21 சூர்யாவின் உள்ளுணர்வு
21 சூர்யாவின் உள்ளுணர்வு
தன் அம்மா, புன்னகை புரிந்து கொண்டிருந்த புகைப்படத்தை பார்த்தான் சூர்யா. அந்தப் படம் அவன் தினமும் பார்ப்பது தான். ஆனால் இன்று அவரது புன்னகை அவனுக்கு புதிதாய் தெரிந்தது. அந்த விளக்கின் தீபத்தை அணைக்க முயன்று கொண்டிருந்த தாமரையை பார்த்த அவன், அவள் கையைப் பிடித்து நிறுத்தினான்.
அவள் அவனை கவலையாய் பார்த்து,
"நான் இதை தெரியாம ஏத்திட்டேன்." என்றாள்.
"பரவாயில்ல..."
"ஏன்னே தெரியல. இந்த விளக்கு அணையவே மாட்டேங்குது." என்று உதடு சுழித்தாள்.
"பரவாயில்ல. நீ அதை அணைக்க வேண்டாம்" என்று கூறி, அந்த விளக்கை எண்ணெயை ஊற்றி நிரப்பினான்.
சரி என்று அந்த இடத்தை விட்டு அகன்றாள் தாமரை. அவன் அம்மாவின் புகைப்படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, அங்கிருந்து அலுவலகம் கிளம்பி சென்றான், சற்று முன் நடந்தdh நினைத்தபடி. இவையெல்லாம் என்ன? தாமரை நீர் ஊற்றியவுடன் அவன் அறையில் இருந்த ரோஜா செடி துளிர் விட்டது. இன்று, அவனைத் தவிர வேறு யார் ஏற்றியும் எரியாத விளக்கு, தாமரை ஏற்றி எரிந்தது. இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? தாமரை யார்? மற்றவருக்கெல்லாம் முடியவே முடியாத விஷயங்கள் அவளுக்கு மட்டும் எப்படி சாத்தியமாகிறது? தனக்குள் பல கேள்விகளை கேட்டபடி காரை செலுத்தி சென்றான் சூர்யா.
.........
கடைத்தெருவுக்கு சென்று திரும்பிய பசுபதி, தாமரையை பார்த்து நின்றார். அவள் அவரை சமையலறைக்கு செல்லுமாறு சைகை செய்ய, அவர் சமையலறைக்கு சென்றார். அவரைப் பின்தொடர்ந்துச் சென்றாள் தாமரை, எந்த அவசரமும் காட்டாமல்.
"நீங்க வாங்கிட்டு வர சொன்ன பொருளை எல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன், மா" என்று கூறியபடி அந்த பொருட்களை எல்லாம் சமையலறை மேடையின் மீது அடுக்கினார் பசுபதி.
அதை பொறுமையாய் பார்த்தாள் தாமரை. அவள் கூறியிருந்த அனைத்து பொருட்களையும் அவர் வாங்கி வந்து விட்டிருந்ததால், திருப்தியோடு புன்னகை புரிந்தாள்.
"ரொம்ப நன்றி, பசுபதி அண்ணா." அவற்றை மீண்டும் பையிலேயே அடுக்கி அலமாரியில் வைத்து மூடினாள்.
"பாட்டி வந்து கேட்டா, இதை அவங்க கிட்ட குடுங்க"
"சரி மா."
பாட்டியின் அறையை நோக்கி சென்ற தாமரை, தரைதளம் வந்த அஞ்சலியை பார்த்து சிரித்தாள். மற்றவர்கள் வரவேற்பு அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
"தாமரை, நாங்க சிங்கப்பூர் போகல. ஆனா எங்க அம்மாவும் அப்பாவும், அண்ணனோட இந்தியாவுக்கு வந்து, இங்கேயே அவங்க கல்யாண நாளை கொண்டாடறோம்னு சொல்லிட்டாங்க." என்றாள் சந்தோஷமாய்.
"அவங்க எப்ப ப்ரோக்ராமை மாத்தினாங்க?" என்றார் அஞ்சனா.
"நேத்து ராத்திரி தான், ஆன்ட்டி. நான் பிரக்னண்டா இருக்கேன்னு தெரிஞ்சு அவங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அதனால என்னை பார்க்க அவங்களே இந்தியாவுக்கு வரேன்னு சொல்லிட்டாங்க. அப்படியே அவங்க கல்யாண நாளையும் இந்தியாவிலேயே கொண்டாடலாம்னு முடிவு எடுத்திருக்காங்க. நான் அதை மிஸ் பண்ண கூடாதுல்ல?"
"இது சூப்பர் ஐடியா, அண்ணி. செம ஜாலியா இருக்கும்." என்றாள் லாவன்யா.
"ஷியாம் கிட்ட சொல்லி ஒரு நல்ல பார்ட்டி ஹால் புக் பண்ண சொல்லு." என்றார் அஞ்சனா.
சரி என்று தலையசைத்த அஞ்சலி,
"தாமரை, நாளைக்கு நானும் லாவண்யாவும் ஷாப்பிங் போக போறோம். நீயும் எங்க கூட வரியா?" என்றாள்.
அதைக் கேட்ட தாமரை பதற்றம் அடைந்தாள். நாளை அவள் விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டிய நாள்.
"நாளைக்கு அமாவாசை. நான் எங்க அம்மா அப்பாவுக்காக விரதம் இருக்கிற நாள், அண்ணி." என்றாள் தாமரை.
"ஓ..." என்ற அஞ்சலி எதையோ யோசித்தாள்.
"விரதம்னா எப்படி?" என்றார் அஞ்சனா.
"நாளைக்கு தண்ணியை தவிர வேற எதுவும் சாப்பிட மாட்டேன்."
"ஒரு நாள் முழுக்கவா." என்றார் மனோரமா.
"ஆமாம், மாமி."
"இப்படி பட்டினி கிடக்குறது அவசியமா?"
பதில் கூறாமல் அமைதி காத்தாள் தாமரை.
"இந்த சின்ன வயசுலயே ஏன் தான் விரதம் எல்லாம் இருக்காங்களோ" என்று முணுமுணுத்தார் மனோரமா.
"லாவன்யா, நம்ம நாளன்னைக்கு தாமரையையும் அழைச்சுக்கிட்டு ஷாப்பிங் போகலாம்ல?" என்றாள் அஞ்சலி.
"தாராளமா போகலாம் அண்ணி. ஒன்னும் பிரச்சனை இல்ல." என்று அதற்கு ஒப்புக்கொண்டாள் லாவண்யா.
"எங்க கூட வர்றதுல உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே?" என்று கேட்க, தாமரை தயங்கினாள்.
"நம்ம சனிக்கிழமை ஷாப்பிங் போறோம். நீயும் எங்க கூட வர்ற..." என்றாள் அஞ்சலி.
சரி என்று தயக்கத்தோடு தலையசைத்து விட்டு பாட்டியின் அறைக்குச் சென்றாள் தாமரை.
"எதுக்காக நீ அவளை ஷாப்பிங் கூட்டிக்கிட்டு போக நினைக்கிற?" என்றார் அஞ்சனா.
"சும்மா தான், ஆன்ட்டி. அவ நம்ம வீட்டிலேயே இருக்கா. அதனால கூட கூட்டிக்கிட்டு போகலாம்னு நெனச்சேன்." என்றாள் அஞ்சலி.
"ஷாப்பிங்கை பத்தி பேசும் போது, தாமரை ஏதாவது சொல்றாளான்னு அண்ணி பாக்குறாங்கன்னு நினைக்கிறேன்..." என்று சிரித்தாள் லாவண்யா.
"என்னோட எண்ணம் அது இல்ல. ஆனாலும் அவ ஏதாவது சொல்லுவாளான்னு எதிர்பார்த்தேன் தான். ஆனா அவள் ஒன்னும் சொல்லல."
அவர்கள் தாமரை ஏதாவது கூறுவாளா, இல்லை இல்லை ஏதாவது கணிப்பாளா என்று எதிர்பார்க்க துவங்கி விட்டிருந்தார்கள்.
பாட்டியின் அறைக்கு வந்த தாமரை,
"பாட்டி, அஞ்சலி அண்ணி என்னை அவங்க கூட ஷாப்பிங் வர சொல்றாங்க" என்றாள்.
"அப்படியா?"
"ஆமாம் பாட்டி. ஆனா எனக்கு அவங்க கூட விருப்பமில்ல."
"ஏன்?"
"எனக்கு, ஷாப்பிங், கூட்டமான இடமெல்லாம் பழக்கமில்ல."
"அவங்க கூட்டமான இடத்துக்கெல்லாம் போக மாட்டாங்க. அவங்க போற இடமெல்லாம் ரொம்ப காஸ்ட்லியான இடம். அங்க கூட்டம் இருக்காது."
"ஐயையோ... அப்படின்னா நான் நிச்சயம் போக மாட்டேன்" என்று நகம் கடித்தாள்.
"ஏன் அப்படி சொல்ற?"
"எனக்கு அப்படிப்பட்ட இடத்துல கால் வைக்கவே பயம்."
"அதையெல்லாம் பழகிக்கோ"
"இல்ல பாட்டி. நான் அவங்க கூட போகல. ப்ளீஸ் எனக்கு உதவி பண்ணுங்க."
"நம்ம அதைப் பத்தி அப்புறமா யோசிக்கலாம்."
தாமரைக்கு பதற்றம் அதிகரித்தது.
"பசுபதி மார்க்கெட் போயிட்டு வந்துட்டானா?"
"வந்துட்டாரு பாட்டி. நம்ம கேட்ட எல்லா பொருளையும் வாங்கிக்கிட்டு வந்துட்டாரு."
"நீ அதை செக் பண்ணியா?"
"ஆமாம் பாட்டி. எல்லாமே கரெக்டா இருந்தது"
"சரி, எதுக்காக அவனை மூடி போட்ட விளக்கு வாங்கிகிட்டு வர சொன்ன?"
"நம்ம கோவில்ல இருந்து ஒரு விளக்கை ஏத்தி அதை வீட்டுக்கு கொண்டு வரணும்னு பண்டிதர் அண்ணன் சொன்னாரு. அதுக்காக தான் அந்த மாதிரி கண்ணாடி மூடி போட்ட விளக்கை வாங்கிட்டு வர சொன்னேன். ஒரு வேலை விளக்கை நம்ம அப்படியே கொண்டு வந்தா, காத்தடிக்கும் போது விளக்கு அணைஞ்சு போக வாய்ப்பு இருக்கு. அப்படி நடந்தா மனசுக்கு சங்கடமாயிடும், பாட்டி."
"நீ சொல்றதும் சரி தான். இது நல்ல ஐடியா." என்று திருத்தியோடு கூறினார். அந்த பூஜையை நல்லபடியாக செய்து முடித்து, தங்கள் குடும்பத்திற்கு தாமரை வெளிச்சம் கொண்டு வருவாள் என்று நம்பினார் அவர்.
சூர்யா ட்ரேடர்ஸ்
கண்களை மூடி தன் இருக்கையில் சாய்ந்த படி அமர்ந்திருந்தான் சூர்யா. தாமரை விளக்கை அணைக்க முடியாமல் தவித்த காட்சி அவனது மூடி இருந்த கண்களுக்குள் விரிந்தபடி இருந்தது. எப்படி அவள் விளக்கை ஏற்றினாள்? என்ற கேள்வி, விடை காண முடியாததாய் இருந்தது. அது அவனை மனநிம்மதி இழக்க செய்தது. அவள் அவர்களது வீட்டிற்கு வந்த பிறகு, அவன் அம்மா சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களுமே நல்ல முறையில் நடந்து கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். அவள் செய்வதெல்லாம் சரியாகவே இருந்தது. இவை எல்லாம் அவனுக்கு உணர்த்துவது என்ன? இதற்கெல்லாம் அவன் செய்ய வேண்டியது என்ன? என்று யோசித்துக் கொண்டிருந்த அவன் தன் கையை யாரோ தொடுவதை உணர்ந்து கண்விழித்தான். அவனை பார்த்து புன்னகைத்தபடி நின்றிருந்தாள் ஷீலா.
"என்ன?" என்று உயிர் இல்லாமல் கேள்வி எழுப்பினான்.
"இன்னைக்கு என்னோட செகண்ட் ப்ரொபோசல் டே"
"அப்படின்னா?"
"இந்த நாள்ல தான், ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் உன்னை ப்ரொபோஸ் பண்ணேன்."
"அதுக்கு?" என்றான் எரிச்சலோடு.
"நம்ம இன்னைக்கு லஞ்சுக்கு வெளியில போலாமா?"
எழுந்து நின்று, தன் அமர்ந்திருந்த நாற்காலியை எட்டி உதைத்தான்.
"எனக்கு உன்னை பிடிக்கலன்னு உன்னால புரிஞ்சுக்க முடியலையா? எதுக்காக இப்படி மறுபடி மறுபடி வந்து என்னை டார்ச்சர் பண்ற?" என்று எப்பொழுதும் இல்லாத அளவிற்கு அவளிடம் கடுமை காட்டினான்.
அதை கண்டு பின்வாங்கிய ஷீலாவின் கண்களில் நீர் கட்டியது.
"நீ தான் புரிஞ்சிக்க மாட்டேங்குற. ரெண்டு வருஷமா நான் உனக்காக உருகிகிட்டு இருக்கேன். ஆனா நீ என்னை சட்டை கூட பண்ண மாட்டேங்குற. உனக்கு அப்படி என்ன
ஈகோ?"
"ஷட் அப். என் ஈகோவை நான் காட்டினா, நீ எனக்கு முன்னாடி நின்னு, என்கிட்ட இப்படி ஆர்கிவ் பண்ணிக்கிட்டு இருக்க மாட்ட. அதை புரிஞ்சிக்கோ" என்று எச்சரிக்கும் பார்வை வீசினான்.
"ஓஹோ, இப்போ நீ எனக்கு பாஸ் மாதிரி பேச ஆரம்பிச்சிட்டியா? நான் இங்க வேலை செய்ற ஒரு சாதாரண எம்ப்ளாயின்னு எனக்கு ஞாபகப்படுத்துறியா?"
எரிச்சலில் தன் பல்லை கடித்தான் சூர்யா. ஷீலா அங்கிருந்து அழுதபடி சென்றாள்.
அவர்களது சண்டையால் எழுந்த சத்தம், அமரனை சூர்யாவின் அறைக்கு அழைத்து வரும் அளவிற்கு இருந்தது. அவனைப் பார்த்தவுடன் தன் நாற்காலியை இழுத்து அமர்ந்தான் சூர்யா.
"இதெல்லாம் என்ன சூர்யா?"
"நான் என்னை ஒரு பாஸ்னு நினைச்சி எதுவும் பேசல. அவ அப்படி நினைச்சுகிட்டா அது என்னோட தப்பில்ல."
"உனக்கு ஏன் அவளை பிடிக்கல, சூர்யா?"
"அவ என்னை காதலிக்கிறா அப்படிங்குயிறதுக்காக எனக்கு அவளை பிடிக்கணுமா?"
"நான் அப்படி சொல்லல. அவகிட்ட இல்லாத, அப்படி எதைத்தான் நீ உன் பார்ட்னர் கிட்ட எதிர்பார்க்கிற?"
அந்த கேள்விக்கு சூர்யாவிடம் பதில் இல்லை. ஏனென்றால் அந்த கேள்விக்கு அவனுக்கே பதில் தெரியவில்லை. அவனுடைய விருப்பங்கள் மாறிவிட்டது போல் உணர்ந்தான் அவன்.
"உனக்கு ஒரு நல்ல ஃபிரண்டா இருக்கிறதால சொல்றேன், அவளை மிஸ் பண்ணிட்டோம்னு நீ ஃபியூச்சர்ல வருத்தப்பட வேண்டாம்னு நினைக்கிறேன், சூர்யா."
"நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா, நான் வருத்தப்பட மாட்டேன்னு உன்னால சொல்ல முடியுமா?"
பதில் கூறாமல் நின்றான் அமரன்.
"எனக்கு ஃப்ரண்டா இருக்குறதால, நீ என்னோட விருப்பம் என்னன்னு தெரிஞ்சுக்கணும், அமரா. உனக்கே நல்லா தெரியும், ஒருவேளை எனக்கு ஷீலாவை பிடிச்சிருந்தா, அவளை ரெண்டு வருஷமா நான் காக்க வச்சிருப்பேன்னு நினைக்கிறாயா?"
இல்லை என்று தலையசைத்தான் அமரன்.
"ஏன்னு தெரியல, ஒரு தடவை கூட அவ எனக்கானவன்னு என்னால் யோசிக்கவே முடியல. நான் என்னோட உள்ளுணர்வை ரொம்ப மதிக்கிறேன், அமரா. அது எப்பவுமே என்னை ஏமாத்தினது இல்ல. அது ஷீலா எனக்கான பொண்ணுன்னு எப்பவும் சொன்னதில்ல. ஒரு பொண்ணு, என் மனசையும் புத்தியையும் தொல்லைப்படுத்தணுமே, தவிர அவளே ஒரு தொல்லையா எனக்கு தெரியக்கூடாது."
"ஷீலாவை நீ தொல்லையா நினைக்கிறியா?"
"ஆமாம். எப்பெல்லாம் அவ ஃபீலிங்ஸ் பத்தி பேசுறாளோ, அதைக் கேட்டாலே எனக்கு எரிச்சலா வருது."
"அப்படின்னா இதைப் பத்தி பேசுறதுக்கு எதுவும் இல்ல." என்று கூறியபடி அங்கிருந்து சென்றான் அமரன்.
மீண்டும் தன் நாற்காலியில் சாய்ந்தான் சூர்யா. அவன் அமரனிடம் கூறிய வார்த்தைகள் அவன் தலைக்குள் எதிரொலித்தன. *ஒரு பெண் என் மனதையும் புத்தியையும் தொல்லை படுத்த வேண்டும்* அவனது மனமும் புத்தியும் இப்பொழுதெல்லாம் தாமரையால் தொல்லை செய்யப்படவில்லையா? அது, அவனது அம்மாவின் ரோஜா செடியை அவள் துளிர்க்க வைத்தால் என்பதற்காக மட்டும் தானா? அல்லது, அவள் திக்கற்றவள் என்பதற்காகவா? அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது, தாமரையை பற்றி நினைக்கும் போது அவனுக்கு எந்த எரிச்சலும் ஏற்படவில்லை.
.......
சூர்யா இல்லம்
அழைப்பு மணியின் ஓசை கேட்டு ஓடி சென்று கதவை திறந்தாள் லாவண்யா. அங்கு மாயா நின்றிருந்ததை பார்த்து பிரகாசமாய் புன்னகைத்தாள். ஆனால் மாயாவின் முகம் விரைப்பாய் இருந்தது
"எப்படி இருக்கீங்க, ஆன்ட்டி?"
"ம்ம்ம்..." என்றபடி உள்ளே நடந்தார்
"நான் அமெரிக்காவிலிருந்து உங்களுக்காக ஒரு கிஃப்ட் வாங்கிகிட்டு வந்திருக்கேன்."
நடப்பதை நிறுத்திவிட்டு அவளை திடமாய் பார்த்த மாயா,
"நீ ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும். உன் மேல ஆகாஷுக்கு விருப்பம் இல்ல. புரிஞ்சுதா?"
"ஏன் ஆன்ட்டி? அவரோட ஃப்ரெண்டுக்கு தங்கச்சியா இருக்கிறது என்னோட தப்பா?"
"இங்க பாரு, எண்ணங்கள். மாறுபடும். அவனுக்கு தன் ஃபிரண்டோட தங்கச்சியோட கமிட் ஆக்குறதுல விருப்பமில்ல."
"எனக்காக நீங்க அவர்கிட்ட பேசலாமே..."
"என் பிள்ளைக்கு எது விருப்பமோ நான் அதைத்தான் செய்வேன். அவனோட விருப்பத்துக்கு நான் மதிப்பு கொடுக்கிறேன்."
"என் அண்ணனை நான் சம்மதிக்க வச்சிட்டா, அப்போ உங்களுக்கு சம்மதமா?"
"எதுக்காக நீ இப்படி பிடிவாதம் பிடிக்கிற?"
"ஐ லவ் ஹிம், ஆன்ட்டி."
"ஆனா அவன் உன்னை காதலிக்கல." என்ற படி உள்ளே சென்ற அவர், மற்றவருடன் அமர்ந்து பழச்சாறு பருகி கொண்டிருந்த தெய்வானையை பார்த்து புன்னகை புரிந்தார்.
"மாயா, வா வா... உன்னோட காசி யாத்திரை எப்படி இருந்தது?"
"ரொம்ப திருப்தியா இருந்தது மா. இதை நான் உங்களுக்காக வாங்கிட்டு வந்தேன்." என்று ஸ்படிக மாலையையும் கங்கா தீர்த்தத்தையும் அவரிடம் கொடுத்தார் மாயா.
அதை பார்த்த பாட்டி உற்சாகமடைந்தார்.
"ரொம்ப தேங்க்ஸ், மாயா."
மாயாவின் எதிரே புன்னகையோடு அமர்ந்தாள் லாவண்யா. அதை பார்த்த மாயாவின் முகபாவம் மாறியது.
"அம்மா நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்க நினைக்கிறேன்."
லாவண்யா நிமிர்ந்த அமர்ந்தாள்.
"சொல்லு, மாயா."
"நான் ஆகாஷுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைக்கிறேன்..." என்றபடி ஆர்வத்தோடு அவரையே பார்த்துக் கொண்டிருந்த லாவண்யாவை பார்த்தார்.
மாயாவின் அடுத்த வார்த்தைகள், லாவண்யாவிற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
"ஆகாஷுக்கு தாமரையை கல்யாணம் பண்ணி கொடுக்குறீங்களா?"
ஆனால் லாவன்யாவின் அதிர்ச்சி நீடிக்க வில்லை. ஏனென்றால், அதைக் கேட்ட தாமரை,
"இல்ல, வேண்டாம்..." என்றாள்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro