3 திடீரென்று ஏன்?
3 திடீரென்று ஏன்?
ஷீலாவை பார்த்த அமரன் அவள் வருத்தத்தோடு இருப்பதை புரிந்து கொண்டான். அந்த கான்ஃபரன்ஸில் அவள் முகத்தில் சதா குடிகொண்டிருக்கும் ஒரு புன்னகை இல்லாமல் இருந்தது. அந்த கான்ஃபரன்ஸ் முடிய காத்திருந்தான்.
ஷாம் மற்றும் ஆகாஷுடன் எதையோ தீவிரமாய் ஆலோசனை செய்து கொண்டிருந்தான் சூர்யா. ஆலோசனையை முடித்துக் கொண்டு தனது அறைக்குச் சென்றான் ஷாம். சூர்யா ஆகாஷுடன் தனது அறைக்கு வந்தான். கான்ஃபரன்சில் கலந்து கொள்ள வந்திருந்தவர்களை வழி அனுப்பிவிட்டு அமரனும் அவனது அறைக்கு வந்தான்.
"ஷீலாவுக்கு என்ன ஆச்சு?" என்றான் அமரன்.
தனது நாற்காலியில் சாய்ந்து அமர்ந்த சூர்யா,
"எதுக்காக என்னை கேக்குற? அவ ஏன் அப்சட்டா இருக்கான்னு அவளை கேட்க வேண்டியது தானே?" என்றான்.
"நீ தான் காரணம்னு எனக்கு தெரியும். அதனால தான் உன்னை கேட்டேன். இன்னைக்கு காலையில ஆஃபீசுக்கு வரும் போது அவ ரொம்ப சுறுசுறுப்பா இருந்தா.நீ வந்த பிறகுதான் அவ முகம் மாறி போச்சு."
"இப்போ நீ என்ன சொல்ல வர?"
"நீ அவளை ஏதாவது சொன்னியா?"
சூர்யா பதிலளிக்கும் முன், அவனுக்கு ஆகாஷ் பதில் கூறினான்.
"இதுல சூர்யாவோட தப்பு எதுவும் இல்ல. அவன் என்ன ஃபீல் பண்றான்னு சொன்னான். அவ்வளவு தான்."
"என்ன சொன்னான்?"
"அவங்க ரிலேஷன்ஷிப்ல இருக்கிறதா நீ நினைக்கிறது சுத்த பேத்தல்னு சொன்னேன்."
"பேத்தலா?"
"ஆமாம். ஏன்னா, எங்களுக்குள்ள எந்த ரிலேஷன்ஷிப்பும் கிடையாது."
அவனது மேஜைக்கு முன்னால் இருந்த நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்த அமரன்,
"உனக்கு என்ன பிரச்சனை, சூர்யா? பாட்டி உன்னைப் பத்தியும் உன் கல்யாணத்தை பத்தியும் நினைச்சு எவ்வளவு கவலைப்படறாங்கன்னு தெரியுமா? நீ எந்த பொண்ணையும் ஏரெடுத்து பார்க்கவும் தயாரா இல்ல. உன் மனசுல என்ன தான் இருக்கு?"
"என் மனசுல எதுவும் இல்ல."
"அது தான் பிரச்சனை. நமக்கு ஷீலாவை பத்தி தெரியும். அவ உன் மேல வச்சிருக்கற அன்பு உண்மையானது. அவளை மாதிரி புரிதல் இருக்கிற ஒரு பொண்ணு உனக்கு கிடைக்க மாட்டா."
"அதனால?"
"சிம்பிள். அவளை கல்யாணம் பண்ணிக்கோ."
"உன் கதை என்ன? உன்னை புரிஞ்சுக்கிற ஒரு பொண்ணுக்காக நீ காத்துக்கிட்டு இருக்கியா?"
"என்னை புரிஞ்சுக்கிற பொண்ணு வருவாளா மாட்டாளான்னு தெரியாம நான் எப்படி காத்திருக்க முடியும்?"
"ஒருவேளை, கல்யாணம் ஆனதுக்கு பிறகு உன்னோட ஒய்ஃப் உன்னை புரிஞ்சுக்கலைன்னா நீ என்ன செய்வ?"
"என்ன செய்ய முடியும்? அவளை புரிஞ்சுக்க நான் முயற்சி செய்வேன்."
"அப்படின்னா, நம்மளை புரிஞ்சிக்கிற பொண்ணு விஷயமே இல்ல, அப்படித்தானே?"
"இப்ப நீ என்ன சொல்ல வர?"
"அவ என் வைஃபா இருக்க ஃபிட்டானவன்னு எனக்கு தோணல."
"என்ன இப்படி சொல்ற? அவ உன்னை விரும்புறான்னு உனக்கு தெரியாதா?"
"நீ பேசுறது ஃபீலிங்ஸ் பத்தி தான். அவ மேல அப்படி ஒரு ஃபீலிங்ஸ் எனக்கு வரல. அப்படி இருக்கும் போது, எங்க ரிலேஷன்ஷிப் எப்படி வேலை செய்யும்னு நினைக்கிற? ஒரு ஃபிரண்ட்ங்குறதை மீறி, அவளை என்னால பாக்க முடியல."
"ஆனா..."
"அமரா, அவன் தான் இவ்வளவு தெளிவா பேசுறானே! அவனுக்கு ஷீலா மேல எந்த ஃபீலிங்ஸும் இல்லைன்னு சொல்றான். அப்புறம் அதை பத்தி பேசுறதுல என்ன பிரயோஜனம் இருக்கு?" என்றான் ஆகாஷ்.
"நான் நேரடியா விஷயத்துக்கு வரேன். ஷீலா மாதிரி ஒரு பொண்ணு உன்னை காதலிச்சா நீ என்ன செய்வ?"
லேசான வெட்கத்தோடு புன்னகை புரிந்தான் ஆகாஷ். அதை பார்த்து தலையில் அடித்துக் கொண்டான் அமரன்.
"வெட்கப்படுறதை நிறுத்திட்டு பதில் சொல்லுடா."
"நான் உடனே ஏத்துக்குவேன்."
"அப்புறம்..." என்று மேலே பேசப்போன அமரனை கைகாட்டி தடுத்து நிறுத்திய ஆகாஷ்,
"நீ ஒரு முக்கியமான விஷயத்தை புரிஞ்சுக்கணும், அமரா. நான் ஆகாஷ். அவன் சூர்யா."
"அதனால?"
"ரொம்ப சிம்பிள். அவனுக்கு ஷீலாவை பிடிக்கலன்னா விட்டுடு. அவனை தேவையில்லாம எதுக்காக ஃபோர்ஸ் பண்ற?"
"அப்போ அவன் என்ன செய்யப் போறான்?"
"நான் என்ன செய்யணும்னு நீ நினைக்கிற?" என்றான் சூர்யா.
"சரி விடு," என்று அங்கிருந்த டம்ளரை எடுத்து அதில் இருந்த தண்ணீரை ஒரே மூச்சில் குடித்து முடித்து கீழே வைத்தான் அமரன்.
"ரிலாக்ஸா இரு, அமரா."
"நீ ஷீலாவோட மனசை உடைக்க போறியா?"
"நான் அவ மனசை உடைக்க கூடாதுன்னு நீ நினைக்கிறியா?"
"சத்தியமா நினைக்கிறேன்."
"அப்போ நிச்சயமா நான் அவளை கல்யாணம் பண்ணிக்க கூடாது."
"நீ என்ன சொல்ற? நீ எதையுமே நேரடியா பேச மாட்டியா. இப்படி தலையை சுத்தி ஏன் மூக்கை தொடர?"
"கல்யாணம்கிறது ஒரு மியூச்சுவலான விஷயம். அது ஒரு பக்கத்தில் இருந்து மட்டும் வர்றது தப்பு. வரவும் கூடாது. ஷீலாவுக்கு என் மேல இருக்கிற ஃபீலிங்ஸ் பத்தி எனக்கு தெரியாதா? ஒரு ஃபிரண்டா அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா அதுக்கு மேல எதுவுமே கிடையாது. அவளை காதலிக்க முடியுதான்னு நான் ட்ரை பண்ணி கூட பார்த்தேன். ஏன்னா அவ ரொம்ப நல்ல பொண்ணு. எனக்கும் தெரியும். ஆனா அவகிட்ட என் மனசு சாயல."
பெருமூச்சு விட்ட அமரன், நாற்காலியை பின்னால் தள்ளி விட்டு எழுந்து நின்றான்.
"நான் போறேன்." என்று வெளியே வந்த அவன், அங்கு ஷீலா நின்றிருப்பதை பார்த்தான்.
அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை அவள் கேட்டுவிட்டாள் என்பது அவள் முகத்தை பார்க்கும்போது தெள்ளத்தெளிவாய் புரிந்தது.
"ஐ அம் சாரி, ஷீலா. அவன் ரொம்ப பிடிவாதமா இருக்கான்."
"நான் நல்ல பொண்ணுன்னு அவனுக்கு தெரியும். அதுக்கு மேல அவனுக்கு வேற என்ன வேணுமாம்?" என்றாள் கடுப்புடன்.
அவளுக்கு அவனால் பதில் கூற முடியவில்லை.
"அது வேற ஒன்னும் இல்ல. அவனுக்கு திமிரு." என்றாள்.
"இல்ல, ஷீலா. அவனுக்கு திமிர் இல்ல. அப்படியே இருந்தாலும், அதை அவன் நம்மகிட்ட காட்ட மாட்டான்."
"அதனால என்ன பிரயோஜனம்?"
"ரிலாக்ஸ், ஷிலா, ஒரு நாள் அவன் நிச்சயம் புரிஞ்சுக்குவான்."
"எப்போ? அவன் என்னைப் பத்தி யோசிக்கக்கூட தயாரா இல்ல."
"அவனுக்கு கொஞ்சம் டைம் கொடு. அவனுக்கு புரிய வைக்கத்தான் நாங்க இருக்கோமே. சூர்யாவை பத்தி எனக்கு நல்லா தெரியும் அவனை அவ்வளவு சுலபமா யாரும் திருப்தி படுத்த முடியாது. அதனால எந்த பெண்ணையும் அவ்வளவு சீக்கிரமா அவன் விரும்ப மாட்டான். அந்த ஸ்பேசை நிச்சயம் நீ ஃபில் பண்ணுவ."
எரிச்சலுடன் அங்கிருந்து சென்றாள் ஷீலா. அவளுக்காக வருத்தப்பட்டான் அமரன்.
மாலை
வழக்கம் போலவே தாமதமாய் வீடு திரும்பினான் சூர்யா. அவனது குடும்பத்தார் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
"சூர்யா, இன்னைக்கு உன்னோட கான்ஃபரன்ஸ் எப்படி போச்சு?" என்றாள் அஞ்சலி வழக்கம் போலவே.
"ரொம்ப நல்லா போச்சு, அண்ணி." என்றபடி பாட்டியின் பக்கத்தில் அமர்ந்தான் சூர்யா.
"நீ போய் ஃப்ரெஷ் ஆயிட்டு வா. நான் உனக்கு காபி கொண்டு வரேன்." என்றாள் அஞ்சலி.
"அப்புறமா ஃபிரஷ் ஆயிக்கிறேன். இப்ப எனக்கு காபி கொடுங்க அண்ணி." என்றான்.
சரி என்று சமையலறைக்கு சென்றாள் அஞ்சலி.
குளித்து முடித்து வந்த ஷாம் அவன் பக்கத்தில் அமர்ந்தான்.
"சூர்யா, நீ போட்டிருக்குற கோணி மாதிரி டிரஸ்ல இருந்து கொஞ்சம் உனக்கு விடுதலை குடேன்." என்றார் அவனது மாமி மனோரமா.
"கோணியா? நிஜமா தான் சொல்றீங்களா, மாமி? இது எவ்வளவு காஸ்ட்லியான டிரஸ் தெரியுமா?" என்றான் சூர்யா.
"அது என்னமோ பா. அதை பார்க்கும்போது எனக்கு கோணி தான் ஞாபகம் வருது."
சிரித்தபடி கண்களை சுழற்றினாn சூர்யா.
அவனுக்கும் ஷாமுக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தாள் அஞ்சலி.
"தேங்க்யூ அண்ணி."
"நந்தாவும் துருவனும் எங்க போனாங்க?" என்றார் மனோரமா.
"அவங்க எங்க போனாங்கன்னு தெரியல." என்று அஞ்சலி கூறிக் கொண்டிருந்த அதே நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்தான் நந்தா.
"ஹாய், சூரி"
"ஹாய்"
அவன் பக்கத்தில் வந்து அமர்ந்த நந்தா,
"ஆஹா, நான் அண்ணியோட காபியை மிஸ் பண்ணிட்டேன் போல இருக்கே" என்றான்.
"ஆமாம்" என்றபடி அந்த காப்பியை பருகினான் சூர்யா.
"ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் உனக்கு காபி போட்டு தரேன்." என்றாள் அஞ்சலி சமையலறைக்கு சென்றவாறு.
"நீ எங்க போயிருந்த?" என்றான் ஷாம்.
"ஃபிரண்ட்ஸோட சினிமாவுக்கு போயிருந்தேன்."
"நம்ம ஆஃபீஸ்ல ஜாயின் பண்ற எண்ணம் உனக்கு கிடையாதா?"
"கம்பெனியோட ஓனர் இப்படி வாயை மூடிக்கிட்டு இருந்தா நான் எப்படி ஆஃபீஸ்ல வந்து ஜாயின் பண்றது?" என்ற படி, அடுத்த வாய் காப்பியை குடிக்க போன சூர்யாவை தன் முழங்கையால் லேசாய் இடித்தான்.
"மடையா" என்று அவனை திட்டினான் சூர்யா.
"ஐ அம் சாரி, சூரி."
"இதுக்காக தான் உன்னை ஆஃபிஸ்க்குள்ள விடவே எனக்கு பயமா இருக்கு. நீ பண்ற அட்டூழியம் இருக்கு பாரு..." என்றான்.
"ராமனே இந்த லட்சுமணனை சந்தேகப்பட்டா, எனக்கு வேற போக்கிடம் என்ன இருக்கு?" என்று அவன் சூர்யாவின் முகவாய் பற்றி உணர்ச்சி பொங்க கூறினான்.
"உனக்கு திடீர்னு என்ன ஆச்சு?" என்றான் சூர்யா.
"நீ செண்டிமெண்ட்ல ஜீரோன்னு எனக்கு தெரியும். ஆனா இப்படி டபுள் ஜீரோவா இருப்பேன்னு சுத்தமா தெரியாது. நான் ராமன்னு சொன்னது உன்னைத்தான்."
"ஓஹோ, அப்படியா?"
"இப்போ எனக்கு என் மேல நம்பிக்கை வந்துடுச்சு." என்றான் நந்தா.
"என்ன நம்பிக்கை?"
"உன்னை மாதிரி ஒரு மக்கு பையனே இவ்வளவு பெரிய கம்பெனியை நடத்தும் போது, என்னை மாதிரி ஒருத்தன் அதில் வேலை செய்ய முடியாதா?"
"நான் மக்கா?"
"பின்ன என்ன? ஒரு சாதாரண விஷயத்தைக் கூட உன்னால புரிஞ்சுக்க முடியல..."
அப்பொழுது காபியுடன் அங்கு வந்தாள் அஞ்சலி. அதைப் பெற்றுக் கொண்ட நந்தா,
"ரொம்ப தேங்க்ஸ் அண்ணி. இப்போ எனக்கு இது ரொம்ப அவசியம். இந்த மனுஷனோட பேசி எனக்கு தலைவலி வந்துருச்சு." என்றான்.
"நம்ம இவனை கம்பெனிக்கு கூட்டிட்டு போகலாம், சூர்யா." என்றான் ஷாம்.
அவன் நந்தாவை பார்க்க, அவன் தன் கண்களால் கெஞ்சினான்.
"அண்ணன் சொல்றாருன்னு தான் உன்னை கூட்டிகிட்டு போறேன்."
"தேங்க்யூ சூரி" என்று தன் கையில் இருந்த குவளையை கீழே வைத்து விட்டு, ஷாமிடம் சென்று அவனை அணைத்துக் கொண்டான்.
"தேங்க்ஸ் அண்ணா."
"நான் யாருக்கும் ரெக்கமென்ட் பண்ண மாட்டேன். ஆனா உனக்கு பண்ணி இருக்கேனா நீ ஒழுங்கா வேலை செய்யணும். நல்ல பெயர் எடு."
"நிச்சயமா எடுப்பேன், அண்ணா."
"துருவன் எங்க போனான்?" என்றான் சூர்யா.
"ஷ்ஷ்... வழக்கம் போலத்தான்" என்று மெல்லிய குரலில் கூறினான் நந்தா.
"ரெண்டு பேரும் என்ன முணுமுணுக்கிறீங்க?"
"ஒன்னும் இல்ல அண்ணி" என்று சமாளித்தான் நந்தா.
அனைத்தையும் அமைதியாய் உள்வாங்கிக் கொண்டிருந்தார் பாட்டி. இவர்களில் ஒருவர் தான் தன் மகளை கொன்றார் என்று எப்படி அவரால் நம்ப முடியும்? அவரது குடும்பம் தான் அவருக்கு எல்லாமும். சூர்யாவின் அப்பா அரவிந்தன், உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாய் கிடந்த போது, யாரும் இல்லாமல் தனித்து விடப்பட்டார் ரத்னா. அப்பொழுது தன் உதவும் கரங்களை நீட்டியது பாட்டி தான். அவருக்கு உதவியாய் அவருடன் இருக்க அவர் முடிவு செய்தார். அவரது கணவன் இறந்த ஒரே மாதத்தில் ரத்னா கொல்லப்பட்டார். என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார் பாட்டி. அப்பொழுது தன் மகன்களான சுதாகரையும், மனோகரையும், சூர்யாவையும் அவர்களது வியாபாரத்தையும் கவனித்துக் கொள்ளும் படி தன் மகன்களை கேட்டுக்கொண்டார். தன் அம்மாவின் பேச்சுக்கு அடி பணிந்து, அவர்களும் சூர்யாவின் இல்லம் வந்து சேர்ந்தார்கள். அங்கு குடி பெயர்ந்த நாளில் இருந்தே அவர்கள் சூர்யாவின் மீது அன்பையும் அக்கறையும் காட்டி வருகிறார்கள். அவருக்கு அதில் எந்த சந்தேகமும் இருந்ததில்லை. சூர்யா தனது முதுகலை பட்டத்தை முடிந்த பிறகு, அவர்களது வியாபார நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லி அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அனைத்து பொறுப்புகளையும் அவனிடமே ஒப்படைத்தார்கள். அப்படி இருக்க, தன் குடும்பத்தார் மீது அவருக்கு எப்படி சந்தேகம் ஏற்படும்?
அவரிடம் பேசிய அந்த சாமியாரை அடுத்த நாள் சென்று சந்தித்து தன்னுடைய அத்தனை சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்வது என்று முடிவு செய்தார் பாட்டி. மறுநாள் அவர் அனைத்தையும் புரிந்து கொள்வார் என்று அவர் கூறினாரே. மறுநாள் சென்று அவரை பார்ப்பது என்று முடிவு செய்தார் பாட்டி.
மறுநாள்
வழக்கம்போல் அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு கோவிலுக்கு கிளம்பினார் பாட்டி. அந்த சாமியாரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது அவருக்கு. அவர் மனதில் மிகப்பெரிய கேள்வி ஒன்று எழுந்தது. எதற்காக அவர் திடீரென்று தோன்றி அனைத்தையும் அவரிடம் கூற வேண்டும்?
கோவிலின் முன்னால் காரை விட்டு இறங்கிய பாட்டி, கோவிலின் பூசாரி கோவிலை பூட்டுவதை பார்த்தார்.
"எதுக்காக கோவிலை இவ்வளவு சீக்கிரமா பூட்டுறீங்க?"
"இன்னைக்கு கோவில் திறந்திருக்காது மா."
"ஆனா ஏன்?"
"நேத்து உங்க கிட்ட பேசிகிட்டு இருந்தாரே ஒரு சாமியார், அவர் இன்னைக்கு காலையில இறந்துட்டாரு." என்று அவர் கூற, உரைந்து நின்றார் பாட்டி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro