Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

15 காய்ந்த ரோஜா செடி

15 காய்ந்த ரோஜா செடி

அந்தத் தோட்டத்திற்கு மத்தியில் இருந்த காய்ந்த ரோஜாச் செடியைப் பார்த்தாள் தாமரை. அதைப் பார்த்தபடி அப்படியே நின்றாள். அந்தச் செடியை அப்புறப்படுத்த சூர்யா மறந்துவிட்டது போல் தோன்றவில்லை. ஏனென்றால் அந்தத் தோட்டம் வெகு அழகாய் பராமரிக்கப்பட்டு இருந்தது. அப்படி இருக்க, அந்தக் காய்ந்தச் செடியை ஏன் சூர்யா அங்கு வைத்திருக்கிறான்? அவளையே பார்த்தபடி காப்பியைப் பருகிக் கொண்டிருந்த சூர்யாவைப் பார்த்துச் சங்கடத்துடன் புன்னகைத்தாள்.

"இவ்வளவு பெரிய ரூம்ல இருக்க உங்களுக்குப் பயமா இல்லையா? இதைவிட சின்னதா இருக்கிற கெஸ்ட் ரூம்ல கூட எனக்கு தனியா இருக்க பயமா இருக்கு." என்று சம்பந்தமில்லாமல் பேசினாள், அந்த செடியைப் பார்த்தபடி.

"நீ திண்டிவனத்துல இருக்கும்போது தனியா இருந்ததில்லையா?"

"நிறைய தடவைத் தனியா இருந்திருக்கேன். தாத்தா ராத்திரியில வேலையெல்லாம் முடிச்சுட்டு லேட்டா தான் வருவாரு."

"அப்படி இருக்கும் போது, இப்ப மட்டும் ஏன் பயப்பற?"

"ஏன்னா, என் கூட யாரோ இருக்கிற மாதிரியே இருக்கு. அது மாதிரி நான் இதுக்கு முன்னாடி எப்பவுமே உணர்ந்ததில்ல."

காப்பி பருகுவதை நிறுத்தினான் சூர்யா, அவள் மறுபடியும் அதையே கூறுவதை கேட்டு.

"எப்படி ஃபீல் பண்ற?"

"யாரோ என் பக்கத்துல இருந்து என்னையே பார்க்கிற மாதிரி இருக்கு."

"தாமரை, மனுஷ மனம் தான் இந்த உலகத்திலேயே ரொம்ப பெரிய பேய். அதுக்கு மீறி வேற எதுவுமே கிடையாது. எல்லாமே நம்ம மனசு சம்பந்தப்பட்ட விஷயம் தான். அதனால நீ தேவையில்லாம பயப்படாதே." என்று கூறிவிட்டு, காலி குவளையை மேஜை மீது வைத்தான்.

"ஆங்... நீங்க சாதாரணமா சொல்லிட்டீங்க, எவ்வளவு பயமா இருக்குனு எனக்கு தானே தெரியும்..."

தோட்டத்து வாயிலின் பக்கம் வந்து நின்ற அவன்,

"எவ்வளவு பயமா இருக்கு?" என்றான்.

"இப்போ நான் எப்படி ஃபீல் பண்றேனோ, அதே மாதிரி உங்களுக்கும் ஒரு நாள் தோணும். அப்ப தெரியும்..." என்றாள் யோசிக்காமல்.

"சரி, அப்படி நடந்தா நீ சொல்றது உண்மைன்னு நான் ஒத்துக்குறேன்."

"நான் சொல்றதை நீங்க நம்பலையா?"

அவன் இல்லை என்று தலையசைக்க, தன் உதடு சுழித்தாள் தாமரை. அவள் முகத்தைப் பார்த்தபோது, அவளை தவறாக நினைக்கவே அவனுக்கு தோன்றவில்லை. அந்த பெண் மீது அவனுக்கு சந்தேகம் கொள்ள எதுவும் இருப்பதாய் தோன்றவில்லை. உண்மையில் அவள் தவறானவளாய் இருக்க முடியுமா என்ற கேள்வி அவன் மனதில் உதித்தது.

அந்த செடியை நோக்கி சென்றாள் தாமரை.

"அது சரி, எதுக்காக இவ்வளவு அழகான தோட்டத்துல இந்த செடியை பிடுங்கி போடாம வச்சிருக்கீங்க?" என்று அதை அவள் தொட நினைத்தபோது,

"தொடாத..." என்றுக் கத்தி அவளை திடுக்கிடச் செய்தான்.

பின்னோக்கி நகர்ந்த தாமரை, தன் கரங்களை உயர்த்தியபடி ஒன்றும் புரியாமல் நின்றாள்.

"இல்ல, நான் அந்த செடியை ஒன்னும் செஞ்சிருக்க மாட்டேன்." என்றாள் முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு.

"இல்ல... அதுக்கு இல்ல..."

"இந்தச் செடி கூட உங்களுக்கு ஏதாவது சென்டிமென்ட் இருக்கா?" என்று சரியாய் யூகித்தாள்.

ஆம் என்று தலையசைத்தான் சூர்யா.

"என்ன சென்டிமென்ட்?" என்றாள் ஆர்வத்தோடு.

அதை அவளிடம் கூறலாமா வேண்டாமா என்று அவனுக்கு புரியவில்லை.

"நான் சொல்லட்டுமா? இது உங்க கேர்ள் ஃபிரண்ட் உங்களுக்கு கிஃப்ட்டா கொடுத்தது தானே?" என்றாள்.

வேதனையோடு புன்னகைத்த அவன்,

"ஆமாம், இந்த செடியை நட்டது என்னோட முதல் கேர்ள் ஃபிரண்ட்... என்னோட அம்மா...!"

அதைக் கேட்டு திகைத்த தாமரை,

"சாரி" என்றாள்.

"பரவாயில்ல"

"இந்தச் செடியை அவங்க எப்போ நட்டாங்க?"

"18 வருஷத்துக்கு முன்னாடி... அவங்கள இறக்குறதுக்கு முன்னாடி..."

"18 வருஷத்துக்கு முன்னாடியா?" என்று தன் கண்களை படபடத்தாள் ஆச்சரியத்துடன்.

ஆம் என்று தலையசைத்தான் சூர்யா.

"இவ்வளவு வருஷம் ஆனதுனால தான் இந்தச் செடி இலையெல்லாம் உதிர்த்திடுச்சுன்னு நினைக்கிறேன்."

"இல்ல, எங்கம்மா இறந்ததுக்குப் பிறகு இந்தச் செடியில இருந்த எல்லா இலையும் உதிர்ந்துப் போச்சு. அதுக்குப் பிறகு, அது மறுபடி துளிர்க்கவே இல்ல. ஆனா இன்னமும் பச்சையாவே இருக்கு. அதனால தான் அதை எடுத்து போட மனசு இல்லாம வச்சுக்கிட்டு இருக்கேன்."

"உங்களுக்கு உங்க அம்மாவை ரொம்ப பிடிக்கும் தானே?" என்றாள் தன் தலை சாய்த்து.

"யாருக்கு தான் அம்மாவை பிடிக்காது? எல்லாருக்கும் தானே பிடிக்கும்?"

ஆமாம் என்று தலையசைத்த தாமரை, அந்த செடியோடு அவனுக்கு மனமார்ந்த தொடர்பு இருப்பதை உணர்ந்தாள். தன் அம்மாவை பற்றி பேசிய போது அவன் உணர்ச்சிவசப்பட்டதை கண்டாள். அவன் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருக்க முயன்ற போதும் அவனால் அப்படி இருக்க முடியவில்லை. அதனால் அவனை உற்சாகப்படுத்த நினைத்தாள். அந்த செடியின் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து, சூர்யாவை பார்த்து,

"உங்க அம்மா பேரு என்ன?" என்றாள்.

"ரத்னா," என்றான் மென்மையாக.

அந்த செடியை நோக்கி திரும்பிய அவள், அந்தச் செடி ஒரு பெண் என்பது போல, அதன் முகவாயை அவள் கையில் ஏந்தி கொண்டு, அந்த செடியோடு பேசத் துவங்கினாள்.

"ரத்னா அம்மா, பாருங்க உங்க பிள்ளை எவ்வளவு வருத்தமா இருக்காரு! பதினெட்டு வருஷமா இந்த செடியை அவர் பாதுகாத்துக்கிட்டு வராரு. அதுக்கு என்ன அர்த்தம்? நீங்க இந்த செடியில் இருக்கிறதா அவர் நினைக்கிறாரு. அதுல ஒரே ஒரு இலையாவது துளிர்க்க வச்சு, அவரை கொஞ்சம் சந்தோஷப்படுத்தலாம் தானே? இந்த மாதிரி அவரை நீங்க வருத்தப்பட வைக்கலாமா? இந்த செடி ஒரு நாள் துளிர்க்கும்னு அவர் நம்புறாரு. அவரை இவ்வளவு நாள் நீங்க காத்திருக்க வைக்கிறது நியாயமா? அவர் உங்க மேல வச்சிருக்க நம்பிக்கையை இழக்க வைக்காதீங்க. உங்க பிள்ளைகிட்ட திரும்பி வந்து அவரை சந்தோஷப்படுத்துங்களேன்!"

சூர்யாவுக்கு தொண்டையை அடைத்தது. தாமரை கூறிய அனைத்தும் உண்மை. தன் அம்மாவுக்கு அந்த செடியோடு தொடர்பு உள்ளதாய் அவன் நம்பினான். அதனால் தான் அதை பொக்கிஷம் போல் பாதுகாத்து வைத்திருந்தான்.

"நீங்க என்னோட செல்லம் இல்லையா? ஒரு நல்ல பொண்ணுக்காக ஒரு இலையை துளிர்க்க வைக்க கூடாதா? நான் தான் அந்த நல்ல பொண்ணு. என் பேரு தாமரை. என் ஃப்ரெண்ட்ஷிப் உங்களுக்கு வேணுமா வேணாமா? நீங்க ஒரு நல்ல அம்மா. அதனால தான் இன்னும் கூட உங்க பிள்ளை உங்களையே நினைச்சுக்கிட்டு இருக்காரு. ப்ளீஸ் தயவு செஞ்சு துளிர்த்து வந்துடுங்களேன்." அந்த செடியை பட்டும் படாமலும் கட்டி அணைத்து அதன் கிளையை முத்தமிட்டாள்.

சற்று நேரத்திற்கு முன்பு வரை உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்ட சூர்யா, அவளது செய்கையை பார்த்து புன்னகை புரிந்தான். எழுந்து நின்ற தாமரை, இங்கும் அங்கும் பார்த்தாள். செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் பூவாளியை பார்த்த அவள், ஓடிச் சென்று அதை கொண்டு வந்தாள். அந்த செடிக்கு தண்ணீர் ஊற்ற அவள் நினைத்தபோது, அதை நிறுத்திவிட்டு, சூர்யாவை தன்னிடம் வருமாறு அழைத்தாள். சாவி கொடுத்த பொம்மையை போல் அவளை நோக்கி சென்றான் சூர்யா.

"இந்த செடிக்கு நான் தண்ணி ஊத்தட்டுமா?" என்று அவனிடம் அவள் அனுமதி கேட்டது அவனுக்கு பிடித்திருந்தது.

நடத்து என்பது போல் அவன் தலையசைத்தான்.

"தேங்க்யூ" என்று அந்த செடிக்கு தண்ணீர் விட்டாள் தாமரை.

அந்த பூவாளியை கீழே வைத்துவிட்டு சூர்யாவை பார்த்த அவள், அந்தச் செடியையும் தன்னையும் சுட்டிக்காட்டி,

"எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கு. என் ஃப்ரெண்ட் சீக்கிரமே துளிர்த்து வந்துடுவாங்க. கவலைப்படாதீங்க." என்றாள்.

தன்னை சமாளித்துக் கொண்ட சூர்யா, கைகளை கட்டிக்கொண்டு நின்றான். அவன் எண்ணத்தில் அந்த செடியையும் தாமரையையும் தவிர வேறு எதுவும் இல்லை. சற்று நேரத்திற்கு முன்பு வரை தாமரையின் மீது இருந்த சந்தேகம் இப்பொழுது அவனுக்கு இல்லை.

"உனக்கு ஒன்னு தெரியுமா? நீ சரியான கிறுக்கி." என்று சிரித்தான்.

தன் கையை காட்டி அவனை தன்னிடம் வருமாறு அழைத்தாள். அவன் அவள் அருகில் வந்தவுடன்,

"எனக்கு அது தெரியும்." என்றாள் ரகசியமாய்.

அதைக் கேட்டு அவன் சிரிக்க, அவனை சிரிக்க வைத்துவிட்ட சந்தோஷத்தில் அங்கிருந்து சிட்டாய் பறந்து சென்றாள். சிரித்தபடி அந்த செடியை பார்த்த அவன், தன் தலையை இடவலமாய் அசைத்தான். அந்த செடி துளிர்க்கும் என்பதில் அவனுக்கு துளி கூட நம்பிக்கை இல்லை என்பது வெட்ட வெளிச்சமாய் தெரிந்தது. 18 வருடமாய் துளிர்க்காத ஒரு செடி, ஒரு பைத்தியக்கார பெண் பேசினாள் என்பதற்காக, இதற்குப் பிறகு துளிர்க்கும் என்று அவன் எப்படி நம்ப முடியும்?

அந்த எண்ணத்தை உதறினான் அவன். அவனுக்கு தாமரையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதைச் செய்ய அவன் திண்டிவனம் செல்லவும் தயாராய் இருந்தான். ஏனென்றால், அவளது வெகுளித்தனம் அவனுக்கு பிடித்திருந்தது. அது உண்மை தானா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அவனுக்கு. அவன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தது அதை பற்றி மட்டும் தான்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro