Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🕵33🕵

இரு கைகளையும் உயரே தூக்கி லேசாக சோம்பல் முறித்தபடி திரும்பிய ஜெய், மணியின் ஆராயும் பார்வையில் சட்டென்று கைகளை கீழே போட்டான்.

"என்ன பார்வை? சீக்கிரம் போய் டிபன் எடுத்து வை போ!" என்று மிடுக்குடன் அவளை அதிகாரம் செய்தான்.

'பாருடா அதிகாரத்தை...' என உள்ளுக்குள் வியந்தவள், "இட்லி ஊற்றி வைத்து விட்டு தான் அத்தை மிக்ஸியில் சட்னி அரைக்கிறார்களாக இருக்கும்!" என்றாள் அமைதியாக.

அவளின் பார்வையை தவிர்க்க வேண்டி, "சரி அதற்குள் நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணுகிறேன், திலக் நீயும் போய் யூனிபார்ம் மாற்று போ!" என்றபடி எழுந்து தன்னறைக்கு சென்றான் ஜெய்சங்கர்.

அவன் கண்ணை விட்டு மறையும் வரை யோசனையோடு விழிகளால் தொடர்ந்தவள் பின் திரும்பி திலக்கை கவனித்தாள்.

ஜெய் உரைத்ததை காதிலேயே வாங்காதவன் போல அசட்டையாக இருந்தவனின் கன்னம் வருடியவள், "என்னடா செல்லம் சித்தப்பா சொன்னது காதில் விழவில்லையா அப்படியே உட்கார்ந்து இருக்கிறாய்? போய் டிரஸ் மாற்று, இல்லை... சித்தி வந்து மாற்றிவிடவா?" என்று அக்கறையுடன் வினவினாள்.

"வேண்டாம் சித்தி... நானே மாற்றிக் கொள்கிறேன்!" என்று எழுந்தான்.

அவனுடைய தளர்ந்த நடையை கண்ணுற்றவளின் நினைவில் மீண்டும் ஜெய்யின் வார்த்தைகள் எதிரொலித்தது.

'அப்படியென்ன பெயின்டிங்கில் கேம் விளையாடினார்கள்... அதுவும் மயக்கம் வருமளவுக்கு? இவருக்கும் இல்லை மயக்கம் வந்ததாம் இதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது? நானும் இரண்டு நாட்களாக கவனித்துக் கொண்டு தானிருக்கிறேன், அன்று இரவிலிருந்தே இவர் ஏதோ சரியில்லை. திலக்கை நானே பள்ளியில் இருந்து அழைத்து வந்து விடுகிறேன் என்பவர் நேராக வீட்டிற்கு வருவதேயில்லை. அங்கே இங்கே என சுற்றிவிட்டு தினமும் தாமதமாக வருவது, என்ன பழக்கம் இது? அவன் ஹோம்வொர்க் கூட செய்யவில்லை, சாப்பிட்டவுடன் தூங்கப் போகிறான்!'

வேகமாக எழுந்து அவனை நாடிச் சென்றாள், அப்பொழுது தான் டவலால் முகத்தை துடைத்தபடி வாஷ்ரூமிலிருந்து வெளியே வந்தவன் தன்னெதிரே நெஞ்சின் குறுக்கே கைகளை கட்டியபடி குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருக்கும் மனைவியை கண்டு சற்றே தடுமாறினான்.

விழிகளை வேகமாக திருப்பியவன், தலைவாரும் பாவனையில் கண்ணாடியிடம் திரும்ப சட்டென்று குறுக்கே வந்து நின்றாள் மணி.

"ஏய்... என்ன?" என்று முகத்தை சுளித்தான் ஜெய்.

"அதைத்தான் நானும் கேட்கிறேன், என்ன?" என்றபடி அவனை ஊடுருவும் பார்வை பார்த்தாள்.

ப்ச்... என்று அவள் தோளைப்பற்றி நகர்த்தி நிற்க வைத்தவன் மும்முரமாக தலைவாரினான்.

"நமக்கு திருமணமாகி எத்தனை நாட்கள் ஆகிறது?" என திடீரென்று சம்பந்தமில்லாமல் கேள்வி எழுப்பினாள் மணி.

"என்ன?" என்று விழித்தவன், "இருபது... இருபத்தியிரண்டு நாட்கள் ஆகிறது, ஏன்?" என புரியாமல் கேட்டான்.

"இல்லை... ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பார்கள். முழுதாக அந்த முப்பது நாட்களுக்கு கூட என் முகத்தை பார்க்க உங்களுக்கு பிடிக்கவில்லையா என்று தெரிந்து கொள்ள கேட்டேன்!" என அவனுடைய பாராமுகத்தை அவள் குத்தி காண்பிக்க, முகம் இருள உள்ளம் சோர்ந்தவன் தன் கையிலிருந்த சீப்பை டேபிளில் விட்டெறிந்து விட்டு சென்று கட்டிலில் அமர்ந்தான்.

புது மனைவியாக தன் கணவனிடம் சில எதிர்ப்பார்ப்புகள் இருந்தாலும் அவனுடைய மனது சரியில்லை என புரிந்து சற்று ஒதுங்கி இருந்தவளுக்கு, இரண்டு நாட்களாக அவன் திலக்கை அழைத்துக் கொண்டு தனியாக வெளியில் சுற்றுவதோடு நில்லாமல் இல்லாத கதைகளை எல்லாம் புனைக்கவும் லேசாக சந்தேகம் எழுந்தது.

முதலில் அலுவலக பிரச்சினை என்றெண்ணி சாதாரணமாக இருந்தவளுக்கு மெல்ல திலக் தான் பிரச்சனையோ என்ற குழப்பம் ஏற்பட்டது. அதோடு நிச்சயத்தின் பொழுது நிண்ணியூரில் அவன் கூறிய வார்த்தைகளும், 'சித்தப்பாவை எனக்கு பிடிக்கவே பிடிக்காது!' நினைவிற்கு வர, 'ஓ காட்!' என அதிர்ந்தவள், ஒருவேளை... திலக் இவரிடம் அதை நேரடியாக சொல்லி விட்டானா... அதனால் தான் இப்படி டென்ஷனாக அவனை சமாதானப்படுத்த கூட்டிக்கொண்டு அழைகிறாரா? என்று அவன் முகம் நோக்கினாள்.

அதில் தெரிந்த வேதனை அவளுக்கு வருத்தத்தை கொடுக்க அமைதியாக அவனை நெருங்கியவள் எதுவும் பேசாமல் அவன் தலையை இழுத்து தன் நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டாள்.

தன் மனதின் வேதனையை யாரிடமும் பகிரவும் முடியாமல் ஆதரவு தேடவும் வழியில்லாமல் தனிமை துயரில் தள்ளாடியவன் சட்டென்று அவளை இறுக கட்டிக்கொண்டு கண்ணீர் சிந்தினான்.

அவன் விழியின் ஈரம் அவள் நெஞ்சின் ஈரத்தை தொட சிரமப்பட்டு அதை விழுங்கியவள் அவனுடைய முகத்தை நிமிர்த்தி தன் புடவை தலைப்பால் அதில் வழிகின்ற நீரை ஒற்றியெடுத்தாள்.

"ஷ்... போதும், இப்பொழுது என்ன சின்னக் குழந்தை தானே எல்லாம் சரியாகி விடும்!" என அவனை தேற்றி உச்சியில் இதழ் பதித்தாள்.

வெடுக்கென்று நிமிர்ந்தவன், "மணி...?" என்றான் திகைப்போடு.

"என்னடா நாம் எதுவும் சொல்லாமலேயே பெண்டாட்டி எப்படி சரியாக சொல்கிறாள் என்று பார்க்கிறீர்களா?" என கண்சிமிட்டினாள்.

அதில் சற்று இளகினாலும் உதடு தான் விரிய மறுத்து சண்டித்தனம் செய்தது அவனிடம்.

"சரி சொல் உனக்கு எப்படி தெரியும்?"

"எனக்கு போன மாதமே தெரியும்!" என்றவளின் பதிலை கேட்டு மண்டைக் காய்ந்தவன், கொஞ்சம் தெளிவாக சொல்லேன் என அலுத்துக் கொண்டான்.

மணியின் விளக்கத்தில் மேலும் சோர்ந்தவன், "அப்பொழுதே என்னை பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தானா... நீ ஏன்டா இதை என்னிடம் முன்னரே சொல்லவில்லை? அன்றே சொல்லி இருந்தால் ஏதாவது நடவடிக்கை எடுத்து இந்நேரத்திற்கு இந்த பிரச்சினையை சரி செய்திருக்கலாமே... இத்தனை நாட்களை வீணடித்து விட்டோமே!" என்று வருந்தினான்.

"இன்னமும் அவன் அதே நிலையில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறான் என்று எனக்கெப்படிப்பா தெரியும்? அன்று விசேஷத்தின் பொழுது பேசவிடாமல் வேதா தடுத்து விட்டாள், பிறகு பார்த்தால்... அவன் உங்களிடம் நன்றாக தான் பழகிக் கொண்டிருந்தான். சரி பழையதை பேசி எதற்கு வீணாக மனதை வருத்திக்கொண்டு என சும்மா இருந்து விட்டேன்!" என்றபடி அவனருகில் அமர்ந்தாள் மணி.

"ஆமாம்... ஆமாம்... எல்லோரையும் நன்றாக ஏமாற்றிக் கொண்டு அல்லவா சுற்றுகிறான் அவன், கொஞ்சம் கூட யாருக்கும் சந்தேகம் வராதபடி எப்படி நடித்திருக்கிறான்..." என்றவனை வேகமாக இடைமறித்தவள், "என்ன பேச்சு இது குழந்தையை போய் நடிக்கிறான் அது இது என்று பெரிய வார்த்தை எல்லாம் கூறுகிறீர்கள்?" என்று முறைத்தாள்.

"ப்ச்... இல்லை மணி, உனக்கு விஷயமே தெரியாது. அவனுக்கு..." என்றவனின் விழிகள் ஓரிடத்தில் நிலைக்குத்தி நின்றது.

"எ... என்ன திலக்?" என்று திணறியபடி வினவினான்.

ஜெய்யின் பார்வையையும், கேள்வியையும் தொடர்ந்து வேகமாக திரும்பிய மணி, வாயிலில் திலக் நின்றிருப்பதை கண்டு முகத்தை இயல்பாக்கி கொண்டாள்.

அவனுடைய கேள்விக்கு பதிலளிக்காமல் திலக்கின் விழிகள்(ஆகாஷின் எண்ணங்கள்) அவர்கள் இருவரையும் கூர்மையுடன் ஆராய்ந்தது.

லேசாக எச்சிலை விழுங்கி தொண்டையை சரிசெய்தவன், "என்னப்பா என்ன வேண்டும்?" என்றான்.

நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை ஏதாவது கேட்டிருப்பானோ என்று உள்ளுக்குள் லேசாக உதறல் எடுத்தது அவனுக்கு.

'சே... மடத்தனமாக கதவை திறந்து வைத்து விட்டு பேசிக் கொண்டிருந்து விட்டேனே!'

"என்ன திலக் உன்னிடம் தானே சித்தப்பா கேட்கிறார்?" என்று சற்று அழுத்தமாக வினவினாள் மணி.

ம்... என அவளிடம் விழிகளை திருப்பியவன், "பாட்டி... சாப்பிட கூப்பிடுகிறார்கள்!" என்றான்.

"ஓ... சரி வருகிறோம், போ!" என்று அவனை அனுப்பி வைக்க, புதிதாக முளைத்த சந்தேகத்துடன் ஜெய்சங்கரை ஓரவிழியில் அளந்தபடி வெளியேறினான் திலக்.

"ம்... அப்புறம்?"

ஷ்... என்று சைகையில் உதட்டின் மீது விரல் வைத்து விழிகளை உருட்டி எச்சரித்தவன், அறை வாயிலை கண்களால் சுட்டிக் காட்டினான். அங்கே திரும்பி பார்த்தவள் திலக்கின் நிழலை கண்டு அதிர்ந்தாள்.

'ஒட்டுக் கேட்கிறானா?'

"இன்னும் என்ன அப்புறம்... உனக்கு கதை சொல்லிக் கொண்டே இருப்பேனா என்ன? குழந்தையா நீ... திலக் கூட இப்படியெல்லாம் கதை கேட்பதில்லை. வா சாப்பிடப் போகலாம் எனக்கு பசிக்கிறது!" என்று கட்டிலை விட்டு எழுந்தான்.

அவர்கள் வரும் அரவம் கேட்டு திலக்கின் நிழல் அங்கிருந்து விரைவாக நகர்ந்தது. அதைக் கண்டவன் வேகமாக மணியை தனக்கருகில் இழுத்து கிசுகிசுத்தான்.

"இங்கே பார்... இதுவரை பேசியது அனைத்தையும் மறந்து வெளியில் இயல்பாக இரு. அவன் மீது சந்தேகப் பார்வையை வீசினால் அது நமக்கு தான் ஆபத்து!" என்று அவளை எச்சரித்து விட்டு விறுவிறுவென்று முன்னே நடந்து சென்றான்.

அவனுடைய சொல்லில் தேங்கி நின்றவள், 'சின்னப்பிள்ளையால் எங்களுக்கு ஆபத்தா... என்ன உளறுகிறார் இவர்? அவனால் எங்களை என்ன செய்து விட முடியும்?' என்று குழம்பி நின்றாள்.

"மணி..." என செண்பகம் அழைக்கும் குரல் கேட்க, "இதோ வருகிறேன் அத்தை, அதற்குள் போனில் ஒரு முக்கியமான மெஸேஜ் வந்துவிட்டது!" என்று பதில் குரல் கொடுத்தபடி வேகமாக மொபைலை தேடி எடுத்து கொண்டு வெளியேறினாள் அவள்.

உணவருந்தும் பொழுது தன்னால் முடிந்தவரை மிகவும் அமைதியாக உண்டவள் மெல்ல திலக்கிடம் விழிகளை உயர்த்த அதுவரை ஜெய்யிடமும், உணவிடமும் கவனமாக இருந்தவன் சரேலென்று அவளிடம் விழிகளை திருப்பினான்.

அந்த பார்வையில் ஒருகணம் மணியின் இதயத்துடிப்பு நின்று பின் ஜெட் வேகத்தில் துடிக்க ஆரம்பித்தது.

'அவனுக்கு முன் இயல்பாக இரு இல்லையென்றால் ஆபத்து...'

அவன் எச்சரிக்கையை முதலில் சாதாரணமாக எண்ணி குழம்பியவளுக்கு இப்பொழுது ஏனோ திலக்கின் பார்வையில் மெல்லிய குளிர் பிறந்தது.

'எனக்கா பயம்... அதுவும் தங்கள் வீட்டில் உள்ள சின்ன பையனிடம்...' என்று அதை ஒதுக்க முயன்றாள்.

ஆனால்... வீட்டிற்கு வந்தப்பொழுது அவனுடைய முகத்தில் தெரிந்த சோர்வு இப்பொழுது அவனிடம் இல்லையே மிகவும் தெளிவாக இருப்பது போல் அல்லவா இருக்கிறது. அது எப்படி... அதுவும் ஏன் அவன் எங்களை அப்படி வெறித்துப் பார்க்கிறான்? என்ன தான் நடக்கிறது இங்கே... அவர் என்னிடம் எதை மறைக்கிறார்? என நகத்தை கடித்து துப்பாத குறையாக தனக்குள் குழம்பினாள்.

"என்னடா இது... இது நம் வீடு தானா? இரண்டு வாயாடிகளும் இவ்வளவு அமைதியாக இருக்கிறது?" என்று அந்த சூழ்நிலையை கலைத்தார் செண்பகம்.

"ஏன்மா நீ வேற கடுப்பை கிளப்புகிறாய்? எனக்கே ரொம்ப டயர்டாக இருக்கிறது... எப்பொழுதுடா சாப்பிட்டு முடித்து போய் கட்டிலில் விழுவோம் என்றிருக்கிறது!" என அசால்டாக அடித்து விட்டான் ஜெய்.

திலக்கின் பார்வை அடுத்து கேள்வியாய் மணியிடம் உயர பெக்க பெக்க விழித்தாள் அவள்.

'அடப்பாவிகளா... நான் அமைதியாக இருப்பது எல்லாம் ஒரு குற்றமா? இந்த அத்தை வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் தேவையில்லாத பிரச்சினையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்குதே. ஆனாலும் நம் ஆளை சும்மா சொல்லக் கூடாது நம்மை விட அவனை பற்றிய ஏதோ ஒரு பெரிய விஷயத்தை தெரிந்து வைத்திருப்பவரே அசால்டு ஆறுமுகமாக டயலாக்கை அடித்து விட்டாரே... ஏற்கனவே இவன் பார்வையே சரியில்லை இதில் ஆபத்து என்று வேறு சொன்னாரே, அப்படி என்னவாக இருக்கும்? ஒருவேளை ஏதாவது வில்லன் குரூப் இவனை எங்களுக்கு எதிராக கைக்கூலியாக பயன்படுத்துகிறதா? இவனை வைத்து அப்படியென்ன ஆபத்தை வரவழைக்க முடியும்?' என திரும்பவும் அங்கேயே சுற்றி சுற்றி வந்தவள் ஜெய்யின் முறைப்பை உணர்ந்து, 'அடியேய் லூசு மணி... அவன் உன்னை தான்டி வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான் சீக்கிரம் எதையாவது சொல்லி சமாளி!' என்று மானசீகமாக தன் தலையிலேயே தட்டிக் கொண்டாள்.

"நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன், அம்மாவும், பிள்ளையும் என்னை ரொம்ப தான் வாயாடி என்று கிண்டல் செய்கிறீர்கள். அதனால் இனிமேல் யாரும் பேசாமல் நானாக பேசக்கூடாது என முடிவெடுத்து விட்டேன்!" என்க, அந்த சூழ்நிலையிலும் தன்னை மறந்து வாய் விட்டு சிரித்து விட்டான் ஜெய்சங்கர்.

"ஹஹா... ஜெய்... உன் பெண்டாட்டி என்னடா இப்படி காமெடி செய்கிறாள்? சத்தியமாக... என்னால் முடியவில்லை!" என நெஞ்சில் கை வைத்துக் கொண்ட நகைத்த செண்பகம், "கண்ணு... எதுவும் சபதம் எடுப்பதற்கு முன்பு நம்மால் அதை கடைப்பிடிக்க முடியுமா என்று ஒரு தடவைக்கு நாலு தடவை யோசிக்கனும்டா. அது தெரியாமல் இப்படி அவசரப்பட்டுட்டியே, ச்சு... ச்சூ..." என உச்சு கொட்ட முகம் சிவந்தாள் மணி.

"இரண்டு பேரையும்..." என்று பல்லைக் கடித்தவள் மற்றதை மறந்து, "டேய் திலக்... நீயாவது என் டீமா இல்லையாடா? இவர்களை சும்மா விடக்கூடாது!" என அவனிடம் வேகமாக கையை நீட்டினாள்.

இருவரும் அறைக்குள் ஏதோ ரகசியமாக கிசுகிசுத்து கொண்டிருந்தார்களே என்ற சந்தேகத்தில் இருந்த ஆகாஷ்(திலக்), செண்பகம், ஜெய்சங்கரின் கேலியால் பொங்கி எழுந்த மணியை கண்டு முறுவலித்து, "நான் உங்கள் டீம் தான் சித்தி!" என அவள் கையில் தன் கையை வைத்தான்.

"அது..." என்றவள் திரும்பி மற்ற இருவரையும் ஏளனமாக நோக்கினாள்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro