Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

♠3♠

' அத்தை வீட்டிலிருந்துப் பெண் கேட்டு வருகிறார்களா...?' என்று அதிர்ந்து நின்றாள் சிவணி.

"ஆனால்... அவர்கள் ஏன்மா...?" என்றாள் வார்த்தையை முழுவதுமாக முடிக்க முடியாமல் தடுமாறியபடி, விரல்கள் துப்பட்டா நுணியை இறுக பற்றிக் கொண்டிருந்தது.

"ஏனென்றால் என்ன அர்த்தம்? அவர்களுக்குப் பையன் இருக்கிறான், பெண் கேட்டு வருகிறார்கள்..."

'விமல் அத்தானுக்கா...' என்று எண்ணியவளின் விழிகளில் நீர் கோர்த்தது.

"அம்மா! எனக்குப் பிடிக்கவில்லை வேண்டாம்... அவர்களைப் பெண் கேட்டு வர வேண்டாம் என்று சொல்லி விடுங்கள் மா, ப்ளீஸ்..." என்றாள் மன்றாடும் குரலில்.

"ஏய் வாயை மூடு... நல்ல விஷயம் பேச ஆரம்பிக்கும் பொழுதே அபசகுனமாகப் பேசிக் கொண்டிருக்கிறாய். ஏன்... விமல்க்கு என்ன குறைச்சல்? அவனுக்கு இருக்கும் வசதிக்கும், அழகுக்கும்... அவன் உன்னைத் திருமணம் செய்துக் கொள்ள முன் வருவதே பெரிய விஷயம். இதை விடப் பெட்டராக வேறு யார் உன்னை திருமணம் செய்துக் கொள்ள வருவார்கள் என்றுக் கனவு கண்டு கொண்டிருக்கிறாய்... உன் தகுதியை எண்ணிப் பார்த்து பேசு..." என்றார் அலட்சியமாக.

சிவணி எதுவும் பேசாமல், அவரையே வெறித்துக் கொண்டு நின்றாள். இதயத்தை கத்தியால் குத்தி திருகுவது போல் இருந்தது அவர் வார்த்தைகள்.

பெற்றத் தாயே பிள்ளையைக் கேவலமாக மதிப்பிடும் பொழுது... அவளும் என்ன செய்வாள்?

"ஏதோ உன் நல்ல நேரம்!!! அவனுக்கு லவ் பெயிலியர் ஆனதால்... அவன் மிகவும் அப்செட்டாகி இருந்தான். உன் அத்தையிடம் அவனைப் பற்றி விசாரிக்கச் சென்றிருக்கும் பொழுது, அவன் எந்தப் பெண்ணையும் திருமணம் செய்துக் கொள்ள மறுக்கிறான்... வெளியிலிருந்துப் பெண் எடுத்தால் பிரச்சனையாகி விடுமோ என்றுப் பயமாய் இருக்கிறது... என்றுப் புலம்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது தான் உன் பாட்டி, விமலுக்கு உன்னைத் திருமணம் செய்துக் கொடுப்பதாகப் பேசி முடித்து விட்டார்கள்!" என்றார் சுகுணா.

"அப்புறம் நீ..." என்று கோபமாக ஏதோ பேச ஆரம்பிப்பதற்குள்,

சிவணி எதுவும் பேசாமல் அமைதியாக வெளியேறினாள். நெஞ்சை அடைப்பதுப் போல் இருந்தது.

தளர்வாய் தன் கட்டிலில் அமர்ந்தாள். தாயின் வார்த்தைகளை எண்ணி இதயம் வலித்தது.

சற்று நேரம் இலக்கில்லாமல் சுவற்றையே வெறித்துக் கொண்டிருந்தவள் மெல்ல சுதாரித்தாள்.

நோ... இந்த நேரத்தில் தான் நான் சுதாரிப்புடன் இருக்க வேண்டும், சோர்ந்து போய் விட கூடாது என்று முடிவெடுத்தவளுக்கு தன் தாத்தாவின் அறிவுரைகள் நினைவிற்கு வந்தன. எதையும் பாசிடிவ்வாக மாற்ற முயற்சிக்க வேண்டும், முயற்சியே செய்யாமல் இப்படி ஆகி விட்டதே என்று புலம்புவதில் ஒரு அர்த்தமும் இல்லை என்பார்.

மூளையோ... ஏதாவது செய்... ஏதாவது செய்... என்று அறிவுறுத்திக் கொண்டே இருந்தது.

இது தான் உன் வாழ்க்கையை தீர்மானிக்கின்ற இறுதிக் கட்டம். இதில் நீ மற்றவர்களுக்காக காம்ப்ரமைஸ் ஆனாய் என்றால், வாழ்நாள் முழுக்க நீ  அனைவரின் முன் மதிப்பில்லாமல் தான் வாழ்வாய்.

உன்னைப் பற்றியோ... உன் உணர்வுகளைப் பற்றியோ... கவலைப்படுவோர் இங்கு யாரும் இல்லை.

இத்தனைக் காலம், நீ எதை எண்ணி, எதை எதிர்ப்பார்த்து உன்னை சமாதானப்படுத்திக் கொண்டு காத்திருந்தாயோ... அத்தனையையும் உன் மௌனத்தாலும், கோழைத்தனத்தாலும் இழந்து விடாதே...

இப்பொழுது நீ தெரிவிக்கும் எதிர்ப்பு தான், உன் எதிர்காலத்தை வசந்தமாக்கும். நீ எதிர்ப்பார்க்கும் அன்பு, நேசம், காதல், சுயமரியாதை என்று அனைத்தையும் உன்னை வந்தடையச் செய்யும்.

உன் வாழ்விற்காக நீ தான் போராட வேண்டும்...

அவள் மனமும், உடலும் இறுகியது.

முகத்தில் குளிர் நீர் அடித்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், ஆழ்ந்த மூச்செடுத்து கண்களை மூடிக் கொண்டு சில கணம் அமைதியாய் நின்றாள்.

தன் ரூமை விட்டு வெளியே வந்தாள். அனைவரும் டைனிங்கில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்.

இவள் ஒரு மேகஸைனை எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தாள்.

"சிவணி... நீ ஏன் சாப்பிட வராமல் அங்கே சென்று உட்கார்ந்துக் கொண்டிருக்கிறாய்...?" என்றுக் கேட்டார் அவளின் அப்பா ரவி.

சிவணிக்கு லேசாகத் தொண்டையை அடைத்தது.

பெரும்பான்மையான ஆண்களுக்கே உரிய குணமாக அவள் அப்பா யாரிடமும் பெரியதாக பாசத்தை வெளிப்படுத்தும் கேரக்டர் இல்லை என்றாலும், மனிதாபிமானமிக்கவர்.

லேசாக தொண்டையை செறுமி விட்டு, "இல்லைப்பா பசிக்கவில்லை... நான் பிறகு சாப்பிடுகிறேன்!" என்றாள் சிவணி.

சுகுணா அவளிடம் முகத்தை கடுகடுவென்று காண்பித்தார்.

அவள் எதுவும் பேசாமல் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

அனைவரும் சாப்பிட்டப் பிறகு சிறிது நேரம் ஒன்றாக அமர்ந்துப் பேசிக் கொண்டிருப்பார்கள்.

அந்த நேரத்தில் பேசுவதற்காக தான் அவளும் காத்திருந்தாள்.

"நான் உங்களிடம் சற்றுப் பேச வேண்டும் பெரியப்பா!" என்று அவர் முன் சென்று நிதானமாக கூறினாள் சிவணி.

வேகமாகத் திரும்பிய சுகுணா, அவளைப் பார்வையாலே எச்சரித்தார். அவள் அதைக் காணாதவள் போல் திரும்பிக் கொண்டாள்.

"என்ன... சொல்லு?" என்றார் பெரியப்பா.

"நாளை அத்தை... விமல் அத்தானுக்காக என்னைப் பெண் கேட்டு வருவதைப் பற்றிப் பாட்டி சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன், எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. அதனால் இந்த விஷயம் தொடர்பாக, அத்தை வீட்டிலிருந்து யாரும் வர வேண்டாம் என்று சொல்லி விடுங்கள் பெரியப்பா!" என்றாள் சிவணி அமைதியாக அவரை நேராகப் பார்த்து.

பாட்டியின் முகம் கோபத்தில் சிவந்தது.

______________________________________

Book was published only few chapters available.

Also placed in Amazon Kindle as ebook. For direct link go with my message board or go to bookshop link present in my profile.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro