தனிமைச்சிறகுகள்....
மண்ணுடன் மன்றாடி,
முட்டி முளைத்த விதைகளுக்கு...
மறு போராட்டம் மழையுடனோ!
இடிமழையின் மின்னலிலும்,
இன்னலிலும் துளிர்விட்டும்,
எதிர்ப்புகள் காற்றுடனோ!
மரத்த மனம் கொண்ட
மானிட மரமாய்,
மாறிப்போன பிறகும்...
இதய இலைகளில் ஈரம் தங்கியதோ!
தனிமைச்சிறகுகளின்
தாகம் பூத்ததோ!...
அமைதியின் சின்னங்கள்
அழிந்து வரும் காடுகளில்
அன்பெனும் பூக்கள்
ஆங்காங்கே மலர்ந்ததோ!
நஞ்சுகள் கண்டு
அஞ்சிய நெஞ்சங்கள்
பாசம் வைக்க மட்டும்
வஞ்சித்ததோ...
தேடி வரும் தென்றல்கள்
திசைமாறி தீயாகுமோ...
அர்த்தமில்லா ஆறுதல்கள்
ஆழ்கடலை அரவணைக்குமோ...
உறவுகள் உணராதோ
உள் நெஞ்சின் மனக்குமுறலை..
உள்ளமது ஓயாதே
போராட்டப் புயல் மழையை...
திகிலூட்டும் திருப்பங்கள்..
தீக்கற்றை திடல் சுவர்கள்...
பயணிக்கும் திசையாவும்
பஞ்சமில்லா வலி முடிச்சுகள்..
பிரம்மன் வரைந்த
தலையெழுத்து மடலில்
உயிரெழுத்து மட்டும்
தனியெழுத்தானதோ...
துணை நாடும் பக்கங்கள்
தொலைந்து விட்டதோ...
காதல் தருணங்கள்
கனவாய் மாறியதோ...
எதிர்பார்ப்புகள்
பொய்யாய் போனதோ...
இலக்கு இல்லாத பயணங்கள்
இனிமையைச் சேர்க்குமோ!
உறுதி கொண்ட இறுதி என்று
இழப்பை மட்டும் பரிசளிக்குமோ...
காலம் உதிர்க்கின்ற சிறகுகள்
சுமைதாங்கும் சுவரானதோ...
எதிர்க்காற்றை எதிர்க்கும் நோக்கில்
இழந்து வரும் மடல் பூக்கள்
மரணிக்கும் மலரானதோ....
தனிமைச் சிறகுகளின்
தீஞ்சுடர் போராட்டம்...
நினைவுகளாய் தொடரட்டும்..
வரலாறு உணர்த்தட்டும்..
ஜே...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro