Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

ஈரம்-25

அரை மணி நேரம் கடந்திருந்தது.

முருகேஷின் பிணத்தை அப்புறப்படுத்தியதும் தேவையான பரிசோதனைக்குப் பின் அவன் உடல் அருகிலிருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லபட்டது. இன்னும் அபிமன்யு அந்த இடத்திலே இருக்க ஸ்டீஃபன் கூட விஷயமறிந்ததும் தனியாகவே இங்கு வந்திருந்தான்.

ஹரீஷ் மருத்துவரை அனுப்பி விட்டு வந்ததும் ஒரு இடத்தை கவனித்தான். அங்கு மட்டும் இரத்தம் கொட்டிக் கிடந்தது. ஆனால் அதற்கும் முருகேஷ் பிணம் இருந்த இடத்திற்கும் சம்பந்தமே இல்லையே என குழப்பத்திலே தடயவியல் துறையினர் ஒருவரிடம் கூறி அதை பார்க்கக் கூறினான்.

அதே நேரம் வேறொரு நபர் " இந்த சங்கிலி மட்டும் தான் பாடில கெடச்சிது. ஆனா இதுல ஏதோ சிப் இருக்கு " என அபிமன்யுவிடம் ஒரு சங்கிலியை கொடுத்து விட்டுச் சென்றார். புரியாமல் அதை வாங்கிப் பார்த்த அபிமன்யு வேகமாய் தன் வண்டியிலிருந்த மடிக்கணினியில் அந்த சிப்பை செலுத்தி எதையோ தேடத் தொடங்கினான்.

ஸ்டீஃபனும் ஹரீஷும் நாயகனின் செயல்கள் புரியாமல் அவனை பார்த்து கொண்டிருந்தனர். " இது ஏதோ ரெக்கார்டிங் டிவைஸ். இதுல கமெரா இருக்கு " என அபிமன்யு தெரிவித்ததும் அவர்களுக்கும் பதட்டம் தொற்றிக்கொள்ள பொருமையாய் அதை உபயோகித்து ஒரு காணொளியை தட்டினான் அபிமன்யு.

கிட்டத்தட்ட அந்த ஒரு காணொளி மட்டுமே நான்கறை நாளிற்கு ஒடியிருக்க அதில் முதல் பாதி அனைத்தும் இருளிலே நிறம்பியிருந்தாலும் முருகேஷின் சத்தமற்ற கதறலும் சதக் சதக்கென இறங்கும் கத்தியின் குத்துக்களும் அவ்வப்போது பேசிய உருவத்தின் குரல் பதிவும் இருந்தது.

அதை மிகவும் உன்னிப்பாய் பார்த்தவர்கள் இறுதியாய் " கதைய முடிச்சிடளாமா?? " என யாரோ கேட்ட அரை நிமிடத்தில் ஒரு கத்தி இறங்கும் சத்தம் கேட்டதும் கூர்ந்து நோக்கினர். எதுவும் தெரியப் போவதில்லை போல என அபிமன்யு நினைத்து அந்த காணொளியை விட்டு வெளியேறும் முன் ஒரு செயல் நடந்தது. கமெரா மெதுவாய் அங்குமிங்கும் ஆட நேற்று முருகேஷை கட்டி வைத்திருந்த சங்கிலிகளை உருவம் அவிழ்க்க முயன்றபோது அவனை தாண்டி சென்றமையால் இரு நொடிக்கும் குறைவான நேரத்தில் அவ்வுருவத்தின் கழுத்தும் நெற்றியும் மட்டும் தெரிந்தது.

நெற்றியில் வடுவாகியிருந்தாலும் அச்சிட்டதை போல் தெரிந்த " ஏ டி " யே அவர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்க அதை மேலும் உறுதி செய்வதை போலவே அவ்வுருவத்தின் கழுத்தில் கிடந்தது ஒரு பழைய சில்வர் டாலர்.

" ஸர் இது நூறு சதவீதம் ஆதியே தான். உங்களுக்கு தெரியல??? அந்த அச்சு மட்டுமில்லாம சாகும் போது அவங்க கழுத்துல கெடந்த ஒரே செய்ன் கூட அவங்க கழுத்துல இருக்கு. இது ஆதியே தான் " என ஹரீஷ் உணர்ச்சி வசத்தில் கத்திய கத்தலை அபிமன்யு ஸ்டீஃபன் கவனிக்கும் முன்பே அங்கு வந்திருந்த பத்திரிகையாளர்கள் படம் பிடித்திருந்தனர்.

சொல்லவா வேண்டும்?? ஹரீஷ் உணர்ச்சி வசப்பட்ட அந்த ஒரு நொடியின் காரணமாய் அரை மணி நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் ஆதியின் பெயர் தீயாய் பரவியிருந்தது.

அபிமன்யுவினால் என்ன செய்தும் அதை நிறுத்த முடியவில்லை. ஹரீஷ் குற்ற உணர்ச்சியில் அவனை பார்க்க " சரி விடுங்க ஹரீஷ். இதுக்குத் தான் ஒரு நிமிஷ கோவம் வாழ்கையையே அழிச்சிரும்னு சொல்றது. இனிமே பொருமையா இருங்க " என்ற அபிமன்யு அவன் தலையசைத்ததும் " பரவாயில்ல ஹரீஷ் விடுங்க. இப்போ நாம அதை யோசிக்க வேண்டாம். கல்யாணுக்கு இந்த ஆள் கூட மட்டுமில்ல செல்வராஜ் கூடவும் சம்பந்தம் இருந்துருக்கு. இவங்க எல்லாரும் சேர்ந்து தான் ஏதோ செஞ்சிருக்காங்க " என கூறிக் கொண்டிருந்த போதே முருகேஷின் தகவல் அடங்கிய கோப்புடன் அவ்வறைக்குள் நுழைந்தான் ஸ்டீஃபன்.

" அபி ஸர், செத்தவரு பேரு முருகேஷ். குடும்பம்னு சொல்லிக்க யாருமில்ல. சின்னச் சின்ன தப்பு செஞ்சிட்டு இருந்தவரு. கடைசியா நாழு வர்ஷத்துக்கு முன்னாடி ஏதோ ஒரு குழந்தைய கடத்த முயற்சி பண்ணி ஜெயிலுக்கு போய்ட்டாராம். அதத்தவிற இவர பத்தி வேற எதுவும் தெரியல " என சேகரித்தத் தகவலை பகிர்ந்தான். அத்துடன் முருகேஷின் காணொளியை அவன் பார்க்க அமர அபிமன்யுவும் ஹரீஷும் தான் மேலும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

" ஏதோ நாம முடிஞ்ச இடத்துலையே வந்து நிக்கிற மாரி இருக்கு " என அபிமன்யு கூறிக் கொண்டிருந்த போது " ஸர் திரும்ப சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நான் இதையெல்லாம் பண்ணது ஆதின்னு கூட சொல்லவரல. ஆனா சம்பத்த கடத்துனது ஒரு பொண்ணு தான் " என ஹரீஷ் நம் நாயகனிடம் அவன் சேகரித்த காணொளி அடங்கிய மடிக்கணினியை கொடுத்தான்.

" என்னதிது ஹரீஷ்??? ஏன் என் கிட்ட முன்னாடியே சொல்லல??? " என அபிமன்யு கேட்க " இல்ல ஸர் இந்த கார் எங்க போகுதுன்னு பார்க்குறதுக்காக சிக்னல் சீசீடீவி வச்சு தேடியதால எல்லாத்தையும் சேர்த்து உங்க கிட்ட காமிக்கலாம்னு இருந்தேன் " என ஹரீஷ் தயங்க " பரவாயில்ல ஹரீஷ். அந்த ஃபூட்டேஜஸ் கிடைச்ச உடனே எனக்கு சொல்லுங்க " எனக் கூறிய அபிமன்யு வேறேதோ கூறும் முன் அவர்களது நிலையத்தில் யாரோ கத்தும் சத்தம் கேட்டது.

ஸ்டீஃபனை அங்கேயே இருக்கக் கூறிவிட்டு மற்ற இருவரும் வெளியே விரைந்ததும் பார்த்ததென்னவோ பதைபதைப்பாய் நின்ற தர்மராஜைத் தான். அவர் அபிமன்யுவை கண்டதுமே " தம்பி,  தம்பி என் பொண்ண காணும் தம்பி. நேத்து அவ வீட்டுக்கே வரலத் தம்பி. ஃபோனையும் வீட்டுலையே வச்சிட்டு போய்ட்டா. தயவு செஞ்சு அவள கண்டுப்புடிச்சு குடுங்க தம்பி " என அவர் அழுது கையெடுத்து கும்பிட பதறி போய் அவரது கரத்தை பிடித்தான் அபிமன்யு.

" அய்யோ என்ன ஸர்?? தெளிவா என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க. ஆதர்ஷனாவ கண்டுப்புடிச்சிடலாம் " என அவன் தர்மராஜை அமர வைத்து அவரை அமைதி படுத்தினான். " நேத்து நைட் ஷிஃப்ட் வேலை இருக்குறதா சொல்லி சாய்ந்தரமே கிளம்பி போய்ட்டா தம்பி. போகும் போது அவ முகமே சரியில்ல. எங்க எல்லாரையும் கட்டி அணச்சு அழுதுட்டு எதுவுமே சொல்லாம போய்ட்டா. எனக்கு மனசு கேக்காம நான் ராத்திரி அவ வேலை பார்க்குர இடத்துக்கே போய் பார்க்க போனேன். ஆனா பொண்ணு வரவே இல்லன்னு சொன்னாங்க. என் பொண்ணு எங்க போனான்னே தெரியலத் தம்பி " என அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே ஸ்டீஃபன் அபிமன்யுவை தேடி விரைந்து வந்தான் அந்த மடிக்கணினியைத் தூக்கிக் கொண்டு.

" அபி ஸர், அபி ஸர், அபி ஸர், இத பாருங்க!!!! " என அவன் கத்திய கத்தில் காவல் நிலையமே அவனை பார்க்க ஸ்டீஃபன் அதையெல்லாம் கணக்கிலே எடுக்கவில்லை. மடிக்கணினியை அபிமன்யுவின் கரத்தில் தினித்து விட்டு " நீங்க இதப் பார்த்தே ஆகனும் " என்றான் காணொளியை உயிர்பித்து.

அதை புரியாமல் பார்த்த அபிமன்யுவும் ஒரு சில நிமிடங்களில் ஏதோ ஒரு பெண் குரல் கேட்பதையும் ஏதோ ஒன்று கீழ் விழும் சத்தத்தையும் கவனிக்க முருகேஷின் சங்கிலி பிரண்டு விழுந்த காரணத்தினால் அந்த கட்டிடத்தின் மேல் புறத்திலிருந்த திண்டை நோக்கியிருந்தது அந்த காணொளி. ஆனால் அதில் அதிர்ச்சி என்னவென்றால் அந்த கட்டிடத்தின் திண்டின் மீது நின்றது ஒரு பெண். யாரோ ஒரு பெண்ணல்ல. அவளின் முகம் தெள்ளத்தெளிவாகவே காணொளியில் தெரிந்தது.

ஏதோ இரைஞ்சும் சத்தம் வந்த காரணத்தினால் அவளின் குரல் கம்ம " அதிமா, நான் இனிமேலும் வாழ்ந்து ஒரு பிரயோஜனமும் இல்ல. நீயும் இருக்கப் போறதில்ல. நீயும் இல்லாம இந்த கொலைகளுக்கு நானும் ஒரு உதவியா இருந்துட்டேன்னு தெரிஞ்சு என்னாலையும் உயிரோட இருக்க முடியாது. என்ன மன்னிச்சிடு மா " என கூறிக் கொண்டே மாடியிலிருந்து அப்படியே கீழே விழுந்தாள் ஆதர்ஷனா.

நேற்று

  முருகேஷின் உடலை மாடிக்கு இழுத்துச் சென்ற அவ்வுருவத்தை பின் தொடர்ந்து சென்ற ஆதர்ஷனா அவனை கீழே தூக்கி வீசி விட்டு அவன் பிணத்தை எங்கு தொங்க விடலாமென பார்த்து கொண்டிருந்த உருவத்திடம் " நான் சொல்றத ஒரு முறை கேளு. என் காதலையே இழந்ததுக்கு அப்பறம் கூட நான் உனக்காக தான இவ்வளவு பன்றேன். ஏன் என்ன பத்தி புரிஞ்சிக்கவே மாற்ற?? நாம எங்கையாவது போய்டலாமே " என ஆதர்ஷனா கத்த கத்த கேளாமல் அது பாட்டிற்கு ஒரு கயிற்றை எடுத்து ஏதோ செய்யத் தொடங்கியிருக்க இதற்கு மேலும் வழியில்லையென மெதுவாய் திண்டின் புறம் சென்ற ஆதர்ஷனா " எனக்குத் தெரியும் நீ என்ன வெறுக்கல. ஆனா நடிக்கிற " என கூறிக் கொண்டே திண்டின் மீது ஏறி நின்றாள்.

அப்போதே கயிற்றை முருகேஷின் கழுத்தை திருப்பி அவ்வுருவம் கட்டத் தொடங்கியிருந்தது. பதிவிலும் ஆதர்ஷனாவின் முகம் விழ சரியாக அவ்வுருவத்தை அழைத்து அது அப்பட்டமாய் தெரிந்த அதிர்ச்சியிலிருக்கும் போதே அதன் கண்ணீரை கவனித்து விட்டு தன் கண்ணீரை துடைக்க மனமில்லாமல் அப்படியே நின்றாள்...

அவளது இறுதி வார்த்தைகளில் எழுந்து அவளை அடைய முயன்ற உருவம் தனிச்சையாகவே தெரியாமல் முருகேஷின் சங்கிலியை மிதித்திருக்க அத்தோடு தான் பதிவான காணொளியும் முடிந்திருந்தது.

" இல்ல நில்லு டி. நோ ஆது!!!! " என அவ்வுருவம் அலறிய அலறலோடு அதன் அதிர்ச்சியிலிருந்து அது வெளி வரும் முன்பே அப்படியே கீழே விழுந்திருந்தாள் ஆதர்ஷனா.

நொடி தான் கடந்திருந்தது அதற்குள்ளாகவே ஆதர்ஷனாவின் உடல் மண்ணையடைந்து அவளது இரத்தம் அவளை சூழ்ந்திருந்தது. அவ்வுருவம் கால் எங்கு செல்கிறதெனவே தெரியாமல் கண் முன் இருந்த பாதையை பார்த்து கீழே அவளை நோக்கி ஓடியது.

கால் தடுக்கி அவளருகிலே போய் விழுந்த அவ்வுருவம் அவளது இரத்தத்தால் நனைந்த தலையை தன் மடியில் தூக்கி வைத்து கொண்டு " ஆது, ஆது எழுந்திரி டி. என்ன பாரு டி. ஹையோ ஆது என்ன பாரு டி. எதுக்கு டி இப்படி செஞ்ச??? நீ எதுக்கு டி சாகனும்??? நான் இழந்த உறவுகள் போதாதா?? நீ ஏன் டி இப்படி செஞ்ச?? நான் உன்ன பிரியிர வலிய உணரக் கூடாதுன்னு தானேம்மா உன்ன விட்டு விலகிப் போனேன். நான் உன் கிட்ட உதவி கேட்கவே இல்லையே. ஏன்?!! ஏன்!! இப்படி செஞ்ச?? ஹையோ " என அவளை கட்டிக் கொண்டு அழுது தீர்த்து என்ன பயன், அவள் கண்கள் வானையே நோக்கியிருக்க எப்போதோ அவளது உயிர் அவளிடமிருந்து பிரிந்திருந்தது..

இன்று

அபிமன்யு சிலை போல் தன் அருகில் அமர்ந்திருந்த தர்மராஜை காணத் திரும்ப அவர் அந்த காணொளியை பார்த்து விட்டு இதயத்தில் கை வைத்து கொண்டு மயங்கிச் சரிந்திருந்தார். " ஹையோ ஸர் என்னாச்சு உங்களுக்கு??? " என ஸ்டீஃபன் அவரை தாங்க " ஸ்டீஃபன் அவரு தான் செத்துப் போன அந்த பொண்ணோட அப்பா. உடனே அவர தூக்குங்க ஹாஸ்பிட்டல் போகனும் " என அந்த நிலையமே நடுங்குவதை போல் கர்ஜித்து விட்டு வேகமாய் ஸ்டீஃபனுக்கு உதவியபடியே அவரை தூக்கிச் சென்றான் அபிமன்யு.

ஹரீஷ் வண்டியை ஓட்ட முடிந்த வரை விரைவாகச் சென்று அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். காவலர்களே வந்ததனால் உடனடியே அவருக்கு மருத்துவம் துவங்கப்பட அபிமன்யுவின் கட்டளைக்கேற்ப உடனே தர்மராஜின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் அடித்து பிடித்து வரும் போது சரியாக " இது சின்ன அட்டக் தான். நல்லாயிருக்காரு இப்போ. பார்த்துக்கோங்க " என்று விட்டு சென்றார் மருத்துவர்.

ஆதர்ஷனாவை பற்றிய உண்மையையும் மறைக்க முடியாதென்பதால் அவளது தாயாரிடம் வேறு வழியின்றி உண்மையை போட்டுடைத்தான் ஹரீஷ். அவர் அங்கேயே அதை கேட்டு கதறி அழ உங்கள் வீட்டை சோதனை செய்ய வேண்டுமென்று கேட்கக் கூட நம் நாயகனுக்கு வாய் வரவில்லை. ஆனால் வேறு வழியில்லாததால் அவரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு பாரமான மனதுடன் ஆதர்ஷனாவின் வீட்டை நோக்கிச் சென்றனர்.

அதே நேரம் சம்பத் சம்பந்தம் பட்ட காணொளிகள் அனைத்துமே கிடைத்து விட்டதாய் ஹரீஷிற்கு அழைப்பு வர அவன் அதை பார்ப்பதற்காய் வழி நெடுகிலே பிரிந்து சென்றான்.

வீட்டை முதலில் சோதனையிட்டு அவளின் செல்பேசியை கண்டுப்பிடித்தவர்கள் அதில் ஒரு குறிப்பிட்ட பெயரில்லா எண்ணிற்கு பல குறுஞ்செய்தி வந்திருப்பதையும் அதில் கொலை செய்யப்பட்ட நாழ்வரின் பெயரும் இருப்பதை கண்டு ஸ்டீஃபன் அதிர்ச்சியடைந்து அபிமன்யுவிடமும் கூறிக் கொண்டிருக்க அபிமன்யுவின் நிலை வேறாயிருந்தது.

ஆதர்ஷனாவின் அறையில் சில அலமாரிகளை திறந்து சோதனையிட்டு கொண்டிருந்த அபிமன்யு விரைவிலே தனுஷிடமிருந்த ட்ரோனை அந்த அலமாரியில் கண்டெடுத்தான். ட்ரோன் மட்டுமல்லாது அதனுடனே சில பல மெமரி கார்டுகளும் இருக்க அதை அந்த ட்ரோனிலே போட்டுப் பார்த்தான்.

முதல் காணொளியிலே முருகேஷின் முகம் தெரிய பின் கேட்ட ஆதர்ஷனாவின் குரலுக்கு இணங்க ஏதோ ஒரு மந்திரத்திற்கு கட்டுப்பட்டதை போல எங்கோ செல்லத் தொடங்கினான் முருகேஷ்.

மற்றொரு காணொளியில் முருகேஷை போலவே சித்தம் இழந்து கல்யாணி எங்கோ சென்று ஒரு காரை எடுத்து கொண்டு சென்றாள். அந்த வண்டியை எங்கோ பார்த்ததை போலவே தோன்ற, அடுத்த அரை மணி நேரத்தில் அவள் அதே இடத்திற்கு வந்து அந்த காரை நிறுத்தி விட்டு எதுவுமே நடவாததை போல் தன் வண்டியிலேறி சென்றதும் யாரோ ஒருவர் அந்த காரை விட்டிறங்கி ஏதோ கத்தினார்.

அதை கூர்ந்து பார்த்த போது தான் தெரிந்தது அது சம்பத். திடீரென அவன் பின் சென்ற ஒரு உருவம் அவன் தலையில் அடித்து அவனை கீழே தள்ளி விட்டு அவன் மயங்கியதும் அவனை காரில் தூக்கிப் போட்டு கொண்டு சென்றது.

மீண்டுமோர் காணொளியில் கல்யாணி அதே போல் சித்தமிழந்து யார் பேச்சையோ கேட்டு எங்கோ தன் வண்டியில் சென்று கொண்டிருந்தாள். அவள் உடையிலே தெரிந்தது அது கல்யாணி இறந்த அன்று அவள் அணிந்த உடையே தானென்று.

அதே நேரம் ஹரீஷிடமிருந்து அழைப்பு வந்ததாய் கூறி அவனிடம் ஓடி வந்தான் ஸ்டீஃபன். " ஹலோ ஸர், கல்யாணி தான் ஸர் சம்பத்த கூட்டீட்டு போயிருக்காங்க. ஆனா மேம்பாலம் ரோட தாண்டுனதும் அவங்க வண்டிய நிறுத்தீட்டு எங்கையோ போய்ட்டாங்க. அப்பறம் யாரோ ஒருத்தன் தான் சம்பத்த தலையில அடிச்சு அந்த கார்ல தூக்கிப்போட்டு கொண்டு போனான். அவன் எல்லாம் தெரிஞ்சே தான் பன்றான் ஸர். கமெராவ நேருக்கு நேரா பார்த்துட்டு தான் போனான் " என ஹரீஷ் படபடவென அபிமன்யு இங்கு பார்த்த அதே விஷயத்தை ஒப்புவிக்க " ஹரீஷ் நீங்க உடனே அங்க இருந்து கிளம்புங்க. விபுன்யாவ போய் பாருங்க. அவங்க சேகரிச்ச எல்லா எவிடென்ஸையும் எடுத்துட்டு வாங்க. நாம இன்னைக்கே செல்வராஜ அரெஸ்ட் பண்ணனும். இல்லனா அவரும் செத்துடுவாரு. ஸ்டீஃபன் அந்த நம்பர உடனே ட்ரேஸ் பண்ண சொல்லுங்க " என இருவருக்கும் ஒவ்வொரு வேலையை கொடுத்து விட்டு துரிதமாய் அந்த எஸ்டிகார்டுகளை சேகரித்தான். அதில் இரண்டு மட்டும் வித்தியாசமாய் இருக்க அதையும் எடுத்து கொண்டு அவன் வெளியேறினான்.

ஸ்டீஃபன் துரிதமாய் செயல்பட்டு அவர்களுக்கு தெரிந்த ஒரு நபரின் மூலமாக கொலையாளியின் எண்ணை உடனே கண்காணிக்கக் கூறினான்.

ஐந்தே நிமிடத்தில் அங்கிருந்து அழைப்பு வந்தது. " ஸர் அந்த நம்பர ட்ரேஸ் பண்ண முடியல. ஆனா அது கடைசியா அக்டிவா இருந்தது ஒரு ஸ்கூல்ல " என அவர் கூறிவிட்டு பள்ளியின் பெயரை கூறியதும் அபிமன்யு பதறியடித்து வண்டியை நிறுத்தினான்.

அது எயினி படிக்கும் பள்ளி. அபிமன்யு வேகமாய் வண்டியை திருப்ப ஹரீஷ் அழைத்த போதும் அவனை நேராக அந்த பள்ளிக்கே வரக் கூறினான். அதே நேரம் லினாவிடமிருந்து நம் நாயகனுக்கு அழைப்பு வந்தது.

" என்னங்க,  நான் இப்போ பாப்பாவ அழைக்க வந்தேன். ஆனா யாரோ வந்து அழச்சிட்டு போனதா சொல்றாங்க. யாரையாவது அனுப்புனீங்களா.?? " என நம் நாயகியும் அவள் பங்கிற்கு ஒரு குண்டை தூக்கிப் போட அதை கேட்டதும் பரபரத்ததென்னவோ ஸ்டீஃபன் தான்.

" நீ அங்கையே இரு லினா,  நாங்க வந்துட்டே இருக்கோம் " என ஸ்டீஃபன் கூறுவதற்குள்ளாக பள்ளி இருக்கும் சாலையில் அபிமன்யு வளைவெடுத்து நுழைய ஹரீஷும் அவர்களை தொடர்ந்து அவனது வண்டியை கிரீச்சிடும் சத்தத்துடன் நிறுத்தினான்.

லினா வாயிலிலே அவர்களை பார்த்து விட்டு ஓடி வந்தாள். அவளுடன் ப்ரின்சியும் அவளுக்குக் குறைவில்லாத பதட்டத்துடன் நின்றிருந்தாள்.

அவர்களை அமைதி படுத்தி பள்ளியின் உள் நுழைந்த நம் நாயகனுக்கு ஆதர்ஷனாவின் அறையில் தான் பார்த்த புகைபடங்கள் நினைவு வர அதை எண்ணிக் கொண்டே கண்களை சுழல விட்டான்.

" என்ன மன்னிச்சிடு பாப்பா. என்னால உன் கூட இருக்க முடியல. இனிமே இருக்கவும் முடியாது. உனக்கு அம்மா பாசமே கிடைக்காதோன்னு நான் பயந்தேன். ஆனா அப்படி இல்ல. இந்த ஒரு நொடி போதும், நான் செத்தாலும் நான் செஞ்ச எந்த கொலையும் எனக்கு பாவமாத் தெரியாது " என தன் மனதிலே எண்ணிக் கொண்டு ஒரு குச்சிமிட்டாயின் பேப்பரை பிரிக்கத் தெரியாமல் பாடுபட்டு கொண்டிருந்த எயினியை பார்க்க " என்ன இறக்கி விடுங்க என் அப்பா வந்துட்டாரு " என எயினி அப்போதும் நன்கு முகக்கவசமணிந்து மறைக்கப்பட்டிருந்த அம்முகத்தை காணாமலே இருக்க " நீ என்ன பார்க்காம இருக்குறது தான் உனக்கு நல்லது " என எண்ணிக் கொண்டே எயினியை கீழே இறக்கி விட்டது.

" அம்மா " என எயினி கத்தியதும் பள்ளி வளாகத்திற்குள் அனைவரும் ஓடி வர லினா ஓடிச் சென்று எயினியை தூக்கிக் கொண்டதும் எயினியை அணைத்து அவளது நெற்றியில் முத்தம் பதித்தான் அபிமன்யு.

" நில்லு " என நம் நாயகன் முன்னே செல்லும் அந்த உருவத்திடம் கத்த, அது அணிந்திருந்த ' ஏ டி ' என்ற ஜெர்கினை கண்டு ஹரீஷ் துரத்தி ஓட லினாவை தங்களது வண்டிக்கே செல்லக் கூறிய அபிமன்யு ஹரீஷை பின் தொடர்ந்து சென்றான்.

" அங்கேயே நில்லு இல்லனா சுற்றுவேன் " என ஹரீஷ் மிரட்டியும் அவ்வுருவம் நிற்காமல் செல்ல " என்ன அபி ஸர் பொருமையா வரீங்க?? " என கத்தி விட்டு ஸ்டீஃபன் ஹரீஷிடம் ஓடினான்.

அந்த வராண்டாவிலிருந்து மைதானத்தில் இறங்கிய உருவத்தை தடுக்க ஸ்டீஃபன் குறுக்கே புகுந்து அதன் முன் போய் வழியை மறித்தான்.

" நில்லு யாரு நீ?? " என ஹரீஷ் துப்பாக்கியை அதன் புறம் குறி வைத்து அதிகாரமாய் கேட்க அவ்வுருவத்தால் எளிதாய் அங்கிருந்து தப்பித்திருக்க முடியும், ஆனால் அது அவ்வாறு செய்யவில்லை. அதற்கு காரணம் அது கேட்ட அபிமன்யுவின் குரல்.

" பதில் சொல்றியா இல்ல இங்கையே உன்ன சுடவா? யார் நீ ?? " என ஹரீஷ் மீண்டும் ட்ரிகர் செய்து விட்டு கத்தி கேட்டபோது முன் நின்ற உருவத்திடமிருந்து பதில் வந்ததோ இல்லையோ ஹரீஷை தாண்டிச் சென்று அந்த உருவத்திற்கு முன் காவலனைப் போல் நின்ற நம் நாயகனிடமிருந்து அந்த பதில் வந்தது.

" என்னோட தம்பி. அதிய புவனன் "

தொடரும்...

DhiraDhi ❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro