14 குழப்பத்தில் சூர்யா
14 குழப்பத்தில் சூர்யா
சூர்யாவின் மனம் சுழலில் சிக்கி தவித்தது. நடக்க இருப்பதை முன்கூட்டியே கணிப்பதெல்லாம் சாத்தியம் தானா? எப்படி தாமரை அதை அவ்வளவு சுலபமாய் செய்துவிட்டாள்? அவள் பார்ப்பதற்கு வெகுளியாய் இருக்கிறாள் என்பதற்காக அவள் வெகுளி என்று அர்த்தம் அல்ல! அவனது நம்பிக்கையை சம்பாதிப்பதற்காக அவள் வேறு யாராலோ அனுப்பப்பட்டிருந்தால் என்ன செய்வது? ஒருவேளை, அவளை அவனது எதிரியே கூட அனுப்பி இருக்கலாம். இதற்கு முன்பும் கூட சில கொலை முயற்சிகளில் இருந்து அவன் தப்பித்து இருக்கிறான். இது அவனை வீழ்த்துவதற்கான புதிய யுத்தியா? அவள் உண்மையிலேயே சிவசங்கரின் பேத்தி தானா? அவள் உண்மையிலேயே திண்டிவனத்தை சேர்ந்த பெண்ணா? அவர்கள் சந்தித்த முதல் நாளிலேயே அவனை அங்கிள் என்று அழைத்து, அவனது கவனத்தை தன் பக்கம் இழுத்து விட்டாள். அவன் வீட்டில் இரவு நேரங்களில் சுற்றி திரிந்தாள். தன்னை சுற்றி யாரோ இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்று காரணம் கூறினாள். இன்று அவனை குளியல் அறையில் வைத்து பூட்டி, அவனுக்கு ஆபத்து இருக்கிறது என்று கூறினாள். அவன் இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும் அவளை கண்மூடித்தனமாய் நம்பி இருப்பார்கள், ஆனால் அவன் சூர்யா. அப்படியெல்லாம் அவனால் யாரையும் நம்பிவிட முடியாது. அவன் மனதில் ஏராளமான கேள்விகள் எழுந்தது.
அப்பொழுது அவனது கைபேசி ஒலிக்கவே, அதை அவனது கவனம் திசை திரும்பியது அது. பாட்டியின் அழைப்பு. அதை ஏற்றான் சூர்யா.
"சொல்லுங்க, பாட்டி..."
"சூர்யா, நீ தாமரை மேல கோவமா இருப்பேன்னு எனக்கு தெரியும். ஆனா தயவு செஞ்சு கோவப்படாத. அவ அப்படி செஞ்சதுக்கு காரணம் இருக்கு. அவ தன்னை மீறி என்ன சொன்னாலும் அது நடந்துடும்."
காரின் பிரேக்கை அனிச்சையாய் அழுத்தினான் சூர்யா.
"என்ன்னனது?"
"ஆமாம், சூர்யா, அவ சொன்ன விஷயம் நடக்கும் போது, உனக்கே அவ மேல நம்பிக்கை வரும்."
"நீங்க எப்படி இவ்வளவு நம்பிக்கையோட சொல்றீங்க, பாட்டி?"
"அதை நான் என் கண்ணாலயே பார்த்தேன். அவ கிராமத்துல இருந்தவங்க, அவங்க தாத்தாவோட இறுதி சடங்குல அவளைப் பத்தி பேசுனதை நான் கேட்டேன்."
சூர்யா அமைதி காத்தான்.
"சூர்யா, எனக்கு தெரியும், நீ இப்படிப்பட்ட விஷயங்களை எல்லாம் நம்ப மாட்ட. ஆனா, சில விஷயங்கள் எல்லாம் நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள வர்றதில்ல. நம்ம கற்பனைக்கு எட்டாத சில விஷயங்கள் இருக்கு. அதுல இதுவும் ஒன்னு."
"ம்ம்ம்..."
"நம்ம குடும்பத்துல தாமரையை யாருக்கும் பிடிக்கல. நீ ஒருத்தன் தான் அவகிட்ட சினேகமா இருக்க. உன்னோட வெறுப்பை அவ மேல காட்டாத. பாவம் அவ."
"பாட்டி, நம்ம அப்புறம் பேசலாம். இப்போ எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு."
"சரி, சூர்யா. ஜாக்கிரதையா இரு."
"சரி" என்று அழைப்பை துண்டித்தான் சூர்யா.
அவனுக்கு இதையெல்லாம் நம்புவதா வேண்டாமா என்று தெரியவில்லை. அவன் உயிருக்கு ஆபத்து இருப்பதாய் தாமரை கூறினாள். அவள் கூறியது போலவே, சிலர் அவன் உயிரை குறி வைத்திருந்தார்கள். இதெல்லாம் என்ன? இப்படி எல்லாம் நடக்கக் கூடுமா? யார் தாமரை? அவள் நிமித்தக் காரியா? அல்லது வேறு ஏதாவதா? அதைப் பற்றிக் கண்டுபிடித்தாக வேண்டும் அவனுக்கு. அதனால் தாமரையைக் கவனிப்பது என்று முடிவு செய்தான்.
........
பாட்டிக்கு மாயாவிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்றார் பாட்டி.
"அம்மா, நான் காசிக்கு வந்து சேர்ந்துட்டேன்."
"நல்லபடியா போய் சேர்ந்துட்டியா, மாயா?"
"ஆமாமா, அடுத்த தடவை நீங்களும் என் கூட வாங்க."
"என் வேண்டுதல் மட்டும் நிறைவேறிட்டா, நான் நிச்சயம் வரேன்."
"சூர்யாவோட கல்யாணத்தைப் பத்தி தானே பேசுறீங்க?"
"ஹா ஹா..." அவருக்கு பதில் கூறாமல் சிரித்தார் பாட்டி. ஏனென்றால் அவரது வேண்டுதல் அதுவல்ல.
சூர்யாவின் திருமணம் விரைவில் நடைபெறும் என்பது அவருக்குத் தெரியும். ஏனென்றால் அதைப் பற்றித் தாமரை ஏற்கனவேக் கூறிவிட்டாளே. அவரது வீட்டைச் சுற்றி நிகழ்ந்துக் கொண்டிருக்கும் மர்மங்களுக்கு விடை வேண்டும் அவருக்கு
"ஆகாஷ் கிட்ட பேசுனியா?"
"ஃபோன் பண்ணேன், மா. ஆனா அவன் எடுக்கல. அவன் ஆஃபீஸ்ல பிசியா இருக்கான் போல இருக்கு. என்னோட மிஸ்டு காலை பார்த்தா, அவனே கூப்பிடுவான்."
"சரி, மாயா, காசியிலிருந்து திரும்பி வந்ததுக்கு பிறகு இங்க வா."
"நிச்சயம் பிரசாதத்தோட வரேன், மா."
"சரி"
"வைக்கிறேன், மா." என்று அழைப்பை துண்டித்தார் மாயா.
......
அமரனையும் ஆகாஷையும் சந்திக்க மருத்துவமனைக்குச் சென்றான் சூர்யா. அவர்கள் தனித் தனிக் கட்டிலில் படுத்திருந்தார்கள்.
"எப்படி இருக்கீங்க?" என்றபடி அவர்கள் இருவரதுக் கட்டிலுக்கும் இடைப்பட்ட இடத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
"இப்ப எவ்வளவோ பரவாயில்ல." என்றான் அமரன்.
ஆகாஷ் மிகவும் பலவீனமாய் காணப்பட்டான். அவனது நெற்றியிலும் கன்னத்திலும் பேண்ட்-எய்ட் போடப்பட்டிருந்தது.
"ஐ அம் சாரி" என்றான் சூர்யா வருத்தத்துடன்.
"நீ எதுக்காக சாரி சொல்ற? இன்னைக்கு நீ ஆஃபீசுக்கு வராம இருந்ததுக்காகச் சந்தோஷப் படு. நீ மட்டும் வந்திருந்தா, எப்படியும் அவங்க உன்னைக் கொன்னிருப்பாங்க." என்றான் ஆகாஷ் பலவீனமானக் குரலில்.
"ஆமாம், சூர்யா, நீ அவங்களோட வெறித்தனத்தைப் பாக்காமப் போயிட்ட. அவனுங்கக் காட்டுமிராண்டி மாதிரி நடந்துக்கிட்டானுங்க."
"உனக்கு நடந்த இந்த அட்டாக் பத்தி மாயா ஆன்ட்டிக்குத் தெரியுமா?" என்றான் சூர்யா.
"தெரியாது. எத்தனையோ தடவை தள்ளிப்போட்டுத் தள்ளிப்போட்டு இப்பத் தான் அவங்களுக்குக் காசிக்குப் போற வாய்ப்புக் கிடைச்சிருக்கு. அவங்க நேத்து ராத்திரித் தான் கிளம்பிப் போயிருக்காங்க. அவங்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா, எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டு வந்துருவாங்க."
"சரி, அப்படின்னா நீ என் கூட வீட்டுக்கு வந்துடு." என்றான் சூர்யா.
"பரவாயில்ல, சூர்யா. நான் சமாளிச்சுக்கிறேன்."
"இந்த மாதிரிக் கண்டிஷன்ல நீ தனியா எப்படி சமாளிப்ப? என்கூட வீட்டுக்கு வா. அவ்வளவு தான்."
"சூர்யா சொல்றது சரி தான், ஆகாஷ். நீ தனியா இருக்க வேண்டாம். அவங்க வீட்ல ரெண்டு நாள் தங்கி இரு." என்றான் அமரன்.
"சரி" என்று தலையசைத்தான் ஆகாஷ்.
"வா போலாம்." என்று அவனுடன் கிளம்பினான் சூர்யா
.........
நகத்தை கடித்தபடி பதற்றத்துடன் அமர்ந்திருந்தாள் தாமரை.
"கவலைப்படாத, தாமரை. நான் சூர்யா கிட்ட பேசிட்டேன்." என்றார் பாட்டி.
"அவரு நான் சொன்னதை நம்பல, பாட்டி. அதனால தான் அவரை பாத்ரூம்ல வச்சு பூட்ட வேண்டியதா போச்சு." என்றாள் தாமரை.
"பரவாயில்ல விடு. நடந்தது நடந்து போச்சு."
"அது சரி, வீட்ல இருந்த மத்தவங்க எல்லாம் எங்க? மனோரமா ஆன்ட்டியையும் அஞ்சலி அக்காவையும் காணோமே?"
"அவங்க ஷாப்பிங் போயிருக்காங்க."
"ஓ..."
அப்பொழுது பாட்டியின் கைபேசி ஒலி எழுப்பியது. அதில் ஒளிர்ந்த பெயரை பார்த்து புன்னகைத்தார் பாட்டி.
"புரோகிதர் தான் கூப்பிடுறாரு."
"அப்படியா?" என்று ஆர்வமானாள் தாமரை.
அழைப்பை ஏற்றார் பாட்டி.
"வணக்கம் பண்டிதரே!"
"வணக்கம் மா. அங்க தாமரை இருக்காளா?"
"ஆமாம், இங்க தான் இருக்கா." என்று ஃபோனை தாமரையிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றார் பாட்டி, அவள் பேசட்டும் என்று இடைவெளி கொடுத்து.
"ஹலோ அண்ணா, எப்படி இருக்கீங்க?"
"நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?"
"நானும் ரொம்ப நல்லா இருக்கேன்."
"அவங்க குடும்பத்துல இருக்குறவங்க உன்கிட்ட நல்லா பேசுறாங்களா?"
"நல்லா பேசுறாங்க."
அங்கு பாட்டி இல்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு,
"அண்ணா, நான் இந்த வீட்ல ஏதோ வித்தியாசமா உணர்றேன்." என்று மெல்லிய குரலில் கூறினாள்.
"வித்தியாசமானா? என்ன சொல்ற?"
"யாரோ என் பக்கத்துல இருக்கிற மாதிரியும், என்னை கவனிக்கிற மாதிரியும் இருக்கு."
"அப்படியா?"
"ஆமாம்."
"தெய்வானை அம்மா நம்ம ஊருக்கு எதுக்காக வந்தாங்கன்னு உனக்கு தெரியுமா?"
"தெரியாது."
"வெளியில சொல்ல முடியாத நிறைய பிரச்சனை அவங்க குடும்பத்துல இருக்கு."
"நிஜமாவா?"
"ஆமாம், அதுக்காகத்தான் அவங்க குல தெய்வத்தை கும்பிட நம்ம ஊருக்கு வந்தாங்க."
"அந்த பிரச்சனையில இருந்து அவங்களால வெளியே வர முடியுமா?"
"வர முடியும். ஆனா அவங்க குடும்பத்துக்காக யாராவது ஒருத்தர் ஒரு பூஜை பண்ணணும்."
"என்ன பூஜை?"
"அது துர்கா பூஜை. அவங்களோட எல்லா பிரச்சனையும் தீர்க்கக்கூடிய பூஜை அது."
"அப்படியா?"
"ஆமாம். ஆனா பாவம், அந்த பூஜை பண்ண யாரும் இல்ல. கல்யாணம் ஆகாத கன்னிப்பெண்ணோ, இல்ல கல்யாணமான சுமங்கலி பெண்ணோ தான் அந்த பூஜையை பண்ணணும்."
"அவங்க குடும்பத்துல நிறைய பேர் இருக்காங்களே..."
"இல்ல, தாமரை. அவங்க அதை செய்ய மாட்டாங்க."
"ஆனா ஏன்?"
"அது,தான் அவங்க பிரச்சனையே."
"அவங்களுக்காக அந்த பூஜையை நான் பண்ணலாமா?" என்றாள் யோசிக்காமல்.
"தாராளமா செய்யலாம். யார் வேணும்னாலும் அவங்க வீட்ல இருந்து அதை செய்யலாம்."
"அப்படின்னா, அது என்னன்னு எனக்கு சொல்லுங்க. நான் செய்றேன்."
"அது கொஞ்சம் கஷ்டமான பூஜை."
"பரவாயில்ல, அண்ணா. நான் தான் ஏற்கனவே நிறைய பூஜை செஞ்சிருக்கேனே... உங்களுக்கு தெரியாதா?"
"நீ நிஜமா தான் சொல்றியா?"
"ஆமாம், அண்ணா. பாட்டி என்னை அவங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்து, என்னை அவங்க சொந்த பேத்தி மாதிரி பார்த்துக்கிறாங்க. நானும் அவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு நினைக்கிறேன்."
"சரி, அப்படினா, நான் உனக்கு அந்த பூஜையை பத்தி சொல்றேன். அந்த பூஜையை ரெண்டு நாள்ல எப்ப வேணும்னாலும் செய்யலாம். ஒன்னு வர்ற வெள்ளிக்கிழமை, அன்னைக்கு அமாவாசை. அடுத்த நாள், அடுத்த மாசம் முதல் செவ்வாய்க்கிழமை வருது. அமாவாசைக்கு செய்ற பூஜையை விட, அது இன்னும் பவர்ஃபுல்லா இருக்கும்."
"ஏன் அப்படி?"
"அன்னைக்கு துர்காஷ்டமி. துர்கை அம்மனோட ரொம்ப ஸ்பெஷலான நாள் அன்னைக்கு."
"ஓ..."
"ஆனா, அந்த பூஜையை சீக்கிரமா செய்யணும். ரொம்ப நாள் தள்ளிப் போட முடியாது."
"அப்படின்னா, நான் வெள்ளிக்கிழமை அதை செஞ்சுடுறேன்."
"அந்த நாள் முழுக்க நீ விரதம் இருக்கணும். சாயங்காலம் அம்மன் கோவிலுக்குப் போய், அங்க ஒரு விளக்கை ஏத்தி, அதை வீட்டுக்குக் கொண்டு வந்து, பூஜை ரூம்ல வச்சி பூஜையை முடிச்சப் பிறகுத் தான் நீ சாப்பிடணும்."
"சரி, அப்படியே செய்றேன்."
"நீ அன்னைக்கு ஒரு மந்திரத்தை ஆயிரத்தி ஒரு தடவை சொல்லணும். அதை நான் ஏற்கனவே தெய்வானை அம்மா கிட்ட எழுதி கொடுத்திருக்கேன். உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா எனக்கு ஃபோன் பண்ணு."
"சரிங்க அண்ணா. அண்ணி எங்க?"
"அவ வீட்ல இருக்கா. நான் மதியம் வீட்டுக்கு போயிட்டு, அவளை உனக்கு ஃபோன் பண்ண சொல்றேன்."
"சரிங்க, அண்ணா." என்று அழைப்பை துண்டித்து விட்டு பாட்டியை தேடியபடி வரவேற்பறைக்கு வந்தாள்.
அப்பொழுது அழைப்பு மணியின் ஓசை கேட்டது. பூஜை அறைக்கு ஓடிச்சென்று ஒளிந்து கொண்டாள் தாமரை. பாட்டி சென்று கதவை திறந்தார். அங்கு ஆகாஷுடன் நின்றிருந்தான் சூர்யா.
"உனக்கு என்ன ஆச்சு, ஆகாஷ்?" என்றார் பாட்டி, அவன் நெற்றியிலும் கன்னத்திலும் இருந்த பேண்ட்-எய்டை பார்த்து.
ஆகாஷ் எதுவும் கூறுவதற்கு முன்,
"ஒரு சின்ன ஆக்சிடென்ட்." என்றான் சூர்யா.
ஆகாஷ் அமைதியாய் இருந்தான். ஏனென்றால், சூர்யா பாட்டியை பயமுறுத்த வேண்டாம் என்று அப்படி கூறுவதாய் அவன் நினைத்தான்.
"மாயா ஆன்ட்டி காசிக்கு போய் இருக்கிறதால, நான் ஆகாஷை இங்க கூட்டிகிட்டு வந்திருக்கேன்."
"ரொம்ப நல்லதா போச்சு. உள்ள வா, ஆகாஷ்." என்றார் பாட்டி.
அப்போது பசுபதியும் அவரது தம்பிகளும் கோவிலில் இருந்து திரும்பி வந்தார்கள்.
"பசுபதி, ஆகாஷை நந்தா ரூமுக்கு கூட்டிக்கிட்டு போ. அவன் நந்தா கூட இருக்கட்டும்." என்றார் பாட்டி.
"சரிங்க மா." என்றான் பசுபதி.
பசுபதியுடன் நந்தாவின் அறைக்கு சென்றான் ஆகாஷ்.
தாமரை தேடி தன் கண்களை ஓட விட்டான் சூர்யா. அவள் எங்கும் காணவில்லை. தன் அறையை நோக்கி நடந்தான். பூஜை அறையில் இருந்து மெல்ல எட்டிப் பார்த்தத் தாமரை, சூர்யா தன் அறைக்குச் செல்வதைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டுப் பாட்டியிடம் வந்தாள். அவள் சிறிதும் எதிர்பாராத வண்ணம், சூர்யா திரும்பி அவளை பார்த்தான். அவள் பாட்டியின் பின்னால் ஒளிந்துக் கொண்டு, நகத்தைக் கடித்த படி நின்றாள். தன் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றான் சூர்யா. மெல்ல பாட்டியின் பின்னால் இருந்து எட்டிப் பார்த்த தாமரை, அவன் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, மீண்டும் தன் தலையை இழுத்துக் கொண்டாள்.
"தாமரை..." என்று அவன் அழைக்க, திடுக்கிட்டு விழி விரித்தாள் தாமரை. தன் பயத்தை விழுங்கியபடி அவனை ஏறிட்டாள்.
"எனக்கு ஒரு கப் காபி கிடைக்குமா?" என்றான் சாதாரணமாய்.
அவள் சரி என்று தலையசைக்க, தன் அறையை நோக்கி சென்றான் சூர்யா.
"அவர் என் மேல கோவமா இல்ல போல இருக்கே!" என்றாள் சந்தோஷமாய். பாட்டி ஆம் என்று தலையசைத்தார்
"அம்மா தாயே! என்னை நீங்க காப்பாத்திட்டீங்க." என்று சந்தோஷமாய் சமையலறைக்கு ஓடினாள் தாமரை.
காபி கலந்து சூர்யாவின் அறைக்கு எடுத்துச் சென்றாள். வெளியே நின்றபடி கதவைத் தட்டினாள்.
"உள்ள வா." என்றான் சூர்யா.
"உங்களை பாத்ரூம்ல வச்சு பூட்டினதுக்காக என்னை மன்னிச்சிடுங்க." என்று கூறியபடி உள்ளே நுழைந்தாள் அவள்.
அவள் கையில் இருந்து காப்பியை வாங்கிக் கொண்டான், ஒன்றும் கூறாமல்.
"என் மேல கோவமா இருக்கீங்களா?"
இல்லை என்று தலையசைத்தான்.
"நெஜமாவா?"
பதில் கூறாமல் காப்பியை பருகினான்.
"நான் எது சொன்னாலும் அது அப்படியே நடந்துடும். நான் சொல்றதை நம்புங்க. அதனால தான் நீங்க வெளியில போக வேண்டாம்னு நான் நினைச்சேன். ஐ அம் சாரி."
"இது உனக்கு எப்பவுமே நடக்குமா?"
"அடிக்கடி நடக்கும்."
"ஓ..."
"மக்களுக்கு பிடிக்காத விஷயத்தை இந்த மாதிரி சொல்லி நான் பல தடவை அவங்க கோபத்தை சம்பாதிச்சிருக்கேன்."
அவள் கூறுவதை கவனமாய் கவனித்துக் கொண்டிருந்தான்.
"நான் ஏதாவது நல்லது சொன்னா சந்தோஷப்படுவாங்க. அதுவே நான் அவங்களுக்கு பிடிக்காத எதையாவது சொல்லிட்டா, என்னை சபிப்பாங்க."
"அப்படின்னா நீ எதுக்காக இதையெல்லாம் சொல்ற?"
"அதைப் பத்தி மட்டும் கேட்காதீங்க. நானும் எதுவும் சொல்லக்கூடாதுன்னு தான் நினைக்கிறேன். ஆனா என் கட்டுப்பாட்டை மீறி, என் தொண்டையில இருந்து வார்த்தை வெளியில வந்து குதிச்சிடுது." என்றாள் சோகமாக.
சூர்யா யோசனையில் ஆழ்ந்தான்.
தாமரை அங்கிருந்து செல்ல நினைத்தப் போது, அவன் அறையை ஒட்டியபடி இருந்த தோட்டத்தை கவனித்தாள்.
"உங்களுக்கு செடிங்கன்னா ரொம்ப பிடிக்குமா?"
ஆம் என்று தலையசைத்தான்.
"நான் அதை பாக்கலாமா?"
அவன் தலையசைக்க, தோட்டத்தை நோக்கி ஓடினாள் தாமரை. அதில் பல வகையான வண்ண மலர்கள் இருந்தது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. புன்னகையோடு அவற்றை பார்த்தபடி நின்றாள். அப்பொழுது அங்கிருந்த இலைகள் இல்லாத செடி மீது அவள் பார்வை சென்றது. அதை பார்த்து முகத்தை சுருக்கினாள் தாமரை.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro