♠46♠
ஐந்து நிமிடம் கவினுக்கு ஐந்து யுகமாகத் தோன்றியது.
சிவணியின் நம்பருக்கு தொடர்ந்து முயற்சி செய்துக் கொண்டேயிருந்தான், ஆனால் லைன் கிடைக்கவேயில்லை.
அவளை எப்படி தொடர்பு கொள்வது என்று தவித்துக் கொண்டிருந்த நேரத்தில்... அவன் மொபைலுக்கு திலகாவின் நம்பரிலிருந்து மெஸேஜ் வந்தது.
இவர் எதற்கு வீட்டிற்குள்ளேயே இருந்துக் கொண்டு மெஸேஜ் செய்கிறார் என்று குழம்பியவன், மெஸேஜை திறந்துப் பார்த்தான்.
'கெஸ்ட் ரூம் சென்று பார்க்கவும்!' என்று இருந்தது.
இப்பொழுது இருக்கிற டென்ஷனில் இது என்ன சம்பந்தமே இல்லாத மெஸேஜ் என்று எரிச்சலுற்றவன் தன் அம்மாவை தேடிக் கீழேச் சென்றான்.
ஆனால் திலகாவும், அறிவும் வீட்டிலேயே இல்லை. வீடு முழுக்க தேடியவன் வெளியே சென்றுப் பார்த்தான்.
ரோட்டில் ஒரு ஈ, காக்கா இல்லை.
குழப்பத்துடன் வாசலில் நின்றிருந்தவனைப் பார்த்த எதிர்வீட்டு பெண்மணி, "என்னப்பா கவின் யாரைத் தேடுகிறாய்?" என்றார்.
"இல்லை ஆன்ட்டி வந்து... அப்பா, அம்மா..." என்று அவன் முடிக்கும் முன்,
"இப்பொழுது தான் மூன்று நிமிடங்களுக்கு முன் இந்தப் பக்கம் போனார்கள். உன்னிடம் சொல்லவில்லையா?" என்றார் வம்பிழுப்பவராக.
"இல்லை என்னிடம் சொல்லி விட்டு தான் போகிறார்கள்... மொபைலை வீட்டிலேயே வைத்து விட்டு கிளம்பி விட்டார்கள், அதான் கொடுக்கலாம் என்று பார்த்தேன். இட்ஸ் ஓகே வந்து பார்த்துக் கொள்ளட்டும், பை ஆன்ட்டி!" என்று வேகமாக உள்ளே வந்தான்.
எத்தனை யுகங்கள் மாறினாலும், அடுத்த வீட்டு வம்பிற்கு அலையும் மனிதர்களின் குணம் மட்டும் மாறவே மாறாது போலிருக்கிறது என்று பெருமூச்சு விட்டவன் சோபாவில் அமர்ந்தான்.
எண்ணங்கள் மீண்டும் சிவணியிடம் சென்றது, அவள் பிரச்சினை போதாது என்று இவர்கள் வேறு புதுசாக தங்கள் பங்குக்கு எதையோ கிளப்பி விட்டு போய் விட்டார்கள் என்று சோர்ந்தான்.
'என்ன தான் நடக்கிறது இந்த வீட்டில்...?' என்று கடுப்படைந்தவன், திரும்பவும் மெஸேஜை திறந்துப் பார்த்தான்.
நிமிர்ந்து கெஸ்ட் ரூமை பார்த்தவன், யோசனையோடு எழுந்துச் சென்றான்.
மெல்ல ரூம் கதவைத் திறந்தான், ஒரே கும்மிருட்டாக இருந்தது.
இங்கே எதற்கு பார்க்கச் சொன்னார்கள், அப்படி என்ன தான் இருக்கிறது உள்ளே... என்று லைட் சுவிட்சைத் தேடிப் போட்டவன், அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.
"ஹாய் டாடி! வெல்கம்!! கங்கிராட்ஸ்!!!"
"ஹாய் டாடி! வெல்கம்!! கங்கிராட்ஸ்!!!" என்று திரும்ப திரும்ப ஒரு குழந்தையின் மழலைக் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்க, திடீரென்று அவன் நின்றிருந்த இடத்திற்கு நேர் மேலேயிருந்த பாக்ஸ் ஒன்று வெடித்துச் சிதறி அவன் மீது வண்ணப் பூக்களைத் தூவியது.
அவன் பார்வை ஓரிடத்தில் நிற்க இயலாமல், சுற்றிலும் அலைப்பாய்ந்தது.
எதைப் பார்ப்பது... எதை விடுவது என்றே தெரியவில்லை என்ற சொற்றொடரின் அர்த்தத்தை அன்று தான் முழுமையாகப் புரிந்துக் கொண்டான்.
அறை முழுவதும் பூக்களாலும், பலூன்களாலும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்க, அவற்றிற்கு எல்லாம் சிகரம் வைத்தாற் போல் ஆங்காங்கே அழகான கொலுக் மொழுக் குழந்தைகள் படம் ஒட்டப்பட்டிருந்தது.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அவனை கவர்ந்திழுத்தது.
ஒரு குழந்தை தன் தந்தையின் தோளில் அமர்ந்து அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தது. மற்றொன்றோ முகத்தை உப் என்று வைத்துக் கொண்டு அவள் அப்பாவின் தலை முடியைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது.
அதைக் கண்டதும் அவன் முகம் இளகி, இதழ்களில் தானாக புன்னகை மலர்ந்தது.
அந்த அறையிலேயே ஒரு ஓரமாக ஆளுயர திரைச்சீலையின் பின் மறைந்து நின்று கொண்டு இருந்த சிவணி, கவின் உள்ளே நுழைந்ததும் குழந்தை வரவேற்று வாழ்த்தும் ஆடியோ வாய்ஸை ப்ளே செய்தாள். தொடர்ந்து அவன் நடவடிக்கைகளை கண்கள் கலங்க கண்காணித்துக் கொண்டிருந்தாள் அவள்.
மெல்ல ஒவ்வொரு படமாக ரசித்துக் கொண்டே வந்தவனின் கண்கள் ஓரிடத்தில் நிலைத்தது.
ஒரு அழகான குழந்தையை அதன் தாய் தூக்கியிருக்க, அதன் தந்தை இருவரையும் அரவணைத்தவாறு தாயின் தோளைச் சுற்றி கைப் போட்டு நின்று கொண்டிருக்க, அக்குழந்தை தன் தாயைப் பார்த்து பொக்கை வாய் திறந்து மயக்கும் புன்னகையை சிந்திக் கொண்டிருந்தது.
மெய்மறந்து அதையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு மெல்ல புலன்கள் வேலை செய்ய ஆரம்பித்தது.
காலையில் சிவணியின் உடல்நிலையில் ஏற்பட்ட திடீர் தடுமாற்றம், மாலையிலிருந்து அவள் கண்ணில் படாதது, அப்பா அம்மாவின் இயல்புக்கு மாறான நடவடிக்கைகள், தான் இந்த அறைக்குள் நுழைந்ததும் மழலைக் குரலில் வரவேற்றுப் பாடிய சங்கீதம்...
அப்படியென்றால்... அப்படியென்றால்... அதற்கு மேல் யோசிக்க முடியாமல் அவன் பிரமித்து போய் நின்றிருக்க, கவினின் நிலையை தெளிவாக உணர்ந்து கொண்ட சிவணி அதற்கு மேல் தாங்க முடியாமல் அவனை நோக்கி வேகமாக ஓடி வந்தாள்.
அவளின் அரவம் உணர்ந்து திரும்பியவன், மின்னலென பாய்ந்து அவளைத் தன்னோடு சேர்த்து இறுக்கி கொண்டான்.
இருவரும் வாய் மொழிப் பேச்சின்றி, மௌன பாஷையிலும், கண்ணீரிலும், இறுகிய அணைப்பிலும் தங்களின் உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்களோ... அவர்களுக்கேத் தெரியாது.
சிவணி மெல்ல அவனிடமிருந்து விலகினாள், இல்லை விலக முயன்றாள்... ஆனால் அவன் சற்றும் அசைந்துக் கொடுக்கவில்லை, அப்படியே அவள் தோளில் அழுந்த முகம் புதைத்திருந்தான்.
முகத்தில் மெல்லிய புன்னகைத் தோன்ற குனிந்து அவன் உச்சியில் ஆசையாக முத்தமிட்டவள், "நகருங்கள்... நான் போய் உங்களுக்கு சாப்பிட ஏதாவது எடுத்துக் கொண்டு வருகிறேன், வந்ததிலிருந்து ஒன்றுமே சாப்பிடவில்லை நீங்கள்!" என்றாள் அவன் தலை முடியை மெல்ல வருடியவாறு.
"ம்ஹும்... எனக்கு எதுவும் வேண்டாம். நீ இப்படியே எப்பொழுதும் என் கூடவே இரு!" என்றான் அவளை மேலும் இறுக்கி கொண்டு.
ம்ஹுஹும்... இவனை இப்படியே விட்டால் ஒன்றும் வேலைக்காகாது... இவன் வழியில் சென்று தான் இவனை மடக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro