Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

சந்திப்பு - 15

காலை நேர வெயில் அழகாக கீழ் வானத்தில் ஒளிர தொடங்கியிருந்த நேரத்தில்.. ஒரு நோட்டு மற்றும் பேனாவை கையில் வைத்து கொண்டு தன் வீட்டு பால்கனியில் சம்மணமிட்ட நிலையில் அமர்ந்திருந்தான் விசோழன்.

கையில் வைத்திருக்கும் நோட்டில் எதையோ தீவிரமாக கணக்கு போட்டு கொண்டிருந்தவன் அவ்வப்பொழுது மொபைலையும் தன் கணக்கிற்கு உட்படுத்தி கொண்டே கிட்டத்தட்ட இருபது நிமிடங்களை கடத்தியிருந்தான்.

மெல்ல மேல்வானத்தை நோக்கி எட்டிகொண்டு வரும் இளஞ்சூரியன் அவன் மேனியை இதமாக தீண்டத் தொடங்கிய பின்பே தன் கணக்கினை ஓரளவிற்கு முடித்து கொண்டு பெருமூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்தான் அவன்.

"ஹ்ம்ம்... பாதி சேவிங்ஸ் போச்சு... சரி சுபிக்கு தானே...", என மெல்லமான குரலில் தனக்கு தானே புலம்பி கொண்டவன், தான் கணக்கு போட்டு கிறுக்கி வைத்திருந்த நோட்டை பார்த்தபடி, "நெக்ஸ்ட்.... இன்னைக்கி அட்மிஷன் ஃபீஸ் இருக்கு.. அதுக்கு ஒரு.... மந்த்லி தெளஸன்ட் கிட்ட வரும்... வீட்டு வாடகை எனக்கு மூவாயிரம்... அவளுக்கு ரெண்டாயிரம்... அப்பறம்... வேற???.. ஹான்.. அவளுக்கு தைக்க மெஷின் ஒன்னு வாங்கணும்... அது? ஒரு இருபதாயிரம் வைப்போம்... அதுக்கு தேவையான ஃபேப்ரிக்ஸ் (Fabrics)... எப்டியும் பத்தாயிரம் வரும்... .... .... ஹ்ம்ம்... ... சமாளிக்க முடியுமா...?? ", என கண்ணை மூடி தன் அடர்ந்த கேசத்தினுள் விரல்களை விட்டுகொண்டு முடியை இறுக்கமாக பற்றியபடி பின்பக்கமாக சுவற்றில் சாய்ந்தான்.

பலவித குழப்பமும் பயமும் அவனை ஆட்கொண்டிருக்க... மௌனமாகவே தன் மனதுடன் பேசி கொண்டிருந்தவனை நிஜத்திற்கு அழைத்து வருவது போலவே, கணக்கு போட்ட நிலையிலேயே அவன் கையில் இருந்த மொபைலின் மேல்புறமாக வந்து நின்றது ஒரு குறுஞ்செய்தி.

"எப்டியும் கம்பெனி மெசெஜ் தா வந்துருக்கும்... அத என்னத்த பாக்க..", என்ற மூளையின் விரக்தி குரலையும் தாண்டி அவனது அடி மனதின் தூண்டுதலினால், எதேச்சையாக அந்த குறுஞ்செய்தியை திறந்து பார்த்துவிட்டான் அவன்.

"Xxxx bank என்னும் எண்ணில் இருந்து வந்திருந்த அந்த குறுஞ்செய்தியில், விசோழனது வங்கி கணக்கில், செந்தில்ராஜன் என்ற நபரின் வங்கி கணக்கில் இருந்து ஐம்பதாயிரம் பணம் போடபட்டிருப்பதாக தகவல் வந்திருந்தது.

முகத்தில் எவ்வித சலனமும் இன்றி அந்த குறுஞ்செய்தியையே பார்த்து கொண்டிருந்தவனை, "சுபித்ரா க்கா...", என்ற ஒரு ஆடவனின் உற்சாக குரல் கலைத்தது. உடனடியாக எழுந்தவன், "எவன்டா அது என் ஆளு பேர ஏலம் விடுறது?", என பால்கனியில் இருந்து எம்பி கொண்டு சுபியின் இல்லத்தை நோட்டமிட... இருவரின் வீட்டு ஜன்னல் மட்டுமே சாலையை எதிர்நோக்கி எதிரெதிரே இருப்பதால், சுபித்ரா வீட்டின் பக்கவாட்டு சுவரை மட்டுமே தான் அவனால் பார்க்க முடிந்தது. சுபித்ராவை காண இயலவில்லை என்ற அடுத்த நொடியே, புதிதாக கேட்ட ஆடவனின் அக்குரலானது தன் கீழ் வீட்டில் இருந்து தான் ஒலிக்கிறது என உணர்ந்து கொண்டு நேராக கீழே எட்டி பார்க்க.., அவன் முகத்தையும் காண இயலவில்லை... மாறாக, "ஹே!... ஹாய் தம்பி... நீ மனோ ஸ்கூல் மேட் தானே?..", என்ற சுபித்ராவின் ஆச்சரிய குரல் தான் இப்போது கீழ்வீட்டு குரலுக்கு பதிலாக கேட்டது.

"ஆமா க்கா.. இப்போ இங்க தா என்ஜினீயரிங் படிச்சுட்டு இருக்கேன்.. நீங்க இங்க வர்ரீங்கன்னு சொல்லி மனோ தா இந்த ஏரியாக்கு என்ன ஷிப்ட் ஆக சொன்னான்.. ஆனா இப்டி எதுத்த வீட்டுக்கே வருவீங்கன்னு நா எதிர்பார்க்கவே இல்ல க்கா..", என அந்த குரல் சுபித்ராவுடன் சகஜமாக பேசி கொண்டிருக்க..., அதை கேட்டு, "இந்த வீட்டுக்கு எப்ப டா ஆளு வந்துச்சு...?", என வாய்க்குள் முனங்கிய விசோழன், என்னதான் முயன்றாலும் குரலுக்கு சொந்தகாரரை கண்டறிய இயலவில்லை.

சரி கீழே செல்லும் போது முறையாக அறிமுகம் செய்து கொள்ளலாம் என தீர்மானித்து கொண்டு, கணக்கு போட்டு வைத்த நோட்டையும் மொபைலையும் எடுத்து கொண்டு வீட்டின் உள்ளே சென்று தன் தினசரி வேலைகளை தொடங்கி விட்டான் அவன்.

★★★

எப்போதும் எட்டு மணிக்கு மேல், ஆறஅமர கிளம்பி கல்லூரிக்கு செல்லும் மனோஜ், இன்று ஏழரை மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பி விட்டான். குறிப்பாக, வாயிலில் அமர்ந்திருந்த தந்தையை பார்த்தும் அவரிடம் கூறாமல் சென்று விட்டான். 

"என்னங்க.. இது சரி கெடையாது.. இப்டியே விட்டா இந்த விஷயம் ஏதாச்சும் பெரிய பிரச்சனைல போய் விட்டுறும்ங்க", மகனின் செய்கையை கண்ட ரஞ்சனி, தீவிரத்தை உணர்ந்து தன் கணவனிடம் கூற.., "அதெல்லாம் ஒன்னும் ஆகாது ரஞ்சனி.. நா அந்த அளவுக்கு விட்டுற மாட்டேன்.. நீ கவல படாத.. .. .. புள்ளைங்க ரெண்டும் தோளுக்கு மேல வளந்துருச்சுங்க.. நேத்து பெருசா சொன்னான்ல.. பொண்ணுக்கு வெளி உலகத்த காட்டாம டார்ச்சர் பண்ணுறோம்ன்னு.. ஹம்ம்.. அந்த வெளி உலகத்துல அப்டி என்ன தான் நடக்குதுன்னு போய் தெரிஞ்சுக்கட்டும்.. அவ மட்டும் அங்க தனியா கஷ்ட படணும்.. இவன் இங்க சொகுசா இருக்கணுமா??.. கொஞ்சநாள் இப்டியே விடு இவன..", மகன் கடந்து சென்ற வெறும் சாலையில் பார்வையை வைத்தபடியே பேசினார் கலைவானர்.  

சீக்கிரமே வீட்டில் இருந்து புறப்பட்டதால் சீக்கிரமே பேருந்து நிறுத்தத்திற்கு வந்துவிட்டான் மனோஜ். வந்து என்ன செய்ய?.. பேருந்து வரும் வழக்கமான நேரம், அதே எட்டு-பதினைந்து தானே?.. அதுவரையில் அப்படியே நிற்க முடிவெடுத்து தான் இங்கு வந்திருக்கிறான்.

நேரம் மெல்ல நகர்ந்தது. இவன் போதாத காலம், மிக மிக மெல்லமாகவே நகர்ந்தது. பல்வேறு சிந்தனைகளுடன் அப்படியே நின்றிருந்தவன் தோளில் திடீரென ஒரு கரம். திடீரென வந்த இந்த கரம் யாருடையது என மனோஜ் திரும்பி பார்க்க.. முகத்தில் விரிந்த புன்னகையுடன் அவனை இடித்து வந்து நின்றான் மனோஜின் கல்லூரி தோழன் உதய் (எ) உதயன்.

"என்ன டா மச்சி.. பலத்த யோசனையில இருக்குற மாதிரி தெரியுது?.", சாதாரணமாக கேட்டபடியே உதய் அவன் பையிலிருந்து மொபைலை கையில் எடுக்க, "மச்சி.. நீ பார்ட் டைம் ஜாப் போறல?..", சட்டென கேட்டான் மனோஜ்.

"ஆமா..."

"என்னயவும் கூட்டிட்டு போடா..."

"டேய்., அதெல்லாம் உன் ஸ்டேட்டஸ்க்கு செட் ஆவாது டா.. பேக்கரி வர்க்.. நடந்துட்டே இருக்கணும்..", மொபைலிலேயே பார்வையை வைத்திருந்த உதய், தன் நண்பன் விளையாட்டாக ஏதோ கேட்கிறான் என நினைத்துகொண்டு நக்கலுடன் பதிலளிக்க.., "ம்ச்.. கூட்டிட்டு போக முடியுமா முடியாதா?", மனோஜ் எரிச்சலுடன் கத்திய பின்பே அவன் முகத்தை நன்றாக உற்று நோக்கினான். 

"டேய்... என்ன டா ஆச்சு உனக்கு??.. சும்மா லூசு மாதிரி பேசாத... ஆமா பார்ட்-டைம் போற அளவுக்கு உனக்கென்ன கஷ்டம் வந்துச்சு இப்போ?", உதய் தீவிரத்துடன் கேட்க, "இல்ல டா... நேத்து... சுபாவ கோயம்புத்தூர் அனுப்பிட்டேன்..", கம்மிய குரலில் கூறினான் மனோஜ்.

"அதுகென்ன?"

"டேய்.. உனக்கு புரியலையா... அப்பாம்மாவ மீறி அவள அங்க அனுபீட்டு ஒக்காந்துருக்கேன்..."

"எதே... அடேய்.. ஏன் டா...?"

"ம்ச் அதெல்லாம் கேக்காத டா மச்சி... சொல்லுற நெலமைல இல்ல... இப்போ எனக்கே எங்க வீட்டுல சோறு போடல.. இதுல அவளுக்கும் செலவுக்கு எதாச்சும் குடுக்கணும்ல."

"டேய்.. பைத்தியமே.. அக்காவ தனியா எப்டி டா அவ்ளோ தூரம் அனுப்புன நீ.."

"தனியாலாம் இல்ல டா.. விசு மாமா அங்க தா இருக்கான்னு உன்ட்ட தா சொல்லிருக்கேனே.. அவர பாத்துக்க சொல்லிருக்கேன்... நம்ம ஜெய் கூட அங்க தா பக்கத்துல தங்கி இருக்கான். சோ பாதுகாப்புக்கு பயம் இல்ல... செலவுக்கு தா.... யோசனையாவே இருக்கு.. அதா உன்ட்ட ஹெல்ப் கேக்குறேன்.", தன் நிலையை சுருக்கி கூறிய மனோஜ், எதிர்பார்புடன் நண்பனை நோக்க.. பெருமூச்சுடன் தலையை தேய்த்த உதய், "ம்ம்.. சரி ஈவ்னிங் என் கூட வா.. ஓனர் கிட்ட கேட்டு பாப்போம்", மெல்லிய புன்னகையை நண்பனுக்கு கொடுக்க.. பதிலுக்கு, நிம்மதி நிரம்பிய புன்னகை ஒன்றினை சிந்தினான் மனோஜ். 

★★★

தன் தம்பியின் நண்பனிடம் பேசிக்கொண்டே நின்றிருந்ததில் சுபித்ராவிற்கு நேரம் போனதே தெரியவில்லை.. கல்லூரிக்கு நேரம் ஆகிவிட்டதென கூறி அவன் கிளம்பிய பின்பே நேரத்தை நோட்டமிட்டாள். மணி, எட்டு நாற்பத்து ஐந்து. காலையிலேயே குளித்து முடித்தவள், சமைக்கலாம் என்று தான் நினைத்தாள். அதற்கு தேவையான பாத்திரங்கள் எதுவும் இல்லாமல் இருக்க.. அதனால், நேராக இருக்கும் விசோழனின் வீட்டை கொஞ்சம் நோட்டமிடலாம் என முடிவெடுத்தவள், வீட்டை வெளிபுறமாக தாழிட்டுவிட்டு விசோழனின் வீட்டை நோக்கி நடைபோட்டாள்.

வாயிலில் நுழையும்போதே உள்ளுக்குள் சமைக்கும் மனம் சுபித்ராவின் நாசியில் ஏறியது. கமகமக்கும் நறுமணம் அல்ல.. தாளிக்கும் வாசனையின் நெடி.  

புகை வரும் திசையை வைத்து அடுப்பங்கரையை கண்டுபிடித்தவள், "சோழா.. என்ன செய்யுற நீ.. அடுப்ப சிம்'ல வைக்கணும்..", விருவிருவென அவனிடம் ஓடியவள், அவன் கையிலிருந்து கரண்டியை பிடிங்கியபடி அடுப்பில் எரியும் நெருப்பை பாதியாக குறைத்தாள்.

"ஹேய்!.. வெல்கம் ஹோம் சுபி.. சொல்லாம கொல்லாம வந்துட்ட.. ", அவளின் வரவால் முகம் மலர்ந்தவன் தான் செய்து வைத்திருக்கும் செயலால் கண்கள் கலங்கி இரும தொடங்கிட, துப்பட்டாவால் தன் மூக்கினை மூடியபடி அந்த கடாயில் சாம்பார் காய்கறிகளை கொட்டி, வதக்க தொடங்கினாள் சுபித்ரா. 

"இப்டி தா டெய்லியும் சமச்சுட்டு இருந்தியா நீ?.. தெருவையே நெடியேற வச்சுட்டு", நக்கல் புன்னகையுடன் அவள் கேட்க, "ஹம்ம்... வேற என்ன செய்யுறது??.. என் விதி அப்டி..", தீவிரமாக நொந்துகொண்டான் விசோழன்.    

"சரி சரி.. அதா நா வந்துட்டேன்ல.. இனி நீ கஷ்டபட வேணாம்.. நானே சமச்சுடுறேன்"

"எதுக்கு சுபி.... அதெல்லாம் நா பாத்துக்குறேன்... நீ இங்க வந்து சமச்சா, அப்பறம் இந்த தெருவுக்கே நீ தா பிரேக்கிங் நியூஸ் ஆகிருவ.. ஆளாளுக்கு ஒவ்வொரு விதமா பேசுவாங்க.. கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.. உனக்கு தேவையான பாத்திரமெல்லாம் வாங்க நெக்ஸ்ட் வீக் போகலாம்... சோ டோன்ட் வர்ரி.. அதுவரயும் நானே சமைக்குறேன்.... நா சமச்சதும் நல்லா டேஸ்ட்டா தான் வரும்.. ", அவன் பனியனில் இல்லாத காலரை தூக்கிவிட்டுக்கொள்ள.. பதில் எதுவும் பேசவில்லை அவள். அவனும் ஏதோ யோசனையில் சிக்கிக்கொள்ள.. நொடிகள் மௌனமாக நகர்வதை கவனிக்கவில்லை அவன்.  முழுதாக இரண்டு நிமிடம் கடந்திருக்கும், "சோழா...", சலனமற்ற குரலில் அவனை அழைத்தாள் சுபித்ரா.

"என்ன சுபி.."

"நீ ரொம்ப மாறீட்ட..."

"ஏன் சுபி"... ரொம்ப எழச்சு போய்ட்டேனா என்ன...", விசோழன் தன் உடல் எடையை சோதிக்க.., "ம்ம்ம்ம்.... என்ன நக்கலா?... நா சீரியஸா சொல்லுறேன்", ..", அவனை நோக்கியவள் பார்வையில் சிறிதளவு எரிச்சலும் பாதியளவு கோபமும் இருந்தது.

"அப்டி என்ன டி நா மாறீட்டேன்...", விசோழனது கண்ணிலும் குரலிலும் வியப்பு தென்பட, "போ டா டேய்... உனக்கே தெரியலையாக்கும் நீ மாறீட்டன்னு.. இல்ல நடிக்கிரியா?..", குழம்பிற்கு தேவையான அனைத்தையும் கடாயில் கலந்து முடித்து, அதற்கு ஒரு மூடி போட்டு மூடிவிட்டு கைகட்டி நின்றாள் அவள். மெல்லிய சிரிப்புடன் அவள் கரம் பற்றியவன், "நீ எத மீண் பண்ணி சொல்லுற சுபி?... எதாவது பிடிக்கலையா... அப்டி இருந்தா சொல்லு.. அத மாத்தலாமா வேணாமான்னு அப்பறம் யோசிக்கிறேன்...", நிதானமாக வினவியவன் கையை வெடுக்கென உதறியவள், "போடா.. நீ, நா பாத்த சோழாவே கெடையாது... அவன் யார பத்தியும் எத பத்தியும் கவல பட மாட்டான்.. யாரு சொல்லுறதையும் கேக்க மாட்டான்.. பட் இப்போ அப்டி இல்ல நீ... நேத்து என்னடான்னா வீட்டுக்குள்ள வராமலே போரா... இப்பொ என்னடான்னா நா இருக்கும்போதே தனியா சமைக்க போறேன்னு சொல்லுற.. .. நா செயுறேன்னு சொன்னா.. அக்கம்பக்கம் பேசுரத பத்தி எனக்கு டியூஷன் எடுக்குற... நீ இப்டி கெடையாது சோழா.. ஏன் மாறி போய்ட்ட..", நீளமான குற்றசாட்டினை முன்வைத்துவிட்டு அவள் மூச்சு வாங்கினாள். அதை கண்டு லேசாக சிரித்தான் விசோழன்.

"ஹ்ம்ம்... எல்லாம் எப்பவுமே ஒரே மாதிரி இருக்காது டா பப்பா... சில நேரத்துல நாம மாறணும்.. சில நேரத்துல நம்மள மாத்த நினைக்கிற விஷயத்த மாத்தனும்.. நீ இப்போ தானே வீட்ட விட்டு வெளிய வந்துருக்க... போக போக நீயே புறிஞ்ஜுப்ப பாரு.."

"ஹ்ம்ம்... போ டா... எனக்கு எதுவம் புரிய வேணாம்.. நீ மாறீட்ட... அத மட்டும் ஒத்துகோ.. இப்போ சமையல் முடிஞ்சுருச்சுல.. நா கெளம்புறேன்.. யாராச்சும் பாத்தா பலவிதமா பேசுவாங்க..", சிலிர்த்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள் அவள்.

"ஹே சுபி!.. உனக்கு அட்மிஷன் இன்னைக்கு தா..  ஷார்ப் டென்க்கு கெலம்பனும்... பஸ்ல தா பொறோம்.. ரெடியாகீறு...", வாயிலுக்கு சென்றுவிட்டவளை நோக்கி அவன் கத்த.., "ஏன் காருக்கு என்ன ஆச்சு?", வாயிலில் இருந்தே கத்தினாள் அவள்.

"ஹான்.. பெட்ரோல் தீந்து போய்ரும்.. சும்மா அதையே எதிர்பார்க்க கூடாது.. பக்கம் தா.. சோ பாஸ்லயே போய்ரலாம்.. கரெக்ட்டா வந்துரு"

"ம்ம் ம்ம்.. ", வேறு எதுவும் கூறாமல் புறப்பட்டுவிட்டாள் சுபித்ரா.  


சந்திப்பின் காலம் வரும் 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro