Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💚 இணை 37

"நான் அம்மா கூடவே இருக்கணும்; அதுனால எனக்கு இப்ப கல்யாணம் வேணாம்!" என்றவளை "ஆரம்பிச்சுட்டா!" என்ற பாவத்துடன் பார்த்த செல்வா,

"ஒன்னாண்ட யாரும் அம்மாவ பாக்கக்கூடாதுன்னு சொல்லி, பூட்டு போட்டு வக்கலியே கண்ணு? நெதம் ஆஸ்பத்திரில இருந்து வந்ததுக்கு பின்னால நாலு மணி நேரம் கூட ஒங்கம்மாவோட இரு; இதெல்லாம் ஒரு பிரச்சனையா?" என்று அவளிடம் கேட்டான்.

"இல்ல..... அதெல்லாம் பத்தாது.
அம்மா எனக்காக இன்னொரு பேபியே பெத்துக்க கூடாதுன்னு முடிவு பண்ணி, நிறைய ஸாக்ரிஃபைஸ் பண்ணியிருக்காங்க. அதுனால நானும் யாரையுமே கல்யாணம் பண்ணிக்காம அப்பா, அம்மாவோடயே இருக்கப்போறேன்!" என்று சொன்னவளின் முன் திடீரென தன்னுடைய கையை நீட்டினான் செல்வா.

"எதுக்கு இப்ப நீ கை நீட்டுற?" என்று குழப்பத்தில் கேட்டவளிடம்,

"வா! கையப் புடிச்சுட்டு ரெண்டு பேரும் கீழ போவோம்! போயி உங்கம்மாவாண்ட நீ சொல்ற காரணத்த சொல்லி யாரையுமே கல்யாணம் பண்ணிக்காம உங்களோட இருக்கப்போறேன்னு இந்தப் பைத்தியம் சொல்லுது. அதுக்கு உங்களுக்கும் சம்மதமான்னு கேட்டு வருவோம்; வா!" என்று கையைக் கட்டிக் கொண்டு உறுதியான குரலில் சொன்னவனிடம்,

"ம்ப்ச்; எப்பவுமே நீ இப்டிதான்...... நீ என்ன சொல்றியோ, அத என்னை கேக்க வச்சுடுவ! நமக்குள்ள வந்தது ஜஸ்ட் ப்ரெண்ட்ஷிப் தான்; அது பர்ஸ்ட் லவ் கிடையாது! ஸோ நாம அத பெரிசா எடுத்துக்குறதுக்கு ஒரு அவசியமும் இல்ல!" என்று சொன்னவளை எங்கே கைநீட்டி விடுவோமோ என்று செல்வாவிற்கு பயமாக இருந்தது.

செல்லச் சீண்டல்கள், குறும்புப் பேச்சு, ரகசிய முதல் முத்தம் என அவன் எண்ணிக் கொண்டு வந்ததென்ன......? தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்ரமாதித்தன் வேதாளத்தின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல தயாரானான் என்று இப்போது அவளுக்கு ஒரு பதில் சொல்லும் நிலையில் இருப்பதென்ன? என்று நினைத்தவனுக்கு அவளது சிறுபிள்ளைத்தனமான நிறைய தர்க்கங்கள் இப்போதும் நினைவிற்கு வந்து லேசாய் சிரித்துக் கொண்டான்.

"பர்ஸ்ட் பாயிண்ட்! நமக்குள்ள இருக்குறது வெறும் ப்ரெண்ட்ஷிப் தான்னா இந்தோ கீழ பொண்ணா நிக்குறாளே திவ்யா..... அவ பொறந்தநாள் பங்ஷன்ல நீ என்னிய ப்ரெண்டுன்னே சொல்லியிருக்கலாமே; இல்ல அண்ணா, தம்பி, வேலைக்காரன்னு சொல்லியிருக்கலாம்...... ஏன் கஸின்னு சொன்ன? கஸின்னா மாமா பையன், அத்த பையன்..... அதாவது உனக்கு அத்தான் இல்ல மச்சான் ஒறவு வரும்னு உனக்குத் தெரியாதா?" என்று புருவம் தூக்கி பவியிடம் கேட்டான்.

"டேய் ஒலக்க..... அது ஏதோ வாயில வந்தத சொன்னது!" என்று சொன்னவளிடம்,

"ஓ.... அப்டியா? சரி! ஏதோ வீராங்கனமேரி வரிஞ்சு கட்டிக்கினு என்னிய காப்பாத்தப் போறம்னு பீச்சாண்ட ஏஇடுப்ப புடிச்சு தொங்கினு வந்தியே? அது என்னது? இஸ்கூல்ல கூடப்படிச்ச வேற எவன் இடுப்பயாச்சு பிடிச்சு இழுந்துக்கினே தொங்கினு போயிருக்க?" என்று கேட்டவனிடம்,

"அது வந்து.....!" என்று தடுமாறினாள் சாம்பவி.

"நல்லா தலவாணி கணக்கா என் நெஞ்சு மொத்தத்துலயும் கெடந்து மனசுக்குள்ள நெறஞ்சு, போதாக்குறைக்கு மூக்க வச்சு தேயி தேயினு தேய்ச்சியே? தூக்கத்துல செஞ்சியோ, முழிச்சின்னு இருக்கறப்ப செஞ்சியோ........ இந்த ஒரு சம்பவம் செல்வாவ வாழ்நா பூரா உன் காலடியில விழ வச்சிருக்க போதும்னு ஏன்டீ ஒமரமண்டைக்கு புரியல?" என்று கேட்டவனிடம் என்ன சொல்வதென்று நிஜமாகவே சாம்பவிக்கு தெரியவில்லை.

"வெறும் ப்ரெண்ட்ஷிப்லதா ஒங்க அம்மாவாண்ட நான் பேசசொல அவங்களோட ஏன்டா சிரிச்சு சிரிச்சுப் பேசுறன்னு கேட்டு பொறாமைப்படுவாங்களா? வெறும் ப்ரெண்ட்ஷிப்லதா
தொடையக் கடிச்சி வப்பாங்களா? வெறும் ப்ரெண்ட்ஷிப்லதா நீ முன்னேறணும்னு சொல்லி பொறுமையா ஒக்காந்து யதார்த்தத்த புரிய வப்பாங்களா? இந்தமேரி பேச்ச சத்தியமா நா ஒன்னாண்ட இருந்து எதிர்பாக்கல பாப்பா!" என்று சொன்னவனிடம்,

"இல்ல செல்வா! நீ சொல்ற மாதிரியே வச்சுக்கிட்டாலும், நீ இப்ப எனக்கு ஒரு புதுஆள் மாதிரி தான் தெரியுற. உன்னைப் பாத்தா எங்கூட ஏற்கனவே ரொம்ப பழகுனவன் மாதிரி ஒரு ஃபீலே வரல எனக்கு!" என்று சொன்னவளை ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு,

"ஏன்டா இப்டி பேசுனம்னு அப்புறமா நீ ரொம்ப ஃபீல் பண்ணப்போற எம்மைமா!" என்று அவளிடம் சொல்லி விட்டு அவள் "ஆங்..... என்.......?" என்று ஆரம்பித்த போது அவளது பின்புறக் கழுத்தை இழுத்து அவள் இதழ்களை அடைத்திருந்தான் வாகை செல்வன்.

ஒரு செயல் கூடாதென தடை விதிக்கும் போது தான் அந்த செயலை கண்டிப்பாக செய்தே தீருவேன் என்பது பெரும்பாலான குழந்தைகளின் இயல்பு. இப்போது இந்த வளர்ந்த குழந்தையும் தன் செயலுக்கு தடை விதித்தவள் பேச்சை கேட்காமல் தன் செயலை மிகவும் ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தது.

"என்னிய கல்தூண்மேரி நென்ச்சுக்க பாப்பா என்று சொன்னவன் இப்போது நிஜமாகவே கல்தூண் போலத்தான் உருமாறி இருந்தான். இதில் அவளது சின்னக் கைகளின் குத்துகளும், மறுப்பும் அவனுக்கு ஒரு பொருட்டாகவா தெரியப்போகிறது? பாவம் தன் பாப்பாவின் உதடு மிகவும் சிவந்து கன்னிப் போய் விட்டதே என்று பரிதாபம் பார்த்து தான் அவளை விட்டான்.

அவர்களின் முதல் முத்தம் இன்றைக்கே வேண்டும் என்றெல்லாம் செல்வா நிஜமாக
நினைக்கவில்லை. ஆனால் "இத்தன வருஷத்துல ஒருதடவ கூட என்னைப் பாக்க வராம என்னடா பண்ணிட்டு இருந்த?" என்ற அதட்டல்; "எட்டு வருஷமா உன்னை பாக்க முடியாம எப்டி தவிச்சுப் போய்ட்டேன் தெரியுமா?" என்ற அணைப்புடன் கூடிய கண்ணீர் இவைகளையெல்லாம் அவன் சாம்பவியிடமிருந்து மிகவும் எதிர்பார்த்திருந்தான். அப்படித்தான் பேசப்போகிறாள் என்றும் நினைத்திருந்தான்.

அவன் நினைப்பில் மொத்தமாக ஒரு கூடை மண்ணை அள்ளிப் போடுவது போல நமக்குள் இருந்தது வெறும் நட்பே தான் என்கிறாள்; உன்னைப் பார்த்தால் ஏற்கனவே பழகியவன் போல தெரியவில்லை என்கிறாள். இந்த மாதிரியான வார்த்தைகள் தான் மிகவும் பண்பட்டிருந்த செல்வாவிற்குள் இருந்த ஒரு தான்தோன்றி செல்வாவை உசுப்பி விட்டது.

அவனை கடவுள் நிலைக்கு உயர்த்தியதும் அவள் தான்! இப்போது ராட்சஸனாக ஆக்கியதும் அவள் தான்!

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு சின்ன சின்ன விசும்பலுடன், "Bloody Rogue; ஐ ஹேட் யூ! நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். நீ எனக்கு வேண்டாம்; கதவ திறந்து விடுறா!" என்று கன்னம், காது, மூக்கு, உதடு அனைத்தும் சிவந்து போய் நின்றவளைப் பார்த்து இன்னும் கொஞ்சம் முத்தம் வைக்கத்தான் ஆசை பெருகியது வாகை செல்வனுக்கு.

"ச்சே.... பாப்பா பாவம்; ரொம்ப பயந்துட்டான்னா பெறகு பக்கத்துல கூட வரமாட்டா! குரங்குப்பயலே கொஞ்ச நாளைக்கு உங்கையையும், வாயையும் வச்சுட்டு சும்மா இருடா!" என்று அதட்டிய தன் மனசாட்சியிடம்,

"அது எப்டி இம்மாம்பெரிய கையையும், வாயையும் வச்சுனு சும்மா இருக்கறதாமா?" என்று பதில் கேள்வி கேட்டான் செல்வா.

"பவிம்மா! இப்பவும் நான் என்ன பண்ணினு இருக்கேன்னு நீ என்னாண்ட கேக்கவே இல்லையே கண்ணு?" என்று கேட்டவனிடம்,

"நீ என்ன வேணும்னாலும் பண்ணிட்டுப் போ ரவுடி! எனக்கென்ன அதப் பத்தி?" என்று கேட்டவளிடம் விரல் நீட்டி பத்திரம் காட்டி,

"மறுபடியும் இப்டி வாய் பேசாத! அது ஒன்க்கு நல்லதில்ல!" என்றான் செல்வா.

"இப்ப என்னைய வெளிய விடப்போறயா? இல்லையா?" என்று பொறுமையற்ற குரலில் கத்தியவளிடம்,

"ரெண்டே ரெண்டு மினிட் பாப்பா! இதோ வந்துடுறேன்!" என்றவன் அந்த அறையில் இருந்த வாஷ்ரூமிற்குள் சென்று தனது கைக்குட்டையை தண்ணீரில் நனைத்து வந்து முதலில் அவள் முகத்தையும், பின் அவள் உதட்டையும் ஈரத்துணியால் துடைத்து விட்டுப் பின் அவள் முகத்தில் லேசாக காற்றை ஊதினான்.

"ஆ.....லிப்ஸ் எரியுது! இப்டி பண்ணாதடா!" என்று கத்தியவள் நெற்றியில் மெல்லிய முத்தமிட்டவன்,

"ரொம்ப ரொம்ப ஸாரி வார்டனம்மா!" என்றான் கம்மிய குரலில்.

"செய்யுறதெல்லாம் செஞ்சுட்டு இப்ப என்ன ஸாரி? இப்ப இருக்குற உனக்கு பழைய வெர்ஷன் செல்வா எவ்வளவோ பரவாயில்ல தெரியுமா? அவன் ரொம்ப டிக்னிஃபைடா இருந்தான்!" என்று சொன்னவளிடம் குறுஞ்சிரிப்புடன்,

"யாருக்குத் தெரியும்? நீ அப்ப ரொம்ப குட்டிப் பெண்ணா இருந்தங்காண்டியும் அந்த பேமானி அப்டி கம்முன்னு குந்தினு இருந்தானோ என்னவோ?" என்று சொல்லி விட்டு அவளிடமிருந்து முறைப்பை பெற்றுக் கொண்டான்.

"மொறக்காத பாப்பா! எவ்ளோதா மனசையும், உடம்பையும் கட்டுப்படுத்தி வச்சாலும் அது ஒன்னிய எம்பொண்டாட்டியாவே பாத்துனுருக்கு! டாவு கட்டும் போது நம்ம பசங்க அவங்க லவ் பண்ற பொண்ணான்ட நீ இல்லாம எனக்கு வாழ்க்கையில ஒன்னியும் இல்லன்னு சொல்வானுங்கல்ல......
அந்தமேரி சொல்லணுன்னா நீ இல்லாம என்க்கு இந்த வாழ்க்கையே இல்ல! நீகண்டி நம்பள கரீட்டா யோசிக்க வச்சினு இருக்கல, நீ சொன்னமேரி இன்னிக்கும் நா ஏதாச்சு ஒரு ஹோட்டல்ல டேபிளதா தொடச்சுனு இருந்துருப்பனோ என்னவோ? இப்ப நமக்கே நமக்குன்னு ஒரு பெட்ஷாப் இருக்குது பாப்பா! நீ எங்கிட்ட ஒரு பூனைக்குட்டிதா கேட்ட! ஆனா நா இப்ப டெய்லி இருநூறு, முன்னூறு குட்டி ஜீவன்களுக்கு சாப்பாடு போட வேண்டியதிருக்கு. அங்கயும் ஒரு பவி இருக்கா. நாலு கால் பவி...... ஒன்னியமேரி தான் அவளும்! நம்பள வேற எந்த பயலுக கூடயும் பார்த்துடக் கூடாது; ஒடனே அம்மணிக்கு கோவம் வந்துடும்; ராஜு, மனோ, வினோத், எழில் எல்லாரும் ஒன்னிய பாக்கணும்னு கேட்டுட்டு இருந்தானுங்க! அங்க எப்ப வர்ற?" என்று கேட்டவனிடம்,

"எனக்கு கொஞ்சம் டைம் குடு! யோசிச்சு சொல்றேன்!" என்றாள் சாம்பவி.

அவன் சொன்ன நாலு கால் பவி யாராக இருக்கும் என்று யோசனை செய்து கொண்டிருந்தாள். அதை விட நீ ஒன்று கேட்டாய்; இப்போது நான் முன்னூறு ஜீவன்களை வளர்க்க ஒரு பெரிய இடத்தையே வைத்திருக்கிறேன் என்று காஷுவலாக அவன் சொன்னது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

தன்னுடைய அன்னை, தந்தையின் அன்புக்கு சற்றும் குறைவிலாத அன்பு தான் இவனுடையதா? இவனால மட்டும் எப்படி எட்டு வருஷம் கழிச்சு என்னைய பார்த்த மொத நாள்லயே இப்டி லவ் பண்ண முடியுது என்று அவளுக்குத் தோன்ற அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவள் எழுந்து நின்றாள்.

"ஏய்..... இரு! நீ கூடத்தான் என்னைப் பத்தி கேக்கவேயில்ல? நான் என்ன பண்றேன், எப்டி இருக்கேன்? இத்தன வருஷத்துல நானும் ஆசைப்பட்டத அச்சீவ் பண்ணிட்டனா இல்லையா? அதெல்லாம் நீ கேக்கவேயில்லையேடா?" என்றவளிடம் சிறு சிரிப்புடன்,

"கேக்கவேயில்லயா? இல்ல ஒன்னாண்ட கேக்கலையா கண்ணு?" என்று தலையை லேசாக சரித்து அவளிடம் வினவினான் செல்வா.

"ஒம்பேச்சுக்கு என்ன அர்த்தம்? நான் என்ன பண்றேன்? என்னோட புரஃபொஷன் என்னன்றது வரைக்கும் உனக்குத் தெரியுமா?" என்று அவனிடம் கேட்டாள் சாம்பவி.

"ஏன் தெரியாம? ஒன்னியமேரில்லா நம்பளால ஒநெனப்பு கூட இல்லாம சுத்தினு இருந்துர்க்க முடியாது பாப்பா! ரூல்ஸூ சென்னையிலயே ஒன்னிய படிக்க வச்சது, நீ தேர்டு இயர் படிக்கிறப்ப உன் பேட்ச்மேட் அனந்த நாராயணன் ஒன்னாண்ட வந்து ஒன்னிய பிடிச்சிருக்குன்னு சொன்னது எல்லாம் நமக்குத் தெரியும். ஒருவேள நீயும் அவங்கிட்ட எனக்கு ஒன்னிய பிடிச்சிருக்குடான்னு சொல்லியிருந்த..... அடுத்த நாளே ஒம்முன்னால வந்து நின்னுருப்பேன். நீ நல்ல பொண்ணா அவங்கிட்ட ஸாரி சொல்லிட்ட! நானும் நல்லபுள்ளயா ஒன்னிய பாக்காம இருந்துக்குனேன். மத்தபடி ஒன்னிய பத்தி எல்லாத்தையுமே அப்பப்ப ரூல்ஸ்ட்ட விசாரிச்சுனுதா இருந்தேன். ஒங்க நைனாவாண்ட என்னியோட எல்லா கொடுக்கல், வாங்கலையும் பத்தி மாசத்துக்கு ஒருக்கா சூரா ஒப்பிச்சுப்புடுவேன். நம்ப அட்வைசரே அந்தாளுதா; ஆனா இது இன்னிவரைக்கும் யாருக்குமே தெரியாது!" என்றவனை கோபமாக பார்த்து

"கேடி..... அதான் இப்ப என்னை ஒங்கூட அனுப்பிட்டு சும்மா ஒக்காந்துட்டு இருக்காரா அவரு? ஒன்னைய மாதிரி ஒருத்தன் என்னை மேரேஜ் பண்ணிக்கிட்டா அவருக்கு ஓகே தானாக்கும்? சும்மா சொல்லக்கூடாது; இத்தன வருஷத்துல நீ ரொம்ப ஹேண்ட்சம் ஆகிட்டடா டாம்பாய்!" என்று அவனிடம் சொன்னவளிடம்,

"அப்பாடா..... இந்த ஒரு வார்த்தய ஒவாயில இருந்து வரவைக்கிறதுக்கு நான் இம்மாநேரம் தலையால தண்ணி குடிச்சினு இருந்துனுருக்கேன் பாரேன்டா பாப்பா!" என்று சொன்னவன் அவன் முன் வந்து தன்னுடைய கைகளை விரித்துக் கொண்டு நின்றான்.

"எல்லாரும் தலையால தான் தண்ணி குடிப்பாங்க! தலையில தான வாய் இருக்கு; நீ என்ன இதல்லாம் பெரிய விஷயம் மாதிரி சொல்லிட்டு இருக்க.....?" என்று சொன்னவளிடம்,

"தப்புதான்மா; வேணுமின்னா கன்னத்துல போட்டுக்கட்டுமா? ஏம்பாப்பா இந்த பவிக்குள்ள இருந்து இப்பதா கொஞ்சம் கொஞ்சமா வெளிய வர்றா! நாமளும் இந்த ரூமுக்குள்ளார இருந்து வெளிய போலாமா பாப்பா?" என்று அவளிடம் கேட்டவன், அறைக்கதவை அவளுக்காக திறந்து விட்டு,

"தீபக் அண்த்த அல்லாரும் கொண்டுனு வர்ற கிப்ட்ட இந்த ரூமுக்குள்ள வையின்னு சொல்லி இந்த ரூம் சாவிய என்னாண்ட குடுத்தாங்க! இப்ப இந்த ரூம ஒரு போட்டோ புடிச்சு அத ப்ரேம் போட்டு வைக்கணும் போலருக்கே பாப்பா?" என்று கண்சிமிட்டி சிரித்தவனிடம்,

"இப்டி எல்லாம் ஓவர்டூ பண்ணாத! கொன்னுடுவேன் உன்ன......" என சொல்லி விட்டு விறுவிறுவென அவனுக்கு முன்னால் நடந்தாள் சாம்பவி.

இளையவள் இணை சேர்வாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro