Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🕵40🕵

"ஆகாஷ்... இங்கே என்னை பார்!" என்று அவன் முகத்தை தன் இரு கைகளாலும் நேராக தாங்கி சில நொடிகள் விழிகளை ஊடுருவிய ஜெய்சங்கர், "உனக்கு நான் எதுவும் தனியாக விளக்கவே தேவையில்லாமல் இத்தனை விஷயங்களையும் நீ புத்திசாலித்தனமாக தானாகவே தெரிந்து வைத்திருக்கிறாயே... இன்னும் நான் சொல்லப் போகும் மீதி விஷயத்தையும் கொஞ்சம் பொறுமையாக கேட்க வேண்டும் என்ன?" என்றான்.

"என்ன... இங்கிருந்து நான் போய் தான் ஆக வேண்டும் என்று சொல்லப் போகிறீர்களா?" என சோகமாக கேட்டவனை தன் மடியில் அமர வைத்து விரல்களை மென்மையாக வருடினான் ஜெய்.

அங்கே நடப்பவற்றையெல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர் நரசிம்மமூர்த்தி வியப்பின் உச்சத்தில் இருந்தார். இதுவரை அவர் எத்தனையோ நோயாளிகளை மனரீதியாகவும், ஆன்மாவின் தொடர்பால் பாதித்தவர்களாகவும் பலவகையில் கண்டு குணப்படுத்தி வந்திருக்கிறார். ஆனால் தன் வாழ்நாளில் அவர் இப்படியொரு கேஸை பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை, ரத்த பந்தமில்லாத ஒரு சொந்தத்திற்காக பிரிவதை பற்றி இருப்பிரிவினருமே இவ்வளவு தூரம் வருந்துவது அவரையும் சில நிமிடங்களுக்கு உணர்ச்சிவசப்பட தான் வைத்தது.

"உன்னிடம் எதையும் நான் வற்புறுத்தப் போவதில்லை, என்னுடைய வார்த்தைகளின் முடிவில் உன் முடிவை நீயே சொல். நீதான் புத்திசாலிப் பையன் ஆயிற்றே... நிதர்சனம் உணர்ந்து பதிலளிப்பாய் என நம்புகிறேன். அன்று உன்னை நான் நிண்ணியூரில் காப்பாற்றவில்லையே என்ற கோபம் உனக்கிருந்தது நியாயம் தான், கொஞ்சம் ஜாக்கிரதையாக விஷயத்தை கையாள வேண்டும் என்ற எண்ணத்தில் உன் உயிரை கோட்டை விட்டு விட்டேன்!" என வேதனையோடு பெருமூச்செரிந்தவன் அவன் முகம் பார்த்து விழிகள் கலங்க, "இன்று வரை அதற்காக குற்றவுணர்வில் தவித்துக் கொண்டு தானிருக்கிறேன். எத்தனை பேருக்கு உதவிகரமாக இருந்தாலும் என் உயிருள்ள வரை அந்த வடு மட்டும் என்னுள் அழியவே அழியாது. நீ இறந்தது தெரியாமல் ஒருபுறம் உன்னை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது தான் எங்கள் சேனலில் இருந்து அழைத்து ஏரியில் ஒரு சிறுவனின் சடலம் மிதப்பதாகவும் விசாரித்து செய்தி அனுப்புமாறும் கூறினார்கள். ஏனோ தெரியவில்லை அந்த கணமே என் மனதில் இனம்புரியா பாரம் ஏறி உளைச்சல் தோன்றியது. வந்த இடத்திலும் அது நீதான் என தெரிந்ததும் உதவி கேட்டு வந்தவனை காப்பாற்ற இயலவில்லையே என்று என்னையே நான் வெறுத்தேன். உணர்வில்லாமல் நின்றிருந்த எனக்கு உன்னை பற்றிய விவரம் கேட்டு காவலர்கள் விசாரிக்கும் பொழுது ஒருவருக்கும் ஒன்றும் தெரியவில்லை என்கவும் முதலில் குழப்பம் தோன்றியது. பிறகு உன் குடும்பத்தின் நிலையை தெரிந்துக் கொள்ள நீங்கள் குடியிருந்த ஊரில் சென்று விசாரித்தேன். அப்பொழுது தான் உங்கள் குடும்பம் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக யாருடைய தொடர்பிலும் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. ஏதோ பெரிய பிரச்சனை என புரிந்து உன்னை காப்பாற்ற முடியவில்லை என்றாலும் பரவாயில்லை அதற்கு பிராயச்சித்தமாக உன் குடும்பத்தினரையாவது காப்பாற்ற வேண்டும் என்று தான் ஏற்கனவே உனக்காக போட்டிருந்த திட்டத்தை செயல்படுத்தி உன்னை அந்த முரடர்கள் இழுத்து சென்ற இடத்தை அடைந்தேன்!" என அன்றைய நிகழ்வுகள் முழுவதையும் விளக்கமாக கூறினான்.

"எவ்வளவு தூரம் முயன்றும் உன் அப்பா என்னுடன் வர மறுத்து விட்டார். உன் அம்மாவும், நீயும் இல்லாத உலகில் தனக்கும் வாழ விருப்பமில்லை என்று இவனையாவது வாழ வையுங்கள் என திலக்கை மட்டும் வற்புறுத்தி அனுப்பி வைத்தார். அவனுடைய நிலைமை உன்னை விட மோசமாக உள்ளது என்பது எனக்கு புரிந்தது. நீயாவது உன் அம்மா நோய்வாய்ப்படும் வரை உன்னுடைய பெற்றோருடன் நன்றாக வாழ்ந்திருந்தாய். ஆனால் அந்த சின்ன குழந்தை இரண்டு வயதிலேயே அம்மாவின் அரவணைப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டு அவர்களிடமிருந்து ஒதுங்கி இருந்தது மட்டுமில்லாமல் அடுத்த இரண்டு வருடத்தில் பாதுகாப்பற்ற அடிமை சூழலில் வாழ்ந்தது என்னை மிகவும் பாதித்தது. அதனால் தான் அவனை என் மகனாகவே சுவீகாரம் எடுத்து வளர்த்து வருகிறேன். உன்னை இப்படி ஒரு சூழலில் சந்திக்க வேண்டி வரும் என்று நான் கற்பனையிலும் எண்ணிப் பார்த்ததில்லை. உங்கள் இருவரின் மீதும் எனக்கு அன்பு இருக்கிறது. ஆனால் உலக வாழ்க்கை, இயற்கை நியதி என வரும்பொழுது நான் விசாரித்த வரையிலும் சரி, படித்து ஆராய்ந்த வரையிலும் சரி உன்னை இந்த உலகில் வாழ வைப்பதற்கான சாத்திய கூறுகள் எதுவும் என் கைகளில் இல்லை. ஒருவேளை மனிதனை உயிர்பிக்கும் சக்தியை அந்த கடவுள் எனக்கு அளித்தார் என்றால் என்னால் உன்னை வாழ வைக்க முடியுமோ என்னவோ..." என்று விரக்தியாய் இதழ்களை வளைத்தான் ஜெய்.

முகம் இருண்டிருக்க உணர்வற்று தலை கவிழ்ந்திருந்த திலக்கை நிமிர்த்தியவன், "ஆனால்... என்னால் முடிந்த ஒரு வேலையை மட்டும் டாக்டரிடம் கலந்தாலோசித்து உனக்காக ஏற்பாடு செய்திருக்கிறேன்!" என்றான் பெரும் நம்பிக்கையோடு.

என்னவென்று விசாரிக்க தோன்றாமல் அவன் முகத்தையே பார்த்திருந்தான் ஆகாஷ்.

"டாக்டரிடம் பேசி அவருடைய உதவியால் உன் அப்பாவின் ஆன்மாவை கண்டுப்பிடித்து விட்டோம்!"

"அப்... அப்பா... நிஜமாகவா? நான் இறந்தப் பிறகு அவரை பார்க்கவே முடியவில்லையே பின் எப்படி நீங்கள் கண்டுபிடித்தீர்கள்? அங்கே இருட்டாக யார் யாரோ இருந்தார்களே தவிர அம்மா கூட இல்லையே நான் அழைத்துப் பார்த்தேனே..." என்று படபடத்தான்.

"ம்... அம்மாவை பற்றி எனக்கும் தெரியாது. அவர்கள் இறந்து இரண்டரை வருடங்களாகி விட்டதால் அவருடைய ஆன்மா மறுபிறவி எடுத்து விட்டதா என்னவென்றும் தெரியாது. சிறுவனான உன்னை சிகிச்சை அளித்து வழுக்கட்டாயமாக வெளியேற்ற எனக்கு உறுத்தலாக இருந்தது. லாஜிக்கலி... உன்னுடைய அப்பாவை நீ சந்தித்திருந்தால் உனக்கு என்மேல் கோபமே வந்திருக்க கூடாது. யோசித்துப் பார்த்தால்... யாருடைய தொடர்பும் இல்லாமல் நீ தனிமையில் கஷ்டப்பட்டது தான் அத்தனை துவேஷத்திற்கும் காரணம் என புரிந்துக் கொண்டேன். அதனால் டாக்டரிடம் பேசி உன் அப்பாவுடன் உன்னை சேர்த்து வைக்க முடியுமா என்று கேட்டேன். முயற்சி செய்து பார்க்கலாம் நம் அழைப்புக்கு இணங்கி அவர் நம் முன் வந்தால் தான் நாம் மேற்கொண்டு பேசமுடியும் என்றார். அதற்கு அவருடைய போட்டோ, வீடியோ எதுவும் இருக்கிறதா என்கவும் திலக்கை அழைத்து வரும்பொழுது எடுத்த வீடியோவை பற்றி சொன்னேன். சரி எனக்கு அனுப்பி வையுங்கள், முயற்சித்துப் பார்க்கிறேன் என்றார். அந்த வீடியோவை மெயிலில் அனுப்பிவிட்டு அவருடைய போனிற்காக டென்ஷனாக காத்திருந்தேன். அதிர்ஷ்டவசமாக டாக்டருடைய அழைப்பை ஏற்று உன் அப்பா அவர் முன் வந்து பேசியுள்ளார். உன்னுடைய நிலையையும், திலக்கை பற்றியும் எடுத்து சொல்லவும், உன்னை தன்னோடு அழைத்து செல்ல அப்பா தயாராக இருக்கிறார். இன்று அதற்கான ஏற்பாடுகள் முழுவதும் தயார் நிலையில் உள்ளது. இனி நீதான் சொல்ல வேண்டும்!" என்று அவனை அமைதியாக நோக்கினான் ஜெய்.

அனைத்தையும் அருகில் இருந்து கேட்டு கொண்டிருந்த மணிகர்னிகாவிற்கு தனிமையை பற்றி ஆகாஷ் கேள்வியெழுப்புகையில் தன் கணவன் எந்த அர்த்தத்தில் அதை சமாளித்தான் என இப்பொழுது புரிந்தது.

சற்று நேரம் புருவம் சுளித்திருக்க ஜெய்யின் ஷர்ட்டை வெறித்திருந்தவன் பின் நிமிர்ந்து, "அப்பொழுது நான் இனிமேல் அப்பாவுடன் அந்த இருட்டுலகில் தான் இருக்க வேண்டுமா?" என்று நேரடியாக வினவினான்.

"அது..." என்று அவன் பதிலளிப்பதற்குள், "ஜெய்சங்கர்... ஒன் செக்!" என அவனை தடுத்த மூர்த்தி, "ஹாய் திலக்... ஓ... ஸாரி... ஆகாஷ், ரைட்!" என்று புன்னகையுடன் அருகில் வந்து அவனிடம் கையை நீட்டினார்.

சின்ன தயக்கத்திற்கு பின் அவர் கரத்தில் தன் கரத்தை வைத்தான் இவன்.

"குட்!" என லேசாக அழுத்தியவர், "நீ இவ்வளவு ஸ்மார்ட்டாக இருப்பதால் உன்னுடைய கேள்விகளுக்கு விளக்கமாக ஆன்மாவை பற்றி இறப்பிற்கு பின்னால் என்ற ஒரு ஆவணப்படத்தை நான் தற்பொழுது போட்டுக் காண்பிக்கிறேன் பார்!" என்று தன் டேபிள் மேல் இருந்த லேப்டாப்பை திருப்பி திரையில் படத்தை ஓடவிட்டார்.

அப்படத்தை பார்க்க துவங்கிய மூவரின் விழிகளிலும் மெல்லிய தெளிவுப் பிறந்தது.

படம் முடிந்ததும் அதை அணைத்தவர், "உன் கேள்விகளுக்கு பதில் கிடைத்ததா? இதுதான் வாழ்க்கை, உன் ஆத்மா சாந்தியடைந்த சில காலங்களுக்குள் எல்லாம் நீ மறுபிறவி எடுத்து விடுவாய். அப்பொழுது உன் பிறப்பை கொண்டாடி வரவேற்க உன்னை சுற்றி புது உறவுகளும், நட்புக்களுமே இருக்கும். இந்த ஜென்மத்தின் எந்த தொடர்பும் அம்மா, அப்பா உட்பட உனக்கு இருக்காது. அவரவர் வாழ்நாள் பலன்களுக்கு ஏற்ப மே பீ நீ உலகில் முன்னே பிறந்து உன் அப்பா தாமதமாக கூட பிறவியெடுக்கலாம். இதெல்லாம் இயற்கையின் கணக்கு ஒருநிலைக்கு மேல் நம்மால் அதை தெரிந்துக் கொள்ள முடியாது. இதுவரை நீ உணர்ந்ததை புரிந்துக் கொண்டு உன்னுடைய மனதை எந்நேரமும் நிர்மலமாக வைத்துக் கொள்ள முயற்சி செய். அது உன்னை இருண்ட வாழ்விலிருந்து சீக்கிரமே மீட்டு மறுபிறவி அளிக்கும். இந்த பிறவியில் நீ அனுபவித்த துன்பத்தின் காரணமாக அடுத்த ஜென்மத்தில் நிச்சயமாக ஒரு நல்ல வாழ்க்கை தான் உனக்கு அமையும்!" என்று அவனுக்கு தைரியமூட்டினார் நரசிம்மமூர்த்தி.

ஆகாஷ் சம்மதமாக தலையாட்ட, "சரி சிகிச்சைக்குப் போகலாமா?" என்று அவர் வினவியதும் ஜெய், மணியின் முகத்தில் லேசான பதட்டம் பரவியது.

தன் கரத்தை இறுகப்பற்றிய ஜெய்யிடம் திரும்பியவன் மெல்லப் புன்னகைத்தான்.

அவனை வேகமாக தூக்கி கொண்டவன் தன்னோடு சேர்த்தணைத்து, "உன் வாழ்வு நிச்சயமாக நல்லபடியாக அமையும், அதற்காக நான் அனுதினமும் பிரார்த்திப்பேன்!" என்றான் நெஞ்சம் உருக.

"தாங்க்ஸ் சித்தப்பா!" என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டவன் பீதியோடு நின்றிருந்த மணியிடம் சென்றான்.

"நான் சித்தப்பாவை ஏதாவது செய்து விடுவேனோ என நேற்றிலிருந்து நீங்கள் ரொம்ப பயந்து கொண்டே இருந்தீர்கள் இல்லை சித்தி?" என்றவன் கேலியாக நோக்க, அவனிடம் மண்டியிட்டவள் அவனை கட்டிக்கொண்டு அழுதாள்.

"ஷ்... நோ மோர் இமோஷன்ஸ். கன்ட்ரோல் யுவர் செல்ஃப், குழந்தை உங்களுக்காக எந்தளவுக்கு தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு தைரியமாக இருக்கிறான். நீங்கள் என்னடாவென்றால் அவனை பலவீனமாக்கப் பார்க்கிறீர்களே!" என்று அதட்டினார் நரசிம்மமூர்த்தி.

"இல்லை அங்கிள்... நான் தெளிவாக இருக்கிறேன்!" என அவரிடம் நம்பிக்கையளித்தவன் மணியின் கன்னத்தில் இதழ் பதித்து முறுவலித்துவிட்டு அவருடன் அவ்வறையை விட்டு வெளியேறினான்.

தங்களை விட்டு விலகிச் செல்பவனை எண்ணி துவண்டு சிலையாக நின்றிருந்தவர்களை அப்பொழுது அங்கே வந்த நர்ஸ் ஒருவர் அழைத்து சென்று பெரிய தொலைக்காட்சி இருந்த அறையில் அமரச் செய்தார்.

ஒன்றும் புரியாமல் அமர்ந்தவர்கள் முன்னே சிகிச்சை அறையில் பேஷன்ட்ஸை மட்டும் போகஸ் செய்திருந்து ஓடும் லைவ் வீடியோவை திரையில் ஓடவிட்டார்.

ஒருவருக்கொருவர் ஆறுதலாக கைகளை பிணைத்துக் கொண்ட இருவரும் பதைபதைக்கும் இதயத்தோடு அதைப் பார்த்திருக்க, சற்று நேரத்தில் திலக்கின் உடல் ஓரிருமுறை அதிர்ந்து அடங்க விழிகள் சில நொடிகள் இவர்களை நேரே வெறித்துவிட்டு மூடியது. அது... ஆகாஷ் திலக்கை விட்டு விலகும் நேரம் இறுதியாக தங்களை ஒருமுறை பார்த்து விட்டு சென்றது போன்ற பிரமையை அவர்களுக்குள் தோற்றுவித்தது.

நரசிம்மமூர்த்தியின் ஆலோசனைப் பேரில் திலக்கை அங்கேயே ஒருவாரம் அட்மிட் செய்தனர். முதலில் மயக்கம் தெளிந்து எழுந்தவன் இவர்களிடம் சற்று நேரம் பேசாது அமைதியாகவே இருந்தான். அவனுடைய நிலையுணர்ந்த டாக்டர் அவனுக்கேற்றவாறு பேச்சுக் கொடுத்து மெல்ல மெல்ல அவனை தனக்கு பதிலளிக்க வைத்தார். சிறிது நேரம் சென்ற பின் தான் அவன் பேசுவது அவருக்கு கேட்கிறது என்பதை உணர்ந்தவன் தன் கழுத்தில் கை வைத்து தடவி எனக்கு தொண்டை சரியாகி விட்டதா, நான் பேசுவது உங்களுக்கு கேட்கிறதா? என்று படபடத்தான். அருகில் இருந்த ஜெய் அவன் முகத்தை தன் பக்கம் திருப்பி, நீ பேசுவது எனக்கு நன்றாக கேட்கிறதுடா தங்கம் என புன்னகைக்கவும் மகிழ்ந்தவன் பின் விழிகளில் பீதியோடு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை திக்கித்திணறியபடி அச்சதோடு கூறினான். அதற்கு தகுந்த விளக்கம் அளித்து அவனுக்கு தெம்பூட்டிய மருத்துவர் தொடர்ந்து சில மருந்துகளை மட்டும் ஆரோக்கியத்திற்கு வேண்டி உட்கொள்ள எழுதிக் கொடுத்தார்.

திலக் சற்று தேறவும் அவனை மணியின் பொறுப்பில் விட்டுவிட்டு செண்பகத்தை காணச் சென்றவன் அவரிடம் நடந்ததை விளக்கி முதலில் அதிர்ச்சியில் ஆழ்த்தி பின்பு அவருடைய மண்டகப்படியை போதும் போதும் என்கிற அளவு வாங்கி கட்டிக்கொண்டு கெஞ்சி கூத்தாடி திலக்கின் முன் எதையும் வெளிப்படுத்த வேண்டாம் என சமாளித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றான். அறைக்கு வந்தவர் ஜெய்யின் எச்சரிக்கையால் மணியிடம் ஒரு முறைப்பை மட்டும் பரிசளித்து விட்டு, திலக்கிடம் சென்று கொஞ்சினார். அதைக் கண்ட மணி சற்றே அசடுவழிந்து விட்டு நல்லப்பெண்ணாக ஜெய்யிடம் வந்து அமைதியாக நின்றுக்கொண்டாள்.

ஒரு மாதம் கடந்திருந்த நிலையில் ஆகாஷ் மற்றும் அவனுடைய அப்பாவின் ஆத்மா சாந்தி அடைவதற்கு திலக்கின் கரங்களால் திதி கொடுக்கப்பட வேண்டியது அவசியம் என்ற நரசிம்மரின் ஆலோசனையால் மெதுவாக அவனிடம் அவர்களின் இழப்பை பற்றி கூறிவிட்டான் ஜெய்சங்கர்.

ஒரு நிமிடம் தன் சித்தப்பாவை அதிர்ச்சியோடு ஏறிட்டவன் பின் அவனை கட்டிக்கொண்டு கதறி அழுதான். காலங்கள் உருண்டோட அவனை மெல்ல தேற்றி இயல்பு வாழ்க்கையில் இணைத்தது அக்குடும்பம்.

.
.

"டேய் ஆகாஷ்... ஒழுங்காக என்னிடம் வந்து விடு, இல்லை... பிச்சிப்பிடுவேன்!" என்று மிரட்டிக் கொண்டிருந்தார் செண்பகம்.

வேறு யாரை? எல்லாம் நம் ஜெய் - மணியின் மூன்று வயது அருமருந்தன்னப் புத்திரனை தான்.

"ஆங்... நா வய மாத்தே போ, நீ அதிப்ப..." என்று அவருக்கு போக்கு காட்டியபடி அங்குமிங்கும் ஓடினான் ஆகாஷ்.

தற்பொழுது ஐந்தாம் வகுப்பில் இருக்கும் திலக்கின் அறிவியல் கண்காட்சிக்காக செண்பகமும், அவனும் சேர்ந்து பாடுப்பட்டு செய்திருந்த எக்ஸ்பெரிமென்ட் பீஸை தான் ஆகாஷ் உடைத்து விட்டான். அவனுடைய குறும்புத்தனம் தெரிந்து பலமுறை எச்சரித்து தான் வைத்திருந்தார் இருந்தும் அவர் அசந்த நேரம் தன் வேலையை காட்டி விட்டான் பேரன்.

நாளைக்கு பள்ளியில் சப்மிட் செய்ய வேண்டிய அசைன்மென்ட் ஒன்றிற்கு தேவையானவற்றை வாங்குவற்காக அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய மணியை காபி மட்டும் அருந்த வைத்து வெளியில் இழுத்து சென்றிருந்தான் திலக்.

வீடு வந்தவர்களிடம் செண்பகம் ஒரு மூச்சு புலம்பி தள்ள மணிகர்னிகா தன்னெதிரே பம்மிக் கொண்டு நின்றிருந்த தன் மகனை உறுத்து விழித்தாள்.

அதற்கு சிறிது மதிப்பளித்து சற்றே நெளிந்தவன் பின்பு இதற்கெல்லாம் நாங்கள் அசரமாட்டோம் என்கிற ரீதியில் அதை ஊதி புறந்தள்ளி விட்டு திலக்கிடம் ஓடினான்.

"ணா... எக்கு... எக்கு..." என அவன் கையில் இருந்ததை பிடுங்கி தனக்கு உபயோகமாக எதுவும் இருக்கிறதா என்று ஆராய ஆரம்பித்தான் ஆகாஷ்.

"இவனை..." என்று பல்லைக் கடித்தபடி மணி சுற்றும்முற்றும் எதையோ தேட, "அச்சோ... வா... வா நாம் உள்ளே ஓடிவிடலாம் இல்லை இப்பொழுது இருக்கும் கோபத்திற்கு அம்மா உன்னை அடிக்காமல் விடமாட்டார்கள்!" என ஆகாஷை தூக்கி கொண்டு அறைக்குள் ஓடினான் திலக்.

ஜெய்யின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த மூன்று வருடங்களாக அவர்களை அப்பா, அம்மா என்றே அழைக்க ஆரம்பித்திருந்தான் திலக்.

"டேய்... முதலில் நீ என்னிடம் உதை வாங்கப் போகிறாய், உன்னுடைய பிரொஜக்ட்டை உடைத்து விட்டானே என நாங்கள் சண்டைப் போட்டால் நீ அவனை காப்பாற்றுகிறாயா?"

"ப்ச்... தம்பி சின்னப் பையன் தானே விடுங்கம்மா!"

"அதற்காக..." என அவள் எகிறும் பொழுதே, "என்ன இங்கே சத்தம் ரோடு வரை கேட்கிறது?" என்று ஹெல்மெட்டை கழற்றியபடி வீட்டினுள் வந்தான் ஜெய்.

"ஆங்... நீ பெற்றது ஒன்று வீட்டிற்குள் ஒளிந்திருக்கிறதே, அது பண்ற அட்டகாசத்திற்கு ரோட்டிற்கு சத்தம் கேட்காமல் இருந்தால் தான் அதிசயம்!" என்று செண்பகம் நொடிக்க, தன் மகனின் குறும்பை எண்ணி பலமாக சிரித்தான் அவன்.

"நன்றாக சிரிடா... உன்னை மாதிரியே உன் பையனையும் அடாவடியாக வளர்த்து வைத்திருக்கிறாய்!" என்று முறைத்தார்.

"அட ஏம்மா நீ வேற... இட்ஸ் ஆல் யுவர் ஃபால்ட்மா, என்னையும் சரி என் பையனையும் சரி நீதான் வளர்த்துகிறாய். பிறகு உன் வளர்ப்பை நீயே குறை கூறிக்கொண்டு சுற்றுவது சரியான சிறுப்பிள்ளைதனமாக அல்லவா இருக்கிறது?" என நக்கலடித்த ஜெய்  ஆர்ப்பாட்டமாக சிரிக்க, ஆகாஷுக்காக கையில் வைத்திருந்த தடியை ஓங்கியபடி அவனை துரத்த ஆரம்பித்தார் செண்பகம்.

"ஓ மை மம்மி..." என ஓடியவன், "டேய்... சீக்கிரம் கதவை திறந்து என்னையும் உள்ளே விடுங்கடா!" என்று தன் மகன்களிடம் அவசர உதவி கேட்டு அறைக்கதவை தட்டினான் அவர்கள் தகப்பன்.

💞சுபம்💞

______________________________________

ஜெய்சங்கர் - மணிகர்ணிகாவின் வாரிசான ஆகாஷ் புதுவரவா அல்லது முந்தைய ஆகாஷின் மறுபிறவியா என்பது வாசகர்களின் விருப்பம். 😍😍😍

மிஸ்டரி\த்ரில்லர் என்ற பெயரில் கொஞ்சம் வித்தியாசமாக முயன்றது. உங்களின் ரசனையை திருப்திப்படுத்தியதா இல்லையா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். ☺☺☺

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro