வண்ணம் - 1
ஆரவாரத்தோடு மழையானது வெளுத்து வாங்கி அந்த இடத்தையே தலைகீழாக புரட்டி போட்டிருந்தது. அதிலும் கோடை காலத்து மழைக்கு சொல்லவே தேவையில்லை. மழையை காட்டிலும் இடி மின்னலின் தாக்கம் தான் அதிகம் இருந்தது.
இன்று மட்டுமல்ல கடந்த ஒரு வாரமாக சென்னை மாநகரில் விடாது மழை பொழிந்துகொண்டே இருக்கும் காரணத்தினால் கோடை காலம் குளிர் காலமாக மாறியிருந்தது.. இன்றும் குளிர் காற்றும், இடது தோளின் பக்கம் தண்ணீர் சொட்டு போட்டுக்கொண்டே இருக்க, உடல் குளிரால் நடுங்கியது. உடலை மேலும் குறுகி சுவற்றோடு ஒட்டி அமர்ந்தாள்.
ஆனால் பயன் தான் பூஜ்யம் இதற்கு மேல் ஒட்டி செல்ல சுவரை இடிக்க தான் வேண்டும்.
இரவு காற்று உடலினுள் மோத ஊசியாக குத்திய பனிக்காற்றை கூட கவனத்தில் கொள்ளாமல் கேட் அருகில் அமர்ந்திருந்தாள் அவள். மணி ஒன்பதை தாண்டியிருந்தது.
தெருவில் செல்பவர்களுக்கு இவளை கவனிக்கும் நேரம் எல்லாம் இல்லை. ஆனால் அவளுக்கு அது கடினமாக இருந்தது அனைவரும் தன்னையே பார்த்து சிரிப்பது போல் பிரமை தோன்றியது.
நொடிக்கொருமுறை வாயிலை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள். அவள் எதிர்பார்ப்பை வீணாகாமல் கையில் குடையோடு நடந்து வந்தாள் ஒரு பெண்.
"என்னடி இது இவ்வளவு நேரம்?" நொந்துக்கொண்டு பாவமாக பார்த்தாள் அந்த பெண்ணை.
"திவ்யா என்ன மன்னிச்சிருடி" என்றாள் வந்தவள் தயக்கமாக.
திவ்யாவுக்கு இருந்த நம்பிக்கையெல்லாம் காற்றில் கரைந்தே போனது, "சசி உன்ன மட்டும் தான்டி முழுசா நம்பிருக்கேன் கை விரிச்சிடாதடி" தோழியின் கை பிடித்து பயத்திற்கு ஆறுதல் தேடினாள்.
சங்கடமாக கண்களை அலைபாயவிட்ட சசி தோழி முகம் பார்க்காமல் அவள் எதிர்பார்த்த ஆறுதலை தரமறுத்தது பெண்ணுக்கு ஏதோ புரிய வைத்தது, "சரி வா நீ" என அந்த பெண்கள் தங்கும் விடுதிக்குள் தோழி கை பிடித்து இழுத்துச் சென்றாள்.
மூன்று மாடி கட்டிடமதில் அறைக்கு மூவர் கணக்கில் குறைந்தது அறுவது பெண்களாவது தங்கியிருப்பார்கள். அந்த விடுதிக்கும் சசிக்கும் சுமார் இரண்டு வருட தொடர்பு. படிப்பை முடித்து வேலை என பார்க்க துவங்கிய நாளில் இருந்து அங்கு தான் இருந்தாள் அவள்.
செலவுக்கேற்ற சம்பளம் என இருந்த சசிக்கு அங்கு வாடகை கொடுப்பதில் பிரச்சனை இல்லாமல் செல்ல அவளுக்கு அங்கு நல்ல பெயரே.
மூன்று மாதங்களுக்கு முன்பு வாடிய முகத்தோடு வந்த தோழியை அரவணைத்து தன்னோடு இருக்க வைத்துக்கொண்டாள் சசி. சரியாக திவ்யா அங்கு வந்த நேரத்தில் சசிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட கையேடு வேலையை விட்டு வர கூறிய பெற்றோர்களின் வற்புறுத்தலின் பெயரில் தோழியை பத்திரமாக இருக்க கூறி சென்றுவிட்டாள் சசி.
வார்டன் முன்னே தோழியை அழைத்து வந்து நின்ற சசி, "மேடம்" என்றாள் தயங்கி.
சசியை பார்த்ததும் எதற்காக பேசவந்துள்ளாள் என தெரிந்தவர், "வேணாம் சசி. உன் ப்ரன்ட்ட காப்பாத்த நீ என்ன பேசுனாலும் நான் கேக்க தயாரா இல்ல"
"மேடம் ப்ளீஸ் கொஞ்சம் டைம் தாங்களேன்" கெஞ்சி பார்த்தாள் சசி.
"மூணு மாசம் டைம் கொடுத்துட்டேன் சசி. எல்லாம் உனக்காக தான். அதுவும் எல்லாரையும் விட ஆயிரம் கம்மியா தான் விட்டேன். நீ இருந்தப்போ குடுத்த மூவாயிரம் தான் இந்த பொண்ணு குடுத்த காசு. அதுக்கு அப்றம் ஒரு ரூவா கூட குடுக்கல"
"வேலை கிடைச்ச ஒடனே தந்துடுவா மேடம். ப்ளீஸ்"
"முடியவே முடியாது சசி. நான் சத்தரமா வச்சு நடத்துறேன் போறவங்க வர்றவங்க எல்லாருக்கும் சும்மா வந்து தங்கிட்டு போக? ஒரு மாசம் ரெண்டு மாசம் பரவால்ல கஷ்டப்படுத்தனு விட்டேன், மூணு மாசமாச்சு வாடகை குடுத்து. காசு எடுத்து வைங்க இல்லனா கையோட கூட்டிட்டு போய்ட்டு"
அதற்கு மேல் பேச எதுவுமில்லை என சென்றுவிட்டார் அவர். அவர் பின்னாலே சென்ற சசி எவ்வளவோ பேசி பார்த்தும் பயன் இல்லாமல் போக தோல்வியோடு திவ்யா அருகே வந்தாள்.
"என்ன சசி சொன்னாங்க?" கேட்டாள் திவ்யா.
தோழியின் பை எல்லாம் பார்த்தவள், "இதெல்லாம் தூக்கி வெளிய வச்ச பிறகும் இந்த கேள்வி கேக்கலாமா திவ்யா?"
"நீ... நீ ஏதாவது பணம் வச்சிருக்கியா சசி" தயங்கினாள் திவ்யா.
இதுவரை பணத்திற்கு எங்கும் கேட்டு நின்றதில்லை அவள், இதுவே முதல் முறை. அசிங்கமாக இருந்தது. நினைத்ததும் கைக்கு பணம் வந்து பழகியவளுக்கு பத்தாயிரம் கூட கையில் புரளாமல் இருப்பது அவமானமாய் இருந்தது. கூனி குறுகி தலை கவிழ்ந்தாள்.
"என்கிட்ட இருந்தா நான் ஏன்டி அந்த அம்மாகிட்ட இப்டி கெஞ்சிட்டு இருக்க போறேன்? வேலைய விட்டு மூணு மாசமாச்சு. கல்யாணத்துக்கு எல்லாம் செலவாகிடுச்சு. என் செலவுக்கே வீட்டுல தான் காசு வாங்குறேன் திவ்யா"
"வெளிய எங்கையாவது கடன் வா... வாங்கி" கண்களில் நீர் கோர்த்தது பாவைக்கு.
"அந்த எண்ணமே வேணாம் திவ்யா குப்பைல போடு" என்றவள் தோழி தயங்கி நிற்பதை பார்த்து அமைதியாகிவிட்டாள்,
"ரெண்டு வாரத்துல கல்யாணத்த வச்சிட்டு இங்க நான் வந்ததே பெருசு இல்லனா கூட அப்டியே வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவேன். அண்ணன் வேற வீட்டுல இருக்கான்"
புரிந்தது திவ்யாவுக்கு, "இல்ல சசி நான் உன்கூட வரேன்னு எல்லாம் சொல்ல மாட்டேன்" உள் மனம் ஊமையாக கதறியது தன்னுடைய நிலையை எண்ணி.
"இப்ப என்ன பண்ண போற? எங்க போக போற?" கண்களில் கண்ணீர் பெறுக தோளை குலுக்கி சிரித்தவள் அனுமதியின்றி சில கண்ணீர் துளிகள் கன்னத்தில் வடிய, உடனே கண்ணீரை துடைத்து சிரித்தாள்.
சசிக்கு மனம் கனத்தது ஆனால் அவளால் எதுவும் செய்ய முடியாத நிலை. தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றிடலாம் ஆனால் அவள் மேல் கல்லூரி காலத்திலே ஒரு கண்ணை வைத்திருந்த சகோதரன் இருக்கும் வீட்டில் இப்பொழுது அழைத்து திவ்யாவை சென்றால் நன்றாக இருக்காதென்ற பயம் தான் சசியை அமைதியாக்கியது.
"உன் வீட்டுக்கு போ திவ்யா" சசி கூறவும் தலையை வேகமாக ஆட்டினாள் திவ்யா.
"லூசு மாதிரி அடம் பிடிக்காத திவ்யா, உனக்கு இப்ப இத தவற வேற ஆப்ஷனே இல்ல"
"அங்க எப்படி சசி.." ஒரே நாளில் எத்தனை சோதனைகள் தான் மனம் தாங்கும்?
"யோசிக்கிற நேரமில்லை திவ்யா. வேலை கிடைக்கிற வர இரு. கிடைச்ச அடுத்த நாளே வெளிய வந்துடு. உனக்கு பாதுகாப்பான இடமும் அது தான். இன்னைக்கு நைட் மட்டும் இங்க இருக்க அந்த அம்மாகிட்ட பேசுறேன். எனக்கு நேரமாச்சு அம்மா தேடுவாங்க வா"
தோழியை அழைத்து வார்டானிடம் சென்றாள், "நாளைக்கு காலி பண்ணிடுவா மேடம்"
"ஏம்மா இப்பயே போகணும் சொன்னேன்ல?" என்றார் அவர் கடுமையாக.
"ப்ளீஸ் மேடம். இந்த நேரத்துல எங்க போவா அவா? நாளைக்கு காலைல எந்திரிச்ச ஒடனே கெளம்பிடுவா ப்ளீஸ்"
சசிக்கு பின்னால் தலை தாழ்த்தி நின்ற திவ்யாவை பார்த்தவர், "சரி... நாளைக்கு நானா சொல்ல முன்ன போக சொல்லிடு" திவ்யாவை முறைத்து சென்றுவிட்டார்.
அவர் சென்றதும் தோழியின் கை பிடித்த சசி, "என்ன தப்பா நினைச்சுக்காத திவ்யா, உனக்கு உதவி பண்ண முடியாத சூழ்நிலைல இருக்கேன்டி. சாரி" தோழியை தோளில் தட்டி அனுப்பி வைத்தவள் தான் முன்பு தங்கியிருந்த அதே அறைக்குள் சென்று படுத்துகொண்டாள்.
உறக்கம் வரவே இல்லை இரவு முழுதும். அந்த இடத்தில் படுக்கவே அவமானமாக இருந்தது, முகத்தில் அடித்தார் போல் பேசி வெளியே செல் என்பவரிடம் தன்மானத்தை காட்ட முடியாமல் பாதுகாப்பிற்காக பணிந்து போக வேண்டி உள்ளதே, இனி இது தான் என் வாழ்க்கையா? சுய மரியாதையை தொலைத்து தான் வாழ போகிறேனா? பல கேள்விகள், பல வேதனைகள் சூழ்ந்து உறக்கத்தை பறித்தது.
காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்த பெண்ணவள் எவரிடமும் சொல்லாமல் விடுதியை விட்டு வெளியேறியிருந்தாள்.
விடுதியிலுந்து துவங்கிய நடைபயணம் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வந்து தான் நின்றது. கையில் பணமே இல்லை, ஒரு வேலை உணவுக்கு கூட கையேந்த வேண்டிய நிலை தான் இப்பொழுது. ஒரு மணி நேரத்திற்கும் மேலான பயணம் அவளை அதிகம் வாட்டியிருந்தது.
வேதனை மிகுதியில் வர வேண்டிய இடத்திற்கு வந்தவள் அந்த உயர்ந்த கட்டிடத்தை தலை தூக்கி பார்க்க, காலை வெயில் கண் கூசியது. முடிந்தது என நினைத்த அத்தியாயம், தொடரும் என்ற நிலையில் அங்கேயே வந்து நிறுத்தியிருந்தது. காலத்தின் செயல்.
பத்து மாடி கட்டிடம் அது. சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றான அந்த தெரு எப்பொழுதை போல இப்பொழுதும் பரபரப்பாக இருந்தது. கையிலிருந்த பெரிய பையை தூக்கி நடக்கவே கடினமாக இருந்தது அவளுக்கு.
இதில் தெருவில் விளையாடும் குழந்தைகள் வேறு மேலே வந்து மோதும் அளவு இடித்து இடித்து செல்ல பல தெருக்கள் தாண்டி நடந்தே வந்தவளுக்கு கை கால் எல்லாம் அசதியாக இருந்தது. இதில் தன்னை சிலர் பார்க்கும் பார்வை வேறு நடையின் வேகத்தை கூட்ட கட்டாயப்படுத்தியது.
அதில் ஒருவர் தன்னை பார்த்து பேச வர, வேகமாக மின்தூக்கியினுள் நுழைந்துகொண்டாள். மின்தூக்கி ஒவ்வொரு தளம் மேலே செல்ல செல்ல நெஞ்சாங்கூடு வெடித்துவிடும் பயம் அவளுக்கு. அந்த பயம் தயக்கமாக மாற, சரியாக ஏழாவது மாடி வந்ததற்கான அறிகுறியாக மின்தூக்கியின் கதவு திறந்து அவளை வெளியேற்றியது.
கால்கள் தடுமாறியது மீண்டும் அந்த வீட்டினுள்ளே செல்வதற்கு. வீம்பாக இனி இங்கு வரவே மாட்டேன் என கூறியாயிற்று ஆனால் இன்று இந்த இல்லத்தை தவிர வேறு வழியில்லை அவளுக்கு.
எச்சில் கூட்டி விழுங்கினாள் பயத்தை. கதவை தட்ட சென்ற கைகள் மீண்டும் கீழே இறங்கியது. தயக்கம். கோவம். ஏமாற்றம். கையாலாகாத்தனம். முட்டி நின்ற அழுகை அவளது இறுகிய தாடையின் உபயத்தினால் இளமாகாமல் போனது.
கையில் இத்தனை பெரிய படிப்பு உள்ளது என்ற அசட்டு நம்பிக்கை இன்று இப்படியான நிலையில் கொண்டு வந்து விட்டது விதியின் செயல் என்று கூட அதன் மீது பழி போட முடியாதே. அனைத்திற்கும் காரணம் அவள் மட்டுமே என அவளுக்கே நெற்றி பொட்டில் அடித்து கூறியிருந்தது காலம்.
அந்த நேரம் அங்கு வந்த ஒருவன் இவளை பார்த்ததும், "என்ன க்கா வந்துட்டியா? அப்போ அரை லிட்டர் பால் வச்சுக்குறியா? நீ வாங்குனா தான் க்கா எனக்கு பாலே விக்கித்து... ராசியான கை உனக்கு"
கேள்வி கேட்டு பதிலே எதிர் பாராமல் அரை லிட்டர் பால் பாக்கெட்டை கதவின் அருகில் இருந்த சிறு கூடையில் போட்டு அவளை பார்த்து அவன் சிரிக்க,
"உனக்கு நான் பால் ஊத்துறதுக்குள்ள ஓடிடுடா" பற்களை கடித்து அவள் எச்சரிக்க அடுத்த வீட்டிற்கு சென்றுவிட்டான் அவன்.
'முட்டாள் முட்டாள்' தன்னையே திட்டி வீட்டு வாயிலின் எதிரில் இருந்த படிகளில் அமர்ந்தாள்.
கலக்கத்தோடு அருகில் இருந்த கம்பியில் தலை சாய்த்து அமர்த்தவளது கண்கள் கண்ணீரை விடுவிக்க துவங்கிய நேரம் அவள் தட்ட எத்தனித்த கதவு திறக்கும் சத்தம் கேட்டு கண்களை துடைத்து துரிதமாக எழுந்து நின்றாள்.
திறக்க பட்ட கதவினுள்ளிருந்து வெளி வந்தவனை மேலும் கீழும் பார்த்தாள். ஷார்ட்ஸ் ஒன்று மட்டுமே அணிந்து நின்றான். மேல் உடலில் எதுவுமில்லை, அவனது மெல்லிய தங்க சங்கிலியை தவிர.
இப்பொழுது தான் எழுந்தது போல் முகம் துடைக்கும் சிறு துவாலை இடது கையிலிருக்க தாடையை துடைத்துக்கொண்டே பாலை எடுக்க, அந்த கூடையை பார்த்து, "கிறுக்கன் அரை லிட்டர் எவன் கேட்டானாம், அவங்கப்பனா காசு குடுப்பான்"
திட்டிக்கொண்டே திரும்பியவன் அங்கு படிகளுக்கு அருகே நின்றவளை பார்த்து ஒரு நொடி அசையாது நின்றான். அவன் பார்வை தன் மேல் தான் விழுந்தது என தெரிந்தவள் உள்ளுணர்வு அவனை முற்றிலும் தவிர்த்தது.
ஒரு சில நொடிகள் அவளை நின்று பார்த்தவன் எதுவும் நடவாதது போல் முகத்தை சர்வ சாதாரணமாக வைத்து வீட்டினுள் சென்று கதவை அடைக்க போனான்.
முகத்தை வேறு பக்கம் திருப்பி இருந்தவள் காதுகளில் கதவு அசையும் சத்தம் கேட்டு திரும்ப, பாதி மூடியிருந்தான் கதவினை. துரிதமாக செயலாற்றியவள் கதவினை மூட விடாமல் காலை உள்ளே விட்டு தடுக்க, அவன் அடைத்த வேகத்தில் காலில் கதவு சற்று பலமாகவே மோதிட நல்ல வேலையாக ஷூ அணிந்திருந்தாள்.
வெறும் காலோடோ, அல்லது செருப்பு அணிந்து இந்த முயற்சியை செய்திருந்தால் அவ்வளவு தான்.
நிர்மலமான முகத்தோடு திரும்பியவன் அவளை பார்த்து, 'என்ன?' என்றான் வார்த்தை கொடுக்காமல் ஒற்றை புருவத்தை மட்டும் தூக்கி.
ஆத்திரம் எல்லையில்லாமல் வந்தது. இவனிடம் இப்படி கையை பிசைந்து நிற்க வேண்டுமா என்ற ஆதங்கம் வேறு. அவனை பார்ப்பதையே தவிர்த்து கண்ணீரை மறைக்க வேறு பக்கம் திரும்பி நின்றாள்.
"கல்லு மாதிரி நின்னா உனக்கு அபிஷேகமா பண்ண முடியும்? என்னனு சொல்லி தொலை" எரிச்சலுற்றான் அவன்.
அவளோ மேலும் பேசாமல் தன்னை விரட்டும் முனைப்பிலே நிற்பவனை கண் சிமிட்டாது. பார்த்தாள்.
அவள் பேசப்போவதில்லை என தெரிந்து, "அதான் டிவோர்ஸ் பேப்பர் எல்லாம் சைன் பண்ணி குடுத்துட்டேன்ல இன்னும் என்ன வந்து நிக்கிற?" காலை நேரமாதலால் அவன் மெதுவாக பேசுவது கூட அவளுக்கு ஒலி பெருக்கியை வைத்து பேசுவது போல் அவமானமாக இருந்தது.
"உள்ள போய் பேசலாமா?" தன்மையாக கேட்டாள்.
"உள்ள போய் பேசலாம் ஒண்ணுமில்ல. ஏதாவது பொருள் வச்சிட்டு போய்ட்டனா சொல்லு எடுத்து தர்றேன்"
நறநறவென பற்களை கடித்தவள் சிறிதும் யோசிக்காமல் தன்னுடைய பையை எடுத்து அவனை தள்ளிவிட்டு வீட்டினுள் நுழைந்துவிட்டாள்.
அவளது செய்கையை எதிர்பாராதவன் அவள் கை பிடித்து நிறுத்தினான், "என்னடி யாரை கேட்டு உள்ள வந்த?"
"யாரை கேக்கணும் நான்?" அவனுக்கு நிகராக சண்டையிட்டு குரலை உயர்த்தினாள்.
"என்ன கேக்கணும். என்னோட வீடு இது. நான் வாடகை குடுத்து தங்குறேன். உன் இஷ்டத்துக்கு திறந்த வீட்டுக்குள்ள நாய் வந்த மாதிரி வர்ற?"
"நான் யார்கிட்டயும் அனுமதி கேட்டுட்டு நிக்க மாட்டேன். நான் இங்க தான் இருப்பேன். அட்லீஸ்ட் டிவோர்ஸ் கிடைக்கிற வர"
"என்னது டிவோர்ஸ் கிடைக்கிற வரையா? அதெல்லாம் முடியாது. உன் கூட மனுஷன் இருக்க முடியுமா? ஒழுங்கா வந்த வழியே ஓடிரு. இல்லனா நடக்குறதே வேற"
"என்னடா மிரட்டுறியா? என்னோட லாயர்க்கு போன் பண்ணுவேன்"
"ஏய் போட்டுக்கோடி. அந்த கூஜா வாயனுக்கு பயப்புடுற ஆள் நான் இல்ல"
"அவனுக்கு பயப்பிட மாட்ட, ஆனா போலீஸ்க்கு பயந்து தானே ராஜா ஆகணும்?" அவளது பேச்சை கேட்டு அமைதியாக இடையில் கை வைத்து முறைத்தான்.
"டிவோர்ஸ்க்கு தான் அப்ளை பண்ணிருக்கோம். இன்னும் கிடைக்கலைல? அது வர நான் இங்க இருப்பேன், இருக்கலாம். மீறி என்ன வெளிய விரட்ட பாத்த அடுத்த நிமிஷம் போலீஸ் நிக்கும் இங்க" தைரியமாக வார்த்தைகள் வந்தது இப்பொழுது அவளுக்கு.
இதழ் கடித்து கோவத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன் சிகையை ஏடாகூடமாக கோதிக்கொண்டு, "சரி" என கத்தினான். ஆசுவாச மூச்சு பெண்ணுக்கு.
"ஆனா சில கண்டிஷன்ஸ்" முட்டுக்கட்டை போட்டு திவ்யாவின் சந்தோசத்திற்கு தடை வைத்தான்.
"நான் இருக்குற நேரம் நீ ரூம் உள்ள வர கூடாது"
உதடு சுளித்து திருப்பிக்கொண்டாள் முகத்தை. 'இருக்குடி உனக்கு' மனதினுள் நினைத்தவன்,
"உன் வேலைய நீ பாத்துக்கோ, என் வேலைய நான் பாத்துக்குவேன். மாசம் ஐயாயிரம் வாடகை தரணும். கரண்ட் பில், மல்லிகை ஜாமான் எல்லாம் நான் பாத்துக்குறேன். நான் வச்சிருக்குற ஒரு பொருள் கூட இடம் மாற கூடாது.
என் வீடு இது. குப்பையாவே இருந்தாலும் எனக்கு அப்டியே தான் இருக்கனும். நான் டிவி பாக்க வர்ற நேரம் நான் மட்டும் தான் பாப்பேன். என்ன எதுக்கும் கேள்வி கேக்க கூடாது. வாரத்துல ஒரு நாள் நீ வீட துடைக்கணும், நான் ஒரு நாள் பாத்துக்குவேன்"
வரிசையாக அவன் அடுக்கிக்கொண்டே போக, "போதும். போதும்டா" நிறுத்தினாள் திவ்யா, "நான் ஒரு ஜெயில்ல மாதிரி இருக்கனும். அவ்ளோ தான... இருந்துக்குறேன்" என்றாள் முகத்தை சூளித்து.
"அவ்ளோ சிரமப்பட்டு யாரும் இங்க இருக்கணும்னு அவசியம் இல்ல. கெளம்பிட்டே இரு" அறையை நோக்கி நடந்தவன், "மூணு மாசம் நிம்மதியா இருந்தேன். பொறுக்கல சனியனுக்கு" எரிச்சலோடு புலம்பிக்கொண்டே 'படார்' என்ற சத்தத்தோடு கதவை வேகமாக அறைந்து சாத்தியிருந்தான்.
அவன் செல்லும் வரை மூச்சே விட முடியாமல் இருந்தவளுக்கு அவன் சென்ற பிறகு தான் நிம்மதியே பிறந்தது. என்றோ தொலைத்த இன்பத்தின் நிலையை நிகழ்வில் தேடி ஏமாறுவது மனிதனுக்கு புதிதா என்ன?
ஓய்ந்து போனது மனம். இந்த நிலையில் ஒரு நாளும் தன்னை வைத்து நினைத்ததில்லை இருவருமே.
கோவத்தை மூக்கின் நுனியில் வைத்து சென்றவன் தான் ரகு என்கிற ரகுநந்தன்.
அவனுக்கு சரிக்கு சரியாக நின்று பஞ்சாய் வெடித்தவள் தான் திவ்யா, திவ்யதர்ஷினி.
இன்று ஒருவர் முகத்தை ஒருவர் விருப்பமே இல்லாமல் பார்த்து நெருப்பை கக்கிக்கொண்டிருக்கும் நிலைக்கு முற்றிலும் மாறாக இருந்தது சில மாதங்களுக்கு முன்பு.
நீ இன்றி நான் ஏது என்ற நிலையில் இருந்த உறவு இன்று அருகில் நிற்க கூட வெறுத்து போனது. ஆறு வருடங்களுக்கு முன்பு முதலாம் ஆண்டு கல்லூரியில் அடி எடுத்து வைத்த திவ்யாவுக்கு தோழிகளின் மூலம் இறுதியாண்டு படிக்கும் ரகு அறிமுகமானான்.
மாநிற தேகம், வாட்டசாட்டமான உடலுக்கு அவனது ஐந்தடி பதினோர் அங்குல உயரம் பொருத்தமாய் இருந்தது. வசீகரிக்கும் இளமுறுவல், கத்தி போல் கூரிய விழிகள் என முதல் பார்வையிலே ரகு திவ்யாவை தன் பக்கம் ஈர்த்துவிட்டான்.
அதிலும் அடிக்கடி அடிதடி என வரும் கல்லூரியில் முதல் ஆளாய் சட்டையை மடித்து சண்டைக்கு செல்பவன் மேல் அவளையும் மீறிய ஆசை வர, அவனிடம் அதை செல்ல எத்தனித்த நேரம், அவளை முந்தி அவள் மேல் உள்ள விருப்பத்தை கூறினான் ரகு.
அதோடு காதல் வாழ்க்கையும் கல்லூரி வாழ்க்கையும் அழகாக பறக்க, ரகு அந்த வருடம் தன்னுடைய படிப்பை முடித்து பணி தேடும் முயற்சியில் இரண்டு வருடத்தை போக்கியிருக்க அடுத்த வருடமே அவன் துறையை சேர்ந்த ஒரு சிறிய வேலையில் சேர்ந்திருந்தான்.
அதற்கடுத்த வருடம் திவ்யா தன்னுடைய படிப்பை முடித்து வீட்டிற்கு வர, வரன் பார்க்கும் படலத்தில் இருந்த வீட்டினரிடம் ரகுவின் ஆலோசனை கேட்டு தங்களது காதலை கூறினாள்.
செல்வாக்கு அதிகம் படைத்திருந்த ப்ரியதர்ஷினியின் வீட்டினர் இதை ஒப்புக்கொள்ளாமல் மாப்பிள்ளை வேட்டையில் தீவிரமாக ஈடுபட துவங்கினர்.
அதே சமயம் ரகுவும் தன்னுடைய வீட்டினரிடம் காதலை கூற, அந்த பெண்ணை தான் திருமணம் செய்வேன் என பிடிவாதம் செய்தால் தங்களை மறந்து விடுமாறு கூறிவிட்டனர் அவன் பெற்றோர்.
இருவரும் போராடி பார்த்தனர் ஒரு வருடம். எந்த முன்னேற்றமும் இரு வீட்டினரிடமும் இல்லாமல் போக, திவ்யா வீட்டினரிடம் சண்டையிட்டு வெளியேறியிருந்தாள்.
கலங்கி வந்து நிற்பவளை தோள் சாய்த்தவன் அவளை தோழி ஒருத்தியின் வீட்டில் இரண்டு நாட்கள் தங்க வைத்து மூன்றாம் நாள் முருகன் கோவில் ஒன்றில் அவளை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்டான்.
திருமணம் முடித்த கையேடு மனைவியை ஒரு படுக்கை அறை மட்டுமே உள்ள இப்பொழுது இருக்கும் அபார்ட்மெண்டிற்கு அழைத்து வந்தான். காதல் தம்பதியினருக்கு ஆரம்ப காலத்தில் மாம்பழமாய் இனித்த காதல் நாள்வாக்கில் சிறு சிறுக புளிக்க துவங்கியது.
காதலித்த பொழுது இருந்த காதல் பிணைப்பு, திருமணத்திற்கு பிறகு மெல்ல மெல்ல தேய்ந்து போனது. சிறுக சிறுக துவங்கிய ஊடல், பூதாகரமாக மாறி தீர்க்கவே முடியாத இடத்திற்கு சென்று மூன்று மாதங்களுக்கு முன்பு மனம் ஒத்து விவாகரத்து செய்து விடலாம் என்னும் நிலைக்கு வந்து நின்றது.
இருவருக்குமே அந்த முடிவு அமைதியை தர, அவன் வாடகை கொடுத்து இருக்கும் வீட்டில் இருக்க பிடிக்காமல் தானே அடுத்த நாளே பெட்டியை கட்டிக்கொண்டு தோழி இருந்த விடுதிக்கு இடம் பெயர்ந்தாள் திவ்யா.
அவளை தடுக்கவும் இல்லை, அல்லது எங்கே செல்கிறாள் என்றும் ரகு கேட்கவில்லை.
அவனுக்கும் அந்த இடைவேளை, தனிமை எல்லாம் தேவைப்பட்டது போல் விலகிவிட்டான். அத்தனை பெரிய இடைவேளை இருவருக்குள்ளும் உருவாகியிருந்தது.
அறைக்குள் சென்று அடங்கிய ரகுவை முறைத்தவள் ஆசுவாசமாக அப்படியே சோபாவில் அமர நறுக்கென ஏதோ குத்தியது.
'ஆ' மெல்ல கத்திக்கொண்டு எழுந்தவள் திரும்பி பார்க்க ஏதோ எலக்ட்ரானிக் மதர் போர்ட் ஒன்று கிடந்தது. வந்த எரிச்சலில் அதை எடுத்து அவனது அறை கதவின் மேல் அடித்து உடைக்கும் ஆவேசம்.
கையில் எடுத்து அறையை குறிபார்த்தே விட்டாள். ஆனால் அதன் பிறகே இதற்கும் பணம் கேட்பான் என தோன்ற அதை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு அமர்ந்தாள் தலையை கைகளில் புதைத்து.
தலை அதிகம் கனத்தது. காரணம் என்னவென பிரித்தறிய முடியவில்லை. அப்படியே படுக்கவும் முடியவில்லை. உடல் சாதாரணமாக இருக்க மனம் அசதியாக இருந்தது.
அறையை விட்டு வெளியில் வந்த ரகு அவளை பார்த்தும் கண்டுகொள்ளாமல் காலை காபியை தயார் செய்ய துவங்கினான்.
ரகுவுக்கு தெரிந்த ஒரே சமையல் காபி மட்டும் தான்.
திவ்யாவுக்கு அதுவும் சரியாக வராது. ஏனோ தானோ என தான் அவள் சமையல் இருக்கும். அதனாலே ஒரு காபியையாவது ருசியோடு பருக எண்ணி காலை மாலை ரகு கையால் தான் காபி.
அதுவும் காலப்போக்கில் இருவரும் தனி தனியாக தயாரித்துக்கொண்டனர். இன்று பாலை அடுப்பில் வைத்து ஒரு பக்கம் டிகாசனுக்கு தேவையான சுடுநீரை ஊற்றி பில்டரில் வைத்து ஓரம் வைத்தான்.
அந்த மனமே வீடு எங்கும் நிரம்பி மிதக்க தலை வலிக்கு இதமாக அதையாவது பருகலாம் என எழுந்து சமயலரை சென்ற திவ்யாவை ஓரப்பார்வை பார்த்து தனக்காக மட்டும் காபியை கோப்பையில் ஊற்றிக்கொண்டான்.
அவனை எதிர் பாராமல் பால் பாத்திரத்தை அவள் தொட போக, "காசு எங்க?" என்றான் ரகு.
புரியாமல் விழித்தவள், "இதுக்கெல்லாம் காசு வாங்க மாட்டேன்னு சொன்ன?" எதிர் கேள்வி கேட்டாள்.
சட்டமாய் திட்டில் அமர்ந்தவன், "ஆனா வீட்டுக்கு வாடகை கேட்டேனே" என்றான் திமிராக.
"ஒ... ஒடனே தரணுமா?" தயங்கினாள்.
"ஒடனே தந்தா ஒடனே பால் குடிக்கலாம். இல்லனா காசு குடுக்குறப்போ பால் குடிச்சுக்கலாம். என்ன அவசரம்?" மனசாட்சியே இல்லாமல் பேசியவனிடம் எதுவும் பேசாமல் வெளியேறியவள் தலையில் ஆணி அடித்தது போல் மேலும் வலியை கொடுத்தது அவனது வார்த்தைகள்.
சென்ற வேகத்திலே திரும்பி வந்து, அவனை பார்த்து தயங்கி நின்றாள்.
திவ்யாவை பார்த்தவன் அவள் ஏதோ சொல்ல வருவது புரிந்து நிற்க, "என்... என்கிட்ட கா... காசு இல்ல. அப்றம் தரவா?" பேச பேச தொண்டை அடைத்தது பெண்ணுக்கு.
தலையை நிமிர்த்தி கூட அவன் முகம் பார்க்க சங்கடப்பட்டாள்.
அவளை உன்னிப்பாக பார்த்தவன், "ஏன் உன் அப்பன்கிட்ட காசு கேக்கலாம்ல?" அவனது வாக்கியம் அவளை ஆத்திரப்படுத்தியது.
"நானே உனக்கு யாரோவா மாறிட்டேன். இன்னும் என்னடா என் அப்பாவை இழுக்குற? அவரை பத்தி பேச கூட உனக்கு தகுதியில்லை. வாய மூடிட்டு அமைதியா இரு"
அவளுக்கு முன்பு கிடந்த கத்தியை எடுத்து அவனை பார்த்து நீட்டினாள், "இல்லனு வை சொருகிடுவேன்" அவளது மிரட்டலில் சிறிதும் அசரவில்லை அவன்.
அதே கோவத்தோடு பாலை எடுத்து டிகாஷன் உள்ளதா என பார்க்க ஒரு துளி கூட இல்லை. சரி வெறும் பாலையாவது குடிக்கலாம் என பாலில் சர்க்கரை மட்டும் போட்டு ஒரு டம்ளரில் ஊற்றிக்கொள்ள, "இது தான் சாக்குன்னு நைசா பால திடுற பாரேன். திருடி"
"அப்டி தான் டா எடுப்பேன். உன்னால ஆனத பாத்துக்கோடா"
"ராணுவத்துல அழிஞ்சவன விட, ஆணவத்துல அழிஞ்சவன் தான்டி அதிகம்"
"ஒரு விசியம் கூட சொந்தமா பண்ண முடியாத நீ இதெல்லாம் பேசவே தகுதியிலாதவன், கரிச்சட்டி தலையா"
"ஹே ஹே... யாரைடி கரிச்சட்டி சொல்ற? உன் அப்பன் என்ன நிலா கலரா? இந்த கலர பாத்து கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு-னு ஸ்டேட்டஸ் போட்ட காலமெல்லாம் மறந்து போச்சா"
அவனை உதாசீனப்படுத்தி, "அந்த கருமம் புடிச்ச நாளை எல்லாம் நியாபக படுத்தி தலை வலிய கூட்டாத"
வரவேற்ப்பறைக்கு அவள் செல்ல அவள் பின்னே வந்தவன், "அத தான் நானும் நினைச்சேன், ஆனா பாரு கேவலமான விதி இங்க வந்து மறுபடியும் உன்ன நிறுத்திருக்கு"
"ரொம்ப அழுத்துக்காதடா. டிவோர்ஸ் கிடைக்கிற வர தான். அதுக்கு முன்னாடியே வேலை கிடைச்சிட்டா போய்டுவேன்"
"கிழிப்ப" அவளை கேலி செய்தே சோபாவில் வந்தமர்ந்தவன் இடம் மாறியிருந்த மதர் போர்டை பார்த்து,
"ஆமா இது என்ன இங்க இருக்கு?"
"சோபால வச்சிருந்த. மாத்தி வச்சேன்" என்றாள் பொறுமையாக.
"அது இருந்த இடத்துலயே இருக்கனும். இப்பையே" பிடிவாதம் பிடித்தான்.
அவன் தன்னை சீண்டவே வேண்டும் என்றே பேசுவது புரிந்தவள், "அது வச்சா சோபாவையே அடைச்சுக்குது ரகு"
"அப்போ ஐயாயிரம் குடு" என்றான் திமிராக.
"ச்சீ மனசாட்சி இல்லாம இருக்காத ரகு. காசு இல்லனு தான் இங்க வந்ததே. அதுக்காக நாய நடத்துற மாதிரி பண்ற?" எதற்காக அவன் அவளோடு வாதாடினானோ அந்த மதர் போர்டை கீழே எரிய போக, சுதாரித்த ரகு அவள் கையை பிடித்து தடுத்துவிட்டான்.
விழிகள் பெரிதாக விரிந்திருக்க, "இதோட விலை என்னனு தெரியுமாடி? ஒரு மாசம் நான் ராப்பகலா முழிச்சு கஷ்டப்பட்டு சம்பாதிச்சு வாங்குனேன். ஒரே நிமிசத்துல ஒலை வைக்கிற"
"தொட்டதெல்லாம் நொட்டை சொட்டை-னு குறை சொல்லாம நீ இருந்தா இந்த மாதிரி எதுவும் நான் பண்ண மாட்டேன்" என்றாள் திவ்யா.
"உள்ள வர என்னமா அமைதியா பேசி நடிச்ச, இப்ப எங்க போனா அந்த அப்பாவி திவ்யதர்ஷினி?"
"உங்கிட்ட எல்லாம் நல்லவளா இருந்தா தலைல மிளகாய் அரைச்சிட மாட்ட நீ? மறுபடியும் சொல்றேன். நீயும் நானும் வேற வேற பாதைல போகுற வர, நான் உன் பொறுப்பு தான். ஏதாவது என்ன டார்ச்சர் பண்ண... போலீஸ்கு நேரா போய்டுவேன்"
"இருக்குறத அது அது இடத்துல வை-னு சொல்றது உனக்கு டார்ச்சரா?"
"அது மட்டுமா சொன்ன நீ? காசு கேக்குற இங்க தங்க. உன் பேச்சு கேட்டு என் மொத்த குடும்பத்தையும் விட்டு வந்த எனக்கு இதுவும் தேவ, இதுக்கும் மேலையும் தேவை தான்" தலையில் அடித்து திரும்பி அமர்ந்துவிட்டாள்.
ரகு எதுவும் பேசவில்லை. வார்த்தை வளர்ந்தால் வார இறுதி நாளானது நிம்மதியை கொடுக்காது என தெரிந்து அமைதியாகிவிட்டான். அதோடு இந்த பேச்சை பல முறை பேசி சண்டை வந்து விரிசல் அதிகம் விழுந்தது தான் மிச்சம்.
இனியும் அதனை பற்றி பேசி வீணாக சண்டையை ஏன் வளர்ப்பானேன்? டிவி ரிமோட் எடுத்தவன் எழுந்து சென்று ஸ்பீக்கர் அத்தனையையும் உயிர்ப்பித்து தன்னுடைய கைபேசியோடு அதனை இணைத்துக்கொண்டான்.
🎵துன்பம் தொலைந்தது இன்பம் தொலைந்தது
துன்பம் தொலைந்தது இன்பம் தொலைந்தது
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்;
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்🎵
ஒலிப்பெட்டி தன்னுடைய உச்சபட்ச குரலில் அவ்வீட்டையே அதிர வைத்தது. திவ்யாவுக்கு புரிந்தது எதற்காக இந்த பட்டை போட்டான் என.
அவளை நேரடியாக கேலி செய்யாமல் மறைமுகமாக பாட்டை வைத்து சீண்டினான். அமைதியாக தலையை பிடித்து கண் மூடி சோபாவில் சாய்ந்தாள். உறக்கம் வரவில்லை பாட்டின் சத்தத்தில்.
🎵 ஏ பெண்ணே! காதல் என்பது இனிக்கும் விருந்து
கல்யாணம் என்பது வேப்பங் கொழுந்து ஏன் கண்ணே?
நிறையை மட்டுமே காதல் பார்க்கும்
குறையை மட்டுமே கல்யாணம் பார்க்கும் ஏன் கண்ணா?🎵
"ரகு சவுண்ட் கம்மி பண்ணு ரகு" கேட்டாள் அமைதியாக.
அவன் அசையவே இல்லை. மாறாக இதற்கும் மேல் ஒலியை அதிகரிக்க ஏதேனும் வழி உள்ளதா என தீவிரமாக ஆராய்ந்தான்.
🎵 கிளிமூக்கின் நுனிமூக்கில் கோபங்கள் அழகென்று
ரசிக்கும் ரசிக்கும் காதல்
கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக
ஏன் ஏன் ஏன் மோதல்?
பெண்கள் இல்லாமல் ஆண்களுக் காறுதல் கிடைக்காது
பெண்களே உலகில் இல்லையென்றால்
ஆறுதலே தேவை இருக்காது 🎵
"ரகு..." கண் திறந்து அவனை அழைத்தாள், மிதப்பாக முடியாது என்றான்.
"ஆப் பண்ண சொல்லல, சவுண்ட் தானே கம்மி பண்ண சொன்னேன்? தலை வலிக்கிதுடா" மெல்லிய குரலில் பேசினாள்.
அசரவில்லை அவன்.
"உள்ள போய் படு" என்றான் மனதை மாற்றாமல். அவளுக்கோ உள்ளே செல்ல தயக்கமாக இருந்தது. திருமணம் ஆகி ஒன்றாக பல இரவுகள் கழித்த அந்த அறையினுள் சகஜமாக சென்று உறங்க மனம் வரவில்லை.
அதிலும் அவன் வீட்டிலே இருந்த சமயம் வேறு. அவள் எழுந்து செல்லாமல் மீண்டும் கண்ணை மூடியதை திரும்பி பார்த்தவன் பாலை எடுத்து வந்து அப்படியே வைத்திருப்பதை பார்த்து, "சர்தான் போடி" என்றான்.
அவளுக்கு வெறும் பாலை குடிப்பது என்றுமே பிடிக்காது. இன்று தலை வலியோடு எப்படியாவது குடித்துவிடலாம் என எண்ணி தான் எடுத்து வந்தாள். ஆனால் குமட்டிக்கொண்டு வர அப்படியே வைத்துவிட்டாள்.
நேரம் செல்ல செல்ல பசி ரகுவின் வயிற்றை கிள்ளியது. அசைவம் சமைக்கும் ஆசை பிறக்க வெளியே சென்று அசைவம் எடுத்த கையேடு காலை உணவையும் வெளியிலே தனக்காக வாங்கி வந்தான்.
நகரின் மத்தியில் அமையப்பெற்ற அந்த அடுக்குமாடி கட்டிடத்திற்கு அருகில் பலவகையான உணவகம் எந்நேரமும் இருக்க, ரகுவுக்கு வசதியாக போனது.
காலை உணவிற்கும் அசைவ குழம்பு இடியப்பம், இட்லி என வாங்கி வந்துவிட்டான். எப்பொழுதும் சமயலறையில் இருந்து உண்ணும் பழக்கம், மாறி அவளை வெறுப்பேற்றவே சோபாவிற்கு கீழ் அமர்ந்து கடையை விரித்து வைத்தான்.
வாசனை வர கண்களை மூடியிருந்த திவ்யா மெல்ல கண்களை திறந்து பார்க்க, அவன் விரித்து வைத்திருந்த உணவு பதார்த்தங்கள் பசியை தூண்டிவிட வயிறு வித்யாசமாக ஒலி எழுப்ப துவங்கியது.
அமைதியான அந்த அறையில் அந்த சத்தம் அவன் காதில் கேட்க கேலியாக தலையை குனிந்தவாறே வாயை மூடி சிரித்தான். சிரித்தவன் தலை தனக்கு அருகில் இருக்க அவன் பின்னந்தலையை தட்டி மீண்டும் கண்களை மூடினாள்.
எப்படியும் வாய் விட்டு கேட்டால் கூட ஒரு இட்லி கூட தர மாட்டான். காரணம் இது போல் பல முறை அவனை வைத்து திவ்யா ரக ரகமாக உணவு உண்டது உண்டு. பழி வாங்கவே செய்வான் என தெரிந்து அமைதியாக இருந்தாள்.
அவனோ உணவினை பல மொழிகளில் பாராட்டி அவளது பசியை தூண்டிவிட, சமையலறை சென்றாள்.
மெல்லிய சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது சமையலறையிலிருந்து. பாத்திரத்தை உருட்டுவதற்கே அரை மணி நேரம் தேவைப்படும் பெண்ணுக்கு. அதே போல் இன்றும் காலை உணவை மதியம் செய்து முடித்துவிடுவாள் என்று எண்ணியிருக்க தடாலென சத்தம். பாத்திரங்கள் உடைவது போல்.
"ஹே பாத்துடி. ஏதாவது ஒடைஞ்சா உங்கப்பனா வந்து காசு குடுப்பான்?" காது கிழியும் வரை வாக்குவாதம் கேட்க வேண்டி வரும் என எண்ணியிருந்தவனை ஏமாற்றியிருந்தாள் திவ்யா.
ஐந்து நிமிடங்களாகியும் எந்த சத்தமும் வரவில்லை. உணவையே ரகு உண்டு எழுந்து கை கழுவ சமையலறை சென்ற பொழுது தரையில் கிடந்தவளை பார்த்த ரகு அப்படியே நின்றுவிட்டான்.
அவள் மயங்கி சரிந்திருக்கிறாள் என்பதை உணரவே ரகுவுக்கு சில நொடிகள் தேவைப்பட்டது.
சட்டென சுதாரித்தவன் கையை கழுவிக்கொண்டு அவளை பயத்தோடு பார்த்தான், "திவ்யா... சாப்பாடு வேணும்னா சொல்... சொல்லுடி. இப்டி நடிக்காத சரியா?" மனதில் தோன்றிய பயம் கிறுக்குத் தனமாக பேச வைத்தது ரகுவை.
கையை கழுவி அப்படியே ஒரு கை நிறைய தண்ணீரை குழாயில் பிடித்து அவள் முகத்தில் தெளிக்க விழிக்கவில்லை அவள்.
மீண்டும் அங்கிருந்த ஒரு பாத்திரம் முழுதும் தண்ணீர் பிடித்து பதட்டத்தில் மொத்தத்தையும் அவள் முகத்தில் தெளிக்க அதிர்ந்து மூச்சுவிட சிரமப்பட்டு எழுந்து அமர்ந்தாள். திவ்யா எழுந்து அமரவும் அப்படியே சுவற்றில் சாய்ந்து அவளை விசனமில்லாமல் கண் கூட சிமிட்ட மறந்து பார்த்தான்.
Hero - Raghu
Heroine - Divya
Mmmm... plot pudichirukaa?
Expect emotions, happiness, sadness, anger, and fear with a little bit different plot...
சுமாரா இருந்தா அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க... கரெக்ஷன்ஸ் இருந்தா சொல்லுங்க ப்பா மாத்திக்கிறேன்
Epdi iruku update? Comments please
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro