உயிர் வலி...
இமைகளை வருடி
வியர்வையை துடைக்கும்
இலைகளுக்குத் தெரியாது...
அழகிய தென்றலில்
அசைந்தாடி ஆசி வழங்கும்
கிளைகளுக்கும் புரியாது...
கொட்டப்படும் கோடரிக்கைகள்
நம்பிக்கை தாங்கிய துரோகமென்றும்
வெட்டப்படும் வேர்க்கால்கள் தம்
உடல் கொண்ட உயிர்பந்தமென்றும்..
தனிமையில் தத்தளித்த
தாமரைக்கு அருள் கிடைத்தது..
கற்சிலையின் காலடியில்
வாடிய மலர்வரிசையில்
ஒன்றாய் நிற்பதற்கு...
எதிர்பார்ப்புகளும்
எரிகற்களாய் பொசுங்கும்..
நெருங்கி வரும் வேளையில்
சுருங்கி வரும் பூவுலகில்...
எண்ணெய் கொப்பரையிலும் வேகாது
ஈரம் கொண்ட இதயங்கள்...
எரிமலைச் சிதறலிலும் உருகாது
எஞ்சிய கரித்துகளாய் மிஞ்சியும்..
கரையாத நம்பிக்கையை
வற்றாத கண்களில்
பற்றாகப் படர்த்தும்...
ஆறுதல் வேடமிட்ட அன்பு துரோகங்கள்
தாங்கும் பயிற்சியின் குறிப்புகள்...
ஒவ்வாத புன்னகையை
உதட்டில் ஒட்டுவதோ....
உதிக்கும் கண்ணீரை
உதிர்க்காமல் தேக்குவதோ...
பிடரியில் தாக்கிப்பின்
பிணத்திற்கு ஆராதனை
நாடும் கனிவினுள்
கலக்காத அலையாக...
தடைகள் தரும் ஓய்வாற்றலில்
துணிவின் துணை மேலாக..
துரோகங்களுக்கு இரையாகா
துணைசாராப் புதுப்பூக்கள்
பூலோகம் தாண்டும்
புத்துணர்வுப் பறவைகள்...
விண்ணோக்கிப் பறக்கட்டும்
தன்னம்பிக்கையில் சிறக்கட்டும்...
ஜே...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro