Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

♠16♠

"ஓ காட்! அம்மா... அம்மா... கொஞ்சம் பொறுமையாக... நான் சொல்ல வருவதை முதலில் காது கொடுத்து கேளுங்கள்!" என்றான் கவின் சலிப்புடன்.

"என்ன?" என்றார் இறங்கிய குரலில்.

"நான் அவளை தனியாக வெளியில் எங்கேயாவது மீட் பண்ண வேண்டும்..." என்று அவன் கூறி முடிப்பதற்குள்,

"ஏன்... ஏன்... எதற்கு?" என்றார் அவசரமாக.

அவன் ஏதாவது கேம் ப்ளே பண்றானோ... என்கிற சந்தேகம் தோன்றியது அவருக்கு.

"இது என்னம்மா கேள்வி? திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள், நாங்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்துக் கொள்ள வேண்டாமா...?" என்று நக்கலாக கேட்டான்.

"அது சரி தான்..." என்று இழுத்தவர்,

"ஆனால் நீ அவளிடம் ஏதாவது சண்டை போட்டாய் என்றால்... அவள் மிகவும் ஃபீல் பண்ணுவாடா... சிவணி ரொம்ப சாப்ட் நேட்சர்!" என்றார் தயக்கத்துடன்.

"அம்மா! நீங்கள் பேசுவது, உங்களுக்கே முரண்பாடாக தோன்றவில்லை... திருமணம் செய்துக் கொண்டு காலம் முழுக்க என்னோடு வாழத் தயாராக இருப்பவளுக்கு, நான் திட்டினால் வருத்தம் ஏற்படும் என்றால்... அவள் எப்படி இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள முன் வருகிறாள்?" என்ற ஆணித்தரமான கேள்வியை அவர் முன் வைத்தான் அவன்.

அவன் கேள்வி திலகவதியை குழப்பியது.

'அவன் கூறுவதும் சரி தானே... அவள் எல்லாவற்றிற்கும் தயாராகத் தானே இருக்க வேண்டும்...'

"என்னப் பேச்சையே காணோம்?"

"ம்... சரி. நான் சிவணியை வரச் சொல்கிறேன்!" என்றார் தயங்கியபடி.

"ம்ஹுஹும்... அதெல்லாம் வேண்டாம். நாளை ஞாயிறு தானே... அவளுக்குப் போன் செய்து, நாளை அவள் ப்ரோக்ராம் என்னவென்று விசாரியுங்கள். நான் அவளை மீட் பண்ணப் போகிறேன் என்பது அவளுக்குத் தெரியவே கூடாது. அவளின் இயல்பான நடவடிக்கைகளை நான் கண்காணிக்க வேண்டும்... அப்புறம்..." என்று மேலே பேசிக் கொண்டேச் சென்றவனை வேகமாக இடைமறித்தார் திலகா.

"டேய் கவின்! எனக்கு என்னவோ பயமாக இருக்கிறதுடா... அவள் இதை தவறாக எடுத்துக் கொண்டால் என்ன செய்வது?" என்று கவலையடைந்தார்.

"திருமண எண்ணத்தை டிராப் பண்ணிட வேண்டியது தான். அம்மா... அவள் நம் பாயின்ட் ஆப் வியூவில் யோசித்து புரிந்து கொள்கிறவளாக இருந்தால்... கண்டிப்பாகக் கோபித்துக் கொள்ள மாட்டாள். இல்லை என்றால் அவள் நம்முடைய நிலைமைக்கு செட் ஆக மாட்டாள்!" என்றான் தெளிவாக.

சரியென்று விருப்பமில்லாமல் அரை மனதாக ஒத்துக் கொண்டார்.

"ஓகே! அப்புறம் மறந்துடாதீங்க... நான் அவளை மீட் பண்ணப் போறகிறேன் என்பது அவளுக்கு கண்டிப்பாக தெரியவேக் கூடாது!"

"ப்ச்... சரிடா!" என்று எரிச்சலுடன் போனை வைத்தார் திலகவதி.

சிறிது நேரத்தில் திரும்ப அழைத்து, சிவணி நாளைக் காலை பதினோரு மணி அளவில் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் உள்ள புக் ஷாப்பிற்குச் செல்கிறாள் என்ற தகவலைத் தந்தார்.

எக்ஸ்ப்ரஸ் அவென்யூ!!!

கவின் காலை பத்தரை மணியிலிருந்து சிவணியின் வருகைக்காக டென்ஷனுடன் காத்திருந்தான்.

சரியாக பத்து ஐம்பத்தைந்துக்கு சுற்றிலும் பார்வையிட்டவாறே சிவணி உள்ளே நுழைந்தாள்.

சட்டென்று கவினின் உடலில் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது, இதயம் தாறுமாறாக துடிப்பது அவன் காதுகளுக்கே கேட்டது.

ச்சை... என்ன ஆயிற்று எனக்கு? ஒரு பெண்ணை பார்ப்பதற்கு... ஏன் என் மனம் இப்படி படபடக்கிறது என்று சலித்துக் கொண்டான்.

முதலில் ஒரு பேன்சிக்குச் சென்றவள், தனக்குத் தேவையானதை வாங்கிக் கொண்டு பதினைந்து நிமிடத்தில் வெளியே வந்தாள்.

கவினின் விழிகள் அவளையே தொடர்ந்தன.

அடுத்து புக் ஷாப்பிற்குள் நுழைந்தவள், புத்தகங்களை நிதானமாக பார்வையிட ஆரம்பித்தாள்.

இவனும் பார்வையிட்டான் நிதானமாக, புத்தகங்களை அல்ல... சிவணியை!

பீகாக் கிரீன் கலரில் குர்தி மற்றும் ப்ளாக் கலரில் காட்டன் ஜீன்ஸ் அணிந்திருந்தாள்.

நீண்ட தலை முடியை ஷாம்பூவில் அலசி, தளரப் பின்னியிருந்தாள்.

கவினுக்கு இந்த மாதிரி ஹேர் ஸ்டைல் தான் ரொம்ப பிடிக்கும். ஒரு காலத்தில் தன் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருப்பான்... தனக்கு மனைவியாக வருகிறவளுக்கு கட்டாயம் நீண்ட தலைமுடி இருக்க வேண்டுமென்று.

அவளின் முடி தான் பார்ப்பதற்கு... எவ்வளவு மென்மையாக பட்டு போல இருக்கிறது... என்று எண்ணியவன், முடி மட்டுமா...? என்ற கேள்வியோடு அவள் முகத்திற்கு வந்தான்.

முகத்திலும் அப்படியொரு மென்மை... போட்டோவில் இருந்ததை விட நேரில் அதிகமாக. அந்த விழிகள் புத்தகத்தை தேடி அலசும் பொழுது அலைப்பாயும் அழகு... அவன் உடல் சிலிர்த்தது.

எதிலும் ஒரு நளினம்! பார்க்கும் பார்வையில்... நடக்கும் நடையில்... புத்தகங்களை எடுப்பதிலும், வைப்பதிலும் கூட என்னவொரு நளினம்.

தேவைக்கு அதிகமான டிரமாட்டிக்கலாக இல்லாமல் இயல்பான பெண்மைக்குரியதாக இருந்தது.

'பேச்சு...' என்று அவன் யோசிக்கும் பொழுதே...,

"ஹாய் மேடம்! எப்படி இருக்கிறீர்கள்? என்ன கொஞ்ச நாளாக உங்களை இந்தப் பக்கம் காணவில்லை...?" என்று சிவணியை கேட்டாள் விற்பனை பெண் ஒருத்தி.

குரல் கேட்டுத் திரும்பிய சிவணி, அவளைப் பார்த்து மென்மையாய் புன்னகைத்தாள்.

"வீட்டில் அக்காவுக்கு மேரேஜ் பா... அதனால் தான் வர முடியவில்லை!"

கவின் மெய் மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"புக்ஸ் கலெக்ஷன்ஸ் நிறைய வந்திருக்கும் போலிருக்கிறது..."

"ஆமாம்! எல்லாம் போன வாரம் தான் வந்தது. நீங்க கேட்ட புக் கூட வந்திடுச்சே... பார்த்தீர்களா?" என்று அவளை அப்பிரிவிற்கு அழைத்து சென்றாள் அந்தப் பெண்.

அவள் சென்றத் திசையையே பார்த்துக் கொண்டு அவன் நின்றிருக்க, அருகில் போன் ரிங் டோன் கேட்டது.

தன் கவனம் கலைந்து சுயநினைவிற்கு வந்தவன், மீண்டும் அவளைப் பார்த்தான்.

அவள் ஏதோ புத்தகத்தை கையில் எடுத்துப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளைப் பார்க்க பார்க்க அவன் மனதில் பெரிய ஏக்க அலை உருவானது.

அந்தப் பிரச்சினை மட்டும் இல்லையென்றால்... இவளை இப்படியே திருமணம் செய்து, என்னோடு அழைத்துச் சென்று விடுவேன். ஆனால்...

தன் இயலாமையை எண்ணி அவனுக்கு நெஞ்சை அடைத்தது. துவண்ட மனதை...
கைகளை இறுக மூடி கட்டுக்குள் கொண்டு வந்தான்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro