Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

♠28♠

அவன் மனம் நோகாமல் அவனுக்கு எப்படித் தன்னை புரிய வைப்பது என்று சிவணி யோசித்தாள்.

சட்டென்று ஒரு ஐடியா தோன்றியது.

வேகமாக தன் லேப்பை ஓபன் செய்தாள். டேபிள் மேலிருந்த கவினின் கார்டை எடுத்து அவன் மெயில் ஐடியை அப்டேட் செய்துக் கொண்டு டைப் செய்ய ஆரம்பித்தாள்.

முதலில் சப்ஜெக்ட் என்று யோசித்தவள், தயவுசெய்து சற்று பொறுமையாக படிக்கவும் என்று அடித்தாள்.

பிறகு மெஸேஜ் பாக்ஸிற்கு வந்தவள், ஹாய்! என்ற அழைப்புடன் எழுத ஆரம்பித்தாள்.

ஏதாவது கோபத்தில் இதை டெலிட் செய்து விடாதீர்கள், ஒரு முறையாவது படியுங்கள். நான் அனுப்பியதை ஏன் படிக்க வேண்டும் என்று அலட்சியப்படுத்தி விடாதீர்கள். ப்ளீஸ்...

நீங்கள் படித்து முடித்து விட்டு என்ன முடிவு எடுத்தாலும் சரி, நான் அதற்கு கட்டுப்படுகிறேன். ஆனால் நம் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி நான் உங்களிடம் சற்றுப் பேசியே ஆக வேண்டும். நேரில் பேச தயக்கமாக இருப்பதால் தான் மெயில் பண்ணுகிறேன்.

ம்... முதலில் நான் இதை சொல்லி விடுகிறேன். நம் முதல் சந்திப்பின் பொழுது, நீங்கள் என்னிடம் ஒன்று கேட்டீர்கள் ஞாபகம் இருக்கிறதா? எனக்குப் பிரச்சினை இருப்பது தெரிந்தும் எந்த வித வருத்தமுமில்லாமல் என்னைத் திருமணம் செய்துக் கொள்ள நீ சந்தோசமாக சம்மதிக்கிறாயே... உன் மனதில் என்ன திட்டம் வைத்திருக்கிறாய்? என்னை உன் அடிமைப் போல் நடத்தலாம் என்றா... என்று கேட்டீர்கள்.

அப்பொழுது நானும் உங்களிடம் ஒன்று சொன்னேன், எனக்கு அந்த மாதிரி எந்த ஒரு எண்ணமும் கிடையாது என்று.

அன்றிருந்த அறிமுக நிலையில், உங்களிடம் சொல்வதற்கு தயங்கிக் கொண்டு என் மனதை நான் முழுவதுமாக தெரியப்படுத்தவில்லை. ஏன் இன்று வரை தயங்கி கொண்டே தான் இருக்கிறேன்... அதன் விளைவு தான் இந்த மெயில்.

அம்மா உங்களைப் பற்றி முதன் முதலாக சொன்ன உடனேயே... நீங்கள் தான் என் கணவர் என்று தீர்மானமாக முடிவெடுத்து விட்டேன்.

உங்களின் மேல் எனக்கு அளவு கடந்த அன்பும், காதலும் தோன்றியது. ஏன் தெரியுமா?

ஏனென்றால் என் மனதில் என்னென்ன தாக்கங்கள் ஏற்பட்டு நான் வருந்திக் கொண்டிருக்கிறேனோ... அதே பிரச்சினை தான் உங்கள் விஷயத்திலும், ஆனால் சற்று வித்தியாசமாக. புரியவில்லை இல்லை...?
ஓகே! எப்படி என்று சொல்கிறேன்.

என்னைப் பற்றி அம்மா உங்களிடம் முழுவதும் கூறி இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் எந்த ஒரு அன்பும் இயற்கையாகத் தான் தோன்ற வேண்டும் பரிதாபத்தில் வரக் கூடாது என்று எண்ணியிருப்பார்கள். அதே கொள்கை தான் எனக்கும். அதனால் தான் இதைப் பற்றி உங்களிடம் இத்தனை நாள் நான் சொல்லவில்லை.

இப்பொழுது மட்டும் எப்படி சொல்கிறேன் என்று யோசிக்கிறார்களா?

என் மீது உங்களுக்கு ஏற்பட்ட காதலை நீங்கள் மறைத்தாலும், உங்கள் கண்கள் எனக்கு காட்டிக் கொடுத்து விட்டது. அது தந்த ஊக்கத்தில் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஓகே விஷயத்திற்கு வருவோம். எங்கள் வீட்டின் முதல் குழந்தை, என் அக்கா பிரியா. அவளை எந்த வித பாகுபாடுமின்றி அனைவரும் நேசித்தனர். என் அம்மா கருவுற்றப் பொழுது, என் பாட்டியின் எதிர்பார்ப்பு முழுக்க ஆண் குழந்தையை வேண்டி என் அம்மாவிடம் திரும்பியது. குடும்பத்து வாரிசாக ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் நான் பெண்ணாகப் பிறந்து அவர்களின் எதிர்பார்ப்பை வீணாக்கி விட்டேன். அதனால் என் பாட்டியின் முழு வெறுப்புக்கு ஆளானேன்.

என்னைப் பெற்றவளுக்கும் என்னைப் பிடிக்கவில்லை. நான் பெண்ணாகப் பிறந்து அவர்களுடைய அத்தனை நாள் மகிழ்ச்சியை கெடுத்து விட்டதாக எண்ணினார்.

ஏதோ நான் செய்த புண்ணியம், என்னை இப்படி வெறுத்து ஒதுக்கும் குடும்பத்தில் பிறக்க வைத்தாலும், கடவுள் என்னை நேசிக்கவும் ஒரு ஜீவனை கொடுத்திருந்தார். அவர் என் தாத்தா! தாத்தா... சரி அவரைப் பற்றி பிறகு ஒரு நாள் உங்களிடம் சொல்கிறேன்.

அவர்கள் என்னிடம் நடந்துக் கொள்ளும் முறையை எண்ணி பல நாள் நான் வருத்தப்பட்டிருக்கிறேன்... யோசித்திருக்கிறேன்.

இதில் என் தவறு எங்கிருந்து வந்தது... ஏன் அவர்கள் என்னை வெறுக்க வேண்டும்? ஆனால் பதில் தான் கிடைக்கவில்லை.

அப்பொழுதெல்லாம் எனக்கு ஒன்று தோன்றும், பிறக்காத உயிருக்காக வருத்தப்பட்டு... பிறந்திருக்கும் உயிரை நேசிக்க மறுக்கிறார்களே என்று.

இப்பொழுது புரிகிறதா... நம் இருவருக்கும் உள்ள சம்பந்தம்?

ஆனால் உங்கள் நிலைமை எனக்கு நேர் தலைக்கீழ்.

பிறக்காத ஆண் குழந்தைக்காக மற்றவர்கள் என்னை வெறுத்தார்கள்... நான் அன்புக்காக ஏங்கினேன்.

ஆனால் நீங்கள்... உங்களை நேசிப்பவர்களை ஒதுக்கி விட்டு, இந்த உலகில் இல்லாத... பிறக்காத ஓர் உயிருக்காக வருந்தி ஏங்கி கொண்டு மற்றவர்களிடம் இருந்து உங்களைத் தனிமைப்படுத்தி வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இது எந்த விதத்தில் சரி என்று எனக்குப் புரியவில்லை...

நீங்கள் எப்பொழுதும் சந்தோசமாக இருக்க வேண்டும், எதை எண்ணியும் வருந்தக் கூடாது என்று நாங்கள் எண்ணுகிறோம்.

ஆனால் நீங்கள் எதையெதையோ நினைத்து மனதைப் போட்டுக் குழப்பி உங்களையும் வருத்திக் கொண்டு, உங்களை சுற்றி உள்ளவர்களையும் வருத்தப்பட வைக்கிறீர்கள்.

ஐ அன்டார்சன்ட்! குழந்தை என்பது ஓர் அழகான உறவு தான். ஆனால் அது மட்டுமே வாழ்க்கை இல்லையே... அதைத் தாண்டி நமக்கென்றும் ஒரு வாழ்க்கை இருக்கிறதே... அதை நாம் வாழ வேண்டாமா...

கடவுள் நம்மைப் படைத்தது, குழந்தைப் பெற்றுப் போடும் மிஷினாக அல்ல... அது வாழ்வின் ஒரு பகுதி அவ்வளவு தான்.

அதனால் ப்ளீஸ் எங்களுக்காக கொஞ்சம் யோசியுங்களேன்... இல்லாத ஒன்றுக்காக ஏங்குவதை விட, உங்களை நேசிப்பவர்களோடு உங்கள் வாழ்க்கையை எப்படி வண்ணமயமாக்கலாம் என்று எண்ணிப் பாருங்களேன்.

நான் கூறியது எதுவும் உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால்... மன்னிக்கவும்.
-சிவணி

என்று டைப் செய்து முடித்தாள்.


Bạn đang đọc truyện trên: Truyen247.Pro