வண்ணம் - 4
ஆதவனின் அருளால் பரபரப்பான மதிய வேளையில் அந்த மொத்த வீதியும் தீயாய் தகித்தது. எவ்வளவு தான் சூரியன் சுட்டெரித்தாலும் சூடாக உண்ணும் உணவுக்கு நிகராக எதுவும் இருக்காதது போல் அந்த இடமே திருவிழா கூட்டம் போல் அலைமோதியது.
ஓரிரண்டு கடைகள் இருந்திருந்தால் கூட இவ்வளவு கூட்டம் இருந்திருப்பதற்கு வாய்ப்பு குறைவு தான். ஆனால் இந்த வீதியிலோ வரிசையாக ஒவ்வொரு வகையான உணவகங்கள்.
சைவம், அசைவம், கடல் உணவுகள், குளிர்பானங்கள், இயற்கை முறையில் செய்யப்பட்ட பனிக்கூல்கள், சிறுவர்களுக்கென கேண்டி வகைகள் என எதை உண்ண விரும்பினாலும் அங்கே வந்து நம்பி நிற்கலாம்.
அத்தகைய சிறப்பு அந்த வீதிக்கு. அலுவலகங்கள் நிறைய உள்ள அந்த பகுதியை அந்த சிறிய கடை முதலாளிகள் தேர்வு செய்தது கூட அந்த காரணத்தினால் தான்.
எந்த வகையான உணவை வைத்தால் அந்த பகுதி மக்களை ஈர்க்க முடியுமோ அதை செவ்வனே செய்திருந்தனர். சுமார் இருவது கடைகளாவது இருக்கும். ஒவ்வொன்றிலும் கூட்டம் நிறைந்து வழியும்.
மதிய உணவு நேரத்தை தாண்டியும் அவ்வளவு மக்கள் இன்னும் அங்கே நின்றனர். அதில் ஒன்று தான் அந்த மெட்ராஸ் ஹோட்டல் என்னும் சிறிய உணவகம்.
ட்ரக் வண்டி ஒன்றில் தான் அந்த கடை அமையப்பெற்றிருந்தது. அதிக கூட்டம் இல்லை என்றாலும் ஓரளவிற்கு கூட்டம் இருந்தது. வெரைட்டி ரைஸ் வகைகள், தந்தூரி, கிரில் என சிறிய கடையே ஆனாலும் அணைத்தும் இருந்தது.
வேலைக்கு ஆட்கள் ஓரிருவர், அதில் தான் அவளும் இருந்தாள். மஞ்சள் நிற டீ-ஷர்ட், வெளீர் நீல நிற ஜீன்ஸ் அதன் மேல் ஒரு இளம் ஊதா நிற ஏப்ரான்.
தலையை பின்னியிருந்தாலும் அடங்கவில்லை பஞ்சு போன்ற அவளது சிகை. அந்த குழந்தை முடியை மறைக்க, அவள் தலையை மறைத்திருந்தது மெல்லிய டிஸ்யூ வகை தொப்பி.
ஒரு மணி நேரமாக வேலையை விட்டு, உணவை மறந்து அவளையே எதிரில் இருந்த ஒரு சிறிய ஜூஸ் கடையின் முன்னர் நின்று கண் எடுக்காமல் பார்த்தான். அவன் வந்த சில நிமிடங்களிலேயே அவனை கண்டுகொண்டவள் ரகுவை மொத்தமாய் புறக்கணித்து கடமையே கண்ணாய் இருந்தாள்.
பற்கள் உடைந்து விடுமளவு கோவம் அவனுக்கு. சென்று அவளை கையேடு இழுத்து வீட்டிற்கு பறக்க தான் தோன்றியது. ஆனால் அவனை பார்த்த உடனே பத்து நிமிடம் என கை காட்டியவள் ஒரு மணி நேரமாகிய பிறகும் வரவில்லை.
சமைத்த உணவுகளை எடுத்து கொடுப்பதும், அதை மீண்டும் எடுத்து சென்று கொடுப்பதும், சில நேரங்களில் சமைப்பதற்கும் உதவி செய்துகொண்டிருந்தாள். அவளுக்கு அதெல்லாம் பழகியிருந்தது ஆனால் அவனுக்கு தான் இப்படி அவளை பார்க்க மனது அடித்துக்கொண்டது.
கால்கள் நடுங்க, கண்கள் கூச அவளை பார்ப்பதையே தவிர்த்தான். அரை மணி நேரம் கடந்த பிறகு வந்தவள் கையில் ஒரு மாதுளை சாறை திணித்தான்.
"என்னாச்சு?" அவனை பார்த்து கேள்வி கேட்க குடி என்னும் விதமாய் தலை அசைத்து அமைதியாகினான்.
பசியில் அவளும் அப்படியே செய்ய, பணம் கொடுத்து வாகனம் நோக்கி நடந்தவன் அவள் கையையும் பற்றிக்கொண்டான்.
"ரகு என்ன பண்ற?"
"வீட்டுக்கு போகலாம்" என்றான் கோவத்தை கட்டுப்படுத்தி.
"வேலை இன்னும் முடியல. விடு" அவன் கையை உதறி அவள் சற்று தள்ளி நின்றாள் அவனை புரியாமல் பார்வையிட்டே.
அவள் மனதை படித்தவன் அப்படியே அவளை விட்டு சாலையை கடக்க அவன் பின்னாலே சென்று அவன் கையை பிடித்தாள்.
"என்ன பண்ண போற?" என்ற கேள்வியில், இருக்கும் இந்த ஒரு வேலையையும் கெடுத்துவிடாதே என்ற யாசிப்பும் இருந்தது.
வேகத்தை குறைத்து, "ஒரு மணி நேரம் பெர்மிஷன் கேட்டு வா" என்றான் ரகு.
"பெர்மிஷன் கேக்க இது என்ன உன் ஆபீஸா ரகு?"
"அப்போ உன் புருஷன் செத்துடானு சொல்லிட்டுவா" அவனது பேச்சில் அவனை விட அதிக எரிச்சல் பட்டவள் எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அவன் கைகள் சிவக்குமளவு கிள்ளி அவனை தீயாய் முறைத்து சென்றாள்.
நிச்சயம் திவ்யா வருவாளென்ற நம்பிக்கையில் வலித்த கைகளை உதறித்தள்ளி ரகு நிற்க சில நொடிகளில் அவளும் வந்தாள். அவளை அழைத்து அந்த தெருவை தாண்டி ஒரு மரத்தின் நிழலில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை நோக்கி நகர, அந்த வாகனத்தை பார்த்து நடையின் வேகத்தை மெல்ல மெல்ல குறைத்தாள்.
அது ரகுவை தினமும் அழைத்து மீண்டும் விட்டு செல்லும் அதே வாகனம்.
"வேகமா வா" என்றான் கார் கதவை திறந்தபடியே.
"நான் இந்த கார்ல வர மாட்டேன்" பிடிவாதமாக நின்றாள் அந்த வாகனத்தை தவிர்க்கும் எண்ணத்தோடு.
என்ன பேசுகிறாள் என புரியவில்லை அவனுக்கு, அவனோடு வர விரும்பவில்லை என நினைத்தான், "என் கூட ஒரு அரை மணி நேரம் கார்ல வர கூட கசக்குதா உனக்கு?" என்றான் கசப்பாக.
"அப்டி சொன்னதா நியாபகம் எனக்கில்லையே. நான் இந்த கார்ல வர மாட்டேன்"
"நடந்தே பீச் வர ஐடியா இருக்கா அப்போ?"
"நடந்தே வந்தாலும் வருவேன் தவற இந்த கார்ல வர மாட்டேன்"
"அப்டி என்ன தான் உனக்கு அந்த வண்டி மேல ஒரு வெறுப்பு?"
"என் மனசுல இருக்குறது எல்லாம் உன்கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்ல ரகு. விருப்பம்னா சொல்லு வரேன் இல்லையா வேலைய பாக்க கெளம்பி போறேன் நான்"
பற்களை கடித்து ஏதோ முணுமுணுத்தவன் வாகனத்தை லாக் செய்து போக்கு ஆட்டோ ஒன்றை பிடித்து அவளை பார்த்தான்.
திவ்யா உள்ளே ஏறி அமர, "எலியேட் பீச் ண்ணா" வழி கூறி அவளை பார்க்க உனக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் என்பது போல் தான் அமர்ந்திருந்தாள்.
அவனுக்கு தான் அனல் காற்றாய் நினைவுகள் வந்து முகத்தில் மோதியது.
கல்லூரி காலம், அதன் பிறகான திருமண வாழ்க்கை என அனைத்திலும் முக்கிய இடம் வகித்தது அந்த பீச் தான். மகிழ்ந்தது, கோவத்தை காட்டியது, அழுதது, சர்வமும் இந்த இடத்தில் தான். ஏன், விவாகரத்து என முடிவெடுத்தது கூட இவ்விடத்தில் வைத்து தான்.
இன்றும் அதே இடத்திற்கு அழைத்து செல்கிறான். வாடிய மலரிலிருந்து நறுமணத்தை தேடும் முயற்சி தான் அவனுடைய எண்ணங்கள். ஆசையாய் , ஆர்வமாய் கையில் கிட்டிய காதலை தவறவிட்டோமோ என திவ்யா வீட்டை விட்டு வெளியில் சென்ற ஒரு வாரத்தில் புரிந்து கொண்டவன் உறக்கம் ஜன்னல்களை தாண்டி பறந்திருந்தது.
அவன் உறக்கத்தை அதிகம் களவாடாமல் மூன்றே மாதத்தில் கண் முன் தோன்றி இம்சிக்க துவங்கினாள். இன்னமும் இம்சிக்க தான் செய்கிறாள். தினமும் காலையில் உறக்கம் கலைந்த அழகிய முகம், மாலை சோர்வான முகம், இரவில் யோசனை முகம் என ஒவ்வொரு நேரமும் ஒரு வகையாய் இம்சித்தாள்.
அன்று உரிமையாய் அழைக்காதே என்றவள், இன்று அதே உரிமையோடு உன் பொருள் அல்லாத வேறு ஒருவரோடு வர மாட்டேன் என நிற்கிறாள்.
தினம் தினம் அவள் முகத்தை பார்த்து அவளோடு ஆசையாய், உரிமையாய், காதல் அதிகாரத்தோடு பேசாமல் தூரம் நின்று முகத்தை திருப்பி செல்வது எத்தனை கடினமென ஒரே மாதத்தில் புரிய வைத்திருந்தாள் பெண்ணவள்.
ஆசையை கட்டுப்படுத்தி கசப்பான நினைவுகளை மட்டும் மீண்டும் கண் முன் நிறுத்தி நடப்பவற்றை ஜீரணிக்க முயன்றான். அவளுக்கும் அது தான் விருப்பம் போல் இருந்தது அவள் செய்கை எல்லாம்.
சோகம் தளும்பி கிடந்த அவள் முகத்தை பார்த்து, தனக்கான ஒரு வேலை இல்லாத கலக்கம் என எண்ணியவன் அதையும் ஓரப்பார்வையோடு விட்டான். இன்று நண்பன் அழைத்து விடயத்தை கூறிய நொடி நெஞ்சே பதறி ஓடி வந்துவிட்டான் உணவை மறந்து.
அதை விட நேரில் பார்த்தவன் கண்களே கலங்கியது. அது தான் திரும்பி நின்றுவிட்டான்.
காதல் வார்த்தைகள், ஆசை மொழிகள் பேசி இருவரின் வாழ்க்கையையும் வீணாக்கினேனோ? அவள் குடும்பத்தினரின் கைகளில் இருந்தால் இந்நேரம் எப்பேர்ப்பட்ட வாழ்க்கையை அமைத்து தந்திருப்பார்கள் அவள் பெற்றோர்?
இப்பொழுது இவளே சென்றும் ஏற்றுக் கொள்ளவில்லை எனில் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டு பக்கமும் சொந்தம் இல்லாமல் தனி ஆளாய் தவிப்பது இவள் தானே?
தானோ நண்பர்கள், அலுவலகம், கூத்து என இனிமையாய் வாழ்க்கையை கடக்க இவளுக்கு இந்த நிலையா என மனம் வெதும்பி வாடினான். வாகனம் கடற்கரையை அடைந்ததும் அதற்கான பணத்தை கொடுத்து ரகு வரும் முன் திவ்யா கடலில் சென்று கால்களை அலைகளோடு கதை பேசவிட்டு வேடிக்கை பார்த்தாள்.
அவளுக்கு அலைகள் மேல் ரகுவை விட காதல் அதிகம். அவன் கையை பற்றிக்கொண்டு உடை நனைவதையும் யோசிக்காமல் முடிந்த வரை ஆழம் சென்று விளையாடி வருவாள். அவனுக்கோ அவளை திட்டிக்கொண்டே அவள் ஆசையை நிறைவேற்றுவதில் அலாதி பிரியம்.
இன்றும் அவனிடம் கேட்கும் ஆசை பிறந்து அவனை திரும்பி பார்க்க, கிரீம் நிற பேன்ட், பாசி பச்சை நிற ஷர்ட் அலுவலகத்திற்கு ஏதுவான உடை அணிந்து நின்றவனை சிரமப்படுத்த விரும்பவில்லை அவள். உரிமையும் தான் எங்கிருக்கிறது?
அவளது எண்ணங்களை பிரதிபலித்த அவனது கைகள் அவள் கையை பற்றி கடலை நோக்கி இழுத்தான்.
"ரகு வேணாம்" என்றாள் அவசரமாக.
"அதெல்லாம் ஒன்னுமில்ல வா" பெரிய பெரிய ஆசையை தான் நிறைவேற்றவில்லை இதையாவது செய்திட துடித்தது அவன் உள்ளம்.
"எனக்கு பீரியட்ஸ் ரகு. விடு" எனவும் தான் விட்டான்.
"வர புடிக்கலைனா விடு. அத விட்டு பீரியட்ஸ் அது இதுனு காரணம் சொல்லாத. எனக்கு தெரியும் உன்ன பத்தி"
அவனது பதிலில் அவள் அடுத்து பேசவே இல்லை. நீண்ட மௌனம் இருவருக்குள்ளும். அவனுக்கோ அவளோடு பேசவே தயக்கம், அவள் அவனோடு இருந்த ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து மனதை மறைக்கும் வித்தையை கற்றுக்கொண்டிருந்தாள்.
'என்ன தெரியும்டா உனக்கு?' அவன் சட்டையை பிடித்து கேள்வி கேட்க கைகள் பரபரத்தது.
மனதில் மூண்ட தீயை திசை திருப்ப முயலும் முன்பே அவளது கையை பற்றி கடலினுள் இழுத்து சென்றிருந்தான் ரகு. மறுக்கவும் தோன்றவில்லை.
விரும்பி அவன் கட்டுப்பாட்டிற்குள் சென்றவள் அடுத்த அரை மணி நேரம் ஓடி ஆடி விளையாடி அவன் கையை பிடித்துக்கொண்டே மகிழ்ந்திருக்க ஓய்ந்து போய் தான் மணலில் அமர்ந்தாள்.
முகமெல்லாம் சந்தோசம், பரவசம் நிறைந்திருக்க தலையை தவிர மொத்த உடலும் இருவருக்கும் நனைந்திருந்தது. மூச்சு வாங்க திவ்யா அமர்ந்திருக்க, முட்டியில் கை ஊன்றி மூச்சு வாங்க நின்றான் ரகு. மாலை மணி நான்கை கடந்திருக்க சற்று குழுந்த காற்று வீச துவங்கியது.
"ஆனாலும் உன் கூட வர்றது, உயிரை கைல புடிச்சிட்டு தான் வரணும் போல" என்றான் ஆசையாக அழுத்துக்கொண்டு.
"நானா உன்ன வர சொன்னேன், நீ தானேடா இழுத்துட்டு போன"
"சும்மா கொஞ்சம் தூரம் நின்னுட்டு வந்துடுவ எப்பவும் போல உன்ன தப்பா கணக்கு பண்ணிட்டேன்"
"பெருசா என்ன பத்தி தெரியும்னு சொன்ன?" கன்னத்து சதையை கடித்து சிரிப்பை அடக்கி அவனை பார்த்தாள் திவ்யா.
"பொண்ணுங்கள பத்தி தெரிஞ்சவன் தான் யாரு. சரி எழுந்திரி" என்றான்.
"கால் வலிக்கிது. கொஞ்சம் நேரம் ப்ளீஸ்" கண்களை சுருக்கி கெஞ்சினாள் குழந்தை போல் ஆளை அடித்து வீழ்த்தும் பார்வையோடு.
"பாண்ட் அழுக்காகிடும், எந்திரி அப்டியே நடக்கலாம் டிரஸ் காயும்ல" வம்படியாக அவள் கை பிடித்து நடக்க துவங்கினான்.
பலமாக காற்று உடலில் மோத தலையை காய வைக்கும் எண்ணத்தில் திவ்யா பின்னலை அவிழ்த்து காற்றில் பறக்க விட்டாள்.
"காலேஜ் படிக்கிறப்போ நீ, நான் மாத்தி மாத்தி வா வா-னு இங்க இழுத்துட்டு வருவோம், கல்யாணத்துக்கு அப்றம் நீயும் ரிஸ்க் எடுக்கல நானும் ரிஸ்க் எடுக்கலல?"
தூரத்தில் பறந்து திரியும் கடல் பறவைகளை பார்த்திருந்தவன் பார்வை அசையவில்லை அவள் கூறிய வார்த்தைகளை செவி சாய்த்து அதனை ஜீரணிக்கும் முயற்சியில் இருந்தான்.
"இது தான் நம்ம வாழ்க்கையை தவறவிட்ட இடமோ திவ்யா?" அசட்டையாக தோளை குலுக்கினாள் பதில் பேச முடியாமல்.
"அதே சமயம், நாம அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிகிட்டோமோனு யோசிக்காமையும் இருக்க முடியல" என்றான் சந்தேகமாய்.
திவ்யாவுக்கு ஏதோ போல் ஆகியது, இங்கு தான் இன்னமும் அவன் பக்கத்திலிருந்து ஒரு சிறு முயற்சி ஏற்பட்டாலும், அவளே இரண்டு அடி அவனை நோக்கி எடுத்து வைக்க தயாராக இருக்க... அவனுக்கு நடந்தவை நல்லது தான் என தோன்றியது போலும். உறவின் மேல் இருந்த சிறு நம்பிக்கையும் போனது.
"நெஜமாவே நீ என்ன லவ் பண்ணியா ரகு இல்ல காலேஜ்ல உன்னோட கெத்த காட்ட என் கூட சுத்துனியா?" அதிர்ந்து அவளை பார்த்தவன் கண்கள் கோவத்தில் சிவந்து போனது.
"முட்டாள் தனமா பேசுறோம்னு என்னைக்கு தான் நீ புரிஞ்சுக்குவ?"
"முட்டாள் பேச்சு இல்ல ரகு, இந்த ஒன்றை மாசமா எனக்கு அதிகம் சந்தேகம் இருக்கு" நின்று அவளை பார்த்து முறைத்தான்,
"பொழுது போகாம லவ் பண்ணிட்டு கழட்டி விடுறவன் மாதிரியா இருக்கேன் நான்?"
"இல்ல, ஆனா இவ்ளோ ஈஸியா என்னையும் நம்ம காதலையும் விட்டு குடுத்துட்டியே. காதலோடு நின்னுருந்தா கூட பரவால்ல ஆனா கல்யாணம்... எல்லாத்துக்கும் மேலனு உனக்கு தெரியாதா?"
"டிவோர்ஸ் அப்ளை பண்ணது ரெண்டு பெரும். ம்யூட்சுவல் டிவோர்ஸ். நான் ஒன்னும் அந்த பேச்ச முதல எடுக்கல. ஆரமிச்சதே நீ தான்"
"இல்லனு சொல்ல மாட்டேன். ஆனா அதுக்காக தான் பல வருஷம் வெயிட் பண்ணது போல ஒடனே சரினு சொன்னவன் நீ தானே?"
"ஏன் திவ்யா டிவோர்ஸ் பேச்ச எடுத்த நீ நல்லவ, சரினு சொன்ன நான் கெட்டவன்" நிதானமான பேச்சுகள் தான் நிகழ்ந்தது.
இருவரும் மிக நிதானமாக, தெளிவாக நின்றனர்.
"நீ கெட்டவன் இல்ல ரகு. நான் தான் உனக்கு என்னைக்கும் தொல்லையா, சுமையா இருந்துருக்கேன். நான் போன மூனே மாசத்துல இருக்குற நீ தான், ஆறு வருஷம் முன்னாடி நான் முதல் முதலா பாத்த ரகு. தொல்லை ஓஞ்சதுனு நினைச்சியா?" வலியை சிரிப்பின் பின்னே ஒளித்து வைத்து கேட்டாள்.
"கற்பனை உனக்கு நல்லா வருது. நான் எப்பவும் போல தான் திவ்யா இருக்கேன்" என்றான்.
"இல்ல ரகு. உன் ரூம்ல உனக்கு புடிச்ச ஹீரோயின், கிரிக்கெட் புட்பால் ப்லேயர்ஸ் படம் ஒட்டிருக்க. நிறையா மெஷின் டிசைன் ட்ராயிங். புது கார். வாரம் ஒரு நாள் கண்டிப்பா கிரிக்கெட், லேட் நைட் கேதரிங்-னு சந்தோசமா இருக்க ரகு"
கண்ணீரை மறைக்க முயலவில்லை அவள், மறைப்பதற்கான காரணமும் தெரியவில்லை. தன் வேதனையோ கண்ணீரோ எதுவும் அவனை பாதிக்கப்போவதில்லை என உறுதியாக மனம் நம்பியது.
"எனக்கு புடிச்சதை நான் செய்றதுல என்ன தப்பு திவ்யா?"
"அதை ஏன் நாம ஒண்ணா இருந்த நேரம் பண்ணலனு கேக்குறேன் ரகு"
"ஹீரோயின், சன்னி லியோன், போட்டோஸ் எல்லாம் மாட்டிருந்தா அதை கண்டுக்காம போற அளவு நீ பெரிய மனசுள்ளவ இல்ல. எந்த பொண்ணும் இல்ல"
"காதலிச்சப்போ தேவதையா தெரிஞ்ச நான் கல்யாணத்துக்கு அப்றம் வில்லியா மாறிட்டேன்ல? கார் வாங்க கூட நான் விட மாட்டேன்னு நினைச்சிட்டல?" கசந்த புன்னகை அவளிடம்.
"ரொம்ப அழகா டயலாக் பேசுவ திவ்யா. ஆனா ப்ராக்டிகாளா யோசிச்சு பார். எந்த பொண்ணுகிட்ட நான் பேசுனாலும் உனக்கு பிடிக்காது. உன் கூட தான் எந்நேரமும் நான் இருக்கனும்.
ஒரு சின்ன பொருள் வாங்குனாலும் அது ஏன் வாங்குனேன், எதுக்கு வாங்குனேன் அப்டி எப்டினு ஆயிரம் கேள்வி கேப்ப. இப்ப ஒன்னுமே தெரியாத மாதிரி பேசுற பாரேன்... இதெல்லாம் சகிக்க முடியாம தான் டிவோர்ஸ் குடுக்க ஓகே சொன்னேன்"
விழி அகலாமல் முகம் சிவக்க பேசியவனை விட்டு சென்று ஓவென கத்தி அழ தூண்டும் துக்கம் அவளை அலைகளாய் மோதி பந்தாடியது. முகம் சூம்பி புன்னகை மறைந்தவள் முகம் அவனை சிறிதும் பாதிக்கவில்லை, கடும் கோவத்தில் இருந்தான் அவன்.
போகிறேன் போகிறேன் என ஆறு மாதங்களாய் பிடிவாதமாய் நின்றவளை எத்தனை காலம் தான் அவனும் அதனை தவிர்த்து உறவை தக்க வைக்க போராடுவான்.
முயற்சி என்பது இரண்டு பக்கத்திலிருந்தும் வந்தால் தானே அது நிலைக்கும். விட்டான் உன் பாதையில் நீ செல் என. இன்று அதற்கும் தன்னையே காரணம் காட்டி பேசுகிறாள் என்ற கோவம் ரகுவுக்கு.
"நான் கிளம்புறேன்" இதமாய் இருந்த மனநிலை மாறி உள்ளம் தவிக்க அவனிடம் நின்று பேசும் ஆற்றல் அவளுக்கு இல்லாது போனது.
"நான் பேசவே இல்ல இன்னும்" நிறுத்தி வைத்தான் ரகு.
"எதுக்கு அங்க வேலைக்கு போற?"
மௌனம்.
"உன்ன தான் டி கேக்குறேன். உன்ன யார் அங்க வேலைக்கு போக சொன்னது?"
பற்களை கடித்து கோவத்தை வெளியிட்டான், "தினேஷ் போன் பண்ணி அசிங்கமா என்ன பேசுறான். வீட்டுல உன்னால இருக்க முடியலையா? படிக்க வேண்டியது தான இன்டெர்வியூகு. மூணு மாசம் நல்லா ஹார்ட் ஒர்க் பண்ணா வேலை கிடைக்கும்"
"என் விசயத்துல நீ தலையிடாத ரகு"
"அப்டி தான் தலையிடுவேன். இன்னும் நீ என் பொறுப்புல தான் இருக்க. இந்த வேலைக்கு நீ போக கூடாது அவ்வளவு தான்" என்றான் முடிவாய்.
"இந்த வேலைல என்ன குறை? உன் பொறுப்புல இருந்தாலும் நமக்கு சம்மதம் இல்லல? உன் கெளரவம் ஒன்னும் குறைஞ்சிடாது. எனக்கு இது தப்பா தெரியல"
"ஏன்டி ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாதா?"
"புரிய வேணாம் ரகு. எச்சி ப்ளேட் எடுக்குறேன். ரோடுல நின்னு தப்பான வேலை பாக்..." முழுதாய் அவள் பேசும் முன்பு ஓங்கி அறைந்திருந்தான் ரகு.
சுற்றி அதிகம் கூட்டம் இல்லாவிடினும் அவர்களை சிலர் பார்க்க தான் செய்தனர், விழி விரித்து அதிர்ந்து நின்ற திவ்யாவை எரிமலையின் சீற்றத்தோடு முறைத்தவன், "இன்னொரு வாட்டி இந்த மாதிரி பேசுன வெட்டி கடல்ல வீசுடுவேன்"
அவள் கை பிடித்து விறுவிறுவென சாலையை அடைந்து ஆட்டோ ஒன்றை பிடித்தவன் அவளை மட்டும் அதனுள் விட்டு வீட்டிற்கு செல்லும் வழியை ஓட்டுனரிடம் கூறி மீண்டும் அவளிடம் வந்தான்.
"இனிமேல் நீ என்ன வேலை வேணும்னாலும் பாரு. ஏன் எதுக்குனு ஒரு வார்த்தை உன்ன நான் கேட்டா... செருப்பை எடுத்து அடி" அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாய் கூறியவன் தலை நிமிர்ந்து சற்று தள்ளி நிற்க வாகனம் அவ்விடத்தை விட்டு மறைந்தது.
அடுத்த மூன்று மணி நேரம் இருவருக்கும் எந்த காரியத்திலும் மனம் ஒன்றாமல் போனது.
அலுவலகம் செல்லாமல் வாகனத்தை எடுத்துக்கொண்டு அலுவலகத்தின் அருகில் இருந்த பூங்காவில் அமர்ந்திருந்தான் ரகு. அவன் அங்கிருப்பதை அறிந்து வந்த அவன் தோழி இறுகி அமர்த்திருப்பவன் அருகில் வந்து நின்றாள். தலை திருப்பி அவளை பார்த்தவன் வாகனத்தின் சாவியை மட்டும் அவளிடம் நீட்டினான்.
"கெளம்பலாமா?" என்றாள் அவனை படிக்கும் எண்ணத்தோடு.
ரகுவை படிப்பது அத்தனை கடினமான காரியமல்ல, திறந்த புத்தகமாக தான் என்றும் இருப்பான்.
அதனாலே அவன் தன்னை சுற்றி அதிகம் ஆட்களை வைத்துக்கொள்வதில்லை. ஒரு சிலரை தவிர. அதில் ஒரு நபர் தான் விஜயலக்ஷ்மி. ஏனென்று தெரியாமல் அவள் மேல் ஒரு தனி பாசம் அவனுக்கு.
ரகுவின் குணங்களை அப்படியே கொண்டதினாலோ என்னவோ அவளோடு தினேஷை போலவே பழக துவங்கினான். ஆறு மாதங்கள் முன்னர் தான் ரகுவின் அணியில் அவள் வந்து சேர்ந்தது.
அந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தான் துவங்கிய உறவிது என எவராலும் கூற முடியாது. ரகுவோ அவளை முதல் பார்வையிலே ஈர்த்திருந்தான்.
அவன் பேச்சு, நடவடிக்கை, அணுகும் முறை, என அனைத்துமே அவளை அவன் பக்கம் சாய்ந்திருக்க அவன் திருமணம் ஆனவன் என்ற செய்தி அவள் மனதினுள் ஒரு புயலையே கிளப்பியிருந்தது.
அந்த புயல் சேதாரம் அதிகம் செய்திடாமல் அவளே தன்னை மீட்டெடுத்து எந்த விதமான தவறான எண்ணத்தையும் வளர்க்காமல் தோழியாய் பழக துவங்கினாள்.
இயல்பாக பேசும் அவள் நிதான பேச்சும், எதிர்பார்ப்பில்லாமல் பழகும் அவள் குணமும் அவனுக்கும் பிடித்திருந்தது. ஆனால் அது ஒரு ஆணுக்கு பெண் மேல் வரும் பிடித்தமில்லை, மனிதனுக்கு சக மனிதன் மேல் வரும் பிடித்தம் என அதன் பிறகான நாட்களில் தான் அவள் புரிந்துகொண்டாள்.
சில்லென்று காற்று வீசிய மழை மாலை பொழுதினில் தனை மறந்து நிகழ்வுகளின் நிலையில் லயித்திருந்தவனை கலைப்பதற்கு அவனை உரசி அவன் அருகில் அமர்ந்தவள் அவன் நீட்டிய சாவியை மட்டும் வாங்கவில்லை.
"என்ன பிரச்சனை ரகுநந்தனுக்கு"
"ப்ச்" உச் கொட்டி அவளை பார்த்து முறைத்தவன், "சண்டை போட ஆள் இல்லனு பீல் பண்றேன். வர்றியா?"
"ஏன்டா பீம்பாய் மாதிரி இருக்க நீ, எலி குட்டி மாதிரி இருக்க என் கூட சண்டை போடலாமா?"
"நான் பேசுற மூட்ல இல்லடி கெளம்பு நான் கேப் புடிச்சு வீட்டுக்கு போய்க்கிறேன்" என்றான் எங்கோ பார்த்து.
"ஆளே இல்லாத வீட்டுல நானும் போய் தான் என்ன பண்ண போறேன். பரவால்ல உன் கூடயே இருக்கேன்" வசதியாக அமர்ந்துகொண்டாள் அவனை தள்ளிவிட்டு.
அவனோ அமைதியாக இருக்க, "என்னாச்சு?" அவளே துவங்கினாள்.
"என்ன என்னாச்சு?" அவள் கேள்வியை அவளுக்கே திருப்பி விட்டான்.
"ஏன்டா நாய் மாதிரி வல்லு வல்லுனு குரைசிட்டே இருக்க? திவ்யாவ பாக்க போனியே அப்டி ஒரு அவசரம் எதுக்கு?"
"பைத்தியம் மாதிரி ஓடுனதுக்கு செருப்பால என்ன அடிச்சு அனுப்பிட்டா" என்றான் பற்களை கடித்து. அவன் வாக்கியத்தில் வாய் விட்டு சத்தமாக சிரித்தாள் சில நொடிகள்.
"செருப்படி ஒன்னு தான் மிச்சம்னு நினைச்சேன் அதுவும் வாங்கிட்ட. காங்கிராட்ஸ் டா ரகு" வலுக்கட்டாயமாக அவனோடு கை குலுக்கினாள்.
"என்ன பாத்தா நக்கலா இருக்கா உனக்கு?"
"நக்கலா இல்லடா. ஆச்சிரியமா இருக்கு. பிடிக்கல பிடிக்கலனு சொல்லி சொல்லியே நீ அவளுக்கு ஒன்னுனா ஓடுற, அவளும் தனக்கு போக இடம் இல்லாம உன்கிட்ட தான் வந்து நிக்கிறா"
"என்னத்த வந்து நின்னா? இங்க காசு குடுக்க தேவையில்லன்னு வந்தா ஒடனே நீயா கதை எழுதாத" அவளை முறைத்து கையில் சாவியை திணித்து, "நீ கெளம்பு" அவளை விரட்டினான்.
"ஹாஹா... நீ என்ன எதுக்கு விரட்டுறனு எனக்கு தெரியும். அடுத்தது நீ எதுக்கு ஓடுனனு நான் கேக்க கூடாது அதுக்கு தான?"
"எப்பா என்னம்மா யோசிக்கிற... இந்த மூளையை கொஞ்சம் வேலைல காட்டு ஹைக் ஆவது கிடைக்கும்"
"பேச்ச மாத்தாத ரகு. சரி இதுக்கு பதில் சொல்லு. உன்னால அவளை விட்டு மூவ் ஆன் ஆக கஷ்டமா இருக்கா?"
"உங்கிட்ட நான் சொன்னேனா கஷ்டம்னு? எனக்கும் அவளுக்கும் செட் ஆகாதுன்னு நிதானமா யோசிச்சு முடிவெடுத்துருக்கோம். மூவ் ஆகுறதும் கஷ்டம் வர்றப்போ ஹெல்ப் பண்றதுக்கும் நிறைய பெரிய வித்யாசம் இருக்கு. ஏன் ரோடுல ஒரு கண்ணு தெரியாதவர் ஹெல்ப் கேட்டா பண்றது இல்லையா, அது மாதிரி தான் இது"
"அப்போ நீங்க குடுக்குற ப்ரியாரிட்டி இம்பார்ட்டன்ஸ் எல்லாம் உங்க வலைல ஒரு பொண்ணு விழுந்து, உங்க ஆசைய தீத்துக்குற வர தான்? அதுக்கு அப்றம் ஒரு ஆளா கூட மதிக்க மாட்டீங்க. முகம் தெரியாத ஒரு மூணாவது மனுஷன் தான் இல்ல?"
"பைத்தியம் மாதிரி பேசாத விஜி. ஆசையா, காதலோட தான் அவளை நான் கல்யாணம் பண்ணேன். என்னோட ஆசைக்கு அவளை நெருங்கனும்னு நினைச்சிருந்தா சென்னை மொத்தமும் சுத்துன அந்த நாலு வருஷம் சாலிடா இருந்தது.
எனக்கு வேண்டியதை எடுத்துட்டு நீ யார்னு கேட்டு போயிருக்க மாட்டேன்? எனக்கு அவளோட வாழனும், அவ சந்தோசத்தை பார்த்து நானும் சந்தோசம் படணும்-னு தான் ஆசை. அதுக்காக தான எனக்கு புடிச்ச மெக்கானிக் வேலையும் விட்டு இங்க தினம் தினம் இவிங்ககிட்ட அசிங்கமா திட்டு வாங்குறேன்" தோழியை பார்த்து முறைத்தான் ரகு.
"உன்னோட மெனக்கெடல் எல்லாம் சூப்பர் தான். பெரிய தியாகம் தான். அதுக்குன்னு ரெண்டு வருஷம் முன்னாடி எடுத்த முடிவை இப்ப வர அவளுக்காக பன்னேனு ஏன் உன் மனசு இத்தனை முறை சொல்லி காட்டுது?
அன்னைக்கு நீ எடுத்த முடிவு உன் ஆசைய கெடுத்திருந்தாலும் கை நிறைய சம்பளம், ஏன் இன்னைக்கு கூட ஆன்சைட் போறேன்னு ஒரு மினி பார்ட்டியே வச்சியே... அந்த வேலைல பிடித்தம் இல்லாமையா கொண்டாடிருக்க?
சரி திவ்யாவை விட்டாச்சு. இனியாவது நமக்கு புடிச்ச வேலைய பாக்கலாம்னு யோசிச்சு இந்த வேலைய விட்டியா நீ?" ரகு பக்கமிருந்து பெருத்த அமைதி.
அவளது ஒவ்வொரு கேள்வியும் அவனையே மீண்டும் கேள்வி கேட்க வைத்தது.
"தியாகம் ஒருத்தர்கிட்ட எந்த எதிர்பார்ப்பும் இல்லாம கொடுக்குறது. கடமை, எதிர் பார்த்து செய்றது. நீ செஞ்சது சத்தியமா தியாகம் இல்ல. கடமை தான். பெத்தவங்க, புள்ளைங்க, சொந்தகாரங்க, ப்ரன்ட்ஸ், இவங்ககிட்ட எல்லாம் கடமையை செய்யலாம்,
ஆனா வாழ்க்கை துணைக்கிட்ட கடமையை செய்ய கூடாது ரகு, காதல் மட்டும் தான் செய்யணும்.விட்டு குடுத்து வாழுறதுல தான் ரகு சுகமே.
ஒருத்தரோட சந்தோஷத்துக்காக இன்னொருத்தர் போட்டி போடலாம். அதே போட்டி ஒரு அளவான எதிர்பார்ப்பை தாண்டி போச்சுன்னா எத்தனை ஆழமான உறவா இருந்தாலும் அது நிலைக்காது"
"சரி சொல்லல போதுமா?" இறுக்கம் ஏறி கடினம் கூடியிருந்தது அவன் குரலில்.
"ம்ம்ம்... அப்போ நீ நெஜமாவே திவ்யாவை டிவோர்ஸ் தான் பண்ண போறியா ரகு?"
"இதுல என்ன சந்தேகம்? இந்த மாச கடைசில பர்ஸ்ட் ஹியரிங் போக போறோம்" என்றான் சாதாரணமாக முகத்தை வைத்து.
நிம்மதி படர்வது போல் இருந்தவனை பார்த்து, "அதுக்கு அப்றம்..." என்றாள் கண் சிமிட்டாமல் அவனை பார்த்து.
யோசித்தவன் சுலபமாய் தோள்களை குலுக்கி குறுநகை பூத்தான், "அப்றம் என்ன அம்மா பாத்து தர்ற பொண்ணை அடுத்த கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான்"
கண் சிமிட்டி கூறியவன் முகம் அவள் மனதில் மலராய் மலர்ந்து மனம் வீசியது, "அந்த பொண்ணு நானா இருந்தா உனக்கு ஓகேவா ரகு"
அதிர்ந்து திரும்பியவன் அவள் முகத்தில் விளையாட்டிற்கான பாவத்தை தேட, என்றும் இல்லாத தீவிரமதை காண செய்வதறியாமல் சிலையாகி போனான் ரகுநந்தன்.
How is the update? Comments plzz
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro