Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💚 இணை 7

சனிக்கிழமை பவி தன்னுடைய அம்மம்மாவை எந்த கேள்வியும் கேட்காமல் காப்பாற்றியதில் இருந்து கல்யாணியின் தன்னுடைய வேலைகளை எல்லாம் சரியாக செய்து கொண்டிருந்தார்.

அடுத்த வாரத்துக்கு பவிக்கு தேவையான யூனிஃபார்ம்கள், ஸ்போர்ட்ஸ் வியர், கேன்வாஸ் ஷூ, ஸாக்ஸ் சகிதம் எல்லாம் துவைத்து, அயர்ன் செய்து அழகாக அவளது கபோர்டில் ஞாயிறு காலையிலேயே அடுக்கியிருந்தார்.

அம்மம்மா ஒரு நேரம் செய்வார், ஒரு நேரம் செய்ய மாட்டார் எதற்கு வம்பு நாமே இந்த வேலையை கையில் எடுத்து செய்து விடுவோம் என்று சாம்பவி பத்தாம் வகுப்பு படிக்கையிலேயே தனது பள்ளி சீருடையை அவளே துவைத்து இரண்டு மூன்று முறை மணிக்கட்டில் எல்லாம் சூடு வாங்கிக் கொண்டு அயர்ன் செய்து கொள்வாள்.

கல்யாணி வேலை செய்யும் அந்த ஒருநேரம் இன்று வந்து அவள் எழுந்து, குளித்து தயாராகி வருவதற்குள் அவளது அறையில் நாளை அணிய வேண்டிய சீருடைகள் தயாராக இருந்ததைப் பார்த்து அவளுக்கு லேசாக சிரிப்பு வந்தது. இன்னும் ஒருவாரம், பத்து நாட்களுக்கு இப்படிப்பட்ட ராஜ உபசரிப்பு அவளுக்கு நிச்சயமாக வழங்கப்படும். கிடைக்கும் வரை அனுபவித்துக் கொள்ள வேண்டியதுதான்!

ஒன்பது மணிக்கு தனது ப்ரேக்பாஸ்ட்டுக்காக வந்து அமர்ந்தவளுக்கு எலும்பு சூப்புடன் இட்லியும் எலும்பு குழம்பும் தயாராக அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தன.

"பவிம்மா எழுந்திரிச்சு வந்துட்டியா?
நீ வரலைன்னா இன்னும் கால் மணி நேரத்துல நானே வந்து உன்னை எழுப்பி விடுவமான்னு நினைச்சேன். அதுக்குள்ள நீயே ரெடியாகி வந்துட்ட! உட்காருடா! டிஃபன் சாப்டலாம்!" என்று சொன்ன கல்யாணியிடம்,

"இன்னிக்கு வீட்டு டிஃபனா அம்மம்மா? டாடி எங்க போனாங்க? நீங்களும், தாத்தாவும் சாப்டீங்களா?" என்று கேட்ட படி டைனிங் டேபிளில் அமர்ந்தாள் சாம்பவி.

"கை, காலெல்லாம் குடைச்சல் எடுக்குது! வேலையே செய்ய முடியல தான்..... இருந்தாலும் மனசு கேக்கலடா தங்கம்; அதான் அம்மம்மாவே வேலைய பார்த்துட்டேன். உங்க அப்பாவும் அந்த வெளங்காதவனும் எங்கயோ வெளிய போனாங்க. தாத்தாவும், நானும் சாப்டோம். இப்பத்தான் அவரு பிரியாணிக்கு லெமனும், தயிரும் வாங்க கடைக்குப் போயிருக்காரு.....! காலையில சாப்ட்டுட்டு போயி இன்னுங்கொஞ்ச நேரம் தூங்குறதுன்னாலும் தூங்குடாம்மா! ஸ்பெஷல் க்ளாஸ், ஸ்டடின்னு எந்தநேரமும் புத்தகமும், கையுமாத் தான இருக்க!" என்று சொன்னவரிடம் புன்னகைத்தவள்,

"நான் மட்டுமா அம்மம்மா கஷ்டப்படுறேன்? நல்ல மார்க் ஸ்கோர் பண்ணனும்ங்குற ஆம்பிஷனோட எங்க க்ளாஸ்ல எல்லாம் சில ப்ரெண்ட்ஸ் ஒரு நாளைக்கு பதினாலு மணிநேரம் கூட படிக்குறாங்க. மார்க்ஸ் தானே இங்க நம்ம ப்யூச்சருக்கான டிஸைடிங் ஃபாக்டராவே இருக்கு! அப்போ எங்க மேல எக்ஸ்பெக்டேஷன் வச்சுருக்குற உங்களுக்கு சந்தோஷத்த தர்றதுக்காகவாவது நாங்க நல்ல மார்க்ஸ் எடுத்தே ஆகணும்ல..... ஒண்ணு எம்பிபிஎஸ், இல்ல செகண்ட் ஆப்ஷனா டென்டல் இந்த ரெண்டு கோர்ஸ்ல ஒண்ண கண்டிப்பா அச்சீவ் பண்ணியே தீருவேன் அம்மம்மா!" என்று உறுதியான குரலில் சொன்ன தன்னுடைய பேத்தியை பார்த்து ஆசையாக கன்னம் தடவி நெட்டி முறித்தார் கல்யாணி.

"நீ முதல்ல இருந்தே அறிவுடா தங்கம்; இல்லன்னா பதினேழுல ப்ளஸ்டூவுல சேந்துருக்க முடியுமா? இன்னும் ஒரு வருஷம் கழிச்சுத் தான் படிச்சிருப்ப!" என்று பெருமையாக சொன்னவரிடம்,

"அடப்போங்க அம்மம்மா! ஒரு வருஷம் முன்னால கொண்டு போய் என்னை ஸ்கூல்ல சேர்த்து விட்டுட்டு, நான் டென்த்ல பப்ளிக் எழுத பட்டபாடு எனக்கும், டாடிக்கும் மட்டுந்தான தெரியும்? இன்னும் ஒன் இயர் லேட்டா படிச்சிருந்தன்னா என் க்ளாஸ்ல தீபக்கும், வதனியும் எனக்கு காம்படீடர்ஸா இல்லாம இருந்துருப்பாங்க! பர்ஸ்ட் ப்ளேஸ பிடிக்குறதுக்கு எங்க மூணு பேருக்குள்ள என்ன சண்ட நடக்குது தெரியுமா? ஒருதடவ பர்ஸ்ட் ராங்க் வாங்குறது பெரிசில்ல; அத எல்லா எக்ஸாம்ஸ்லயும் தக்க வச்சுக்குறது தான் ரொம்ப பெரிய விஷயமா இருக்கு! நான் போயி இன்னும் ரெண்டு யூனிட்ஸ்க்கு எனக்கு நானே கொஸ்டீனர் ரெடி பண்ணனும். போகட்டுமா இல்ல உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமா?" என்று கேட்ட தன் பேத்தியிடம்,

"போய் படிடா தங்கப்பிள்ள; கிச்சன் வேலைய அம்மம்மா பாத்துக்குறேன்!" என்று அவளிடம் சொல்லி அவளை அனுப்பி வைத்தார் கல்யாணி.

"ஹவ் இஸ் இட் கோயிங் செல்வா?" என்று கேட்ட சபாபதியிடம்,

"ஒன்னியும் பிரியல; என்ன கேக்க வந்தியோ அத தமிழ்ல கேட்டுக்க வாத்யாரே!" என்று அவரிடம் காரப்பொரியை சுவைத்தவாறு சொன்னான் செல்வா. இருவரும் அவர்களுடைய பகுதியில் இருந்த ஒரு பூங்காவிற்கு வந்திருந்தனர்.

"இல்ல.... நீயும் பவியும் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டீங்களா? வீட்ல ஏதாவது ப்ராப்ளம் வந்துச்சா? மொத்தமா எப்டிப் போகுது?" என்று கேட்டவரிடம்,

"எப்டி போவுது? எல்லாம் போவக்கூடாத ரூட்லதா போவுது! நம்ம பாப்பா எல்லாம் தெரிஞ்சுக்கினே ஒண்ணும் தெரியாத மாதிரி குடுக்குது பாரு ஒரு ஆக்ட்டு! ச்சே..... இன்னா மனசுபா அந்தப்புள்ளைக்கு! வீட்டுக்கு ஹெல்பரா இட்டுக்கினு வந்த ஒன்னயவே கூட எங்க நைனா துட்டு குடுத்து தான கூட்டிட்டு வந்துச்சுன்னு கேட்டுச்சு பாரு..... எனக்கு அந்த எடத்துலயே கயத்துல தொங்கிரலாமான்னு இருந்சு தெரியுமா வாத்யாரே? அதான் நாளையில இருந்து காலையில ரெண்டுமன்னேரம் சாயந்தரம் ரெண்டுமன்னேரம் நான் வேலைக்குப் போப்பறேன்! காலையில மார்க்கெட்டாண்ட; சாயந்தரம் பாஸ்ட் புட் சென்டராண்ட! இனிமே நீயி பவி பாப்போவோட செலவுக்கு ஒண்டி எங்கிட்ட துட்டு குடுத்தா போதும்! எனக்கு ஆவுற செலவ நானே பாத்துக்கினு போறேன்!" என்று வீட்டின் நிலையையும் தன்னுடைய முடிவையும் சொன்னான் செல்வா.

"வாட்...... ஹவ் டேர் யூ டேக் திஸ் டெஸிஷன் பை யுவர்செல்ஃப்? மிஸ்டர் வாகை செல்வன்.... இப்பவும் நீ என் கமாண்டிங்க்கு கீழ தான் வொர்க் பண்ணிட்டு இருக்க! ஸோ உன் வாழ்க்கையில முடிவெல்லாம் நீ எடுக்கக்கூடாது! அதுவும் பவிம்மாவை ரிலேட் பண்ணி அவ கிட்ட உன்னை ஃப்ரூவ் பண்ணிக்குறதுக்காக ஒரு முடிவோட வந்து நிக்குற பார்த்தியா..... இந்த தப்பெல்லாம் நீ இனிமே யோசிச்சுக் கூட பாக்கக்கூடாது! முளைக்கயித்துல கட்டுன மாடு இருக்கு பாத்தியா? அது தான் நீ! நீ எந்த லிமிட் வரைக்கும் போகணுமோ அந்த லிமிட்ட நான் தான் டிஸைட் பண்ணுவேன்! நீ வீட்டுக்குள்ள வந்த பத்து நாளைக்குள்ள பவிம்மா முகத்துல ஒரு ஹாப்பினெஸ் தெரியுது! எப்பவும் இருக்குற டல் மூடெல்லாம் இப்ப இல்ல! இந்த சேன்ஜ தான் நான் அவ கிட்ட எதிர்பார்த்தேன்; பட் உங்கிட்ட இருந்து ஃப்ரீயா எங்களுக்கு எதுவும் வேண்டாம்! காட் இட்!" என்று சொன்னவரை ஒருபார்வை பார்த்தான் செல்வா.

உன்னை என்ன வேண்டுமானாலும் நாங்கள் செய்து கொள்ளலாம்; எப்படி வேண்டுமானாலும் வளைத்துக் கொள்ளலாம்; கேட்பதற்கு தான் உனக்கு ஒரு நாதியும் இல்லையே என்ற திமிர்பிடித்த மனப்பான்மை அவர் பேச்சில் நன்றாகவே வெளிப்பட்டது. உன்னிடம் ஒரு உதவி வேண்டும்; நீ என் மகளுக்கு ஹெல்ப் பண்ணனும் என்று சொன்னதெல்லாம் வெறும் வாய்ஜாலம்!

கயிறு போட்டு, சங்கிலியிட்டு கட்டவில்லை அவ்வளவுதான்..... மற்றபடி சாக்கடை நாய், முளைக்கயிற்றில் கட்டிய மாடு என்றெல்லாம் நேரடியாகவே தான் சொல்லி விட்டார்களே?

என்னிடம் வரும் எல்லா உறவுகளையும் பணத்தைக் கொடுத்துத் தான் நான் வாங்கிக் கொள்ள வேண்டியது இருக்கிறது என்று ஒரு சின்னப்பெண் சொன்ன வார்த்தை செல்வாவை மிகவும் வருத்தியது. அதற்கு அவன் ஒரு தீர்வு தேடப்போய் இப்போது சபாபதி அவனிடம் பேசிய வார்த்தைகள் அவனை மிகவும் காயப்படுத்தியது.

இவர் மட்டுமல்ல சிறு வயதில் இருந்தே இப்படி பலர் அவனை காயப்படுத்தி இருக்கிறார்கள்.

"இன்னா லுக் உடுற..... கீழ ஊத்தப்போறத ஒனக்கு துன்னக் குடுக்கலாம்னு பாத்தேன்! துன்றதுனா துன்னு..... இல்லன்னா நவரு!" என்று சொன்ன அவன் முன்னாள் முதலாளி,

"சோத்தயும் போட்டு, சொக்கா துணிமணிலா வாங்கிக் குடுத்து, தங்கினு இருக்குறதுக்கு ஒரு எடங்குடுத்து படிக்கப் போன்னு சொன்னா ஒனக்கு அதுக்கு கூட வலிக்குதா?" என்று கேட்ட பவுண்டேஷன் இன்சார்ஜ்,

இப்படி எத்தனையோ பேர் அவனது இல்லாமையை சொல்லி அவனுடைய தன்மானத்தை சீண்டிப் பார்த்திருக்கின்றனர். இப்போது சபாபதியும் அதையே தான் செய்கிறார்!

சபாபதியை ஒருநிமிடம் வெறித்துப் பார்த்தவன், தன்னுடைய பையிலிருந்த மூவாயிரம் ரூபாய் மற்றும் சில சில்லறைகளை அவரிடம் நீட்டினான். அவர் அவனை ஒரு புரியாத பார்வை பார்த்து விட்டு அவன் கையில் இருந்த பணத்தை வாங்கிக் கொண்டு அவனிடமிருந்து வரும் வார்த்தைகளுக்காக காத்திருந்தார்.

"நீ குடுத்த பணத்துல இப்ப வரைக்கும் செலவானது போவ மிச்சக்காசு..... பவிக்கு நல்லதுணியில ரெண்டு செட் யூனிஃபார்ம் எடுத்து தைக்க குடுத்துருக்கு. நாலு நாள்ல வந்து வாங்கிக்க சொன்னான். அந்த கார்டும் அவளோட ரூமாண்ட இருக்கும் பார்த்துக்க! நாயா இருந்தாலும், மாடா இருந்தாலும் எந்த சங்கிலியாலயும், கவுத்தலாயும் என்னைய கட்டி வக்க முடியாது. பழைய ஓனர் கடையாண்ட இருக்குற எவூட்ல தான் இருப்பேன். நாளைக்கு காத்தால வந்து பிடிச்சிக்கினு போ! எதுக்குன்னு கேக்குறியா? ஒங்கிட்ட ஐம்பதாயிரம் வாங்கிட்டு அத்த திருப்பி குடுக்கலையில்ல.... அதுக்குத்தான்! நீங்க படுத்துற பாட்டுக்கு ஹோமுல போயி குந்தினு இருக்குறது எவ்வளோ தேவலாம்! எவளோ ஒரு சாம்பவி அழுதாலும், மூஞ்சிய தூக்கினு இருந்தாலும் எனக்கென்ன வந்துச்சு?" என்று சொல்லி விட்டு
விறுவிறுவென அந்த பூங்காவின் வாசலை நோக்கி நடந்து கொண்டிருந்தான் வாகை செல்வன்.

"டேய் இடியட்! நீ என்னை கேக்காம இப்டி எந்த டெஸிஷனும் எடுக்கக்கூடாதுன்னு தான் நான் திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கேன். எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு கிளம்புறேன்னு சொன்னா என்ன அர்த்தம்?" என்று அவனிடம் கேட்டு வேகநடையுடன் அவன் பின்னால் வந்து அவன் கையைப் பற்றிக் கொண்டார் சபாபதி.

"ஆங்.... எங்க ஒடம்புலயும் மானம் மாரியாத்தா, சூடு சூலியாத்தால்லா இருக்குன்னு அர்த்தம்! சொம்மா கார்ப்பரேசன் குழாவ அடிக்குற மாதிரி ஆளாளுக்கு என்னைய வச்சு செய்வீங்க! நா அத்தனிக்கும் பல்ல காட்டிக்கினு ஒங்கவூட்ல மாரடிச்சுக்கினு கெடக்கணுமா? தேவயில்ல; ஒங்களாண்ட காலந்தள்றது செல்வாக்கு படா பேஜாராக்கீது! அதனால செல்வா கெளம்புறான்!" என்று சொன்னவனிடம் உச்சுக்கொட்டிய சபாபதி,

"டேய்..... பவிம்மா உன்னோட எக்ஸிஸ்டென்ஸ்ல ஹாப்பியா இருக்காடா! உனக்குப் புரியுதா இல்லையா? நீ இங்க கண்டிப்பா வேணும்! வாட்ஸ் யுவர் டிமாண்ட்? சொல்லித் தொலை!" என்று எரிச்சலுடன் கேட்டார்.

"எத்தினி தபா சொல்லினு இருக்குறது ஒனக்கு? என்னைய எம்போக்குல உடணும்! ஒன்னிய நாந்தான் கண்ட்ரோல் பண்றேன், அத்த பண்றேன், இத்த பண்றேன்னு இன்னொரு தபா என்னாண்ட உதார் உடக்கூடாது! இதுக்கெல்லாம் நீ ஓகே சொன்னின்னாக்க ஒவூடு இல்ல ஹோமு! இன்னான்ற வாத்யாரே?" என்று கேட்டவனிடம்,

"கூட வந்து தொல!" என்று சொல்லி அவனை அங்கிருந்து அழைத்துச் சென்றார் சபாபதி.

மதியம் அந்த வீட்டில் இருந்த நான்கு பேரும் சிக்கன் பிரியாணியை வலுவாக ரவுண்டு கட்டி உண்டு முடித்திருந்தனர். தந்தையுடன் வெளியே சென்று வந்தவன் அவள் கூப்பிட கூப்பிட அதைக் கண்டுகொள்ளாமல் அவனது அறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.

"என்னாச்சு? எதுக்கு திடீர்னு இவனுக்கு இவ்ளோ கோபம்னு தெரியலயே?" என்று நினைத்த சாம்பவி தன்னுடைய தந்தையின் முகத்தைப் பார்க்க அவர் "நீ வா பவிம்மா! நாம சாப்டலாம்!" என்று சொல்லி அவளை தன்னுடன் சாப்பிட அழைத்துச் சென்றார்.

இளையவள் இணை சேர்வாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro