Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💚 இணை 35

அன்று மதியம் எங்கோ வெளியில் போய்விட்டு வீட்டிற்கு திரும்பிய தனசேகர் ஸோஃபாவில் ஒருமாதிரியாக அயர்ந்து போய் அமர்ந்திருக்க கல்யாணி மெதுவாக அவரருகில் வந்து அமர்ந்து தன்னுடைய கணவரின் முகத்தைப் பார்த்தார்.

தனசேகர் தன் மனைவியிடம்,
"கல்யாணி.... இன்னும் ரெண்டு நாள் தான்மா டைம் குடுத்துருக்காங்க. அதுக்குள்ள நாமளே அவங்ககிட்ட இந்த வீட்ட குடுத்துட்டு வேற எங்கயாவது போயிடணும். இல்லன்னா மூணாவது நாள் அவங்களே வந்து நம்மள வெளிய தள்ளி, சாமானுகள தூக்கி எறிஞ்சுட்டு அப்புறமா வீட்ட எடுத்துக்குவாங்க! இப்ப என்ன பண்ணலாம்?" என்று கேட்டவரிடம் தயங்கிய படி,

"நம்ம மாப்ளைக்கு போன் போட்டு ஒருதடவ பேசிப் பாக்கலாமாங்க?" என்று கேட்டார் கல்யாணி.

"என்னன்னு பேசுவ? உங்க கிட்ட இருந்து எங்களால முடிஞ்ச வரைக்கும் கொள்ளயடிச்சோம் மாப்ள; அந்தப் பணத்த வச்சு கொஞ்ச வருஷத்துக்கு ஒக்காந்து தின்னோம். அது போக எங்க ஆடம்பர செலவுக்கு ஊருல இருக்குற ஒரு வட்டிக்கடக்காரன் கிட்ட வீட்ட அடமானம் வச்சு பணம் வாங்குனோம். இப்ப கையில அடுத்த வேள சாப்பாட்டுக்கு காசு இல்லாத அளவுக்கு அம்புட்டையும் அவங்களோட கம்பெனில ஏமாந்துட்டு நிக்குறோம். உங்கள ஏமாத்தி நாங்க புடுங்குனத, எங்கள ஏமாத்தி இவனுங்க புடுங்கிக்கப் போறாங்க! மறுபடியும் நீங்க எங்கள காப்பாத்துங்க மாப்ளன்னு கேக்குறதாம்மா? அப்டி கேக்குறது சரின்னு உனக்குத் தோணுதா?" என்று கேட்டவரிடம்,

"ரொம்ப தப்புதாங்க! நாம நம்ம மாப்ளைக்கு செஞ்ச நம்பிக்கை துரோகமும், அந்த சின்னக் கொழந்த கிட்ட நாம காட்டுன ஒதுக்கலும் நாம செஞ்ச பாவம்......! கையில, கழுத்துல, காதுல கெடக்குற தங்க நகையெல்லாம் சேத்தா ஒரு பதினஞ்சு பவுன் தேறும். அத மொத்தமா வித்துட்டு, சின்னதா ஒரு வீட்ட வாடகைக்கு எடுத்து ரெண்டு பேரும் ஏதாவது வேல பாத்து மிச்சம் இருக்கிற காலத்த ஓட்டுவோம்; இனிமேலும் மாப்ள, பவிம்மா மூஞ்சியில போயி முழிக்க நமக்கு என்ன தகுதி இருக்கு?" என்று கேட்ட கல்யாணி அந்த வீட்டில் இருந்து எங்கு போவது, என்ன செய்வது என்று முடிவெடுத்திருக்கா விட்டாலும், தன் வாழ்நாளில் முதன்முறையாக இருக்கும் மிச்ச காலத்தில் உழைத்து சாப்பிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தார். காலம் கடந்து வந்த ஞானோதயம் என்றாலும் வீண்ஆடம்பரம் என்ற மாயையில் சிக்கிக் கொண்டிருந்த இரண்டு முதியவர்கள் தங்களுடைய தவறை இப்போதாவது உணர்ந்து செயல்பட நினைத்தனர்.

மாலையில் தன் வீட்டிற்கு வந்திருந்த சபாபதி மறுநாள் தனது ட்யூட்டிக்கு விடுப்பு எடுத்திருந்தார். "ஹாய் டாடி!" என்று அவரது கழுத்தைக் கட்டிக் கொண்டவள் அவருடைய இரு கைகளையும் ஆராய்ந்தாள்.

"என்ன எம்ப்டி ஹேண்டோட வந்துருக்கீங்க? நீங்க தான் கிப்ட் வாங்கிட்டு வரப்போறீங்கன்னு ரேணு சொல்லுச்சு. ம்மா...... இங்க பாரும்மா அப்பாவ? கிப்ட் வாங்கிட்டு வர்றேன்னு சொல்லிட்டு வெறுங்கையோட வந்து நிக்குறாரு? நாளைக்கு காலையில ஒன்பது மணிக்கு முஹூர்த்தம்; இப்ப போயி ஒழுங்கா கிப்ட் வாங்கிட்டு வாங்க. போங்க!" என்று அவரை வாசலிலேயே வழிமறித்து தகராறு செய்து கொண்டிருந்தவளிடம்,

"கொஞ்சோண்டு உள்ள விட்டீங்கன்னா, வீட்டுக்குள்ள வந்து கொஞ்சம் ரெஃப்ரெஷ் ஆகிட்டு, எனர்ஜியோட போயி உங்க ஜீனியருக்கு கிப்ட் வாங்கிட்டு வருவேன். இல்லன்னா கிப்ட்டு ஏனோதானோன்னு தான் இருக்கும், பரவாயில்லயா பவி மேடம்?" என்று சிரித்த படி மகளிடம் கேட்டார் சபாபதி.

"ம்க்கும்! உள்ள வாங்க!" என்று கடமைக்கு அவரை வரவேற்றாள் சாம்பவி.

"பவி.... நாளைக்கு பங்ஷனுக்கு போடுற ட்ரெஸ் அயர்ன் பண்ணிட்டியா?" என்று கேட்ட தன் தாயிடம்,

"ம்ம்! அந்த மெரூன் கலர் சில்க் சுடிதார் ஓகேதானம்மா? அது ரெடியா தான் இருக்கு!" என்று முறுக்கை கொறித்தபடி பதிலளித்தாள் சாம்பவி.

"ஏய்..... என்னடீ எப்ப பார்த்தாலும் சுடி, கவுன், குர்த்தின்னுட்டு? நாளைக்கு ஏதாவது ஸாரி கட்டு! போயி என்ன ஸாரி போட்டுக்குறதுன்னு டிஸைட் பண்ணு போ!" என்று சொன்ன தாயிடம்,

"இங்க பாரு ரேணு; உனக்கு உன் ஹப்பி கிட்ட இருந்து கிஸ் வேணுமா, இல்ல ஹக் வேணுமா, இல்ல ஸ்மூச்சஸ் வேணுமா? எது வேணும்னாலும் அத தாராளமா வாங்கிக்க. நான் என்ன அத வேண்டாம்னா சொல்லப்போறேன்? இவர் வந்து ஹால்ல நின்னவுடனே தான் உனக்கு எங்கிட்ட புடவை செலக்ட் பண்ண சொல்ற வேலை நியாபகத்துக்கு வருமா? இன்னும் நம்மள சின்னக்கொழந்தயாவே ட்ரீட் பண்ணுக பாருடாயப்பா!" என்று தோள்குலுக்கிய படி தன் அறைக்குள் சென்றவளை பார்த்து விட்டு சபாபதி சிரிப்புடன் தன்னுடைய மனைவியை தன்னருகில் வந்து அமரும்படி சைகையில் கூப்பிட்டார்.

"என்னாச்சு சபா? ஒரு மாதிரி டல் மூட்ல இருக்கீங்களே? வொர்க்ல ஏதாவது சமாளிக்க முடியாத பிரச்சனையா?" என்று கேட்ட மனைவியிடம்,

"இல்லம்மா! பவியோட தாத்தா அவரோட வீட்ட குடுக்க வேண்டிய சிச்சுவேஷன்ல இருக்காரு போலிருக்கு! கடன்ல மூழ்கிடுச்சாம்.
அது என்னோட பணம். இப்டி என்னோட உழைப்பையும், அவங்க எங்கிட்ட இருந்து ஒதுக்குன இன்வெஸ்ட்மெண்ட்டையும் ஒண்ணா சேத்து தொலைக்கப் போறாங்களேன்னு மனசுக்கு கஷ்டமாயிருக்கு!" என்று வருந்தியவரிடம்,

"ம்ப்ச்! விடுங்க சபா; அவங்களோட செயல்களுக்கு அவங்க தான் பலன் அனுபவிக்கணும்! எவ்ளோ தான் குடுத்தாலும் பத்தலங்குற மெண்ட்செட் உள்ளவங்க இப்டி டெட்எண்ட போயி தான் முட்டிக்கிட்டு நிப்பாங்க! அதப்பத்தி நினைக்காதீங்க; அவங்களோட ஆக்டீவிட்டீஸ மானிட்டர் பண்றத முதல்ல நிப்பாட்டுங்க! பவியையும் கூட்டிட்டுப் போய் நல்ல கிப்டா ஒண்ணு வாங்கிட்டு வாங்க!" என்று சொன்னார் ரேணுகா.

அடுத்த அரைமணி நேரத்தில் சாம்பவியும், சபாபதியும் சேர்ந்து அவர்களுடைய காரை எடுத்துக் கொண்டு கிப்ட் வாங்க சென்றனர்.

"அப்பா..... முதல்ல அம்மம்மா வீட்டுக்குப் போகலாம்; அடுத்து வந்து கிப்ட் வாங்கிக்கலாம்; அங்க போங்க!" என்று சொன்ன சாம்பவியை சிறு அதிர்ச்சியுடன் பார்த்தார் சபாபதி.

"எனக்கு எப்டீ தெரியும்னு பாக்குறீங்களா டாடி! தப்புதான்; பட் ஒங்க பேச்ச ரூமுக்குள்ள இருந்து கேட்டேன். எனக்கு அந்த வீடு வேணும் டாடி! தாத்தாவோட கடனுக்கு நான் பணம் தர்றேன். அதுக்குப் பதிலா அவர், அம்மம்மா ரெண்டு பேரோட காலத்துக்கு அப்புறம் அந்த வீடு எனக்குத் தான்னு அவங்க ப்ராப்பரா ஒரு டீட் எழுதித் தரணும்!" என்று சொன்ன தன் மகளை சற்றே பெருமையாகப் பார்த்தார் சபாபதி.

அவர்களுடைய உறவை இவள் விட்டும் கொடுக்கவில்லை; ஆனால் பதினேழு வயதில் பைத்தியக்காரி போல் அவர்கள் பின்னோடே ஓடுவாளே..... அதையும் செய்யவில்லை. மொத்தத்தில் தந்தையுடைய உழைப்பை காப்பாற்றிக் கொள்ள மறுபடியும் அவள் தன் உழைப்பை அவளது தாத்தா, பாட்டியிடம் தாரை வார்க்கப் போகிறாள்.

"ஐ'ம் ப்ரௌட் ஆஃப் யூ டா செல்லம்!" என்று சொல்லி அவள் தலையை வருடிய தந்தையிடம்,

"இனிமே எனக்கு சொந்தமானத வேற யார்ட்டயும் இப்டி தாராள மனசோட தூக்கிக் குடுக்காதீங்க மிஸ்டர் சபாபதி! அக்கவுண்ட்ல இருக்குற பணத்த வழிச்சு துடைச்சு
எடுக்கணும் போலிருக்கு! இனிமே என்னோட டூவீலருக்கு பெட்ரோல் போட நீங்க தான் எனக்கு அமௌண்ட் தரணும் பார்த்துக்கோங்க!" என்று சொன்ன தன் மகளிடம்,

"ஏன் இளிச்சவாயன் எவனையாவது பாத்து பாய்ஃப்ரெண்டா வச்சுக்க வேண்டியதுதானடா?" என்று கேட்டார் சபாபதி.

"பெட்ரோலுக்காக, ரீசார்ஜுக்காக, ஷாப்பிங்க்காக, சேட் ஐயிட்டம்ஸ்காக...... மிஸ்டர் சபாபதி நீங்க என்ன உங்க மகள அவ்ளோ கேடுகெட்ட பொண்ணுன்னு நினைச்சுட்டீங்களா?" என்று மூக்கில் புகை விட்ட பவியிடம் "ஸாரி ஸாரி ஸாரி!" என்று கேட்டு அவளை சமாதானம் செய்தார் சபாபதி.

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன்னுடைய அம்மம்மா மற்றும் தாத்தாவை அவர்களுடைய வீட்டில் பார்த்த போது பவிக்கு கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது. அவர்களுடையது வேண்டுமானால் போலியான பாசமாக இருக்கலாம்; ஆனால் இவளுக்கு அம்மம்மாவிடம் இருப்பது எப்போதும் ஒரு தாய்ப்பாசம் தான்; அவர்களை பாட்டி என்று அழைக்காமல் அம்மம்மா என்று அழைக்கப் பழகியதே அவர்களாவது தனக்கு அம்மா போல் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் தான்; ஆனால் எவருடைய எதிர்பார்ப்பையும் தான் எவராலும் முழுமையாக புரிந்து கொள்ளவும், பூர்த்தி செய்யவும் முடிவதில்லையே...... என்று நினைத்து இறுகிப் போய் அமர்ந்திருந்தாள். சம்பிரதாய நல விசாரிப்புகளுக்குப் பின்னர் சபாபதி சற்றே தயங்கிய படி தனசேகரிடம்,

"வீடு விஷயம் கேள்விப்பட்டேன் மாமா!" என்றார் மெதுவான குரலில்.

"அப்பா..... திவ்யாவுக்கு கிப்ட் வாங்கப் போகணும்னு சொல்லிட்டு இருக்கேன். நீங்க தாத்தாட்ட ஒவ்வொரு வார்த்தையா எண்ணி எண்ணி பேசிட்டு இருக்கீங்க? எப்ப.... நாளைக்காவது முடிச்சுருவீங்களா? நீங்க இருங்க. நான் பேசுறேன்!" என்றவள் தன் தந்தையிடம் எப்படி வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக பேசினாளோ அதே போலவே தான் தனசேகரிடமும் பேசி முடித்தாள்.

"அப்ப..... அப்ப! நானும் அம்மம்மாவும் இங்கருந்து எங்கயும் போக வேண்டாம்லடா பவி?" என்று கேட்டவரிடம்,

"ஆமா தாத்தா! பட் இன்னும் கொஞ்ச நாள்ல லீகலா இந்த வீட்ட நீங்க எழுதிக் குடுக்கணும். எங்க அப்பாவோட காசையெல்லாம் போனா போகுதுன்னு கண்டவங்க கிட்ட தூக்கி குடுக்கறதுக்கு நான் ரெடியா இல்ல!" என்று சாம்பவி சொல்ல இருவரும் தலைகுனிந்து அமர்ந்திருந்தனர்.

"ஏதாவது சாப்டுறியாடா பவி....ம்?" என்று கேட்ட தன்னுடைய அம்மம்மாவை அப்படியே நிறுத்தியவள்,

"பரவாயில்ல அம்மம்மா! வயிறு ஃபுல்லா இருக்கு! நீங்க கேட்டதே போதும். தேங்க்யூ!" என்று சொல்லி விட்டு அவர்களிடம் தன்னுடைய கையெழுத்திட்ட, ஒரு தொகை எழுதிய செக் லீஃபை கையில் கொடுத்தாள்.

"அவங்களுக்கு இன்னும் ரெண்டு, மூணு பேமெண்ட்ஸ் வரும்னு நினைக்கிறேன் தாத்தா! நீங்க உங்களுக்கு அமௌண்ட் குடுத்த பார்ட்டி கிட்ட அப்பா நம்பர கொடுத்த அவங்கள அப்பாவுக்கு கான்டாக்ட் பண்ணச் சொல்லுங்க! இந்த விஷயம் இதோட முடிஞ்சிடுச்சுன்னு நினைச்சுக்கோங்க! இந்த மன்த் அப்பாவோட டென் தவுசண்ட் வந்துருக்கும்ல உங்களுக்கு?" என்று கேட்டவளிடம் தனசேகர் ஆம் என்று தலையாட்டினார்.

"ஃபைன்! அப்ப நாம கிளம்பலாம் டாடி!" என்று சொன்னவளிடம் கல்யாணி தழுதழுத்த குரலில்,

"பவிம்மா..... அம்மம்மாவ நல்லா இருக்கீங்களான்னு ஒருவார்த்த கேக்க மாட்டியாடாம்மா?" என்று கேட்ட தன்னுடைய பாட்டியிடம்,

"ஸாரி அம்மம்மா! எனக்கு காதுல கொஞ்சம் ப்ராப்ளம்; நீங்க பேசுறது சரியா கேக்கல!" என்று சொல்லி விட்டு தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து வெளியே சென்றாள். திரும்பி வரும் வழியில் சபாபதி தன் மகளிடம்

"ஏன்டா பவி பாட்டிட்ட இவ்ளோ ரஃப்பா நடந்துக்கிட்ட? வயசானவங்கடா பாவம்!" என்று கேட்டார்.

"சின்ன குழந்த பாவம்னு என்னைப்பத்தி அவங்க யோசிச்சாங்களா டாடி? உங்க கிட்ட சண்ட போட்டதுல இருந்து ரூமுக்குள்ள போயி, வெளிய இருந்து நான் கத்துறது கேக்காத மாதிரி தான உட்கார்ந்துருந்தாங்க! இப்ப எனக்கு காது கேக்கல. தட்ஸ் ஆல்!" என்று சொன்ன பவி தனது தாத்தா, பாட்டியின் கடனை அடைக்கும் அளவிற்கு தனக்கு பொருளாதார ஏற்றம் அளித்த கடவுளுக்கு அன்று நன்றி சொன்னாள்.

இளையவள் இணை சேர்வாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro