6 முடிவு
6 முடிவு
சிவசங்கரின் உயிரற்ற உடலை பார்த்தபடி அமர்ந்திருந்த தாமரையை பார்த்து வேதனை அடைந்த பாட்டி, அவரது இறுதி சடங்குக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவர் எதற்காக திண்டிவனம் வந்திருக்கிறார் என்று அவருக்கு புரியவில்லை. அந்த சாமியார் சொன்னார் என்பதற்காக தான் அவர் திண்டிவனம் வந்தார். இங்கு அவர் எதிர்பாராத விதமாய் என்னென்னவோ நிகழ்கிறது. எது எப்படி இருந்தாலும் சிவசங்கர் ஓர் அற்புதமான மனிதர். அவருடைய இறுதி சடங்கை செய்ய வேண்டியது அவரது பொறுப்பு என்று எண்ணினார் பாட்டி. கிராம மக்களுடன் இணைந்து அவரது இறுதி சடங்கை செய்து முடித்தார்.
பாட்டி விசித்திரமான ஒரு விஷயத்தை கவனித்தார். அவர் எதிர்பார்த்தது போல், தாமரை கதறி அழவில்லை. அவளது கண்கள் கலங்கி இருந்தது. ஓரிரு கண்ணீர் துளிகள் அவள் கண்ணில் இருந்து உருண்ட ஓடின. அவ்வளவே. அது பாட்டிக்கு திகைப்பை தந்தது.
அனைவரும் சென்ற பிறகு அவளுடன் பாட்டி மட்டுமே இருந்தார்.
"உன் மனசை தைரியப் படுத்திக்கோ மா. இது ஈடு செய்ய முடியாத இழப்புன்னு எனக்கு தெரியும்..."
"நான் நல்லா இருக்கேன், பாட்டி. நீங்க சொன்னது சரி. இது ஈடு செய்ய முடியாத இழப்பு தான். ஆனா என் தாத்தாவோட மரணத்தை நினைச்சி நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்"
"சந்தோஷப்படுறியா?"
"ஆமாம். அவருக்கு அவர் கேட்டது கிடைச்சிருக்கு. அவர் தனக்குன்னு எதையுமே விரும்பி கேட்டதில்ல. இது ஒன்னை தவிர. இது மட்டும் தான் அவருடைய ஒரே ஆசை. அவருடைய ஆசை இன்னைக்கு பலிச்சிடுச்சு. அம்மனோட பாதத்துல, அவர் சொர்க்கத்துல இருப்பார். அதுவே எனக்கு போதும். " என்று கூறியது பாட்டிக்கு ஆச்சரியத்தை அளித்தது. எப்படி இந்த சிறிய வயதில் அவளால் இவ்வளவு சமநிலையோடு இருக்க முடிகிறது? இந்தப் பெண்ணுக்கு எவ்வளவு அனுபவ அறிவு இருக்கிறது...!
"உன்னை பத்தி நீ யோசிச்சி பார்த்தியா? உங்க தாத்தா இல்லாம நீ என்ன செய்யப் போற?"
"என் கதையை கடவுள் பார்த்துக்குவார். என்ன நடக்கணுமோ விதிப்படி எல்லாம் நடக்கும். அது மாதிரி தான் என் வாழ்க்கையும். அழறதால எதுவும் மாறிடாது"
பிரமிப்போடு நம்ப முடியாமல் அவளை பார்த்தார் பாட்டி. தன்னை கடவுள் பார்த்துக் கொள்வார் என்று தான் சிவசங்கரும் கூறினார். அவருடைய பேத்தியும் அதையே கூறுகிறாள். கடவுளின் விருப்பப்படி தான், அவரும் திண்டிவனம் வந்திருக்கிறார் என்று எண்ணிய பாட்டியின் மனதில் ஒரு எண்ணம் உதித்தது.
"நீ என் கூட சென்னைக்கு வந்துடுறியா? நீ என் வீட்ல என் கூட இருக்கலாம்" என்றார்.
அவரை திகைப்போடு ஏறிட்டாள் தாமரை.
"என் குடும்பம் ரொம்ப பெருசு. ஆனாலும் எனக்கு யாருமே இல்லாத மாதிரி தான் இருக்கு. நீ என் கூட வந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். "
தாமரைக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை. சென்னைக்கு செல்வதா? தெய்வானையின் குடும்பத்தை பற்றி அவளது தாத்தா கூற அவள் பலமுறை கேட்டிருக்கிறாள். அதை தவிர்த்து அவளுக்கு அவர்களைப் பற்றி ஒன்றும் தெரியாது. சென்னைக்கு சென்று அவள் என்ன செய்யப் போகிறாள்? அவளுக்கு குழப்பமாய் இருந்தது.
"அவசரம் ஒன்னும் இல்ல. நீ யோசிச்சு எனக்கு பதில் சொல்லு."
மாலை
பாட்டிக்கு சூர்யாவிடம் இருந்து அழைப்பு வந்தது அந்த அழைப்பை ஏற்ற பாட்டி,
"சொல்லு, சூர்யா." என்றார்.
"எப்படி இருக்கீங்க, பாட்டி? எப்ப சென்னைக்கு வர போறீங்க?"
"நான் சென்னைக்கு வர ஒரு வாரம் பத்து நாள் ஆகும்."
"ஏன் பாட்டி?"
"நம்ம கோவில் காரியதரிசி ஒருத்தர் இருந்தார் இல்ல, சிவசங்கர்னு?"
"ஆமாம், ஞாபகம் இருக்கு"
"அவர் நேத்து ராத்திரி இறந்துட்டாரு"
"ஓ..."
"அவருடைய பேத்திக்கு யாரும் இல்ல. அவளை தனியா விட்டுட்டு வர மனசு வரல."
"எப்படி இருந்தாலும், ஒரு வாரம் கழிச்சு அவளை விட்டுட்டு தானே வரணும்?"
"நான் அவளை சென்னைக்கு கூட்டிகிட்டு வரலாம்னு இருக்கேன்."
"உங்க கூட வர அவ ரெடியா இருக்காளா?"
"அவ இன்னும் எதுவும் சொல்லல"
"சரி, உங்க விருப்பம். என்ன செய்யணுமோ செய்ங்க"
"அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிகிட்டு வர்றதுல உனக்கு எந்த பிரச்சனையும் இல்லயே?"
"பாட்டி இது உங்க வீடு. உங்களுக்கு சந்தோஷத்தையும் திருப்தியையும் தர்ற எந்த முடிவையும் நீங்க எடுக்கலாம். ஏதாவது வேணும்னா எனக்கு ஃபோன் பண்ணுங்க."
"சரி..."
அழைப்பை துண்டித்த சூர்யா, அமரனுக்கு ஃபோன் செய்தான். அந்த அழைப்பை ஏற்ற அமரன்,
"சொல்லு சூர்யா." என்றான்.
"நம்ம வீட்டு பக்கத்துல, ஏதாவது நல்ல ஸ்கூல் இருக்கா?"
"ஸ்கூலா? திடீர்னு எது உன்னை ஸ்கூலைப் பத்தி யோசிக்க வச்சது?'
"பாட்டி திண்டிவனம் கிளம்பி போனாங்க. எங்க கோவில் காரியதரிசி நேத்து இறந்துட்டாராம். அவரோட பேத்திக்கு யாரும் இல்லன்னு பாட்டி அவளை இங்க கூட்டிகிட்டு வர முடிவு பண்ணி இருக்காங்க."
"ஓஹோ, அந்த பொண்ணுக்காக தான் நீ ஸ்கூலை பத்தி விசாரிக்கிறியா?"
"ஆமாம். அவளும் ஸ்கூலுக்கு போகணும் தானே?"
"ஆமாம், சரி, அவ என்ன கிளாஸ் படிக்கிறா?"
அதைக் கேட்டு திகைத்த சூரியா,
"எனக்கு தெரியலையே" என்றான்.
"முதல்ல அவ இங்க வரட்டும். இப்ப தான் அவங்க தாத்தா இறந்திருக்காரு. அவளுக்கு தன்னை சமாளிக்க கொஞ்சம் டைம் வேணும்."
"அவ ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சா, தன்னை சமாளிச்சுக்குவா." என்றான் சூர்யா.
"நீ சொல்றதும் சரி தான்"
"அவ எப்ப வரா?"
"பத்து நாள் ஆகும்"
"அதுக்குள்ள நான் ஸ்கூலை பத்தி விசாரிச்சு வைக்கிறேன்."
"சரி" என்று அழைப்பை துண்டித்தான் சூர்யா.
தன் தாத்தாவை இழந்த சின்ன பெண்ணிற்காக அவன் வருத்தப்பட்டான். ஆம், தன் வீட்டிற்கு வர இருக்கும் பெண் சிறுமியாகத்தான் இருப்பாள் என்று எண்ணினான். ஏனென்றால், பாட்டி ஒரு வயது பெண்ணை தன் வீட்டிற்கு அழைத்து வருவார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
திண்டிவனம்
பண்டிதர் தன் மனைவியோடு தாமரையின் வீட்டிற்கு வந்தார். அவர் மனைவி சீதா தாமரையை பார்க்க வீட்டினுள் சென்றாள்.
"வணக்கம்." என்றார் பாட்டி.
"வணக்கம் மா... இந்த கிராமமே உங்களைப் பத்தி தான் பேசிக்கிட்டு இருக்கு." என்றார்.
பாட்டி மென்மையாய் புன்னகைத்தார்.
"அம்மா, எனக்கு ஒரு யோசனை தோணுது"
"சொல்லுங்க."
"நான் சொன்ன பூஜையை செய்ய, நீங்க தாமரையை ஏன் உங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு போகக்கூடாது? நீங்க அவளுக்கு எவ்வளவோ உதவி செய்றீங்க, உங்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு அவளுக்கும் இருக்கு."
"இல்ல பண்டிதரே. நான் எதையும் எதிர்பார்த்து இதையெல்லாம் செய்யல. அப்படி எதிர்பார்க்கிறது நல்லதும் இல்ல. உண்மையை சொல்லப்போனா, நான் ஏற்கனவே அவளை என் கூட சென்னைக்கு வர சொல்லி கூப்பிட்டேன். ஆனா பூஜை செய்யறதுக்காக இல்ல. அந்த பெண்ணை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால கூப்பிட்டேன். அவளோட தாத்தா ரொம்ப நல்ல மனுஷன். அவங்க கடவுளை நம்புறவங்க. அவங்க நம்பிக்கை காப்பாற்றப்படணும். இது தான் கடவுளோட விருப்பம்னு நான் நினைக்கிறேன்."
"உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு மா. நிச்சயம் தாமரை உங்களுக்காக அந்த பூஜையை செய்வா. "
"இல்ல பண்டிதரே. அவ தாத்தாவை இப்ப தான் இழந்திருக்கா. அவளை எதையும் செய்ய சொல்றது நல்லதில்ல. அவ இன்னும் என் கூட வர ஒத்துக்கல. அவர் வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கணும்னு தான் நான் நினைக்கிறேன். இதுல ஒரு சின்ன சுயநலமும் இருக்கு. நான் செய்ற நல்ல காரியம், என் பேரனை ஆபத்திலிருந்து காப்பாத்துமான்னு ஒரு எதிர்பார்ப்பு தான்... "
அவர் சொல்வது சரி என்பது போல் தலையசைத்தார் பண்டிதர். உள்ளே சென்ற அவர், பாட்டியிடம் கூறிய அதையே தாமரை சீதாவிடம் கூறிக் கொண்டிருப்பதை கேட்டார்.
"நீ சொல்றது சரி, தாமரை. கடவுளோட எல்லா செயலுக்கும் ஒரு காரணம் இருக்கு. உன் நம்பிக்கையை கைவிடாதே."
சரி என்று தலையசைத்தாள் தாமரை.
"தெய்வானை அம்மா உன்னை அவங்க கூட சென்னைக்கு வர சொல்லி கூப்பிட்டாங்கலாமே...!"
"ம்ம்..."
"நீ அதைப் பத்தி என்ன நினைக்கிற?"
"எனக்கு தெரியல அண்ணா. என்னால எந்த முடிவுக்கும் வர முடியல."
"நீ அவங்க கூட போறது நல்லதுன்னு எனக்கு தோணுது"
தாமரையும் சீதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"நீ இந்த கிராமத்துல தனியா இருந்து எதுவும் செய்யப் போறது இல்ல. நீ அவங்க கூட போனா, உன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும். அவங்களுடைய குடும்பத்துக்கு நீ வேணும்."
புரியாமல் முகம் சுருக்கினாள் தாமரை.
"அவங்க கூட போய், அவங்களுக்கு உதவி பண்ணு, தாமரை."
"அவங்களுக்கு நான் என்ன செய்ய முடியும்?"
"நீ அவங்க கூட போனா, உனக்கே நீ செய்ய வேண்டியது என்னன்னு புரியும்."
தாமரை யோசனையில் ஆழ்ந்தாள்.
"தாமரை நீ என் சகோதரி மாதிரி. நான் உன்னோட நல்லதுக்கு தான் எதையும் சொல்லுவேன்."
"எனக்கு தெரியும் அண்ணா. ஆனா, சென்னையும் அவங்க குடும்பமும் எனக்கு ரொம்ப அன்னியம்..."
இந்த முறை சீதா முன்வந்து பேசினாள்.
"உனக்கு அது பழகிடும், தாமரை. எப்படி இருந்தாலும் ஒரு நாள் கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ ஒரு அந்நியமான வீட்டுக்கு போய் தானே ஆகணும்? அப்போ நீ என்ன செய்வ? இதையும் அப்படியே நினைச்சுக்கோ."
"ஆமாம், தாமரை. கொஞ்சம் யோசிச்சு பாரு. இத்தனை வருஷத்துக்கு பிறகு எதுக்காக அந்த அம்மா இங்க வரணும்? எதுக்காக உன்னோட தாத்தா அவங்க இந்த ஊருக்கு வந்த அதே நாள் இறக்கணும்?"
"என்னோட காஃபியை குடிக்கிற சந்தர்ப்பம் உனக்கு கிடைக்காதுன்னு உனக்கு தோணுதுன்னு நீ ஏன் சொல்லணும்?" என்றாள் அவர்கள் பேச்சில் இடைப் புகுந்த சீதா.
"அப்போ நீ அதை சொல்லும் போது நீ எந்த அர்த்தத்துல சொல்றன்னு என்னால புரிஞ்சுக்க முடியல. எனக்கு ரொம்ப கவலையாவும் இருந்துது. ஆனா இப்போ, அதுக்கான அர்த்தம் எனக்கு புரியுது. அந்த அம்மாவை பார்த்தா ரொம்ப நல்லவங்களா தெரியுறாங்க. அவங்க கூட போனா உன்னோட வாழ்க்கைக்கு ஒரு வழி பிறக்கும்னு எனக்கு தோணுது" என்றாள் சீதா.
"ஒருவேளை, உனக்கு அவங்க குடும்பமும் அவங்களுடைய கலாச்சாரமும் பிடிக்கலைன்னா எனக்கு ஃபோன் பண்ணு. நானும் சீதாவும் சென்னைக்கு வந்து உன்னை இங்க கூட்டிகிட்டு வந்துடுறோம். என்ன சொல்ற?"
"போய் தான் பாரேன், தாமரை," என்றாள் சீதா.
தாமரை சரி என்று தலையசைத்தாள். அப்போது அவர்களிடம் வந்தார் பாட்டி.
"அம்மா, தாமரை உங்க வீட்டுக்கு வர சம்மதிச்சிட்டா." என்றார் பண்டிதர்.
பாட்டியின் முகம் பொலிவடைந்தது.
"நிஜமாவா?"
"ஆமாம்..." என்றார் பண்டிதர்.
"ரொம்ப சந்தோஷம். உங்க தாத்தாவுக்கு செய்ய வேண்டிய சடங்கை எல்லாம் செஞ்சு முடிச்சிட்டு நம்ம போகலாம்." என்றார் பாட்டி.
சரி என்று தலையசைத்தாள் தாமரை.
சிவசங்கருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய பண்டிதரும் சீதாவும் பாட்டிக்கு உதவினார்கள்.
பாட்டியுடன் சென்னைக்கு செல்ல தயாரானாள் தாமரை. அவள் அவர்களுடன் செல்ல தயாராகி விட்டாள் என்றாலும், தன் முடிவு சரியா தவறா என்று அவளுக்கு தெரியவில்லை. கடவுளின் மீது பாரத்தை போட்டுவிட்டு அனைவரிடமிருந்தும் விடை பெற்றாள்.
"அவளை நல்லா பார்த்துக்கோங்க." என்றார் ஒருவர்.
"இந்த நிமிஷத்திலிருந்து அவளுக்கு நீங்க தான் எல்லாமும்." என்றார் மற்றொருவர்.
"நாங்க எப்ப எல்லாம் சென்னைக்கு வரோமோ, அப்போ உங்க வீட்டுக்கு வந்து அவளைப் பார்ப்போம்." என்றார் ஒருவர் எச்சரிக்கும் தொணியில், என்னவோ பாட்டி அவளை கடத்திச் செல்கிறார் என்பது போல.
சரி என்று புன்னகையுடன் தலையசைத்த பாட்டி, தாமரையுடன் கிளம்பி சென்றார்.
காரில்
"தாமரை, நீ யாரோ ஒரு அன்னிய வீட்டுக்கு வராதா நினைக்காதே. அது உன்னோட வீடுன்னு நினைச்சுக்கோ. எதுக்காகவும் தயங்க வேண்டாம். உனக்கு நான் இருக்கேன்." என்றார் பாட்டி.
சிறு நகையுடன் தலையசைத்தாள் தாமரை. தன் மீது இவ்வளவு அக்கறை காட்டும் இந்த பெண்மணிக்கு தன்னால் என்ன செய்துவிட முடியும் என்று யோசித்தாள் அவள். *அவரது குடும்பம் குடும்பத்திற்கு நீ வேண்டும்* என்று பண்டிதர் கூறியதை அவளால் யோசித்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. எந்த உதவியை பற்றி அவர் கூறினார்? அங்கு சென்ற பிறகு அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்வது என்ற முடிவுக்கு வந்தாள் தாமரை.
"உங்க குடும்பத்துல எத்தனை பேர் இருக்காங்க, பாட்டி?"
"எங்க குடும்பத்துல பதினோரு பேர் இருக்காங்க. என் பெரிய பிள்ளை சுதாகரும் அவன் மனைவியும் அமெரிக்காவுக்கு டூர் போயிருக்காங்க. இன்னும் ஒரு வாரத்தில் வந்துடுவாங்க. அவங்களுக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு. பையனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. பொண்ணு அவங்க கூட டூர் போயிருக்கா. இரண்டாவது பிள்ளை மனோகர். அவனுக்கு ரெண்டு பிள்ளைங்க. கடைசியா என் பேரன் சூர்யா."
"அவரோட அப்பா அம்மா?"
"அவன் என் பொண்ணோட மகன். அவங்க ரெண்டு பேரும் இப்போ உயிரோட இல்ல. "
"ஓ..."
"எல்லாரும் ரொம்ப நல்லவங்க. ஆனா கொஞ்சம் தலைக்கனம் அதிகம். பணக்காரங்க இல்லையா? நீ அவங்களை பத்தி கவலைப்படாத. அவங்களை நான் பார்த்துக்கிறேன்"
பாட்டி எதற்காக குறிப்பாய் அவர்கள் தலைக்கனம் பிடித்தவர்கள் என்பதை அடிக்கோடிட்டு காட்டினார் என்று அவளுக்கு புரிந்தது. அவர்களிடம் நெருங்க வேண்டாம் என்ற எச்சரிக்கை தான் அது.
அவர்களது கார் மிகப்பெரிய ஆடம்பர பங்களாவிற்குள் நுழைந்தது. அந்த பங்களாவின் பிரம்மாண்டத்தை பார்த்த தாமரையின் புருவங்கள் அணிச்சையாய் மேலே உயர்ந்தன.
தாமரை உள்ளே நுழைந்த நேரம், ரத்னாவின் புகைப்படத்தின் முன்னால் அணையும் நிலையில் இருந்த விளக்கு, பிரகாசமாய் சுடர்விட்டது...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro