11 சமாதானம்
11 சமாதானம்
தாமரையை பற்றி சிந்தித்தபடி தன் அலுவலகம் வந்து சேர்ந்தான் சூர்யா.
"குட் மார்னிங், சூர்யா" என்றான் அவன் அறைக்கு வந்த அமரன்.
அவனுடன் வந்த ஆகாஷ் அவனுக்கு காலை வணக்கத்தை தெரிவிக்கவில்லை. ஏனென்றால், அன்று காலை அவன் வீட்டிற்கு சென்ற போது அவன் அதை செய்து விட்டான் அல்லவா?
"குட் மார்னிங், அமரா,"
"நம்ம கிளைன்ட் மும்பையில இருந்து இன்னும் ரெண்டு நாள்ல வராங்க."
"ஓ, ரொம்ப நல்லது. எனக்கு ஞாபகப்படுத்து."
"நிச்சயமா செய்றேன். நான் வேற எதுக்கு இருக்கேன்?" என்றான் அமரன்.
அப்போது ஒரு டப்பாவுடன் அங்கு வந்த ஷீலா, அதை சூர்யாவிடம் நீட்டினாள்.
"என்ன இது?"என்றான் அதை வாங்கிக் கொள்ளாமல்.
"நான் சமைச்ச பாயாசம்." என்றாள் அலட்டலாய்.
"எனக்கு வேண்டாம்." என்று அவன் கூற, ஷீலாவின் முகம் வாடி போனது.
"அவன் வாங்கிக்கலன்னு சந்தோஷப்படு, ஷீலா." என்று சிரித்தான் ஆகாஷ்.
"என்ன சொல்ற நீ?" என்றாள் அவள் எரிச்சலுடன்.
"அவன் அதை சாப்பிட்டா, உன் முகத்துக்கு நேராவே நல்லா இல்லன்னு சொல்லிடுவான்" என்று அவனை பார்த்து சிரித்தபடி கூறினான் ஆகாஷ்.
ஒன்றும் புரியாமல் விழித்த ஷீலா,
"சாப்பிட்டு பாக்காம எப்படி அதை சொல்ல முடியும்?" என்றாள்.
"நான் இன்னைக்கு காலையில அப்படி ஒரு சீனை நேரில் பார்த்தேன்"
"சொல்றத தெளிவா சொல்லு." என்றான் அமரன்.
"இன்னைக்கு காலையில, அவங்க வீட்டுக்கு நான் அம்மாவோட போயிருந்தேன். அங்க தாமரைன்னு ஒரு பொண்ணு ஊர்ல இருந்து வந்திருக்கா. அவ எல்லாருக்கும் பாயாசம் கொடுத்தா. சத்தியமா சொல்றேன், என் வாழ்க்கையில அப்படி ஒரு டேஸ்டியான பாயாசத்தை நான் சாப்பிட்டதே இல்ல. ஆனா நம்ம சூர்யா, அதை நல்லாவே இல்லன்னு சொல்லிட்டான்."
தனது மடிக்கணினியின் திரையில் இருந்து கண்களை அகற்றாத சூர்யாவை அமரனும் ஷீலாவும் ஆச்சர்யமாய் பார்த்தார்கள். அவன் அவர்களை கவனிக்காமல் இருந்தது அவர்களுக்கு மேலும் ஆச்சரியத்தை தந்தது.
"இவன்கிட்ட தன் திறமையை காட்டி அவ மடக்க நினைச்சிருப்பா." என்றாள் ஷீலா
"ஒருத்தரைப் பத்தி சரியா தெரியாம அவங்களை பத்தி பேசுறது மேனர்ஸ் இல்ல, ஷீலா." என்று அவளை கடிந்து கொண்டான் சூர்யா.
ஷீலா தலை குனிந்து கொண்டாள்.
"எல்லாரும் போய் வேலையை பாருங்க" என்றான் சூர்யா.
அனைவரும் அங்கிருந்து சென்றார்கள். தான் கொண்டு வந்த பாயாசத்தை கையோடு எடுத்துச் சென்றாள் ஷீலா. 'எனக்கு வேண்டாம்' என்று கூறிய பிறகு, சூர்யா அதை சாப்பிட மாட்டான் என்று அவளுக்கு புரிந்து போனது.
சூர்யா இல்லம்
பாட்டி பண்டிதருடன் பேச தவித்துக் கொண்டிருந்தார். அவருடன் பேச வேண்டும். ஆனால் அதை அவரால் தாமரை இருக்கும் போது செய்ய முடியாது. ஏனென்றால் அவர் பேச இருப்பது ரத்னாவின் ஆன்மாவை பற்றி. இப்போதைக்கு தாமரைக்கு அதைப் பற்றி தெரிய வேண்டாம் என்று அவர் நினைத்தார். அவர் பண்டிதருக்கு ஃபோன் செய்ய, அவர் கோவிலில் இருந்ததால் அந்த அழைப்பை ஏற்கவில்லை. அதனால் பாட்டி மாயாவுக்கு ஃபோன் செய்தார். அந்த அழைப்பை ஏற்றார் மாயா.
"ஹலோ அம்மா,"
"மாயா, நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்"
"நீங்க ஏற்கனவே என்கிட்ட சொன்னீங்க."
"நான் எதுக்காக திடீர்னு திண்டிவனம் போயிருந்தேன் தெரியுமா?"
"ஏன் மா?"
"நான் கோவில்ல ஒரு சாமியாரை பார்த்தேன். அவர் தான் என்னை எங்க குலதெய்வ கோயிலுக்கு போயிட்டு வர சொன்னாரு."
"அப்படியா?"
"ஆமாம். அவரு என்கிட்ட ஒரு விஷயம் சொன்னாரு. அவர் சொல்லும் போது நான் அதை நம்பல. ஏன்னா அது உண்மையா இருக்கக் கூடாதுன்னு நான் நெனச்சேன்."
"என்னம்மா சொன்னாரு?"
"என் குடும்பத்தை சேர்ந்த யாரோ ஒருத்தர் தான் ரத்னாவை கொன்னதா சொன்னாரு."
"என்னம்மா சொல்றீங்க?" என்றார் மாயா அதிர்ச்சியோடு.
"ஆமாம்"
"இது உண்மையா இருக்க முடியாதும்மா. உங்க குடும்பத்தை சேர்ந்த எல்லாரையும் எனக்கு தெரியும். அவங்க எல்லாருமே ரொம்ப நல்லவங்க."
"நானும் அதை நம்ப விரும்பல."
"தயவு செஞ்சு, அதை உங்க தலையில ஏத்திக்காதீங்க. எப்படி என்னால அப்படி செய்யாம இருக்க முடியும்?"
"ஒருவேலை பண்ணுங்க. நாளைக்கு நானும் வரேன். நம்ம ரெண்டு பேரும் போய் அந்த சாமியாரை பார்க்கலாம்."
"அது முடியாது"
"ஏன்?"
"அவர் இப்போ உயிரோட இல்ல."
"என்னம்மா சொல்றீங்க?"
"ஆமாம். அவர் எதுக்காக திடீர்னு எல்லாத்தையும் என்கிட்ட சொல்றாருன்னு நான் அடுத்த நாள் புரிஞ்சிக்குவேன்னு சொன்னாரு."
"அப்புறம் என்ன ஆச்சு?"
"அடுத்த நாள் அவர் உயிரோட இல்ல."
"அடக்கடவுளே!"
"ஆமாம். அப்புறம் நான் எப்படி நம்பாம இருக்க முடியும்?"
"என்னால இதை நம்ப முடியல"
பாட்டி ஏதோ கூறு நினைத்தபோது, அவருக்கு பண்டிதரிடம் இருந்து அழைப்பு வந்தது.
"மாயா, நான் உனக்கு அப்புறம் கால் பண்றேன்" என்று அவசரமாய் அழைப்பை துண்டித்து விட்டு பண்டிதரின் அழைப்பை ஏற்றார் பாட்டி. ஏன் என்றால் அதை தவறவிட அவர் தயாராக இல்லை.
"யார் பேசுறீங்க? உங்க மிஸ்டு காலை என் ஃபோன்ல பார்த்தேன்." என்றார் பண்டிதர்.
"பண்டிதர் ஐயா, நான் தான் தெய்வானை பேசுறேன், சென்னையில் இருந்து."
"அம்மா, நீங்களா? எப்படி இருக்கீங்க?"
"நான் நல்லா இருக்கேன்னு சொல்றதா வேணாமான்னு எனக்கு தெரியல."
"என்ன ஆச்சு, ம்மா?"
"தாமரை என் மகளோட இருப்பை உணர்றா"
"நிஜமாவா?" என்ற அவர் யோசனையில் ஆழ்ந்தார்.
"ஆமாம். யாரோ அவளுக்கு பக்கத்துல இருக்குற மாதிரியே அவளுக்கு தோணுதாம்."
"ஓ..."
"இந்த உணர்வை நினைச்சு அவ பயப்படுறா."
"அவ அப்படித்தான் மா."
"ஏன் அவளுக்கு மட்டும் இப்படி ஒரு உணர்வு ஏற்படுதுன்னு எனக்கு புரியல. எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு. என் மக அவ பிள்ளையை எல்லாரையும் விட அதிகமா நேசிச்சா. ஆனா அவனால கூட அவளுடைய இருப்பை உணர முடியலையே, அப்படி இருக்கும் போது அது தாமரைக்கு எப்படி சாத்தியமாச்சு?"
"எனக்கும் ஏன் புரியல மா. ஆனா அந்த சாமியார் உங்ககிட்ட இதைப்பத்தி தான் சொல்லி இருக்கணும்னு எனக்கு தோணுது."
"நீங்க என்ன சொல்றீங்க?"
"உங்க குடும்பத்தோட மர்மம் தாமரையால தான் தீர போகுதுன்னு நினைக்கிறேன்."
"ஆனா அவ தான் பயப்படுகிறாளே..."
"எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. நான் தாமரையோட ஜாதகத்தை பார்த்துட்டு உங்களை கூப்பிடுறேன்"
"அவ ஜாதகம் உங்ககிட்ட இருக்கா?"
"ஆமாம். அவளுக்கு வரன் தேட ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி, அதை பூஜையில வைக்க சொல்லி அவங்க தாத்தா என்கிட்ட கொடுத்திருந்தாரு. அது இன்னும் என்கிட்ட தான் இருக்கு. நான் அதை பார்த்துட்டு பேசுறேன்."
"சரி"
"இன்னொரு விஷயம் மா"
"சொல்லுங்க"
"தயவு செஞ்சு இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்லாதீங்க"
"ஏன் அப்படி சொல்றீங்க?"
"உங்க மகளுடைய ஆத்மாவை யாரோ கட்டுப்படுத்துகிறதா
அந்த சாமியார் சொன்னார் இல்லையா?"
"ஆமாம்."
"அதனால தான். அது சம்பந்தமான எந்த ஒரு விஷயத்தையும் நம்ம கசிய விட வேண்டாம்னு நினைக்கிறேன். ஏன்னா இதையெல்லாம் யார் செஞ்சதுன்னு நமக்கு தெரியாது. ஒருவேளை இந்த விஷயம் உங்களுக்கு தெரிஞ்சிருச்சுன்னு தெரிஞ்சா, அது சம்பந்தப்பட்டவங்க உஷாராக வாய்ப்பு இருக்கு. அப்படி நடந்தா, அவங்க உங்க மகளுடைய ஆத்மாவை இன்னும் மூர்க்கமா கட்டுப்படுத்த நினைக்கலாம். அது நமக்கு பிரச்சனையை தான் ஏற்படுத்தும். அதனால தயவு செஞ்சு இதை நமக்குள்ளேயே வச்சுக்கங்க. இப்போதைக்கு தாமரைக்கு கூட இந்த விஷயம் தெரிய வேண்டாம்."
"தாமரைக்கு கூடவா?"
"ஆமாம். நான் உங்ககிட்ட ஒரு பூஜையை பத்தி சொன்னேனே, அதை நான் தாமரையை செய்ய வைக்கிறேன்."
"அவளுக்கு எந்த உண்மையையும் சொல்லாம அவளை எப்படி இந்த பூஜையை செய்ய வைக்க முடியும்?"
"அதை நீங்க என்கிட்ட விடுங்க. நீங்க ஜாக்கிரதையா இருங்க. உங்களை சுத்தி இருக்கிற யாரையும் நம்பாதீங்க. யார்கிட்டயும் நம்ம தாமரைக்கு ஏற்பட்டிருக்க உணர்வை பத்தியும், அந்த சாமியார் சொன்னதைப் பத்தியும் நம்ம பூஜையை பத்தியும் சொல்லாதீங்க."
"சரிங்க பண்டிதரே. நான் இதைப் பத்தி யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்."
"நான் தாமரை ஜாதகத்தை பார்த்துட்டு, அதில் குறிப்பிட்டு சொல்ற மாதிரி ஏதாவது இருந்தா உங்க கிட்ட சொல்றேன்."
"சரி, தாமரை உங்ககிட்டையும் சீதா கிட்டயும் பேசணும்னு விருப்பப்பட்டா"
"சரி. அவ எப்ப உங்க பக்கத்துல இருக்காளோ அப்ப எனக்கு கால் பண்ணுங்க. நாங்க பேசுறோம்."
"சரிங்க பண்டிதரே. நன்றி." அழைப்பை துண்டித்த பாட்டி, யோசனையில் ஆழ்ந்தார்.
நல்ல வேலை அவர் தாமரையை பற்றி மாயாவிடம் எதையும் கூறவில்லை. அவர் மாயாவை நம்பவில்லை என்பதற்காக அல்ல. பண்டிதரின் வார்த்தையை அவர் காப்பாற்ற நினைத்தார்.
அதேநேரம் அவருக்கு மாயாவிடம் இருந்து அழைப்பு வந்தது. என்ன பேச வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டு அந்த அழைப்பை ஏற்றார் பாட்டி.
"நம்ம பேசிகிட்டு இருக்கும் போது கால் கட் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன், மா."
"ஆமாம். எங்க பக்கத்து வீட்டுக்காரங்க அவங்க பொண்ணோட பிறந்தநாளுக்கு எங்களை கூப்பிட வந்திருந்தாங்க." என்று பொய் உரைத்தார்.
"அப்படிங்களா? சரி அப்புறம் என்ன ஆச்சு மா?"
"அதுக்கப்புறம் என்ன? ஒன்னும் இல்ல. நான் குலதெய்வ கோவிலுக்கு போகணும்னு நினைச்சேன். அவ்வளவு தான்." என்று அதை அப்படியே முடித்துக் கொண்டார் பாட்டி
"அங்க உங்களுக்கு எதுவும் கிடைக்கலையா?"
"இல்ல, மாயா. உண்மையிலேயே எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு." என்றார்.
"கவலைப்படாதீங்க மா. கடவுள் இருக்காரு"
"அதைத்தான் நானும் நம்புறேன். நான் உன்கிட்ட அப்புறம் பேசுறேன்." என்று அழைப்பை துண்டித்த பாட்டி மாயாவிடம் பொய் உரைத்ததற்காக வருத்தம் கொண்டார்.
அவருக்கு தெரிந்தவரை மாயா மிகவும் நல்ல பெண்மணி. அவரிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து வந்தார். ஆனால் இப்பொழுது எதையும் அவரிடம் கூறும் நிலையில் அவர் இல்லை. தாமரையின் ஜாதகம் குறித்து பண்டிதர் என்ன கூறப்போகிறாரோ என்று எண்ணியபடி அவரது அழைப்புக்காக காத்திருந்தார்.
மாலை
வீடு திரும்பிய சூர்யா, தாமரையை தேடி நேராக விருந்தினர் அறைக்கு சென்றான். அவள் லட்சுமியின் முடியை ஒரு சீப்பை கொண்டு வாரி விட்டுக் கொண்டிருந்தாள். அதை பார்த்து புன்னகை புரிந்தான் சூர்யா. தனக்கு பின்னால் யாரோ நிற்பதை உணர்ந்த தாமரை, பெருமூச்சு விட்டாள். அது தான் அவளுக்கு பழக்கமாய் போய்விட்டதே! அதனால் அவள் திரும்பி பார்க்கவில்லை.
"உன்னை சுத்தி யாரோ இருக்கிற மாதிரி இருக்குன்னு சொன்ன? ஆனா உண்மையிலேயே நான் வந்து நிக்கும் போது, நான் நிற்கிறது உனக்கு தெரியலையா?" என்றான் சூர்யா.
திடுக்கிட்டு பின்னால் திரும்பினாள் தாமரை. அவளைப் பார்த்து சூர்யா புன்னகை புரிய, அவளும் சிரிக்க நினைத்தபோது தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு முகத்தை சாதாரணமாய் வைத்துக் கொண்டாள்.
"நீங்க நிக்கிறது எனக்கு தெரிஞ்சது. ஆனா அது எப்பவுமே எனக்கு ஏற்படற உணர்வுதான்னு நினைச்சு தான் பாக்காம இருந்தேன்."
"நீ அப்சட்டா இருக்கியா"
இல்லை என்று தலையசைத்தாள்.
"அப்புறம் எதுக்கு உன் முகத்தை இப்படி வச்சிருக்க?"
"என் முகம். என் இஷ்டப்படி வச்சுக்குவேன்."
"இருக்கலாம். ஆனா உன் முகத்தை பார்க்கிறது என்னோட கண்ணாச்சே..."
"உங்களை யார் என் முகத்தை பார்க்க சொன்னது?"
"உன் முகத்தை பார்க்காம இதை நான் எப்படி உனக்கு கொடுக்கிறது?" என்று தான் வாங்கி வந்த இனிப்பு டப்பாவை அவளிடம் நீட்டினான்.
"இதை வாங்கிக்கோ. நான் இதை உனக்காகத்தான் வாங்கிகிட்டு வந்தேன்"
"எதுக்காக வாங்கிட்டு வந்தீங்க?"
"நான் உனக்காக எதுவும் வாங்கிட்டு வர கூடாதா?"
"நேத்து வாங்கிட்டு வந்தப்போ அதுக்கு ஒரு காரணம் இருந்தது. நான் இந்த வீட்டுக்கு புதுசா வந்திருந்தேன். என்னை வரவேற்க நீங்க ஸ்வீட் வாங்கிட்டு வந்தீங்க. ஆனா இப்போ தான் எந்த காரணமும் இல்லையே..."
"காரணம் இருக்கு."
"என்ன காரணம்?"
"நான் இன்னைக்கு காலைல உன்னை அப்செட் பண்ணிட்டேன்."
"எப்போ?"
"நீ செஞ்ச பாயசம் நல்லா இல்லன்னு சொன்னேன்ல?"
"அதனால?"
"நீ அப்செட்டா இல்லையா?"
"இருந்தேன்..."
"இப்போ இல்லையா?"
"பின்ன என்ன? அல்பத்தனமான விஷயத்துக்கெல்லாம் நாள் முழுக்க அப்செட்டாவா இருப்பாங்க?" என்றாள் தன் சிரிப்பை அடக்கியபடி.
அதைக் கேட்டு திகைத்த அவன்,
"நீ எதுக்காகவும் அப்செட் ஆக மாட்டியா?"
"ஆவேன் தான். சம்பந்தப்பட்டவங்க என் மனசுக்கு நெருக்கமானவங்களா இருந்தா, ஆவேன்."
"நான் உன்னை கஷ்டப்படுத்திட்டதா நினைச்சுகிட்டு இருந்தேன்."
"நீங்க பாயசம் பிடிக்கலைன்னு சொன்னீங்க. அது உங்க விருப்பம். பாயாசம் சமைக்கத்தான் என்னால முடியும். அது பிடிச்சு தான் ஆகணும்னு உங்களை நான் கட்டாயப்படுத்த முடியுமா?"
அதைக் கேட்டு புன்னகைத்த அவன்,
"சரி, அது எதுவா வேணும்னாலும் இருக்கட்டும். இப்போ இதை வாங்கிக்கோ."
அந்த டப்பாவை வாங்கித் திறந்த அவள், அதில் இருந்த குலாப் ஜாமுன்களை பார்த்து முகம் மலர்ந்தாள்.
"ஐ... குலாப் ஜாமுன்." என்று அதிலிருந்த ஒன்றை எடுத்து வாயில் போட்டு ருசித்தாள்.
"ஐ அம் சாரி" என்றான் சூர்யா.
எதற்காக என்பது போல் அவனை பார்த்தாள் தாமரை.
"நீ சமைச்ச பாயாசம் ரொம்ப நல்லா இருந்தது"
"எனக்கு தெரியும்" என்று அவள் கூற அவன் வாய்விட்டு சிரித்தான்.
"நீங்க எதுக்காக பொய் சொன்னீங்கன்னு எனக்கு தெரியும். அதனால நீங்க கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல"
"உனக்கு எப்படி தெரியும்?" என்றான்.
"நீங்களும் பாட்டியும் பேசிகிட்டு இருந்ததை நான் கேட்டுட்டேன்" என்று அவள் கூற, அவன் வாயை பிளந்தான்.
"உனக்கு எல்லாமே தெரியும். ஆனா அப்செட்டா இருந்த மாதிரி ஆக்டிங் பண்ணியா?"
"ஆமாம். ஏன்னா அங்கிளோட முகம் எப்படி போகுதுன்னு பார்க்க நினைச்சேன்." என்று சிரித்தபடி வெளியே ஓடினாள் தாமரை.
"அடிப்பாவி...!" என்றபடி அவளை துரத்திக் கொண்டு ஓடி வந்தான் சூர்யா.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro