வண்ணம் - எபிலாக்
தடதடவென ஓடும் சத்தம் காதுகளை அடைய ஆழ்ந்த உறக்கம் அல்லாது மேலோட்டமான உறக்கத்தில் இருந்த திவ்யாவின் தூக்கம் அந்த சத்தத்தில் மொத்தமாய் கலைந்தது.
மெல்ல எழுந்து அமர்ந்தவள் சுற்றம் பார்த்து, இருட்டாக இருந்த அறையை விளக்கின் மூலம் ஒளிரவிட்டு குளியறைக்குள் புகுந்துகொண்டாள். காலை குளித்தாலும் மாலையும் ஒரு குளியலை உடல் தேடுவது அவளுக்கே ஆச்சிரியம் தான். என்று தான் இத்தனை சுறுசுறுப்பானோம் என்ற கேள்வி தோன்றாமலும் இல்லை.
ஆனால் அவள் வாழ்க்கையே மாறியது போல அவளும் மாறியதில் தவறில்லையே. கணவனோடு இணைந்து விவாகரத்தை ரத்து செய்து மகிழ்ச்சியாக ஒரு வாரம் உலா வந்தார்கள் சிங்கார சென்னையையே.
ரகுவும் வேலைக்கு விடுப்பெடுத்து மனைவியோடு சுற்றி திரிய, கணவன் ஆஸ்திரேலியா கிளம்பும் பொழுது சிரிப்போடு டாட்டா கூறும் மனைவியை பார்த்து அசந்து தான் போனான். என்ன என கேட்டதற்கு, 'என் அத்தையோடு நாட்களை செலவழிக்க போகிறேன்' என கூறி இன்னும் விரிந்து சிரித்தாள்.
'சரி தான் போடி' என முகத்தை தூக்கி வைத்து செல்லமாய் கோவத்தோடு போனவனுக்கு அடுத்த ஒரே வாரத்தில் மனைவியின் கண்ணீர் முகம் தான் தொடு திரையில் வந்து ஒலித்தது.
"வீராப்பா பேசுன பேச்செல்லாம் எங்க போச்சு?" என கணவன் சிரிப்பு தான் இறுதியில் கிடைத்தது.
ஆறு மாதங்கள் என கூறி சென்றவன் இல்லாதது பைரவிக்கு ஒரு வேலையும் ஓடவில்லை. முதல் ஒரு வாரம் அடிக்கடி கணவன் நினைவு வந்தாலும், நாட்கள் நகர அவன் எண்ணம் மட்டும் தான் இருந்தது. வேலையில் கூட அதிக கவனம் தவறி பலமுறை திட்டுவாங்கி கட்டிக்கொண்டதுண்டு.
அதையும் அவனிடம் கூற திரை குலுங்க சிரிக்க தான் செய்வான், "உன்கிட்ட சொன்னேன் பாரு" என நொடித்துக்கொண்டு மீண்டும் அவனிடமே கூறி தன்னுடைய ஏக்கத்தை அவனுக்கு கடத்திவிடுவாள்.
அவனுக்கும் அவள் வாடிய முகத்தை காண பாவமாக தான் இருந்தது, ஆனால் வேறு வழி இல்லையே. வருட கணக்கில் அங்கு வேலையெனில் அவளையும் கையேடு அழைத்து சென்றிருக்கலாம், ஆனால் இது ஆறு மாத வேலையாகி போக தான் மட்டும் சென்றான்.
மனைவியும் தானும் வருகிறேன் என அதிகம் கேட்கவில்லை. அதற்கெல்லாம் சேர்த்து அதன் பிறகு கேட்க துவங்க அவளது மனதின் போக்கை மாற்ற எண்ணி அன்னை மூலம் திவ்யாவுக்கு ஊக்கமளித்து அவள் படித்த படிப்பிற்கு தகுந்தாற் போல் வேலை தேட தூண்டினான்.
மகன் கூறியதற்கு இரண்டு மடங்கு அதிகம் வேலை செய்து அடுத்த மூன்று மாதத்தில் அவளை வேலை ஒன்றையும் வாங்க வைத்துவிட்டார். ரகுவையும் கார்த்திகாவையும் கையில் பிடிக்க இயலவில்லை.
வேலை வாங்கிய திவ்யாவை விட அவர்கள் ஆர்ப்பாட்டம் தான் அதிகமிருந்தது. அனைத்தையும் மோகனும் திவ்யாவும் பார்வையாளராக தான் தூரம் நின்று பார்த்தனர். அதன் பிறகு திவ்யாவுக்கு ரகுவை நினைத்து வருந்த அதிகம் நேரமில்லை எனினும் இரவு அவனோடு காணொளி மூலம் பேசும் பொழுது பலமுறை அழுதுவிடுவாள்.
அவன் கூறும் எந்த சமாதானமும் வேலை செய்யாமல் போனது. ரகுவுக்கும் நாளுக்கு நாள் அழகாய் தெரியும் மனைவியை விட்டு தள்ளி நிற்க முடியவில்லை.
தன்னுடைய காதல் நிறைந்த கண்களுக்கு அவ்வாறு தெரிகிறாளா இல்லை உண்மையாகவே நாளுக்கு நாள் மெருகேறி போகிறாளோ என்ற சந்தேகம் வேறு.
இதற்கிடையில் ஒரு நாள் மோகன் வீட்டிற்கே அவள் பெற்றோர் வந்து நிற்க, அத்தை மாமா முன்பு எதுவும் பேசாது அமைதியாக உள்ளே சென்றுவிட்டாள்.
மோகன் கார்த்திகாவுக்கு வீடு தேடி வந்தவர்களை அவமதிக்க தோன்றவில்லை, உள்ளே அழைத்து சமாதான பேச்சு, மன்னிப்பு படலத்தை எல்லாம் முடித்து வந்தவர்களுக்கு இன்முகத்தோடு விருந்து படைத்ததே ஓய்ந்தனர்.
பெண்ணை பெற்றவருக்கு அத்தனை சந்தோசம் அவர்கள் கவனிப்பில், ஆனால் மகள் பேசாதது தான் மன சுணக்கத்திற்கு காரணமாகியது. அவளும் மாமனார் மாமியாரின் பேச்சை மதித்து வந்தவர்களுக்கு உணவு பரிமாறுவது, அவர்களுக்கு தேவையானதை செய்தாலும் முகத்தில் மருந்திற்கும் சிரிப்பில்லை.
நாட்கள் செல்லட்டும் சரியாகிவிடுவாள் என கார்த்திகா தான் அவர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.
ரகுவிடம் அதை கோவமாக அவன் கூற அப்படியா, எப்படி உடனே மனம் மாறினார்கள் என ஆச்சிரியமாக கேட்டு வைத்தான்.
ஆனால் இதற்கெல்லாம் மூலக்காரணம் அவனே. மூன்று மாதங்களுக்கு மேல் அவளது தந்தையோடு அலைபேசியில் தொடர்பிலே இருந்தான்.
வேலை கிடைத்த மகிழ்ச்சியில் அவள் சற்று மனம் தெளிந்து காணப்பட, இது தான் நீங்கள் செல்ல சரியான நேரம் என அவருக்கு வழி வகுத்து அமைத்து கொடுத்து அவளை உடனே கட்டாயப்படுத்தாமல் விசாரிப்புகளோடு மட்டும் வாருங்கள் எனவும் கூற அவன் கூறியது போலவே செய்திருந்தனர் அவள் வீட்டினர்.
அதுவும் ரகு எறிந்த கல் சரியாக வேலையும் செய்திருந்தது. 'அது எப்படி நீ இல்லாதபோ வருவாங்களா? ஏன் நீ இருந்தப்போ வந்திருக்கலாம்ல?' என்று வார்த்தையும் விட்டாள்.
அந்த ஒரு வார்த்தை போதுமே, உடனே மாமனாரிடம் அவள் மாற்றத்தை கூறி மாதம் ஒரு முறை தான் வரும் வரை அவளை சென்று பாருங்கள் என கூறி திவ்யாவுக்கு பெற்றோரின் மேல் இருந்த கோவத்தை குறைத்தான்.
அவளுக்கும் அவர்கள் மேல் அதிகம் கோவத்தை பிடித்து வைக்க முடியவில்லை, சகஜமாக பேச துவங்கவில்லை என்றாலும் வாருங்கள் என வீட்டிற்கு வரும் நேரம் அழைப்பாள், அதுவே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.
'போதும்டா நீ இது பேசுனதே, அப்பாவுக்கு சந்தோசம்' சிறு பிள்ளை போல் அழுதவரைப் பார்த்து அவளுக்கும் அழுகை பெருகியது.
பெண் பிள்ளை அல்லவா அதிகம் கோவத்தை பிடித்து வைக்க முடியவில்லை அதுவும் தந்தையாரின் கண்ணீரை பார்த்து அவள் பிடிவாதம் ஆட்டம் தான் கண்டது.
தன்னையே தேற்றிக்கொண்டு ரகுவை வர நச்சரிக்க துவங்கினாள். அவர்களை சோதிக்கவே ரகுவின் வேலை நினைத்த ஆறு மாதங்களை தாண்டி ஏழாம் மாதத்தையும் கடந்திருக்க மொத்தமாய் வாடி தான் போனாள் திவ்யா.
மோகனுக்கோ வாடிய கொடியாய் இருக்கும் மருமகளை பார்த்து வருத்தம் மேலிட மனைவியிடம் மகனை வேலையை விட்டாவது வர கூறினார்.
அடுத்த இரண்டாம் நாள் வேலையை முடித்து எவருக்கும் தகவல் கொடுக்காது வீட்டில் வந்து இறங்கிய ரகுவை அனைவரும் ஆச்சிரியத்தோடு தான் பார்த்தனர்.
அன்று இரவு உணவை முடித்து அறைக்குள் செல்லும் வரை அவனிடம் ஒரு வார்த்தை அவள் பேசவில்லை, தங்கள் அறைக்குள் சென்றதும் இருந்த ஏக்கத்தை எல்லாம் கோவமாய் மாற்றி அவனை சரமாரியாக அடித்த பிறகே அவனை இறுக்கமாக கட்டி அணைத்து மகிழ்ச்சி பெருமூச்சு விட்டாள்.
இன்றளவும், 'இந்த மாதிரி வரவேற்ப்ப நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லடி' என அடிக்கடி அவளை கிண்டலும் செய்வான்.
படாரென கதவை திறந்து வந்த அவர்கள் மூன்று வயது புதல்வன் வேதவ், கட்டிலில் மேல் இருந்த அவனது உடையை எடுத்துக்கொண்டு வந்த அதே வேகத்தில், "திவ்யா நான் தாத்தாகிட்ட போறேன்"
வீடே அலறும் வகையில் ஓட, "டேய் பேர சொல்லாதடா" மகனை திட்டிக்கொண்டே அவனை வேகமாக அவள் வரும் முன்பு சிறுவன் ஓடிவிட்டான்.
அவன் வெளியேறிய அந்த இடைவேளையில் அவனை விட அவசரமாக வந்த ரகு அவளை பதமாய் பிடித்து நிறுத்தினான், "ஹே பாத்து மெதுவாடி" மெல்ல அவளை உள்ளே இழுத்து வந்து கதவை அடைத்தான்,
"பாரு இன்னும் ஒழுங்கா டிரஸ் கூட பண்ணல" அவளது உடையை சரி செய்தான் அவசரமாக.
"உன்ன பாத்து தான் ரகு அவனும் என்ன பேர் சொல்லி பேசுறான்" கணவனை பார்த்து குற்றம் சாட்டி முறைத்தாள்.
"சரி தான் இனிமேல் அப்போ உன்ன நான் அம்மா அம்மானு சொல்லுறேன்" என்றவன் உடனே அவளது இதழை சிறை செய்து சில நொடிகள் தனது தேவையை எடுத்து அவளது கழுத்தில் தன்னுடைய முகத்தை பதிக்க,
மனைவியின் உடல் தளர்வை உணர்ந்தவன் அவளது பின்னிடையோடு மெல்ல அணைத்து அவளது வாசத்தை உள் இழுத்தான்.
"ரகு இப்போ தான்டா குளிச்சேன்" உள்ளிறங்கிய குரலில் அவள் பேசியது கணவனுக்கு கேட்காமல் போனது.
"வாசமா இருக்கடி கோவிந்தம்மா" அவளை மேலும் மேலும் ஆசையாக அணைக்க அவளால் அவனது ஆசைக்கு ஈடுகொடுக்க முடியாமல் மூச்சு சீரற்று போனது.
அதனை நொடியில் உணர்ந்தவன் தன்னுடைய தேவையை அடக்கி அவளை ஆசுவாச படுத்த மெல்ல அவள் முதுகை வருடினான், "சரிடா சரிடா... சாரி" மன்னிப்பு வேண்டி இறுதியாக அவளது சுடிதாரை சற்று மேலே தூக்கி தங்கள் இரண்டாம் மகவு வளரும் மனைவியின் மணி வயிற்றில் தந்தையாய் பாசத்தோடு முத்தம் ஒன்றை வைத்து பிரிந்து நின்றான்.
"நாளுக்கு நாள் அழகாகிட்டே போறடி, அப்றம் சம்பவம் நடந்தா என்ன எதுவும் சொல்ல கூடாது சொல்லிட்டேன்" முகத்தை உர்ரென்று வைத்து பேசும் ரகுவை பார்த்து சிரிப்பு குபீரென வந்தது திவ்யாவுக்கு.
சரியாக அந்த நேரம் ஹாரன் சத்தம் கேட்க, "வந்துட்டானுங்க உன்னோட துவாரபாலகர்கள். எப்பா இவனுங்க ஊர்ல இல்லனு தெரிஞ்சு தான் வெள்ளி கிழமை லீவு எடுத்துட்டு வந்தேன்.
பாரு மூக்கு வேர்த்து ஒடனே வந்துட்டானுங்க. இல்ல தெரியாம தான் கேக்குறேன், நான் என்ன உன் நிலைமை புரியாம பாஞ்சிடவாடி போறேன் எதுக்கு உன்ன இப்டி பாதுகாக்குறானுங்க இவனுங்க?"
கணவன் புலம்ப புலம்ப திவ்யாவுக்கு சிரிப்பு தாளவில்லை அவன் தோளினை பற்றி வயிறு வலிக்க சிரித்தாள். அவளை மெதுவாக பற்றியவன், "சரி போதும் ரொம்ப சிரிக்காத அப்றம் வயிறு புடிச்சுக்குச்சுனு அழுவ"
சரி என தலையை ஆட்டி இயல்பிற்கு வந்தாள்.
"நீ வெளிய போ இல்லனா உன் அண்ணனுங்க குளிக்க கூட விட மாட்டானுங்க" எனவும் திவ்யா வெளியே நகர அவளை மீண்டும் பிடித்து நிறுத்தி அவள் நெற்றியிலும் கன்னத்திலும் அழுத்தமாக முத்தம் ஒன்றை வைத்து, "இப்போ போ" என அனுமதி கொடுத்தான்.
மகனோடு விளையாடிய வியர்வை கூடா காயாதிருக்க தன்னை நெருங்கியவனை தள்ளி நிறுத்த மனமே இல்லாது அவனோடு ஒட்டியே நின்றவள் மீண்டும் ஒருமுறை தன்னை சரி செய்து தன்னுடைய ஒன்பது மாத வயிற்றை பத்திரமாக பிடித்து வெளியேறினாள்.
அவ்வளவு தான் அவர்களுக்கான நேரம், இனி திவ்யாவின் நேரத்தை எல்லாம் அவள் வீட்டினர் களவாடிவிடுவார்கள்.
அரை மணி நேரத்திற்கு ஓவர் முறை பழசாறு ஒன்று வர, அடுத்த ஐந்து நிமிடத்தில் காரமாக ஏதாவது ஒரு ஸ்னாக் வரும். இதில் திவ்யாவுக்கு ஆனந்தமோ இல்லையோ அவள் மகனுக்கு கொள்ளை ஆனந்தம்,
நினைத்தது எல்லாம் அம்மாவை சாக்காய் வைத்து வாங்கிவிடுவான். இன்று நேற்றல்ல இந்த கவனிப்பு, பல ஆண்டுகளாக இது தான் நடக்கும். திவ்யாவின் தலை பிரசவத்திற்கு அவள் வீட்டினர் எவ்வளவோ அழைத்தும் வரவே மாட்டேன் என மறுத்துவிட்டாள், கோவம் இன்னும் உள்ளதென்று.
ரகுவும் எவ்வளவோ எடுத்து கூறியும் பிடிவாதமாய் நின்றவள் தான் நினைத்ததை தான் இறுதியாக சாதித்தாள்.
ரகுவுக்கும் கோவம் வர அடுத்த பிரசவத்திற்கு செல்கிறேன் என்ற வாக்கோடு அவனை சமாதானம் செய்தாள்.
முதல் பிரசவத்திற்கும் இரண்டாவது பிரசவத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் இளைய சகோதரன் திருமணம், மூத்த சகோதரன் குழந்தைக்கு பெயர் வைப்பது காது குத்துவது என நிகழ்ச்சிகள் அடுக்கிக்கொண்டு போக அவளது கோவமும் குறைந்துவிட இதோ இரண்டாவது பிரசவத்திற்கு அன்னை வீடு வந்துவிட்டாள், அதுவும் ஒன்பதாவது மாதத்தில் தான்.
எப்பொழுது வேண்டுமானாலும் பிரசவம் நடைபெறலாம் என்னும் நிலையில் ரகுவால் சென்னையில் நிம்மதியாக இருக்க முடியவில்லை, அடிக்கடி மனைவியின் நிலையை கேட்டு தெரிந்துகொண்டவன் வார இறுதி நாட்களில் ஓடி வந்துவிடுகிறான்.
அதுவும் மனைவி நேற்று காலையே அடிக்கடி வயிறு வலி வருகிறது என கூறவும் முடியவில்லை அடுத்த மூன்று மணி நேரத்தில் அவள் முன்னாள் நின்றான்.
"ம்மா பண்ணீர் பிங்கர்ஸ் பாட்டி வேணுமா கேட்டாங்க? நான் கொண்டு வரவா"
தன் முன்னே வந்து கேட்ட மகனிடம் வேண்டாம் என திவ்யா கூற அவனோ ஓடி சென்று பாட்டியிடம் வாங்கி வந்து அன்னைக்கு அதனை ஊட்டிவிட அவளுக்கு சுருக் சுருக்கென வயிற்றில் ஏற்படும் வலியில் எதுவும் உண்ண தோன்றவில்லை.
"வேணாம்டா போ" சற்று கோவமாகவே திவ்யா மகனை கடிய,
அவன் அன்னையின் முகத்தை தீவிரமாக பார்த்து உடனே "அப்பா..." என தந்தையை நோக்கி ஓடிவிட்டான்.
"ஏன்டி பிள்ளையை திட்டுற" பேரன் மேல் இருந்த பாசத்தில் மகளை அவர் அதட்ட அவளோ எதற்கும் பதில் கொடுக்கவில்லை.
அமர்ந்திருந்தால் தான் வலி எடுக்குமோ என சற்று காலாற நடந்தவள் அப்படியே வீட்டிற்கு வெளியே வர அவளை தொடர்ந்து அவளது சகோதரர்கள், அண்ணி, அவர்கள் குழந்தைகள் என அனைவரும் தோட்டத்திற்கு வந்துவிட்டனர்.
சகோதரர்கள் இருவருக்கும் முதலில் ஒரு ஆன் குழந்தையும் இரண்டாவது ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
அந்த நால்வருக்கும் அவர்கள் அத்தை என்றால் கொள்ளை பிரியம், தினமும் திவ்யாவிடம் அலைபேசியில் பேசிவிட வேண்டும், அதோடு ரகுவை பார்த்தாள் தலைகீழாக தான் சேட்டை எல்லாம் இருக்கும்.
திவ்யாவின் சகோதரர்களை வலைப்பதற்கு பதில் தெளிவாக அவர்கள் பிள்ளைகளை வளைத்துவிட்டான். அவர்களும் எந்நேரமும் 'மாமா மாமா' என்று அவன் பின்னால் தான் சுற்றி திரிவார்கள்.
வெளியில் தானே சென்று விளையாட கூடாது, வீட்டிலே ஒரு கூட்டத்தையே உருவாக்குகிறேன் என்ற சபதத்தில் வீட்டில் உள்ள பொடுசுகள் அனைத்தையும் கட்டி இழுத்து தன்வசமாகிக்கொண்டான் ரகு.
"அத்தை நீங்க நடந்தா குட்டி பாப்பாக்கு கால் வலிக்காதா?" என திவ்யாவின் மூத்த சகோதரன் இளைய மகள் தன்னுடைய அத்தையிடம் கண்களை சுருக்கி வருத்தமாக கேட்க திவ்யாவுக்கு வலியை மீறிய சிரிப்பு.
அவளது அழகு சடையை ஆட்டிவிட்டு, "பாப்பா வெளிய வந்து உன்ன மாதிரி நடந்தா தான் கால் வலிக்கும். இப்போ அத்தை தான தூக்கி வச்சிருக்கேன்"
"அப்போ என்னையும் தூங்குறீங்களா? மாமா பால் எடுத்துட்டு வர சொல்லி கால் வலிக்கிது" தன்னுடைய பிஞ்சு கால்களை காட்டி பாவமாக கேட்க அடுத்த நொடி அந்த சின்ன குழந்தை காற்றில் இருந்தது.
"என்ன உன் அத்தைகிட்ட தான் கேப்பியா? என்கிட்ட சொல்லலாம்ல தீஷா குட்டி" என்ற ரகு அப்படியே மருமகளை தோளில் அமரவைத்து மனைவியை பார்த்தான்.
"என்னடி என் புள்ளைய திட்டுனியா?"
திவ்யா குனிந்து மகனை பார்க்க அவனோ தந்தையின் காலை கட்டிக்கொண்டு பாவமாக அன்னையை பார்த்து, "அம்மா சாட் தானே ப்பா சொன்னேன்?" என்றான் உண்மையாக.
குழந்தை கூறியது கூட அது தான், ஆனால் ரகுவுக்கு மனைவியை சீண்டியே ஆக வேண்டும் அதற்காக தான் இந்த நாடகம். திவ்யாவுக்கு சிரிப்பு தான் வந்தது, வேதவ் அப்படியே ரகுவை போல் தான்.
சேட்டை, குணம், பாசம் எல்லாமே. திவ்யா முகம் சிறிது வாடினாலும் உடனே கண்டுக்கொண்டு தந்தையிடம் நின்றுவிடுவான் ஏதாவது செய்து அன்னையை சிரிக்க வை என.
அவனும் அவளை சீண்டியே சிரிக்க வைத்துவிடுவான். இப்பொழுதும் தந்தையை ஒட்டி நிற்க மனம் இல்லை, அன்னையோடு அதிகம் சுற்றிய குழந்தைக்கு அவளை விட்டு தள்ளியே நிற்க முடியவில்லை.
திவ்யா கருவுற்ற பிறகு வழக்கம் போல் அன்னை மீது வேதவ் தாவிவிட்டால் என்ற பயத்தில் இருவரும் அவனுக்கு கதைகள் பல கூறி தங்கைக்காக நிதானமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
மகனின் கை பற்றி தன்னை நோக்கி இழுத்த திவ்யா அவனை கட்டிக்கொண்டு தலை வருடி, "அம்மாக்கு ஒன்னுமில்ல வேதவ், கொஞ்சம் கை கால் எல்லாம் வலி அவ்ளோ தான்" என்றாள்.
"அப்றம் ஏன் ம்மா சாட்?" என்றான் விடாமல். அவளையே பார்த்திருந்த ரகு அசையாமல் அங்கேயே நிற்க மாமனை கண்ட இளசுகள் அவனை கட்டிக்கொண்டு விளையாட அழைத்தனர்.
"ஒன்னுமில்ல தங்கம், நீங்க போய் விளையாடுங்க. ரகு பசங்க கூப்பிடுறாங்கடா" என்றாள் கணவனையும் மகனையும் சமாதானம் செய்யும் எண்ணத்தோடு.
அவனோ பிள்ளைகளை அனுப்பி வைத்து மனைவி கை பிடித்து, "மாமா நாங்க கொஞ்சம் உள்ள இருக்கோம்" தகவலை கூறி மெல்ல திவ்யாவை உள்ளே அழைத்து சென்றான்.
திவ்யாவுக்கு நிற்கவும் முடியவில்லை அமரவும் முடியவில்லை. மெல்ல மெல்ல வலி அதிகமாக ரகுவின் கைகளை பற்றிக்கொண்டாள் இறுக்கமாக.
"திவி என்ன ஆச்சு, வலி வருதா?" தன்னுடைய பதட்டத்தை வெளிக்காட்டாமல் தைரியமாக கேட்டான்.
கீழ் உதட்டை பற்களால் கடித்து அமர்ந்திருந்த திவ்யாவுக்கு என்ன முயன்றும் தன்னுடைய அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. ரகுவின் தோளில் முகம் புதைத்து கண்ணீர் விட உறுதியாக கூறியது அவள் வேதனையை.
கையிலிருந்த கைபேசியை எடுத்தவன் உடனே வெளியில் இருந்த மாமனாருக்கு தகவல் கூற மொத்த குடும்பமும் உள்ளே ஓடி வந்துவிட்டனர்.
"நான் ரிப்போர்ட் எல்லாம் எடுத்துட்டு வர்றேன், பிரபு வண்டிய எடு. நல்ல வேலை இன்னைக்கும் நாள் நல்லா இருக்கு, நாளைக்கும் நல்ல நாள் தான். பயந்துட்டே இருந்தேன்ங்க" என்ற அவள் அன்னை வேகமாக உள்ளே சென்று திவ்யாவின் ரிப்போர்ட்டை எடுத்து வர,
"அத்தை டிரஸ் எதுவும் எடுத்தீங்களா?" என்றாள் திவ்யாவின் அண்ணி.
"ஐயோ மறந்துட்டேன் ம்மா"
"இருங்க நான் எடுத்து அவர்கிட்ட குடுத்துவிடுறேன், நீங்க முன்னாடி போங்க" என்றாள்.
குழந்தைகளை வைத்து இரண்டு மருமகளும் வீட்டில் இருக்க பெரியவர்கள் அனைவரும் உடனே மருத்துவமனைக்கு விரைந்தனர். திவ்யாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வலி அதிகரிக்க ரகுவின் கைகளை உடைந்துவிடும் அளவிற்கு பற்றிக்கொண்டு விசும்பிக்கொண்டே வந்தாள்.
"ஒன்னுமில்ல திவ்யா... இதோ ஹாஸ்பிடல் வந்துட்டோம்" சமாதானம் செய்து அவளை மருத்துவமனையில் சேர்த்தவன் நடையாக நடந்தான் அந்த நீல வளாகத்தையே.
பதட்டம், பயம், அழுகை என அவனுக்கும் நிலைகொள்ளவில்லை. அவள் அழுகை வேறு காதில் கேட்டுக்கொண்டே இருக்க எத்தனை தூரம் செல்ல முடியுமோ சென்று தலையை பிடித்து அமர்ந்துகொண்டான்.
இதில் அவள் சகோதரர்கள் வேறு இவனை அடிக்கடி முறைத்து வைக்க ஐயோ என ஆனது ரகுவுக்கு. நேரம் நள்ளிரவை தாண்டிவிட ரகுவின் பெற்றோர் வந்துவிட அவர்களிடம் புலம்பித்தள்ளிவிட்டான்.
இடையிடையே அழுகை வேறு எட்டிப்பார்க்க அன்னை தோள் சாய்ந்து தன்னைகட்டுப்படுத்த போராடினான்.
இதில் மருத்துவரை சென்று பார்த்து அவளது நலனை அடிக்கடி விசாரிக்க மருத்துவருக்கும் கோவம் வந்துவிட்டது, "உக்காருங்க சார், வலி வந்தா போதுமா குழந்தையோட தலை இன்னும் வெளிய தெரியவே இல்ல. பிரசவம் என்ன ஒடனேவா நடக்கும் நேரமாக தான் செய்யும்" என திட்டிவிட்டு செல்ல திவ்யாவின் சகோதரனும்,
"இவ்ளோ துடிக்கிறவன் ஏன் பிள்ளை வேணும்னு நினைக்கணும்?" ரகுவின் முகத்திற்கு நேரே பேச அவன் தந்தை தான் ரகுவை அடக்கினார்.
"மாமா உங்க மகனை அமைதியா இருக்க சொல்லுங்க, இருக்க எல்லா டென்ஷனையும் அவன் மேல அப்றம் இறக்கிடுவேன்" விளையாட்டாக எச்சரிக்கை செய்து ஓரம் சென்றிட ரகுவின் தந்தைக்கு சிரிப்பு தான் இருவரின் செயலும்.
எலியும் பூனையும் தான் அவர்கள் மூவரும்.
மொத்த வீட்டினரையும் கதிகலங்க வைத்து மறுநாள் காலை ஆறு மணிக்கு தான் பிறந்தாள் ரகு, திவ்யாவின் புதல்வி. மகளை பார்க்காமல் ரகு முதலில் சென்று நின்றது மனைவியிடம் தான்.
சோர்ந்து, முகம் எல்லாம் வாடி கிடந்தவள் அருகே அமர்ந்தவன் தன்னை கட்டுப்படுத்த முடியாது அவளது தோளில் முகம் புதைத்து அழுதே விட்டான்.
திவ்யா அவன் சிகையை வருடிவிட்டு தன்னுடைய தலையை சாய்த்து அவனது தலையில் வைக்க அவள் முகத்தை இறுக்கமாக பற்றிக்கொண்டது ரகுவின் கைகள்.
"நமக்கு குழந்தைங்க போதும்டி" என்றான் மூக்கை உறிஞ்சி.
அவன் தலையில் ஒரு அடி வைத்து, "இன்னொன்னு வேற அய்யா பிளான் பண்றிங்களோ" மனைவி சிரிப்போடு கேட்க அவள் முகம் பார்த்து திரும்பி படுத்தவன் அவள் கன்னத்தை மென்மையாக வருடினான்.
"என் ஆசைல உன்ன கஷ்டப்படுத்துறேனாடி?"
"அடேயப்பா ரொம்ப லேட்டா தான் மூளை வேலை செஞ்சிருக்கு" என்றவள், "நான் தானே பொண்ணு வேணும்னு கேட்டேன்"
"ஆனாலும் நான் தான உன் கஷ்டத்தை புரிஞ்சு உன்ன புரிய வச்சிருக்கணும்"
"இரு என் பொண்ணு வளந்ததும் நீ இப்போ பேசுனது எல்லாம் சொல்றேன், வேதவ் தான் ரொம்ப ஆசைப்பட்டான் பாப்பாவை பாக்க, ஆமா அவன் எங்க ரகு?"
"அவன் வீட்டுல இருக்கான், உனக்கு ரொம்ப வலிக்கிதா கோவிந்தம்மா?"
"வலிக்காம" அந்த குரலில் இருந்த வேதனையே ரகுவை துடிக்க வைத்தது. அவன் வாடிய முகம் பார்த்தவள், "பேச முடியல ரகு என்னால" என்றாள் எச்சில் கூடி விழுங்கி.
உடனே எழுந்து அருகில் இருந்த பிளாஸ்க்கில் தண்ணீரை எடுத்தவன் ஸ்பூன் கொண்டு அவளுக்கு மெல்ல மெல்ல தண்ணீரை கொடுக்க கதவை திறந்து வந்த நர்ஸ் கையில் அவர்கள் புதல்வி,
"ஆண்ட்டி எனக்கு.. ஆண்ட்டி எனக்கு பாப்பா" என அவர் பின்னால் வால் பிடித்து பேரனையும் அனுப்பி வைத்திருந்தார் கார்த்திகா.
உள்ளே மருமகளை பார்க்க வந்த கார்த்திகா மெல்ல கதவை திறக்க மகன் மருமகளின் தனிப்பட்ட நேரத்தை பார்த்து வந்த தடயமே தெரியாமல் கதவை மூடி சென்றுவிட்டார்.
அடுத்த சில நொடிகளிலேயே குழந்தையை குளிக்க வைத்து எடுக்க வேண்டிய சில பரிசோதனைகளை செய்து குழந்தையை முதலில் அவள் தப்பான கையில் ஏந்தட்டும் என மகனிடம் கொடுக்க கூறி, 'உன் பாப்பா வேதவ் குட்டி' என்று குடும்ப நேரமாக மாற்றி அவனையும் அனுப்பிவிட்டார்.
உள்ளே வந்த செவிலியர் தன் பின்னே வந்த வேதவை சிரிப்போடு பார்த்து, பின் திவ்யாவிடம், "உங்க முதல் பையனா?"
கண்களில் ஆசை மின்ன குழந்தையிடமிருந்து பார்வையை அகற்றாது வந்த மகனை ரசித்து பார்த்தவள் ஆமாம் என தலையை ஆட்ட தன்னிடம் குழந்தையை கொடுக்க வந்த செவிலியரிடம், "அவர்கிட்ட குடுங்க"
ரகுவை அவள் கை காட்ட, அதனை புரிந்து கொண்ட வேதவ் ஓடி சென்று தந்தை மடியில் அமர்ந்துகொண்டான்.
"அப்பா நாம ஒண்ணா பாப்பாவ வாங்கலாம்" நல்ல பிள்ளையாக தந்தையிடம் ஒட்டிக்கொண்டான்.
ரகுவும் சிரிப்போடு மகனை ஏதுவாக மடியில் வைத்து அந்த குட்டி பொக்கிஷத்தை பக்குவமாக கையில் வாங்க, பஞ்சு போன்ற பிஞ்சு அவளை கையில் வாங்கிய ரகுவின் கண்கள் மேலும் கலங்கியது.
"திவ்யா பயமா இருக்குடி"
நடுக்கத்தோடு குழந்தையை அவன் யோசனையாக பார்க்க, "ப்பா கீழ பிடிங்க ப்பா" தந்தைக்கு வழிகாட்டினான் தனயன்.
"எப்படிடா" மகனை கேள்வி கேட்டு ரகு மெதுவாக குழந்தையை கீழே பிடிக்க, "ஆமா ப்பா அப்டி தான்" தனக்கு ஏதுவாக குழந்தையை பிடிக்க உதவி செய்தான்.
"அப்பா நான் பாப்பா கை தொட்டு பாக்கவா?"
ரகு, "ம்ம்ம்" என அனுமதி கொடுக்க பட்டும் படாமல் அந்த குட்டி கரத்தை வேதவ் தொட, என்ன தோன்றியதோ அந்த பிஞ்சுக்கு, மெல்ல சினுங்க துவங்க பதறிய வேதவ்,
"ப்பா நான் இல்ல ப்பா, ம்மா நான் பாப்பாவை எதுவும் பண்ணல" தானாக பயத்தில் உளறிய மகனை அத்தனை நேரம் சிரிப்போடு பார்த்தவள் ரகுவின் பிடியை மாற்றி வைத்து குழந்தையை தட்டிக்கொடுக்க அவள் அழுகையை நிறுத்தி மீண்டும் உறங்க ஆரம்பித்துவிட்டாள்.
"பாத்தியா வேதவ், பாப்பா உன்ன மாதிரியே இருக்கா"
"ஏய் என் புள்ள என்ன மாதிரிடி, உன் மகனை மாதிரி இல்ல" சண்டைக்கு வந்தான் ரகு.
"என்ன மாதிரி ப்பா" என்றான் மகனும் ஒன்றும் புரியாமல் அன்னையின் வார்த்தையை பின்பற்றி.
"டேய் என் புள்ளைக்கு மூக்கை பாரு அப்டியே கிளி மூக்கு மாதிரி, இங்க என் மூக்கை பாரு" தன்னுடைய மூக்கை தூக்கி காட்டினான்.
"ஆமாப்பா" என்ற மகன், "ஆனா பாப்பா வைய்ட்டா இருக்கே ப்பா" என்றான் மொத்தமாக காலை வாரி.
திவ்யா வயிற்றை பிடித்து சிரித்துவிட மகனையும் மனைவியையும் ரகு முறைக்க, வேதவ் அன்னையை பார்த்து சிரிக்க என அந்த அழகிய நினைவு பிரபுவின் கைபேசியில் அழகான புகைப்படமாக மாறி போனது.
மாமனால் அதற்கு மேல் புதிதாக பிறந்த குழந்தையை பார்க்காமல் இருக்க முடியவில்லை உள்ளே வந்தவன் அவர்களின் அழகிய நினைவுகளை உடனே புகைப்படம் எடுத்துக்கொண்டான்.
வெளியில் ரகுவை பிடிக்காது என அவனை எந்நேரமும் முறைத்தாலும், தங்கையை அவன் கவனிக்கும் அன்பில் மெல்ல மெல்ல அவன் மேல் மரியாதை வர தான் செய்தது.
அதை வெளியிலும் அவனிடம் நேரடியாக காண்பிக்க முடியவில்லை. ஆனால் ரகு வீட்டிற்கு வந்தால் அவனுக்கு பிடித்த அத்தனையும் அன்று விருந்தாக, சிற்றுண்டியாக அவன் முன்னே சென்று நின்றுவிடும்.
வீட்டின் ஒரே மாப்பிள்ளை அல்லவா?
"என் மாப்பிள்ளை தான் பாய்ண்ட் பாய்ண்டா பேசுவான்" பேச்சை எடுத்து உள்ளே வந்தான் பிரபு.
"டேய் உன்ன யார் இங்க வர சொன்னது"
"அப்டி தான் நான் வருவேன்னு உன் அப்பாகிட்ட சொல்லு மருமகனே" வேதவிடம் தூதுவிட்டான் பிரபு.
"அப்டி தான் மாமா வருவார்களாம் ப்பா"
"எனக்கு கேட்டுச்சு மகனே" மகனை ரகு பொய்யாக முறைக்க மொத்த குடும்பமும் ஒவ்வொருவராக உள்ளே வந்து பிறந்த குழந்தையை பார்க்க அந்த நாளே அழகாக மாறிப்போனது.
திவ்யா அடிக்கடி ரகுவை பார்க்க தன்னிடம் ஏதோ கேட்க வரும் மனைவியை உணர்ந்தவன் அவளை மெல்ல படுக்க வைத்து அவள் அருகிலே அமர்ந்துகொண்டான் நகராமல்.
தூக்க காலத்தில் திவ்யா உறங்கவும் குழந்தையை தான் பார்த்துக்கொள்வதாக ரகு கூற மற்ற அனைவரும் காலை உணவிற்கு வெளியே செல்ல குழந்தையின் கையில் தன்னுடைய சுண்டு விரலை கொடுத்து அதனை சிரிப்போடு பாரதிர்ந்தவன் அப்படியே உறங்கிவிட்டான் இரவெல்லாம் உறக்கம் இல்லாத களைப்பில்.
அந்த நேரம் திடீரென குழந்தையை எண்ணி கண் விழித்த திவ்யா, ரகுவை போல் சகோதரியின் கை பற்றி அவளை பார்த்திருந்தான் வேதவ்.
"சாப்பிட்டியா வேதவ்?"
"ஷ்ஷ்..." வாயில் கை வைத்து சகோதரி, தந்தையை மகன் காட்டி அமைதியாக இருக்க கூற, திவ்யாவுக்கு சொல்ல முடியாத நிம்மதி.
வாழ்க்கையில் கிடைக்க வேண்டிய அனைத்தும் தன் கையில் இருக்கும் நிம்மதி. அன்பான கணவன், அழகு அறிவு நிறைந்த அங்கு குழந்தை, தேவதை போல் ஒரு பெண், ஒரு துன்பமெனில் நொடியில் ஓடி வந்து நிற்கும் சகோதரர்கள், அன்னையை ஒத்த மாமியார், பெற்றோர் என அவள் வாழ்க்கை ஒரு இடத்தில் கூட தேங்காது அழகான நீரோடையை ஓடிக்கொண்டே உள்ளது.
இதை விட என்ன வேண்டும் ஒரு பெண்ணுக்கு?
அழகிய இலக்கணமே வாழ்க்கையை உருமாறி பொலிவானது அவள் எதிர்காலம். ஓர் அழகிய கானா முரண் இல்லா கவிதையாய் உருமாறி அவர்களை அணைத்துக்கொண்டது.
நன்றி...
கவர் மாத்திட்டேன், பாத்திங்களா?
எபிலாக் எப்படி இருக்கு?
அடுத்த கதை இன்னும் முடிவு பண்ணல கொஞ்சம் கொழப்பத்தோட இருக்கேன், வேகமா டைட்டில் கவர் எல்லாம் ரெடி பண்ணிட்டு உங்களை சந்திக்கிறேன்...
அப்றம் என் பேர் சொல்லல நான்... சாரி சில காரணங்களால் பேர் வெளிய சொல்லாம இருந்தேன். இனி சொல்ல தயக்கம் இல்ல. என் பேர் அகிலா... ஹிஹி டாடா...
கதை எப்படி இருந்துச்சு, அடுத்த கதை எப்படி வேணும்னு சொல்லுங்க. அன்னைக்கு சொன்னது போல அதிரடி கதைல சோகமான எண்டிங் வைக்கலாம்னு தான் என்னோட பிளான்.
ஆனா என்னோட friend என்ன அடிச்சே கொன்னுடுவேன்னு சொல்லிடுச்சு சோ அந்த கதை இப்போதைக்கு ட்ராப் பண்ணிட்டேன். சோ புது கதையோட வர்றேன். டாட்டா.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro