சவால்!
பஞ்சத்திற்கான பேச்சே இல்லை என்பதுபோல் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சை பசேலென்ற புல்வெளி படர்ந்த ஒரு சமவெளி! அதன் வழியே, ஓடி-பிடித்து விளையாடிக்கொண்டே பயணம் மேற்கொண்டிருந்தது ஐவர் குழு கொண்ட அந்த நான்கு-கால் நட்பு வட்டாரம். இல்லை- அவர்களிள் எல்லாருமே நான்கு கால்களைக் கொண்டவர்கள் இல்லை.. மூவர் மட்டும் தான். மீதி இருவரில் ஒருவர் வானில் பறந்தபடியும் மற்றொருவர் புல்லின் நடுவே ஊர்ந்தபடியும் குறிபிட்ட ஒரு நபரைத் துரத்திக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள், அந்தப் புல் தரையில் அழுத்தம் கொடுக்கக் கொடுக்க அங்கு அடர்ந்து வளர்ந்திருக்கும் புற்கள் எல்லாம் கிளுகிளுவெனக் குழுங்கிச் சிரிக்கக் கிளம்பிட, "என்னை உங்களால புடிக்க முடியாதே.. முடிஞ்சா புடிங்க பாக்கலாம்", புற்களின் சிரிப்பொலிக்கு மத்தியில், நிறைந்த கலகலப்புடன் ஒலித்தது அவளின் நில்லாத சிரிப்பொலி. கிளிஞ்சல் பொல நெற்றியில் முளைத்திருக்கும் கொம்பினுள்ளே பல வண்ணங்கள் ஒன்று சேர்ந்து சுழற்காற்றைப்போல் சுற்றிக்கொண்டே இருக்க.. நீண்டு வளர்ந்திருக்கும் தன் வெண்ணிற ரெக்கைகளை மடக்கிவைத்த நிலையிலேயே தரையில் துள்ளி ஓடிய வெள்ளை குதிரையின் கேலிச் சவாலை ஏற்றுக்கொண்டது போல், அந்திநேர கீழ்வானத்தின் நிறத்தால் செய்த வைரம் போல் ஜொலிக்கும் தன் பின்னங்கால்கள் இரண்டையும் புல்லின் மேல் வேகமாக அழுத்தித் தன் தோழியைப் பிடிக்கத் துள்ளிக்கொண்டு ஓடினாள், மினுமினு உரோமங்களைக் கொண்ட அணில், இக்ரா.
"வியூனி, இதெல்லாம் சரி இல்ல.. ஒழுங்கா நில்லு", வெள்ளை குதிரையை நோக்கிக் கத்தியபடியே இக்ரா அவளைத் துரத்திக்கொண்டு ஓட, "முடிஞ்சா புடிங்க", தன்னைத் தரையின் வழியாகத் துரத்தும் நட்புகள் மூவரின் கையிலும் சிக்காமல், வேகத்தின் அடையாளமாக ஓடினாள் வெள்ளை குதிரையான வியூனி.
"இதுக்கு மேல என்னால முடில.. ஷாப்பா.. வியூனி.. நில்லு..", குட்டி பாண்டா கரடி போல் இருந்த சந்தன நிற ஆந்தை, எதற்கு இருக்கிறதென்றே தெரியாத விரலளவிலான தன் இரண்டு இறக்கைகளை மேலும் கீழுமாக அட்டிக்கொண்டே, தன் உருவத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத குட்டி கால்களின் உதவியுடன், மூச்சுவாங்கியபடியே அவர்களில் கடைசியாக ஓடிவந்துக் கொண்டிருந்தான்.
"இப்டிலாம் போனா அவள புடிக்க முடியாது, பிஜூ.. இப்போ பாரு என் வேகத்த", ஆந்தையோடு தரையில் ஊர்ந்துக் கொண்டிருந்த பச்சை பாம்பு, நிலப் பரப்பிலிருந்து இரண்டடிக்கு எம்பிப் பாய்ந்த நிலையிலேயே வியூனியை நோக்கிச் சர்ரென சீரியபடி சிறுத்தையின் ரூபத்தை எடுத்தான். இரண்டே நொடிதான் அவனுக்குத் தேவைபட்டது. வியூனி முதுகின்மேல் தாவி, அவளின் வேகத்திற்கு தடை விதித்தான், பவன்.
"ஹஹா!!.. வழக்கம்போல நான் தா உன்ன புடிச்சுருக்கேன்.. சொன்ன மாதிரியே பாறைய தாண்டிப்போய் பழம் பறிச்சுட்டு வந்துரு வியூனி," சிறுத்தை ரூபத்திலிருந்து ஒரு வெண்புறாவின் ரூபத்தை எடுத்தபடியே அவன் சிரிக்க, "பவன்! இது நியாயமே இல்ல.. உன்னோட சுயரூபத்துல இருந்தா உன்னால என்னை புடிக்க முடியாது.", தன் குரலைக் காதிலேயே வாங்காமல் மேலே பறந்து செல்பவனை நோக்கி வியூனி கத்தும்போதே, தரையில் விளையாடிக் கொண்டிருந்தத் தன் நண்பர்களை இளகிய பார்வையில் பார்த்துக்கொண்டே வானில் பறந்துக் கொண்டிருந்த வெள்ளை புறாவுடன் இணைந்து பறக்கத் தொடங்கியிருந்தான் பவன். அவ்வளவுதான்.. இதற்குமேல் அவன் கீழே வரமாட்டான் என்பது புரிந்துபோனதால் மற்ற மூவரும் தங்கள் விளையாட்டினைத் தொடர்ந்தார்கள்.
"ஹே! ஐரா, ஏன் அமைதியாவே வர்ற? ஏதாச்சும் பேசிட்டே வர வேண்டியது தானே?", தன்னோடு பறந்து வருபவளை நோக்கி அன்பான-அக்கறையான-மென்மையானக் குரலைக் கொடுத்தான், பவன். "நான், அமைதியின் அடையாளம், பவன்", சற்றும் மாறாத அதே இளகிய பார்வையுடனும் தேனைக் குழைத்தெடுத்தக் குரலிலும் பதில் கொடுத்தாள், வெண்புறா, ஐரா.
"ஹம்ம்.. எல்லாத்துக்கும் இப்டி ஒரு-வரி பதில் ஒன்னு வச்சுருக்க.."
"எல்லாம் உன்கிட்டருந்து கத்துக்குட்டது தான், பவன்."
"நான் இப்டிலாம் பேச மாட்டேன்."
"ஓஹ் அப்டியா? அப்போ வியூனிக்கு இப்போ பதில் சொல்லு பாக்கலாம்", அவள் பறந்தபடியே, சிறு சவாலுடன் பவனை பார்க்க, அவன் பார்வையோ கீழே விளையாடிக் கொண்டிருந்த வியூனியை யோசனையுடன் நோட்டமிட்டது.
"அம்ம்ம்.." வியூனி இறுதியாகக் கேட்டக் கேள்வியை இன்னும் ஒருமுறை மனதினுள் ஓட்டிப் பார்த்தவன், "நான் எடுக்குற ரூபம் தான் என் சுயரூபம்" வியூனிக்குக் கொடுத்திருக்க வேண்டிய பதிலை ஐராவிற்குக் கொடுக்கும்போதே அந்த ஒற்றை-வரி பதில் அவனைச் சிரிக்க வைத்தது. ஐராவும் அவனை நக்கலாகப் பார்த்துச் சிரித்தபடியே முன்னோக்கிப் பறந்தாள். அவளைப் பின்தொடர்ந்தான் பவன்.
நட்புகள் ஐவரும் ஆனந்தத்துடன் ஓடியாடி சிரித்துக்கொண்டே சென்றுக் கொண்டிருக்கும் இந்தக் காட்சியை, அவர்களின் கண்ணில் சிக்காத ஒரு மாயத்திரைக்குப் பின்னிருந்தபடி வன்மத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் மூவர்.
"பாத்தியா ரயாஸீ.. நாம இல்லாமலே எவ்ளோ சந்தோஷமா இருக்காங்க?", வியூனியை போன்றே ஒருவன், தனக்கு இடதுபுறம் இருக்கும் வெள்ளை மயிலிடம் குரோதக் குரலுடன் கூற, "ம்ம்... பாத்துட்டு தான் இருக்கேன் விஸாத்", அந்தக் குதிரையின் பார்வை பதிந்திருக்கும் நண்பர்களின் மீதே இருந்தது வெள்ளை மயில் ரயாஸீயின் பார்வையும். நீண்டு மெலிந்த உடல்வாகுடன் விஸாத்திற்கு வலதுபுறம் அமைதியாக அமர்ந்திருந்த வெள்ளை பூனையின் கண்களும் இப்போது அவர்களின் திசையில் நகர்ந்தது.
"இவளுக்கு எவ்ளோ சொன்னாலும் புரியவே மாட்டேங்குது.", பல்லை கடித்துக்கொண்டு பேசிய விஸாத்தின் கண்கள், ஐவர் குழுவிலிருந்து குறுகி வியூனியை மட்டும் சுட்டியது.
"விடு, நான் பாத்துக்குறேன் இவங்க எல்லாரையும்", வன்மம் நிறைந்த நக்கல் சிரிப்புடன் ஐவர்-குழுவை நோக்கிய வெள்ளை மயில், "இப்போ அங்க என்ன நடக்குதுன்னு மட்டும் பாரு", ஒரு அடி முன்னால் வந்து நிற்க, "என்ன வேணும்னாலும் செய்.. ஆனா என் தங்கச்சிக்கு மட்டும் எதுவும் ஆக கூடாது.", கட்டளையான எச்சரிக்கையுடன் ஒலித்தது விஸாத்தின் குரல்.
"புரியுது.. புரியுது", சத்தமாக பதில் கொடுத்த ரயாஸீ, "பேச மட்டும் மாட்டாங்கலாம்.. பாசம் மட்டும் அருவியா கொட்டும்..", வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டது விஸாத்தின் காதுகளுக்குத் தெளிவாகவே கேட்டுவிட்டது.
"என்ன சொன்ன?"
"அட ஒன்னும் இல்ல டா", அலுத்துக்கொண்ட ரயாஸீயின் கவனம், மந்திரத் திரைக்கு மறுபுறத்தில் ஆனந்தமாக ஓடி விளையாடிக் கொண்டிருக்கும் நட்புகளை நோக்கித் திரும்பியது. ஒவ்வொருவராக ஐவரையும் கவனித்த ரயாஸீயின் கவனத்தை, ஓட முடியாமல் ஓடியபடி மூச்சுவாங்கிக்கொண்டே கடைசியாக வந்துக் கொண்டிருந்த பிஜூ தான் அதிகம் ஈர்த்தான் போலும். அவனைக் கண்ட நொடியில் ரயாஸீயின் பார்வை விஷமத்துடன் அவனை நோக்கியது.
அடுத்து வெறும் மூன்றே நொடிகள் தான்.. கேலியும் கிண்டலுமாக விளையாடிக் கொண்டிருந்த நண்பர்களை நொடியில் மிரளச் செய்தது பிஜூவின் அலறல் குரல். ஐராவை சீண்டியபடி வானில் பறந்துக் கொண்டிருந்த பவனின் கவனம், கண்ணிமைக்கும் வேகத்தில் பிஜூவை நோக்கிட, "வா, பவன்", உறைந்த நிலையிலேயே பறந்தவனைத் தாண்டிப் பறந்த ஐராவின் குரலை, மறு யோசனை ஏதுமின்றி பின்பற்றினான், பவன்.
அடுத்த ஐந்தாவது நொடியில் பிஜூவை நெருங்கியிருந்தார்கள் மற்ற நால்வரும். தரையில் ஒருசாய்த்தபடி சுருண்டுக் கிடந்த பிஜூவின் பெரிய கண்கள் இரண்டும் இறுக்கமாக மூடியிருந்தது. தலைக்குள் முட்களை வைத்துக் குத்துவது போலான வலியால் அலறிக் கொண்டிருந்தான் அவன்.
இறுக்கத்துடன் மூடியிருந்த அவன் கண்களுக்குள், பற்றி எரியும் நெருப்பின் நடுவிலிருந்து மிருகங்கள் யாவும் கூட்டம் கூட்டமாகத் தப்ப முயற்சித்துக் கொண்டிருக்கும் காட்சி தெரிந்தது. அந்த இடத்தின் நடுவே தான் அவன் நிற்கிறான். சுற்றிலும், பாதி எரிந்த உடலுடன் கதறியபடியே ஓடிவரும் மிருகங்கள் யாவும் அவனிடம் தான் உதவியை வேண்டி நிற்கிறது. ஆனால், அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.
"பிஜூ என்னாச்சு உனக்கு?", இக்ராவின் பதட்டம் நிறைந்தக் குரல், வெகு தூரத்தில் ஒலிப்பதுபோல் கேட்டது அவன் காதில். ஆனால், கடினப்பட்டு மெல்லமாக கண்களை திறந்தவன் கண்களுக்கு எதிரே தான் நின்றிருந்தாள் அவள்.
"பிஜூ.. பிஜூ, என்னை பாரு.. என்னை மட்டும் கவனி பிஜூ", குரங்கின் உருவத்தை எடுத்திருந்த பவன் அவனைப் போட்டு குலுக்க,"... ... பவன்", நீண்ட மூச்சுகளுக்கு நடுவில் அவனை அழைத்தபடியே மெல்லத் தன் வலியிலிருந்து வெளிவர முயன்றவன் மீண்டும் ஒருமுறை சத்தமாக அலறினான்.
"வியூனி.. விஸாத்- அஹ்- அவன் இங்க தா இருக்கான்.", அவ்வளவு தான். அந்தப் பெயரைக் கேட்ட நொடியில் இதுவரை பதட்டத்தில் இருந்த வியூனியின் முகம் நெருப்பில்லாமலே எரியக் கிளம்பியது.
"அவங்க கண்டுபுடிச்சுட்டாங்க விஸாத்", வெள்ளை பூனை குரல், மிகுந்த அமைதியுடன் ஒலித்திட, "ஓஹ்!.. இவ்ளோ சீக்கிரமாவா? சரி, நா சொல்லும்போது மந்திரத்த ஒடச்சுறு ஜூபா. ராயாஸீ, நீ நிறுத்தாத", பூனையிடம் காட்டிய மென்மையான குரல், ரயாஸீயிடம் பேசும்பொழுது இல்லை விஸாத்திடம். மாறாக, கடுமையுடன் ஒலித்தது அக்குரல். "புரியுது, விஸாத்" தன் நண்பனின் அந்தக் கடுமை தனக்கானதில்லை என்பது ரயாஸீயின் பதிலில் விளங்கியது. அவன், தன் சொல்லை முடித்த நொடி நிகழ்ந்தது அடுத்த சம்பவம்.
"விஸாத்" வியூனியின் எதிரொலிக்கும் உருமலையடுத்துக் காற்றில் கரைந்து உடைந்தது, வெள்ளை உருவங்கள் மூவரையும் மறைத்துக் கொண்டிருந்த அந்த மாயத்திரை. சரியாக இவர்களுக்குப் பக்கவாட்டில், ஏழு அடியில் தான் நின்றிருந்தார்கள் அம்மூவரும்.
"என்ன காரியம் செஞ்சுட்டு இருக்க விஸாத்.. இவன இப்டி கஷ்ட படுத்துறது நமக்கு தான் ஆபத்துன்னு உனக்கு தெரியும் தானே?" எந்தத் தடுமாற்றமும் இல்லை வியூனியின் நேர்கொண்ட பார்வையில். தன் சகோதரனை எதிர்கொண்டிருந்த அவள் கண்களில் தெரிந்த தீவிரத்தால், தீப்பொறிகள் கிளம்பாதது தான் ஆச்சரியம். ஆனால், அவள் நெற்றியின் மீதிருந்த கொம்பிலிருந்த வண்ணங்கள் மறைந்து கார்மேகம் போல் சுழல் உருவாகி, அதனுள்லிருந்து வெளிபட்டது மின்னல் கீற்றுகள். அதைக் கண்டும் விசாத்திடம் ஒரு மாற்றமும் இல்லை, ஜூபாவிடம் காட்டிய அதே மென்மை தான் இருந்தது அவன் குரலில்.
"நமக்கு இல்ல வியூனி... உனக்கு. அத புரியவைக்க தான் இந்த முயற்சி."
"வார்த்தைய அடக்கிப் பேசு, விஸாத்.. அவன தொந்தரவு செய்யாத வரைக்கும் யாருக்கும் தீங்கில்ல" வியூனியின் கோபத்தை அவள் கொம்பின்மூலம் உணர்ந்த பவன், ஒரே இனத்தைச் சேர்ந்த இருவரின் நடுவில் நேருக்கு-நேர் மோதல் உருவாகிடக் கூடாதென அவள் முதுகில் தட்டிக்கொடுத்து அவளை சாந்தமாக்கிடும் முயற்சியில் இருக்கும்போதே, தன் நண்பர்களுக்கு முன் அரணாக பறந்தபடி விஸாத்தை எதிர்நோக்கினாள், ஐரா.
"தோ பாருடா.. வந்துட்டாங்க.." ஐராவை ஏளனமாகப் பார்த்தவன், நண்பர்களிடம் திரும்பி நக்கலாகச் சிரித்துவிட்டு மீண்டும் அவளை நோக்கித் திரும்பி, "ஒன்னுத்துக்கும் ஒதவாத ஒதவாக்கற" முழு வெறுப்புடன் ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தத்துடன் உச்சரித்த அடுத்த நொடி, தன் கொம்பில் சுறீரென்ற வலியை உணர்ந்து இரண்டடி பின் நகர்ந்தான். தன் பின்னங்கால்களை மீனின் வாலாக மாற்றி, விஸாத்தின் கொம்பினைத் தாக்கியிருந்த இக்ராவைத் தொடர்ந்துத, தன் இரு கைகளால் அவன் கொம்பினை பலமாக பற்றியபடியே பின்னுக்குள் தள்ளிக்கொண்டு முன்னேறினான், பவன்.
வியூனியும் ஐராவும், இன்னுமும் வலியில் சுருண்டுக் கிடக்கும் பிஜூவின் இரு புறத்திலும் நின்றுக்கொள்ள, அவனின் நிலைக்குக் காரணம் ரயாஸீதான் என்பதை நான்கு உணர்ந்த இக்ரா, அவன் கவனத்தை சிதறடிக்கும் நோக்கில் அவனைத் தாக்கிட ஆயத்தமாகிய அதே நொடி, உடலை சிலிர்த்துக்கொண்டு எழுந்த ஜூபா ஒரே தாவலாக இக்ராவின் மீது தாவினாள்.
கொம்பில் வலி தாங்காமல் அலறியபடி தன் தலையை முரட்டுத்தனமாக ஆட்டியும் பவனின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை விஸாத்தால். பவனின் கண்களிலும் ஒரு ஆழமான வெறி. தன் எதிரில் இருப்பவனை காயப்படுத்த கூடாதென மனதினுள் ஒரு குரல் கேட்டாலும், அவன் செயலுக்குத் தக்க பாடம் கற்பிக்கச் சொல்லி இன்னொரு குரலும் அவன் வெறியை கிளறிக்கொண்டிருந்தது.
மறுபுறம், இக்ராவின் ஜொலிக்கும் மீன்-வால், ஜூபாவின் பின்னங்கால்களுக்கு நடுவில் சிக்கிக்கொள்ள அவளின் மொத்த உடலும் ஜூபாவின் முன்னங்கால்களால் சிறை வைக்கபட்டது. தன் முழு பலத்தை உபயோகித்தும் இம்மியளவு நகர முடியவில்லை இக்ராவால். ரயாஸீயை தடுக்க ஆளில்லாமல் பிஜூவின் வலிகளும் கூடிக்கொண்டே போக.. ஒரு பலத்த சத்தம்.. அதைத்தொடர்ந்து ஒரு பிரகாச ஒளி.
"வாழ்க்கைய கத்துக்க வந்த முதல் நாளே சண்டையா?" பிரம்மாண்ட தகரத் தட்டில் உருட்டுக் கட்டையை வைத்து அடித்தது போலான ஒரு சத்தத்தைத் தொடர்ந்துக் கேட்டது, கராறான ஒரு குரல். கண்ணைக் கூசிடும் ஒளியால், வந்திருக்கும் நபர் யாரென்பதை நண்பர்கள் எவராலும் பார்க்க முடியவில்லை.
_தொடரும்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro