💚 இணை 3
சபாபதியின் வீட்டில் செல்வாவின் வேலைகளுக்கான அட்டவணை அத்தியாவசிய பொருட்களுக்கான விலைஏற்றம் போல் நாள்தோறும் வளர்ந்து கொண்டே சென்றது. அவனுக்கும் சாம்பவிக்கும் எந்த விஷயத்திலும் சுத்தமாக ஒத்துப் போகவேயில்லை. அவள் வழிக்கே செல்லாமல் நாம் பாட்டில் ஓரமாக
ஒதுங்கிப் போய் விடுவோம் என்று அவன் நினைத்தாலும், அதற்கும் விடாமல் அவனது நடவடிக்கைகளில் ஒரு கண் வைத்துக் கொண்டே சுற்றினாள் அந்த சிறு பெண்.
விவரம் தெரிந்ததில் இருந்து அவளது அம்மம்மாவின் வார்த்தை தான் அவளது வாழ்க்கை முறைக்கான வழிகாட்டியாக இருந்திருக்கிறது.
"அம்மம்மா..... சங்கரி ஆன்ட்டி வீட்டு மேரேஜ் பங்ஷனுக்கு உங்கூட நானும் வர்றேன் அம்மம்மா!" என்று தன் கழுத்தைக் கட்டிக் கொண்டு ஆசையாக கேட்கும் தன் பேத்தியிடம்,
"ஐயயோ..... வேண்டாம் பவிம்மா...... இவ தான உன் ஓடிப்போன பொண்ணுக்கு பிறந்த பொண்ணுன்னு அந்த சங்கரி உன்னைய பார்த்து பேச ஆரம்பிச்சான்னா அப்புறம் ஒரு மணிநேரம் நம்ம கதையத்தான் பேசிட்டு இருப்பா! அம்மம்மா பங்ஷன்ல தலைய காட்டிட்டு அரைமணி நேரத்துல வந்து உங்கூட இருப்பேன்!" என்று தன் பேத்தி சாம்பவிக்கு தரும் கல்யாணியின் வாக்குறுதி எப்பொழுதும் அந்த வயதான பெண்மணிக்கு நியாபகத்தில் இருந்ததில்லை.
வாரம் ஒரு அவுட்டிங், மாதம் ஒரு விழா என்று செல்வதற்காக ஸாஃப்ட் சில்க், பனாரஸி சில்க், கலம்காரி டிஸைன் மீனாகாரி டிஸைன் என்று பார்த்து பார்த்து தனது பாட்டி தனக்கென புடவைகளை தேர்வு செய்து கொள்வதை பார்க்கும் போது சாம்பவிக்கு தானும் அந்த ஷாப்பிங்கில் இணைந்து கொண்டால் நன்றாக இருக்குமே என்று நினைத்து ஏக்கமாக இருக்கும்! அவர்களுடைய ஷாப்பிங்கில் மட்டுமல்ல.....
"பவிம்மா.... உனக்காக அம்மம்மா தேடி அலைஞ்சு நிறைய ஷாப்பிங் பண்ணிட்டு வந்தேன்டா செல்லம்; குர்த்தீஸ், டாப்ஸ், புல்ஃப்ராக் கூட இருக்கு பாரேன்!" என்று சொல்லும் அந்தப் பாட்டி ஒருநாள் கூட உனக்கு பிடித்ததை நீயே என்னுடன் வந்து தேர்வு செய்து கொள் என்று சொன்னதேயில்லை.
சபாபதிக்கு வெளியில் செல்வதென்றால் அது அவரது பணி சம்பந்தமான வேலைகளுக்கு மட்டுந்தான். மற்றபடி வாரத்தில் ஒருமுறை வீட்டிற்கு வந்து எட்டிப்பார்க்கும் மனிதர் பவியின் பின்னோடே திரிகிறேன் என்பதை யாரும் அறிந்து கொள்ளாமல் மகளின் பின்னால் தான் சுற்றிக் கொண்டிருப்பார்.
கல்யாணிக்கு வெளியில் செல்வதென்றால் அது ஜம்மென்று ரெடியாகி புடவை நுனி அலுங்காமல் சபாபதியின் காரில் தனசேகருடன் செல்வது தான்.....
இப்படியாக வீட்டில் உள்ள மூவரும் தன்னை வெளியில் அழைத்து செல்வதற்கு சிறு முயற்சி கூட எடுக்க மாட்டார்கள் என்று தெளிவாக தெரிந்து விட்ட காரணத்தினால் சாம்பவி தன்னுடைய ஆசைகளை தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டாள்.
அவளுக்கான உலகமாக அவளது கண்முன்னே காட்டப்பட்டது அவளது பள்ளியும், வகுப்பறையும், உடன் படிக்கும் மாணவ மாணவிகளும், பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் மட்டுமே! தன் தந்தை முதற்கொண்டு அனைவரும் அவளை ஒரு வீட்டிற்குள்ளேயே முடக்கியதால் பாவம் அந்த டீன்ஏஜ் பெண்ணுக்கு படிப்பு ஒன்றைத் தவிர வேறு பொழுதுபோக்கே இல்லாமல் போனது. அந்த எரிச்சலையும், கோபத்தையும் அவள் கொட்டித் தீர்க்க வகையாக வாகை செல்வன் அவளது இல்லம் தேடி வந்தான்.
அவன் இங்கு வந்த முதல் நாளிலேயே, அவள் அவனைப் பார்த்த முதல் பார்வையிலேயே சாம்பவிக்கு செல்வாவை பிடிக்கவில்லை. அவனது ஃபங்கி ஹேர்ஸ்டைல், அவன் மிக இயல்பாக அந்த வீட்டுடன் பொருந்திக் கொண்டது, அந்த வீட்டில் கையில் கிடைத்த
பொருளை எல்லாம் தன்னுடைய பொருளாகப் பயன்படுத்திக் கொண்டது இவை அனைத்துமே சாம்பவிக்கு எரிச்சலாக இருந்தது. எதிரி நாட்டு ராணுவ சேவகன் மேல் எந்நேரமும் ஒரு கண் வைத்திருக்கும் உள்நாட்டு வீரன் போல் படிக்கும் நேரம் போக
அவனது நடவடிக்கைகள் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டே இருந்தாள். விசித்திரமான வகையில் அது அவளுக்கு ஒரு ஸ்ட்ரெஸ் ரிலாக்ஸேஷனாகவும் இருந்ததை நினைத்து அவளுக்கே ஆச்சரியம் தான்! அதனால் தான் சபாபதி இங்கிருந்து கிளம்பியதும் அவன் முன்னால் சென்று தனது பிரத்யேகமான கட்டளைகளுடன் அவன் முன்பு நின்றாள்.
அலை அலையாக வளர்ந்த தன்னுடைய முடியின் மேல் செல்வாவுக்கு ஒரு தனி ஈர்ப்பே உண்டு. இந்த வீட்டில் இருக்கும் லங்கினியின் உத்தரவால் அவனது தலைமுடியும், தாடியும் இரண்டே நாட்களுக்குள் கிட்டத்தட்ட போலீஸ் கட் போல் வெட்டப்பட்டது.
அடுத்து அவனுக்கு மிகவும் பிடித்தமான ரீல்ஸ் போடும் பழக்கத்திலும் கை வைத்தாள் சாம்பவி.
"ஏய் இடியட்! என்ன எப்பப் பாரு ரீல்ஸ், இன்ஸ்டா ஸ்டோரினு ஃபோன கையில புடிச்சுட்டு மாடியிலயே சுத்திட்டு இருக்க? நான் ஒருத்தி இங்க படிச்சுட்டு இருக்குறது உன் கண்ணுக்கு தெரியுதா இல்லையா?" என்று கேட்டு அவனுடைய அலைபேசியை பறித்துக் கொண்டவளிடம் அலைபேசிக்காக கைநீட்டியவன்,
"கண்ணு..... நீ உண்டு, ஒம்படிப்பு உண்டுன்னு இருந்துட்டு வேற
எத்தையும் கண்டுக்காம ஒம்பாட்டுக்கு போயிக்கினே இரு. அத்த உட்டுட்டு, இன்னாத்துக்கு என்னோட அல்லா வேலையிலயும் மூக்க உட்டுனு கெடக்க நீ?" என்று கேட்டான்.
"நீ கூடத்தான் இது என்னமோ உன்னோட வீடு மாதிரியே இங்க எல்லா இடத்தையும் யூஸ் பண்ணிட்டு ஜாலியா சுத்திட்டு இருக்க! உன்னைப் பாத்தா எனக்கு கோபம் கோபமா வருதுடா; எதுக்கு எங்க டாடி வளர்த்துட்டு இருக்குற ப்ளாண்ட்ஸ், ட்ரீஸ்ல இருந்தெல்லாம் நீ காய், பழமெல்லாம் பறிக்குற? இதுவரைக்கும் நீ 6 நார்த்தங்காய், இரண்டு சீப்பு வாழைப்பழம், 11 தக்காளி, கை நிறைய மொளகா இதெல்லாம் பறிச்சு வச்சுக்கிட்ட! ஃப்ரீயா கெடைக்குதுன்னா எங்க தோட்டத்துல இருந்தே நீ காயையும், பழத்தையும் பறிச்சுக்குவியா? நான் உண்டு, எம்படிப்பு உண்டுன்னு எல்லாம் என்னால போக முடியாது. இது எங்க வீடு; நாந்தான் இந்த வீட்டுக்கு ஒன் அண்ட் ஒன்லி ஓனர் தெரியும்ல? நான் எல்லாத்தையும் கேள்வி கேக்கத்தான் செய்வேன். யூ ஹாவ் ட்டூ ஆன்ஸர்!" என்று சொன்னவளை கேவலமான ஒரு பார்வை பார்த்தவன்,
"ஐய..... அல்ப்பஜிங்கி! ஒங்கொயா எனக்கு துன்ன ஒன்னியும் தர மாட்டேங்குதுக்கோசரம் ஒங்க தோட்டத்துல கையில, கண்ணுல பட்டத வச்சுக்கினு நா சமைச்சு சாப்டுகினு இருக்கேன். அத்தையும் இத்தினி துன்னேன், அத்தினி துன்னேன்னு கணக்கெடுக்க கணக்கு ஆபிஸர் மாதிரி வந்தியேமே நல்லா...... இன்னா வோணும் ஒனக்கு? ஒங்க தோட்டத்தாண்ட இருக்குனத பறிச்சு சமைச்சு துன்னக் கூடாது அவ்ளோ தான? ரைட்டு உடு! இன்னோரு தபா நா உங்கூட்டு காயெல்லாம் தொட்டா என்னிய நீ என்னடா செல்வான்னு கேளு!" என்று அவளிடம் பவ்யமாக சொன்னவனிடம்,
"அது.... அந்த பயம் இருக்கட்டும்!"
என்று சொன்னவள் அவனுக்கு
கையால் பத்திரம் காண்பித்து விட்டுப் போயிருந்தாள்.
அன்று காலையில் எட்டு மணிக்கு
கல்யாணியின் க்ளப் தோழியுடைய வீட்டில் பூஜை என்று சற்று சீக்கரமாக ஐந்தரை மணிக்கு எழுந்த தனசேருக்கு இப்போது காலை காஃபியும் தேவைப்பட்டது. ஏழரைக்கு வீட்டில் இருந்து கிளம்பினால் அவர்களுடைய வீட்டுக்கு செல்வதற்கு சரியாக இருக்கும்! ஏழு மணிக்கு முன் கல்யாணியை படுக்கையில் இருந்து எழுப்பி விட்டால், அவருக்கு பூஜை இங்கேயே நடக்கும்! எப்படித்தான் தயாராவாளோ தெரியாது. அரை மணிநேரத்தில் பல்துலக்கி, குளித்து, புடவை உடுத்தி, சடை போட்டு,
பொருத்தமான நகை அணிந்து கிளம்பி காரில் வந்து அமர்ந்து விடுவாள். இன்று பதினோரு மணி வரை அந்த தோழியுடைய வீட்டில் பொழுதைப் போக்கி விட்டு, மதிய உணவை ஏதாவது தரமான ஸ்டார் ஹோட்டலில் முடித்து விட்டு வீட்டுக்கு வந்து விடுவோம் என்று நினைத்த தனசேருக்கு இப்போது ஒரு காஃபி குடித்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. இன்றைய தின வெளி ஊர் சுற்றலுக்கான தெம்பை அந்த சூடான பானம் தான் அவருக்குத் தரும் என்று நினைத்தார்.
வீட்டிற்கு ஒரு நல்ல வேலையாள் கிடைத்ததால் நினைத்த மாத்திரத்தில் நினைத்ததை சாப்பிடலாம் என்ற எண்ணம் வேறு.
ஆறு மணிக்கு அவனது அறையில் இன்னும் மடக்கப்படாத பாயில் சப்பணமிட்டு அமர்ந்திருந்தவன் போர்வையால் தன்னை முழுதாக மூடி இன்னும் ஐந்து நிமிடங்கள் கோழி போல் அமர்ந்தபடியே தலையை கவிழ்ந்து கொண்டு கண்களை மூடியிருக்க தனசேகர் அவனது அறைக்கதவை தட்டி அவனது கோழித் தூக்கத்திற்கு இடைஞ்சல் விளைவித்தார்.
"டேய்.... செல்வா! முழிச்சுட்டியா, இல்லையா? எனக்கு ஒரு காஃபி வேணும்! எந்திரிச்சு வெளிய வாடா!" என்று கதவுக்குப் பின்னால் நின்று சப்தமாக அவனைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தவரின் முன்னால் சூறாவளியின் வேகத்தில் வந்து நின்றவன்,
"இன்னா பெரிசு...... எம்மா அதப்பு இருக்கணும் ஒனக்கு! நம்ம ரூம்ப தட்டி நம்ம கையில காபி கேக்குற அளவுக்கு அப்பாடக்கரா நீயி?
ஒனக்கு வேல பாக்குறதுக்கோசரம் நான் இங்க குந்திக்கினு இல்ல! ஒன்னைய மாதிரி வூட்டம்மாவுக்கு கூஜா தூக்கினு போற ஆளுக்கு நா வேல பாத்து தருவேன்னுநெனச்யா நெனச்சுக்கினியா நீ? தப்பு மாமூ! ரொம்ப தப்பு! நீ இப்ப என்ன பண்ற? நான் போயி கை கால் மூஞ்சிய கழுவினு வர்றதுக்குள்ளார எனக்கு, ஒனக்கு அப்பால ஒம்பேத்திக்கு இஸ்ட்ராங்கா மூணு ஸ்பெஷல் காபி கலந்து வைக்கிற! காபி நல்லா சூடா சூப்பரா இருக்கணும் தெர்தா..... நா இதோ அஞ்சு நிமிட்ல வாரேன்!" என்று சொன்னவனிடம்,
"ஏ....ய்! என்னடா எங்களுக்கு வேலை செஞ்சு குடுக்குறதுக்குன்னு எம்மாப்ள ஒன்ன வேலைக்கு வச்சா, ஒனக்கு நான் வேலை பார்க்கணுமா? என்ன திமிரு இருந்தா என்னைய பார்த்து பொண்டாட்டிக்கு கூஜா தூக்குறேன்னு சொல்லுவ? நீ இங்க வேல செஞ்சு கிழிச்சதெல்லாம் போதும். கிளம்புடா இங்கருந்து! மாப்ள வந்ததும் நா அவர்ட்ட பேசிக்குறேன்! கெட் அவுட்!" என்று கத்திய தனசேகரின் அருகில் வந்து அவர் நெஞ்சில் கைவைத்து அவரை தடவிக் குடுத்தவன்,
"த்த்சூ! த்த்சூ! த்த்சூ! காலங்கார்த்தால இப்டி கத்தினு இருந்தா வீடு வெளங்குமா வாத்யாரே..... ஆங்! கிழிக்றத பத்தி ஏதோ சொல்லினு இருந்தல்ல நீ! நமக்கு வேலையில கிழிக்றதெல்லாம் தெரியாதுபா! ஆனா ஆளக் கிழிக்றது நல்லாத் தெரியும்! வவுத்துல கிழிச்சா குடலப் பாக்கலாம்; நெஞ்சாண்ட கிழிச்சா இந்த எதயம் எதயம்ங்குறாங்களே? அத்தப் பாக்கலாம்! ஒனக்கு எத்தப் பாக்கணும்?" என்று அவரிடம் கேட்ட படியே ஹாலில் இருந்து சமையலறைப் பக்கமாக சென்று அங்கு ஏதோ உருட்டிக் கொண்டிருந்தான் வாகை.
"என்ன மெரட்டுறியாடா..... இத்தூணூன்டு இருந்துட்டு நீ எங்கள கத்தியால கிழிப்ப; நாங்க அதப் பாத்துட்டு இருப்பமாக்கும்? எங்க பவிம்மா ஒன்னைய ஒரு வார்த்தையில அவ பேச்ச கேக்க வைக்குறா! என்னால அது முடியாதுங்குறியா?" என்று கேட்ட தனசேகரிடம் சிறிதாய் புன்னகைத்த செல்வா,
"ஒன்னால மட்டுமில்ல..... செல்வாவ மடக்க எவனாலயும் முடியாது நைனா; நானே மடங்கிப் போவணும்னு நெனக்கணும்! அப்பத்தான் ஒம்பேத்தி நம்ம கிட்ட காட்டிக்கின ஸீனு மாதிரி வேற யாராலயும் நம்மளாண்ட ஸீனு போட முடியும்! சரி.... என்னிய பாத்து இத்தினி டவுட்டு பட்டுக்கினியே..... என்னைய என்ன குண்டு உருட்டி வெளாண்ட கேஸ்லயா ஹோமுக்கு இட்டுனு போனாங்கன்னு நினைக்குற? ஏஓனர கத்தியால கீசுனதுக்கோசரந்தான் நம்ம மேல கேசே! தெர்தா நைனா?" என்று தனசேகரிடம் கேட்டு சிக்கன் வெட்டும் ஒரு பெரிய கத்தியை தன் தாடையில் வைத்துக் கொண்டு அதனால் முகம் சொறிந்து கொண்டிருந்தவனை பார்த்த தனசேகருக்கு இவன் பேசுவதை எல்லாம் செய்யக்கூடிய ஆள் தான் என்று தோன்றியது.
சமையலறைக்குள் புகுந்து ப்ரிட்ஜில் இருந்த பால் பாக்கெட்டை கையில் எடுத்தவரிடம்,
"தல..... நாளைக்கெல்லாம் நம்ம ரூமாண்டயே காபி குடுத்துடு இன்னா.....? மொத நாம ரெண்டு பேரும் குடிச்சிகினு, அப்பால நான் போயி நம்ம சின்ன மோடத்த எழுப்பி உட்டு காபி தந்துர்றேன். இன்னா சொல்ற..... நா அந்தப் பக்கமா போவசுல ஒனக்கு நியூஸ் போட்டுக்கினு போவவா?" என்று கேட்டவனிடம் ஒன்றுமே பேசாமல் அமைதியாக தன்னுடைய வேலையை செய்து கொண்டிருந்தார் தனசேகர்.
"போச்சு! மறுபடியும் இந்த டமாரத்துக்கு காது கேக்கல போலிருக்கு!" என்று முணங்கியவனை திரும்பிப் பார்த்து முறைத்தவர்,
"எம்மாப்ள வர்ற வரைக்கும் நீ ஆடுறா! அவர் வரட்டும்! அதுக்கப்புறம் நான் உன்னை கவனிச்சுக்குறேன்!" என்றார் மெல்லிய குரலில்.
"ம்ம்ம்.... எப்பவும் நமக்கு கவனிப்பெல்லாம் ஸ்பெஷலா இருக்கணும் தெர்தா! காபிக்கு டேங்க்ஸ்பா! பீங்கான் கப்புல ஊத்தி ஆறிப் போவாம மூடி வச்ரு! இந்தா வந்துக்குனேன்!" என்று தனசேகரிடம் சொல்லி விட்டு துள்ளல் நடையுடன் அவனது முகம் கழுவலுக்கு வீட்டின் வெளிப்பக்கம் இருந்த பாத்ரூமை நோக்கி சென்று கொண்டிருந்தான் வாகை செல்வன்.
இளையவள் இணை சேர்வாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro