Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வண்ணம் - 8


ரகு பரபரப்பாக இல்லத்தை புரட்டி போட்டுக்கொண்டிருந்தான். இதை எல்லாம் அமைதியாக மோகனும் திவ்யாவும் பார்வையிட, மகனின் பரபரப்பிற்கு இணையாக தானும் பரபரப்பில் இருந்தார் கார்த்திகா. 

"பாரு பாத்துட்டே தான் இருக்கா, ஆனா ஒரு ஹெல்ப் பண்ணல" மருமகளை முறைத்து மகனிடம் குற்றப்பத்திரிகை வாசித்தார். 

அவருக்கு அவள் மேல் கோவம். எத்தனை எடுத்துக்கூறி மகனோடு பேச கூறினார், அவளோ அவன் பக்கமே அடுத்து வந்த மூன்று நாட்களில் திரும்பவில்லை. 

அவளது காரணம் அவரை சென்றடையவில்லை. சென்றடையும் மார்க்கத்தையும் திவ்யா நாடவில்லை. தனக்கே அவன் செயல் உயிரை வதைக்கிறதே, இதை பெற்ற தாய் தந்தையிடம் கூறி அவர்களையும் வாட்டுவதா என்ற எண்ணம் தான்.

அதே போல் தான் அவனும், மனதில் இருந்த குழப்பம், கேள்வி, கவலைகளை எல்லாம் கண் முன்னே வைத்து அவளை மொத்தமாய் தவிர்த்தான். அலுவலகம் செல்வதும், வந்ததும் அன்னை தந்தையோடு நேரம் செலவழிப்பதும் என இருந்தான். 

திவ்யா இரவு அவனோடு அறையில் உறங்காமல் அத்தைக்கு அருகில் இடித்து படுத்துகொண்டாள். கார்த்திகா உள்ளே செல்ல கூறியும் அடங்காது இருக்க, வேறு வழி இல்லாமல் விட்டுவிட்டார். 

அவளது செயலை பார்த்த ரகுவுக்கும் அத்தனை கோவம். 'போடி போ' என தூங்கா இரவை கழித்தான். 

"ம்மா நீங்க ஹெல்ப் பண்றதா இருந்தா பண்ணுங்க இல்லையா நானே பாத்துக்குறேன். சும்மா யாரையும் கூப்புடாதிங்க" என்றான் அவளை முறைத்து. 

அவனை பார்க்க பார்க்க அவன் செயல் தான் நினைவில் வந்து இம்சித்தது, அனைத்தும் வெறுத்தது போல் வெறுமை சூழ்ந்தது மனதில். 

"தேவை தான்டா, கல்யாணம் ஆகியும் உனக்கு உன் பொண்டாட்டி சேவகம் பண்ணாம நான் பண்ணனும்னு தலையெழுத்து" நொடித்துக்கொண்டு உதவினார். 

நல்லவேளை அவர் பேசியது திவ்யாவுக்கு கேட்கவில்லை. அரக்க பறக்க ரகு தயாராவது அவன் கல்லூரி தோழன் குமாரின் திருமணத்திற்கு தான். திருமணத்தோடு இணைந்து அந்த விழாவை ஒரு சிறிய சந்திப்பாகவும் மாற்றிட அவன் கல்லூரி நண்பர்கள் முடிவெடுத்திருக்க உற்சாகமாக கிளம்புகிறான். 

"எதுக்குடா கோட் எல்லாம்?" 

"ம்மா அழகா தெரிய வேணாம்? புதுசு புதுசா பொண்ணுங்கள பாப்பேன் ம்மா" என்றான் ரகு உல்லாசமாக. 

"உன் பொண்டாட்டி இருக்கா" முணுமுணுத்தார் கார்த்திகா. 

"இருந்தா என்னவாம்... அதான் அவளே போக போறாளே" 

திவ்யா காதில் கேட்கவே பேசினான் கோவமாக, "அப்போ நான் யாரை பாத்தா அவளுக்கு என்ன. சும்மா என் பொண்டாட்டி என் பொண்டாட்டின்னு பேசாதீங்க" அன்னையிடம் காய்ந்தான். 

"ரகு தப்புடா" தந்தையின் குரல் கண்டித்தது மருமகளின் அமைதி நிலையை பார்த்து. 

"இவர் ஒருத்தர்... தர்மர் மாதிரி நியாயம் பேச வந்துட்டார்" அன்னையிடம் புலம்பினான். 

சரியாக அழைப்பு மணி அடிக்க தினேஷ் உரிமையாக வீட்டினுள் நுழைந்து பெரியவர்கள் இருவரையும் நலம் விசாரித்து, திவ்யாவை பார்த்து "என்னமா நீ துணி எல்லாம் எடுத்து வச்சிட்டியா?" என்றான் புரியாமல்.

"டேய்" ரகு நண்பனை முறைத்தான் பேசாதே என்று. 

நண்பனின் செய்தி அறியாத தினேஷ், "என்னடா மச்சான், திவ்யா கெளம்பு ம்மா, பசங்க எல்லாம் போன் மேல போன் பண்ணிட்டே இருக்காங்க" 

"திவ்யாவையுமா இன்வைட் பண்ணிருந்தாங்க தினேஷ்?" மகனை முறைத்து தினேஷிடம் கேட்டார் மோகன். 

"ஆமா ப்பா, இவன் டிவோர்ஸ் வாங்க போற விசியம் அங்க யாருக்கும் தெரியாதுல அதான் திவ்யாவையும் அவன் வர சொன்னான். இவங்களுக்கு ரூம் கூட அலாட் பண்ணியாச்சு" 

"நான் வரல ண்ணா" என்றது திவ்யாவின் மெல்லிய குரல். 

அவளை பார்த்து ரகு முறைக்க, "ஏன் ம்மா நீ வருவன்னு பொண்ணுங்க எல்லாம் ஆசையா இருக்காங்க" ரகுவின் பெண் தோழிகளோடு திவ்யாவின் நெருக்கத்தை உணர்ந்து பேசினான். 

"ஏதாவது ஒரு காரணம் சொல்லுங்க" என்றாள் நொடிப்பாக. 

ரகு அவளை முறைத்தபடியே இளகாமல் நிற்க, கார்த்திகாவிடம், "எப்படியாவது அவளை ஒத்துக்க வச்சிடுங்க ம்மா. இத விட நல்ல சந்தர்ப்பம் இனி கெடைக்காது. அடுத்த வாரம் டிவோர்ஸ் பர்ஸ்ட் ஹியரிங் இருக்கு அவங்களுக்கு" என்றவன் நண்பன் கை பிடித்து அறைக்குள் இழுத்து சென்றான். 

அறை கதவை அடைத்த பிறகு தினேஷ் கையை உதறிய ரகு அவன் சட்டையை பிடித்து, "ஏன்டா ஒரு மனுஷனை நிம்மதியா ரெண்டு நாள் இருக்க விட மாட்டிங்களா? மூடிட்டு கீழயே நிக்க வேண்டியது தான?" என்றான் சீற்றமாக. 

"ஆமா அந்த பொண்ணு வந்தா இவர் நிம்மதி கேட்டு போகுது. சும்மா ஊளையிட்டுட்டு இருக்காத. இந்த மாதிரி பண்ணுவனு தெரிஞ்சு தான் மேல வந்தது. திவ்யா வரலைனா ஆயிரம் கேள்வி கேப்பாங்க பசங்க. 

நான் பொய் சொல்லி உன்ன காப்பாத்த எல்லாம் மாட்டேன். உண்மைய சொல்லிட்டு ஓரம் நின்னுடுவேன் அப்றம் நீ தான் எல்லாத்துக்கும் பதில் சொல்லி, எல்லாரும் ஆறுதல் சொல்றத கேக்கணும்" பற்களை கடித்து தாடை இறுக கோவமாக நின்றான் ரகு. 

"அதுக்கெல்லாம் சரின்னா தாராளமா விட்டு வா" என்றவன் வெளியேறியிருக்க தினேஷின் அதே வார்த்தைகளை கூறி தான் கார்த்திகாவும் சமாதானம் செய்திருந்தார் திவ்யாவை. 

அரை மனதாய் வருவதற்கு சரி என்றவள் அடுத்த பத்து நிமிடத்தில் தேவையானவை அனைத்தையும் எடுத்து கிளம்பியிருந்தாள். 

"நாங்களும் கெளம்புறோம் ரகு. இன்னொரு வீட்டு சாவி எடுத்துக்கோ" என்றார் கார்த்திகா. 

எதுவும் பேசாமல் அமைதியாக செல்லும் திவ்யாவிடமிருந்து பார்வையை அகற்றாமல் அவள் சென்ற பிறகு அன்னையை பார்த்து முறைப்போடு சாவியை தேடினான். 

"புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை வந்தா அந்த கோவத்தை எல்லாம் நம்ம மேல தான் இறக்குவானுங்க இந்த பசங்க" என நொடித்துக்கொண்டு சமையலறை சென்றுவிட்டார் கார்த்திகா.

திவ்யா, மோகன் கார்த்திகாவிடம் கூறி முன்னமே கீழே இறங்கியிருக்க வாகனத்தை எதிர்பார்த்து வந்தவள் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை. 

சில நொடிகளில் ரகு, தினேஷ் வர ரகு தன்னுடைய வாகனத்தை எடுத்து வந்து நிறுத்தினான். அதில் ஏற அதிக தயக்கம் இருந்தாலும் வழி இல்லாமல் மௌனமாய் பின்னால் ஏறி அமர, அந்த பயணம் அவளுக்கு மௌனமாகவும் ரகுவுக்கு அதிகப்படியான கோவத்தோடும் நகர்ந்தது. 

மஹாபலிபுரம் அடைந்ததும் நண்பன் குறிப்பிட்டிருந்த ரிஸார்ட்டை தேடி சென்றடையவே ஏழு மணிக்கு மேல் ஆகியது. 

அங்கு இறங்கியது தான் தாமதம் திவ்யாவை ஒரு கூட்டம் இழுத்துச்செல்ல, ரகு தினேஷ் மற்ற நண்பர்களோடு ஐக்கியமாகிவிட்டனர். கூச்சல், கலாட்டா, ஆர்ப்பரிப்பு என பல உணர்வுகளுக்கும் இருவரும் சிக்கி தவிக்க இருவரது மனக்கசப்பு இருந்த இடம் தெரியாமல் போனது. 

அனைவரும் ஒன்றாய் கூடி இரவு உணவு கேலி பேச்சுகள் என அழகாய் கழிந்தது. மணி நள்ளிரவை தாண்டியதையும் எவரும் கருத்தில் ஏற்றாமல் பழைய கால நினைவுகளை மீண்டும் கட்டவிழ்க்க நேரத்திற்கு பஞ்சமானது. 

இரவு இரண்டு மணிக்கு மேல் ஆன பிறகு தான் ஒவ்வொருவராக கிளம்ப, இறுதியில் மிஞ்சியிருந்தது அவர்கள் மூவரும் தான். ரகு கையில் ஒரு சாவி மட்டுமே இருந்தது. 

காரணமே இல்லாமல் நண்பன் தினேஷை பார்த்து முறைக்க, "அப்டி பாத்தா இன்னொரு ரூம் சாவி தானா என் கைல வந்து ஒட்டிக்குமா?" 

"ரூம் மாத்தி விடு" என்றான் புரியாமல். 

"வெண்ண, எப்படி மாத்தி விட? அவன் அவன் புது பொண்டாட்டி, புது புருஷன்னு வந்துருக்கான். எவனும் உனக்காக தியாகி பட்டம் வாங்கிட்டு நிக்க மாட்டான்" 

"சரி அப்போ நான் உன் ரூம்க்கு வர்றேன்" 

"என் ரூம்ல ஏற்கனவே அஞ்சுபேர் இருக்கோம். நீ வந்தா வாசல்ல தான் படுக்க முடியும் பரவல்லையா?" 

பொறுத்து பொறுத்து பார்த்த திவ்யா, வேகமாக ரகு கையிலிருந்த சாவியை பிடுங்கி தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த சிறு குடிலுக்கு செல்ல அவளை தீயாய் முறைத்தவன், "பாரு திமிரு. ஒடம்பு மொத்தமும் கொழுப்பும் திமிரும் தான் அடைச்சு கெடக்குது" 

"உன்கூட பழகுன இத்தனை வருசத்துல அந்த பொண்ணுக்கு இது கூட வரலைனா எப்படி?" 

அதற்கும் நண்பனை பார்த்து சிரித்த தினேஷ் தன்னுடைய பையை எடுத்து வேறு பக்கம் நடக்க, மணலில் ட்ராலியை இழுக்க சிரமப்பட்டு நடக்கும் திவ்யாவை நெருங்கி அதை பிடுங்கி அவளை விட வேகமாக முன்னேறினான்.

அந்த ரிசார்ட் ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய குடில்களை கொண்டது. தங்களுக்கென ஒதுங்கியிருந்த குடிலை அடைந்தவன் கதவை திறந்து உள்ளே செல்ல நடுவில் பஞ்சு மெத்தையும் அதன் வலது பக்கம் இருவர் அமரும் சோபா, மற்றொரு பக்கம் குளியலறை இருந்தது. 

வாசலில் நின்று அவ்விடத்தை ஆராய்ந்தவனை தள்ளிவிட்டு திவ்யா உள்ளே நகர தடம் தடுமாறி பின்னர் சுதாரித்து அவளை முறைத்தான். 

"திமிருடி உனக்கு" என்றான் வேகமாக. 

அவளோ அவன் கையில் இருந்த பையை பிடிங்கி இரவு உடையை எடுத்து குளியலறைக்குள் புகுந்துகொண்டாள். அவள் வரும் முன்பு தானும் உடை மாற்றி சோர்வாய் மெத்தையில் படுக்க உறக்கம் வரவில்லை. 

திவ்யாவும் தயக்கம் இல்லாமல் இருவருக்கும் இடைவெளி விட்டு படுத்தாள். நண்பர்களோடு இருந்த தூக்கம், இப்பொழுது தனிமையில் இருக்கும் பொழுது இல்லை. 

திவ்யா பக்கம் அசைவு தெரிய அவளை நோக்கி திரும்பி படுத்தவன் அவளிடம் பேச வாயை திறப்பதும் பின்னர் தயங்குவதுமாய் இருக்க, "எதுவும் சொன்னியா?" கேட்டாள் அவன் பக்கம் திரும்பி. 

"என்ன எதுவும் பேச மாட்டிக்கிற?" என்றான் பொறுக்க முடியாமல். 

"என்ன பேசணும் உங்கிட்ட?" என்றாள் அவளும். 

"ஏன் பேச கூடாது? அன்னைக்கு ப்ரன்ட்ஸா இருக்கலாம்னு பேசுனோம்ல. அதுபடி நடந்துக்குறது தான நாணயமான பேச்சு?" 

"நீ உன்னோட எல்லா ப்ரன்ட்ஸ் கூடயும் தினமும் காண்டாக்ட்ல தான் இருக்கியா ரகு?" இல்லை என தலை ஆட்டினான். 

"அதே மாதிரி இதையும் நினைச்சுக்கோ" என்றாள் தன்னை இது எதுவும் பாதிக்காதது போல். 

அவனுக்கு தான் சுர்ரென கோவம் வந்தது, "அப்டிலாம் முடியாதுடி. பேசுறேன்னு சொன்னவ அடுத்த நாளே அது என்ன மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருக்குற பழக்கம்?" 

"உங்கிட்ட பேச புடிக்கலனு அர்த்தம்" என்றாள் மெதுவாக. 

"ம்ம்ம் பிடிக்காது பிடிக்காது. எப்டி பிடிக்கும் அதான் இப்போலாம் மனுசனா கூட மதிக்கிறதே இல்லையே அதுலையே நானும் தெரிஞ்சிருக்கும். சும்மா நாய் மாதிரி உன்பின்னாடியே சுத்துறேன் பாரு என்ன சொல்லணும்" 

"சொல்லிக்கோடா நல்லா சொல்லிக்கோ. உன் வாயில என்ன என்ன வருதோ அதை சொல்லிக்கோ" திரும்பி படுத்தவள், "ப்ராடு. என் பின்னாடி சுத்துனானாம்ல வாய திறந்தாலே பொய் தான்" என திட்டவும் மறக்கவில்லை. 

அவளை பிடித்து வேகமாக திருப்பியவன், "ஏன் உன் பின்னாடி நான் சுத்தவே இல்லையா?" 

"சுத்துன. அதை விட அதிகமா மத்த பொண்ணுங்க பின்னாடி சுத்துன சுத்திட்டும் இருக்க" 

"யார் பின்னாடி சுத்துனத நீ பாத்த?" 

"உங்கிட்ட பேசுற நிலமைல நான் இல்ல. ஒழுங்கா படுத்து தூங்கு இல்லையா தூக்கி வெளிய போட்டுடுவேன்" என்றவள் அவனை சிறிதும் மதிக்காமல் உறக்கத்தின் பிடியில் விழுந்தாள்.

மறுநாள் காலை உல்லாசமாகவே துவங்கியது. உறக்கத்தில் ஆழ்ந்திருந்த இருவரையும் கதவினை தட்டும் ஒலி அடித்து எழுப்ப வெளியில் நின்றிருந்தனர் நண்பர்கள். 

"காதல் பறவைகளா நைட் ரொம்ப வேலையோ?" என்ற கிண்டல் பேச்சு வர முகம் கருத்த திவ்யா உள்ளே சென்று பதுங்கிக்கொண்டாள். 

"ஏண்டா?" இயலாமையில் மொத்த கூட்டத்தையும் இழுத்து காலை உணவிற்கு தயாரானான் ரகு. 

அந்த ரெசார்ட்டின் பெரிய உணவகத்தில் அனைவரும் குழுமியிருக்க அவ்விடமே அவர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. தயக்கம் நிறைந்த விழிகளோடு அவ்விடம் வந்த திவ்யா பெண்களோடு அமர்ந்துகொள்ள, 

"நீ ஏன் ம்மா இங்க வர்ற, உன் புருஷனை பாரு எங்களை முறைக்கிறான்" என்றாள் ஒருத்தி கிண்டலாய். 

"இல்ல க்கா நான் இங்கையே இருக்கேன்" ரகுவை பார்க்காமல் அந்த பெண்ணுக்கு பதில் கொடுத்தாள் திவ்யா. 

"எதுக்கு காதல் ஜோடிகளை பிரிச்ச பாவம் எங்களுக்கு... நீ அவன் பக்கத்துலயே போ. டேய் தினேஷு நீ இப்டி வா" வம்படியாக இருவரின் இடத்தையும் மாற்றிவிட்டு தான் அடங்கினர். 

"பாரு இப்ப தான் என் மாப்பிள்ளைக்கு முகம் பிரகாசமா மாறிருக்கு" என்ற தினேஷை பார்வையாலே எரித்து, 

"டேய் அடங்கு டா" என்றான் ரகு. 

"ஏன் ரகு பொண்டாட்டி கொடுமையை இந்நேரம் நீயும் அனுபவிக்க ஆரமிச்சிருப்பியே" என்றான் ரகுவை போல் தன்னுடன் படித்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒருவன். 

கேள்வி கேட்ட கணவனை அவன் மனைவி தலையில் அடித்து, "உன்ன மாதிரி பேருக்கா லவ் பண்ணாங்க அவங்க? ஆசையா அனுபவிச்சு உருகி லவ் பண்ணாங்கடா" என்றாள். 

திவ்யா ரகு இருவருக்கும் அவ்விடத்தில் அமர்த்திருப்பதற்கே சங்கடமாக இருந்தது. பழைய நினைவுகளில் மூழ்கினால் தங்களுக்கு தானே பிரிந்து செல்லும் பொழுது மேலும் துன்பத்தை கொடுக்கும்! 

"ஆமா இந்த கிறுக்கன் வண்டி ஓட்ட தெரியாம கார்ல மோதி ஹாஸ்பிடல்ல படுத்துகுட்டான். இவ தான் கத்தி கூப்பாடு போட்டு மூணு நாள் தூங்காம முகம் எல்லாம் வீங்கி..." 

"அக்கா" தன்னை பற்றி பேசிய பெண்ணை சிணுங்கலோடு தடுத்து நிறுத்தினாள் திவ்யா, "ப்ளீஸ்" என்று. 

"அட என்னம்மா, உங்கள பாத்தாவது இவனுக்கு புத்தி வரட்டும்னு சொன்னேன். பாரு இப்பயும் காது கேக்காத மாதிரியே இருக்கான். பசங்க எப்பவும் வேஸ்ட் தான்" என்றாள் துச்சமான பார்வையோடு. 

"என்ன உருட்டு என்ன உருட்டு.. நீங்க மட்டும் தான் எல்லா முயற்சியும் எடுப்பிங்களா? என்னம்மா உன் புருஷன் உனக்காக ஹாஸ்டல் வாசல்ல வாரம் வாரம் மணி கணக்கா வந்து நின்னது மறந்து போச்சா? 

உன்னோட வார்டன் போலீஸ்க்கு போன் பண்ணி சொன்னதும் மறந்துடுச்சா? இல்ல திவ்யா அப்பா, அண்ணனுங்க வீடு தேடி வந்து ரகுவ அடிச்சபையும் அவளுக்காக அமைதியா இருந்த ரகு தான் எதுவும் பண்ணலையா?" என்றான் வேறொருவன். 

"அத நம்பி தானே நான் ஏமாந்து போனேன். அந்த நேரமே சுதாரிச்சிருந்தா இன்..." வார்த்தைகள் வளர, திவ்யாவின் உலகமோ அப்படியே நின்றது. 

வியப்போடு விரிந்த கண்களை அவனை நோக்கி திருப்பினாள். எதுவும் நடவாதது போல் அவர்கள் சண்டையிடுவதை சுவாரஸ்யமாய் பார்த்திருந்தான். ரகுவை அவள் வீட்டினர் சந்தித்தார்களா? எப்பொழுது? எதற்காக? ஏன் என்னிடம் எவரும் இது பற்றி கூறவில்லை. 

சந்திப்பு சாதாரண சந்திப்பாக இருந்தால் பரவாயில்லையே, ரகு மேல் கை நீட்டியுள்ளனர் என தெரிந்த பிறகு திவ்யாவால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. தன்னால் அவன் எத்தனை துயரங்களை தான் அனுபவிக்க வேண்டும், ஏன் அவனுக்கு இத்தனை சோதனைகள், பிறந்த வீட்டினர் மேல் கோவம், கட்டுக்கடங்காத கோவம். 

அவன் மேல் கை வைக்க அவர்கள் யார்? உரிமையுள்ள தன் மீதல்லவா அவர்கள் கோவத்தை காட்டியிருக்க வேண்டும்? பார்வை அகற்றாமல் உள்ளேயே அனைத்தையும் வைத்து வாடியவள் உணவை கூட சரியாக எடுத்துக்கொள்ளவில்லை. 

அவளை பக்கமாய் பார்த்த ரகு, "என்ன யோசனை?" என்றான். 

"அப்பா உன்ன பாக்க வந்தாரா?" ஆம் என தலையை ஆட்டினான். 

"எப்போ?" அவளை திரும்பி பார்த்தவன் கேலி சிரிப்போடு, 

"உன்கிட்ட பேசுற நிலமைல நான் இல்ல. ஒழுங்கா சாப்பிடு இல்லையா தூக்கி கடல்ல போட்டுடுவேன்" 

வேண்டும் என்றே தன்னை சீண்டுபவனை முறைத்தவள் அவனது தொடையில் அழுத்தமாக கிள்ள, "ஆஆ..." 

வாய் விட்டு கத்தியவனை அனைவரும் கேலியாக பார்த்து சிரிப்போடு தங்கள் அரட்டையை துவங்க அனைத்தையும் ஒதுக்கிவிட்டு கோவமாக திவ்யா எழுந்து சென்றுவிட்டாள். 

அந்த நாள் முழுவதும் நண்பர்கள் கேலி, பாட்டு, ஆடல் என தங்களை மொத்தமாய் இழந்து மகிழ்ந்தனர். 

மாலை வேளையில் குமாரின் நிச்சயம் நடைபெற இருக்க பளபளக்க அனைவரும் தயாராகி நிற்க, காலையில் திவ்யாவை பார்த்த ரகு அதன் பிறகு அவளை காணாது தேட, வேறொரு குடிலில் இருந்து வந்தாள். 

தேவதையாக. 

அசைய மறுத்த கண்களை அதிகம் தொந்தரவு செய்யாமல் அதன் போக்கிலே விட்டான். சில்வர் நிற அழகிய டிசைனர் புடவை அவளுக்கு அத்தனை அழகாய் பாந்தமாய் உடலோடு பொருந்தியிருந்தது. 

கண்ணாடியாய் தெரிந்த அந்த புடவையை எத்தனை மறைக்க முடியுமோ அத்தனை சிரமப்பட்டு உடுத்தியிருந்தாள். 

அதையும் மீறி அவன் கண்களுக்கு அவளது சிறிய இடை நிலவின் வெளிச்சம் போல் மின்ன சிரமப்பட்டு பார்வையை மோகத்திற்கு மாற்றாமல் தடுக்க வேண்டியதாயிற்று. 

இந்த புடவை கடந்த வருடம் அவள் அவனை மிரட்டி உருட்டி வாங்கியது. 

துணியின் தரத்தை பார்த்து, "கண்ணாடி மாதிரி இருக்கும். உனக்கு தான் ஒழுங்கா கட்டவும் தெரியாது. பத்திரமா உள்ள வை. இல்லையா எனக்காக எனக்கு மட்டும் கட்டு" என காதலோடு கேட்டான். 

"போடா, குண்டா இருக்கேன்னு கிண்டல் பண்ணுவ" 

அதன் பிறகு அதனை அவன் கண்ணிலே அவள் காட்டவில்லை. இப்பொழுது தான் பார்க்கிறான். இத்தனை நாட்கள் இதற்கா தடை விதித்தோம் என தன்னுடைய மடமையை எண்ணி தானே வருந்தினான். 

கால்கள் தன்னால் அவளை பார்த்து பறந்த மனதோடு அவன் கால்களும் நகர, அவளை நெருங்கி இரண்டு படிகளை ஏறி ரகு செல்லும் நேரம் சரியாக இருவருக்கும் இடையில் ஒருவன் வந்து நின்றான். 

எரிச்சல் முகத்தை சிவப்பாக்கியிருக்க முகம் தெரியாத அந்த நபரின் கையை பிடித்து இழுக்கும் முன்னே திவ்யாவை உற்சாகமாக நனைத்திருந்தது அந்த உருவம். 

உறைந்த நிலையில் நடப்பவற்றை ஜீரணிக்கும் முன்பே இவை அனைத்தும் நடந்திருக்க, அந்த ஆணின் கைகளில் இருந்தது திவ்யாவின் கரமும். 

தலையை சாய்த்து அவள் முகம் பார்க்க சிரிப்பில் சாயல் தான் அங்கே. எரிமலையின் வேகத்தில் உருவாகிய கோவத்தை தாடையை அழுத்தமாய் தடவி கட்டுக்குள் கொண்டு வந்தான் ரகு. 

"யு ஆர் லுக்கிங் வெரி கார்ஜியஸ்... ப்பா எப்படி திவ்யா?" அவன் பேசியது தெளிவாக பின்னால் நின்ற ரகுவின் காதில் விழுந்தது. 

"கவின்..." அவள் வெட்க சிரிப்பை கேட்டு இங்கு ரகுவுக்கு இன்னும் எரிந்தது. 

அதிலும் அந்த பெயர். கல்லூரி காலங்களிலே அதிகம் வெறுத்த மனிதன் அவன். ரகுவின் ஜூனியர், திவ்யாவின் சீனியர். திவ்யா மேல் அவனுக்கு சொல்லில் அடங்காத காதல். ரகுவுக்கு முன்பே திவ்யாவை அணுகியவன், அவளுக்கு ரகுவின் மேல் இருந்த காதலை அறிந்து அமைதியாகி போனான். 

ஈர்ப்பில் காதலிக்கிறார்கள் என கவின் நினைத்து, மேற்படிப்பையும் திவ்யாவிற்காக அதே கல்லூரியில் படிக்க, அவனது எண்ணம் புரிந்து ரகு இல்லாத நேரம் அவனிடம் பக்குவமாய் எடுத்துக்கூறி நட்பை வளர்த்தாள். ரகுவுக்கும் இது தெரியவர, திவ்யா மேல் இருந்த நம்பிக்கையில் அதை பற்றி பிறகு பேசவே இல்லை. 

"பாரு உன் வெக்கம் கூட அழகு தான். அதுலயும் இத கவனிச்சியா டால்... நாம மேட்ச்சா சில்வர் கலர் டிரஸ் பண்ணிருக்கோம்" 

தன்னை குனிந்து பார்த்தான் ரகு. ஆனியன் பிங்க் நிற சட்டையும், வெள்ளை நிற பேண்டும் அணிந்து அழகாக தான் இருந்தான். 

ஆனால் தன்னை விட அழகாக, கண்ணை கவரும் வடிவத்தில் கோட் சூட்டில் ஸ்டைலாக இருந்தவன் முன்னாள் சிறுமையாய் உணர்ந்தான். 

"அப்போ கண்டிப்பா சாக்லேட் வாங்கி தந்துடுங்க" 

இரண்டு படிகளுக்கு கீழே நிற்கும் ரகுவை காணாது இயல்பாய் வெகு நாட்கள் காணாத மகிழ்ச்சியில் உரிமையாய் கவினிடம் கேட்டாள் திவ்யா.

"நீ கேட்டா சாக்லேட் என்ன உயிரை கூட தர நான் ரெடி தான்" சிரிப்போடு ஆசை ததும்பி ததும்பி வழிந்தது அவன் குரல். 

அதுவரை பொறுமை காத்த ரகுவால் அதற்கு மேல் முடியாது போக அருகில் வெளிச்சத்திற்கு போடப்பட்டிருந்த மூன்றடி நடைபாதை விளக்கை பலம் கொண்டு எதையும் யோசிக்காமல் குத்தினான். 

அவன் கொடுத்த பலத்தில் அந்த சிறிய கண்ணாடி விளக்கு வெடித்து சிதறியதில் மற்ற இருவரும் திடுக்கிட்டு திரும்பினர். இருவரும் அங்கிருந்த ரகுவை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. முக்கியமாக திவ்யா!

திவ்யாவின் கண்கள் அவன் கைகளில் பதிய கண்ணாடி துகள்கள் சதையில் ஆங்காங்கு இறங்கி ஒரு இடத்தில் ரத்தம் சொட்ட துவங்கியது. 

"அதான் டிவோர்ஸ் குடுக்க போறேன்ல, உயிர் என்ன மயிரையே குடு" 

சீற்றத்தோடு அவன் அவ்விடத்தை விட்டு அகல கவினை சுத்தமாக மறந்து, "ரகு கைல ரத்தம் வருது" ஓடி சென்று அவன் கையை பிடித்து திவ்யா தடுத்து நிறுத்த பார்க்க, அவனோ அவளை உதறி வேகமாக குடிலுக்குள் சென்றுவிட்டான். 

மூச்சு வாங்க நின்றவள் அருகே வந்த கவின், "திவ்யா என்னாச்சு?" என்றான் உண்மையான அக்கறைகொண்டு. 

கண்ணில் நீர் பெறுக, "ப்ளீஸ் கவின் தினேஷ் அண்ணாவை பர்ஸ்ட் எயிட் கிட் எடுத்து வர சொல்லுங்க" வேறு எதுவும் பேசாது விறுவிறுவென அவன் பின்னே சென்றாள்.

குடிலுக்குள் நுழைய திவ்யாவின் கொலுசொலி கேட்டும் தலையை நிமிர்த்தாது கட்டிலில் தலையை பிடித்து அமர்த்திருந்தவன் கோவத்தை கண்டு மெல்ல அவனை நெருங்கி தோளில் கை வைக்க அவளை உதறி திகுதிகுவென தீயாய் முறைத்தான். 

"போயிருடி... பக்கத்துல வராத" 

"கை... கைல ரத்தம் வருதுடா" 

"ரத்தம் வந்தா செத்துட மாட்டேன்" உஷ்ண பேச்சை கேட்டவள் குளியலறை சென்று தண்ணீர் பிடித்து வந்து அவன் கையை பற்ற அந்த கோப்பை தரையில் உருண்டு ஓடியது அவன் கோவத்தின் விளைவால். 

"ஏன் ரகு இப்டி பிடிவாதம் பிடிக்கிற... கண்ணாடியை கூட எடுக்காம இருக்க. செப்டிக் ஆகிடும்டா" மனம் தாளாது அவனை மீண்டும் மீண்டும் நாடியவளை அவன் கோவம் சிறிதும் நெருங்கவிடவில்லை. 

சரியாக அங்கு வந்த தினேஷ், "என்னமா ஆச்சு?" என்றான் தரையை பார்த்து. 

"அண்ணா அவன் கைல இருக்க கண்ணாடியை எடுத்து கிளீன் பண்ணி விடுங்க" நண்பனை ஆராய்ந்தவன் அவன் கோவத்தை புரிந்து எதுவும் பேசாமல் ரகுவின் கை பிடிக்க, திமிறியவனை இழுத்து பிடித்து கண்ணாடியை எடுத்து சுத்தம் செய்து கட்டு கட்ட போக, "விடு" என வெளியேற, 

செல்லும் அவனையே கலங்கிய விழிகளோடு பார்த்த திவ்யா நடந்தவற்றை சுருக்கமாக கூற, அவளிடம், "அவனை நான் பாத்துக்குறேன் ம்மா. நீ பங்ஷன் போ. ஏற்கனவே உங்கள அங்க எல்லாரும் கேட்டுட்டு இருக்காங்க" 

"இல்ல அவன்கிட்ட நான் பேசணும்" 

"ம்மா, அவன் கோவத்துல இருக்கான். கொஞ்சம் கூல் ஆனதும் சொல்றேன் பேசு" என வற்புறுத்தி அவளை அனுப்பி வைத்து நண்பனை தேடி சென்றான் தினேஷ்.

கடல் அலையின் சீற்றம் என்றைவிட இன்று அதிகமாகவே இருந்தது. அதையும் தாண்டி ஒரு சிலர் அங்கு ஜோடிகளாகவோ தனித்தோ அச்சமே இல்லாமல் நின்றிருக்க, இலக்கில்லாத இருளை பற்கள் கடித்து வெறித்து நின்ற ரகுவுக்கு அருகில் வந்த ஒருவன், "சுண்டல் வேணுமா சார் சுண்டல். சுண்டல்.. சுண்டல்..." 

கோவத்தில் இருந்தவனுக்கு அவன் தன்னுடைய காதில் கத்துவது போல் இருக்க பொறுமையாய், "வேணாம்டா" என்றான். 

அவனோ நரகாரமல் சிறிது தூரம் சென்று காதுப்படவே மீண்டும் மீண்டும் கூவிக்கொண்டே இருக்க, பொறுமை இழந்து அவனை அருகில் அழைத்து கையில் நூறு ரூபாய் தாளை திணித்து, "என் கண்ணுளயே நீ பட கூடாது. தூரமா ஓடிரு" நெற்றியை தேய்த்து அவன் சொன்னதில் ஏதோ புரிந்தது போல அவனுக்கு. 

"என்னா ண்ணா லவ் புட்டுக்குச்சா?" வார்த்தையில் வருத்தம் இருந்தாலும் குரலில் இருந்த அவன் எகத்தாளம் ரகுவை அரக்கனாக்க கால் செருப்பை அவிழ்க்கும் முயற்சியோடு, 

"எடு செருப்பை நாயே..." அடிக்கும் முன்பு ஓடிவிட்டான் தூரம். 

"உன் கோவத்தை சுத்தி இருக்கவங்ககிட்ட காட்டுனா எல்லாம் சரியாகிடுமா?" பின்னிருந்து வந்தது தினேஷ் குரல். 

"சமாதானம் பண்ண வந்தனா அப்டியே திரும்பி போய்ட்டு" என்றான் ரகு கோவமாக. 

"சமாதானம் பண்ற அளவு நீ கொழந்தை இல்ல. உன்ன ஒரே ஒரு கேள்வி கேக்க தான் வந்துருக்கேன். மனசாட்சி தொட்டு உண்மையா பதில் சொல்லு" உச் கொட்டி முகத்தை திருப்பினான் நண்பன். 

அதையும் பொருட்படுத்தாமல், "திவ்யா யார் கூட பேசுனா உனக்கென்ன? அதான் டிவோர்ஸ் பண்ண போறியே" பேன்ட் பாக்கெட்டில் உள்ளே கை விட்டு நின்றவன் கைகள் இறுகியது அவன் கேள்வியில். 

"பதில் சொல்லுடா. நாளைக்கு அவனை தான் அவ கல்யாணமே பண்ணிக்க போறேன்னு சொன்னா கூட இந்த மாதிரி கேவலமா ரியாக்ட் பண்ண கூடாது நீ" என்றான் நெருப்பில் எண்ணியை ஊற்றி. 

"இன்னும் டிவோர்ஸ் அகலல... அது வர நான் கேக்க தான் செய்வேன்" என்றான் ரகு திமிராக. 

"எவ்ளோ நாள் இதே சொல்லுவ? அடுத்த வாரம் முத ஹியரிங். அவ்ளோ தான் வெட்டி விட்டுடுவாய்ங்க" 

புசுபுசுவென கோவம் தலைக்கு ஏற, "ஆஆ..." அரக்கன் போல் அவ்விடமே அதிரும் வகையில் அவன் கத்தியதில் தினேஷும் அரண்டு தான் போனான். 

நொடிகள் கடந்து நிமிடங்கள் மௌனத்தில் கழிய கால்கள் வலுவிழந்து கடற்கரை மணலில் அமர்ந்துவிட்டான் ரகு. 

நண்பனின் ஓய்ந்த தோற்றம் கண்டு அவனை உடனே நெருங்கிய தினேஷ் தோள் தட்டி, "என்ன தான்டா நினைக்கிற மனசுல, நீயும் கஷ்டப்பட்டு அந்த பொண்ணையும் கஷ்டப்படுத்துற" 

ரகு, "பக்கத்துல இருக்கப்பவே அவளை விட்டு போக மனசு வரல இதுல டிவோர்ஸ் வாங்கிட்டா அவளை விட்டு எப்படி மச்சான் இருப்பேன்?" 

"ரகு..." திகைத்தான் தினேஷ். 

"ரெண்டு வருஷமோ, நாலு வருஷமோ வேற ஒருத்தனை என் முன்னாடி கல்யாணம் பண்ணி வந்து நின்னா உயிரோட என்னால நிக்க முடியாதுடா" ஏகத்திற்கும் ரகுவின் குரல் உடைந்தது. 

"மளிகை ஜாமான் வாங்கிட்டு வர சொல்றா, தூங்க விடாம வீட்டை உருட்டுறா, விளையாட விடல-னு அன்னைக்கு பிரிய சொன்ன காரணம் எல்லாம் இன்னைக்கு ஆசையா நிக்குதே தினேஷா. 

தட்டுல விழுந்த நீளமான முடிய எடுத்து அவளை திட்டுனா 'நம்ம உறவு என்னைக்கும் விட்டுப்போகாதுடா'னு என் தலையை களைச்சு விட்டு போற திவ்யா வேணும்டா. 

நான் கோவப்பட்டா முகத்தை சுருக்கி என் பின்னாடியே குட்டி போட்ட நாய் மாதிரி வர்ற என்னோட திவ்யா எனக்கு வேணும் மச்சான்" வேதனை சூழ்ந்த ரகுவின் விழிகளை பார்த்த தினேஷ் வார்த்தைகள் தடைபட்டது. 

இத்தனை ஆசையை மனதில் வைத்து எதற்காக இந்த தவிப்பில் மூழ்க வேண்டும்? 

"காசு செலவாகுதுடி-னு திட்டிட்டே அவ கேக்குற ஒன்னு ஒன்னையும் வாங்கி குடுக்கணும் மச்சான்" எழுந்து நின்றான் முகத்தை கைகளில் துடைத்து. 

"அண்ணனா இருந்தாலும் அவளை என்ன தவற யாரும் அழகுனு சொல்ல கூடாது. அவ என் பொண்டாட்டி, நான் மட்டும் தான் அவள கொஞ்சுவேனு அந்த கவினை அடிச்சு துவைக்கணும் போல கோவம் வருது" 

வெறி கொண்டவன் போல் வேகமாக வந்த வழியிலேயே செல்ல, "ரகு நில்லுடா" தினேஷ் என்ன தடுத்தும் நிற்காதவன் குடிலை நோக்கி நடக்க, 

"திவ்யா அங்க இருக்க மாட்டாடா" தினேஷ் பேச்சை உதறி அவள் அங்கு தான் இருப்பாள் என்ற நம்பிக்கையோடு செல்ல, அங்கு தான் இருந்தாள் அவன் மனையாள். 

இருவர் அமரும் நாற்காலியில் தலை சாய்த்து கண்களை மூடி இருந்தாள். பின்னால் வந்த தினேஷை உணர்ந்தவன் வேகமாக உள்ளே நுழைந்து கதவை அடித்து தாழ்பாள் போட, அந்த சத்தத்தில் திவ்யாவும் விழித்துக்கொண்டாள். 

அதே உடையில் தான் இன்னமும் இருந்தாள், அவளது அழகிய கார்குழல் இரண்டு தோளிலும் படர்ந்து, தளர்ந்த புடவையில் அவனை மேலும் மேலும் தன் பக்கம் இழுத்தாள் எந்த முயற்சியும் செய்யாமல். 

அவள நோக்கி இரண்டடி எடுத்து நிதானமாக அதே சமயம் தீர்க்கமாக வைத்தவன் ஒரு நொடி தயங்கி அடுத்த நொடி அவள் கழுத்தை பற்றி தன்னை நோக்கி இழுத்து தன்னுடைய இதழ்களை அவளோடு பொறுத்தினான். 

அதிர்ச்சியில் சிலையாய் நின்றவள் இடையை மறுகரம் வளைக்க, அவன் நெஞ்சத்தினில் மோதி நின்றது அந்த புள்ளி மான். 

வேகமாய் ஆக்ரோஷமாய் துவங்கிய முத்தம் சத்தமில்லாமல் மெல்ல மெல்ல ஆசைகளை கடத்தும் கருவியாக கண்களை மூடி பிரிவின் நொடிகளை எல்லாம் இணைத்து இதில் சரிக்கட்ட முடிவெடுத்து ஒருவர் அணைப்பில் மற்றவர் கரைய துவங்கினர். 

ரகுவின் வலது கரம் அவள் சிற்றிடையில் அழுத்தம் கொடுக்க சிறு வலி ஏற்படுத்திய தாக்கத்தில் திவ்யாவின் கைகள் தன்னால் அவன் கைகளை பற்றியது. 

மூச்சுக்கு திணறும் அந்த கிளியின் தேவை உணர்ந்தவன் தற்காலிக விடுப்பெடுத்து முத்தத்தை அவளது நாடி, கழுத்து வளைவு என இடம் மாற்ற, அவளது குரல்வளைவிலிருந்த வந்த கிரகமான சத்தத்தில் தன்னையும் அறியாது அவன் கைகள் மீண்டும் சில நிமிடங்களுக்கு முன்பு இம்சித்த அவளது இடையில் அழுத்தம் கொடுத்தது. 

அதன் தாக்கமாக திவ்யாவின் கைகள் அவனது கைகளை மேலும் அழுத்தி பிடிக்க, "ரகு..." மயக்கத்தோடு அவன் பெயரை காற்றை விட மிருதுவாக வெளியிட்டது அவள் நா. 

மாயவலையில் இருந்து அந்த நொடி வெளியேறியவன் அப்படியே அவளை விட்டு எட்டுகளை பின்னால் வைக்க, திவ்யாவின் கண்களில் அப்பட்டமான வலி. 

"சாரி.." தவறிழைத்தவன் போல் திவ்யாவை திரும்பியும் பார்க்காமல் தன்னுடைய வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டு வெளியேறியிருந்தான் ரகுநந்தன், தன்னுடைய உயிரானவளை மேலும் மேலும் வாடவைத்து..


How is the chapter?

Romance kammiya irukunu feel pana venam, pinadi sirapa vachidalaam. 

Comments solitu ponga makkale..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro