Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

67-ம் கலைக் குழு!

"போதும் ரஷீத். நீ நிறுத்திக்கோ" சற்றுமுன்பு இடியாக முழங்கியக் குரல், அரை நிமிடத்திற்குப் பின் சாந்தமாக ஒலித்ததை அடுத்து, நண்பர்களின் கண்களைக் கூசச் செய்த ஒளி மெல்லக் குறைந்தது. அவ்வொளி, பூனைக்குட்டி போல் இருந்த கருப்பு வரி-புலி ரஷீத்தின் வெள்ளை வரிகளில் இருந்துதான் வெளி வந்திருந்தது. 

இதில் ஆச்சரியம் எதுவும் இல்லையே! அந்த முழு லோகத்தையுமே வெளிச்சத்தில் வைத்திருப்பது இந்தக் குட்டிப் புலியின் இனத்தைச் சேர்ந்த மற்ற பெரிய புலிகள் தானே! 

அவர்கள் நிற்கும் அந்த இடத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்தால் தெளிவாகப் புரியும், அவ்விடத்தின் இயற்கை அமைப்பு. அண்ணாந்து வானைப் பார்த்தால், மொத்தமும் இருள்மயம். மின்னும் நட்சத்திரங்கள் சூழ.. பிரம்மாண்டத்தின் மறு உருவாகி நின்றது வான்வெளி. அப்படியே பார்வையை கீழ்நோக்கினால், அக்கம்பக்கத்தின் பச்சை மரங்கள், வண்ண மலர்கள், எவரேனும் நடந்தால் குலுங்கிச் சிரிக்கும் புற்கள் என் பகல் வெளிச்சத்தில் கண்களைப் பறித்தது நிலப்பரப்பு. அந்த வெளிச்சத்தின் மூலக்காரணமாக, அவர்கள் வாழும் உலகத்தின் சூரியன்களாக, ரஷீதின் இனமான கருப்பு வரி-புலி இனம் குறிப்பிட்ட இடைவெளியில் ஆங்காங்கே இருக்கும் பெரிய ஸ்தூபியின் மேலே நின்றுக் கொண்டிருந்தார்கள்.  

தன் உடலின் மூலமாக வெளியேற்றிய ஒளியைக் குறைத்துக்கொண்டப் பிறகு, தொலைந்துபோன பூனைக்குட்டி போல் தன் முன் இருப்பவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த புதிய குட்டி-புலியின் செயலில் எந்த ஆச்சரியமும் இல்லை என்றாலும் சற்றுமுன்பு வரையில் மும்முரமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்கள், இப்போது, நின்ற இடத்தில் நின்றபடியே குரல் கொடுத்த அந்த நபரை நிமிர்ந்து நோக்கிய அடுத்த நொடி... ரயாஸீயின் வசியம் அவனுக்கே நினைவில் இல்லை. பிஜூவின் வலி அவனுக்கு நினைவிலில்லை. பவனின் மூளை சொன்ன சொற்கள், இக்ராவின் கோபம், விஸாத்தின் போராட்டம் என எதுவும் யாரின் நினைவிலும் இல்லை. அவர்கள் அனைவரின் மூளையிலும் ஓடியது ஒன்றே ஒன்றுதான். வயதின் அடிப்படையில் வலமிருந்து இடமாக வரிசையாக நிற்க வேண்டும். 

ரஷீதின் ஒளி குறைந்து வெறும் இரண்டு நொடி தான் நகர்ந்தது, மூன்றாவது நொடி, சரசரவென ஒருவரையொருவர் இடித்துப்பிடித்து முட்டி மோதிக்கொண்டு எப்படியோ ஒரு வரிசையை உருவாக்கி விட்டார்கள். வரிசையாக நின்றிருந்த எண்வருக்கும் முன்பாக, முதிர்ந்த தோற்றத்தைக் கொண்ட தங்கநிற உரோமங்களுடைய  ஐந்தடி குரங்கின் தோற்றத்தில், இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், பவன் இப்போது எடுத்திருக்கும் அதே போலான தோற்றத்தில், கையில் ஆறடி கைத்தடியுடன் நின்றிருந்தார், அவர்களின் முதன்மை மற்றும் தலைமை ஆசான், ஆகிரன்.

உறுதியான பார்வையுடன், தன் முன் இருக்கும் வரிசையை பார்த்துக்கொண்டே அவர் தன் தடியை முன்னுக்குக் கொண்டுவந்து இரு கைகளாலும் பிடித்த நிலையில், சண்டையிட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் அனைவரையும் ஒரு பார்வை தீண்டி வர.. அவர்கள் எட்டு பேரும் ஒரே போல் தலையைக் கீழே கவிழ்த்தி நின்றார்கள். 

"கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு பின்பாக தொங்குகிறது இந்தக் கலைக்கூடம். இதில்-"

"மூவாயிரத்து முன்னூற்று பதினேழு ஆண்டுகள், ஆசானே!" ஆகிரனின் வார்த்தையை முழுதாக முடிக்கவிடாமல், முந்திரிக்கொட்டை போல் முந்திய விஸாத், மிக ஆர்வமாக அவரின் சொல்லைத் திருத்திச் சொல்ல.. அதற்கு அவர் பார்த்த சாதாரண பார்வையே அவனை மிரளச் செய்தது. பட்டென மீண்டும் தலையை கவிழ்த்திக் கொண்டான். அவனைக் கண்டு ரயாஸீ மற்றும் ஜூபா மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டார்கள் என்றால், வாயை மூடிச் சிரித்தார்கள் மற்றவர்கள். 

"கிட்டதட்ட என்னும் வார்த்தையை நான் உபயோகித்ததாக எனக்கு ஒரு நினைவு, விஸாத் அவர்களே. உங்களுக்கு எப்படி?" வயதிற்குத் தொடர்பில்லாத அதே உறுதியான கூரிய பார்வை, ஆழம் நிறைந்த மெதுவான சொற்கள், நிற்கும் தோரணை, அவருக்குக் கிடைக்கும் மரியாதை என எல்லாமே அவரைத் தலைச்சிறந்த ஆசானாகக் காட்டியது.   

"மன்னிச்சுருங்க ஆசானே. கவனிக்கத் தவறீட்டேன்" முதல் பதிலிலேயே மொக்கை வாங்கிய அவமானத்தில் அவன் இன்னும் இன்னும் தலையை கவிழ்த்திக்கொண்டே போக, "ஆதலால்...." விஸாத்தின் மீதிருந்த மற்ற அனைவரின் கவனத்தையும், ஒரேயொரு உரத்தக் குரலால் மீண்டும் அவரின் புறமாகத் திருப்பியதுடன் தன் சொல்லைத் தொடர்ந்தார், ஆகிரன். "பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கவிருக்கும் இந்தக் கலைக்கூடத்தை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் எதிர்காலத்தில், பிறரைக் காக்கத் தவறினாலும் உங்களை நீங்களே காத்துக்கொள்ள உதவிடும்." 

தரையை பார்த்த நிலையிலேயே, ஆசானின் சொல்லை ஆமோதிப்பதாக சிலரின் தலை லேசாக ஆட.. அதை கவனித்துக்கொண்டே ரஷீதை நோக்கிய ஆகிரன், "இன்னும் சில காலம் நீ இவர்களுடன் தான் வாழ வேண்டும்," மென்மையான குரலில் கூறினார். அவனுக்கு இன்னும் எவரின் முகமும் பழக்கப்படவில்லை போலும்.. தன் ஆசானின் சொல்லைத் தொடர்ந்து அவன் பார்வையை, முதலாவதாக நிற்கும் பவன் தொடங்கி கடைசியாக நிற்கும் ஜூபா வரையில் இப்படியும் அப்படியுமாகத் திருப்பிக்கொண்டே இருந்தான், அந்தக் குட்டி புலி. அவனின் அந்தச் செய்கை, பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது. அவனின் உருண்டை கண்களும், உடலில் இருக்கும் வெள்ளை வரிகளை விட சற்றே அதிகமாக அவன் நெற்றியில் மின்னும் நான்கு-முனை நட்சத்திரக் குறியும் அவனை விடாமல் ரசிக்கத் தூண்டியது. 

"ஒன்றினைந்த ஐரா லோகத்தின் அறுபத்தி ஏழாவது கலைக் குழுவின் அங்கமான உங்கள் அனைவரையும் இந்தக் கலைக் கூடத்தின் முதல் பயிற்சிக்கு வரவேற்கிறேன்!" புலி குட்டியின் அழகை ரசித்துக் கொண்டிருந்தவர்களின் கவனத்தை சிறு செருமலுடன் ஈத்தவர், பின்பக்கமாகத் திரும்பி நின்றுத் தன் தடியை இருமுறை தரையில் தட்ட.. அவர் என்னவோ லேசாகத்தான் தட்டினார், ஆனால் அதுவோ, ஏதோ பிரம்மாண்ட முரசில் மூங்கிலைக் கொண்டு ஓங்கி அடித்தது போலான சத்தத்துடன் அவ்விடத்தை அதிரச் செய்தது. 

"என்னைத் தொடர்ந்து வாருங்கள்" எனச் சொல்லிவிட்டு முன்னே நடந்த ஆகிரனைத் தொடர்ந்து ரஷீத் நடக்க.. அவர்களைத் தொடர்ந்து ஜூபா, பிஜூ, ஐரா, இக்ரா, ரயாஸீ, வியூனி, விஸாத், பவன் என வயதில் சிறியவர்கள் தொடங்கி வரிசையாக நடந்தார்கள் அந்த எண்வர் குழு.

"இன்னொரு மொற ஐராவ பாத்து ஒதவாக்கறன்னு சொன்ன... உன் கொம்பு உன் தலைல இருக்காது" கடைசியாக வந்துக்கொண்டிருந்த பவன், தனக்கு முன்னால் நடந்துக் கொண்டிருந்த விஸாத்திற்குக் கொலை-மிரட்டல் விடுக்க... ஒரு பக்கமாகத் தலையைத் திருப்பிய விஸாத், பவனை முறைத்துக் கொண்டிருக்கிறான் என்பது அவ்விருவருக்கும் முன்னால் நடந்துக் கொண்டிருந்த வியூனி மற்றும் ரயாஸீ வரையில் புரிந்தது.

"உன் கொம்பு இல்லைனா நம்ம இனத்துல உன் மரியாத என்னவாகும்னு உனக்கே தெரியும் தானே விஸாத்?" அவன் சகோதரியே அவனைக் கேலியாக வாரிவிட, அதைக்கேட்டு நக்கலாகச் சிரித்தவன், "அவ மட்டும் இல்ல... நீங்க எல்லாருமே ஒதவாக்கர கூட்டம் தான்" தங்கைக்குச் சொல்லவேண்டிய பதிலை பவனிடம் கூறினான். "என்னைக்காச்சும்  உன்னோட உண்மையான ரூபத்த வெளிய சொல்லிருக்கியா பவன்?" தனக்கு முன்னும் பின்னும் இருப்பவர்களின் சொல்லுக்கு ஒரே அடியாக பதிலடி கொடுத்த விஸாத், நக்கல் பார்வையுடன் முழுதாக பவனை நோக்கித் திரும்பி, "நீ சொல்லமாட்ட, பவன். ஏன்னா... நீயும் அவள மாதிரியே பலவீனமான ஒதவாக்கர தான்" வார்த்தையை தேள்-கொடுக்காக மாற்றிக் கொட்டியவனின் சொல்லைக் கேட்டு பவனின் கோபம் மெல்லமெல்ல தலைக்கேறத் தொடங்கியிருக்க, "விஸாத்... இன்னும் ஒரு வார்த்த பேசுன... அப்பறம் நடக்குறதே வேற" பல்லைக் கடித்த நிலையில் அடிக்குரலில் உறுமினான், பவன். 

"என்ன? கோபம் வருதா?"

" நீ அமைதியா இரு, பவன்.. இவன் இப்டி தான்.. எதையும் புரிஞ்சுக்காம கண்டபடி பேசுவான்" பின்னால் திரும்பாமலே அவர்களுக்கு முன்னிருந்து கிசுகிசுத்தாள், வியூனி. அவள் சொல்லைக் கேட்டதால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முயற்சித்தான், பவன்.

"நீயும் ஒருநாள் என்னை புரிஞ்சுப்ப, வியூனி."

"உன்னை புரிஞ்சிக்கிட்டதால தான் நான் இப்டி சொல்றேன், விஸாத்" இம்முறை பல்லைக் கடிப்பது வியூனியின் முறை ஆயிற்று. 

"இப்போ மூணு பேரும் அமைதியா நடக்கப் போறீங்களா இல்லையா? வந்த மொத நாளே திட்டு வாங்கியாச்சு. மறுபடியும்  வாங்கணுமா உங்களுக்கு?" தனக்குப் பின்னால், கிசுகிசுக்கும் குரலில் மாற்றி மாற்றி சண்டையிட்டுக்கொண்டு வந்த மூவரையும் ரயாஸீயின் சொல் அடைய, இறுகிய முகத்துடன் நடந்துக் கொண்டிருந்த  மூவரும், எதற்கு வம்பு? என அத்துடன் அமைதியாகி விட்டார்கள்.  

"இது தான் நம் கலைக் கூடம்"! சில நிமிடங்களுக்குப் பின் நிறைவுக்கு வந்த அவர்களின் நடை பயணத்தின் முடிவாக ஒலித்தது, ஆகிரனின் குரல். அவரின் சொல்லைத் தொடர்ந்து அனைவரின் பார்வையும்  தன் சுற்றுச் சூழலை ஆராயத் தொடங்கியது.

காட்டின் மையத்தில் கட்டமைக்கப் பட்டிருக்கும் ஒரு செயற்கை மைதானம் அது. சுற்றிலும் இருக்கும் பெரிய பெரிய மரங்களைத்தான் தன் இயற்கை அரணாகக் கொண்டிருந்தது. அந்த மைதானத்தின் நட்ட நடுவே ஒரு நீண்ட மர ஸ்தூபி, படிகட்டுகளுடன் உயர்ந்து நிற்க... அதன் உச்சத்தில், ஒளிரும் கருப்பு வரி-புலி இனத்தைச் சேர்ந்த ஒருவர் நின்றுக் கொண்டிருந்தார், அந்த மைதானத்தின் ஒளிவிளக்காக. மேலும், அங்கு இருப்பவர்களுக்கும் இப்போது புதிதாக வந்திருப்பவர்கள் தங்குவதற்காகவும் என சில குடில்கள், ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப கட்டமைக்கப் பட்டிருந்தது.  

வரிசையில் வந்துக் கொண்டிருந்தவர்கள், கலைக் கூடத்தினுள் நுழைந்த அடுத்த கணமே ஆளுக்கு ஒரு திசையென நகர்ந்து அந்த மைதானத்தின் மூலை முடுக்குகளை எல்லாம் கண்களால் ஆராய்ந்துக் கொண்டிருக்க, "இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு இந்த இடம் தான் உங்கள் வீடு. உங்களுடன் இருப்பவர்கள் தான் உங்களின் குடும்பம். உங்களின் பாடங்களைச் சிறந்த முறையில் கற்றுக் கொண்டால், உங்களில் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் நல்ல முறையில் புரிந்துக்கொள்ள உதவியாக இருக்கும். இப்போது சென்று உங்களுக்கான இடங்களில் ஓய்வு கொள்ளுங்கள். நாளைமுதல் உங்களின் ஆசான்கள் உங்களுக்கான பஞ்சலோகக் கலைகளைக் கற்றுத்தரத் தொடங்கிடுவார்கள். அனைத்தையும் கற்றுக்கொண்டு, உங்களில் ஒவ்வொருவரும், எதிர்காலத்தில் வரவிருக்கும் பஞ்சலோக இணைவுக் கட்டப் போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டும்." ஆகிரனின் குரல், சிதறியிருந்த அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்று சேர்த்தது. 

"நிச்சயமா, ஆசானே!" அனைவரின் குரலும் ஒருமித்து ஒலித்தடங்கிய நொடி, "ஆனா, ஆசானே! பத்து நபர்கள் சேந்தது தான் ஒரு கலைக் குழு. இங்க இந்தக் குட்டி ரஷீதோட சேத்து ஒன்பது பேர் தானே இருக்கோம்?" விஸாத்தின் கேள்வி, மற்ற அனைவரையுமே ஒன்று-இரண்டு எண்ண வைத்துவிட்டது இப்போது. 

"உன் கவனம் கூர்மையாகத் தான் இருக்கிறது, விஸாத்" ஆகிரனின் இதழோரம் கர்வப் புன்னகை ஒன்று பூத்திருக்க, "உனக்கான பதில் கூடிய விரைவிலேயே கிடைத்திடும். நாளைய முதல் பயிற்சிக்கு முன்பாகவே உங்களில் ஒன்பதாவது நபரை நீங்கள் சந்திப்பீர்கள்" என்றுவிட்டு அவர் தனக்கான இடத்திற்குச் சென்று விட, அவர் சொல்லியதை வைத்து மற்றவர்கள் போட்டக் கணக்கின்படி பத்தாவது நபரான ரஷீத், அங்கிருந்த எட்டு பேரையும் குறுகுறுவெனப் பார்த்துக்கொண்டே அவர்களுக்கு முன்பாக நின்றிருந்தான்.  


_ தொடரும்..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro