என் காதல் சொல்ல நேரமில்லை
அழகான காலை பொழுது விடிந்தது கூட தெரியாமல் தூங்கி கொண்டிருந்த என் விழிகள். என் குழந்தைகள் சத்தம் என் செவிகளில் வந்து எட்ட, மெதுவாக கண்களை திறந்து பார்த்தேன்.
"அப்பா," என்று மழலை நீங்காத தன் குரலில் கூறி கொண்டு ஓடி வந்து என்னை கட்டி அனணத்து கொண்டாள், என் மகள் அம்மு. அவளை தொடர்ந்து என் மகனும் ஓடி வந்தான்.
இரண்டு மாதங்களுக்கு பிறகு என் குழந்தைகளை பார்த்த மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருந்தேன். நான் தற்போது ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறேன். இரண்டு மாதங்களுக்கு ஓரு முறை விடுமுறைக்கு வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தேன்.
நேற்று நள்ளிரவு வந்து சேர்ந்ததால் என் குழந்தைகளை எழுப்ப மனம் வரவில்லை. அவர்களுக்கு வாங்கி வந்த பொருட்களை எடுத்து நீட்டவே, அதை மகிழ்ச்சியுடன் பெற்று கொண்டனர்.
என் மனைவி தெய்வ பக்தி அதிகமுடையவள் என்பாதால் இந்த நேரத்தில் பக்கத்தில் உள்ள கோவிலுக்கு சென்றிருப்பாள்.
ஒரு சில மணி நேரத்தில், குழந்தைகளை பள்ளியில் கொண்டுவிட்டு விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தேன். அன்று காதலர் தினமென்பதால் இளம் காதல் ஜோடிகள் உலவி கொண்டிருந்த வண்ணமாய் இருந்தன.
அப்போது திடீரென என் மனமும் என் முதல் காதல் துளிர்விட்ட நினைவுகளை தேடி சென்றது. என்னை அறியாமல் புன்னகை சூழ்ந்தது.
10 வருடங்களுக்கு முன்
என் பெயர் மதன். என் குடும்பம் அழகான குருவி கூடு போன்றது அதில் அப்பா, அம்மா, தங்கை மற்றும் நான் மிகவும் மகிழ்ச்சியோடு வாழ்ந்த வாழ்க்கை ஓர் வரம். எனக்கு ராணுவத்தில் வேலை கிடைத்த நேரமது. குடும்பம் மற்றும் நண்பர்களை பிரிய மனமின்றி இருந்த காலம், வேலையில் சேர்ந்துவிட்டேன் ஒரு வழியாக. ஒரே ஒரு ஆருதல் என்னவென்றால் என் உயிர் நண்பனுக்கும் எனக்கும் ஒரே இடத்தில் வேலை. புதுடெல்லியில் சக ராணுவ வீரர்களுடன் நாங்களும் பயிற்சி பெற்றோம். சிறு சிறு இன்னல்களையும் சந்தித்தோம் அதில் மொழி பிரச்சினையும் ஒன்று. நாட்கள் போக போக இந்தி பேச கற்றுக் கொண்டோம். நாட்கள் கடந்து 6 மாதங்கள் ஆயின, விடுமுறை நாளும் வந்தது. எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை அனைவரையும் சந்திக்க ஆவலோடு இருந்தோம்.
மூன்று நாள் ரெயில் பயணத்திற்கு பிறகு சொந்த ஊரை வந்தடைந்தது. அன்று காலை கலைந்த முடியுடன் தூங்காத கண்களோடு என் துணி பையை தோளில் சுமந்து கொண்டு ரெயிலை விட்டு இறங்கினேன்.
என் கண்கள் அவள் கண்களில் விழுந்திட இமைக்கா அந்த நொடிகளில் அவளும் என்னை நோக்கிட பேரழகியாக தெரிந்தாள். என்னை அறியாமல் அவளது கண்களை வைத்த கண் வாங்காமல் பார்த்த அழகிய நோடிகள் அது.
என் நண்பன் பேச்சு எதுவுமே என் செவிகளை எட்டவில்லை. "மதன்! வா டா," என்று என் கையை பிடித்து இழுத்து சென்றான். சட்டென்று, அவள் திரும்பி நான் போகும் திசை நோக்கி பார்த்தாள். ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி எனக்குள் சூழ்ந்தது. அவள் முகம் மறையும் வரை பார்த்து கொண்டே நடந்தேன்.
"யாருடா அந்த பொண்ணு?" என்று நண்பன் கேட்க "தெரியலடா," என்று கூறி ஒரு விதமான வெட்கத்தில் திளைத்தேன்.
"என்ன டா ஆச்சு உனக்கு?"
"என்னமோ மாதிரி இருக்கு டா, அந்த பொண்ணை இன்னொரு முறை பார்த்து விட்டு வரவா டா" என்று தயக்கத்தோடு கேட்டேன்.
அதற்குள் என்னை அழைத்து செல்ல அப்பா பைக்கில் வந்தார். என் நண்பனை அழைத்து செல்ல அவனுடைய தம்பி வந்திருந்தான்.
சற்று நேரத்தில் வீட்டுக்கு வர, அம்மாவும் தங்கையும் என்னை பார்க்க வாசலில் நின்று கொண்டிருந்தனர். நீண்ட நேரம் அன்பை பரிமாறி கொண்டிருந்தோம். பின்பு, அம்மா வகை வகையாக சமைத்து வைத்ததை குடும்பத்தோடு சேர்த்து உண்டு மகிழ்தோம். ஆறு மாதங்களுக்கு பிறகு ருசியான உணவை கண்ட என் நாக்கு ஒரு பிடி பிடித்தது.
அன்று இரவு தூங்க வந்த நான், தூக்கம் இன்றி தவித்தேன். பொதுவாக படுத்த உடனே தூங்கி விடுவேன் அது எந்த நேரமாக இருந்தாலும் சரி. கண்களை மூடினால் அவளது பிம்பம் முன்னே, அவளது பார்வை வந்து வந்து செல்கின்றது. அங்கும் இங்கும் புரண்டு படுத்து பார்த்தேன் அப்போது புரிந்தது தூக்கம் என்னை விட்டு வெகுதூரம் சென்று விட்டது என்று. என் கண்களை மூடி அவளது கண்களை மிக அருகில் பார்த்தேன். என்னுள் எண்ணற்ற மகிழ்ச்சி பெருகியது. என் உதடுகள் தானே சிரிக்க ஆரம்பித்தது. இப்படி ஒரு அனுபவம் கிடைத்தது இதுவே முதல் முறை. நான் அதை ரசிக்க ஆரம்பித்தேன். நேரம் ஆக ஆக என்ன இது? இது தான் காதலா? என பல கேள்விகளை கேட்டு கொண்டேன். காதல் சுகமானது என்பதை அவளது விழிகளில் உணர்தேன்.
அதிகாலை 5 மணி அளவில் தூக்கம் எட்டி பார்த்திருக்க கூடும்.
11 மணி அளவில் அம்மா வந்து என்னை எழுப்பிவிட்டார். காலை உணவு, மதியம் உணவு , மாலை நண்பர்கள் உடன் கிரிக்கெட் விளையாட்டு, இரவு உறக்கம் இல்லாமல் அவளது நினைவுகள் என நான்கு நாட்கள் உருண்டோடியது.
நான்கு நாட்களுக்கு பின்
அன்று இரவு மொட்டை மாடியில் தூங்க முடிவு செய்தேன். அன்றும் அதே நிலைமை தான். அவளது நினைவுகளை வைத்து நாளுக்கு நாள் வலுவான மனக்கோட்டை கெட்ட ஆரம்பித்து விட்டேன். இனி அவள் இல்லாமல் நான் இல்லை என்ற நிலையில் இருந்த எனக்கு அன்று மகிழ்ச்சியுடன் பயமும் சேர்ந்து ஆட்டி படைத்தது. அவளை நேரில் பார்க்க மனம் ஏங்கியது. அவளை எப்படி பார்ப்பேன்? அவள் ஊர்? அவளுக்கு என்னை பிடிக்குமா? அவள் மனதில் வேறு காதல் உண்டோ? என பல கேள்விகள் என் மனதை நச்செரித்து கொண்டிருந்தது. சோகம் சூழ்ந்தது.
மறுநாள் காலை அதே ரயில்வே நிலையத்திற்கு அவளை தேடி சென்றேன். அவளை அன்று பார்த்த நேரமும் எட்டியது. அவளை பார்த்து விட வேண்டும் என்று அங்கேயும் இங்கேயும் தேடினேன். நீண்ட நேரம் ஆகியும் அவளை காணவில்லை. நேரம் ஆக ஆக மனதில் சஞ்சலம், வருத்தம், ஏக்கம் என துவண்டது. மதியம் வரை தேடினேன் பின் ஏமாற்றத்தோடு வீடு திரும்பினேன்.
இதைபோல் ஒரு வாரம் ஏமாற்றத்தோடு நகர்ந்தது. எப்போதும் கலகலப்பாக இருக்கும் நான் தனிமையை விரும்பினேன். அவளை காணத ஏக்கம் என்னை கொல்லாமல் கொன்றது. எதற்கு தான் அவளை பார்த்தேன் என்று மனதுக்குள் விறக்தி ஏற்பட்டது.
நாட்களும் உருண்டன, இன்னும் ஒரு வார விடுமுறையே உள்ளது.
சித்திரை மாதம் என்பதால் ஆங்காங்கே கோவில் திருவிழாக்களும், திருமண வீடுகளுமாய் இருந்தது. என் மாமா, அவரது ஊர் கோவிலில் இரண்டு நாட்கள் திருவிழாக்கு எங்களை அழைக்க வந்திருந்தார். பக்கத்தில் நெருங்கிய உறவினர் திருமணம் இருந்ததால் அம்மா அங்கு சென்று விட்டார். எனக்கு எங்கு போகவும் மனமில்லாமல், "வேலை இருக்கிறது, மதியம் தங்கையை அழைக்க வருகிறேன், மாமா" என்று கூறினேன். என் தங்கையை அழைத்து கொண்டு கோவிலுக்கு சென்றார் மாமா.
பின், மதியம் தாண்டி தங்கையை அழைக்க சென்றேன். கோவிலில் உச்ச பூஜை நடந்து கொண்டிருந்த நிலையில் நானும் கோவிலுக்கு சென்றேன். கூட்டம் அதிகம் இருந்ததால், என் மாமாவையும், மச்சானையும் பார்க்க முடியவில்லை. ஆண்களுக்கு எதிர் திசையில் பெண்கள் அமர்ந்திருந்தனர். என் தங்கை எங்கே இருக்கிறாள்? என்று தேட ஆரம்பித்தேன்.
என் கண்கள் என்னவள் கண்களுக்குள் சிக்கி விட என் மனது மகிழ்ச்சியில் பறந்தது. இது கனவா? நிஜமா? என்று என்னையே கிள்ளி பார்த்து கொண்டேன். நாட்கள் கடந்து அவளை என் கண்ணில் காட்டிய இறைவனுக்கு என் நன்றி. இவள் எனக்காக பிறந்தவள் என்று உள்மனது சொல்லக்கொண்டே இருக்க, அவளை பார்த்த என் கண்கள் இமைக்க மறந்தது. என்னேயே மறந்து அவளை பார்த்தேன். திடீரென அவளும் என்னை நோக்க புதுவித உத்வேகத்துடன் அவளை பார்த்து புன்சிரித்தேன். அவள் கண்டுகொள்ளாமல் திரும்பி விட்டாள்.
மீண்டும் கண் இமைக்காமல் நான் அவளை பார்க்க, சிறிது நேரத்தில் அவளும் என்னை பார்த்து சட்டென்று முறைத்துவிட்டாள். இம்முறை எனக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை. அவளது குழந்தைத்தனம் மாறாத முகத்திற்கு முறைக்க தெரியவில்லை ஒன்று, இன்னொன்று அவள் என்னை பார்த்து முறைத்தது இனி அவளுக்கு என் அறிமுகம் தேவையில்லை என்பது. இவ்வளவு நாள் அவளை காணாமல் ஏங்கிய என் கண்களை என்வசப்படுத்த இயலவில்லை. அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தேன். அவள் என் கண்களில் படாமல் முன்னால் இருந்தவர் பின்னே ஒழிந்து கொண்டாள்.
மீண்டும் நான் அவளை பார்க்கிறேனா என்று உறுதி செய்ய நிச்சயம் என்னை பார்ப்பாள். நான் சற்று ஓரமாய் நின்றேன். சற்று நேரத்திற்கு பிறகு மெதுவாக எட்டி பார்த்தாள், அவள் கண்கள் அங்கும் இங்கும் தேடியது. எனக்கு அந்த நொடிகளை சொல்ல வார்த்தையே இல்லை. இந்த நொடி இப்படியே நீளாத என்ற ஆசை, என்னவள் என்னை தேடிய தருணம்.
கோவில் பூஜையும் நிறைவுற்றது. கூட்டம் கலைந்தது.
"மச்சான் எப்போ வந்தாய்?" என்றான் என் மச்சான்.
"சற்று முன்பு தாண்டா," என்று சொல்லியபடியே அவளை தேடினேன்.
"ராணுவத்தில் சேர்ந்த பிறகு ஆளே மாறிட்டா. சும்மா ஜம்முன்னு ஹீரோ போல இருக்க டா"
"சும்மா கலாய்க்காத டா,"
என் தங்கை வந்தாள்.
"அண்ணா! எவ்வளவு நேரமாக உன்னை பார்த்து கை அசைத்தேன் தெரியுமா? நீ என்னை பார்க்காமல் யாரை பார்த்து பேய் பிடித்தவன் போல நின்றாய்?"
ஐயோ! தங்கை பார்த்துவிட்டாளோ?
மாமாவும் அங்கே வர சற்று நேரம் பேசி விட்டு கிளம்பிவிட்டோம்.
வீட்டுக்கு வந்த பிறகு அங்கே நடப்பேன் இங்கே நடப்பேன், தனியாக பேசியபடி நடப்பேன். அவளை பார்த்த மகிழ்ச்சியில் தலை கால் புரியாமல் பறந்தேன். நாளைக்கு மீண்டும் பார்க்க போகிறேன் என்கிற ஆனந்தமே தனி சுகம் தான்.
எப்போ டா காலை பொழுது வரும்? நாளைக்கு அவளை பார்க்க என்ன சட்டை போடலாம் என்ற குழப்பம் அது வேற. நீண்ட நேரத்திற்கு பிறகு ஒரு வழியாக சட்டையை தேர்தெடுத்தேன். எப்போது தூங்கினேன்னு தெரியல.
மறுநாள் காலை,
காலை எட்டு மணிக்குள் ரெடி ஆகி விட்டேன். மறுபடியும் கண்ணாடி முன் நின்று தலை கோதினேன். அழகாக இருக்கிறேனா?
அம்மா காபி கொண்டு தந்தார். நான் காபியை வாங்கி கொண்டு, "அம்மா, நான் அழகாக இருக்கிறேனா?"
"உனக்கு என்னடா குறை? ராஜா போல இருக்க. எவ்வளவு கல்யாண சம்மந்தம் உனக்கு வருது தெரியுமா?'"
"போ! இப்போதைக்கு வேண்டாம் அம்மா. தங்கச்சி ரெடி ஆயிட்டாள மாமா வீட்டூக்கு போக?"
"இல்லடா, அவள் கல்லூரிக்கு கிளம்புரா"
"அப்படியா! சரி மா. நான் மாமா வீட்டுக்கு கிளம்புறேன்"
"சரி மெதுவாக போ,"
அன்று காலை 9.30 மணிக்கே சென்று அவளுக்காக காத்துக் கொண்டிருந்தேன். நேரம் ஆக ஆக ஒருவர் பின்னர் ஒருவராய் வந்த வண்ணம் உள்ளனர். அவளை காணவில்லை. என் மனதில் சோகம் எட்டி பார்க்க, மீதமுள்ள நம்பிக்கையில் அவளை எதிர்பார்த்தேன். அவள் வரவே இல்லை. கோவில் திருவிழாவும் இனிதே நிறைவுற்றது. அவளை பார்க்காதது ஏக்கமாய் மாறி கண்ணீர் கெட்டி நின்றது.
என் மாமா, மச்சான் யானரயும் பார்க்க மனமில்லாமல் கிளம்பி விட்டேன். வீட்டுக்கு வரும் வழியில் கண்களில் பெருக்கேடுத்த கண்ணீர் துளிகள் என் கன்னத்தையும் சட்டையும் நனைத்தது. கைபேசி ஒலித்தது, அப்போது சாதாரண நோக்கியா போண் வைத்திருந்தேன். என் தங்கையிடம் இருந்து அழைப்பு.
"அண்ணா, இன்று மதியத்திற்கு பிறகு திடீர் பந்த் அறிவித்துள்ளனர் அரசியல் சார்பாக. நீ வா என்னை அழைத்து செல்ல," என்றாள்.
"அப்படியா! இதோ வருகிறேன்," என்று பைக்கை திருப்பி கல்லூரிக்கு சென்றேன்.
சற்று நேரத்தில் கல்லூரிக்கு சென்றடைந்தேன்.
நான் கனவில் கூட நினைத்து பார்க்க வில்லை என் தங்கையும் என்னவளும் தோழிகள் என்று. என் தங்கை நான் வந்ததை கவனிக்காமல் அவளிடம் சிரித்து பேசி கொண்டு நிற்கிறாள். எனக்கு பட்டென்று ஆனது, படபட வென இதய துடிப்பு வேற.
என்னவள் என்னை பார்க்க தலையை குனிந்துவிட்டேன்.
"அண்ணா!" என்று தங்கை அழைக்க நிமிர்ந்து பார்த்தேன் என் தங்கையும், என்னவளும் என் அருகில். படபட வென இதயமே நின்று விடும் போல ஓர் உணர்வு.
"அண்ணா! இவள் தான் மலர், என் உயிர் தோழி. அன்று மாமா வீட்டு கோவில் திருவிழாவில் இவளை அறிமுகம் செய்து வைக்க முடியல. இவளை பத்தி அடிக்கடி வீட்ல சொல்லியிருக்கேன் நியாபகம் இருக்குதா அண்ணா?"
இவள் தான் மலரா. ஐயோ! என் தங்கையின் தோழி, அவளை நிமிர்ந்து பார்க்க மனமில்லை.
"என் அன்பான அண்ணன் மதன் இவர்தான். நான் சொன்னேன்-ல என் அண்ணண் உன்னையும் சரி, எந்த பெண்களையும் நிமிர்ந்து கூட பார்க்கமாட்டான்னு" என்று என் தங்கை என்னை அறிமுகம் செய்ய, முடியல என்னாலயே.
"சரி வா வீட்டுக்கு போவோம்" என்றேன். என்னை அறியாமல் என்னவள் கண்களை பார்க்க இம்முறை சற்று வித்தியாசமான பார்வை. அவளும் என்னை ஒருவித தயக்கத்துடன பார்க்க ஏதோ சொல்ல வருகிறாள் என்று அவள் பார்வை காட்டி கொடுத்தது.
"அண்ணா, மலர் அப்பா வெளியூர் சென்று விட்டார். அவள் வீடு நம்ம மாமா வீடு பக்கம் தான் கொண்டு விட்டுவிட்டு போவோம், முடியாதுனு சொல்லாத அண்ணா பாவம் அவள். பைக்கில் நம்ம அட்ஜஸ்ட் செய்து போவோம்"
இது என்ன திருவிளையாடல், கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல இருந்தது. அவளை விட்டு விட்டு போகவும் மனம் வரவில்லை.
நான் என்னவளை பார்க்க அவள் கண்களில் தெளிவு ஏற்பட அவளுக்கு எங்களுடன் வருவதற்கு சம்மதம் என்பதை உணர்ந்தேன்.
தயக்கதோடே இருவரையும் ஏற்றி சென்றேன். என் மனதுக்குள் நிறைய குழப்பங்கள் அதில் முக்கியமானது என் தங்கையின் தோழியை காதல் செய்வது சரியா? தவறா?
பயணம் அமைதியாகவே சென்றது. அவள் வீடும் வந்தது, பைக்கிலிருந்து இறங்கினாள். உதட்டோரம் அழகிய புன்னகையோடே வீட்டுக்கு வருமாறு அழைத்தாள்.
என் தங்கையும் உடனே பைக்கிலிருந்து இறங்கி, என்னையும் அழைத்தாள். தயக்கதோடே நின்று கொண்டிருந்த என்னையும் அழைத்தாள் என்னவள்.
அவள் வீட்டுக்கு சென்றிருந்தேன். அங்கு அவளுடைய அம்மா இருந்தார். நன்கு உபசரித்தார். ஒரே மகள் என்பதை அறிந்தேன். அவள் வீட்டில் அவள் தான் ராணி.
சற்று நேரத்தில் ஜுஸ் கொண்டு வந்து தந்தாள்.
"உனக்கு வேலை எல்லாம் எப்படி போகுது? மூன்று வாரத்திற்கு முன்பு உங்க வீட்டுக்கு வந்தோம்," என்று மலர் அம்மா கூறினார்.
"அப்படியா!" நான் ஆச்சிரியத்தோடே கேட்டேன். அப்போ ஏற்கனவே மலர் குடும்பம் என் குடும்பத்தோடு அறிமுகம் இருக்கிறது எனக்கு தான் தெரியவில்லை.
"உன் மாமாவின் மனைவி எங்களுக்கு நெருங்கிய உறவினர். உனக்கு தெரியாதா?"
சரி சரி என்று தலையை ஆட்டி கொண்டேன். நேரம் ஆக ஆக நானும் சகஜமாக பேச ஆரம்பித்து விட்டேன்.
"இனி கிளம்பிகிறோம், ஒருநாள் எங்கள் வீட்டிக்க வாங்க" என சொல்லிவிட்டு அவளை பார்த்தேன். அவள் என்னை உற்று நோக்கினாள், ஏதோ அவள் என்னிடம் சொல்ல வேண்டும் என்று அவள் முகபாவனை காட்டியது. அவளுடைய ஏக்கமான பார்வைக்கு அர்த்தம் புரியாமல் திகைத்தேன். வேறு வழியின்றி அங்கிருந்து கிளம்பினோம்.
வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். அவளுடைய பார்வைகான அர்த்தம் என்ன? என என்னை நானே கேட்டு கொண்டேன். ஏக்கத்தோடே அவள் பார்த்த பார்வை தான் காதலா?
நாளை அதிகாலை வேலைக்கு திரும்பும் நாள். இனி அவளை பார்க்கவும் சந்தர்ப்பம் அமையாது. வேலைக்கு லீவும் போட முடியாது டீல்லியிலுருந்து இப்போது ராஜஸ்தானுக்கு இடமாற்றம், என் தோழனுக்கு மேற்கு வங்காளத்தில் இடமாற்றம். எனக்கு மீதமுள்ள நேரம் கடுப்பாகவே நகர்ந்தது.
மறுநாள் அதிகாலை வேலைக்கு புறப்பட்டு சென்றேன். ரயில்வே நிலையத்தில் அவளை முதல்முறையாக பார்த்த இடத்தை பார்க்கும் போது என் உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை. ரயில் வந்தது இருக்கையில் ஏறி அமர்ந்தேன். இனி எவ்வளவு மாதம் கழித்து என் குடும்பத்தையும் , மலரையும் பார்ப்பேன்? புது இடம் வேற இம்முறை ஆறுதலுக்கு கூட என் நண்பன் இல்லை அனாதையாக உணர்ந்த தருணங்கள்.
முன்று நாட்கள் ரயிலில் கடந்தது அவள் நினைவுகளோடே.
ராஜஸ்தான்
ராஜஸ்தான் பாலை வனம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. காலையிலேயே வெயில் சுட்டெரித்தது.
வேலையில் சேர்ந்தேன். தமிழ்நாட்டிலிருந்து ஆறு பேர் இருந்தது ஏதோ கொஞ்சம் மகிழ்ச்சி. நான் யாரிடமும் அவ்வளவாக ஒட்டவில்லை இம்முறை. மலர் நினைவுகள் போதும் என்றிருந்தேன்.
திடீர் திடீரென அவள் கடைசியாக என்னை பார்த்த பார்வை கொல்லாமல் கொன்றது. அந்த பார்வைகான அர்த்தம் என்ன?
2 வாரம் நரகமாய் நகர்ந்தது. இனி ஒரு நிமிடம் அவளை பார்க்காமல் இருக்கமுடியாத நிலைமைக்கு ஆளானேன்.
லீவு கிடைக்க வாய்ப்பே இல்லை.
ஒரு யோசனை உதித்தது. என் ஊரில் உள்ள நண்பர்களிடன் என் பாட்டி இறந்து விட்டதாக இங்கே தகவல் சொல்ல சொன்னேன். அவர்களும் அவ்வாரே செய்தனர்.
எப்படியோ ஒரு வழியாக விடுமுறை கிடைத்தது. மன்னிச்சிரு பாட்டி உன்னை நான் பள்ளி பருவத்திலிருந்தே வெவ்வேறு காரணங்களுக்காக அடிக்கடி கொன்று விடுவதற்காக.
இம்முறை விமானத்தில பயணம், வீட்டுக்கு சீக்கிரம் வந்து சேர்ந்தேன். அவளுக்கு என்னை பிடித்திருந்தால் எப்படியாவது என் காதலை சொல்ல வேண்டும் என்ற முடிவோடு வந்தேன்.
என் வீட்டில் என்னை கண்ட மகிழ்ச்சியில், என்ன திடீர் விடுமுறைனு கூட கேட்கவில்லை.
நாட்கள் எப்போதும் போல நகர்ந்தது ஒரே ஒரு வித்தியாசம் வழக்கத்தை விட, என்னவளுக்கு தெரியாமல் தினமும் பின் தொடர்ந்தேன் வாழ்வில் ஒரேயொரு சந்தர்ப்பத்தை தேடி. அவளுக்கு என்னை பிடிக்காவிட்டால் நிச்சயம் அவள் வாழ்க்கையில் தலையிடமாட்டேன். அந்த ஏக்கமான பார்வையின் அர்த்தம் என்ன?
விடுமுறை முடிய 3 நாட்களே மீதமுள்ள நிலையில் அன்று அழகான சந்தர்ப்பம் கிடைத்தது.
அவள் கல்லூரியிலிருந்து தனியே நடந்து சென்றாள். எனக்கு பயமும் பதற்றமும் ஒரு சேர இருந்தது. என்னை அவளுக்கு பிடிக்காவிட்டால் இதுவே கடைசியாக நான் அவளை சந்திப்பது.
"மலர்!" என்றேன் அவளுக்கு கேட்கவில்லை.
வழியில் போன மூதாட்டி, "ஏய் பொண்ணு உன்னை அந்த தம்பி கூப்பிட்றாரு" அவளும் திரும்பி பார்க்க தலை குனிந்து விட்டேன் .
"என்ன கூப்பிட்டீங்களா?" என அவள் கேட்க வார்த்தைகள் வராமல் "இல்லை" என்றேன்.
"நான் ஒன்று கேட்டா தப்பா நினைக்ககூடாது?" என்று அவள் கேட்க திட்டுவது உறுதி என்று செவிகளை கூர்மையாக்கி கொண்டேன்.
"உங்களுக்கு தான் என்ன பிடிக்கவில்லை அப்புறம் ஏன் என் பின்னால் வறிங்க நானும் பலமுறை கவனித்துள்ளேன்," அவள் கூற ஒன்றுமே புரியவில்லை எனக்கு. அப்போ அவளுக்கு என்ன பிடித்திற்குதா?
"பிடிக்கவில்லையா? எனக்கா? யார் சொன்னா?" இப்போது எனக்கு படபடப்பு குறைந்தது
"உங்களுக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு வீட்டுல சொன்னதா உங்க தங்கை சொன்னா," என்றாள் அமைதியாக.
"ஆமா சொன்னேன். அதுக்கு என்ன?"
அவள் முறைத்துவிட்டு "உங்கள் போட்டோ என்னிடம் உள்ளது, இதோ," என்று என் போட்டோ எடுத்து நீட்டினாள்.
எனக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்தாள்.
எட்டி பார்த்தேன் என் போட்டோ தான். இது எப்போ மாப்பிள்ளை போட்டோ போல் பிரேம் செய்தது? கூட்டி கழித்து பார்த்தால் எங்கள் இரு வீட்டாரும் திருமணத்திற்காக பேசினார்களோ? இப்போது ஆராய்வதற்கு ஏற்ற நேரமில்லை, ஐயோ! மலர் நகர்கிறாள்.
"ஒரு நிமிடம் மலர், நான் சொல்வதை கேள்,"
"ஓன்றும் தேவையில்லை"
"எனக்கு உன்னை திருமணத்திற்கு பார்த்திருப்பது தெரியாது மலர். அம்மா, கல்யாணம் பத்தி பேசும் போது நீ தான் பொண்ணுனு தெரியாது மலர். உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் மலர். உன்னை நல்லா பார்த்துப்பேன். என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?" என்று கேட்க
10 வருடங்களுக்கு பிறகு (இன்று)
என் மனைவியிடமிருந்து போண் அழைப்பு என்னை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.
"என்னங்க, கோவிலுக்கு வந்து என்ன கூட்டீட்டு போங்க. பூஜை முடிய ரொம்ப நேரம் ஆயீற்று," என்றாள்.
"இதோ வரேன்" என்று காரை திருப்பி கொண்டு கோவிலுக்கு சென்றேன்.
என் மனைவி என்னை கண்டதும் என்னிடம் வந்து நெற்றியில் சந்தணம் பூசினாள். பின்னர் இருவரும் சேர்ந்து வீடு திரும்பினோம்.
"என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா மலர்?" என அவளிடம் விளையாட்டாக கேட்க. அவள் எப்போதும் போல் வெக்கத்தில் திளைத்தாள்.
"உங்களுக்கு என்னை காதலிக்க நேரமே இல்லையே," என்றாள் விளையாட்டாக.
"மலர், பத்து வருடங்களுக்கு முனனால் நம் காதல் கதையை நினைத்து கொண்டே வந்தேன். நீயும் என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்ன ஒரு மாதத்தில நமக்கு திருமணம் இனிதே முடிந்தது. யாரு நமக்கு காதலிக்க நேரம் தந்தது?"
அவள் புன்சிரிக்க.
"மலரே! நீயே என் இதயத்தில் துளிர் விட்ட முதல் கொடி. உன் மேலுள்ள காதல் எப்போதுமே அழியாது. ஐ லவ் யு பொண்டாட்டி"
"ஐ லவ் யு டு புருசா" என்றாள். இமைக்க மறந்த என் கண்களுக்கு இப்போதும் அவள் பேரழகி தான்.
"என்ன பார்த்தது போதும், நேராக பார்த்து வண்டி ஓட்டுங்க. நேரமாய்ற்று குழந்தைகளையும் பள்ளியிலிருந்து அழைத்து செல்வோம்," என்றாள்.
சிறுது நேரத்தில் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வந்தோம். எப்போதும் போல் எங்கள் வாழ்கையின் நாட்கள் மகிழ்ச்சியோடே தொடரட்டும்.
முற்றும்
வணக்கம்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro