கொஞ்சம் காபி...
"Coffees are my absolute favourite!! காபின்னு சொன்னாலே ஒரு புத்துணர்ச்சி, உற்சாகம் எல்லாமே வந்துடும்.. காலைல எழுந்ததும் சாமி கும்புடறேனோ இல்லையோ, காபி போட்டுக் குடிச்சிட்டுத் தான் மறுவேலை! கொதிக்கக் கொதிக்க காபியை குடிக்கறவங்களைப் பாத்தா பயமா இருக்கும் எனக்கு. எனக்கு எப்பவுமே மைல்டா இருக்கணும். நாக்கை உறுத்தாத சூடுன்னு சொல்லுவோமே.. அதுதான். க்கோல்ட் காபி கூட ரொம்பப் பிடிக்கும். காபின்னாலே போதும்... வெனிலா, சாக்லெட், ஹேஸல்நட், சின்னமன் எந்த ப்ளேவரா இருந்தாலும் பிடிக்கும். எந்த நேரத்துல குடுத்தாலும் மறுக்காம குடிக்கற ஒரே பெவரேஜ்.. காபி தான்!
காபி ஒரு கவிதை மாதிரி. பார்க்கும்போது சாதாரணமாத் தான் இருக்கும். ஆனா, அதைப் புரிஞ்சவங்களுக்கு மட்டும் அது அமிர்தமா இனிக்கும். சந்தோஷமா இருந்தா லாட்டே, சோகமா இருந்தா கேப்புச்சினோ, கோபமா இருந்தா ஜஸ்ட் ப்ளாக் காபி, indecisiveஆ இருந்தா, கண்ணை மூடிட்டு, பக்கத்து டேபிள்ல எந்த காபியோ அதேதான்னு சொல்லிடுவேன்!
மனுசனோட காபி தேவைகளை வச்சு, அவனோட பர்சனாலிட்டிய புரிஞ்சிக்கலாம்னு நான் நம்புறேன். பால் அதிகமா சேர்த்தா, இன்னும் லைஃப்ல பெருசா எந்தக் கஷ்டத்தையும் பாக்கலைன்னு அர்த்தம். சக்கரை கம்மியான்னு சொன்னா, ஆடி முடிச்சிட்ட வாழ்க்கைனு அர்த்தம். திக்கா, க்ரீமியா கேட்டா, சொகுசுக்கு பழக்கப்பட்டவர்னு அர்த்தம். தண்ணிக் காபியா இருந்தாலும் குடிச்சா, வாழ்க்கையை திருப்தியா வாழ்ந்தவர்னு அர்த்தம்.
காபி பிடிக்காதவங்கள்லாம் இருக்காங்கன்னு சொன்னா, நம்புறதுக்கு கஷ்டமா இருக்கு! என்னைப் பொறுத்தவரை, மனுசன் கண்டுபுடிச்சதுலயே உருப்படியான விஷயம்.... is a cup of coffee!"
மூச்சுவிடாமல் பேசிவிட்டு அவள் புன்னகைக்க, அவளையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் அவன்.
ஒருகணத் திகைப்புக்குப் பிறகு, உண்மையான பிரம்மிப்புடன் கண்களை விரித்து "வாவ்!" என்றான்.
அவள் கலகலவென சிரித்தாள்.
"நீங்கதானே கேட்டீங்க, காபி பிடிக்குமான்னு?"
"ஆர்டர் பண்றதுக்காக காபி ஓகேவான்னு கேட்கவந்தேன்.. நீங்க என்னடான்னா, ஒரு சகாப்தமே எழுதிட்டீங்க காபியை பத்தி!!"
அவள் அசட்டுப்புன்னகையோடு நெற்றியைத் தேய்த்தாள்.
"சாரி... நான் கொஞ்சம் வாயாடி"
"Don't be. ரொம்பவே அழகா பேசினீங்க"
"ஓட்டறீங்க!"
"நிச்சயமா இல்ல! உங்க பேச்சுல ஒரு டைனமிக் எனர்ஜி இருக்கு... அது அப்படியே கேக்கறவங்களையும் தொத்திக்கும் போல! நான் மெஸ்மரைஸ் ஆகிட்டேன் உங்க பேச்சில.."
அவள் மீண்டும் புன்னகை பூக்க, அதை ரசித்தபடியே பேரரிடம் இரண்டு காபி ஆர்டர் செய்தான் அவன்.
காலை வெய்யில் உச்சத்தைத் தொட்டிருந்தாலும், இந்த உயர்தரக் குளம்பிக் கடையின் ஏசிகள் வெப்பத்தை அவ்விடம் அணுகாமல் தடுத்துக்கொண்டிருந்தன. மெல்லிய சத்தத்தோடு மேல்நாட்டு இசை தலைமாட்டில் இருந்த ஒலிப்பெருக்கிகள் மூலமாய் அறையெங்கும் பரவியிருக்க, ஜன்னலோரங்களில் வைக்கப்பட்டிருந்த மணிப்ளாண்ட், க்ரோட்டன்ஸ் செடிகளில் சூரிய வெளிச்சம் பட்டு ஒளியூட்ட, காதல் தொடங்கும் இடத்திற்கான பத்துப் பொருத்தங்களும் கொண்டிருந்தது அந்த சந்திப்பு.
இரண்டு நிமிடத்திற்குமேல் இருவரிடையே நிலவிய அமைதியைப் பொறுக்க முடியாதவளாய், "நீங்க ரொம்ப சைலண்ட்டோ, ரொம்ப நேரமா ஏதோ யோசனையில இருக்கற மாதிரியே இருக்கீங்க?" எனக் கேட்டாள் அவள்.
அவன் தலையை இடவலமாக அசைத்து சிரித்தான்.
"என்ன பேசறதுன்னு தான்..."
"என் ஃப்ரெண்ட் மாதிரியே பண்றீங்க நீங்களும்! ஸ்கூல் ஃப்ரெண்டு. அவளும் இப்படித்தான். ரொம்ப சைலண்ட் டைப். இருக்கற எடமே தெரியாது. நாமளா எதாச்சும் கேள்வி கேட்டாதான் பேசுவா... தானா ஒருவார்த்தை பேசிட்டா அதிசயம்தான். அன்னிக்கு கண்டிப்பா மழை வந்துடும். மிஸ் கேள்வி கேட்டாலும், எச்சா ஒரு செண்டன்ஸ் சொல்லிட மாட்டா. மறுபடி மறுபடி கேட்டா மட்டும்தான் முழுசா சொல்லுவா. இப்ப அவ எங்க இருக்கானு தெரியல. கண்டிப்பா அவளை இப்ப பாத்தாலும் அடையாளம் கண்டுபிடிச்சிடுவேன். ஒல்லியா, குட்டியா இருப்பா. தலையில பிச்சிப்பூ வச்சிருப்பா. கண்ணாடி போட்டிருப்பா, ஆனா சோடாபுட்டி இல்ல. பாக்க ஒருமாதிரி, வித்தியாசமான அழகா இருப்பா...
ப்ச்.. சாரி.. மறுபடியும் ஏதேதோ பேசிட்டு இருக்கேன்!"
"ஐயோ ப்ளீஸ்... அடிக்கடி சாரி எல்லாம் சொல்லாதீங்க. நீங்க பேசறதைக் கேக்க அழகா இருக்கு. நல்ல eloquence உங்களுக்கு. கேட்டுக்கிட்டே இருக்கலாம்ங்கற மாதிரி பேச்சு. ப்ளீஸ், நீங்க பேசினா நான் கேட்டுக்கிட்டே இருப்பேன். சாரின்னு சொல்லி அதைக் குத்தமா ஆக்காதீங்க"
இசைபோல இருந்தது அவள் சிரிப்பு.
"பயங்கர ஐஸா இருக்கே!! ஆனா முகத்துல கிண்டலைக் காட்டாம கலாய்க்கறீங்க. செம்ம டேலண்ட் உங்களுக்கு!"
"அட.. நான் உண்மையாதான் சொன்னேன்! உங்க பேச்சு ரொம்ப அழகா இருக்கு!"
"இருபது வருசமா, அதாவது பேச ஆரம்பிச்சதுல இருந்தே 'பேசாத, பேசாத'ன்னு திட்டுறதைக் கேட்டே வளர்ந்தேன்.. வீட்டில பேசினா அம்மா திட்டுவாங்க, 'கொஞ்சநேரம் வாயை மூட மாட்டியான்னு'.. ஸ்கூல்ல சொல்லவே வேணாம். பாரபட்சம் பாக்காம எல்லா டீச்சரும் 'கீப் க்வைட், கீப் க்வைட்'னு ஜெபம் பண்ணுவாங்க. காலேஜ்ல கூட 'ஒவர் வாய் ஒடம்புக்கு ஆகாது'ன்னு அடக்குவாங்க..
அப்படி பேசறது பிடிக்காதவங்க, எதுக்காக பேசற சக்தியை வாங்கிக்கணும். வாயில ப்ளாஸ்திரி ஒட்டிக்கிட்டு வாழவேண்டியதுதான?"
இம்முறை சிரிப்பது அவன் முறை. தயக்கமின்றி மனதாரச் சிரித்தான் அவன். சிரிப்பில்கூட அழகாக வெளிப்பட்ட அவனது ஆண்மையின் சாயல்.
எந்தப் பெண்ணும் அப்படி ஒரு சிரிப்பை அருகிலிருந்து பார்த்தால் இருகணங்கள் நின்று ரசித்து, தன் வெட்கம் துறந்து அவனுக்குக் காற்றிலாவது முத்தமிட்டுச் செல்வாள்.
எதிரில் அமர்ந்திருந்தவளும் பெண்ணுலகின் பிரஜை தானே? இருகணங்கள் சொக்கிப்போனாள் அவன் சிரிப்பில். ஆனால் அது தெரியாதவண்ணம் காபி இருவரிடையே வந்துவிட்டது.
அவளது நெற்றியின் நடுமையம் வீற்றிருந்த கருப்புப்பொட்டில் கண்களைக் குவித்தபடி காபியை மெல்ல உறிஞ்சினான் அவன்.
"Not hot.. நீங்க சொன்னமாதிரி வார்ம் தான்.. தைரியமா குடிங்க"
கண்களினூடே அவன் புன்னகைக்க, அவள் நம்பிக்கையில்லாத பார்வையுடனே காபிக் கோப்பையைக் கையில் எடுத்தாள். அதன் சூடு மலர்க்கரங்களை உறுத்தவில்லை என்றதும் கொஞ்சம் தைரியம் வந்து, நளினமாக அதை இதழுக்குக் கொண்டு சென்றாள்.
உதட்டையும் சுட்டுவிடவில்லை என்றதும் முகத்தின் தயக்க ரேகைகள் தெளிந்து, ரசனையுடன் அதை உறிஞ்சினாள். முதல் உறிஞ்சலின் முடிவில் காற்றுக் குமிழ்களால் லேசான சத்தம் எழும்ப, சட்டென நிறுத்திவிட்டு அவனிடம் மன்னிப்பு வேண்டினாள்.
"ஐம் சாரி... தட்--"
"ஹே.. பரவாயில்ல... எதுவும் நினைச்சுக்க மாட்டேன் நான். You can be yourself"
பதிலாக ஒரு புன்சிரிப்பை சிந்திவிட்டு, மீண்டும் காபியை முத்தமிட்டாள் அவள்.
"அப்றம்... உங்களைப் பத்தி எதாவது சொல்லலாமே.." என்றான் அவன்.
அவள் காபியில் இன்னும் பாதி இருந்தது. அவனோ குடித்து முடித்திருந்தான்.
அவள் அவனையும் காபியையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு, மனமின்றி காபியை வைக்கப்போக, அவன் இடையிட்டுத் தடுத்தான்.
"ஐம் சாரி. Please finish your coffee"
அவசரமாகக் குடித்து முடித்தது அவளது தொண்டைக்குழி ஏறி இறங்கிய வேகத்திலேயே தெரிந்தது. அதன்கீழ் பார்வையை இறங்கவிடாமல் தடுத்துப் பிடித்து, மீண்டும் அவளது கண்களுக்குக் கொண்டுவந்தான் அவன்.
காபி கொடுத்த உற்சாகத்துடன், "ம்ம்... இப்ப சொல்லுங்க... என்ன சொல்லணும்?" என்றாள் அவள்.
"ம்ம்... உங்களைப் பத்தி.."
"என்னைப் பத்தின்னா... நான் டாபிக் கொடுத்தாலே பத்து பக்கத்துக்குப் பேசுவேன். நீங்க ஜெனரலா கேட்டா நான் என்ன சொல்லுவேன்? உங்களுக்கு என்ன தெரியணுமோ கேளுங்க... அப்ப கரெக்டா சொல்லிடுவேன்!"
அவளது குழந்தைபோன்ற யதார்த்தப்பேச்சில் அவன் மனது திளைத்துக் கரைந்தது.
கண்களை நேராக வைத்துக்கொண்டு, முகத்தில் எதையும் வெளிக்காட்டாமல், சாதாரணக் குரலில் அதைக் கேட்டான் அவன்.
"Will you marry me?"
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro