Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

16 உணர்ச்சிவசத்தில் சூர்யா

16 உணர்ச்சிவசத்தில் சூர்யா

பாட்டி சமையல் அறைக்கு செல்வதை பார்த்த தாமரை, அவரிடம் சென்று,

"நீங்க என்ன செய்யப் போறீங்க, பாட்டி?" என்றாள்.

"ஆகாஷுக்கு ஜூஸ் போடப் போறேன். "

"அவர் இங்க வரப்போறாரா?"

"ஏற்கனவே வந்துட்டான். அவனுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. அதனால சூர்யா அவனை இங்க கூட்டிகிட்டு வந்திருக்கான்."

"ஆக்சிடென்ட்டா? அவர் இப்போ எப்படி இருக்காரு?"

"பரவாயில்ல... அவங்க அம்மா காசிக்கு போய் இருக்கா. அவனை பார்த்துக்க யாரும் இல்லைன்னு நம்ம சூர்யா அவனை இங்க கூட்டிட்டு வந்துட்டான்."

"அவருக்கு நான் ஜூஸ் போடுறேன், பாட்டி."

குளிர்சாதன பெட்டியில் இருந்த ஆரஞ்சு பழங்களை எடுத்து பழச்சாறு தயாரிக்க தொடங்கினாள் தாமரை.

"சூர்யா உன்மேல கோவப்பட்டானா?" என்றார் பாட்டி.

"இல்ல, பாட்டி. அவர் என்கிட்ட நல்லா பேசினார்."

"நெஜமாவா?"

"ஆமாம், பாட்டி, அவங்க அம்மாவை பத்திக் கூட பேசினாரு."

"அம்மாவை பத்தியா? அவளைப் பத்தி என்ன பேசினான்?" என்றார் பாட்டி அதிசயமாய்.

"அவர் தோட்டத்துல இருந்த இலை இல்லாத செடியை பார்த்து, அதை பத்தி அவர் கிட்ட பேசினேன்."

"அதுக்கு அவன் என்ன சொன்னான்?"

"அந்தச் செடியை வச்சது அவங்க அம்மான்னு சொன்னாரு. அவங்க இறந்ததுக்கு பிறகு அந்த செடி இலையை உதிர்த்திட்டதாகவும், ஆனாலும், இன்னும் பச்சையா இருக்குன்னு சொன்னாரு."

ஆம் என்று தலையசைத்தார் பாட்டி.

"அவருக்கு அவங்க அம்மாவை ரொம்ப பிடிக்கும் தானே?"

ஆம் என்று தலையசைத்த பாட்டி, ரத்னா கொலை செய்யப்பட்ட விஷயத்தை அவளிடம் கூறவில்லை. அவள் ஏற்கனவே தன்னை சுற்றி யாரோ இருப்பதாய் எண்ணி பயந்து கொண்டிருக்கிறாள். அதைப் பற்றி கூறினால் மேலும் அவள் பயப்பட கூடும். அவள் பயப்பட வேண்டாம் என்று நினைத்ததால், அமைதியாய் இருந்தார் பாட்டி.

"இதை நான் ஆகாஷ் சார் கிட்ட கொடுக்கட்டுமா?" என்றாள்.

"குடுக்குறியா?"

"தாராளமா,"

"அவன் நந்தா ரூம்ல இருக்கான். ஃபர்ஸ்ட் ஃபுளோர்ல, செகண்ட் ரூம்."

சரி என்று தலையசைத்து விட்டு, நந்தாவின் அறையை நோக்கி சென்றாள். பாதி சாத்தப்பட்டிருந்த கதவை தட்டினாள். கட்டிலில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஆகாஷ், தாமரை நிற்பதை பார்த்து எழுந்து அமர்ந்தான்.

"தாமரை நீங்களா?"

"நான் உள்ள வரலாமா?"

"வாங்க தாமரை," என்று கட்டிலை விட்டு கீழே இறங்கினான்.

"இப்போ உங்களுக்கு எப்படி இருக்கு?"

"பரவாயில்ல,"

"உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆனதா பாட்டி சொன்னாங்க. அதனால தான் நீங்க எப்படி இருக்கீங்கன்னு கேட்க வந்தேன்."

"இப்போ எவ்வளவோ பரவாயில்ல. நீங்க வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்."

"பாட்டி இதை உங்ககிட்ட கொடுக்க சொன்னாங்க." பழச்சாறு தம்ளரை அவனை நோக்கி நீட்டினாள்.

"ரொம்ப தேங்க்ஸ்." என்று அதை அவளிடம் இருந்து பெற்றுக் கொண்டான்.

"நீங்க உங்க அம்மா கூட காசிக்கு போகலையா?"

"இல்லங்க, தாமரை. அவங்க ஃபிரண்ட்ஸோட போயிருக்காங்க. நான் காசிக்கு போனேன்னு தெரிஞ்சா, என் ஃபிரண்ட்ஸ் என்னை கிண்டல் பண்ணுவாங்க. ஏன்னா இது காசிக்கு போற வயசு இல்லையே."

"காசிக்கு போறதுக்கு ஏதாவது ஏஜ் லிமிட் இருக்கா என்ன?"

"அப்படி ஒன்னும் இல்ல. ஆனாலும் வயசானவங்க தானே அப்படிப்பட்ட இடத்துக்கு எல்லாம் போகணும்னு நினைப்பாங்க?"

"யார் சொன்னது? எனக்கு காசிக்கு போகணும்னு ரொம்ப ஆசை. எங்க தாத்தா இருந்தப்போ அவரை என்னை கூட்டிகிட்டு போக சொல்லி கேட்டுகிட்டே இருந்தேன். ஆனா அவருக்கு தான் டைம் கிடைக்கல. அது எல்லாரும் பார்க்க வேண்டிய ஒரு நல்ல இடம். அதுக்கு வயசு எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. ஏன்னா, யார், இந்த உலகத்தை விட்டு எப்ப போவாங்கன்னு சொல்ல முடியாது, இல்லையா?"

"இவ்வளவு சின்ன வயசுல நீங்க ரொம்ப பெரிய விஷயங்களை பேசுறீங்க." என்று மென்மையாய் புன்னகைத்தான் ஆகாஷ்.

"அது தான் எதார்த்தம்."

"ஆமாம், ஆனா, அனேகமானவங்க சாவுங்கற உண்மையை உணர்றதே இல்ல."

"ஏன்னா, அது ரொம்ப வருத்தம் தரக்கூடிய விஷயம்." என்று தன் தாத்தாவை எண்ணிக் கொண்ட தாமரை,

"இந்த ஜூஸை குடிங்க. ஏதாவது வேணும்னா என்னை கூப்பிடுங்க. தயங்க வேண்டாம்." என்றாள்.

"நிச்சயமா..."

அவள் அங்கிருந்து நடக்க,

"தாமரை..." என்று அவளை அழைத்தான் ஆகாஷ். அவள் திரும்பிப் பார்க்க,

"தேங்க்யூ சோ மச்." என்றான்.

அவனை பார்த்து புன்னகைத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். தன் கையில் இருந்த பழச்சாறை பார்த்து புன்னகைத்தபடி அதை பருக துவங்கினான் ஆகாஷ்.

இதற்கிடையில்...

ஷ்யாமுடன் நந்தா வீடு திரும்பினான். அவர்கள் அவசரமாய் சூர்யாவின் அறையை நோக்கி செல்வதை பார்த்த பாட்டி,

"ரெண்டு பேரும் எங்க அவ்வளவு அவசரமா போறீங்க?" என்றார்.

"சூர்யாவை பார்க்க போறோம், பாட்டி." என்றான் நந்தா

"என்ன அவ்வளவு அவசரம்?"

"பின்ன என்ன பாட்டி? அவன் மயிரிழையில உயிர் தப்பி இருக்கானே!"

"நீ என்ன சொல்ற?"

"உங்களுக்கு அதைப் பத்தி எதுவும் தெரியாதா?"

இல்லை என்ற தலையசைத்தார்.

"சூர்யாவை கொல்றதுக்காக ஒரு பெரிய அட்டாக் நம்ம ஆஃபீஸ்ல நடந்தது."

"என்ன சொல்ற நீ?" என்றார் பாட்டி அதிர்ச்சியோடு.

"ஆமாம், பாட்டி, நல்ல வேலை, இன்னைக்கு சூர்யா ஆஃபிசுக்கு வரல. அவன் டிராஃபிக்ல மாட்டிக்கிட்டான்னு நினைக்கிறேன்."

அமைதியாய் நின்றிருந்த ஷ்யாமை பார்த்தார் பாட்டி. குடும்பத்தோடு எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது நந்தாவுக்கு வழக்கம் தான். ஆனால் ஷியாம் அப்படியல்ல. அவன் எதிலும் கலந்து கொள்ளும் பழக்கம் இல்லாதவன். அப்படி இருக்கும் பொழுது, இன்று மட்டும் ஏன் திடீரென்று அவனுக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது? என்று அவன் மீது சந்தேகம் கொண்டார் பாட்டி.

"கிரகப்பிரவேசத்துக்கு போயிட்டு, அதுக்கப்புறம் நாங்க ஆஃபீஸ் போனோம். அங்க போனதுக்கு பிறகு தான் தெரிஞ்சது, நம்ம ஆஃபீஸ்ல அட்டாக் நடந்திருக்குன்னு. போலீஸ் இன்னைக்கு ஆஃபீஸ்க்கு லீவு விட சொல்லி நம்ம சூர்யா கிட்ட சொல்லிட்டாங்க." என்றான் நந்தா.

அதைக் கேட்ட பாட்டி அதிர்ச்சியில் உறைந்தார். அப்படி என்றால் தாமரையின் வார்த்தைகள் உண்மையாகி விட்டது. நல்ல வேலை தாமரை சூர்யாவை குளியலறையில் வைத்து பூட்டி விட்டாள். இல்லாவிட்டால் என்ன நிகழ்ந்திருக்குமோ!

நந்தாவும், ஷியாமும் சூர்யாவின் அறையை நோக்கி சென்றார்கள். அவர்களை பின் தொடர்ந்தார் பாட்டிm சூர்யாவை பார்த்தவுடன் ஓடி சென்று அவனை அணைத்துக் கொண்டான் நந்தா.

"தேங்க் காட், உனக்கு ஒன்னும் ஆகல, சூர்யா." என்றான் நந்தா உணர்ச்சிவசப்பட்டு.

தன்னையே ஏராளமான பொருளோடு பார்த்துக் கொண்டிருந்த பாட்டியை பார்த்தான் சூர்யா.

"நாங்க ஆஃபீசுக்கு போனப்போ இன்ஸ்பெக்டர் தான் நடந்த விஷயத்தை எங்ககிட்ட சொன்னாரு." என்றான் ஷியாம்.

"இன்னைக்கு நீ ஆபீசுக்கு வராம போனது நல்லதா போச்சு." என்றான் நந்தா.

"பை தி பை, இன்னைக்கு ரொம்ப முக்கியமான டீல் சைன் பண்ண வேண்டியது இருந்துதே,  அதை எப்படி நீ மிஸ் பண்ண?" என்றான் ஷியாம். அவன் கேட்ட கேள்வி பாட்டியின் மனதை உறுத்தியது.

"நீ கேட்ட கேள்விக்கு என்ன அர்த்தம், ஷாம்?" என்றார் அவர் ஏமாற்றத்தோடு.

"இல்ல, பாட்டி, முக்கியமான மீட்டிங்ன்னா, நம்ம சூர்யா லேட்டாக்க கூட விரும்ப மாட்டான். ஆனா இன்னிக்கு அவன் போகாம இருந்ததை என்னால நம்ப முடியல."

சூர்யா அவனுக்கு பதில் சொல்லட்டும் என்று காத்திருந்தார் பாட்டி. அவன் என்ன கூறுகிறான் என்று தெரிந்து கொள்ள வேண்டும் அவருக்கு.

"நான் டிராபிக்ல மாட்டிக்கிட்டேன்." என்று பொய்யுரைத்தான் சூர்யா.

அது பாட்டிக்கு நிம்மதியை அளித்தது. ஏனென்றால், பூஜை முடியும் வரை, தாமரைக்கு இருக்கும், 'நடப்பதை முன்பே உணரும் சக்தி' பற்றி அங்கிருக்கும் மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம் என்று எண்ணினார். ஏனென்றால், கொலையாளி அவர் குடும்பத்தை சார்ந்த ஒருவர் என்பதால், அவர் பூஜையை தடுக்க முயலலாம்.அது நடக்க கூடாது என்று எண்ணினார் பாட்டி.

"நம்ம அடுத்த ப்ராஜெக்டை நான் வீட்ல இருந்தே கோட் பண்ணிடறேன்." என்றான் ஷியாம்.

சரி என்று தலையசைத்த சூர்யா,

"ஆகாஷ் உன்னோட ரூம்ல தான் இருக்கான்." என்றான்.

"ஆமாம், நம்ம ஆஃபீஸ் ஸ்டாஃப் சொன்னாரு, வந்த கொலைகாரனுங்க ஆகாஷை அடிச்சிட்டாங்களாமே...!"

தன் விழிகளை சுருக்கி, சூர்யாவை பார்த்தார் பாட்டி. அவனுக்கு நேர்ந்தது விபத்து என்று கூறினானே சூர்யா! பாட்டியை பார்க்காமல் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பினான் சூர்யா. எப்படியோ சூர்யாவுக்கு உண்மை புரிந்து விட்டது. அவன் எதையும் சுலபமாய் ஒப்புக்கொள்வதில்லை என்றாலும்,  அவனால் இனிமேல் இதை ஒப்புக் கொள்ளாமல் இருக்கவும் முடியாது என்று எண்ணியபடி அங்கிருந்து நடந்தார் பாட்டி.

.........

ஆகாஷின் அறையிலிருந்து வந்த தாமரை, அழைப்பு மணியின் ஓசை கேட்டு, ஓடி சென்று கதவை திறந்தாள். பெரிய பெட்டிகளுடன் சிலர் மூவர் இருப்பதை பார்த்தாள்.

"யார் நீ?" என்றாள் அதில் இருந்த ஓர் இளவயதுக்காரி.

"நான் தாமரை."

"அட, வந்துட்டீங்களா அக்கா?" என்று மனோரமா மகிழ்ச்சியோடு அவர்களை நோக்கி ஓடி வந்தார். அவர்களும் மனோரமாவை பார்த்து புன்னகை புரிந்தார்கள்.

"அத்தை, அக்கா அமெரிக்காவில் இருந்து வந்துட்டாங்க." என்றார் மனோரமா.

அவர்கள் ஷாமின் பெற்றோர்கள் என்பது தாமரைக்கு புரிந்து போனது. அவர்களை நோக்கி புன்னகையோடு வந்தார் பாட்டி.

"எப்படி இருக்கீங்க, அம்மா?" என்றார் அவரது மூத்த மகனான சுதாகர்.

"நான் நல்லா இருக்கேன்."

"யார் இந்தப் பொண்ணு, அத்தை?" என்றார் அஞ்சனா தாமரையை சுட்டிக் காட்டி.

"நம்ம குலதெய்வம் கோவிலில் இருந்தாரே சிவசங்கர், அவரோட பேத்தி, தாமரை." என்றார் மனோரமா, பாட்டியை முந்திக்கொண்டு.

"இவ இங்க என்ன செய்றா?"

"அவளுக்கு யாருமே இல்லையாம்..." என்றார் மனோரமா

"நீ என்ன சொல்ற? அப்படினா, அவ இங்க தான் இருக்க போறாளா?" என்றார் அஞ்சனா.

"ஆமாம் கா. அவளை இங்கேயே தங்க வைக்கத் தான் அத்தை கூட்டிக்கிட்டு வந்திருக்காங்க."

"நம்ம வீட்ல தான் ஏற்கனவே நிறைய வேலைக்காரங்க இருக்காங்களே..." என்றார் அஞ்சனா.

"அக்கா, நம்ம அப்படி எல்லாம் பேசக்கூடாது. பேசினா அத்தைக்கு ரொம்ப கோவம் வந்துடும்." என்று கிண்டலாய்க் கூறினார் மனோரமா.

பாட்டியை பார்த்த அஞ்சனா,

"இது அனாதை ஆசிரமம்னு நினைச்சீங்களா? எப்போதிலிருந்து நீங்க இப்படி அனாதைங்களுக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பிச்சீங்க?" என்றார் தாமரையை பார்த்தவாறு.

"நாக்கை அடக்கி பேசு, அஞ்சனா. நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு முன்னாடி இப்படி போசுறது சரியில்ல." என்று குரலில் கடுமை காட்டினார் பாட்டி.

தாமரை வேதனையோடு தலை குனிந்து கொண்டாள்.

"அம்மா, எதுக்காக இப்படி தேவை இல்லாமல் கோபப்படுறீங்க? முன்ன பின்ன தெரியாதவங்களை வீட்டுக்குள்ள கொண்டு வந்து வைக்கிறது பாதுகாப்பு இல்லன்னு உங்களுக்கு தெரியாதா?" என்று தன் மனைவிக்கு வக்காலத்து வாங்கினார் சுதாகர்.

"அவ ஒண்ணும் முன்ன பின்ன தெரியாத பொண்ணு இல்ல. நம்ம சிவசங்கரோட பேத்தி."

"அவளை இங்க கூட்டிகிட்டு வரதுக்கு முன்னாடி எங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்கணும்னு உங்களுக்கு தோணலையா?" என்றார் அஞ்சனா.

"சூர்யா கிட்ட கேட்டு தான் அவளை கூட்டிகிட்டு வந்தேன்."

"ஓஹோ... அவங்க என்ன சொன்னாங்கன்னு கேட்டீங்களா? அவங்க சூர்யா கிட்ட பர்மிஷன் வாங்கிட்டாங்களாம்...! அதுக்கு என்ன அர்த்தம்? அவங்க இந்த வீட்டு ஓனர் கிட்ட பர்மிஷன் வாங்கியிருக்காங்க. அதனால நம்ம எல்லாரும் வாயை மூடிக்கிட்டு இருக்கணும்." என்று குத்தலாய் பேசினார் சஞ்சனா.

சுதாகர் ஏதோ கூற நினைத்து, சூர்யாவின் குரல் கேட்டு நின்றார்.

"நீங்க எல்லாரும் எப்ப வந்தீங்க?"

அவன் மாடிப்படியிலிருந்து இறங்கி வருவதை பார்த்த அவர்கள், தங்களை சமாளித்துக் கொண்டு, முகத்தை சிரித்தது போல் மாற்றிக் கொண்டார்கள்.

"இப்போ தான் வந்தோம். உன்னை பத்தி தான் கேட்டுக்கிட்டு இருந்தோம்." என்று பல் தெரிய சிரித்தார் அஞ்சனா.

"உங்க ட்ரிப் எப்படி இருந்தது, லாவி?" என்று லாவன்யாவிடம் கேட்டான் சூர்யா.

"செம சூப்பரா இருந்தது, அண்ணா. உன்னோட ஷேர் பண்ண நிறைய விஷயம் இருக்கு." என்றாள் லாவன்யா.

"ஷ்யூர்... அதை நம்ம நிதானமா செய்யலாம். முதல்ல போய் ஃ பிரஷ் ஆகு."

"யா..." என்றபடி தனது பெரிய பெட்டிகளை உருட்டிக் கொண்டு சென்றாள் அவள்.

சுதாகரும் அஞ்சனாவும் கூட தத்தம் அறைகளுக்கு சென்றார்கள். மனோரமா அவர்களை பின்தொடர்ந்து சென்றார். அதை பார்த்த தாமரைக்கு ஆச்சரியமாய் போனது. பாட்டியை அவ்வளவு கேள்விகள் கேட்ட அவர்கள், சூர்யாவை பார்த்தவுடன் வாயை மூடிக் கொண்டு விட்டார்கள்.

அவள் அங்கிருந்து செல்ல நினைத்த போது,

"தாமரை..." என்று அவளை அழைத்தான் சூர்யா.

"அவங்க பேசுனத எல்லாம் பெருசா எடுத்துக்காத. விட்டு தள்ளு." என்றான்.

அதைக் கேட்டு வியந்தாள் தாமரை. அவர்கள் பேசியதை அவன் கேட்கவில்லை என்று எண்ணினாள். ஆனால் அவன் கேட்டிருக்கிறான். அவர்கள் அதைப் பற்றி அவனிடம் ஒன்றும் கேட்க மாட்டார்கள் என்று அவனுக்கு தெரிந்திருக்கிறது.

"அவங்க பேசுனதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்."

"பரவாயில்லை விடுங்க. உண்மையா சொல்றேன், நான் ஏன் இங்க இருக்கேன்னு எனக்கே புரியல. நான் இங்கிருந்து போறது தான் எனக்கு நல்லதுன்னு நினைக்கிறேன்."

சூர்யா ஏதோ சொல்ல முயன்ற போது, தன் கையை காட்டி அவனை தடுத்து நிறுத்தி,

"பாட்டிக்காக நான் இன்னும் கொஞ்ச நாள் இங்க இருப்பேன். அதுக்கப்புறம்..." தன் தலையை இடவலமாய் அசைத்த படி அங்கிருந்து சென்றாள்.

"நம்ம ஆளுங்களுக்கு நாகரிகத்தோட 'ஆனா ஆவன்னா' கூட தெரியாது." என்று பெருமூச்சு விட்டபடி தன் அறைக்குச் சென்றார் பாட்டி.

தாமரைக்காக வருத்தப்பட்டான் சூர்யா. அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று அவனுக்கு புரியவில்லை. தனக்கென்று யாரும் இல்லை என்ற உணர்வு, நரகத்திற்கு சமம் என்று எண்ணியபடி தன் அறைக்குச் சென்றான்.

தாமரை அன்று இரவு சாப்பிட உணவு மேஜைக்கு வரவில்லை.

சூர்யாவின் கேள்வியை கேட்டு அனைவரும் சாப்பிடுவதை நிறுத்தினார்கள்.

"தாமரை எங்க, பாட்டி?"

"அவ என்னோட ரூம்ல இருக்கா."

"எதுக்காக அவ சாப்பிட வரல?"

"அவளுக்கு பாலே போதும்னு சொல்லிட்டா."

"அவ அதையே நாளைக்கு சொன்னா, நாளைக்கும் போனா போகுதுன்னு விட்டுடுவீங்களா? அவளை அப்படி இருக்க விடாதீங்க." என்றான்.

பாட்டி சரி என்று தலையசைக்க, மற்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

மறுநாள் காலை

அலுவலகம் செல்வதற்காக குளித்து தயாரானான் சூர்யா. பசுபதி அவனுக்கு காபி கொண்டு வந்து கொடுத்தார். தன் கழுத்தில் இருக்கும் ட்டையை சரிப்படுத்திய படி காப்பி குவளையை எடுத்து பருகினான். அடுத்த வாய் காப்பியை அவன் குடிக்க நினைத்த போது, அவனது கரங்கள் பாதியிலேயே நின்றது. திகைப்பில் அவனது விழிகள் அகன்றன. குவளையை பிடித்திருந்த அவனது கரம், அனிச்சையாய் கீழே இறங்கியது. அந்த குவளையை மேசையின் மீது வைத்துவிட்டு, தன் அம்மாவின் ரோஜா செடியை நோக்கி ஓடினான். இத்தனை வருடங்களாய் ஒரு இலையை கூட துளிர்க்காக அந்த செடி முழுவதும் சிறு சிறு சிகப்பு நிற துளிர்கள் துளிர்திருந்தது. அதை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட சூர்யாவின் கண்கள் அனிச்சையாய் கலங்கின.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro