Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💚 இணை 5

பளப்பளக்கும் பந்தூரமே
சிலிசிலுக்கும் செந்தூரமே
டால் அடிக்கும் ரத்தினமே
மினுமினுக்கும் முத்தாரமே

கதீஜா வந்தா நின்னா
பாத்தா ரிப்பீட்டு
அவ பாக்கும் போது
எல்லாம் உள்ள அப்பீட்டு

டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட

என்று பாடிய படியே உடலை அங்கும் இங்குமாக அசைத்தபடி
தண்ணீர் வாளியால் செடிகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தவன், உச்சந்தலையில் ஏதோ நொட்டென்று வந்து மோத "ஆ....." என்று கத்திக் கொண்டே தன் தலையை தடவிக் கொண்டிருந்தான்.

தனது தலையில் விழுந்து தன்னை என்ன தான் தாக்கியது என்று கீழே தேடியவன், தன் காலடியில் சற்று தூரத்தில் இருந்த பலாக்கொட்டையை பொறுக்கி எடுத்தான்.

"மாடியிலல்ல இத்த நான் காய வச்சுனு வந்தேன்.....?" என்று யோசித்த படி நிமிர்ந்து மேலே பார்க்க மாடியின் பக்கவாட்டுத் திண்டில் சாய்ந்து அவன் கண்களுக்கு காட்சி கொடுத்த சாம்பவி அவனுக்கு "ஹாய்"  சொன்னாள்.

"இது உன்னோட கைவரிச தானா?" என்று கேட்டவனிடம் சிரிப்புடன் தலையை ஆட்டியவள்,

"ஆமா! நாலு தடவ எய்ம் பண்ணி அஞ்சாவது தடவ கரெக்டா என் டார்கெட்ட அடிச்சுட்டேன் பார்த்தியா?
செடிக்கு தண்ணி ஊத்துன்னு சொன்னா அங்க என்னடா  டான்ஸ் ஆடிட்டு இருக்க? டூ யுவர் வொர்க் ப்ராப்பர்லி!" என்று கத்தியவளிடம்,

"தோடா..... வேலைய பாத்துக்கினே தான் நாங்க டான்சும் ஆடிக்கினு இருக்கோம் வார்டனம்மா! கரெக்டா குறிபாத்து மண்டை மேலயே போட்டவளுக்கு, நான் செஞ்சினு இருக்குற வேல மட்டும் கண்ணுக்கு
தெர்லயாக்கும்? பலாக்கொட்டய சாம்பாருல போடுறதுக்கோசரம் கழுவி எடுத்து காய வச்சிருந்தா நீயி அத எம்மண்டையில எறிஞ்சு வெளாடிக்கினு இருக்கியா? மேல ஏறி வந்தேன்..... அப்பால சட்னி தான் நீயி!" என்று சொன்னான்.

"ஐயோ நான் உங்களுக்கு
ரொம்ப பயந்துட்டேன் மிஸ்டர் வாகை!" என்று அவனுக்குப் பயந்தது போல் பாவனை செய்து கொண்டு ஓடியவளின் சிரிப்பு சத்தத்தை ரசித்துக் கொண்டிருந்தான் செல்வா.

செல்வாவும், சாம்பவியும் இப்போது ஒருவருடன் ஒருவர் இலகுவாக பேசிக் கொண்டனர். காலை ஆறு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை எதையாவது படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும், வரைந்து கொண்டும் இருக்கும் அவள் இப்போதெல்லாம்

ரவு உணவை உண்பது அவனுடன் தான்! எட்டில் இருந்து ஒன்பதரை வரை அவர்களுக்கான நேரம்! சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டும், ஒருவரை ஒருவர் முடிந்த அளவு வாரிக்கொண்டும் இருப்பார்கள். சில நாட்களில் அவர்களுடைய பேச்சு கொஞ்சம் சீரியஸான விஷயமாகவும் இருக்கும்!


காலையில் இரண்டு ரொட்டிகளும், ஒரு முட்டையும், ஒரு க்ளாஸில் ஜுஸ் அல்லது பாலை அவளது வாயில் ஊற்றும் முன் செல்வா தான் "சாப்டியாமே.... சாப்டியாமே?" என்று ஒரு தடவைக்கு நான்கு தடவை கேட்டு அவள் பின்னாலேயே செல்ல வேண்டும்! இல்லையென்றால் அன்றைய காலை சாப்பாட்டில் எதையாவது ஒன்றை மறந்து விட்டு சென்றிருப்பாள்.

நீள்வட்ட மாசு மருவற்ற முகம், குண்டு குண்டு கண்கள்,  தெத்துப்பல் சிரிப்பு, என ஒருமுறைக்கு இருமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் அழகுடைய சாம்பவியிடம் செல்வா பொருத்தமற்றதாக நினைத்தது அவளது கழுத்து வரை வெட்டப்பட்ட கூந்தல் ஒன்றைத் தான்!

"இன்னா கண்ணு! சாமி மாதிரி கண்ணுல ஒத்திக்கிற அழகா இருக்க; முடிய மட்டும் இப்டி வெட்டிக்கினு இருக்கியே?" என்று ஒருநாள் அவளிடம் கேட்டான் செல்வா.

"இல்ல செல்வா! வீட்ல இருக்கிற யாராவது ரிப்பன் போட்டு கட்டி விட்டா பரவாயில்ல; டெய்லி காலையில முடிய வாருறதே எனக்குப் பெரிய வேலையா இருந்தது. ஸோ எவ்ளோ ஷார்ட்டா முடியுமோ அவ்ளோ ஷார்டா வெட்டிக்கிட்டேன். என் ப்ரெண்ட் ஆகிட்டதால ஹேர்ஹட்ல இருந்து எஸ்கேப் ஆகிடலாம்னு நினைக்காத! ஒழுங்கா எவ்ரிமன்த் ஹேர்ஹட் பண்ணி பியர்டு ட்ரிம் பண்ணி நீட்டா இருக்கணும். புரியுதா?" என்று அவனை மிரட்டினாள் சாம்பவி.

"எங்கிட்ட எதையோ கேக்கணும்னு நேத்து நைட் சொன்னியே? அத இப்போ கேளு!" என்று நியாபகமாக  அடுத்த நாள் அவனிடம் கேட்டவளிடம்,


"இல்ல..... ஒங்கம்மாவும், நைனாவும் சேந்து இல்லன்னு அவரு எங்கிட்ட சொன்னாரு! உங்கம்மா எங்க இருக்குது? ஏன் உங்கள விட்டுட்டு தனியா இருக்குது?" என்று கேட்டவனை ஏற இறங்க ஒருமாதிரியாகப் பார்த்தவள்,

"கேக்குறதுக்கு வேற கேள்வியே கிடைக்கலையா உனக்கு? என் பயாலஜிக்கல் மதர் பத்தி கண்டிப்பா பேசியாகணுமா இப்போ? ஃபைன்! என் பேரெண்ட்ஸ்க்கு வீட்ல பார்த்து அரேன்ஜ்டு மேரேஜ் பண்ணி வச்சுருக்காங்க. பட் எங்க அம்மாங்குற அந்த காரெக்டர் ஒரு ஆளை கல்யாணத்துக்கு முன்னால ரொம்ப டீப்பா லவ் பண்ணியிருக்காங்க. மிஸ்டர் சபாபதிட்ட மிஸ் வித்யா அத கல்யாணத்துக்கு முன்னாலயே சொல்லியிருக்கணும். இல்ல அட்லீஸ்ட் வெட்டிங் நைட் அன்னிக்காவது பேசியிருக்கணும்! எதுவுமே பேசாம, சொல்லாம ரெண்டு பேரும் பேமிலி லைஃப லீட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. பட் அந்த லேடியால அவங்களோட பழைய லைஃப அவ்ளோ ஈஸியா மறக்க முடியல! அவங்க எங்கள விட்டுட்டு அவங்களோட லவ்வரோடயே போகணும்னு எடுத்த டெஸிஷனுக்கு எங்க ரெண்டு பேரோட லைஃபும் பலி! சபாபதி அண்ட் வித்யாவோட பர்ஸ்ட் ரெண்டு இங்க்லீஷ் லெட்டர்ஸ் என் பேருல மட்டும் தான் முதல்லயும் கடைசியுமா சேர்ந்து இருக்கு! மத்தபடி அவங்க இருக்காங்க, என்ன பண்றாங்க, அவங்களோட ப்ரெசண்ட் லைஃப்ல அவங்களுக்கு கிட்ஸ் யாரும் இருக்காங்களா இப்டி எந்த விஷயமுமே எங்களுக்குத் தெரியாது!" என்று அவனிடம் சொல்லி விட்டு தன் நகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம் சின்ன குரலில்,

"மன்னிச்சுடு கண்ணு! நா ஒன்னிய கஷ்டப்படுத்திட்டனா?" என்று கேட்டான் செல்வா.

"அப்டி எல்லாம் இல்ல! என்னன்னே தெரியாத ஒரு விஷயத்துக்கு எப்டி ஃபீலிங் எல்லாம் வரும்? இப்போ என் அம்மம்மா என்னை விட்டுட்டுப் போயிடுவாங்கன்னு நீ சொன்னா நான் அழுவேன். பட் ரெண்டு வயசுல என்னை விட்டுட்டு வேற வாழ்க்கைய தேடிப் போனவங்களுக்காக நான் எதுக்கு ஃபீல் பண்ணனும்?" என்று கேட்டாள் சாம்பவி.

"ரைட்டு பாப்பா! மனசுல ஒன்னியும் வருத்தமில்லன்னா ஒநைனாவாண்டயும் நல்லா பேசலாம்ல நீ? சொம்மா வீட்ல ஆளாளுக்கு அத்து உட்ட மேனிக்கே அலையுறீங்க?" என்று செல்வா தன் மனதில் பட்ட சந்தேகத்தை அவளிடம் கேட்க சாம்பவி ஒரு வேக மூச்சுடன்,

"ஏய்.... எங்க டாடி மேல எனக்குக் கோபம் இல்லன்னு நான் உங்கிட்ட சொன்னேனாடா? அவர் மேல தான் எனக்கு செம கோபம்! ஒரு கல்யாணம் பண்ணுனவர், அவரோட வொய்ப்ட்ட என்னை உனக்குப் பிடிச்சிருக்கான்னு கேட்ருக்கணுமா? இல்லையா? அவரோட வொய்ப்ட்ட அவர் ஒரு கேள்வியும் கேக்காம, அவங்கள போக விட்டதால தானே இப்ப நான் இப்டி அம்மா இல்லாம நிக்குறேன்? ஸோ என்னை இப்டி தனியா நிக்க வச்சதுக்கான புல் ப்ளேமையும் அவர் தான் எடுத்துக்கணும்!" என்று சொன்னவளிடம்,

"சரி... நல்ல பாப்பா நீ! எங்கூட துன்றதுக்கு வா!" என்று சொல்லி அவளை சமாதானம் செய்து தன்னுடன் அழைத்துச் சென்றான் செல்வா.

இப்படியாக ஒருவருக்கொருவர் தங்கள் வார்த்தையால் பரிமாறிக் கொள்ள அவள் மனதில் புதைந்து கிடந்த சில கோபங்களும், அவன் மனதில் பதிந்து விட்டிருந்த சில வருத்தங்களும் மெல்ல ஆசுவாசம் அடைந்தன.

அந்த வாரம் இரண்டாவது சனிக்கிழமை சாம்பவியின் பள்ளிக்கு விடுமுறை அளித்திருந்தனர். பனிரெண்டாம் வகுப்பு போனதில் இருந்து
சனிக்கிழமை விடுமுறை கிடைப்பது மிகவும் அரிதாகி விட்ட நிலையில் அன்றைய நாள் விடுமுறை அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது.

எப்போதும் தனியாக தனக்கென்று ஏதாவது ஒரு ஷெட்யூல் வைத்திருக்கும் கல்யாணி இன்று வீட்டில் ரிலாக்ஸ்டாக அமர்ந்திருந்தார்.

தனசேகரையும், கல்யாணியையும் ஒரு சந்தேகப்பார்வை பார்த்தவாறே துணிகளை துவைத்து பிழிந்து அதை கொடியில் உலர்த்துவதற்கு வெளியில் எடுத்துச் சென்றான் செல்வா.

அவன் திரும்பி உள்ளே வந்த போது கல்யாணி தன் பேத்தியுடன் பேசிக் கொண்டிருக்க அவன் அதையும் ஓரக்கண்ணால் பார்த்த படியே சமையலறைக்குள் நுழைந்தான்.

"அம்மம்மா போய் உனக்கு ஒரு டீ போட்டுட்டு வந்து தரட்டுமா பவிம்மா?" என்று கேட்டவரிடம்,

"பரவாயில்ல அம்மம்மா! செல்வா அதெல்லாம் பார்த்துப்பான்! உங்களால முடிஞ்சா நீங்க என்னை ஒரு அவுட்டிங் கூட்டிட்டுப் போறீங்களா? ட்ரெஸ், அக்ஸஸரீஸ் பர்ச்சேஸ் போய் ரொம்ப நாளாகிடுச்சே? இந்த வீக் டாடிக்கு
இன்னிக்கும் வொர்க் இருக்காம். ஸோ நாளைக்கு மார்னிங் தான் வீட்டுக்கு வருவேன்னு சொன்னாங்க. ஸோ ஷாப்பிங்க் போலாமா அம்மம்மா?" என்று கிட்டத்தட்ட கெஞ்சிக் கேட்டாள் சாம்பவி.

"என்னடா பவிம்மா! உன் அம்மம்மாவே இன்னிக்கு ஒரு நாள் தான் எந்த ப்ரோக்ராமும் இல்ல; அதுனால நல்லா ஹாயா வீட்ல உக்காந்து ரெஸ்ட் எடுக்கப் போறேன்னு சொல்லிட்டு இருந்தா! நீ என்னடான்னா இன்னிக்கும் தாத்தாவுக்கு ட்ரைவர் வேல குடுத்துட்ட!" என்று அவளிடம் சொன்னார் தனசேகரன்.

"ஸாரி தாத்தா! வெளிய போகணும்னு ஆசையா இருந்தது! அதான் கேட்டேன். உங்களுக்கு டயர்டா இருந்தா நாம இன்னோரு நாள் போய்க்கலாம் தாத்தா!" என்று சாம்பவி அவரிடம் சொல்லிக் கொண்டிருக்க செல்வா அவளுக்கான மசால் தோசையுடன் அவளருகில் வந்தான்.

"நாஸ்தா துன்னுக்கினு எங்க வேணா போ!" என்ற அறிவிப்புடன் தனசேகர் மற்றும் கல்யாணியைப் பார்த்து முறைத்தவனிடம்,

"செல்வா.... என்ன ஒரு தோசைய மட்டும் கொண்டு வந்துருக்க? இது நம்ம எல்லாருக்கும் எப்டி பத்தும்? ஒரு அஞ்சாறு தோசை ஊத்து! அப்புறமா எல்லாரும் சேந்து ஒக்காந்து சாப்டலாம்!" என்று இயல்பாக சொன்னாள் சாம்பவி.

"பாப்பா..... நம்ம வாத்யாராண்ட உங்க ஆயா மாசா மாசம் இருபதாயிரம் ரூபா வாங்குறாங்கல்ல? அத எப்டி செலவழிக்குறாங்கன்னு நீ கொஞ்சம் அவங்கட்ட கணக்கு கேளேன்!" என்றான்.

"ஏய்.... என்ன உளறுற? யாருக்கு யாரு கணக்கு காமிக்குறது? எங்க வீட்ல எங்க செலவுக்காக வாங்குற பணத்துக்கு, நாங்க எதுக்குடா உனக்கு கணக்கு காமிக்கணும்?" என்று கேட்ட கல்யாணியிடம்,

"யம்மா மவராசி! கணக்கு எனக்கில்லம்மா; இல்லவே இல்ல
ஒங்க பேத்தியாண்ட காமிங்க போதும்.....! மொத்த கணக்கையும் கூட காமிக்க வோணாம். நான் ஒங்களாண்ட ஒரே ஒரு கேள்வி மட்டும் கேக்குறேன். அதுக்கு  பதிலச் சொல்லுங்க போதும்.
சபா ஸாரு மாசத்துக்கு தார இருபதாயிரத்துல எம்புட்டு உங்களுக்கு? எம்புட்டு சாம்பவிக்கு?" என்று கேட்டான் செல்வா.

சாம்பவி அவர்களை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க அவளிடம்,

"என்ன வார்டனம்மா வொர்க் பிராப்பரு எல்லாம் எங்ககிட்ட தானா? ஒங்க ஆயாட்ட இதெல்லாம் கேக்க மாட்டியாக்கும்? கொத்தமல்லிய வீணடிக்காத; வாடுன கருவேப்பிலைய தூக்கிப் போடாதன்னு எனக்கு ஆயிரத்தெட்டு கண்டிஷன் போடுறங்காட்டியும் ஒங்க ஆயாவ ஏதாவது கேக்குறியா நீயி? நீயி இந்த வூட்டுக்கு உரிமைப்பட்டவ தான? அப்ப எங்கேள்விக்கு அவங்கள பதிலச் சொல்லச் சொல்லு!" என்று அவளுக்கு சவால் விடும் நோக்கில் புருவம் உயர்த்தியவனிடம் என்ன பேசுவதென்றே தெரியாமல் தனசேகரும், கல்யாணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இளையவள் இணை சேர்வாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro