Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

சந்திப்பு - 13

சுபித்ரா, இன்றைய நாளில் அவள் கொண்டாடிய கொண்டாட்டத்தை தன் தம்பியுடன் பகிர்ந்து மேலும் மேலும் உற்சாகமாகி கொண்டிருக்க... இங்கே அவள் அனுப்பிய படங்களை பார்த்ததில் மனோஜின் பசி தான் கூடியது.

பாவம் அவனும் எவ்வளவு தான் பசி தாங்குவான்?... காலையில் சுபித்ராவை வழியனுப்பிய பின் வீட்டிற்கு வந்து தானாகவே உணவை எடுத்து சாப்பிட்டது தான்... மதியமும் அதுவே... இப்போது இரவு உணவிற்காவது அழைப்பு வரும் வரும் என பத்து மணி வரை காத்திருந்து விட்டான்.

அவர்கள் வீட்டில் அதுவே இரவு உணவிற்கான நேரம் என்பதால் முதலில் அவனுக்கும் பெரிதாக எதுவும் தோன்றவில்லை.. ஆனால் மணி பத்தை தாண்டியும் இன்னுமும் தன் அன்னை தன்னை இரவு உணவிற்கு அழைக்காததால் தன் மேல் உள்ள கோபம் இன்னும் குறையவில்லையோ என்னும் சந்தேகம் அவனுள் எழுந்துவிட... கதவருகில் வருவதும் போவதுமாக அன்னையை எதிர் நோக்கி கொண்டிருக்கிறான்.

"யப்பா.. இன்னைக்கி நம்மளுக்கு சோறு குடுப்பாங்களா மாட்டாங்களா?...", என புலம்பலுடன் தரையை அளந்து கொண்டு அவனது அறைக்குள்ளேயே உலாத்தி கொண்டிருந்தான் மனோஜ்.

"ம்ம்ஹும்... இனியும் நம்மள கூப்புடுவாங்கன்னு தோனால... சோ நாமளே போயிடுவோம்....", என தீவிர முடிவெடுத்தவன், மெல்லமாக சென்று கதவை திறந்து, பால் பாத்திரத்தை திருட்டு பூனை எட்டி பார்ப்பதை போல் கதவு வழியே டைனிங் டேபிளை எட்டி பார்க்க... கதவு திறக்கும் சத்தம் கேட்குமளவு தொலைவிலேயே டைனிங் டேபிள் இருப்பதால் அதில் அமர்ந்து தோசை சாப்பிட்டு கொண்டிருந்த கலைவானர் நொடியில் தன் பார்வையை மனோவின் அறை புறமாக திரும்பினார்.

தந்தையின் கூரிய பார்வை தன்னை குறி வைத்ததில் படக்கென அறைக்குள் பின்னோக்கி சென்று கதவடைத்தவன், "ஆத்தி... நெருப்பு பார்வையாவ்ல இருக்கு... இப்ப மட்டும் வெளிய போனோம்... கன்ஃபார்ம் இன்னொரு கன்னமும் செவக்கும்... அப்பா ரூமுக்கு போகவுமே போய் சாப்புட்டுகலாம்..", என தன் பசிக்கு இறுதி தீர்ப்பு வழங்கியவன் காதை கதவில் வைத்து கொண்டு அங்கேயே அமர்ந்து விட்டான்.

பத்து நிமிடம் கழித்து தந்தையின் காலடி ஓசை அவரின் அறைக்குள் நுழைவதை செவிமடுத்தவன் வேகமாக கதவை திறக்க... விளக்கொளி இல்லாமால் இருண்டு கிடந்த டைனிங் ஹாலை கண்டு அதிர்ந்தான்.

"ஐயையோ... அப்பா மட்டும் தா போவாங்கன்னு நெனச்சேன்... அம்மாவும் போய்ட்டாங்களா??", என்ன செய்யவென புரியாமல் முகம் வாடியவன், "ஹ்ம்ம்.. மதியம் மாதிரியே நாமளே சாப்ட வேண்டியது தா...", என ஹால் லைட்டை ஆன் செய்து அன்னை தந்தையை தொந்தரவு செய்யாமல், மொபைல் ஃப்ளாஷ் லைட்டுடன் சென்று டைனிங் டேபிளை பார்க்க... எல்லாம் வெறும் பாத்திரங்களாகவே இருந்தது.

"என்னாதிது... எல்லாமே காலியா இருக்கு... அப்போ இன்னைக்கி நா பட்டினியா...", என மேலும் முகம் வாடியவன் கிச்சனுக்கு சென்று எதாவது இருக்கிறதா என ஆராய.. பாத்திரங்கள் முதற்கொண்டு கழுவி, சுத்தமாக துடைக்க பட்டிருந்தது அடுப்பங்கரையில்.

இப்போது பசியையும் தாண்டி வேறு ஏதோ ஒரு உணர்வால் அவனுக்கு அழ வேண்டும் போல் தான் இருந்தது... இருந்தும் அக்காவிற்காக அனைத்தையும் தாங்கி கொண்டவன் ஏதாவது கைக்கு கிடைப்பதை வைத்து நாமே சமைக்கலாம் என கிச்சனை உருட்ட தொடங்கி விட்டான்.

★★★

"ஏங்க அவன் பாவம்ங்க.. பசி தாங்க மாட்டான்...", தன் மகனுக்காக கணவனிடம் பரிந்து பேசினாள் ரஞ்சனி.

"ம்ச்... நீ சும்மா இரு ரஞ்சனி.. நம்ம புள்ளைங்க ரெண்டுக்கும் அவங்கள அவங்களே பாத்துக்குற அளவுக்கு தைரியம் வந்துடுச்சு... இனி நம்ம அவசியம் அவங்களுக்கு தேவ கெடையாது... அமைதியா தூங்கு...", என்று விட்டு மெத்தையில் சாய்ந்து கொண்டார் அவர்.

என்ன செய்ய... பிள்ளைகள் செய்த காரியமும் அப்படி தானே இருக்கிறது... இருந்தும் மகனை நினைத்து வருந்தி கொண்டிருந்தவளுக்கு ஏதோ சமைக்கும் மணம் வர.., "அவனாவாச்சும் எதையாவது செஞ்சுக்குறானே...", என சற்று நிம்மதி அடைந்தார்.

"ஏங்க... உங்க ஃப்ரெண்ட் கிட்ட பேசுறேன்னு சொன்னீங்களே?.."

"ம்ம்... எந்த பிரச்சனையும் இல்ல.. மாப்பிள்ள கோயம்பத்தூர்ல தா இருக்காரு போல.. அவரு கூட தா இருக்கா... எதுக்கும் கொஞ்சம் பாத்துக்க சொல்லிருக்கேன்"

"மாப்பிள அங்க இருக்காறா?... அவரு வீட்டுக்கு தகவல் சொன்னீங்களா??"

"பெரிய சம்பந்திக்கு விஷயத்த சொன்னேன்.. அவரு ஏற்கனவே தெரியும்.. நீங்க அதெல்லாம் கண்டுக்காதீங்கன்னு சொல்லிட்டாரு... இப்போ நீயும் எதையும் யோசிக்காம தூங்கு.."

"... சரிங்க...", என்றவர் அமைதியாக படுத்து விட்டார்.

இங்கே கிச்சனில், கையில் கிடைத்த நான்கு முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி... வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, சிறிது கசக்கி போட்ட சீரகம், உப்பு, லேசான மிளகு தூள் என அனைத்தையும் கலந்து அடித்து கலக்கியவன்... தோசை அளவில் மூன்று பெரிய ஆம்ளேட்டை ஊற்றி உண்டான் மனோஜ். அவன் இருந்த பசியில் ஒவ்வொரு வாயும் அமிர்தமாய் உள்ளிறங்கியது.

★★★

ஹோட்டலில் இருந்து கால் மணி நேரத்திலேயே வீட்டிற்கு வந்திருந்தார்கள் விசோழனும் சுபித்ராவும், இடைப்பட்ட சிறிது நேரத்தை மௌனமாகவே கடந்ததால் சுபித்ரா தூக்கம் சொக்கும் விழிகளுடன் தான் அமர்ந்திருந்தாள்.

வீடு வந்ததும் விசோழன் தன் வண்டியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு யாருக்கோ அழைப்பு விடுக்க... வண்டியில் இருந்து கீழிறங்கிய சுபித்ரா தன்னுடைய பைகளை வெளியில் எடுத்து கொண்டிருந்தாள்.

"அக்கா.. நாங்க வந்துட்டோம்.. சாவி கொண்டு வாங்கக்கா..."

"...... ......."

"சரி க்கா... வீட்டுகிட்ட வெயிட் பண்ணுறோம்...", என்றுவிட்டு அழைப்பை துண்டித்தவன் சுவித்ராவின் உடைமைகளை எடுத்து கொண்டு அவளுடன் சாலைக்கு எதிர் திசையில் இருக்கும் பிங்க் வீட்டின் இரண்டாம் தளத்திற்கு செல்லும் படியில் ஏறினான்.

பூட்டியிருந்த அந்த வீட்டன் முன் சிறு வராண்டா போல் இடம் இருக்க.. அங்கு நின்றிருந்தார்கள் இருவரும்.

"சோழா... இங்க தா நாம தங்க போறோமா??"

"எதே... நாமலா??... நீ மட்டும் தா இங்க தங்குவ... ரெண்டு பேரும் சேந்து தாங்குனா ஊரு என்ன பேசும்..."

"ம்ச்... அது என்னவோ பேசிட்டு போகுது... அதுக்காக என்ன தனியா விடுவியா நீ??..", முகத்தை சுருக்கி கொண்டு வினவியவளை கண்டு சிரித்தவன், "புரிஞ்சுக்கோ சுபி மா... எல்லாரும் தப்பு தப்பா பேசுவாங்க... என்னால அதையெல்லாம் கேட்டுட்டு இருக்க முடியாது..."

"போ டா... பேசாத... நா மட்டும் எப்டி புது எடத்துல தனியா இருப்பேன்... எல்லாம் அந்த மனோ பயல சொல்லணும்..."

"பப்பா.. கோச்சுக்காத டா... நா உன்ன விட்டு தூரமாலாம் போகல.. ஜஸ்ட் எதுத்த வீட்டுல தா இருப்பேன்... ஜன்னல் வழியா ஒரு சவுன்ட் குடு.. ஓடனே வந்துறுவேன்..."

"நெஜமா??..", என விழி விரித்தவள் எக்கி கொண்டு அவன் வீட்டை தேட..., "ஏய்.. இங்க இருந்து பாத்தாலாம் தெரியாது... நாம கார் நிப்பாட்டுனோம்ல... அதுல ரெண்டாவது மாடி தா... நீ உள்ள போய் ஜன்னல்ல பாரு...", என விசோழன் கூறி கொண்டிருகையிலேயே வீட்டின் ஓனர் மாடியேரி நடந்து வந்தார்.

"இந்த பொண்ணுக்கு தா வீடா...?", என விசோழனை நோக்கி கேட்டபடி அவர் மாடியேரி வர..., "ஆமா க்கா..", என அவன் பதிலளித்த பின் பார்வையை சுபித்ராவை நோக்கி திருப்பினார் விமலா.

"ஏம்மா... இந்த வெட்டி பயல நம்பியா மா வூட்ட வுட்டு ஓடியாந்த...?", என இழுவையாக அவர் கேட்க..., "ஏன் ம்மா அப்டி கேக்குறீங்க??... நா என் தம்பிய நம்பி வந்தேன்...", என எதுவும் புரியாமல் பதிலளித்தாள் சுபித்ரா.

"ஓ... இந்த புள்ள உன் தம்பியா மா... சரி சரி...", என சுபித்ராவிற்கு தலையசைத்த விமலா, கதவினுள் சாவியை நுழைக்க... "அக்காஆஆஆஆ", என்ற விசோழனின் சூடான குரலுடன் சுபித்ரவின் சிரிப்பொலி கேட்டு பின்னால் திரும்பினார் அவர்.

"என்ன டா.. என்னாத்துக்கு இப்டி கத்துற..."

"அவ நா கட்டிக்க போறவ க்கா... அவ நம்பி வந்தேன்னு சொல்லுறது அவளோட தம்பிய பத்தி... ஊருல இருக்குற அவளோட தம்பிய பத்தி.. புரிஞ்சுதா??....", என கடுப்பில் கத்தி கொண்டிருக்க., மறுபுறம் சுபித்ராவோ வாயை மூடி சிரித்து கொண்டிருந்தாள்.

"என்னடா சொல்லுற... அப்போ தம்பியேவா ஓடி போக்கான்னு வூட்ட வுட்டு அனுப்பி வச்சான்??..", என தாடையில் கை வைத்து கதை கேட்க தயாராக... அதை சுதாரித்த விசோழன், "அட அது ஒரு பெரிய கத க்கா... அத சும்மா சொன்னாலாம் உங்களுக்கு புரியாது... விளக்கமா சொல்லுற அளவுக்கு இப்போ நேரமும் இல்ல... மொத இவள உள்ள கூட்டிகிட்டு போங்க.. ரொம்ப தூரம் பஸ்ல வந்து டயர்டா இருக்கா..", என அவரை திசை திருப்பினான்.

"அதுவும் சரி தா... நா நாளைக்கு கேட்டுக்குறேன் உன் கதைய... நீ உள்ள வாம்மா.. இந்த பய காலையே வீட்ட சுத்தம் பண்ணி கட்டில் மெத்தையெல்லாம் வாங்கி போடவும் எவளையும் கல்யாணம் கட்டிதான் கூட்டியார போரானாக்கும்ன்னு நெனச்சுட்டேன்...", என சுபித்ராவிடம் பேசி கொண்டே வீட்டினுள் சென்று லைட்டை ஆன் செய்து கொண்டிருக்க...

இங்கு வெளியே... "டேக் கேர் சுபி மா... காலைல வரேன்... குட் நைட்..", என கையசைத்து கொண்டே நகர போனவனை இரண்டடியில் நெருங்கி சென்று அணைத்து கொண்டவள், "தாங்ஸ் சோழா... தாங்ஸ் ஃபார் எவ்ரி-திங்", என அவனிடம் இருந்து பிரிந்து அவனிரு தோளிலும் தன் கரத்தால் அழுத்தம் கொடுத்து அவன் உயரத்திற்கு எம்பி அவன் வலது கன்னத்தில் மெல்லிய முத்தமிட்டு மீண்டும் கதவருகில் வந்திருந்தாள்... ஓரிரு நோடியிலேயே.

அவளை நோக்கி மலர்ந்த புன்னகை சிந்தியவன் கையசைத்து விட்டு அவளை பார்த்து கொண்டே படியின் வழி நோக்கி சென்றவன் கீழே இறங்கி செல்ல..., வீட்டினுள் இருந்து வெளியே வந்த விமலா, "பாத்து சூதானமா இரு மா... நாங்களாம் அக்கம்பக்கத்துல தா இருக்கோம்.. எதாச்சும்னா ஒடனே ஒரு சத்தம் போடு...", என்றுவிட்டு கிளம்பி விட்டார்.. அவர்கள் இருவரும் சென்றதும் உள்ளே சென்று கதவடைத்து கொண்டாள் சுபித்ரா.

சந்திப்பின் காலம் வரும்

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro