை, ஏன் முகம்கூட சுழிக்கவில்லை. தெளிவாகப் பேசினாள் அவள். சத்தம்கூட அளவாக, அறையைத் தாண்டிச் செல்லாத அளவுதான் இருந்தது.

அவன் வாய்திறக்கவும், சரியாக, "டேய்.. வாடா கிளம்பலாம்" என அம்மாவின் அதட்டல் கேட்கவும் சரியாக இருந்தது. அவளைத் திரும்பிப் பார்த்தால், அவள் தோளைக் குலுக்கிவிட்டு வெளியே சென்றிருந்தாள்.

"என்ன தம்பி, பொண்ணுகிட்ட பேசிட்டீங்களா?"

அவன் ஏதும் சொல்வதற்கு முன் முந்திக்கொண்ட தந்தை, "நாங்க.. அப்பறமா, கலந்து பேசிட்டு சொல்றோம்.." என இழுக்க, அவன் முகத்தில் அதிர்ச்சி அடிக்கோடிட்டது. அவள் அதையெல்லாம் எதிர்பார்த்ததைப் போல் தலையை அசைத்தாள். பெண்வீட்டார் முகங்கள் ஜன்னலின் சாயம்போன தீரைச்சீலையாய்க் களையிழந்தன.

காருக்கு வரும்வழியிலேயே அப்பாவின் காதைக் கடித்தான் அவன்.
"என்னப்பா, புடிச்சிருக்குன்னு சொல்லிட்டு, திடீர்னு அப்பறம் சொல்றோம்னு சொல்லிட்டீங்க?"

"டேய்.. அலையாதடா. இதுதான முதல் பொண்ணு, உனக்குப் பாக்கறது? கொஞ்சம் பொறுமையா இரு. பேசிட்டு இருக்கறப்ப தான் தெரிஞ்சது.. ஏற்கனவே நிச்சயம் வரை வந்த சம்மந்தம் ஒண்ணு நின்னு போயிருக்கு. அதுக்கப்பறமும் ரெண்டுமூணு வரன் வந்துட்டு, புடிக்கலைன்னு போயிருக்கு. அப்பன்னா என்னமோ இருக்குன்னு தான அர்த்தம்? ஏதோ குறையுள்ளதை நம்ம தலையில கட்டப் பாக்கறாங்களோ என்னவோ?"

"விளையாடறீங்களா? அந்தப் பொண்ணு மனசு கஷ்டப்படாதா? அந்த அங்க்கிள் பாவம், பார்க்கவே சங்கடமா இருந்துச்சு"

"என்னங்க, இப்பவே கூப்பிடறதைப் பாத்தீங்களா? அங்க்கிளாம்! டேய், மணச்சநல்லூர்ல ஒரு பொண்ணு இருக்கு. அதைப் பாத்துட்டு அப்பறம் சொல்லு, இந்த அங்க்கிள் தான் வேணுமான்னு!"

காரை நெருங்கி, முன்சீட்டில் அப்பா ஏறிவிட, அம்மா சிரமப்பட்டுப் புடவைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டு பின்னால் ஏறிக்கொள்ள, ஓட்டுநர் இருக்கை அவனுக்காகக் காத்திருந்தது. குற்றஉணர்வோடு நிமிர்ந்து இரண்டாவது மாடியின் பால்கனியை ஏறிட்டான் அவன். அவள் அங்கேதான் நின்றாள். யாருடனோ கைபேசியில் பேசிக்கொண்டு.

"ஏறுடா..!"

மனதுக்குள் இறங்கிய கனம் கையைப்பற்றி இழுத்தது. சாவியை சீட்டில் போட்டவன், "வரேன் இருங்க" என்றுவிட்டு ஓடிச்சென்று வேகமாகப் படியேறினான். கொஞ்சம் மூச்சிரைத்தது. பாதியில் ஒருமுறை நின்று மூச்சு வாங்கிக்கொண்டான். பெருக்கத் தொடங்கியிருந்த வீட்டுக்குள் மீண்டும் காலெடுத்து வைத்தான். இவனது 'அங்க்கிள்' திடுக்கிட்டுப் பார்த்தார்.

"எதையாச்சும் மறந்துட்டீங்களா தம்பி?"

ஆமென்றும் இல்லாமல், இல்லையென்றும் சொல்லாமல் ஏடாகூடமாகத் தலையை ஆட்டியவன் அவரைத் தாண்டிக்கொண்டு பால்கனிக்குச் சென்றான்.

"யெஸ் சார்.. யெஸ்.." என்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தவள் இவனைப் பார்த்ததும் கொஞ்சம் திகைத்ததுபோல் நின்றாள். காதின் ஜிமிக்கிகளைக் கழற்றிவிட்டாளெனத் தெரிந்தது. பின்னலையும் கழற்றத் தொடங்கியிருந்தாள். கைபேசியை வைத்துவிட்டு இவனைப் பார்த்தாள்.

"இந்த சந்திப்பை க்ராஸ் அவுட் பண்ணிடலாம். இது வேணாம். கல்யாணம்கூட வேணாம். மறுபடி முதல் டைம் மீட் பண்ணலாம். மறுபடி அறிமுகமாகலாம். மறுபடி பேர் கேட்கலாம், ஊர் கேட்கலாம். மறுபடி முதல் இம்ப்ரெஷனை உருவாக்கலாம். ஒரு காபி குடிக்கலாம்... பேசலாம்... மறுபடி ஒரு சான்ஸ்? மறுபடி ஒரு காபி.. கிடைக்குமா?"

நிறுத்தாமல் பேசிவிட்டுக் கண்களை மூடித்திறந்தான். அவள் யோசனையாகத் தலையை சாய்த்திருந்தாள்.

பழைய பட்டுப்புடவை வேன் இன்னொரு முறை தெருவைச் சுற்றிவந்தது. அவனுக்கு இன்னும் கொஞ்சம் மூச்சிரைத்தது.

அவள் முகத்தில் ஏதோ மின்னி மறைந்தது.

"ஷ்யூர்... Lets meet for a cup of coffee."

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro