Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💚 இணை 28

செல்வாவும், சாம்பவியும் கோயம்பேடு ஏரியாவில் இருக்கும் CMBT யில் அமர்ந்திருந்தனர். அவளது பையை அவள் கையில் தராமல் தாய்க்குரங்கு தன் குட்டியை மடியில் கட்டிக் கொள்வது போல தன் மடியில் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான் செல்வா.

எங்கே அவனிடம் சொல்லாமல் கொள்ளாமல் எந்த பேருந்திலாவது ஏறி விடுவாளோ என்ற பயம் அவனுக்கு. ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என பாவம் செல்வாவிற்கு இதுவரை தெரிந்திருக்கவில்லை.

அவனது பேச்சைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் ஆறாத கோபத்துடன் தன்னுடைய ஏரியாவிலிருந்து புறப்பட்டு கோயம்பேடு வரை வந்திருந்தாள் சாம்பவி.  தெருமுனையில் அவள் ஆட்டோவில் ஏறுவதற்கு முன்பாக ஓடிச்சென்று அவளை வழிமறித்து நிறுத்தியவன்,

"நான் இல்லாம எங்க கெளம்புற பாப்பா? என்னியும் ஒங்கூட கூட்டிட்டுப் போ!" என்றான். இரண்டு நிமிடங்கள் யோசித்தவள், அவனையும் தன்னுடன் ஏற்றிக் கொண்டு கிளம்பி விட்டாள்.

அவளுக்கு இப்போது எங்கேயாவது தூரமாக தொலைந்து போய் விட வேண்டும் என்ற எண்ணம்! ஆனால் வீட்டிலிருந்து புறப்பட்டு ஏதாவது தெரியாத ஊருக்கு சென்று அங்கே தொலைந்து போவதற்குள், இங்கு சென்னையிலேயே தொலைந்து போய் விடக்கூடாது அல்லவா...... அதற்காக தான் அவனை துணைக்கு கூட்டிக் கொண்டு சென்றாள். பஸ்ஸில் ஏறியதும் அவனை வீட்டிற்கு செல்லும்படி திருப்பி அனுப்பி விட வேண்டியதுதான்...... அதற்கு மேல் இவன் இங்கேயே இருக்கிறானோ இல்லை வேறு எங்காவது செல்கிறானோ அது அவனுடைய பாடு என்று யோசித்து வைத்திருந்தவள், சென்னை மொஃபஸல் பஸ் டெர்மினஸை வந்தடைந்தாள்.

அப்பா, தாத்தா, அம்மம்மாவுடன் இல்லாமல் இதுவரை சாம்பவி தனியாக எங்குமே சென்றதில்லை. அவர்களுடனே கூட நிறைய பயணித்தது இல்லை! அதனால் தனியாக பயணம் செய்வதற்கு பயந்து கொண்டு தான் செல்வாவையும் தன்னுடன் அழைத்து வந்தாள். இங்கு பெருந்திரளான மக்களின் கூட்டமும், சலசலப்பும், ஏதோ ஒரு வேகத்தில் பயணத்துக்காக அவர்கள் இங்கும் அங்குமாக ஓடுவதையும் அமைதியாக அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

"பாப்பா..... ஊருக்குப் போறமா போலயா? பஸ் ஸ்டாண்ட்டுல ஒக்காந்துனு இப்டியே எல்லாரு வாயையும் பார்த்துனு இருந்தா என்ன அர்த்தம்? ஏதாச்சு ஒரு முடிவு எடு கண்ணு!" என்று சொன்னவனிடம்,

"நான் இப்ப சென்னைய விட்டு தூரமா இருக்குற ஏதாவது ஒரு ஊருக்குப் போகணும் செல்வா. யாருமே தேடி வர முடியாத மாதிரி எங்கயாவது காணாமப் போயிடணும்! நீ என்னை பஸ் வரைக்கும் வந்து ஏத்தி விட்டு சென்ட் ஆஃப் குடுத்துட்டு வீட்டுக்குப் போயிடு! எனக்கு யாரும் வேண்டாம்! நான் யாரோட லைஃப்க்கும் டிஸ்டர்பென்ஸா இருக்க விரும்பல....!" என்று சொன்னவளின் பேச்சைக் கேட்டு லேசாக சிரித்தான் செல்வா.

குழந்தைத்தனமாக பேசும் அவளது பேச்சில் அவனுக்கு நன்றாகவே சிரிப்பு வந்தது. எங்கே நிறைய சிரித்தால் அவளது கடுப்பு இன்னும் அதிகமாகி விடுமோ என்று நினைத்து சிரிப்பை அடக்க முடியாமல் லேசாக சிரித்து விட்டான். ஆனால் அதிலேயே சாம்பவி மேலும் கொஞ்சம் கடுப்பாகி விட்டாள்.

"டேய்.... நான் காணாமப் போகப்போறேன்னு சொல்லிட்டு இருக்கேன்! அதுக்கு உனக்கு சிரிப்பு வேற வருதா?" என்று கேட்டவளிடம்,

"நீ காணாமப் போப்போறேன்னு சொன்னதுக்கோசரம் செல்வா சிரிக்கல பாப்பா! பஸ்சு வரையில தொணைக்கு வந்து என்னை ஏத்து உட்டுனு கெளம்புன்னு சொல்லிக்குனல்ல..... அத நென்ச்சுதே சிரிச்சேன். கரீட்டா காணாப் போயிடுவியா பாப்பா? பஸ்சுல போவசொல வாந்தி, கீந்தி எடுக்க மாட்டியே? பசிச்சுச்சுன்னா இன்னா பண்ணுவ? ஊருக்குப் போனதுக்கு அப்பால ஏதாச்சு லாட்ஜ்ல தங்கினு இருப்பியா..... இல்ல வூடு எடுக்கப்போறியா? நாளைக்கு இஸ்கூலுக்குப் போவலையின்னா ஒனக்கு லீவு உழுந்துடுமே? அதுக்கு இன்னா பண்ணப்போற?" என்று மறுபடியும் சிரிப்புடன் கேட்டவனிடம்,

"நான் இனிமே ஸ்கூல்ல படிக்க மாட்டேன்; உன்ன மாதிரி நானும் ஏதாவது பார்ட் டைம் வொர்க் பண்ணிட்டே என் டென்த் மார்க்க வச்சு ஏதாவது டிப்ளமா கோர்ஸ்ல சேரப்போறேன்! என்னோட ஹவுஸ் ரெண்ட், ஈபி, மெயின்டனென்ஸ் அமௌண்ட் எல்லாத்தையும் நானே பாத்துப்பேன்!" என்று மிகவும் வீராப்பாக பேசியவளிடம்,

"சரி பாத்துப்ப...... மூணு வேளையும் பூவாவுக்கு என்ன பண்ணுவ? அதுக்கும் துட்டு வோணும் கண்ணு! நா பரவாயில்ல...... மார்க்கெட்டாண்ட மூட்ட தூக்கி சம்பாதிச்சுப்பேன்; அத்தமேரி ஒன்னியால என்ன செய்ய முடியும் பாப்பா? நாலு வூட்ல துணி தொவச்சு, பாத்ரம் தொலக்கி பொழச்சுப்பேன்னு சொல்லாத! நா காண்டாயிடுவேன் பாத்துக்க!" என்று விளையாட்டாக ஆரம்பித்தவன், சற்று குரலை உயர்த்தவும் சாம்பவிக்கு உதடுபிதுங்கிக் கொண்டு அழுகை வந்தது.

சமையல், கோலம், எம்ப்ராய்டரி, தையல், ஓவியம், நடனம் இப்படி எந்த கலையையுமே பயிலாமல் விட்ட தன்னுடைய மடத்தனத்தை எண்ணி கலங்கிக் கொண்டிருந்தாள்.

அவனிடம் சும்மா வீண்வாதம் தான் செய்து கொண்டிருக்கிறோம் என்று மூளைக்குத் தெரிந்தாலும், பைத்தியம் போல ஏன் இப்டி நாம் உளறுகிறோம் என்று புரிந்தாலும், கொண்டு வந்த லக்கேஜை எடுத்துக் கொண்டு வந்த வழியே வீடு திரும்ப மனம் வரவில்லை அவளுக்கு.

அவன் சொன்ன நாளைக்கு இஸ்கூலுக்குப் போவலையின்னா என்ற கேள்வி வேறு அவளது மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது.

"அப்பாடா...... ஒருவழியா நம்ம வார்டனம்மா இப்பத்தா என்னத்தயோ யோசிச்சுனு இருக்கா! என்னோட ஹவுஸ் ரெண்ட், ஈபி, மெயின்டனென்ஸ் அமௌண்ட் எல்லாத்தையும் நானே பாத்துப்பேன்..... நல்லா சொப்பு வாய வச்சுக்கினு, கண்ண கண்ண உருட்டிக்கினு பேசுற அழகப்பாரு!
ஒருநா இஸ்கூலாண்ட போவாம இருக்குறத பத்தி யோசிக்க முடியலயாம்; இதுல படிப்ப நிறுத்திடப் போறேன்னு பெனாத்தினு இருக்கு! இவ நைனாவாண்டயே இப்டி ராங்கிக்குறாளே? நாளைக்கு ஒன்னாண்ட என்னடா செய்வா?" என்று கேள்வி கேட்ட தன்னுடைய மனதின் மண்டையில் குட்டி அதை அமைதிப்படுத்தியவன், அவளருகில் சென்று அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

"பப்ளிக் ப்ளேஸ்ல இப்டி எல்லாம் ஒக்காரக் கூடாது! தள்ளிப்போடா!" என்று சொல்லி திமிறியவளிடம்,

"அதெல்லாம் ஒன்னியும் இல்ல! நீ வாடா தங்கம்!" என்று மெதுவான குரலில் சொன்னவன் அவள் கையைப் பற்றி அவள் விரலுக்கு சொடுக்கெடுத்து விட்டான்.

"எப்டிடா நீ மட்டும் எப்பவுமே இவ்ளோ ஹாப்பியா இருக்க? நான் பாரு..... எப்பவுமே ஒரே ட்ராஜடி ஃபீல்லயே இருக்கேன்! ஏன்டா இந்த சாம்பவியோட நம்மள கொண்டு வந்து விட்டாங்கன்னு நீ ரொம்ப ஃபீல் பண்ற இல்ல?" என்று கேட்டவளிடம் இல்லையென தலையசைத்தவன்,

"இன்னாம்மே சந்தோஷமாகீறது....
நமக்குன்னு சொல்லிக்க இந்த பூமில ஒரு கய்த கூட இல்ல; அப்ப எப்டி நீ போட்டுக்கினமேரி சண்ட போடறது? சமாதானம் ஆவுறது? அத்சரி! எப்பவுமே சந்தோஷமா இருந்தேன்னு சொன்னல்ல நீ? தப்பு! நீ ஒநைனாவாண்ட பேசசொல நா ஒம்மேல செம கோவத்துல இருந்தேன்; சரி போனாப் போவுது நம்ம பாப்பா தானன்னு நென்ச்சு ஒன்னிய மன்ச்சு வுட்டேன்..... ஒநைனாவாண்ட என்னா கேட்ட நீ?
உங்க ஹோம்ல இருந்தே ஒருத்தன இங்க கூட்டிட்டு வந்து, அவன அம்மம்மா, தாத்தாட்ட சண்ட போடச் சொல்லி, அவங்கள வீட்ட விட்டு வெளிய கிளப்பி விட்டுட்டு, இப்ப உங்க ப்ளான்ல மாஸ்டர் பீஸா இந்த லேடியையும் இந்த வீட்டுக்குள்ளயே வந்து செட்டில் பண்ணிட்டீங்கன்னு கேட்டல்ல? நா ஒன்னைய சேவ் பண்றதுக்கோசரம் ஒங்க ஆயாவ வூட்ல இருந்து கெளப்னது உனக்கு கடுப்பாக்கீதாம்மே? செல்வா ஒனக்கு பிரெண்டா நடிக்கல்லா இல்ல பாப்பா! ஒன்னிய நெஜமாவே ரொம்பவும் புடிச்ருந்துச்சு! அதா நீ சொன்ன அல்லாத்தையும் பண்ணிக்குனேன்! ரூல்ஸ் எனக்காக செஞ்ச ஒரே சகாயம் அவரு என்ன ஒன்னாண்ட இட்டுக்கினு வந்து உட்டது தான்!" என்று சொன்னவனிடமிருந்து தள்ளிச் சென்று அவனுக்கு ஓரடி தூரத்தில் அமர்ந்து கொண்டாள் சாம்பவி. இரண்டு நிமிடங்கள் கழித்து செல்வா அவளிடம்,

"உனக்குப் பூனக்குட்டி வாங்கித் தர்றேன்..... அப்புறமா எங்கூட வீட்டுக்கு வர்றியா பாப்பா?" என்று மெதுவாக கேட்க அவள் அவனைப் பார்த்து முறைத்தாள்.

"இந்த பொண்ணுக்கு வீட்ல இருந்து பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் கூட தனியா வரத்தெரியல; வேற ஒண்ணுமே தெரியல; இவ சரியான மக்குன்னு நினைச்சு தான என்னை இப்டி சின்ன குழந்த மாதிரி ட்ரீட் பண்ணிட்டு இருக்க? ஒம்பூனையும் வேண்டாம்; ஒரு மண்ணும் வேண்டாம்! நீ இங்கருந்து கெளம்புடா முதல்ல......! நான் வீட்டுக்கு வரமாட்டேன்!" என்று அடம் பிடித்தவளிடம்,

"சர்தான்.... இன்னும் எம்மாநேரம் ஆனாலும் இப்டியே ஒக்காந்துனு இருப்போம்! என்ன கொறைஞ்சுடப் போவுது இங்க.....? பாப்பா..... இந்த இடம் சும்மா டக்கராக்கீது! அப்டியே இங்க ரீல்ஸ படமாக்குவமா? இப்டிக்கா மாஸா நடந்து வந்து ஒரு லுக்; அப்றம் அப்டிக்கா நடந்து வரசொல ஒரு போஸூ! நம்ம ரீல்ஸ் சும்மா தெறிக்க உடும்! இந்த பாட்டு நல்லாயயிருக்குதான்னு பாத்து சொல்லும்மே!" என்று அவளிடம் கேட்டு போனில் தேடி ஒரு பாடலை ஓட விட்டான்.

கருஞ்சாம்பல் கக்கி
ரண கண்கள் வீசும்
சின வெப்ப வேங்கையே
கரம் வீசி தாக்கி
சிர வேட்டையாடும்
நர யுத்த ஆழியே

தரணி எரியுது தகதகவெனவே
மழையாய் வந்தாய் முகில் வீரா
அடிமைகள் நெஞ்சில் அண்டி கிடக்குற அச்சம் தீர்த்தாய் அதிகாரா

என்ற வரிகளை கேட்டவள், "லிரிக்ஸ் நல்லாயிருக்கு செல்வா. பட் எனக்கு மூடு இல்ல. நம்ம இன்னொரு அக்கேஷன்ல கண்டிப்பா இந்தப் பாட்டுக்கே நல்ல ஆக்ஷன்ஸ் குடுத்து ரீல்ஸ க்ரியேட் பண்ணலாம்!" என்று அவனிடம் சொன்னாள்.

பஸ் ஸ்டாண்ட்டுக்கு வந்தா, ஒன்னு பஸ்ஸூல ஏறி போயினே இருக்கணும்! இல்ல பஸ்ஸூக்கோசரம் வெயிட் பண்ணினு இருக்கணும்; அதுவும் இல்லயா.....கண்ணுக்கு அழகா தெரியுற ஏதாவது ஒரு பிகர பாத்து சைட் அடிச்சினு இருக்கணும்! இத்த ஒன்னியும் பண்ணாம சும்மா பரக்குன்னு பரக்குன்னு வேடிக்க பாத்துனு இருக்குறதுக்கா இங்க வரச் சொன்ன? ஒங்கூட கத்தி கத்தி
செல்வாக்கு பசிக்க ஆரம்பிச்சுடுச்சு பாப்பா! சாப்டுன்னு வந்து இங்க ஒக்காந்துன்னுருக்கலாமா?" என்று கேட்டவனிடம்,

"ம்ஹூம்! இந்த ஸீட்டுக்கு வேற யாராவது வந்து ஒக்காந்துடுவாங்க! நான் உட்கார்ந்துட்டு இருந்த ஸீட்ல இங்கருந்து நாம பஸ்ல ஏறப்போற வரைக்கும் வேற யாரும் உட்காரக்கூடாது; நீ போய் முதல்ல சாப்ட்டு வா; அப்புறமா நான் தனியா போய் சாப்ட்டுக்குறேன்!" என்று சொன்னவளை நீ எந்த கிரகத்தின் டிஸைன் என்பது போல
விசித்திரமாக பார்த்தான் செல்வா.

"பாப்பா..... நீ ஏற்கனவே சொன்னமேரி இது பொது இடம்! இங்க நா ஒன்னிய தூக்கி எறக்கினு இருக்குறதல்லாம் நடக்காது! என்னாண்ட நீ ரொம்ப நாளா எதுக்கு ஹோமுக்குப் போனன்னு கேட்டுன்னே இருந்தல்ல? இப்ப எங்கூட சாப்ட வந்தன்னா அந்த மேட்டர் என்னன்னு ஒங்கிட்ட சொல்றேன்! இல்லன்னா நீ எப்பவுமே அத சொல்லவே மாட்டேன்; ஏன்னா இன்னுங்கொஞ்ச நாள்ல நாந்தா போயிடுவேன்ல?" என்று அவளிடம் செல்வா சொல்ல சாம்பவி ஆர்வத்தில் தான் அமர்ந்திருந்த சேரிலிருந்து எழுந்தே நின்று விட்டாள்.

ஹோட்டலில் லன்ஞ்ச் சாப்பிட்டு முடிப்பதற்குள் செல்வா அவளிடம் தான் Observation Home க்கு சென்றதற்கான காரணத்தை சொல்லி விட்டு அவளது தேவைகளையும் கவனித்துக் கொண்டு, தனக்கான உணவை வாங்கி அதை சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், மோர் என பகுதி பகுதியாக சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

"ஹௌ டேர் ஹீ? நீ செஞ்சது கரெக்ட் தான் டாம்பாய்.......
பத்து லிட்டர் மாவா இருந்தா என்ன? சுண்டெலி அதுக்குள்ள விழுந்து இருந்துச்சுன்னா அத கீழ தான ஊத்தணும்? அத விட்டுட்டு மாவை அப்டியே யூஸ் பண்ணிக்குங்கன்னு சொன்னானா? அப்டி யூஸ் பண்ணா
அந்த மாவுல செஞ்ச இட்லி, தோசைய அந்த ஹோட்டல்
ஓனர் சாப்டுவானா? இல்ல அவனோட பேமிலி மெம்பர்ஸூக்கு குடுப்பானா? அதுக்காகவா ஒன் வீக் உன்னை பட்டினி போட்டு அடைச்சு வச்சுருந்தான்? நீ ஏன் personal vengeance னால ஐ மீன்.... அவன் மேல தனிப்பட்ட பழியுணர்ச்சியால அவர ஹர்ட் பண்ணினதா சொன்ன? நடந்த உண்மைய அப்டியே சொல்லிருக்கலாம்ல? அநாவசியமா நீ ஹோமுக்கு போக வேண்டிய சிச்சுவேஷன் வந்துருக்காதுல்ல?" என்று அவன் சொன்ன ப்ளாஷ்பேக்கிற்குள் ஒன்றி அவனிடம் கேள்வி கேட்டவளிடம்,

"இல்ல பாப்பா! நான் எத்தையுமே வாய தொறக்காத இருந்ததுக்கு காரணம் எனக்கு என்னாண்ட இருந்த விசுவாசந்தான்! ஒருவாரமா சோறு போடலங்குறதுக்கோசரம், வயித்துலயே ஒதைச்சாருங்கறதுக்கோசரம் அம்மாநாளு என்னிய வச்சினு சோறுபோட்டு, பலநேரம் தங்க ஒரு ரூம்பு குடுத்து பாத்துக்குன
அந்த ஆள நா வெறும் பசியில வந்த கோவத்தால கத்தி எடுத்துனு கிழிச்சுனுருக்க கூடாதுல்ல.....?" என்று கேட்டவனிடம்,

"டேய்..... நீ என்ன ஸ்டுப்பிட் மாதிரி பேசுற? மழை பெஞ்சா, என்க்ரோச்மெண்ட் வந்தா உன்னோட ஓனர் கடையில இருக்குற ரூம்லயே படுத்துக்க சொல்லுவார்னு சொன்ன; அவர் அப்ப மட்டுமா உன் மேல அஃபெக்ஷனேட்டா இருந்தாரு? நிறைய நாள் மிட்நைட் லோடு இறக்கணும்னும் உன்னை அங்க ஸ்டே பண்ண சொல்லியிருக்காருல்ல..... அந்தாளு மேல என்ன மண்ணாங்கட்டி விசுவாசம் வேண்டிக் கெடக்கு? ஒரு மைனர பிஸிக்கல் அப்ஃயூஸ் பண்ணியிருக்கான்! அவனோட தொழில்லயும் லாயலா இருக்கல; உங்கள எல்லாம் அவனோட ஸ்லேவ்ஸ் மாதிரி நடத்தியிருக்கான்! இதுக்கே முதல்ல அவன ஜெயில்ல உட்கார வச்சுருக்கணும்; இரு அவனப்பத்தி நான் டாடிட்ட சொல்லி அவனோட ஹோட்டலுக்கு சீல் வைக்க சொல்றேன்!" என்று உறுதியான குரலில் சொல்லிக் கொண்டிருந்தவளிடம் உதட்டில் வெற்றிகரமான ஒரு முறுவலுடன்,

"யார்ட்டடா பாப்பா சொல்லப்போற?
எனக்கு யாரும் வேண்டாம்! நான் யாரோட லைஃப்க்கும் டிஸ்டர்பென்ஸா இருக்க விரும்பலன்னு சொன்னியே..... அந்த டாடியாண்டயா?" என்று வசமாக அவளை மடக்கியவளிடம் பேச்சில்லாமல், என்ன பேசுவதென்று தெரியாமல் நின்றாள் சாம்பவி.

"கோபம் வர்றப்ப நாம சரியா யோசிக்க முடியாதுன்னு சொல்றது எவ்ளோ சரியாக்கீது பாரேன் பாப்பா! செம காண்டுல இருந்தப்ப நீ பேக்க மாட்டினு கெளம்புன! இப்ப என் பழைய ஓனரப் பத்தி எம்மாந்தெளிவா பேசினு இருக்க? அதே தெளிவோட ஒநைனா செஞ்ச கல்யாணமும் தப்பா, ரைட்டான்னு ஒரு அஞ்சு மினிட் யோசிச்சு பாரு கண்ணு! ஓநைனா பண்ணிக்கினு வந்துருக்குறது அம்மாம்பெரிய தப்பா எனக்கு இப்பவும் தோணலடா பாப்பா!" என்று சொன்ன செல்வாவை ஒரு பார்வை பார்த்தவள்,

"இப்ப நான் என்ன செய்யணும்ங்குற?" என்றாள் அவன் சொல்லுக்கு கட்டுப்படும் விதமாக.

"ரெண்டு பேரும் கெளம்பி வூட்டுக்கு போய் சேருவோம்; அந்த அம்மாவ நீ முதல்ல கொஞ்ச நாளைக்கு ஹெல்பரா பாரு! அப்பால அத்து ஒன்க்கு அம்மாவா இருக்கலாமா, வோணாமான்னு நீயே முடிவு பண்ணு!" என்று சொன்னவனிடம் களைத்துப் போன குரலில்,

"ஒரு கேப் கூப்டு! இல்ல ஆட்டோ பிடி! நாம அங்க கிளம்பலாம்!" என்று மெதுவான குரலில் அவனிடம் சொன்னாள் சாம்பவி.

இளையவள் இணை சேர்வாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro