1 முன்னுரை
1 முன்னுரை
காவல்துறை ஆய்வாளர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் ஒரு குறிப்பிட்ட வீட்டை கடந்து சென்ற போது, அந்த வீட்டின் உள்ளே இருந்து, முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண், அவரை நோக்கி கையசைத்தபடி ஓடி வந்து நின்றார். அவரைப் பார்த்த அந்த ஆய்வாளர், தன் வண்டியின் பிரேக்கை அழுத்தி நிறுத்தி, வண்டியை விட்டு கீழே இறங்கினார். அந்தப் பெண்ணை பார்க்கும்போது அவர் ஏதோ பிரச்சனைகள் இருக்கிறார் என்று அவருக்கு புரிந்தது.
"என்னம்மா ஆச்சு? ஏதாவது பிரச்சனையா?" என்றார் அந்த பெண்ணிடம்.
"சார், தயவு செஞ்சு என் பிள்ளையை காப்பாத்துங்க. அவனை கொல்ல யாரோ முயற்சி பண்றாங்க." என்று தன் கரங்களை கூப்பி அவரிடம் கெஞ்சினார் அந்த பெண்மணி.
"கவலைப்படாதீங்க. நான் இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் தான். நான் உங்க பிள்ளையை காப்பாத்துறேன்." என்று தன் துப்பாக்கியை கையில் எடுத்துக் கொண்டார் அந்த ஆய்வாளர்.
"தயவு செஞ்சு என் கூட வாங்க. சார்." என்று தன் வீட்டினுள் ஓடினார் அந்த பெண்.
எச்சரிக்கை உணர்வுடன் அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றார் அந்த ஆய்வாளர். அவர்கள் அந்த வீட்டில் நுழைந்த போது, முகமூடி அணிந்த ஒரு மனிதன், கையில் கத்தியை வைத்துக்கொண்டு, இங்கேயும் அங்கேயும் பார்த்தபடி யாரையோ தேடிக் கொண்டிருந்தான்.
"அவன் தான், சார். அவன் தான், சார்," என்று அந்தப் பெண் கத்தினார்.
தன் கையில் இருந்த துப்பாக்கியோடு அவனை நோக்கி ஓடினார் ஆய்வாளர். அவரை பார்த்த அந்த முகமூடி மனிதன், பின்கட்டின் வழியாக நாலு கால் பாய்ச்சலில் ஓடிச் சென்று மறைந்தான்.
"ச்சே... ஓடிப்போயிட்டானே!" என்று தன் தொடையை தானே குத்திக் கொண்டார் அந்த ஆய்வாளர் கோபமாய்.
"உங்க பிள்ளை எங்கம்மா?" என்றார் அந்த பெண்ணிடம்.
"அவன் அந்த ரூம்ல இருக்கான், சார். அவனை ஒரு மரப்பெட்டியில நான் பாதுகாப்பா உட்கார வச்சுட்டு வந்தேன்." என்று ஒரு அறையை சுட்டிக் காட்டினார் அந்த பெண்.
அந்த அறைக்குச் சென்ற ஆய்வாளர், அங்கு ஒரு மிகப்பெரிய மரப்பெட்டி இருப்பதை பார்த்தார். அதை திறந்த போது, நடுக்கத்துடன் ஒரு சிறுவன் அதில் அமர்ந்திருந்தான்.
"ஆமாம்மா, உங்க பிள்ளை இங்க தான் இருக்கான்." என்று அந்த சிறுவனை தூக்கிவிட்டார், அந்த ஆய்வாளர்.
அவர் பின்னால் திரும்பிப் பார்க்க, அந்தப் பெண் அங்கு இருக்கவில்லை. அவரை தேடிக் கொண்டு அவர் வெளியே வந்தார். அப்பொழுது, ஒரு வேதனையான முணுமுணுப்பு குரலை கேட்டார். அந்த குரல், அடுத்த அறையில் இருந்து வந்தது. அவர் அந்த அறைக்கு சென்று பார்த்த போது, வயதான ஒரு பெரியவர், தலையில் அடிபட்டு, சட்டை முழுக்க ரத்ததோடு தரையில் விழுந்து கிடந்தார். அவரைப் பார்த்தவுடன்,
"ரஹீம் தாத்தா...!" என்று பயத்தோடு கத்தினான் அந்த சிறுவன்.
"யாருப்பா அவரு?" என்றார் அந்த ஆய்வாளர்.
"அவர் எங்க வீட்ல வேலை செய்றவர்."
தரையில் கிடந்த பெரியவர் மெல்ல கண் திறந்தார்.
"உங்களை அடிச்சது யாரு?" என்றார் ஆய்வாளர்.
"என்னை யாரும் அடிக்கல. அவன் என்னை தள்ளிவிட்டதுல, நான் கீழே விழுந்து எனக்கு நீ தலையில அடிபட்டுடுச்சு. ஆனா அவன் அம்மாவை கொன்னுட்டான். என்னால அவங்களை காப்பாத்த முடியல"
"யாரு உங்க அம்மா? அவங்க எங்க இருக்காங்க?"
"அங்க..." என்று ரஹீம் கூற, அந்த பக்கம் திரும்பி பார்த்தார் ஆய்வாளர்.
ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த பெண்ணை பார்த்த அவரது ரத்தம் உறைந்து போனது. அவரை அங்கு அழைத்து வந்த அதே பெண்மணி தான் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து இறந்து கிடந்தவர். சந்தேகமில்லாமல் அவர் இறந்து விட்டிருந்தார்.
அதைக் கண்ட ஆய்வாளர் வெலவெலத்து போனார். இதற்கு என்ன அர்த்தம்? தன் பிள்ளையை காக்க, அவரை இங்கே அழைத்து வந்தது அந்த பெண்மணியின் ஆன்மாவா? அந்தப் பெண்மணியின் உயிரற்ற உடலை திகிலோடு பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். அந்த ஆய்வாளர். அவரது உடல் சில்லிட்டு போனது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro