விஷ்ணு, அந்த நொடியிலிருந்து ஈர்ப்பின் வினையாக, அவளை பார்க்கும்போதெல்லாம் கண்கள் கொட்டாமல் பார்ப்பது, அவனது வழக்கமாகி போனது.
விஷ்ணு ஸ்போர்ட்ஸில் பாஸ்கெட் பால் டீமில் உள்ளதால் தினமும் காலை, மாலை இருவேளையிலும் பள்ளி மைதானத்தில் பயிற்சி எடுப்பான்.
ஆதிகா, வகுப்பு முடிந்து பள்ளியிலேயே டியூஷன் போவதால், மைதானத்திற்கு எதிரில் அமைந்திருக்கும் மரத்தடியில் தான் அவளும் இருப்பாள். அவள் அங்கு இருக்கும்வரை விஷ்ணுவும் மைதானத்தில் இருப்பான். ஆனால், அவனது சக நண்பர்கள் அவ்வளவு நேரம் இருக்கமாட்டார்கள். அவள் இருக்கும்போது அவனது வேலையான, அவளை பார்க்கும் வேலையை பார்ப்பான்.
ஒரு நாள், ஆதிகாவும் அவளது தோழியும் டியூஷன் சீக்கிரமாக முடிந்த காரணத்தால், மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் வேளையில், விஷ்ணு மைதானத்திலிருந்து தன்னை பார்ப்பதாக, தோழியிடம் இருந்து செய்தி வந்தது. இதை கேட்ட ஆதிகாவிடம் அமைதியே பதிலாக வந்தது.
அப்போது, அங்கு ஆள்நடமாட்டம் இல்லாமல் இருந்தது. சற்று நேரம் கழித்து, ஆதிகா விஷ்ணு மீது பார்வை வீச, அவனோ, அவ்வேளையில் மயங்கி சரிந்தான். அதை கண்ட ஆதிகா, விரைந்து ஓடினாள். அங்கு யாரும் இல்லாததால், இவளே விஷ்ணுவை மடியில் ஏந்தி தண்ணீர் தெளித்து, அவனை மயக்க நிலையிலிருந்து மீட்டுவிட்டாள். மயக்கம் தெளிந்த பிறகு , வெகு அருகில் அவளின் முகம் இருப்பதை கண்டு திக் பிரம்மை பிடித்தாற்போல ஆனான் விஷ்ணு. இருவரின் கண்களும் சில நொடிகள் சந்தித்து கலைந்தன. பிறகே, அவனை சுற்றி கூட்டம் கூடியது . கூடிய கூட்டம் கலைந்த பிறகே கண்டான், அவளும் அந்த கூட்டத்தோடு கூட்டமாய் கலைந்துவிட்டாள் என்பதை.
இந்தமுறை, விஷ்ணுவின் மனதில் ஆழமாக பதிந்தாள் ஆதிகா. அவளிடம் ஒரு நன்றி கூட சொல்ல முடியவில்லையே என வருந்தினான்.
நன்றி கூறும் சாக்கில் அவளை பார்க்க இன்னொரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டான்.
இரண்டு நாள் கழித்து அவளை பார்ப்பதற்காகவே விஷ்ணு, வகுப்பு முடிந்து மைதானத்திற்கு போகாமல் அவளுக்காக காத்திருந்து, அவளை சந்தித்தான்.
"அன்னைக்கு மயக்க போட்டு விழுந்த போது ஹெல்ப் பண்ணீங்க அதுக்கு நன்றி சொல்லலாம்னு தான் வந்தேன், ரொம்ப தேங்க்ஸ் " என கூறி முடித்தவுடன், ஆதிகா, "இதுக்குத்தான் என்னைய பாக்கவந்திங்களா?" என கேட்டாள். அதற்கு திரு திரு வென முழித்தவனிடம், ஆதிகா தனது மனதை அவிழ்த்துவிட்டாள், "இனிமேலும் என்னால மனசுல வச்சிக்க முடியாது சொல்லிடுறேன்" என கூறியவளிடம், "என்ன சொல்ற புரியல?" என கேட்டான் விஷ்ணு.
"ஆமா உங்களுக்கு புரிஞ்சி இருந்தாதான், என் பார்வையோட அர்த்தமும் புரிஞ்சி இருக்குமே, என்கிட்டே வந்து பேசியும் இருப்பிங்க", என கூறியவளை புரியாமல் பார்த்து கொண்டிருந்தான் விஷ்ணு. மேலும் அவள் தொடங்கினாள், "உங்கள போன வருஷத்துல இருந்தே பாத்துட்டு இருக்கேன். பர்ஸ்ட் டைம் நான் உங்கள பாத்தது, பாஸ்கெட் பால் மேட்ச்ல தான். அப்பவே உங்கள ரொம்ப புடிச்சி போச்சு. ஏதோ அதிலிருந்து ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டேன்.இதுக்கு பேர் என்னனும் தெரியல. அதுக்கு அப்புறம் நீங்களும் இந்த வருஷம் பர்ஸ்ட் டேயிலிருந்து பாக்குறது எனக்கும் தெரியும். நீங்க வந்து பேசுவீங்கணு வெயிட் பண்னேன். நீங்க வர மாதிரியே தெரியல அதான் இப்போ சொல்லிட்டேன்" வேகமாக அவன் முகத்தை பார்க்காமல் தரையை பார்த்தே சொல்லி முடித்தவுடன் வெட்கம் வந்து சூழ்ந்ததால், உடனே அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் அந்த பேதை.
ஓ எல்லாம் மறந்து உன்
பின்னே வருவேன்.
நீ சம்மதித்தாள் நான்
நிலவையும் தருவேன்.
உன் நிழல் தரை படும்
தூரம் நடந்தேன்.
அந்த நொடியை தான்
கவிதையாய் வரைவேன்.
இக்கணத்தில், ஆதிகாவிடமிருந்து வெளிவந்த வார்த்தை, அவள் மொழிந்த மொழி என எதுவுமே புரியாமல் போனது அவனுக்கு. 'இவளுக்குள்ளும் நாம் உள்ளோமா?' என விஷ்ணு நினைத்து பிரமித்து போனான்.
இந்த சந்திப்புகள் அடிக்கடி தொடர்ந்தது. இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தனர். ஏதோ ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் காதல் மலரத்தான் செய்தது. ஆனால், இருவருமே காதலை வாய் வழியே பரிமாறிக்கொள்ளவேயில்லை.
பொழுதுகள் மாதங்களாக ஓடின. விஷ்ணுவிற்கு பொது தேர்வும் நெருங்கியது. தேர்வுக்கு முதல் நாள் இருவரும் சந்தித்தனர். இருவருக்குமே ஒரு விதமான கவலை இருந்தது, 'இனிமேல் எப்போது இது போல சந்திப்போம் என்று'.
கவலையை உடைத்து, முதலில் விஷ்ணுவே வாயை திறந்தான், "நாம் இருவரும் கல்லூரி படிப்பை முடித்து, நான் நல்லா ஒரு வேலைக்கு போன பிறகு, உங்க வீட்ல வந்து பேசுறேன். அது வரையும், நீ வெயிட் பண்ணனும், எனக்காக பண்ணுவியா?" என கேட்டவுடன் ஆதிகா, அவனுடைய கரத்தோடு தன் கரத்தை சேர்த்து "கண்டிப்பா வெயிட் பண்றேன்" என உறுதி அளித்தாள்.
இருவரும் மற்றவருக்காக வாங்கி வந்த ஹீரோ பேனாவை பரிமாறிக்கொண்டனர். தேர்வுகளும் முடிந்தது. பிறகு இருவரும் சந்தித்துக்கொள்ளவும் இல்லை, பேசிக்கொள்ளவும் இல்லை.
விடுமுறை முடிந்து ஆதிகா பன்னிரெண்டாம் வகுப்பின் முதல் நாள் பள்ளிக்கு வரும்போதுதான், விஷ்ணு அவளை சந்தித்தான். அப்போது, தான் இன்ஜினியரிங் படிக்க போவதாகவும், அடிக்கடி பள்ளிக்கு வந்து உன்னை சந்திப்பதாகவும் கூறி சில நிமிட பேச்சு வார்த்தைக்கு பிறகு முற்றுப்புள்ளி வைத்து நகர்ந்தனர்.
விஷ்ணு வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பதால் ரொம்ப செல்லம். ஆனால், ஆதிகா வீட்டில் கட்டுப்பாடு அதிகம். அவளுக்கு முகேஷ் எனும் சுட்டி தம்பியும் உள்ளான்.
அந்த ஒரு வருடம் இருவருக்குமே சிரமமாகின, எப்பவாவது தான் விஷ்ணு பள்ளிக்கு ஆதிகாவை சந்திக்க வருவான். இதோ, அதோ என பொது தேர்வும் நெருங்கியது ஆதிகாவிற்கு. அன்று, விஷ்ணு கொடுத்த பேனாவிலேயே பரீட்சையும் முடித்தாள். விஷ்ணு நியாபகம் நெஞ்சை தட்டும்போதெல்லாம் அந்த பேனாவிடமே தன் மனதை கொட்டுவாள்.
ஆதிகாவும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாள். பிஸசி கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை தேர்ந்தெடுத்து கல்லூரியில் சேர்ந்தாள். வீட்டில் அழுது அடம்பிடித்து எப்படியோ ஒரு மொபைல் போனும் வாங்கிவிட்டாள். இருவரும் கல்லூரி படிப்பது திருச்சி மாநகர் என்றாலும், அடிக்கடி சந்தித்துக்கொள்ள இயலவில்லை. எப்பயாவது வெளியில் சந்தித்துகொள்வர். அதிகம் இரவில் போனிலையே உரையாடி தங்களது காதலை வளர்த்தனர்.
இதுபோலவே மூன்று வருடமும் காற்றோடு காற்றாக கரைய இருவரும் கல்லூரி படிப்பை முடித்தனர். விஷ்ணுவோ பல வேலைகள் தேடி திரிந்தான், தான் படித்த படிப்பிற்கு சம்மந்தமாக. ஆதிகா வீட்டில் மேற்படிப்புக்கு அனுமதிக்காமல் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர்.
இவளும் வீட்டில், விஷ்ணு வேலைக்கு போகும் வரை, ஏதாவுது சொல்லி தட்டிக்கழிக்கவேண்டியிருந்தது.
பிறகுதான், விஷ்ணு ஓர் நற்செய்தியை தெரிவித்தான், தன் தந்தை வைத்திருக்கும் கம்பெனியை தானே பொறுப்பேற்க போவதாக.
இவளுக்கும் ஒரு விதத்தில் நிம்மதியாக இருந்தது, இனிமேல் பெற்றோரிடம் பொய் சொல்ல வேண்டியது இல்லை என்று. சந்தோஷமும் இருந்தது, தான் நேசித்தவனையே மணந்து கொள்ளலாம் என.
இந்த வேலை சம்மந்தமாக தான் விஷ்ணு ஒரு வாரம் சென்னை சென்றிருந்தான்.
ஆதிகாவும், பெற்றோரிடம் நாளைக்கு என் நண்பன் ஒருவன் நம் வீட்டுக்கு வருவதாகக் கூறியிருந்தாள். இவளின் பெற்றோரான மாறன்-சுதாவிற்கு தெரியாது இவனைத்தான் தம் மகள் விரும்புகிறாள் என்று.
கடந்த காலங்கள் யாவும் அழகாக மனக்கண்ணில் கற்பனை போல வலம் வருவதை உணர்ந்த ஆதிகாவிற்கு மனதில், நாளை வெகு நாட்களுக்கு பிறகு ஆறடிக்கும் சற்றும் குறையாத உயரம், கட்டுக்கோப்பான உடல் வாகு, மீசை, தாடி அனைத்தையும் ட்ரிம் செய்து அழகை பிரதிபலிக்கும் முகம் பெற்று, இத்தனை நாள் போனிலே பார்த்து ரசித்தவனை நேரில் பார்க்க போகிறோம் என ஆனந்தம் மட்டுமே தாண்டவம் போட்டது.
அன்றிரவு இருவருக்குமே இன்பமும், ஒரு பக்கம் 'ஆதிகாவின் பெற்றோர் சம்மதிப்பார்களா?' என சிறு பயமும் தலை தூக்கியது தான் உண்மை. ஏனென்றால், விஷ்ணு ஒரே பிள்ளை என்பதால் பெற்றோரான சுப்பிரமணியன்-வசந்தா தம்பதியர் ஒத்துக்கொள்வர் என்பது தெரிந்த விஷயமே.
பயமே இருந்தாலும் அந்த இரவு இருவருக்கும் சுகமாகவே அமைந்தது. கை சேர துடிக்கும் காதலுக்காகவும், காதல் கொண்ட நெஞ்சத்தை பார்பதற்க்காகவும் காத்திருத்தல் சுகம் தானே. இரவு பயணத்தின் அமைதி அவனை ஆதிகாவை முதலில் பார்த்த இடத்திற்கு எடுத்து சென்றது.
கொலுகொலுவென இரு கன்னங்கள், வளர்ந்து இடையோடு நிற்கும் கூந்தல், செழிமையான கருமை தோட்டத்தில் பூத்த பூ, பள்ளி சீருடையிலும் நேர்த்தியாக காண்பிக்கும் அவளது தோற்றம் என எண்ணிய மனதிற்கு கடிவாளமிட்டு உறங்க முயன்றான். கடிகாரம் நள்ளிரவை காட்டிய பின்பே இருவரும் தூங்கினர்.
காலையில் விழிக்கையில் விஷ்ணுவின் கண்ணிற்கு புலப்பட்டது, அவனது சொந்த ஊரான திருச்சி மாநகரே.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro