Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💚 இணை 33

அன்று இரவு செல்வா ஜெயராஜ், மனோகர், வினோத், எழில் நால்வரையும் அவர்களது "இன்முக விருந்தோம்பல்" உணவுவிடுதியில் அசெம்பிள் செய்திருந்தான். இந்த உணவகம் தான் அவர்கள் வாங்கிய முதல் சொத்து. இந்த எட்டு வருட காலத்தில் அவர்களது விஷயத்தில் வளர்ச்சி எளிதாக ஒன்றும் கிடைத்து விடவில்லை.

முதலாவதாக செல்வா தன்னுடைய நண்பர்கள் நால்வருடன் எந்த ஒரு முடிவெடுத்தாலும் அதற்காக அவர்களிடம் போராட வேண்டியிருந்தது. எழிலும், வினோத்தும் தான் செல்வா சொல்லும் விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்பவர்கள்! ஜெயராஜூம், மனோகரும் அவன் என்ன சொன்னாலும், அதில் நான்கு கருத்துக்களை கூடக் குறைய சொல்லி மறுத்து, சேர்த்து தான் பின் ஒரு முடிவுக்கு வருவார்கள்.

நண்பர்கள் ஐவரும் சேர்ந்து சின்னதாக முதல் போட்டு வாடகையில் ஆரம்பித்த கடையை ஒரு தரமான உணவகமாக, அவர்களின் சொந்த இடமாக மாற்றவே இரண்டு வருடங்கள் ஆகியது அவர்களுக்கு! அதற்குள் செல்வா அனைவரையும் அரைத்து படி, படி என்று குச்சியை வைத்துக் கொண்டு அவர்கள் பின்னாலேயே விரட்டியதில் ஒருவழியாக நண்பர்கள் ஐவரும் பத்தாவதும், பனிரெண்டாவதும் ப்ரைவேட்டில் முடித்திருந்தனர்.

என்ன தான் கையில் தொழில் இருந்தாலும் ஒரு அடிப்படை தகுதியை கல்வி தான் நமக்குத் தருகிறது என்பதை செல்வா இந்த இரண்டு வருடங்களில் அனுபவப்பூர்வமாகவே உணர்ந்து கொண்டான்.

"டேய் ஒலக்க..... இப்பயாவது எங்கள உட்டுருடா..... ஒன்க்கு புண்ணியமாப் போவும்!" என்று கதறிய நால்வரையும் முடியாது என்பது போல் தலையாட்டி ஜெயராஜ் மற்றும் மனோகரை ஒருவருட கேட்டரிங் டிப்ளமாவிலும், எழில் மற்றும் வினோத்தை மூன்று வருட ஆட்டோமொபைல் டிப்ளமாவிலும் சேர்த்து விட்டான். தனக்கு வணிகவியவில் விருப்பம் இருந்ததால் பிபிஎம் கோர்ஸில் சேர்ந்து அடுத்த மூன்று வருடங்களில் ஒன்றிரண்டு அரியர்களுடன் கோர்ஸை ஓரளவு வெற்றிகரமாகவே முடித்து விட்டான்.

ஜெயராஜ், மனோகர் இருவரும்
அவர்களுடைய கேட்டரிங் டிப்ளமாவை முடிக்கும் வரை அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தேவையான பணத்தை செல்வா, வினோத், எழில் மூவரும் சம்பாதித்து தந்தனர். அதற்கடுத்த வருடத்தில் செல்வா ஈவ்னிங் காலேஜிலும், வினோத், எழில் அவர்களுடைய ஆட்டோமொபைல் டிப்ளமாவிலும் சேர மூவரும் ஒன்றாகவே அவர்களுடைய கோர்ஸ்களை நிறைவு செய்தனர்.

கல்லூரி வாழ்க்கை எவ்வளவு மகிழ்ச்சிகரமானது என்பதையும் செல்வா பவி என்ற பெண்ணின் வற்புறுத்தலால் தான் தெரிந்து கொண்டான்.

"மாப்ஸூ; படிச்சாலும், படிக்கலைன்னாலும் நம்ம வாகைக்கு என்னடா கவல? அவன் இப்பவே ஒரு Entrepreneur தானடா?" என்று அவனை கிண்டல் செய்யும் தன் கல்லூரி நண்பர்களிடம்,

"டேய்! அதெல்லாம் இல்ல; நான் உங்கள மாதிரி ஒழுங்கா ஸ்கூலுக்குப் போயி படிச்சு வந்தவன் கிடையாது; அதனால எனக்கு புரியற வரைக்கும் இந்த சிலபஸ்ல ஒவ்வொரு டாப்பிக்கையும் டெய்லி ஒருத்தன் எனக்கு சொல்லிக் குடுக்கணும். அதுக்கு சார்ஜ் தர்ற மாதிரி நீங்க ஹாஸ்டல்ல நீங்க புலம்பிட்டே சாப்டுற சாப்பாட்டுக்கு பதிலா நான் உங்களுக்கு நம்ம கடை ஸ்பெஷல் டிஷ்ஷ எடுத்துட்டு வர்றேன். என்ன சொல்றீங்க?" என்று கேட்டு தன்னுடைய நண்பர்களுடைய அறிவுச் சுரங்கத்தில் இருந்து தனக்கு தேவையான நுட்பங்களையெல்லாம் செதுக்கி எடுத்து கற்று கரைதேர்ந்தான் வாகை செல்வன்.

கல்லூரியில் இரண்டாவது ஆண்டு படித்துக் கொண்டிருக்கையிலேயே மனதின் உள்ளே எந்நேரமும் இருந்த அரிப்பு தாங்காமல் சின்னதாக ஒரு இடத்தை வாடகைக்குப் பிடித்து "லிட்டில் புட்ஸ்" பெட் ஷாப்பை ஆரம்பித்தான். நண்பர்கள் நால்வரும் கூட அவனிடம்,

"டேய் ஒலக்க..... என்னடா நீ பாட்டுக்கு இஷ்டத்துக்கு அகலக்கால் வச்சுட்டே போயிட்டு இருக்க? வோணாம்டா! நம்ம ஓட்டல் கடயையும், படிப்பையும் பார்த்துக்கினு இத்தையும் பாத்துக்க நமக்கு ஏதுடா நேரம்?" என்று கேட்டனர்.

"இன்னாங்கடா! ஓடி ஓடி வேல செஞ்சினுருக்குறது நமக்கு கசக்குதா இல்ல புத்சா என்னா? ராஜூம், மனோவும் ஓட்டல பாத்துப்பானுவ; நான் இத்த கவனிச்சுப்பேன்; நம்ம எழிலுக்கும், வினோத்துக்கும் ஒரு கார் க்ளீனிங் அண்ட் சர்வீஸிங் கம்பெனி வச்சு தர்ணும்! அவ்ளோதா நம்மளோட ப்ளான்; அவன் அவன் ஒங்க பொழப்ப சரியா பாத்துனுருக்க வேண்டியதுதான்; இன்னா சொல்றீங்க?" என்று கேட்டவன் சாம்பவி சொன்னது போல இன்றைய நிலவரப்படி அனைவரது வாழ்வாதாரத்தையும், பொருளாதார நிலைமையையும், கல்வித்தகுதியையும் தன்னால் முடிந்த அளவு வளர்த்து விட்டான்.

ஆனால் இவன் விடாக்கண்டன் என்றால் கொடாக்கண்டன்களாக எழில் நான்கு அரியர்களும், வினோத் இரண்டு அரியர்களும் இன்று வரை பத்திரமாக வைத்திருந்தது தான் அவனுக்குப் பற்றிக் கொண்டு எரிந்தது.

"இப்ப நாம அல்லாரும் சேந்து எந்த கல்யாண மண்டபத்துக்கு பாம் வக்க இப்டி தேவுடு காத்துனு ஒக்காந்துனு இருக்கோம்டா ஒலக்க?" என்று கேட்ட மனோகரை முறைத்தவன்,

"ஏன்டா..... மனசுல அடஞ்சு கெடக்குற பெரிய வருத்தத்த ஒங்களாண்ட கொட்டி அழுவம்னு வந்துக்கினா, பாம் வக்க ஒக்காந்துனு இருக்கமான்னு கேக்குறீங்க? இந்த டோமருங்க ரெண்டுக்கும் சித்தப்பாவாகணும்னு கொஞ்சமாச்சு ஒனப்பு இருக்காடா? ஒவ்வொரு எக்ஸாம்லயும் சொல்லி வச்சுக்குனு கோட் அடிக்குதுங்க பயபுள்ளைக......!" என்று டேபிளில் தட்டி தட்டிப் பேசிக் கொண்டிருந்தவனின் அருகில் சென்ற எழில்,

"ஏன்டா இத்தபயலே! ஒங்கிட்ட நாங்க இன்னாடா கேட்டுக்குனோம்? சொகுசா காருக்குள்ள மொதலாளி பக்காத்தால ஒக்காந்துகினு வண்டிய ஒட்டினு, ஒவ்வொரு இடமா போயினு இருக்கணும்னு தான கேட்டம்! நீ தானடா கார ஓட்டுறதுக்கு கொள்ளபயலுவ இருக்கானுகடா; இந்த வியாபாரம் நல்லா இருக்குமுனு இத்த வச்சுக் கையில குடுத்துட்ட! ஒழுங்கா சோறு துன்றதுக்கு எங்களுக்கு நேரம் இருக்க மாட்டேங்குதுடா; கராஜூல அம்மாவேல; இதுல நானும் சம்படமும் எங்கருந்துடா படிக்கிறது? படிக்காம எப்டிறா பாஸாவுறது? இந்த வாட்டி எங்க அரியர் எழுத வேண்டிய தேதிக்கு ஒரு வாரம் முன்னால இருந்து எங்களுக்கு லீவு குடு! அப்பால வேணுன்னா பாஸாவுறத பத்தி யோசிக்குறோம்; சரி எந்த பேமானிப்பய நம்மள சித்தப்பான்னு கூப்ட்டுன்னு கெடக்குறது.........?" என்று கேட்டவனை பளாரென கன்னத்தில் ஒன்று விட்டிருந்தான் செல்வா.

"யம்மா.........ஆ! கொஞ்ச வருஷமா இத்தையெல்லா நிறுத்தினு நல்ல புள்ளயா இருந்துச்சு; கொஞ்ச நாளா இத்து மண்டையில எந்தப் பரதேசி எலும்ச்சபழத்த தேய்க்க மறந்ச்சோ தெரியல; மறுபடியும் கழண்டு போயி அலையுது! இப்ப என்னாத்துக்குடா நீ என்னிய அடிச்ச?" என்று கன்னத்தில் கை வைத்தபடி எழில் செல்வாவிடம் கேட்க செல்வா தன்னையே தன் நண்பனிடம் காட்டி,

"இந்த பேமானியோட பய தான்டா ஒன்னிய சித்தப்பான்னு கூப்டுவான்! வேற எவன் கூப்டுவான்; டே சம்படம் ஒனக்குந்தா; நீயும் போனியும் வர்ற எக்ஸாமுல ஒங்க பாக்கி கச்சாத்து அம்புட்டையும் முடிச்சுனு கையில டிப்ளமாவ வாங்குறீங்க; இல்ல அப்ப மறுபடி ஒருக்கா எத்து விழும்; சொல்லிட்டேன்! வேல பாக்குறதுக்கோசரம் மொணங்காத...... பே!" என்று சொல்லி மறுபடி எழிலின் குறுக்கில் ஒரு உதை விட்டு விட்டு தன்னுடைய நண்பர்களிடம் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினான் செல்வா.

மனோகர் உணவகத்தில் இருந்து வெளியே வந்து அவனை வழியனுப்பி வைக்கும் சாக்கில் அவனுடன் கூடவே நடந்தான்.

"என்னடா மனோ.....! பணம் ஏதாவது வோணுமா?" என்று செல்வா அவனைப் பார்த்து கேட்க மனோகர் சிரிப்புடன் அவனிடம்,

"ஏன் நீ எங்களுக்கு குடுத்துனு இருக்குறது எல்லாம் பத்தாதாடா? நான் கேக்க வந்தது வேற! என்னடா ஆச்சு உனக்கு? மனசுக்குள்ள ஏதாவது ப்ரச்சனையா? நீ போனிட்ட கோபப்பட்டு நாங்க பாத்ததேயில்ல; அவன மடியில வச்சுட்டு தடவிக் குடுக்காதது ஒண்ணுதா கொற; இன்னிக்கு என்னடா திடீர்னு அவன் மேல கோபம்?" என்று கேட்க சில நிமிடங்கள் செல்வா அமைதியாக நின்று கொண்டிருந்தான்.

"ஒனக்கு எங்கள கண்டிக்குறதுக்கு எல்லா உரிமையும் இருக்குடா மாப்ள! நீ கொஞ்சம் பதட்டமா தெரிஞ்சமேரி இருந்சு! அதான் உங்கிட்ட என்னன்னு கேப்போம்னு நினைச்சு வந்தேன்; அம்புட்டையும் எங்களுக்கு குடுத்துட்டு ஒரு வீடு கூட இல்லாம இருக்கியேடா மாப்ள? கிடைக்குற லாபத்துல இருவது பர்சன்ட வேற கண்டிப்பா
ஒதுக்கி வைக்கணுமுங்குற!
அப்டியெல்லாம் வாயக்கட்டி, வயித்தக் கட்டி பணத்த சேத்து வச்சுட்டு கிளி, நாய், பூனைக்கெல்லாம் வைத்தியம் பாக்குற இடத்திலயாடா நீ படுத்துக்குறது? ஒரு மனுசன் அக்கடான்னு நிம்மதியா வந்து அடைஞ்சுக்க ஒரு வீடு வேணாவாடா?" என்று அக்கறையாக அதட்டியவனிடம் லேசான சிரிப்புடன்,

"வாய கட்டி வயித்த கட்டி சேக்காம என்னடா செய்யச்சொல்ற? நாம அல்லாரும் என்ன கோடீஸ்வரனுங்களுக்கா புள்ளயா பொறந்துனு இருக்கோம்? ஒரு வியாபாரத்துல மொதலு எவ்ளோ முக்கியம் தெரியுமா? லாபம் வந்துனு ஒக்காந்து அத நல்லா துன்னுக்குனே இருந்தா, அடுத்த வருஷம் மொதலுக்கு எவன்ட்ட போயி நிப்ப? இத்தன வருஷமா நல்ல பேரு எடுத்து நம்ம ஓட்டல நடத்திட்டு வந்தது பெரிசில்ல! இத நடத்த மொதல் இல்லன்னு பத்து பைசா எவன்ட்ட இருந்தும் கைநீட்டி வாங்கிரக்கூடாது! ஒனக்கு சொன்னதுதா எனக்கும்; எனக்கு சொன்னது தான் கார் சர்வீசு கம்பெனிக்கும்...... நம்ம டாக்டருங்க
ரெண்டு பேரும் கெளம்பி போனதும் அத்தாப்பெரிய இடம் சும்மாத்தானடா கெடக்கு?
ஒரு கட்டில்ல படுத்து தூங்கப் போறேன்; ஒரு பாத்ரூம்ல குளிச்சுன்னு வந்து கெளம்பப்போறேன். இதுக்கு எதுக்குடா எனக்கு தனியா ஒரு வீடு? இம்மாநாள் அப்டி ஒரு தனிவீடு வாங்கணும்ங்குற அவசியம் வரல; ஆனா கூடிய
சீக்கிரத்துல வீடு பாக்குறதுக்கு அவசியம் வந்துரும் போலருக்குடா மாப்ள! பவிய கூடிய சீக்கிரத்துல நானே நேரடியா பாக்கப் போறேன். அவள பாக்க வோணாம்ங்குற வைராக்யத்த எட்டு வருசமா இழுத்துப் பிடிச்சு வச்சாச்சு, இனிமே முடியுமான்னு தெரியலடா மாப்ள!" என்று சொன்னான் செல்வா.

"அடச்சை..... நாங்கூட என்னவோ, ஏதோன்னு நென்ச்சு லைட்டா மெர்சலாகிட்டேன்டா...... நம்ம சாம்பவி தங்கச்சிய நீ மீட் பண்ணிக்க போற! அது ஒன்னாண்ட மொத ஒன்னிய பத்தி கேக்கும். அப்பால எங்கள பத்தி கேக்கும். அதுக்கு பதில் சொல்றதுக்கு ரெடியா இருக்குறதுக்குதா ஸாரு உள்ள போனிக்கும், சம்படத்துக்கும் அவ்ளோ அட்வைஸ் ........ரக் குடுத்துனு வந்தீங்க! ரைட்டுறா; நம்ம செட்டுல ஒன்க்குதா மொதல்ல கல்யாணம் ஆகணும்னு எல்லாரும் சொல்லி வச்சுனு இருந்தோம். இனிமே நாங்களும் ட்ராக்ல வண்டிய ஓட்ட வேண்டிதான்!" என்று சொன்னவனின் முதுகை நெம்பி தள்ளிய செல்வா,

"ஆளாளுக்கு பாத்து பத்திரமா ஓட்டுங்க வண்டிய! வரேன்டா!" என்று சொல்லி விட்டு தன்னுடைய தேர்டு ஹேண்ட் டிஸ்கவரை கிளப்பி அங்கிருந்து புறப்பட்டான்.

இளையவள் இணை சேர்வாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro