ஈரம் - 16
உயிரிழந்த ஜடத்தையும் விட தோய்ந்த வதனத்துடன் தன் வீட்டிற்குள் நுழைந்தான் அபிமன்யு. நேரம் கடந்திருந்தது. பகலவன் எப்போழ்தோ மலையிறங்கி தன் சகோதரன் இரவவனை காவல் காக்க அனுப்பி வைத்திருந்தான்.
இருட்டில் மூழ்கியிருந்த அவனது வீட்டின் ஜன்னல்கள் வழியே அங்குமிங்கும் தப்பித்து அவனிடம் தஞ்சமடைய முயற்சித்த நிலவொளியை விட்டு தூரத்தள்ளி அபிமன்யு வீட்டிற்குள் நுழைந்து விட்டானென தெரியாமல் அரை உறக்கத்தில் இருந்தது அவ்வுருவம்.
விளக்கை ஒளிர விட்டு தன் கட்டிலில் சாய்ந்தவனுக்கு ஏகப்பட்ட எண்ணங்கள். இதற்கிடையில் ஸ்டீஃபனின் வீட்டிற்கும் சென்று விட்டு வந்திருந்தான். ஹரீஷ் கூறியதை போல ஸ்டீஃபனின் மற்றுமோர் அறை முற்றிலும் பல்வேறு செய்தி தாள்களால் நிறைந்திருந்ததோட மட்டுமல்லாது அதனிடையில் அவன் மனைவியினது செய்தியும் தன்னந்தனியாய் காட்சி தந்திருந்தது.
தினம் தன்னை அழகாய் நேர்த்தியாய் வரவேற்கும் ஸ்டீஃபனின் வீட்டை இப்போது அலங்கோலமாய் பார்க்க அவனுக்கும் வலித்ததே. அது சிறிய வீடாகவே இருந்தாலும் அது ஸ்டீஃபன் உழைத்து வாங்கிய அவனின் முதல் லட்சியம்.
அபிமன்யுவின் மனநிலையை கேட்டால், என்ன செய்வதென்று தெரியாமல் விழித்து கொண்டிருந்தான். கமிஷ்னர் ஞானவேல் கூறியது இப்போது தெளிவாய் புரிந்தது அவனுக்கு. ஆதி மேல் மீண்டும் கரை படிகிறது. அதை அறிந்தும் அவளின் கணவன் நான் அமைதி காத்துக் கொண்டிருக்கிறேன் என தனக்குத் தானே எண்ணிக் கொண்டவனின் கண்கள் பட்டென திறந்து கொள்ள, என்ன நினைத்தானோ நேராய் எழுந்து அவன் சில நாட்கள் முன் பூட்டிய ஒரு அறையின் சாவியை தேடி எடுத்தான்.
அந்த அறைக்குள் பெரும்பாலும் அலமாரிகளும் பல விதமான பொருட்களும் தான் நிறைந்திருந்தது. ஆதி மற்றும் புவியின் உடைமைகளை இங்கு தனியே சேர்த்திருந்தான் அபிமன்யு. அதனிடையில் ஒரு அலமாரியை திறந்து ஒரு பழைய கோப்பை தனியே பிரித்தெடுத்தான்.
அதில் ஆதியின் இறப்பைப் பற்றி கமிஷ்னர் ஞானவேல் சேகரித்த சில குறிப்பிட்ட விஷயங்கள் பத்திரப்படுத்தப் பட்டிருந்தது. இரண்டு வருடம் முன்பு வற்புருத்தி அவனிடம் அதை ஒப்படைத்து விட்டுச் சென்றார் ஞானவேல். அதை நினைத்தவாறு தூசியை தட்டியவன் நிமிர்ந்து அங்கு மூடப்பட்ட நிலையிலிருந்த ஒரு புகைடத்தை பார்த்து பெருமூச்சு விட்டான்.
கோப்பைப் பிரித்து கொண்டே வெளியே சென்றவன் ஒரு மேஜையில் பரப்பி அதை பார்க்கத் தொடங்கினான். ஆதியை பரிசோதித்த மருத்துவர் அவளை இரண்டு நாள் அடித்து கொடுமை படுத்தியிருக்க வாய்ப்பிருக்கிறதென கூறியதாய் படித்த அடுத்த நொடியே அவனின் கண்களில் நீர் கோர்க்கத் தொடங்கியிருந்தது.
இரண்டு நாள்.. அந்த இரண்டு நாள், தான் அவளை காப்பாற்ற வழியில்லாது என்ன செய்தோமென தனக்குத் தானே கேட்டுக் கொண்டு வந்த கோவத்திற்கு தன் முஷ்டியை அந்த மேஜையில் ஒரு முறை ஓங்கி அடித்தான்.
ஆனால் இவன் இங்கு ஏற்படுத்திய அரவத்தில் உறங்கிக் கொண்டிருந்த உருவம் சட்டென விழித்து கொண்டது. அந்த ஒரு சத்தம் அதை எழுப்புவதற்கு போதுமானதாய் இருந்தது.
மீண்டும் தன் கண்களை பிரித்து அந்த கோப்பில் தன் கவனத்தை பதித்தான். இரண்டு நாள் அடித்ததாலோ இல்ல வேறெதனாலோ அவளின் உடலின் திரவ நிலை குறைந்து கொண்டே இருந்திருக்க வாய்ப்பிருக்கிறதென குறிப்பிட்டிருந்தது தெளிவாகவே நம் நாயகனுக்குப் புரியவில்லை.
ஆதியின் இருதயம் நின்றப் பின்னே கண்களை பிடுங்கியிருக்க வேண்டுமென ஒரு கனித்தல் இருந்தாலும் அந்த செயலினால் கூட அவளது உயிர் பிரிந்திருக்களாமென வாசித்ததும் அந்த கோப்பை தூக்கி தூற எறிந்து விட்டு அவனே அறியாமல் கத்தி கதறினான்.
அவனால் அந்த நேரத்திற்கு கதறுவதை தவிற வேறெதுவும் செய்ய இயலவில்லை. ஏதோ ஒரு பதட்டத்தில் இவனை போட்டுத் தள்ளி விட்டு தப்பி விடலாமென எண்ணி அந்த அறையை விட்டு வெளியேற எழுந்த அவ்வுருவம் அவனின் கதறலை கேட்டு உடல் நடுங்கி சுவற்றோரு ஒட்டிக் கொண்டது.
அபிமன்யுவின் கண்ணீர் அவன் கன்னத்தில் தடம் புரண்டோட அவன் எவ்வளவோ முயன்றும் அவனின் அழுகையை அவனால் அடக்க முடியவில்லை. ஆதியின் நிலையே இப்படி இருக்கையில் அவனை மேலும் சோதிப்பதை போல அவனுக்கு முன் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த ஆதி மற்றும் புவியின் புகைபடத்திலிருந்து புவியின் புகைபடம் படாரென கீழே விழுந்து அதன் கன்னாடி அத்தரை முழுவதும் சிதறியது.
தனிச்சையாகவே தன் கரங்களை கொண்டு தன் தலையை காத்திருந்த அபிமன்யு பதறியடித்து வேகமாய் அந்த புகைடத்தை கையில் எடுத்தான். அலட்சியத்தாலோ என்னவோ கன்னாடி துண்டொன்று அவன் உள்ளங்கையை சற்று ஆழமாக பதம் பார்த்த காரணத்தினால் புவியின் புகைபடத்தில் வடிந்தது அவனது இரத்தம்.
ஆனால் அதை தான் அபிமன்யு பார்க்கக் கூடாதென எண்ணியிருந்தான் போலும். தனது இரத்தத்தை கண்டவனுக்கு கையில் குத்திய அந்த துண்டு தன் இதயத்தில் குத்தியிருக்கக் கூடாதா என்னும் எண்ணம் வந்தது. அவனின் கண்ணீர் இன்னும் பெருக்கெடுக்க அவனின் நடுங்கும் இதழ்களை தாண்டி வெளிவந்ததென்னவோ " புவி " என்ற அப்பெயர் தான்.
ஆதியின் இழப்பையே தாங்கிக் கொள்ள இயலாதவனுக்கு அதே இரவு நடந்த தன் சகோதரனின் இழப்பும் நினைவிற்கு வந்தது. எதிர்பாராத விதமாய் ஏற்பட்ட அந்த விபத்தில் அவன் இழந்த அதிகப்படியான இரத்தத்தின் காரணமாய் தன் கடைசி நொடிகளை எண்ணிக் கொண்டிருந்தான் புவி.
அபிமன்யு கடினப்பட்டு அந்த மன உளைச்சல்களுக்கு இடையே போராடி மருத்துவமனையை அடைந்த போது புவிக்கு உடனடியே இரத்தம் வேண்டுமென சிலர் அவனிடம் பரபரத்தனர். தன் சகோதரனுக்கு தான் இரத்தம் கொடுப்பதாய் கூறிய அந்த நொடி அவனை அழைக்க முன் வந்த அந்த மருத்துவர் வேகமாய் பின் வாங்கினார்.
நம் நாயகனே அடியெடுத்து முன் வைத்தாலும் " வேண்டாம் உங்க இரத்தம் அவருக்கு வேணாம். நீங்க குடிச்சிருக்கீங்க உங்களால இரத்தம் கொடுக்க முடியாது " என முகத்தில் அடித்ததை போல் மறுத்தார் அம்மருத்துவர். அபிமன்யுவிற்கு நிகழ்வதை புரிந்து கொள்ளவே நேரம் தேவை பட்டது. ஏனெனில் அவனே மது அருந்தச் சென்றான் தான்.
ஆத்திரத்தில், தன்னை உயிரோடு கொல்லும் ஏதோ ஒரு வலியில் கண் கட்டப்பட்டதை போல் அங்கு சென்றான் தான். அபிமன்யு குடித்தே வருடங்கள் போயிருந்தது. புவிக்கு குடிப்பது அறவே பிடிக்காதென்பதற்காய் கல்லூரி நாட்களில் தலை தூக்கிய அந்த புது பழக்கத்தை கல்லூரி முடியும் போது அங்கேயே தலை முழுகிவிட்டிருந்தான்.
ஆனால் அன்றைய நேரம் அவனின் மூளையை திசை திருப்ப ஏதேனும் ஒன்று அவனுக்கு தேவைபட்டது. என்ன நடந்ததோ தெரியவில்லை அவன் குடித்தானோ குடிக்கவில்லையோ அவன் அங்கு சென்ற பத்தாவது நிமிடமே எப்போதும் அவன் குடிப்பதை தடுப்பதை போல் அப்போதும் புவியிடமிருந்து அழைப்பு வந்தது.
அவன் பெயரை கண்ட பின்னே நிதர்சனம் உரைக்க, தான் என்ன காரியம் செய்தோமென தன்னைத் தானே கடிந்து கொண்டு அழைப்பை ஏற்றுக் கொண்டு அந்த இடத்தை விட்டு விரைந்தான். ஆனால் அவன் எதிர்பார்த்ததை போல் பேசியது புவியல்ல. யாரோ சாலையில் சென்ற ஒருவர் அவனுக்கு விபத்தாகி விட்டதாய் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார்.
இந்த நேரத்திற்கு தான் உண்மையிலே குடித்திருப்போமோ என பதட்டத்தில் அபிமன்யுவிற்கு யோசிக்கத் தோன்றவில்லை. தான் உறுதியாய் குடிக்கவில்லை என அவன் ஒரு நிலையை அடைந்த நேரம், காலம் கடந்திருந்தது.
அவன் தாமதப்படுத்திய காரணத்தினால் புவியை காப்பாற்ற இயலவில்லையென கை விரித்து விட்டுச் சென்றார் அவனைத் தள்ளி விட்டுச் சென்ற அதே மருத்துவர்.
" நான் குடிக்கவே இல்ல புவி. நீ சொன்னத நான் மீறவேயில்ல டா. ஆனா-ஆனா அன்னைக்கு நான் அந்த இடத்துல கால் வச்சதுக்கே உன்ன காப்பாத்த முடியாம போய்டுச்சு டா. நா-நான் அன்னைக்கு வேணும்னு எதுவும் செய்யலையே. எல்லாரையும் இழந்துட்டு நானும் எயினியும் ஏன் டா தனியா வாழனும்?? நாங்க இத எதிர்பார்க்கவே இல்லையே. நான் ஆதிய போக விடாம இருந்துருந்தா இவ்வளவும் நடந்துருக்காதே. அவ காணாம போகாம இருந்துருந்தா உன்னையும் நாங்க இழந்துருக்க மாட்டோமே- இல்ல புவி. நீ இறந்ததுக்கு முழுக்க முழுக்க நான் தான் காரணம். என் தப்பு தான். என்னோட தப்பு தான். நான் தான் பாவம் பண்ணீட்டேன். நான் செஞ்ச பாவம் தான் உன்ன காவு வாங்கீடுச்சு " என அவனையே அவன் அடித்து கொண்டு அழுத அழுகையும் அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் அந்த வீட்டின் சுவற்றில் எதிரொலித்தது.
அவ்வுருவம் இவனின் அழுகையில் பயந்து போய் ஒரு மூலையில் ஒடுங்கியிருந்தது. அதன் இதயம் படபடவென பயத்தில் துடிக்க கண்ணீர் கண்களை எட்டி கரைத் தாண்டி கொண்டிருந்தது.
" உன்னோட ஒரு ஆசைய கூட என்னால நிறைவேத்தி வைக்க முடியலல்ல புவி?? உனக்குத் தெரியுமா ஸ்டீஃபன் அப்படியே உன்ன மாரியே தான். கொஞ்சம் அப்பப்போ சின்னப் புள்ளத்தனமா இருந்தாலும் அவரு ரொம்ப நல்லவரு. எனக்கு நூத்துக்கு ஐநூறு சதவீதம் உறுதியா தெரியும் அவரு எந்த கொலையும் செஞ்சிருக்க மாட்டாரு. அவரு என்ன ஏமாத்தியிருக்க மாட்டாரு. ஆனா அவர எப்படி காப்பாத்துறதுன்னே எனக்குத் தெரியல புவி. எனக்கு சத்தியமா தெரியல. உன் அண்ணனுக்கு என்ன டா ஆச்சு?? நான் ஏன் இப்படி ஆனேன்?? நான் இந்த காக்கிச்சட்டைய போடக் கூட எனக்குத் தகுதியில்லையோன்னுத் தோனுது புவி எனக்கு. உன்னோட போலீஸ் அண்ணன் எங்கையோ தொலைஞ்சு போய்ட்டான் டா. அவனே இல்லாதப்போ என்னால இந்த காக்கிச் சட்டைல என்ன செய்ய முடியும்?? " என அவன் அலறிய நேரம் அவன் வீட்டின் கதவை பட்டெனத் திறந்து கொண்டு அவனை தேடி ஓடி வந்தாள் நம் நாயகி.
லினாவை கண்டு அபிமன்யு அப்பட்டமாய் அதிர அவனை கண்ட பின்னே அவளுக்கு உயிர் வந்தது. வேகமாய் அவனை ஓடி வந்து அணைத்து கொண்டாள். இருவரும் இப்போது தரையில் மண்டியிட்டு அமர்ந்திருக்க லினா கிட்டத்தட்ட அவளது உடலை நாயகனின் மீதே சாய்த்திருக்க அவன் இன்னும் அதிர்ச்சியிலே அவளை அணைக்காது அப்படியே அமர்ந்திருந்தான்.
" என்னங்க ஆச்சு உங்களுக்கு?? நான் எவ்வளோ பயந்துட்டேன் தெரியுமா..? பக்கத்து வீட்டுலேந்து நீங்க கத்துறதா எனக்கு ஃபோன் பண்ணாங்க. நான் அவங்க கிட்ட உங்கள பாத்துக்க சொன்னேன். இப்படி-இப்படி ஏன் கதறுறீங்க??என்ன ஆச்சு??? " என லினா அவன் வதனத்தை ஏந்தி அவன் கண்களை நோக்க ஏனோ அபிமன்யுவிற்கு அவள் தன்னை அணைத்தது கூட தவறாய் தெரிந்தது.
துரிதமாய் அவளிடமிருந்து விலக முயன்றவனுக்கு முதல் முறையே தோல்வி தான் கிட்டியது. அதற்கு காரணம் அவன் கரங்களில் இருந்த அவளின் கெட்டியான பிடி. அவள் சட்டென பிடித்ததால் அபிமன்யுவின் மற்றோரு கரம் ஏதோ ஒரு இயல்பினால் அவளை பாதுகாப்பிற்காய் பிடித்தது.
" இப்படி உங்களுக்குள்ளையே வச்சி மருகுறதால உங்களுக்கு ஒன்னுமே கிடைக்காதுங்க. நீங்க கடைசியா கத்தீட்டு இருந்தத நானும் கேட்டேன். உண்மையாவே நீங்க போற்றுக்குற காக்கிச் சட்டையோட தகுதியே வேறங்க " என அவள் முகத்திற்கு நேராய் அழுகையின்றி அவனை பார்த்தாள். அவள் முகத்தில் அழுகையோ அல்ல மென்மையோ இல்லாது கோவத்துடன் பார்ப்பதே அவனுக்கு அதிர்ச்சியாய் இருக்க இதில் அவள் கூறியது மேலும் அவனை அதிர்ச்சியூட்டியது.
" உங்க தகுதி அத விட உயர்ந்ததுங்க. நீங்க போட வேண்டிய காக்கிச்சட்டை இதுக் கிடையாது. உங்கத் தோளில் இருக்க வேண்டிய பதவியே வேற. போலீஸ் அபிமன்யு ஒன்னும் தொலைஞ்சு போகல. அவரு உங்களுக்குள்ளையே தான் இருக்காரு. அவரு கொஞ்சம் இல்ல ரொம்பவே விரப்பானவரு. அந்த கோவம் உங்க கிட்ட இப்போவெல்லாம் கொஞ்சம் கூட இருக்குறதில்ல. நீங்க எப்போவும் சொல்றது உண்மை தான் ஒரு நிமிஷ கோபம் ஒருவனோட வாழ்கையையே அழிச்சிடும். ஆனா உங்க வாழ்கையே வேறங்க. உங்களுக்கு தேவையே அந்த கோபமும் விரைப்பும் தான். நீங்க கோபப்படவே மறந்ததாலையோ என்னவோ ஒரு கொலையாளி கோப்பட்டா என்ன செய்வாங்கங்குறதையே மறந்துட்டீங்க. நீங்க இந்த மூணு வர்ஷத்துல எவ்வளோ மாறியிருக்கீங்கன்னு தெரியிதா உங்களுக்கு? ஆதிக்கும் புவிக்கும் அப்படி ஆனதுலேந்து உங்களுக்கே தெரியாம உங்களளோட தன்னம்பிக்கைய நீங்க இழந்துட்டீங்க. அது புரியிதா உங்களுக்கு?? நீங்க பழைய படி மாறுவீங்கன்னு நாங்க தான் உங்க மேல நம்பிக்கை வச்சிருந்தோம். ஆனா வாழ்கைல நாங்க மட்டும் நம்பிக்கை வச்சா பத்தாது நீங்க உங்கள நம்பனும். உங்களோட அறிவுக்கும் மூளைக்கும் எனக்குத் தெரிஞ்சு எதுவும் ஆகல. அதெல்லாம் நல்லா தான் இருக்கு. நீங்க தான் சரியா இல்ல. இதுக்கு மேலையும் உங்கள எப்படி என்னால சரி பண்ண முடியும்னு தெரியல " என அவள் கூறியதையெல்லாம் கேட்டு அவன் வாயடைத்து அமர்ந்திருந்தான். லினா கூறுவதும் உண்மை தானே.
ஒரு காலத்தில் அம்மாநகரிலிருந்த ரௌடிசத்தையே ஒழித்தவனாயிற்றே அவன். அவன் இருந்த இடத்தில், அவன் நெஞ்சிலிருந்த அவன் பேரின் கீழிருந்த பதவி அவனை பெருமையடைய வைத்ததோடு நில்லாமல் அவனை ஒவ்வொரு நாளும் கூர்மையானவனாயல்லவா ஆக்கிற்று. அப்படியிருக்க அதை தூக்கி எறிந்த பின் அதன் வேறொரு பகுதி அவனுக்கு அதே சக்தியை கொடுக்கவில்லை என தவிப்பதில் நியாயமில்லை தானே. இத்தனை நாள் அவன் தொலைத்து விட்டதாய் எண்ணிய ஏதோ ஒன்று, அவனிடமிருந்த குறையாய் தெரிந்த அவ்வொன்று அவனே அவன் மீது வைக்காத நம்பிக்கை தானே.
அவன் கரம் தனது இடையில் தளர்வதையும் கண்கள் கண்ணீரிலிருந்து தெளிவடைவதையும் கண்ட லினா அவனின் கை வளைவிற்குள் இருக்க இன்னும் மனம் விரும்பினாலும் அதை ஒரு பெட்டிக்குள் போட்டு அடைத்து விட்டு தான் எழுந்ததோடு தரையை பார்த்து ஏதோ சிந்தித்து கொண்டிருந்த அவனையும் எழுப்பி விட்டாள்.
தூரத்திலிருந்து அவ்வுருவத்தின் கண்கள் இவ்விருவரின் மீதே நிலைத்திருக்க ஏனோ தெரியவில்லை லினாவின் மென்மையான பார்வை அபிமன்யுவை தீண்டிய போது அவ்வுருவத்திடமிருந்து ஒரு நிம்மதி பெருமூச்சு வெளி வந்தது.
குனிந்து அந்த கோப்பை எடுத்த லினா அதை அபிமன்யுவிடம் கொடுத்து விட்டு " உங்க மனசால இந்த கொலைய பாக்காதீங்க. உங்க மூளையால பாருங்க. வலி கம்மியா இருக்கும் " என கம்மிய குரலில் கூறியவள் அவனின் வனதனத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தாள்.
" புவி இறந்ததுக்கும் ஆதி காணாமல் போனதுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நீங்க எந்த தப்பும் பண்ணல. ஆதி எயினிக்குளையும் புவி உங்களுக்குள்ளையும் இன்னும் உயிரோடு தான் இருக்காங்க. அத புரிஞ்சிக்கோங்க " என கூறி மனமே இல்லாமல் சில வினாடிகள் முன் தன் பிடியிலிருந்து விலகி தன் கரத்தையே பிடித்திருந்த அவனது பிடியிலிருந்து தன் கரத்தை பிரித்தாள்.
அபிமன்யு அவளை விசித்திரமாய் ஒரு பார்வை பார்த்தான். அவனுக்கொரு புன்னகை கொடுத்து விட்டு " இந்நேரத்துக்கு அப்பாவ பார்க்க போன அம்மா இன்னும் வரலையான்னு நம்ம பொண்ணு சண்டப் போட ஆரம்பிச்சிருப்பாங்க. நான் போய் நம்ம பொண்ணத் தூங்க வைக்கனும். கெளம்புறேன் " என அவனிடம் விடைபெற்று அவன் கண்கள் மினுமினுப்பதை கவனிக்கத் தவறி அங்கிருந்து விடைப்பெற்றாள்.
வலியில் முனகிக் கொண்டே திரும்பிப் படுத்த ஸ்டீஃபன் மீண்டும் ஹரீஷ் அவனை அடிக்க வரும் முன் கேட்ட ஒரு சத்தத்தில் பட்டென திரும்பி பார்க்க அங்கு காக்கிச் சட்டையில் நட்சத்திரங்கள் கூடியிருக்க நெஞ்சிலிருந்த குட்டிப் பெயர் பலகையில் " அபிமன்ய ஷேக்கர் டெப்புட்டி கமிஷ்னர் ஆஃப் போலீஸ் " என்ற பட்டத்துடன் நின்றான் அபிமன்யு.
அதை கண்ட அடுத்த நொடி ஸ்டீஃபனின் கண்கள் விரிய அவன் வேகமாய் கரத்தை தலைக்குக் தூக்கி சல்யூட் அடிக்க முயன்ற நேரம் வலியில் அம்மா என அலறிக் கொண்டே கண்களைத் திறந்தான் ஸ்டீஃபன். அவன் இன்னமும் அதே இருட்டறையில் தான் கிடந்தான். இன்னும் விடியவே இல்லை போல இதில் சொப்பனம் வேறு என முனகிக் கொண்டே கடினப்பட்டு சுவற்றை பிடித்து கொண்டு எழுந்தமர்ந்தான்.
தொடரும்...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro