23 பூஜை
23 பூஜை
தன் அறையை விட்டு வெளியே வந்த தாமரை, லாவண்யா தன்னை நோக்கி வருவதைப் பார்த்தாள்.
"ஹாய் தாமரை" என்று புன்னகைத்தாள்.
அவளைப் பார்த்துத் தாமரையும் புன்னகைத்தாள் தான், ஆனால் தயக்கத்துடன்.
"என் பேர் லாவண்யா."
"எனக்கு தெரியும்."
"ஃபிரண்ட்ஸ்?" என்று தன் கையை அவளை நோக்கி நீட்டினாள்.
சரி என்று தலையசைத்த படி அவளுடன் கைக்குலுக்கினாள் தாமரை.
"என் கூட வா." என்று அவளை தன் அறைக்கு அழைத்துச் சென்றாள் லாவண்யா.
"உக்காரு"
கட்டிலின் முனையில் அமர்ந்தாள் தாமரை.
"நீ என்னை சந்தோஷப்படுத்திட்ட."
"நானா? எப்படி?"
இங்கும் அங்கும் பார்த்த லாவண்யா,
"இரு" என்று தன் அறையின் கதவைச் சாத்திவிட்டு, தனது அலமாரியில் இருந்து ஏதோ ஒன்றைக் கொண்டு வந்தாள்.
"வாயைத் திற."
"ஏன்?"
"ப்ளீஸ் திற"
அவள் வாயைத் திறந்தவுடன் அவள் வாயில் ஒரு லட்டுவை வைத்து அடைத்தாள் லாவண்யா, தாமரையின் விழிகளை அதிர்ச்சியில் விரிய வைத்து. தாமரை அதை வாயிலிருந்து எடுக்க முயன்ற போது,
"அதை எடுக்காத" என்ற லாவன்யாவை வினோதமாய் பார்த்தாள் தாமரை.
"நீ எதுவும் சொல்லிட வேண்டாம்னு தான் நான் இந்த லட்டுவை உன் வாயில வச்சேன்."
ஏன் என்பது போல் அவள் சைகை செய்ய,
"ஏன்னா, நீ எதுவும் சொல்லக்கூடாது..."
மெல்ல கண்ணிமைத்தாள் தாமரை.
"நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஏன்னா நீ ஆகாஷை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்ட..."
தாமரை தன் கண்களை சுருக்கினாள்.
"நீ என்ன நினைக்கிறன்னு எனக்கு தெரியும். நீ அவரை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னா, நான் ஏன் சந்தோஷப்படணும்னு தானே நினைக்கிற?"
ஆம் என்று தலையசைத்தாள்.
"நான் அவரை காதலிக்கிறேன்."
தாமரையின் கண்கள் விரிந்தன.
"ப்ளீஸ் ப்ளீஸ் தயவு செஞ்சு எதுவும் சொல்லிடாத. நான் அவரை ரொம்ப காதலிக்கிறேன்." என்று கெஞ்சினாள் லாவண்யா.
தாமரையின் முகத்தில் கவலை படர்ந்தது. லாவண்யாவை பார்த்தபடி தன் வாயில் இருந்த லட்டுவை மென்று சாப்பிட ஆரம்பித்தாள்.
"நான் ஆகாஷ் காதலிக்கிறேன்னு சொன்னப்போ, ஏதாவது சொல்லனும்னு உனக்கு தோணுச்சா?"
லட்டுவை முழங்கிவிட்டு, இல்லை என்ற தலையசைத்தாள்.
"ரொம்ப தேங்க்ஸ் தாமரை. நீ ரொம்ப நல்ல பொண்ணு." என்று அவளை அணைத்துக் கொண்டாள் லாவண்யா.
தன் மனதில் ஏதோ உணரத்தான் செய்தாள் தாமரை.
மறுபுறம் சூர்யாவும் தாமரையை பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். அவளை சார்ந்து நடைபெறும் அனைத்தும் மாயமாய் இருக்கிறது. ஆனால் அவளோ வெகுளியாய் இருக்கிறாள். அவளிடம் இருக்கும் சிறப்பை அவள் உணர்ந்திருக்கிறாளா இல்லையா என்று அவனுக்கு புரியவில்லை. அப்பொழுது முழுவதும் பச்சையாய் தோன்றிய அவன் அம்மாவின் ரோஜா செடியின் மீது அவன் பார்வை சென்றது. அந்த செடி துளிர்க்கும் என்று அவன் கனவிலும் கூட நினைத்ததில்லை. அது ஓர் அதிசயம். அவள் யார்? இதிலிருந்து அவன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்ன?
வேறு வழியின் மூலமாக தாமரை தோட்டத்திற்கு வருவதை பார்த்தான் சூர்யா. அங்கிருந்த பூவாளியை எடுத்து அவள் எதையோ தீவிரமா யோசித்தபடி தண்ணீர் விட துவங்கினாள். தனது அறையின் பிரெஞ்சு கதவின் மீது சாய்ந்தபடி,
"என்னை யோசிச்சிக்கிட்டு இருக்க?" என்றான் சூர்யா.
திடுக்கிட்டு அவனைப் பார்த்த தாமரை, ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள்.
"இன்னைக்கு காலையில தண்ணி ஊத்த மறந்துட்டேன். அதான்..." என்று அந்த பூவாளியை கீழே வைத்தாள்.
"ஏன் டல்லா இருக்க?"
"ஒன்னும் இல்ல."
"உங்க தாத்தா ஞாபகம் வந்துடுச்சா?"
"ம்ம்ம்..."
"நானும் எங்க அம்மாவை மிஸ் பண்றேன்."
"உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?"
"என்ன?"
"உங்க அம்மா எப்படி இறந்தாங்க? அவங்களுக்கு உடம்பு சரி இல்லாம போச்சா?"
இல்லை என்று தலையசைத்த சூர்யா,
"அவங்க கொலை செய்யப்பட்டாங்க." என்றான்.
"என்னது, கொலையா?" என்றாள் அதிர்ச்சியாக.
"ஆமாம். அப்போ எனக்கு பத்து வயசு. எங்க அம்மா என்னை காப்பாத்த தான் அவங்க உயிரை விட்டாங்க."
"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல, சூர்யா சார்."
வேதனை புன்னகை உதிர்த்தான் சூர்யா.
"அவங்க இறந்து 18 வருஷம் ஆச்சு. அவங்க சாகறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி தான் இந்த ரோஜா செடியை வச்சாங்க. அவங்க இறந்ததுக்கு பிறகு, அந்த செடியோட இலை எல்லாம் உதிர்ந்து போச்சி. நான் நம்பிக்கையை கைவிடாம அதுக்கு தண்ணி ஊத்திக்கிட்டு இருந்தேன். ஒரு நாள் அது துளிர்க்கும்னு நம்பினேன்."
அந்த செடியை ஏறிட்டாள் தாமரை.
"எங்க அம்மா இறந்தப்போ, அவங்க என் கூட தான் இருப்பாங்கன்னு எல்லாரும் சொன்னாங்க. அதெல்லாம் என்னை சமாதானப்படுத்த சொன்ன வார்த்தைன்னு நினைச்சேன். ஆனா இப்போ, அதெல்லாம் உண்மைன்னு எனக்கு தோணுது. அந்த மாதிரி ஒரு அருமையான உணர்வை எனக்கு கொடுத்ததுக்காக உனக்கு ரொம்ப தேங்க்ஸ்." என்றான்.
"நான் வந்து..."
"எனக்கு உண்மையிலேயே என்ன சொல்றது, என்ன நினைக்கிறதுன்னு தெரியல. ஆனா எல்லாத்துக்கும் உனக்கு தேங்க்ஸ்."
"என்ன நடக்கணுமோ அது தான் நடக்கும். நான் நடுவுல ஒரு சின்ன அணில்..."
"அது ஏன் நீ?"
தாமரை திகைத்தாள்.
"என்னை சுத்தி இவ்வளவு பேர் இருக்கும் போது, எங்க அம்மாவோட செடியை துளிர்க்க வைக்க நீ திண்டிவனத்தில் இருந்து ஏன் வரணும்?"
அவன் கூறியதை யோசித்த படி நகம் கடித்தாள் தாமரை.
"எங்க அம்மாவோட விளக்கை எனக்கு அப்புறம் நீ மட்டும் தான் ஏத்தியிருக்க." என்று அவன் கூறியதை கேட்டு அவள் திகைத்தாள். அவன் ஆம் என்று தலையசைத்தான்.
"இன்னைக்கு வரைக்கும் என்னைத் தவிர வேற யாராலும் அந்த விளக்கை ஏத்த முடியல. நீ மட்டும் தான் அதை ஏத்தியிருக்க. அதனால தான் இன்னைக்கு வரைக்கும் அது என்னோட வேலையா இருந்துகிட்டு இருக்கு."
"ஏன் அப்படி?" என்றாள் முகத்தை கோணலாக்கி.
அதைக் கேட்டு சிரித்தான் அவன்.
"எனக்கும் உங்க அம்மாவுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்குன்னு எனக்கு தோணுது." என்றாள் கண்களை சுருக்கி, தலையை அசைத்தபடி, ஏதோ அவள் பெரிய ரகசியத்தை கண்டுபிடித்து விட்டவள் போல.
"உனக்கும் எங்க அம்மாவுக்கும் ஏதோ ஒரு கனெக்ஷன் இருக்குன்னு நீ கண்டுபிடிச்சிட்டதால, திண்டிவனம் திரும்பி போகணும் அப்படிங்கற எண்ணத்தை விட்டுடு. புரிஞ்சுதா?"
பெருமூச்சு விட்டாள் தாமரை.
"என்ன ஆச்சு?"
"ஏன்னே தெரியல, எனக்கு சென்னை பிடிக்கல."
"உனக்கு என்ன பிடிக்கும்?"
"எங்க வீட்டுக்கு முன்னாடி ரொம்ப பெரிய வேப்பமரம் இருக்கும். எங்களுக்கு ஃபேன் கூட தேவைப்படாது. அதோட காத்து அவ்வளவு ஜில்லுனு இருக்கும். அது எவ்வளவு நல்லா இருக்கும் தெரியுமா?"
"சரி, அப்புறம்?"
"எங்க ஊர்ல இருக்கிற ஓங்கூர் ஆறு... ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து அதுல ஜாலியா டைவ் அடிப்போம்." என்றாள் ஏக்கமாக.
"உன் ஃபிரெண்ட்ஸ் கிட்ட கேளு... இப்போ நீ வாழ்ந்துகிட்டு இருக்குற வாழ்க்கையை பார்த்து அவங்க ஏங்குவாங்க..."
"அது எனக்கு தெரியும்..."
"நீ திண்டிவனம் போய் என்ன செய்வ? எப்படி வாழ்க்கை நடத்துவ?"
"ஏதாவது வேலை செய்வேன். என்னால் செய்ய முடியாதா?"
"நாங்க தான் இருப்போமே, அப்புறம் ஏன் நீ அதையெல்லாம் செய்யணும்?"
"அதெல்லாம் எனக்கு தெரியல. நான் போறேன்"
சூர்யாவுக்கு புரிந்து போனது. அவன் வீடு அவளுக்கு பிடித்தமானதாய் இல்லை. அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தான். ஏனென்றால் அவனுக்கு அவள் அங்கிருந்து செல்வதில் சுத்தமாய் விருப்பமில்லை.
மறுநாள்
சீக்கிரம் கண் விழித்த தாமரை, குளித்து முடித்துவிட்டு சமையல் அறைக்கு வந்து பூஜைக்கு வேண்டிய பாயாசத்தை செய்தாள். அதை ஆறவிட்டு, பூஜை அறைக்கு வந்து, சுத்தம் செய்து பூஜைக்கு தயார்படுத்தினாள். அம்மன் படத்திற்கு மாலை அணிவித்து, சரியாக ஆறு மணிக்கு, ஒன்பது மண் விளக்குகளை அம்மன் படத்தின் முன்னால் ஏற்றினாள். ஒரு கிண்ணத்தில் பாசத்தை கொண்டு வந்து பூஜையில் வைத்து, வாசமான ஊதுபத்திகளை ஏற்றி அந்த பூஜையறை மட்டுமல்லாமல் அந்த இடம் முழுவதும் மனம் கமழச் செய்தாள். பிறகு பண்டிதர் அவளுக்கு எழுதிக் கொடுத்த மந்திரத்தை உச்சாடனம் செய்ய ஆரம்பித்தாள். அந்த மந்திரத்தை ஆயிரம் முறை அவள் உச்சரித்தாக வேண்டும். அதை மூன்று பிரிவாய் பிரித்து செய்ய அவள் முடிவு செய்திருந்தாள். காலையில் 400 முறையும் மதியமும் மாலையும் 300 முறையும் எனப் பிரித்துக்கொண்டாள். ஜெபமாலையைப் பயன்படுத்தி அதை நானுறு முறை சரியாக உச்சரித்து முடித்து, ஆரத்தி காட்டி பூஜையை முடித்தாள். அப்பொழுது தான், அவளுக்கு பின்னால் தெய்வானை அமர்ந்திருப்பதை கண்டாள். ஆரத்தியை அவரை நோக்கி நீட்ட, அவர் அதை தொட்டு கண்களில் ஒத்திக் கொண்டார். ஆரத்தி தட்டை கீழே வைத்துவிட்டு
"காலை வேலை பூஜை முடிஞ்சிருச்சு பாட்டி" என்றாள்.
பாட்டி ஏதோ சொல்ல நினைக்க, சூர்யா அறையில் நுழைவதை பார்த்து நிறுத்தினார்.
"தாமரை, நீ இங்க இருக்கியா? அப்படின்னா நீ விளக்கை ஏத்து" என்ற அவனை குழப்பத்தோடு பார்த்தார் தெய்வானை.
"நேத்து அம்மாவோட விளக்கை தாமரை ஏத்துனா, பாட்டி." என்றான் புன்னகையோடு.
அவளை பேசியிழந்து பார்த்தார் தெய்வானை.
"அந்த விளக்கை சூரியா சாரை தவிர வேற யாரும் ஏத்த மாட்டாங்கன்னு எனக்கு தெரியாது, பாட்டி."
"என்னால இதை நம்ப முடியல." முணுமுணுத்தார் தெய்வானை.
தீப்பெட்டியை எடுத்து அதை அவளிடம் கொடுத்து விளக்கை ஏற்றுமாறு சைகை செய்தான் சூர்யா. அதை வாங்கி மீண்டும் அந்த விளக்கை ஏற்றினாள் தாமரை. தெய்வானை தன் மூச்சு நின்று விடுவது போல் உணர்ந்தார். நம்ப முடியாமல் தாமரையை ஏறிட்டார்.
"என்னால இதை நம்பவே முடியல. தாமரை, நான் நிச்சயமா சொல்லுவேன். என் மக தான் உன்னை இங்க கூட்டிகிட்டு வந்திருக்கா." என்று அவளை உணர்ச்சிவசப்பட்டு தழுவி கொண்டார் தெய்வானை.
சங்கடத்தோடு சூர்யாவை ஏறிட்டாள் தாமரை. முகத்தில் எந்த பாவமும் இன்றி அவளை பார்த்துக் கொண்டு நின்றான் சூர்யா. தாமரையை நெற்றியில் முத்தமிட்டு புன்னகைத்தார் தெய்வானை.
"வா தாமரை சாப்பிடலாம்." என்றான் சூர்யா.
"நான் இன்னைக்கு விரதம்."
"ஏன்?"
"எங்க அப்பா அம்மாவுக்காக"
"ஏதாவது ஸ்பெஷலா?"
"இன்னைக்கு அமாவாசை. அதோட மட்டுமில்லாம வெள்ளிக்கிழமையும் கூட... அது ரொம்ப விசேஷமான நாள். அதனால தான்..." என்றாள்.
"அப்படின்னா இன்னைக்கு நானும் எங்க அம்மாவுக்காக விரதம் இருக்கேன்." என்று கூறி அவர்கள் இருவரையும் திகைப்படையை செய்தான் சூர்யா.
"ஆனா சாப்பிடாம இருக்கிறது ரொம்ப கஷ்டம், சூர்யா சார்."
"இருந்து தான் பாக்குறேனே."
"ஆனா நீங்க என்னை மாதிரி வீட்ல இருக்க மாட்டீங்க. ஆஃபீஸ் போறீங்க."
"ஜூஸ் சாப்பிட்டுக்கலாம் இல்லையா?"
தெய்வானையும் தாமரையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு,
"சாப்பிடலாம்" என்றாள் அவசரமாய், அவன் பட்டினி கிடக்க வேண்டாம் என்று எண்ணி.
"ஆனா, நீ வெறும் தண்ணி தான் குடிப்பேன்னு சொன்னியே?" என்றார் பூஜை அறையை கடந்த மனோரமா.
சூர்யா அவளை பார்க்க, அவள் அசட்டு புன்னகை சிந்தினாள்.
"பொய் சொன்னியா?"
"உங்களால ஒரு நாள் முழுக்க பட்டினி கிடக்க முடியாது."
"என்னால முடியும்." என்றான்.
தாமரை பாட்டியை பார்க்க, அவர் இனம் புரியா உணர்வோடு அவர்களை பார்த்துக் கொண்டிருந்தார்.
"பை"
"சாயங்காலம் வீட்டுக்கு சீக்கிரம் வந்துடுங்க. அப்ப தான் உங்களால விரதத்தை முடிக்க முடியும்." என்றாள் தாமரை.
சரி என்று புன்னகையோடு தலையசைத்துச் சென்றான் சூர்யா.
"என்ன பாட்டி இது?"
"இருக்கட்டும் விடு." என்றார் ரத்னாவின் புகைப்படத்தை பார்த்தபடி.
மதிய வேலை பூஜையும் நல்லபடியாய் முடிந்தது. மாலை பூஜையை முடிக்க அவர்கள் கோவிலுக்கு செல்ல வேண்டும். மாலை நேரத்தில் அனைவரும் வரவேற்பறையில் இருப்பார்கள் என்பதால், வேண்டிய பொருட்களை எல்லாம் முன்னதாகவே காரில் வைக்க சொல்லி ஆணையிட்டார் தெய்வானை.
மாலை
இறுதி கட்ட பூஜையை ஆரம்பித்தாள் தாமரை. இறுதியாக 308 முறை மந்திரத்தை உச்சரித்து முடித்தாள். தெய்வானையும் தாமரையும் கோவிலுக்கு கிளம்பி சென்றார்கள். சன்னதியின் முன்னால் தான் கொண்டு வந்த விளக்கை ஏற்றினாள் தாமரை. மீண்டும் 108 முறை அதே மந்திரத்தை சன்னிதானத்தின் முன்னே அமர்ந்து உச்சரித்தாள்.
அதன் பிறகு அந்த கோவிலில் இருந்த வேப்பமரத்துக்கு சென்று, ஓர் வெற்றிலையில் தேன் தடவி, அதில் மஞ்சள் குங்குமம் இட்டு வேப்ப மரத்தடியில் வைத்து, அதன் மீது ஒரு மண் விளக்கை ஏற்றினாள்.
"இது எதுக்கு தாமரை?" என்றார் தெய்வானை.
"இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த வெத்தலையில் இருக்கிற தேனை சாப்பிட நிறைய எறும்புகள் வரும், பாட்டி. இப்படி செய்யறதுனால, நம்ம குடும்பத்துக்கு சந்தோஷம் வந்து சேரும்னு எங்க தாத்தா அடிக்கடி சொல்லுவாரு. அதனால தான் அதை இங்க செய்ய நினைச்சேன்."
தெய்வானை உணர்ச்சிவசப்பட்டார். அந்த பெண்ணின் சுயநலமற்ற அன்புக்கு அவர் என்ன செய்யப் போகிறார் என்று அவருக்கு புரியவில்லை. தான் வீட்டில் செய்து கொண்டு வந்த பிரசாதத்தை கோவிலில் இருந்த அனைவருக்கும் வழங்கினாள் தாமரை. இறுதியாய் தான் ஏற்றி வைத்த விளக்கை கையில் எடுத்துக்கொண்டு,
"கிளம்பலாம், பாட்டி." என்றாள்.
தெய்வானைக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அந்த பூஜையை அவ்வளவு சுலபமாய் முடிப்போம் என்று கனவிலும் நினைக்கவில்லை. ரத்னாவின் ஆன்மாவை கட்டுப்படுத்தும் அந்த நபர், இந்த பூஜையை முடிக்க விடாமல், ஏதாவது தடைகளை ஏற்படுத்துவார் என்று அவர் எண்ணியிருந்தார். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
அவர்கள் காரின் அருகில் வந்த போது, தாமரை லேசாய் தலை சுற்றுவது போல் உணர்ந்தாள், அன்று முழுவதும் அவள் ஒன்றும் சாப்பிடாததால்...!
"விளக்கை என் கிட்ட குடுத்துட்டு நீ கார்ல உட்காரு, தாமரை." என்றார்
தெய்வானை.
"சரிங்க, பாட்டி." என்று அவள் விளக்கை தெய்வானையிடம் கொடுத்த அடுத்த நிமிடம், அந்த விளக்கின் சுடர் அலை மோதத் துவங்கியது, அது கண்ணாடி கூண்டால் சூழப்பட்டு இருந்தபோதிலும்...! அவசரமாய் அதை தெய்வானையிடமிருந்து பெற்றுக் கொண்டாள் தாமரை. அவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில், தாமரை அதைப் பெற்றுக் கொண்ட அடுத்த நொடி, அந்த விளக்கு சாந்தமடைந்தது. மென்று விழுங்கிய பாட்டியை குழப்பத்தோடு ஏறிட்டாள் தாமரை. அப்படி நடக்க காரணம் என்ன என்பதை தெய்வானை புரிந்து கொண்டார். யாரோ அல்லது எதுவோ இந்த பூஜையை தடுத்து நிறுத்த முயற்சி செய்வது அவருக்கு புரிந்தது. ஆனால், அவை எதுவும் தாமரையை ஒன்றும் செய்துவிட முடியாது என்பதால் தான் அந்த பூஜையை அவ்வளவு சுலபமாய் அவளால் முடிக்க முடிந்திருக்கிறது! அதனால் தான் அந்த விளக்கை தெய்வானை பெற்ற அடுத்த நொடி அந்த விளக்கு அணையும் தருவாய்க்குச் சென்றது. அந்த பூஜை வெற்றிகரமாய் முடிந்ததற்கு முழுக்க முழுக்க தாமரையின் விசேஷ சக்தி தான் காரணம் என்பதை உணர்ந்தார் தெய்வானை.
விளக்கை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்தாள் தாமரை. ஓட்டுனருக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்ட பாட்டி, காரை மெதுவாய் செலுத்தும் படி கூறினார். வீட்டிற்கு வந்த தாமரை, விளக்கை பூஜை அறையில் வைத்து விட்டு, சமையல் அறைக்கு சென்றாள். கோவிலுக்கு செல்லும் முன் அவள் செய்து வைத்திருந்த சர்க்கரை பொங்கலை கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து பூஜையை முடித்தாள்.
"நம்ம முடிச்சிட்டோம், பாட்டி." என்றாள் குதூகலமாய்.
"உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல, தாமரை. முதல்ல நீ ஏதாவது சாப்பிடு." என்றார்.
"சரிங்க, பாட்டி."
"முதல்ல பாலை குடிச்சு விரதத்தை முடி. அப்புறம் ஏதாவது சாப்பிடு. இரு நான் உனக்கு பால் கொண்டு வரேன்" என்று சென்றார் பாட்டி.
அம்மனின் படத்தை பார்த்து, புன்னகையோடு ரத்னாவின் புகைப்படத்தின் பக்கம் திரும்பிய தாமரை, முகம் சுருக்கினாள், ரத்னாவின் புகைப்படத்திலிருந்து புகை போன்ற ஒன்று வெளியாவதை கண்டு. தன் கண்களில் கசக்கி அவள் அந்த படத்தை உற்றுப் பார்க்க, அவளது விழிகள் பெரிதாயின, அந்த புகை மறைந்து அங்கு ரத்னா தோன்றிய போது...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro