🕵10🕵
குழந்தையை தன் முதுகில் உப்பு மூட்டையை போல் தூக்கி கை, கால்களை வளைக்க சொல்லி பிடித்துக் கொள்ள செய்தவன் வேகமாக சைக்கிளை உருட்டி பைக் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.
நேரம் நள்ளிரவு ஒரு மணி, வரும் வழியெல்லாம் தான் செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டுக் கொண்ட ஜெய்சங்கர் கோபியை அழைத்து சில ஏற்பாடுகளை செய்ய சொல்லி அறிவுறுத்தி விட்டு நேராக அவன் வீட்டிற்கு சென்றான்.
வாசலில் காத்திருந்தவன் ஒரு கணம் விழித்து பிறகே ஜெய்யின் ஒட்டுத்தாடியை கணித்து விரைவாக அவனை உள்ளே அழைத்து சென்றான்.
ஜெய்யிடம் ஒண்டியிருந்த அந்த ஆறு வயது சிறுவனின் பரதேசி தோற்றம் கோபிக்கு குழப்பத்தை உண்டாக்க விழிகளில் கேள்வியுடன் தன் சீனியரை நோக்கினான்.
தன் நெஞ்சில் புதைந்திருந்த குழந்தையின் முதுகை மென்மையாக வருடியவன், "கோபி... குழந்தை சாப்பிடுவதற்கு பால், பிஸ்கட் ஏதாவது இருக்கிறதா? இருந்தால் கொஞ்சம் எடுத்து வா. உன்னிடம் நிறைய பேச வேண்டும் ஆனால் வேகமாக வேலைகளை முடித்து விட்டு விடிவதற்குள் நான் ஊருக்கு கிளம்ப வேண்டும்!" என்றவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு உள்ளே சென்று குழந்தைக்கு பாலும், பிஸ்கெட்டும் எடுத்து வந்து கொடுத்தவன் அவன் பதிலுக்காக எதிரில் அமர்ந்தான்.
"திலக்... இதை சாப்பிடு சித்தப்பா இதோ வருகிறேன்!" என்று சோபாவில் சாய்த்து அமர வைத்த ஜெய்யை மிரட்சியுடன் நோக்கினான் குழந்தை.
அவன் முன் மண்டியிட்டு தலைமுடியை கோதி விட்டவன், "இங்கே பாருடா கண்ணா... இனி எதற்கும் பயப்பட கூடாது. நீ சித்தப்பாவிடம் பத்திரமாக இருக்கிறாய் உன்னை யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள்!" என்று மிருதுவாக கூறி கன்னம் வருடி விட்டு கோபியை கண்ஜாடையில் அழைத்து சென்றான்.
அவனிடம் தன் வீடியோ பதிவை காண்பித்து விட்டு சுருக்கமாக நடந்ததை விவரிக்க, அதிர்ச்சியில் திகைத்து நின்று விட்டான் அவன்.
"என்ன சார் இது? சிறிது கூட சட்டத்தை குறித்து அச்சமே இல்லாமல் இது போன்ற சம்பவங்கள் ஈவு இரக்கமில்லாமல் ஆங்காங்கே நடந்து கொண்டே தானே இருக்கிறது!"
"ம்... ஆமாம் சரி பேசுவதற்கு நேரமில்லை, இதில் உள்ள போட்டக்கள் எல்லாம் பிரின்ட் போட வேண்டும். பிறகு நான் திலக்கின் அண்ணனை முரடர்கள் இழுத்து போவது போல் எடுத்த ஸ்நாப், அவன் ஏரியில் இறந்த கிடந்தது, இப்பொழுது அவர்கள் அப்பாவை எடுத்தது இவை மூன்றையும் ஒன்றாக ஸ்கேல் செய்து பிரின்ட் அவுட்டுக்கு ரெடி பண்ணு. ஆங்... அந்த மலைப்பகுதியும், மாந்தோப்பும் கூட அடையாளத்திற்கு முக்கியம். நான் அதற்குள் இந்த நோட்டிஸுக்கு தேவையான வாசகங்களை எழுதி விடுகிறேன். இதையெல்லாம் ஒன்றிணைத்து பிரின்ட் போட்டு மூன்று மணிக்குள் இந்த ஊரிலும் பக்கத்து ஊரிலும் வீடு வீடாக கதவு, ஜன்னல் இடுக்குகளில் சொருகி விட வேண்டும். நாளை விடியும் வேளையில் மக்கள் கூட்டத்திற்கு அந்த கயவர் கும்பலும், போலிஸும் தகுந்த பதிலை கூறி தான் ஆக வேண்டும். சரி வா வேலையை தொடங்குவோம்!" என்று எழுத ஆரம்பித்தான் ஜெய்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் வேலையை முடித்தவர்கள் ஆளுக்கு ஒரு ஊராக பிரித்து கொண்டு ஊரடங்கியிருந்த தெருக்களில் வீடு வீடாக சென்று நோட்டீஸை வைத்து விட்டு வீடு திரும்பினர்.
பூட்டிய வீட்டிற்குள் குழந்தை சோபாவில் சுருண்டு உறங்கியிருக்க அவனை தூக்கி கொண்டவன், "சரி கோபி..." என்று பேசத் துவங்கும் பொழுதே குழந்தையின் உடல் விலுக்கென்று தூக்கி போட்டது.
மிரண்டு விழித்தவனை தோளில் சாய்த்து தட்டிக் கொடுத்தவன், "நான் உடனடியாக சென்னை கிளம்புகிறேன். குழந்தை இங்கிருப்பது பாதுகாப்பில்லை, அதுவும் இல்லாமல் அங்கே சென்று இவன் உடல் தேற தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும். சொன்னதெல்லாம் நினைவிருக்கட்டும் எதிலேயும் உன்னை வெளிப்படுத்தி கொள்ளாதே கவனமாக இரு!" என்று எச்சரித்து விட்டு விஸ்வநாதன் வீட்டிற்கு கிளம்பினான்.
கதவை தட்டிய அடுத்த நிமிடம் பெரியவர் திறக்க, பெண்கள் வரவேற்பறைக்கு வந்தனர். ஜெய்யை கண்டு அனைவர் விழிகளும் நிம்மதியை வெளிப்படுத்திய அதே நேரம் குழந்தையை கண்டு குழப்பத்தையும் வெளிப்படுத்தியது.
அவர்களிடம் நடந்ததை விளக்கி வீடியோ பதிவை காண்பிக்க மூவரின் முகமும் முடிவில் கலங்கிப் போயிருந்தது.
"மணி மூன்றரை ஆகிவிட்டது சார் நான் ஊருக்கு கிளம்புகிறேன். எந்த இடத்திலும் என்னை நான் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை இனியும் வெளிப்படுத்த மாட்டேன். அது என்னை சுற்றியுள்ளோருக்கு தான் பிரச்சினையை கொடுக்கும். ஸோ... நாளை காலையில் நீங்களும் ஜாக்கிரதையாக இந்த பிரச்சினையை அணுகுங்கள் முடிந்தவரை மக்களையும் தூண்டி விடுங்கள்!" என்றவன் அவரிடம் பிரின்ட் அவுட்டை கொடுத்து விட்டு தன் உடைமைகளை எடுத்து கொள்ள மாடிக்கு சென்றான்.
கிளம்பி வந்தவனை மணிகர்ணிகா ஒருவித தவிப்புடன் நோக்க, ஒரு நொடி விழிகளை தாழ்த்தி அவளை தவிர்த்தவன் பெரியவர்களிடம் விடைப்பெற்று வெளியேறினான்.
குழந்தையின் முகம் முழுவதும் வெளியே தெரியாமல் ஓரளவுக்கு அவனை ஷாலால் சுற்றியவன் வண்டியில் அமர்ந்து அவனை முன்புறம் தன்னை காணுமாறு அமரச் செய்து விட்டு கிக்கரை உதைத்தான்.
ஒரு வாரம் கழித்து ஃபார்யு டிவியில், இன்னும் சில நிமிடங்களில் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் "என்னை தெரியுமா?" நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக போகிறது.
ஸ்டே டியூன்ட்... என்று சேனலில் பரபரப்பை ஏற்றினார்கள்.
அரைகுறை வெளிச்சத்தில் கோர்ட் சூட்டும் ஹாட்டும் அணிந்த கம்பீரமான ஓர் உருவம் அந்த ரெக்கார்டிங் அறைக்குள் பிரவேசித்தது.
"அனைவருக்கும் வணக்கம்!" என்று கணீரென்று உரைத்து கரங்களை குவித்த உருவம், "இந்நிகழ்ச்சி எது குறித்து என்று தெரியாமலேயே கடந்த ஒரு வாரமாக விளம்பரப்படுத்த பட்டதிலிருந்து வெளிப்படுத்திய உங்கள் அனைவரின் ஆர்வத்திற்கும், ஆதரவிற்கும் மிகவும் நன்றி!" என்றான்.
"நான் ஜேம்ஸ்பான்ட்! வெயிட்... வெயிட்... இருட்டில் மறைந்து கொண்டு இவனை பற்றிய தகவல்களை சொல்ல தான் இப்படி தலைப்பை தேர்ந்தெடுத்து இருக்கிறானோ என்று அதற்குள் கற்பனையை தட்ட வேண்டாம். நாங்கள் இந்நிகழ்ச்சியை தயாரிக்க திட்டமிட்டது வேறொரு காரணத்திற்காக நாம் மறந்து கொண்டிருக்கும் நம் பண்டைய தமிழனையும், வரலாறையும் விளக்கும் வண்ணம் தான் முதலில் வடிவமைத்திருந்தோம். ஆனால் கடந்த வாரம் எங்கள் அலுவலகத்துக்கு வந்த வீடியோ பதிவு ஒன்று அனைத்தையும் தகர்ந்தெறிந்து விட்டு கடந்த காலத்தை விட்டு நிகழ் காலத்திற்கு வந்து எதிர்காலத்தை காப்பாற்றுங்கள் என்று கதறியது. அதைக் கண்டு வேதனையடைந்த நாங்கள் முக்கியத்துவம் எதற்கு என்பதை புரிந்து கொண்டு இந்நிகழ்ச்சியை தயாரித்துள்ளோம்!"
"வெல்... என்னை தெரியுமா? நாம் யாரை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். இவ்வுலகில் மனிதன் என்று பெயர் சொல்லிக் கொண்டு பல அரிய கண்டிப்பிடிப்புகளையும், சாதனைகளையும் நிகழ்த்துகிறோம் என மார்தட்டிக் கொள்கிறோமே... எனக்கு ஒரு சந்தேகம் உண்மையிலேயே நாம் மனிதர்கள் தானா? நான் ஒரு மனிதன் என நிரூபிக்க இது போதுமா? மனிதன் என்பவன் யார் அவனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன? ஐய்யையோ... வேண்டாங்க இந்த விஷப் பரீட்சையே நமக்கு வேண்டாம் நாம் இந்த சப்ஜெக்டை அப்படியே டீலில் விட்டு விடுவோம். இதையெல்லாம் தான் அலசுவதற்கு நிறைய சோஷையல் மீடியாக்கள் இருக்கிறதே அதில் தெரிந்து கொள்வோம்!"
"நாம் நம் வேலையை மட்டும் பார்ப்போம் சரி, தன்னை இருளில் மறைத்து கொண்டு நம்மை கேள்வி கேட்கும் அந்த என்னை தெரியுமா யார்? வேறு யாருமில்லைங்க நாம் தொலைத்து கொண்டிருக்கும் நம்முடைய அடையாளமான மனிதநேயம் தான்!"
"இதற்கு எதற்கு இத்தனை பில்டப் என்கிறார்களா? நாம் பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது, அதற்கு முன் இந்நிகழ்ச்சியை தயாரிக்க உத்வேகமாக அமைந்த அந்த வீடியோ பதிவை பார்த்து விடுவோம். அப்பொழுது தான் நாம் என்ன விவாதிக்க போகிறோம் என்பது உங்களுக்கு தெளிவாக புரியும்!" என்ற ஜெய்சங்கர், திரையில் திலக்கின் தந்தை அளித்த வீடியோ பதிவை ஓட விட்டு விட்டு ஓரமாக சென்று கைகட்டி நின்று கொண்டான்.
வீடியோ முடிந்ததும் நிறுத்தி விட்டு முன்னே வந்தவன் லேசாக தொண்டையை செருமி, "இந்த வீடியோ குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன? ஒரு அப்பாவி மனிதன் தன் வாழ்க்கையில் எவ்வாறெல்லாம் பாதித்திருக்கிறான் என்பதை தெரிந்து கொண்டீர்களா? நன்றாக படித்து டிகிரி முடித்த ஒரு இளைஞன் தன்னுடன் பயின்ற மாணவியை காதலித்து வீட்டினரின் எதிர்ப்பால் ஊரை விட்டு வந்து திருமணம் புரிந்து ஒரு கிராமத்தில் கிடைத்த வேலையில் தஞ்சமடைகிறான். துவக்கத்தில் வசந்தமாக சென்ற வாழ்க்கையின் சின்னமாக இரண்டு ஆண் குழந்தைகள். இந்நிலையில் தான் அவர் மனைவியின் உடல்நலம் பாதிக்கிறது, மருத்துவ பரிசோதனையில் ஒரு கிட்னி முற்றிலும் ஃபெயிலியர் மீதமிருக்கும் ஒன்றும் மற்றொன்றிலிருந்து பாதிப்படைய ஆரம்பிக்கிறது. அதை முழுவதும் நீக்கி சிகிச்சையளித்து காப்பாற்ற வேண்டுமானால் ஆப்ரேஷனுக்கு இரண்டு லட்சம் தேவை. எங்கே போவார்? வசதியான குடும்பம் கிடையாது, சரி சிறு தொகையையாவது ஏற்பாடு செய்யலாம் என்றால் வீட்டை விட்டு வந்தவருக்கு சொந்த பந்தம் எங்கிருந்து உதவும்? வேறென்ன செய்வார் மீதமிருக்கும் வழி... பெரும்பான்யான ஏழ்மை, நடுத்தர குடும்பங்கள் நாடுகின்ற மீட்டர் வட்டி பணம் தான். அன்றாடம் செய்திகளில் எச்சரிக்கும் விஷயம் தான் என்றாலும் எங்கேயாவது நடப்பது தானே நமக்கு வருமா என்ன என்ற அலட்சியமும், தங்கள் உடனடி தேவைக்கும் வேறு வழியில்லாததால் மக்கள் அதில் விட்டில் பூச்சிகளாய் விழுகிறார்கள்!" என்றான் பெருமூச்சுடன்.
"இங்கே இந்த மனிதரும் தன் காதல் மனைவியை காப்பாற்ற அந்த ஊரில் உள்ள ஒரு அரசியல் புள்ளியிடம் பணம் கடன் பெறுகிறார். அங்கே அந்த சுழலில் மாட்டியவர் தான் இறுதி வரை தப்ப முடியவில்லை. செய்த ஆப்ரேஷனும் ஃபெயிலியராகி மனைவியின் உடல்நிலையை தேற்ற முடியவில்லை. வாங்கிய பணத்திற்கும் வட்டியை கொடுக்க முடியவில்லை, அடியாளை வைத்து மிரட்டிய அப்பிரமுகர் இறுதியில் சொல்லவே வாய் கூசுகிறது இறக்கும் வரை அவர் மனைவி தங்கள் இடத்தில் இருக்க வேண்டும் என்று சொல்லி செல்கிறார். அந்த வார்த்தையில் நடுங்கிய காதல் ஜோடிகள் யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டே காலி செய்து கிளம்புகின்றனர். ஆனால் கழுகாக கண்காணித்து கொண்டிருந்த அவன் ஆட்களுக்கு விஷயம் தெரிந்து ஊர் எல்லையில் வண்டியை மடக்கி அக்குடும்பத்தை தங்கள் இடத்திற்கு கடத்தி செல்கின்றனர். அதிர்ந்தவர்கள் தப்பும் வழியறியாது தவிக்க இறுதியில் அவர் மனைவி கத்தியை கொண்டு தன் கழுத்தை அறுத்து அவர் மடியிலேயே துடிதுடித்து இரத்த வெள்ளத்தில் இறக்கிறார். அதைக் கண்ட குழந்தைகள் அலற, தலையிலடித்து கொண்டு கதறுவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை. பணம் திருப்பி தர முடியாத ஒரே காரணத்தால் தங்கள் இடத்தில் வைத்து அணுஅணுவாய் அவர்களை சித்திரவதை செய்கின்றனர். தன் பிள்ளைகளையாவது எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என எவ்வளவோ போராடுகிறார் அதன் பலனாக தன் பெரிய மகனையும் அந்த கயவர்களுக்கு காவு கொடுக்கிறார்!" என்று வேதனையுடன் நிறுத்தி விட்டு சில நொடிகள் அமைதி காத்தான்.
"இந்த பதிவு எங்களுக்கு கிடைத்த பிறகு நாங்கள் அந்த ஊரில் விசாரித்து அறிந்து கொண்டது பெரும் வியப்பை அளித்து மனிநேயம் இன்னும் உயிருடன் இருக்கிறது என்பதை பறைச்சாற்றியது. இப்பதிவை அனுப்பிய முகம்மறியா அம்மனிதர் உள்ளூரிலும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி அந்த கும்பலை கூண்டோடு கைது செய்ய மக்கள் புரட்சியை கிளப்பி இறுதியில் இக்கொடுமைக்கு நியாயம் வாங்கி தந்திருக்கிறார். ஆனால் என்ன ஒன்று பாதிக்கப்பட்ட மனிதரை தான் காப்பாற்ற முடியவில்லை. விஷயம் கசிய ஆரம்பித்து மக்கள் தங்களை நெருங்கும் முன் அவரை கொன்று விட்டனர் அந்த பாவிகள்!"
"இப்பொழுது இந்த நிகழ்ச்சியின் அவசியம் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இது முடிந்து போன குற்றத்தை அலசும் கிரைம் டைம் இல்லை. நம் மாநிலத்தில் இது போல் பல விஷயங்கள் ஈவ் டீஸிங், பாலியல் தொந்திரவு, வன்முறை, நிலத்தை அபகரித்தல், எளியோரை மிரட்டும் கூட்டம் இப்படி எத்தனையோ நடக்கிறது. அது குறித்து உங்களுக்கு தெரிய வருவதை விஷயம் முற்றி விடும் முன் எங்களுக்கு இரகசிய பதிவாக அனுப்பி வைத்தால் இப்பதிவை போலவே முகமறியா பல மனிதநேய உள்ளங்களின் உபயத்தால் பாதிக்கப்பட்டவர்களை நம்மால் காப்பாற்ற முடியும். எதுவுமே தனியாக செய்தால் தான் பிரச்சினை குழுவாக மறைந்திருந்து செயல்படும் பொழுது எவ்வித ஆபத்தும் உங்களை நெருங்காது!" என்று தைரியமூட்டியவன் மேலே உத்வேகமாக பேசிக் கொண்டே சென்றான்.
'என்னை தெரியுமா?' மக்களிடம் நன்றாக ரீச்சாகி டி.ஆர்.பியில் முதல் இடத்தை பிடித்தது. ஜெய்சங்கரின் ஜேம்ஸ்பான்ட் இமெயில் முகவரிக்கும் பல்வேறு குற்றங்கள் தொடர்பான பதிவுகள் வந்து அவன் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கி வெற்றி நடை போட வைத்தது.
இரண்டு மாதங்களுக்கு பிறகு, செண்பகம் ஜெய்யை துரத்திக் கொண்டு வீடு முழுக்க ஓடிக் கொண்டிருந்தார்.
"டேய் அடங்காதவனே... மரியாதையாக நின்று விடு கையில் மாட்டினாய் என்றால் ஆய்ந்து விடுவேன் ஆய்ந்து!" என்று மிரட்டினார்.
தலைக்கு நல்லெண்ணை தேய்த்து கொள்ள தான் இத்தனை போராட்டம்.
"பாட்டி... சித்தப்பாவை நான் பிடித்து விட்டேன் சீக்கிரம் வாங்க!" என்று தன் சின்ன கைகளினால் ஜெய்யின் கால்களை வளைத்துப் பிடித்தான் திலக்.
"இதோ வந்து விட்டேன் அவனை அப்படியே பிடிடா கண்ணா!" என்ற செண்பகம் வேகமாக அருகில் வந்தார்.
திலக்கை மீறி செல்ல முடியும் என்றாலும் அவன் மகிழ்ச்சியை கெடுக்க விரும்பாமல் கெஞ்ச ஆரம்பித்தான் ஜெய்.
"டேய்... நீ என் செல்லக்குட்டி இல்லை சித்தப்பாவை விடுடா!"
அவன் மறுத்து தலையசைத்து சோபாவில் தள்ள, செண்பகம் அவனை பிடித்து உச்சியில் எண்ணை தேய்க்க ஆரம்பித்தார்.
"ஹும்... இந்த குட்டி சமத்து பையன் கூட ஒழுங்காக வார விடுமுறையில் எண்ணை வைத்து கொள்கிறான். ஆனால் நான் பெற்ற எருமை இருக்கிறதே..." என்றவரை தடுத்தவன், "அவனும் பெரியவனாகும் பொழுது தெரியும் கச்சேரி!" என்றவனின் முகம் எண்ணை வாசத்திற்கு அஷ்டகோணலாகியது.
"நான் எல்லாம் எப்பவுமே பாட்டி சொன்ன பேச்சை தான் கேட்பேன்!" என்றவனை அள்ளி முத்தமிட்டார் செண்பகம்.
"அப்படி சொல்லடா என் தங்கக்கட்டி!"
இருவரையும் பார்த்து போலியாக முறைத்தவன் பழிப்பு காண்பித்து விட்டு தன் அறைக்கு செல்ல திலக் கலகலவென்று சிரித்தான்.
குளித்து முடித்து கண்ணாடியின் முன் நின்று தலையை துவட்டிக் கொண்டிருந்தவனை மொபைல் அழைத்தது.
"ஹலோ!" என்றவுடன் எதிர்முனை அமைதி காக்க, எடுத்து டிஸ்ப்ளேவை பார்த்தால் ஏதோ புது நம்பர்.
யோசனையுடன் மீண்டும் காதருகில் கொண்டு செல்ல, "நான் மணி பேசுகிறேன்!" என்ற குரலில் ஜெய்யின் இதயதுடிப்பு கூடியது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro