Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வண்ணம் - 9


நேற்று இரவில் வெளுத்து வாங்கிய மழையின் தாக்கம் அடுத்த நாள் விடியற்காலையிலும் அப்படியே இருந்தது. குளிர் காற்று வீச, இன்றும் மழை பொழியும் அறிகுறி மென் காலை பொழுதில் தெரிய, கண்ணாடியை அடைத்து காரினுள் படுத்திருந்த தினேஷுக்கு தலை, கழுத்தெலாம் வியர்த்து தூக்கம் கலைந்தது. 

ஒரு காலை சீட்டிலும் மற்றொரு காலை கண்ணாடியில் வைத்திருந்தவன் கால்கள் நீண்ட நேரமாக ஒரே சீராக வைத்திருந்த காரணத்தால் வேதனை கொடுத்தது. தலை தூக்கி கழுத்தை பிடித்து எழுந்து அமர்ந்தவன் முதல் வேலையாக கதவை திறந்து கீழே இறங்கினான். 

சில்லென்ற காற்று முகத்தில் மோதி நிற்கவும் தான் ஆசுவாசமாக சுற்றி பார்த்தான். அருகில் இருந்த கடையில் ஒரு பேஸ்ட், தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து பல் துலக்கி வாகனத்தின் மறு பக்கம் சென்று முன் இருக்கையை சாய்த்து படுத்திருந்த ரகுவை எழுப்பினான். 

ஒரே அழைப்பில் எழுந்தவன் தானும் பல் துலக்கி முகம் கழுவி சற்று தொலைவில் தெரிந்த அந்த வீட்டினை பெருமூச்சோடு பார்த்தான். 

"நல்லா யோசிச்சுக்கோ மாப்பிள்ளை" தினேஷின் எச்சரிக்கையை உள் வாங்கி கண்களை அழுத்தமாக மூடி திறந்தவன், "வா போகலாம்" என அவ்வீட்டை நோக்கி நடந்தான். 

தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுதே பிரமாண்டமாக தெரிந்தது அந்த இல்லம். குறிப்பாக கூற வேண்டும் என்றால் திவ்யாவின் தந்தை இல்லம் அது. 

நேற்று திவ்யாவை விட்டு வெளி வந்தவன் குற்ற உணர்ச்சியில் அதிகம் தத்தளித்தான். 

கோவத்தை தனக்கு சாதகமாக மாற்றி செய்த காரியத்தை எண்ணி கூனி குறுகி வேதனைப்பட்டிருந்த நேரம், "கேக்க ஆள் இல்லனு நீ ரொம்ப ஆடுற ரகு. அவளோட அப்பா இருந்த இந்நேரம் உனக்கு நடக்குறதே வேற" கோவம் கொப்பளிக்க நண்பன் பேசியது ரகுவின் நெஞ்சத்தில் தீபத்தை ஒளிர செய்தது.

சிறிதும் தாமதிக்காமல் நேரம் காலத்தை கவனிக்காது வாகனத்தை எடுக்க, அவன் இருக்கும் மனநிலையில் நண்பனை தனியே விட முடியாமல் தானும் வாகனத்தினுள் ஏறிக்கொண்டான் தினேஷ். 

இரண்டரை மணி நேர பயணத்திற்கு பிறகு இருவரும் காஞ்சிபுரத்தில் வந்து நிற்க விஷயம் புரிந்து நண்பனை திட்டி தீர்த்துவிட்டான். 

அனைத்தையும் பொறுமையாக கேட்டுவிட்டு, "நான் பேசணும். அவ்ளோ தான். கூட வர்றதா இருந்தா வா இல்லையா பஸ் ஏத்தி விடுறேன்" 

தீர்க்கமாக சொன்னவன் உறுதி தினேஷுக்கு புரிய அவனை பிரிய மனம் வராமல் உடன் இருந்தான். 

அதே சமயம் இரவு நெடுநேரம் ஆகியிருக்க இந்நேரம் சென்று பேசுவது நல்லதல்ல என நண்பனுக்கு புரியவைத்து சற்று தேக்கி வைத்தான். இப்பொழுது விடிந்தும் விடியாத காலை பொழுதிலே செல்ல தயாராகிவிட்டான். 

வீட்டினுள் நுழைய திவ்யாவின் கணவன் என்னும் பதவி போதுமானதாக இருக்க காவலாளி யோசிக்காமல் விட்டு அவனுக்கு முன்னே ஓடி சென்று வீட்டினரிடம் செய்தியை கூறியிருந்தான். 

தடதடவென சத்தத்தோடு மொத்த ஆண்களும் வாயிலை நோக்கி வந்து நிற்க, நிதான நடையோடு வந்த ரகுவை தீயாய் முறைத்தனர். 

"யார்ரா இவனை உள்ள விட சொன்னது, கண்ட கண்ட நாயெல்லாம் உள்ள விடுவியா நீ?" திவ்யாவின் இளைய சகோதரன் வாட்ச்மேன் முகம் பார்த்து இழிவாக கேட்டான். 

"இப்ப யார் நாய் மாதிரி குறைக்கிறது?" அதீத கோவத்தில் வந்தவன் திவ்யாவின் குடும்பம் என்றெல்லாம் பார்க்காமல் சரமாரியாக வார்த்தையை விட்டான். 

"யார் வீட்டுல வந்து யாரை பேசுற.." 

"நீ அடங்கு பிரபு. உங்கிட்ட பேச நான் வரல" என்றவன் திவ்யாவின் தந்தையை பார்த்து, 

"நீ எல்லாம் பெரிய மனுஷன் தான அப்றம் எதுக்கு இவ்ளோ கேவலமா நடந்துக்குற?" 

ஒவ்வாமையை முகத்தில் வைத்து அவரை பார்த்து ரகு கேட்ட கேள்வியில் இரு சகோதரர்களுக்கும் திகுதிகுவென ஆத்திரம் வர ஒரே மூச்சில் ரகுவின் சட்டையை பிடித்து தாக்க எத்தனிக்க அவர்களுக்கு இடையில் வந்த தினேஷ் அந்த இருவரையும் ஒரே முயற்சியில் சில அடி தூரம் வீசியிருந்தான். 

"பேசிட்டு இருக்கப்பயே கை ஓங்குறீங்க... மவனே அன்னைக்கு ஆள் இல்லாதபோ வீடு புகுந்து அடிச்சிட்டீங்க, இன்னைக்கு அவன் மேல கை வைங்கடா பாக்கலாம். அவன் வேணா அவன் பொண்டாட்டி குடும்பம்னு யோசிச்சு சும்மா இருக்கலாம். ஆனா எனக்கு அப்டி இல்ல... மவனே அத்தனை பேரையும் கூறுபோட்டுடுவேன்" 

"எங்க போடுடா பாக்கலாம்" என தங்கள் பங்கிற்கு அவர்கள் எகிறிக்கொண்டு வர, தினேஷை பிடித்து நிறுத்தி, 

"சண்டை போடுற ஆசைல நான் வரல. நாலு கேள்வி கேட்டு போய்கிட்டே இருப்பேன்" நிதானமாக பேசினான் ரகு. 

"இவிங்ககிட்ட எதுக்கு இவ்ளோ பொறுமையா பேசுற? கருமம், வீடு தேடி கலங்கி வந்த பிள்ளை கைல காச குடுத்து அசிங்கப்படுத்தி அனுப்புனவிங்க... ச்சை அன்னைக்கு அவகிட்ட நிதானமா பேசிருந்தா இந்த மனுஷ ஜென்மங்களை நாம வந்து பாக்கணும்னு தலையெழுத்து இருந்திருக்காது" புலம்பி அருகில் இருந்த பூ ஜாடியை எட்டி உதைத்தான் தினேஷ். 

"என் பிள்ளை என்ன தேடி வந்துச்சா?" ஓரமாக நின்ற திவ்யா தந்தை தவிப்போடு மற்ற குடும்பத்தினரை பார்த்தார். 

"சும்மா நடிக்காத ய்யா. ஆறுதல் எதிர்பார்த்து வந்தவகிட்ட பணத்தை குடுத்து வேலைக்காரி மாதிரி அனுப்பி வச்சிட்டு இன்னைக்கு ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசாத. ஒவ்வொருத்தனையும் கொன்னு பொதைக்கணும்னு வெறி வருது" என்றவன் சில நொடிகள் இடைவிட்டு, 

"பெத்த புள்ள லவ் பண்ணி அத ஏத்துக்க மனசு வரலைனா, 'வீட்டுக்குள்ள சேத்துக்க முடியாதுனு' சொல்லி அனுப்பிடுங்க. அத விட்டு நல்லாவே இருக்க மாட்ட, நாசமா போவ, வெளங்காம போவ-னு சாபம் குடுக்காதிங்க சரியா?" 

"என் பிள்ளைக்கு ஒன்னும் அகலல..." பதட்டத்தோடு கேட்ட அவள் அன்னையை வெறியோடு நெருங்கியவன் தன்னையே சமன்படுத்தி, 

"நீங்க பேசாதீங்க. இப்டி எல்லாம் ஒரு அம்மா இருப்பாளானு தோன வச்ச ஒரு அருவருப்பான ஜீவன் நீங்க" 

"டேய் என் பிள்ளைக்கு என்னடா?" தளர்ந்த நடையோடு அவனை கரம் பற்றி திருப்பினார் அவள் தந்தை. 

"உன் மகளுக்கு உடம்புக்கு ஒன்னுமில்லயா. ஆனா மனசு செத்து கெடக்குது. என்ன மாதிரி புருஷனையும், உங்கள மாதிரி பெத்தவங்களையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நேசிக்கிறாளே. அதுக்கான தண்டனையை அவ அனுபவிக்கிறா இப்போ" 

"என்னடா நாடகம் நடத்திட்டு இருக்க. அவன்கிட்ட இன்னும் என்ன ப்பா பேச்சு? அடிச்சு அனுப்புங்க அவனை" 

அவனை கண்டுகொள்ளாமல் கோவத்தோடு அவள் பெற்றோரை பார்த்து, "எந்த நேரத்துல வயிறு எறிஞ்சு சாபம் விட்டிங்களோ ஆளுக்கு ஒரு பக்கம் சிதற போறோம். சந்தோசமா இருங்க. எந்த வாழ்க்கைல உங்க மக அவ விருப்பபடி இருக்கக் கூடாதுன்னு மொத்த குடும்பமும் தினம் தினம் விரும்புனீங்களோ அது கூடிய சீக்கரம் நடக்க போகுது. டிவோர்ஸ் வாங்க போறோம் ய்யா" அவரை நெருங்கி கத்தினான். 

"காது குளிர சந்தோசமா கேட்டுக்கோங்க. இன்னும் கொஞ்ச நாள் தான் அவ என்னோட மனைவி, அதுக்கு அப்றம் உங்க பொண்ணு தான். உங்க விருப்பபடி குழந்தையும் இல்ல, சந்தோஷமும் எங்களுக்குள்ள இல்ல. போதுமா? 

இத தான ஆசைபட்டிங்க. என்ன மாதிரி ஒருத்தன் கூட இருந்து சந்தோசத்தை எல்லாம் விட்டு தவிச்சது போதும். மனசு ஒடஞ்சு அவளோட சந்தோஷத்துக்காக மட்டும் தான் இந்த டிவோர்ஸ் குடுக்குறேன்" ஏகத்திற்கும் குரல் உடைந்தது ரகுவுக்கு. 

உயிருக்கு உயிராக நேசித்தவளை எதற்காக பிரிய ஒத்துக்கொண்டோம் என ஒரு வார காலத்தில் அவன் வருந்தாதே நாளே இல்லை. இப்பொழுது அதை வாய் விட்டு சத்தமாக கூறும் பொழுது இதயத்தில் உண்டான வலியின் அளவு சொல்லிலடங்காதது.  

அவனை விட்டு சற்று தள்ளி முதுகை காட்டி நின்ற தினேஷுக்கு கூட நண்பனின் நிலை விவரிக்க முடியாத வருத்தத்தில் தவித்தது. 

"அத சொல்லி உங்ககிட்ட ஆறுதல் தேட தான் வந்தா. அவளை போய் என்ன என்னமோ பேசி அழுக வச்சு அனுப்பி விட்ருக்கீங்களேடா... உங்கள தேடி பொண்ணு வந்தா காசு சொத்துக்காக தான் இருக்குமா, ஏன் பாசம் ஏக்கத்துல வந்துருக்கவே கூடாதா?" 

இரு சகோதரர்களை பார்த்து வருத்தம் மேலிட அவன் கேட்க, அவன் கூறிய செய்தியிலிருந்தே இன்னும் அவர்கள் அனைவரும் மீளாமல் இருந்தனர். 

பேசியது சபித்தது எல்லாம் அவள் வாழ்க்கையில் நடந்துவிட்டது என நிம்மதியாக இருக்க முடியவில்லை. துடித்தனர் அனைவரும். தங்கள் வார்த்தை மனதிலிருந்து வரவில்லையே, 

அடம் பிடித்து ஆசையோடு சென்றவள் வாழ்க்கை இப்படி பாதியிலே காணாமல் போக வேண்டும் என எந்நாளும் அவர்கள் நினைத்தது இல்லை. 

அதே சமயம் இத்தனை அக்கறையாய், பரிதவிப்போடு மனைவியை பற்றி பேசுபவன் எதற்காக அவளை விவாகரத்து செய்ய நினைக்கிறான் என்ற எண்ணமும் உடன் பிறந்தது. 

கண்களில் நிலையில்லாமல் தவிப்போடு பேசுபவன் இதற்கு மறுப்பு தெரிவிக்கலாமே என நினைத்த திவ்யாவின் தந்தை அவனிடம் கேள்வி கேட்கும் தைரியத்தை இழந்திருந்தார். 

முகத்தை இறுக்கமாக கைகளால் தேய்த்தவன் தன்னை நிதானப்படுத்தி, இருகைகளையும் கூப்பி அவரை கெஞ்சல் பார்வை பார்த்தான். 

"உங்கள கை எடுத்து கும்புட்டு கேட்டுக்குறேன் அவளுக்கு காசு பணம் குடுத்து பினான்ஷியலா சப்போர்ட் பண்ண வேணாம், மெண்டல் சப்போர்ட் பண்ணுங்க போதும். என்ன தானே பிடிக்காது, நான் போறேன். 

இனிமேல் அவ வாழ்க்கைல வரவே மாட்டேன். அவ பண்ணத மன்னிச்சு ஏத்துக்குட்டு அவளை சந்தோசமா மட்டும் பாத்துக்கோங்க ப்ளீஸ்..." 

உண்மையான மனதோடு வேண்டியவன் தாங்கள் இப்பொழுது இருக்கும் ரிசார்ட் மற்றும் தன்னுடைய வீட்டின் முகவரியையும் அங்கே வைத்துவிட்டு தான் ஆஸ்திரேலியா செல்லும் தகவலையும் கூறி அவர்கள் மனம் மாறிய பின்பு வருமாறு கேட்டுக்கொண்டு வெளியேறியிருந்தான். 

ரகு சென்ற பிறகு செய்வதறியாமல் திவ்யாவின் தந்தை வாசலிலே அமர, அவளது அண்ணன் இருவரும் என்ன செய்வதென தெரியாமல் தவிப்பில் இருந்தனர். 

கெளரவம், தகுதி என பார்த்து மகள் எந்நிலையிலும் இருந்து கஷ்டப்படட்டும் என விடுவதா இல்லை அனைத்தையும் மறந்து மகளை அரவணைப்பதா, முடிவு தெரியாமல் மாறி மாறி ஒருவர் முகத்தை பார்த்து நின்றனர்.

வீட்டினை விட்டு செல்லும் பொழுது வேண்டும் என்றே அங்கிருந்த பூ தொட்டியை எடுத்து உடைத்து சென்றிருந்தான் தினேஷ். 

நண்பனை திரும்பி முறைத்த ரகு, "லூசாடா நீ?" என்றான். 

"யார் நான் லூசா? நீ தான்டா லூசு. இந்த மாதிரி ஒரு கிறுக்கனுங்ககிட்ட திவ்யாவை மாட்டி விட பாக்குற பாரேன். அவளா தனியா இருந்தா கூட நிம்மதியா இருப்பா" 

இன்னும் கோவம் அடங்காது ஓரத்தில் கிடந்த ஒரு கல்லை எடுத்து வீட்டை குறி பார்த்து எறிந்த பிறகே நிம்மதியடைந்தான். இழுத்து பிடித்து நண்பனை அவ்விடம் விட்டு அகற்றி வந்திருந்தான் ரகு. 

"இத்தனை வருஷம் இங்க தான இருந்தா? ஒரு நாள் அவ அப்பா கூட அவளை திட்ட மாட்டாரு. அண்ணனுங்க அவளை கண்ணுக்குள்ள வச்சு தாங்குவானுங்க. 

ஏதோ அவ மேல கோவத்துல ரெண்டு வார்த்தை பேசிட்டானுங்க. அதுக்காக அவங்க தப்பானவங்கனு சொல்ல முடியாது தினேஷ். அவளுக்கும் அவங்க நினைப்பு ரொம்பவே அதிகமா இருக்கு, எங்களுக்குள்ள நடந்த பெரிய சண்டைல அது சமந்தமாவும் நிறையா இருக்கு" சாவியை நண்பன் கையில் தூக்கி போட்டான். 

இருவரும் அமைதியாக வாகனத்தில் ஏறி அமர்ந்தனர், "பாசம்னு இருந்தா எப்பவும் மாறாது. இப்டி அடிக்கடி மாறுனா அது பேர் நடிப்பு" 

தினேஷை தீர்க்கமாக பார்த்தவன், "அப்போ நான் நடிக்கிறேன்னு சொல்றியா?" 

"யாருக்கு தெரியும்" ஆர்வமில்லாமல் பதில் வந்தது. 

ரகு நம்ப முடியாமல் தினேஷை பார்த்தான், எத்தனை துன்பம், கல்லூரி சண்டை வந்தாலும் யோசிக்காமல் தன்னோடு நிற்பவன் இன்று தன்னையே நம்பாமல் மனைவிக்கு துணை நிற்பது மகிழ்ச்சி கோவம் என இரண்டையும் சேர்த்து தந்தது. 

தினேஷ் என்னமோ மாறாத இருந்தது. திருமணம் செய்தவனும் சிந்தனை சரியில்லாமல் எந்த பக்கம் தாவுவது என குழப்பத்தில் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. 

பெற்றவர்கள் அதை விட மோசம். இவர்களுக்கு இடையில் சிக்கி தவிக்கும் அவள் மேல் தான் இரக்கம் அதிகம் ஊறியது தினேஷுக்கு. 

"சரி தான்டா" என்றான் ரகு வரவழைத்த சிரிப்போடு. 

"சும்மா இப்டி நடிக்காத சரியா. எரிச்சலா வருது. போய் பேசி தான் பாரேன்டா அவகூட. என்ன மனசுல நினைக்கிறானு தெரிஞ்சா நீயும் நிம்மதியா இருக்கலாம்ல" 

நேற்று உணர்வுகள் கொப்பளித்து திவ்யாவிடம் நடந்தவற்றை நினைத்து பார்த்தவன் மனம் கூனி குறுகியது. கோளை போல் அல்லவா அவளை அப்படியே விட்டு வந்தேன்... என்ன நினைத்திருப்பாள் என்னை பற்றி. 

நண்பன் கேட்ட கேள்வியை மறந்து போனவன் எண்ணங்களின் ஒவ்வொரு மூளை முடுக்கிலும் திவ்யா ஆக்ரமித்துக்கொண்டாள். 

கண் மூடி இருக்கையில் சாய்ந்தவன் சிந்தனை தங்கள் இனிமையான நினைவுகள், கசப்பான நினைவுகள் என அனைத்தையும் அசைபோட்டு சோர்ந்து போனது. நினைவுகளில் பயணித்தவன் எண்ணங்களை தட்டி எழுப்பி மஹாபலிபுரம் வந்ததாக கூறியிருந்தான் தினேஷ். 

இன்று நண்பனுக்கு திருமணம். இன்னும் ஒரு மணி நேரம் இருப்பதால் மெதுவாக காலை உணவை உண்டு, குடிலுக்கு போக மனம் வராமல் உணவகத்தில் அமர்ந்து நேரத்தை ஓட்டும் முயற்சியில் இருந்தவனை அழைத்திருந்தார் திவ்யாவின் தந்தை. 

எடுத்து பேசியவனுக்கு அவர் கூறிய செய்தி நிம்மதியை தந்ததா, சொல்ல முடியாத வேதனையை கொடுத்ததா என தெரியவில்லை. 

இரண்டு மனதாக கொடுக்க வேண்டிய தகவல்களை கொடுத்து திவ்யா குடிலில் இல்லை என்று தெரிந்த பிறகே தான் சென்று தயாராகி திருமணத்தில் வந்து நின்றது. 

அவனை அங்கு பார்த்த அனைவரும் ஏன் நேற்று ஆளையே பார்க்க முடியவில்லை என கேள்விகளால் துளைக்க, அதை விட தன்னை தொடரும் அவளின் பார்வையினை சந்திக்க உடலில் தெம்பில்லை. 

சங்கடத்துடன் அந்த பார்வையை தவிர்த்தவன் திருமணம் நடந்து முடிந்த கையேடு தினேஷை பின்தொடர வேண்டாம் என கூறி அந்த பெரிய ஹாலின் இறுதியில் அமர்ந்திருந்த திவ்யாவை தேடினான். 

நீண்ட தேடலுக்கு பிறகு அவளை கண்டும் கொண்டான். ஆரஞ் நிற பட்டு புடவையில் நீளமும் பச்சையும் கலந்திருந்த நிறத்தில் பார்டர் வைத்து அதே நிற ரவிக்கை அணிந்து ஒரு ஓரத்தில் அவன் தோழிகளோடு இருந்தாள். பெயருக்கு கூட முகத்தில் புன்னகை இல்லை. 

யோசனையோடு தான் அவளை நோக்கி சென்றான். அவனை பார்த்ததும் பாராதது போல் அவள் இருக்க அருகில் இருந்த பெண்கள் அவளை திரும்ப வைத்திருந்தனர். 

"வா திவ்யா" ரகுவின் அழைப்பை அனைவர் முன்னிலையிலும் நிராகரிக்க முடியவில்லை. 

அவனை தீயாய் முறைத்தாள், அசரவில்லை ரகு. 

நீ வந்தால் தான் நான் நகர்வேன் என ரகு நிற்க அவனை விட அவள் தான் முதலில் அந்த மண்டபத்தை விட்டு முதலில் வெளியே வந்தது. 

தன்னை விட வேகமாக வந்தவளின் நடைக்கு ஈடாக வந்தவன் அவள் கை பிடித்து வேறு பக்கம் அழைக்க உச் கொட்டி கையை முக சலிப்புடன் உறுவிக்கொண்டாள். 

எந்த உரிமையில் என் கையை பிடிக்கிறாய் என்ற கேள்வியை தாங்கி நின்றவள் முகம் பார்த்து தான் தன்னுடைய செயலின் வீரியம் புரிந்தது. அதையும் தாண்டி அவன் முகத்தில் பிரகாசம் கூத்தாடியது. 

"உனக்கு ஒரு சர்ப்ரைஸ் திவ்யா கொஞ்சம் வேகமா வாயேன்" 

"நீ ஏற்கனவே மூச்சு முட்டுற அளவு சர்ப்ரைஸ் குடுத்துட்ட ரகு. இதுக்கு மேல என் மனசு தாங்காது" கேலி இழைந்தோடிய குரலில் அவள் கூற அந்த கண்களில் இருந்த வலி அவனை வாட்டியது. 

ஆனாலும் திடமாய் நின்றான், "இல்ல இல்ல இது உனக்கு பிடிக்கும். கண்டிப்பா நீ வந்தே ஆகணும்" 

அவள் கைகளை பிடிக்க பரபரத்த கைகளை அடக்க முடியாமல் மீண்டும் நெருங்க அவனை நெருங்க விடாமல் தூரத்தில் தள்ளி நிறுத்தினாள் கை காட்டி. ஆனந்தத்தில் மின்னிய ரகுவின் முகம் நொடியில் மாண்டது. 

தானே விலகி சென்றாலும் பூனை குட்டியாக பின்னே வருபவள் இன்று முகம் சுருக்கி தள்ளி நிற்க சொல்கிறாள். அதுவும் அவள் நன்மைக்கு என உணர்ந்தவன் உடனே முகத்தில் சிரிப்பை பூக்க செய்து பிடிவாதமாக அவளை அழைத்து உணவகத்திற்கு சென்றான். 

காலை பதினோரு மணியை தாண்டியிருக்க அந்த இடம் வெறிச்சோடி காட்சியளித்தது. உணவகத்தின் ரிஸப்ஷனை தாண்டி தனி தனி சிறு திறந்த வெளி குடில்கள் போல் அமைக்கப்பட்டிருக்க அதில் குறைந்தது பத்து பேர் அமரக்கூடிய ஒரு குடிலுக்கு அழைத்து வந்தான். 

வழக்கம் போல் நண்பர்களை அழைப்பான் என திவ்யா எண்ணி அமைதியாக இருக்க அவனோ இவளை விட்டு சென்றுவிட்டான். ரகு சென்ற திசையை பார்த்தவள் மனம் சோர்ந்து போக, தன்னுடைய விதியை எண்ணி இரவெல்லாம் உறங்காதிருந்தது தலை வலியை பரிசளித்திருந்தது. 

அதை விட அவன் நிராகரிப்பும், உணர்ச்சிபூர்வமாக நடந்த சிறு நெருக்கத்தை உதறி தள்ளி தவறு செய்தது போல் அவன் சென்றதும் அவளது பெண்மையை வதைத்திருந்தது. 

அவள் முன்னே ஒருவர் தண்ணீரை வந்து வைக்க, கண்ணீரை வெளி காட்ட விரும்பாமல் தலையை அந்த டேபிள் மேல் வைத்து கண்களை மூட, சில நொடிகளில் அவள் தலையை மிருதுவாக யாரோ வருட உடனே சுயமடைந்து எழுந்து அமர்ந்தாள். 

கண்கள் தன்னை சுற்றி பார்க்க, அங்கு இருந்த காட்சியை பார்த்து பேச்சற்று போனாள் திவ்யா. தந்தை, அன்னை, சகோதரர்கள், அண்ணி என அவள் மொத்த குடும்பமும் அங்கு தான் இருந்தனர், கண்களில் குற்ற உணர்ச்சியோடு.

அனைவரையும் பார்த்தவள் அடுத்து தேடியது ரகுவை தான். கண்கள் எங்கும் அலைபாய, அவள் குடும்பத்திற்கு பின்னால் தான் ஒரு தூணில் சாய்ந்து இவர்களை ஒரு சன்ன சிரிப்போடு பார்த்து நின்றான். 

"எப்படிடா இருக்க?" ஆதூரமாக அவள் தலையை கோதி கண்களில் கண்ணீரோடு கேட்டார் திவ்யாவின் தந்தை. 

எதுவும் பேசாமல் தலையை அவள் ஆட்ட, "அம்மாவை மன்னிச்சிரு திவ்யா ம்மா, அன்னைக்கு உன் மேல கோவத்துல அப்டி பேசிட்டேன்" அவள் கை பிடித்து கெஞ்சினார். திவ்யா அசரவில்லை.

கண்ணீர் மல்க தான் பேசியும் சிறிதும் இறங்காத மகளின் கோவம் புரிந்து மேலும் இறங்கி வந்தனர். 

"தெரியும் ம்மா நீ என் மேல எவ்ளோ கோவத்துல இருப்பனு. உன் நிலைமை தெரியாம அப்டி ஏதேதோ பேசிட்டோம். அம்மாகிட்ட பேசு ம்மா" 

"திவி..." அவளது மூத்த சகோதரன் அவள் அருகே வந்து அமர அவனை பார்த்தாள் தலை திருப்பி. 

வாயை திறந்து அழைத்துவிட்டான், ஆனால் பேச தயக்கம், குற்றவுணர்ச்சி இயலாமை என சகோதரனை அதிகம் தடுத்தது. அவனை முந்தி அடுத்தவன் வந்து அவள் கரம் பற்றி தானே தன் கன்னத்தில் அறைந்தான், 

"அப்டி என்ன தான் கோவமோ தெரியலடா செல்லம். நீ எங்களை விட்டு போனப்போ உன்ன தெரு தெருவா தேடி சுத்தினோம். எங்க தங்கச்சி மேல இருக்க நம்பிக்கைல. 

எங்கையும் கிடைக்கல நீ. கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு வந்து நின்ன, அதுக்கு அப்றம் எங்க போனாலும் உன்ன பத்தி தெரிஞ்சே எங்க மனசை வார்த்தையால குத்தணும்னு கேக்குறாங்க. 

அதான் கோவம், கோவம், கண் மண் தெரியாத கோவம். நீ வந்து நிக்கவும் எல்லாத்தையும் சேர்த்து வச்சு கொட்டிட்டோம்" என்றவன் சகோதரியின் ஓய்ந்த தோற்றத்தை பார்த்து கண்ணீரை சட்டென துடைத்து மேலும் தொடர்ந்தான், 

"தப்பு தான். எல்லாமே தப்பு தான். உன் ஆசைய கேக்காம, உனக்கு பிடிச்சதை செய்ய விடாம, எங்க விருப்பம் போலவே ஆட்டி படச்சது தப்பு தான். அதுக்காக என்ன தண்டனை வேணா எங்களுக்கு குடு டா. 

ஆனா இப்டி இருக்காத. உன்ன பாக்கவே எங்களுக்கு கஷ்டமா இருக்கு. நாங்க இருக்கோம் திவிம்மா. உனக்குன்னு உன் குடும்பம் எப்பவும் இருக்கும், நீ எதுக்கும் கவலைப்படாத உன் நிலைமையை நினைச்சு" 

"என்ன என் நிலைமை?" என்றாள் ஒட்டாத குரலில். 

திவ்யாவின் இளைய சகோதரன் பிரபு சகோதரியின் விவாகரத்து பற்றி பேச தயங்கி வீட்டின் மற்றவர்களை பார்க்க, அவனுக்கு கண் மூடி திறந்து ஆறுதல் கூறிய பெரிய சகோதரன் மனைவி அவனை எழ கூறி, தான் திவ்யா அருகில் அமர்ந்தாள். 

"ரகு அண்ணா சொன்னாங்கமா உங்க டிவோர்ஸ் பத்தி" 

உணர்ச்சியற்ற பார்வையோடு தூரம் நின்றவனை வெறித்து பார்த்தாள் திவ்யா. அவள் பார்வை கண்டவன் தலை கோதி வேறு பக்கம் திரும்பிக்கொண்டான் அந்த கண்கள் என்ன கூறுகின்றது என தெரியாமல்..

"அவங்க ஆஸ்திரேலியா போறத பத்தியும், உனக்கு ஒரு சப்போர்ட் வேணும்னும் சொன்னாங்க" 

இந்த செய்தி அவள் சிறிதும் எதிர்பார்த்திராதது. வேதனையோடு அவனை பார்க்க, அவன் தான் அவளை பார்க்கவே இல்லையே. 

திவ்யா வீட்டினர் பேசியதை எல்லாம் சற்று தள்ளி நின்று கேட்டான், அவளை யாராவது ஒரு வார்த்தை தவறாக பேசினால் கூட அவர்களை அடித்து துவைக்கும் எண்ணம் அவனிடம். 

ஆனால் அவளை அவர்கள் ஏற்றுக்கொண்டால் அதன் பிறகு தான் வாக்கு கொடுத்தது போல் அவள் இருக்கும் திசையில் கூட திரும்ப கூடாதென்று முடிவோடு உறுதியாய் நின்றான். 

அதன் பிறகு ஏதேதோ அவளிடம் பேசினார்கள், திவ்யாவின் செவிகளில் அவள் அண்ணி கூறிய ரகுவை பற்றிய செய்தி மட்டுமே இருந்தது. மகளின் பார்வை மட்டுமல்லாது, சிந்தனை கூட ரகுவிடம் மட்டுமே இருப்பதாய் தோன்ற, அவள் தந்தை அவனிடம் சென்றார். 

அவரை தன் அருகில் உணர்ந்ததும், "சாரி சாப்பிட்டீங்களானு கூட கேக்கல. ஏதாவது சொல்லவா?" என்றான் தன்மையாக. 

அவருக்கு அவனிடம் பேச பெருத்த தயக்கம். அடித்து மிதித்து, அவமானப்படுத்தி, அசிங்கமாக பேசியும் பிரிவின் போதும் மகளுக்காக துடிப்பவன் காதல் தங்கள் கௌரவத்தை விட பெரிதாக தோன்றியது. 

"அதெல்லாம் வேணாம் ப்பா" என்றவர் மகளை பார்த்து மீண்டும் அவனிடம் வந்தார், 

"உங்களுக்குள்ள என்ன மன கசப்பு இருக்குனு இந்த பிரிவை தேடுறீங்க?" 

"அதெல்லாம் லிஸ்ட் பெருசா போகும். திவ்யாவை வீட்டுக்கு கூட்டிட்டு போங்க, அவளே சொல்லுவா வரிசையா. அவ்ளோ வெறுப்பு என் மேல அவளுக்கு" இதழ்கள் கசப்பில் சிரித்தது. 

"நீங்க அவசரப்படுற மாதிரி தெரியிது ப்பா எனக்கு. திவ்யா உங்கள பாக்குற அந்த பார்..." 

"போதும் நிறுத்துறீங்களா?" அவ்விடத்தையே உலுக்கும் குரலில் சத்தமெடுத்து கத்தினாள். 

ரகுவிடம் பேசிக்கொண்டிருந்த அவள் தந்தை மகளின் சத்தத்தில் அவளை அடைந்து, "என்னடா ஆச்சு?" மனைவியை முறைத்து நின்ற மகளை நோக்கி வேகமாக நடந்தார் ரகுவை மறந்து.

"போதும் ப்பா. உங்களோட அன்ப எல்லாம் பாக்குறப்போ மூச்சு முட்டுது" கோவம் கண்களை சூழ்ந்திருந்தது அவளுக்கு. 

"யாரும் உன்ன எதுவும் சொல்லலையே திவ்யா. நீ எதுக்கு இப்போ கோவப்படுற? சரி ஒடனே எல்லாம் முடிவெடுக்க வேணாம். எங்க மேல கோவம் போனதும் நம்ம வீட்டுக்கு வா" பொறுமையாக எடுத்துரைத்தான் அவள் மூத்த சகோதரன். 

"நம்ம வீடு இல்ல. அது உங்க வீடு" என்றாள் அழுத்தம் திருத்தமாய். 

"என்ன திவி இப்டி பேசுற?" 

"சும்மா வருத்தம் இருக்க மாதிரி பேசாதீங்க. எப்போ உங்க கெளரவம் தான் என்ன விட முக்கியம்னு சொன்னிங்களோ அன்னைக்கே உங்க பாசம் அளவு என்னனு புரிஞ்சு போச்சு. இப்போ உங்க மேல வெறுப்பு தான் இருக்கு" 

திவ்யாவின் இரண்டாம் சகோதரன், "வீட்டுல மக ஓடி போனா அதை சந்தோசமா ஏத்துக்குற அளவு நாகரிகம் அதிகமான நாட்டுல நாம இல்ல திவ்யா, அப்போ உன்ன புரிஞ்சுக்கல இப்போ புரிஞ்சுகுட்டோம்" 

"எப்பா ரொம்ப தான் புரிஞ்சுக்கிட்டீங்க. ஒரு மாசம் கெஞ்சுனேன் எனக்கு அவன் தான் வேணும், அவனை தான் லவ் பன்றேன்னு சொன்னப்போ அவசரமா ஒரு மாப்பிளையை பாத்து கல்யாணம் பேச தான் பாத்திங்களே தவற, ரகு குணம் எப்படி, அவன் குடும்பம் எப்படினு தெரிஞ்சுக்க எந்த முயற்சியும் எடுக்கல. அப்போ என்ன புரிஞ்சுக்காதவங்க இப்போ எதுக்கு வந்துருக்கீங்க?" 

"அப்போ நாங்க சொன்னதை கேட்டு கல்யாணம் பண்ணிருந்தா இந்நேரம் நீ டிவோர்ஸ்னு நின்னுருக்க மாட்ட திவ்யா" என்றான் பிரபு. 

"ஓ.." கசப்பாக தந்தையை பார்த்து, "என்ன தேடி வந்தது காரணம் நான் டிவோர்ஸ் வாங்க போறது. அதாவது உங்களுக்கு பிடிக்காத ரகுவை விட்டு வர்ற காரணம் தான் அப்டி தான?" 

"எதுக்கும் எதுக்கும்டா முடிச்சு போடுற?" மகனை முறைத்து, அவள் தந்தை அவளை நெருங்க பின்னால் சென்று அவரை நிறுத்தினாள். 

"அது தான் உண்மை. நான் அவன் கூட சந்தோசமா வாழ்த்திருந்தா ஏதோ ஒரு மூலைல இருந்து என்ன சபிச்சிட்டே தான் இருப்பிங்க. இப்போ ஊர்ல சொல்லிக்கலாம்ல, என் பொண்ணு என் பேச்ச புரிஞ்சுகிட்டு வந்துட்டானு. 

உங்களுக்கு உங்க கெளரவம் தான் இப்பவும் முக்கியம், மக வாழ்க்கை எக்கேடோ கேட்டு போகட்டும். என் வாழ்க்கைல ரகு இல்லனு தெரிஞ்சதும் என்ன பாக்க ஓடி வர்றது என்ன, அவன்கிட்ட பொறுமையா பேசுறது என்ன... அப்பப்பா. முடியல புல்லரிக்கிது" 

"எதார்த்தமா பேசுனத்துக்கு கூட இப்டி அர்த்தம் எடுக்காத திவ்யா" 

"சரி இன்னைக்கு எதார்த்தமா பேசுனீங்க, ரெண்டு வருஷம் முன்னாடி உங்க ஆளுங்கள எல்லாம் கூட்டிட்டு போய் ரகுவ அடிச்சீங்களே அதுவும் எதார்த்தமா நடந்ததா?" 

"திவ்யா இப்ப எதுக்கு இதெல்லாம் பேசிட்டு இருக்க, அவங்க உன்ன பாக்க வந்துருக்காங்க" அவள் பேச்சு போகும் திசை பிடிக்காமல் இடையிட்டான் ரகு. 

"நீ இதுக்கு நடுல வராத ரகு" 

"அப்பா ஏதோ கோவத்துல பண்ணிட்டேன் டா. என்ன இப்ப மன்னிப்பு கேட்கணுமா? கேக்குறேன் அந்த பையன்கிட்ட" 

"அப்பா நீங்க எதுக்கு யார் யார்கிட்டையோ மன்னிப்பு கேக்கணும்?" கோவமாக முன்னே வந்தான் அவள் மூத்த சகோதரன். 

"ம், இது தான் நீங்க. இத்தனை வருஷம் காட்டுன பாசம் எல்லாம் வெறும் வேஷம் தான். பொண்ணோட வாழ்க்கை பாழாகிடுச்சுனு பீல் பண்ணாம, சந்தோசமா ஓடி வந்துருக்கீங்க" 

"நீயா கற்பனை பண்ணி பேசாம நிதானத்துக்கு வா திவ்யா. உன் மனசு சரியில்ல" அவள் அண்ணி அவள் கை பற்றி ஆறுதல் படுத்த முயன்றாள். 

"உங்க வீட்டுகார் உங்கள லவ் பண்ணி கல்யாணம் பண்ணா அது சரி, குடும்பமே திருவிழா மாதிரி கல்யாணத்தை நடத்துவாங்க. இதுவே நான் பண்ணா பாவம், கெளரவம் போய்டும், மானம் போய்டும். மரியாதை போய்டும்"  

ஆதங்கம் தாங்காமல் அனலாக வந்தது திவ்யாவின் வார்த்தைகள். 

"தப்பு செய்யாதவங்க யாரும் இல்லையே ம்மா, அத திருத்தக்க தான் எல்லாரும் வந்துருக்கோம்" என்றாள் மீண்டும் அவள் அண்ணி. 

"ஓ அப்போ உங்க காதலுக்கு சரி சொன்னபோவே என்ன பாத்து பேசிருக்கலாமே, உங்களுக்கே கல்யாணம் ஆகி ஒரு வருசமாச்சு. நேத்து வரைக்கும் என்ன தேடி வர யாருக்குமே மனசு வரல. 

ரகுவ அடிச்சு மிரட்டுன உங்க மாமா, அதே மாதிரி லவ் பண்ண தன்னோட பையனுக்கு அந்த நிலைமை வந்திருந்தா அப்போவும் இதே மாதிரி தான் இருந்திருப்பாரா? போலீஸ், கோர்ட்னு உங்க வீட்டு ஆளுங்கள இழுத்துருக்க மாட்டாரு? 

ஆனா ரகு அம்மா அப்பா அப்டி இல்ல, மகனை ஏத்துக்க முடியலைனாலும் அவனுக்கு பிடிச்சதை செஞ்சு சந்தோசமா இருக்கட்டும்னு விட்டாங்க. அவங்க எங்க, காசு பணம்னு உயிரை விடுற உங்க மாமா குடும்பம் எங்க?" 

"திவி, ரெண்டு பக்கமும் தப்பு இருக்கு. விடு எல்லாத்தையும். வா வீட்டுக்கு. புதுசா வாழ்க்கையை ஆரமி" 

"என்னோட சந்தோசத்தை பாத்து அழுது, துக்கத்துல போலியா கூட நிக்க வர்ற நீங்க வேணாம். எனக்கு நான் போதும். தயவு செஞ்சு எல்லாரும் போங்க" 

ரகு, "திவ்யா உன்ன தேடி வந்த பெரியவங்கள பாத்து இப்படியா பேசுவ?" 

"இல்ல தம்பி, விடுங்க. நாங்க பண்ண தப்புக்கு எங்க பொண்ணு பேசிட்டா. அவளோட ஆதங்கம் அப்படிப்பட்டது" மகளை பார்த்து கண்ணீர் பெருகி நின்ற அவள் அன்னை ரகுவை தடுத்தார். 

திவ்யாவுக்கு அங்கு நிற்க பிடிக்கவில்லை. கோவம், இயலாமை, அழுகை, சுய பச்சாதாபம் போன்ற உணர்வுகளுக்கும் சிக்கி தவித்து அங்கிருந்த எவருக்கும் தன்னுடைய நிலையை எடுத்துக்காட்ட விரும்பாமல் அவ்விடத்தை விட்டு அகல, செல்லும் அவளையே சுருங்கிய முகத்தோடு பார்த்த அவள் குடும்பத்தினரின் தவிப்பு புரிந்தவனாக தான் பேசி பார்ப்பதாக கூறி அவளை தேடி குடிலுக்கு சென்றான் ரகு. 

திவ்யா தன்னுடைய உடைகளை எடுத்து வைக்கும் முனைப்போடு அனைத்தையும் திணித்து உடையை கூட மாற்றாமல் தயாராக, கதவை திறந்து வந்த ரகு அவள் கையை பிடித்து, 

"என்ன ஆச்சு திவ்யா உனக்கு? இந்த நாள் வராதானு எத்தனை நாள் பீல் பண்ணிருக்க, இப்போ ஏன் மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுன?" தன்மையாக கேட்டவன் கையை உதறி பிடிவாதமாக வெளியேற வந்தவளை மீண்டும் பிடித்து நிறுத்தினான். 

"ஏன்டி இப்டி பைத்தியம் பிடிச்சு அலையிற?" சற்று கோவம் வெளியிட அதட்டினான். 

"ஆமாடா பைத்தியம் தான். செருப்பாலேயே அடி வாங்குவேன்னு தெரிஞ்சும் மறுபடியும் மறுபடியும் உன்கிட்டயே ஓடி வருது பாரு இந்த மனசு அது பைத்தியம் தான். உனக்கு நான் உன்ன விட்டு போகணும், அப்டி தான? போறேன், நீ அந்த உன்னோட சோ கால்ட் ப்ரன்டோட சந்தோசமா ஃபாரின்ல இரு. நான் போறேன்" 

கோவமாக கூறி வெளியேறியவள் வார்த்தைகள் அவன் மூளை நரம்புகளை சென்று சேரவே சில நொடிகள் தேவைப்பட்டன. அந்த வார்த்தைகள் தந்த அதிர்வில் அதன் பொருள் உணர்ந்து சுயநினைவுக்கு வந்தவன் மனமும் மூளையும் செயல்பட மறந்து நின்றது.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro